Thursday, January 6, 2011

என் கதை எழுதும் நேரமிது


அல்லியக்கா தன் கண்களை அகலத் திறந்தபடி தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.


எங்க வூட்லயே கடைக்குட்டி நானு. எனக்கு சும்மா ராஜாவாட்டம் 4 அண்ணன்மாரு. நான்னா அவங்களுக்கு உசுரு. விதி சினிமா ஆசையை எம்மனசுல உண்டாக்குச்சு. ஊருல என்னை ஒருத்தன் உத்துப்பார்த்தாலே பிடிக்காது அண்ணங்களுக்கு. சினிமால நடிக்க விடுவானுகளா..அதான் வூட்டை வுட்டு ஓடி வந்தேன். அப்புறம் எப்படியெப்படியோ சீரழிஞ்சுஇப்போ உடம்பை வித்துப் பொழக்கறவளா ஆயிட்டேன்.


இது வழக்கமா எல்லாரும் சொல்ற கதை தானே” சலிப்புடன் சொன்னான் வந்திருந்த கஸ்டமர். இவனும் இப்படி சொல்லிவிட்டானேயென அல்லியக்கா சோர்ந்து போனாள். அவளுக்கு எழுத்தாளர்கள் மேல் கோபம் கோபமாக வந்த்து.

சிறுவயதிலிருந்தே அல்லியக்காவிற்கு கதை படிப்பது பிடிக்கும். ஜெயகாந்தனும் சுஜாதாவும் அவளுக்கு விருப்பமான எழுத்தாளர்கள். எதனாலோ திடீரென்று அவளுக்கு தன் கதையை யாராவது எழுத்தாளர் எழுதவேண்டும் என ஆசைப்பட்டாள். அதுவும் அவளுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் விலைமாதுடன் பழகி எழுதியிருந்த கதைகளைப் படித்திருந்ததால் தன் கதையையும் யாரிடமாவது சொல்ல ஆசைபட்டாள். அதிலிருந்து வருகின்ற கஸ்டமர்களில் எழுத்தாளர் யாராவது இருக்கிறார்களா எனத் தேட ஆரம்பித்தாள். அவளது கெட்ட நேரத்திற்கு அப்படி யாரும் வரவில்லை.

ஏன் எழுத்தாளர் யாரும் தன்னிடம் வருவதில்லையென தீவிரமாக யோசித்த அல்லியக்காவுக்கு ‘வறுமையும் புலமையும் உடன் பிறந்த்து’ என்பது உறைத்தது. ‘அடடாசோத்துக்கே சிங்கியடிக்கிறவன்கிட்ட நம்மகிட்ட தரக் காசு இருக்குமா’ என மிகவும் கவலைப்பட்டவள்இனி எழுத்தாளர் யாரும் வந்தால்அவங்களுக்கு ஓசி என்றும் முடிவு செய்தாள். இதையே தனக்கு ஆள் பிடித்து வரும் ஆரோக்கியத்திடம் சொல்லிஎப்படியாவது ஒரு எழுத்தாளரைக் கூட்டி வரும்படி கேட்டுக் கொண்டாள்.

அதன்பிறகும் நாட்கள்தான் ஓடியதே தவிர எழுத்தாளர் யாரும் வந்தபாடில்லை. இதனால் கோபமான அல்லியக்கா ஆரோக்கியத்தைக் கூப்பிட்டு ‘என்னதான்டா பண்ணுறே’ என சத்தம் போட்டாள்.
எழுத்தாளரெல்லாம் இப்போ முன்ன மாதிரியில்லைக்கா. எல்லாம் சினிமாக்குப் போய்ட்டாங்க. கதை எழுதுறாங்கவசனம் எழுதுறாங்க. டான்ஸ்கூட ஆடுறாங்களாம்
ஓஹோ..அப்போ நடிகைங்க பின்னாடி போய்ட்டாங்கன்னு சொல்லு. அப்புறம் எப்படி என்கிட்ட வருவானுக” என்று சொன்ன அல்லியக்காவை ஆத்திரமும் துக்கமும் ஒருசேரத் தாக்கியது. 

இனி இவனுகளை நம்பினா ஈ மொச்சுக் கிடக்க வேண்டியதுதான்’ எனத் தீவிரமாக யோசித்தவள் முடிவில் தானே எழுத்தாளராக ஆவதென முடிவெடுத்தாள். அதனால் வருகின்ற கஸ்டமரிடம் தன் கதையைச் சொல்வதெனவும் அதை ஒருத்தராவது ரசித்து ஆர்வத்துடன் கேட்டாலே தனக்கு வெற்றிதான் எனவும் முடிவெடுத்தாள்.

அடுத்து வந்த கஸ்டமரிடம் தன் கதையைச் சொன்னபோது கதை உப்புச் சப்பில்லாமல் இருப்பதை அவளே உணர்ந்தாள். எனவே கதையில் கற்பனை கலப்பதென முடிவெடுத்தாள். தொடர்ந்து பல விதக் கதைகளை உருவாக்கினாலும் அதனால் பிரயோஜனம் ஏதுமில்லை. வருகின்ற கஸ்டமர்கள் ‘இது ஏற்கனவே கேட்ட கதை’ யென்று சொல்லி அவள் சொல்வதை நம்ப மறுத்தார்கள் அல்லது உதாசீனப் படுத்தினார்கள்.

ஒருமுறை பழைய பாலச்சந்தர் படங்களில் வருவது போன்ற பெரிய குடும்பத்தைச் சிருஷ்டித்தாள். தந்தை ஊனமென்றும் தாய் குருடென்றும் அக்கா விதவையென்றும் தம்பிகள் படிப்பதாகவும் கேரக்டர்களை உருவாக்கினாள். கதை ஒருமணி நேரத்திற்கு மேல் நீண்டது. தான் இப்படிச் சீரழிந்து அவ்வளவு பெரிய குடும்பத்தைக் காப்பாற்றுவதாகவும் சொன்னாள். வந்திருந்த கஸ்டமரும் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டவாறு உட்கார்ந்த்திருந்தான். அவள் முடித்ததும் கேட்டான்: “ இன்னொரு தடவை பண்ணாஎக்ஸ்ட்ரா காசு கேட்பியா?” அல்லியக்காவிற்கு வந்த ஆத்திரத்திற்கு கொலையே விழுந்திருக்கும். வெளியில் இருந்த ஆரோக்கியம்தான் அந்த கஸ்டமரைக் காப்பாற்றிக் கூட்டிப் போனான்.

இதோ இன்று வந்தவனும் இது வழக்கமான கதையென்று சொல்லிவிட்டான். ‘இனி என்னதான் செய்வது. இப்படி இலக்கியம் தெரியாத ஜென்மங்களோடு மாரடிக்க வேண்டியிருக்கிறதே’ என்று நினைக்கையில் துக்கம் தொண்டையை அடைத்தது. அப்போதுதான் போலீஸ் கான்ஸ்டபிள் வெளியிலிருந்து கூப்பிட்டார்.

என்ன சார்?” என்றவாறே தன் குடிசையிலிருந்து வெளியில் வந்தாள்.
நாளைக்கு இன்ஸ்பெக்டர் இங்க வருவாராம். நீ யாரையாவது நாளைக்கு கூப்பிட்டுடாதே
ரிஸர்வேஷன் பண்ண வந்தீராக்கும். வரச் சொல்லும்” சலிப்புடன் சொல்லியவாறு வாசலில் அமர்ந்தாள்.

அவள் பலரிடம் கதை சொல்லியீருந்தாலும் இன்ஸ்பெக்டரிடம் சொன்னதில்லை. ’இந்த முறை சொன்னால் என்ன’ என யோசித்தாள். ’அந்தாளு கொஞ்சம் கரடுமுரடான பேர்வழி. அதனால கதையில நல்லா மசாலாவைச் சேர்க்கணும்’ என தீவிரமாகக் கதை பின்னுவதில் இறங்கினாள்.

மறுநாள் இன்ஸ்பெக்டர் வந்திறங்கினார்.’ இன்ஸ்பெக்டர் நல்ல வாட்டசாட்டமான ஆள். நாற்பதை நெருங்குவாராக இருக்கும். பொதுவாக ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர்  நாற்பதை நெருங்கும்போது தொப்பை தள்ளி எருமை போல் ஆகிவிடுவர். ஆனால் இவர் அப்படியல்லஎன அவரைப் பார்த்ததும் அல்லியக்கா மனதில் ஓடியது.

இன்ஸ்பெக்டர் மிகவும் சோர்வாகத் தெரிந்தார். அல்லியக்கா மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தாள்.

என்னாச்சு சார்?”
கொஞ்ச வருசமாவே என்னோட கதையை ஏதாவது புலனாய்வுப் பத்திரிக்கையில தொடராப் போடுவோம்னு ட்ரைப் பண்றேன். ஆனா எவனும் ஒத்துக்க மாட்டேங்கிறானுக. யார்கிட்டயாவது என் கதையைச் சொன்னாத் தான் என் மனசு ஆறும். சொல்றேன் கேளுஎன்றவாறு நல்ல மசாலாகலந்த கதையைச் சொல்லத் தொடங்கினார் இன்ஸ்பெக்டர்.

ஙேவென விழித்தவாறு அமர்ந்திருந்தாள் அல்லியக்கா.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

 1. வித்தியாசமான சிந்தனை . சூப்பர்

  ReplyDelete
 2. //எழுத்தாளரெல்லாம் இப்போ முன்ன மாதிரியில்லைக்கா. எல்லாம் சினிமாக்குப் போய்ட்டாங்க. கதை எழுதுறாங்க, வசனம் எழுதுறாங்க. டான்ஸ்கூட ஆடுறாங்களாம்”//
  ஆகா! பின்னிட்டீங்க தல!

  கதை வித்யாசமா, சூப்பரா இருக்கு! :-)

  ReplyDelete
 3. சூப்பரான திருப்பம், நல்லாயிருக்குங்க செங்கோவி

  ReplyDelete
 4. @பார்வையாளன் பாராட்டுக்கு நன்றி பார்வையாளன்..

  ReplyDelete
 5. @ஜீ...: தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றி ஜீ..

  ReplyDelete
 6. @இரவு வானம்: நன்றி நைட் ஸ்கை..குறைகளையும் சொல்லுங்கள் பாஸ்..

  ReplyDelete
 7. ஒரே மூச்சில் படிச்சு முடிச்சுட்டேன் கதையை..ரொம்ப வித்யாசமான கதை களம்..கதாபாத்திரம்...எதிர்பாராத திருப்பம்...நல்லா இருந்தது செங்கோவி...ஆமாம்..அந்த "ஙே’" பார்த்தவுடனே எழுத்தாளர் ராஜேந்திர குமார் நினைவு...:))

  ReplyDelete
 8. @ஆனந்தி..: சிறுவயதில் (அப்பவே!) ராஜேந்திரக் குமார் படித்திருக்கிறேன்..அதானால் ‘ஙே’ வந்திருக்கலாம். தங்கள் பாராட்டுக்கு நன்றி சகோதரி.

  ReplyDelete
 9. நல்ல ட்விஸ்ட். கதை அருமை

  ReplyDelete
 10. @ரஹீம் கஸாலி: பாராட்டுக்கு நன்றி கஸாலி.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.