Sunday, June 19, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_16

"இங்க என்ன தான் நடக்குது? இப்படி நடந்தா யாரு தான் இந்த வீட்டுப் பக்கம் வருவா?” என்றேன் கோபத்துடன்.
“இப்போ என்னலே நடந்து போச்சு?”
“பச்சரிசி வந்து நடு ஹால்ல நின்னுக்கிட்டு வாங்கன்னு கேட்டா எவன் இங்க சம்பந்தம் வைப்பான்? அவ யாருன்னு கேட்டிருந்தாங்கன்னா நாங்க என்ன பதில் சொல்றது?”

அவர் பதில் பேசாமல் அமர்ந்திருந்தார்.

“இந்த வயசுலயும் நீங்க இப்படி நடந்துக்கிட்டா, நல்ல குடும்பத்து ஆள்க இந்த வீட்டு வாசப்படியை மிதிப்பாங்களா? மூத்தக்கா விஷயத்துல பட்டும் நீங்க திருந்தலேன்னா எப்படி? இவ வாழ்க்கையும் வீணாப் போகணுமா?” 

எப்போதும் யாரையும் எடுத்தெறிந்து, மதிக்காமல் அதிகாரத்துடன் பேசியே பழக்கப்பட்டவர் அன்று என்னிடம் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தார்.

அண்ணனும் வாய் திறந்தான். “அவஞ் சொல்றதும் சரி தானே?”

“இப்போ நான் என்னதாம்லே செய்யணும்?” என்றார்.
”பச்சரிசி இனிமே இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது. அவ்வளவு தான்” என்றேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே பச்சரிசியும் அங்கு வந்தார்.

“என்னவாம்?”

“பசங்களுக்கு நீ இங்க வர்றது பிடிக்கலை. மவளுக்கு வரனும் வராதுங்கிறாங்க”

“ஓஹோ..அதனால..என்ன செய்யப் போறீங்க? என்னை வெளில போங்கிறீங்களா? பசங்களைக் கேட்டா என்னைச் சேர்த்துக்கிட்டீங்க? உங்களுக்காக வெளில எவ்வளவு அவமானத்தைத் தாங்கி இருக்கேன்..அவ்வளவு தானா? என் வாழ்க்கை அவ்வளவு தானா?”பச்சரிசி அழ ஆரம்பித்தார்.

“இல்லைம்மா, பாப்பாக்கு வரன் முடியிற வரைக்காவது..”

“வேண்டாம்யா வேண்டாம். எப்போ என்னால உம்புள்ளைங்க வாழ்க்கை கெடுதுன்னு ஆயிடுச்சோ அப்புறம் நான் இங்க இருக்குறது அர்த்தம் இல்லை. நான் கிளம்புறேன். நல்லா இருங்கய்யா..எல்லாரும் நல்லா இருங்க”

சட்டென்று திரும்பி, அழுதவாறே வெளியேறினார் பச்சரிசி.

அவர் எங்களைப் பரிதாபமாகப் பார்த்தார்.

“என்னமோப்பா, பல வருசமா என்னைப் பார்த்துக்கிட்டவ. உங்க பேச்சை நம்பி அவளை அனுப்பிட்டேன். தேரை இழுத்து தெருவுல விட்ட கதை ஆயிடாம.” என்றார்.

“அதெப்படி, அக்காவும் அண்ணனும் விட்டிடுவாங்களா?” என்றேன். 

’நானும் அந்த வீட்டுப்பிள்ளை, எனக்கும் அவரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உண்டு’ என்ற எண்ணமே எனக்கு இல்லை. அவருக்கும் அது இல்லை.

அண்ணன் சிரித்துக் கொண்டே”ம், பார்த்துக்கலாம்” என்றான்.

அதைத் தொடர்ந்து, பொறுப்பாக அக்காவிற்கு ஒரு இடத்தில் வரன் பார்த்து, திருமணம் செய்து அனுப்பினார். அந்தத் திருமணத்திற்கான அழைப்பு எங்களுக்கு வரவில்லை. அண்ணனுக்கும் திருமணம் செய்து வைத்தார்.

பச்சரிசி போன பின் கடுமையான தனிமையை உணர்ந்தார் அவர். பழைய முறுக்கு குறைந்திருந்தது. 

பல வருடங்களாக அவரின் அடக்குமுறைக்கு ஆளான அண்ணன், இப்போது தன் முறையை ஆரம்பித்தான். அந்த வீட்டிற்குள் அவரை மதியாது பல செயல்கள் நடந்தேறின. இனி வீட்டு அதிகாரம் தனக்கே என்றான். அவர்கள் தங்கியிருந்த வீடு அப்பத்தாவின் பெயரில் இருந்தது. அவர் சாகும்போது அண்ணன் பெயருக்கு உயில் எழுதி இருந்தார்.

“ஒரு ஓரமாக அடங்கி இருந்தால் இரு, இல்லையேல் வெளியேறு’ என்று அவருக்குச் சொல்லப்பட்டது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர், தன் பத்தாம் வயது முதலே கொத்துவேலைக்கு சித்தாளாகப் போய், பின்னர் கொத்தனார் ஆகிக் கட்டிய வீடு அது. அம்மா மேல் உள்ள பாசத்தால் அம்மா பெயரில் எழுதி வைத்திருந்தார். பின்னர் பில்டிங் காண்ட்ராக்டர் ஆகிப் பலவீடுகள் கட்டினாலும், அந்த வீடு அவர் கஷ்டப்பட்டு வாழ்ந்தபோது கட்டியவீடு.

அது கைவிட்டுப் போனதும், மரியாதை இல்லாத வாழ்வும் அவரை மோசமாகத் தாக்கியது. 

பச்சரிசி தவிர அவருக்கு யாருடனும் நட்பு இருந்ததில்லை. பச்சரிசி தவிர வேறு சொந்தங்களை அவர் கண்டுகொண்டதில்லை. இப்போது பச்சரிசி எங்கு இருக்கிறார் என்றும் சரியாகத் தெரியவில்லை. தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் அவர் வேறு ஊருக்குச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். 

யாரும் இல்லாத நிலையில், தான் வாழ்வது யாருக்காக, இனி நாம் செய்ய வேண்டிய கடமை என்று என்னதான் இருக்கிறது என்று யோசிக்கலானார்.

அடுத்து தனியாகச் சமைக்க வேண்டிய துர்பாக்கிய நிலையும் வந்து சேர்ந்தது. ஒரே வீட்டிற்குள் இரு சமையல் நடந்தது. தன் ஐம்பதாவது வயதில், அடுப்புக் கூட்டிச் சமைத்தார்.

வாழ்க்கை என்பது என்ன? தினமும் தின்று விட்டுத் தூங்குவதா? கட்டிய மாளிகையை தினமும் தடவிப் பார்த்துக் கொண்டே இருப்பதா? லைஃப் இஸ் ரிலேசன்ஷிப் என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை. நாம் நம்மைச் சுற்றி உள்ளோருடன் கொண்டுள்ள ரிலேசன், நன்றாக இருக்கும்வரை வாழ்வும் நன்றாக செல்கிறது. சுற்றிலும் வெறுப்பே உமிழப்பட்டால்? சமூக மிருகமான மனிதனுக்கு தனிமையைத் தாங்கும் வலுவில்லை.

‘எனக்குன்னு யாரு இருக்கா? எதுக்காக இப்படி ஒரு வாழ்க்கை?’ என்று தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.

தனியே தன் அறையில் இருந்த நேரத்தில் வண்டிக்கு வாங்கி வைத்திருந்த பெட்ரோலை தன் மேல் ஊற்றினார். தனக்குத் தானே கொள்ளி வைத்தார்.

தெருவில் விடப்பட்ட தேர் பற்றி எரிந்தது.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

 1. காமெடியா போன கட்டுரைல சீரியஸ்..!!!!!!!!!!!!

  ReplyDelete
 2. சீரியஸா கிளம்பியாச்சா.....?

  ReplyDelete
 3. அவ்வ...ஏன் இப்பிடி
  ??திடிரெண்டு??டேர்னிங்'கா??

  ReplyDelete
 4. சோகமும் வாழ்வில் ஒரு அங்கம் தானே..கவலை வேண்டாம், இன்னும் ஒரு பதிவுடன் இரண்டாம் பாகம் முடிவுறும்.

  ReplyDelete
 5. பச்சரிசியினை மையமாக வைத்து இந்தப் பாகம் திருப்பு முனையுடன் நகர்கிறது,

  வாழ்வின் பல்வேறு படி நிலைகளைத் தரிசித்து வந்த அனுபவசாலி நீங்கள் என்பது உங்களின் எழுத்துக்கள் மூலம் தெரியுது பாஸ்.

  ReplyDelete
 6. @நிரூபன் கருத்துக்கு நன்றி நிரூ.

  ReplyDelete
 7. //வாழ்க்கை என்பது என்ன? தினமும் தின்று விட்டுத் தூங்குவதா? கட்டிய மாளிகையை தினமும் தடவிப் பார்த்துக் கொண்டே இருப்பதா? லைஃப் இஸ் ரிலேசன்ஷிப் என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை. நாம் நம்மைச் சுற்றி உள்ளோருடன் கொண்டுள்ள ரிலேசன், நன்றாக இருக்கும்வரை வாழ்வும் நன்றாக செல்கிறது. சுற்றிலும் வெறுப்பே உமிழப்பட்டால்? சமூக மிருகமான மனிதனுக்கு தனிமையைத் தாங்கும் வலுவில்லை./

  Miga thelivana unmai...nalla thelivana yeluthu nadai.. interesting too.. Enjoyed reading even it is not fun..

  ReplyDelete
 8. @Gangaram//Miga thelivana unmai// நம் தவறுகளும் நம்மைச் சார்ந்தோரின் தவறுகளுமே பல உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றன, அதனால் அவையே நம் ஆசான் ஆகின்றன.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.