Thursday, May 1, 2014

காசுக்கு ஓட்டு....கட்சிக்கு வேட்டு!

ஜனநாயகம் என்பது சர்வாதிகாரத்தின் மென்மையான மறுபக்கம் தான். ஒரே சர்வாதிகாரி என்பதற்குப் பதிலாக இரண்டு, மூன்று சாய்ஸ்களை ஜனநாயகம் நமக்கு வழங்குகிறது. நமது சர்வாதிகாரிகளும் ‘ஈயம் பூசுனமாதிரியும் இருக்கணும்..பூசாத மாதிரியும் இருக்கணும்’ என நாசூக்காக சர்வாதிகாரத்தை கட்சிகளில் நிறுவியிருக்கிறார்கள். கலைஞர். எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி என ஓட்டுக்கள் குறிப்பிட்ட நபர்களுக்காக விழுவதே இங்கே வழக்கம். காலம் காலமாக மன்னர்/ஜமீன்களிடம் விசுவாசம் காட்டிய நம் மக்கள், அதை அரசியல்வாதிகளிடம் தொடர்கிறார்களோ என்ற எண்ணம் எனக்கு உண்டு. 
ஏற்கனவே சில பதிவுகளில் சொன்னதுபோல் கட்சிப்பொறுப்பில் இல்லாவிட்டாலும், எங்கள் குடும்பம் தீவிர திமுக குடும்பம்.  மற்ற கட்சியினர் எங்கள் வீட்டிற்கும், என் பெரியப்பா வீட்டிற்கும் ஓட்டு கேட்டே வரமாட்டார்கள். கலைஞர் பற்றிப் பேச ஆரம்பித்தால், என் அப்பா உருகிவிடுவார். தொடர்ந்து ஈழத்தமிழர் பிரச்சினையில் கலைஞரின் சொம்பும் அரசும் மத்திய அரசால் நசுக்கப்பட்ட காலம். எனவே கலைஞர் மீது அவ்வளவு பிடிப்பு. இத்தனைக்கும் எங்கள் சொந்தக்காரர்கள் அனைவரும் அதிமுகவினர் தான். ஒரே ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்து ஓட்டு கேட்கும் தைரியம் அவர்களுக்கு வந்தது.

அது, ராஜீவ் கொலையை அடுத்து வந்த சட்டமன்றத்தேர்தல். ‘ராஜீவைக் கொலைசெய்த படுபாவிகள் புலிகளுக்குத் துணைபோன திமுகவிற்கா உங்கள் ஓட்டு?’ என்று வீட்டிற்கு வந்து கேட்டார்கள். ‘கலைஞர் துணைபோயிருந்தால், அது பெருமை தான்..ஓடிப்போயிடுங்க’ என்று விரட்டிவிட்டார். தன் வாழ்க்கையில் உதய சூரியனைத் தவிர வேறு எதற்கும் அவர் ஓட்டு போட்டதில்லை. (இதில் வேடிக்கை, எங்கள் தொகுதியில் திமுக ஜெயிப்பதேயில்லை. ஆனாலும்...!) தலைவருக்கும் தொண்டனுக்குமான பிணைப்பு, சிறுவயது முதலே என்னை ஆச்சரியப்படுத்தும் விஷயம். மறுபுறம் இரட்டை இலை தவிர வேறு எதற்குமே ஓட்டுப்போடாத மாமன்மார்களின் எம்.ஜி.ஆர் பக்தி என்னை அசர வைக்கும். தலைவனின் வெற்றியை தனது வெற்றியாக கொண்டாடும் எளிய மனிதர்கள், அந்த தொண்டர்கள்.

எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்து சிரித்தார் என்று புளங்காகிதம் அடையும் ரத்தத்தின் ரத்தம், கலைஞர் என்னை பெயர் சொல்லி அழைத்தார் என்று பெருமிதம் கொள்ளும் உடன்பிறப்பு (கலைஞருக்கு அபார ஞாபக சக்தி உண்டு..பலவருடம் கழித்துப் பார்த்தாலும் பெயரைச் சொல்வார்!) என பல்வேறு அதிசய அனுபவங்களை உள்ளடக்கியது தலைவனுக்கும் தொண்டனுக்குமான உறவு. அவ்வாறு நமது ஜனநாயகம் ஒரு அட்ஜெஸ்ட்மெண்ட்டில் ஓடிக்கொண்டிருந்தபோதுதான், திருமங்கலம் ஃபார்முலா கண்டுபிடிக்கப்பட்டது.
காசு கொடுத்தால் போதும், ஓட்டு வாங்கிவிடலாம் எனும் திருமங்கலம் ஃபார்முலா கண்டுபிடிக்கப்பட்டபோது, சில கட்சிகள் அகமகிழ்ந்திருக்கும். இவ்வளவு எளிய வழியை விட்டுவிட்டா, இத்தனை நாள் பொழைப்பு நடத்தினோம் என்று நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இந்த ஃபார்முலா, அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலிலும் ஜெயித்தது. ஆனால் அதுவே இப்பொழுது கட்சிகளுக்கு ஆப்பாக மாறிக்கொண்டிருக்கிறது. அதை கட்சிகள் உணர்ந்திருக்கின்றனவா என்று தெரியவில்லை.

இருமுறை திமுக பணத்தால் ஓட்டுக்களை ‘வாங்கியதை’ப் பார்த்த அதிமுகவும் சென்ற சட்டமன்றத்தேர்தலில் போட்டிக்கு இறங்கியது. திமுகவும் தாரளமாக பணத்தை வாரி இறைத்தது. எங்கள் பகுதியில் ஒரு ஓட்டுக்கு 300 ரூபாய்வரை திமுக கொடுத்தது. எனக்குத் தெரிந்து பணத்தை வாங்கிய பலரும் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை. பல தொகுதிகளில் அது தான் நிலைமை. ஓட்டுக்கு காசு கொடுத்தும் திமுக தோற்றது, ஓட்டுக்கு காசு கொடுத்த அதிமுக ஜெயித்தது. காசு மட்டுமே ஓட்டை கொண்டு வந்துவிடாது என்பதே உண்மை. ஆனாலும் புலிவால் பிடித்த கதையாக, நாம் கொடுக்கவில்லையென்றால் எதிர்க்கட்சி கொடுத்துவிடுமோ என்ற பயத்தில், இந்த நாடாளுமன்றத்தேர்தலிலும் பணம் வாரி வழங்கப்பட்டுள்ளது.

சென்ற சட்டமன்றத்தேர்தலிலேயே காசு வாங்கினாலும் ஓட்டு போட மாட்டார்கள் என்று கண்டுகொண்டதால், இந்தமுறை கட்சியினர் மிக விழிப்புணர்வுடன் செயல்பட்டுள்ளார்கள். அது, நமது கட்சிக்கு உறுதியாக ஓட்டுப்போடுபவர்கள் மற்றும் ஓட்டுப்போடுவார்கள் எனும் நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு மட்டும் பலபகுதிகளில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான வேடிக்கை.’காசு கொடுத்தால் ஓட்டு வாங்கிவிடலாம்’ எனும் ஃபார்முலா இப்போது ‘ஓட்டுப் போடறவனுக்கு காசு கொடு’ என்று திரும்பியிருக்கிறது. ஓட்டுப் போடுவான் என்று உறுதியாகத் தெரிந்தபின்னும் அவனுக்கு ஏன் காசு கொடுக்கிறார்கள்?
முதல் காரணம், ஏற்கனவே சொன்னதுபோல் புலிவால் பிடித்த பயம். இரண்டாவது காரணம், திடீர் பணக்காரனை எல்லாம் வேட்பாளராக ஆக்கியது. இந்த திடீர் பார்ட்டிகளுக்கு, கட்சிக்கும் தொண்டனுக்குமான உறவு புரிவதேயில்லை. ‘என்கிட்ட காசு இருக்கு. என்னால இத்தனை கோடி செலவளிக்க முடியும்’ என்று சொல்லி, காலம் காலமாக கட்சியில் இருப்பவனை முந்தி, சீட் வாங்கிய புள்ளிகளுக்கு, கட்சி மேல் என்ன அக்கறை இருக்கும்? இதனால் நடப்பது என்ன தெரியுமா?

எனக்கு ‘நன்கு தெரிந்த’ அந்த அப்பாவி மனிதர், தன் வாழ்நாளில் இரட்டை இலை தவிர வேறு எதற்கும் ஓட்டு போட்டதேயில்லை. புரட்சித்தலைவரின் சின்னம் தோற்கக்கூடாது எனும் எண்ணத்தைத் தவிர வேறு நாட்டுநலன் சார்ந்த கொள்கைகள் ஏதும் அவரிடம் கிடையாது. இந்தத் தேர்தலில் இரட்டை இலைக்கு ஓட்டு போடும்படி ‘தலைக்கு 200 ரூபாய்’ கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ‘நான் காலம் காலமாக அதிமுகவிற்குத்தானே ஓட்டுப் போடுகிறேன். எங்களிடம் வேறு கட்சிக்காரன் ஓட்டுக் கேட்டே வருவதில்லையே..எனக்கு ஏன் காசு?’ என்று அவர் கதறியும், வாங்கியே ஆக வேண்டும் என்று கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

நீங்கள் செய்வது என்னவென்று தெரிகிறதா முட்டாள்களே!..........அம்மா கையால் சாப்பிட்டுவிட்டு ‘இந்தா காசு..ஹோட்டல்ல காசு வாங்கிக்கிறாங்கல்ல..நீ ஏன் வாங்க மாட்டேங்கிறே?’ என்று கொடுப்பீர்களா? மனைவியிடம் படுத்துவிட்டு ‘இந்தா காசு’ என்று கொடுப்பீர்களா?ஒரு தொண்டனுக்கும் தலைவனுக்குமான பிணைப்பு எப்படிப்பட்டது எனும் அறிவு கொஞ்சமாவது இருந்தால், இதைச் செய்வீர்களா?  ’கட்சி என்றால் என்ன? தலைவன் என்றால் என்ன?’ என்ற அடிப்படை புரிதலாவது உங்களிடம் இருக்கிறதா? நமது ஈய ஜனநாயகம், கட்சிகளின்மேல் கட்டப்பட்டிருக்கும் மாயக்கோட்டை. கட்சிகள், தொண்டனின் பாசத்தால் கட்டுண்டு கிடக்கும் யானைகள்.

ஓட்டுக்கு காசு என்று நீங்கள் ஆரம்பித்திருக்கும் விளையாட்டு, கட்சிக்கும் தொண்டனுக்குமான மானசீக உறவை அறுத்துவிடும் என்பதே உண்மை. வலுக்கட்டாயமாக காசை கொடுத்துவிட்டு ‘காசு வாங்கிட்டுத்தானே ஓட்டுப் போட்டார்கள்’ எனும் அலட்சிய மனோபாவத்தை வேட்பாளனின் மனதில் இது உண்டாக்குகிறது. ‘உன் பாசம் தேவையில்லை..காசை எடுத்துட்டு ஓட்டைப் போடு’ என்று கட்சி சொல்கிறது எனும் உள்மனத் தாக்கத்தை தொண்டனிடம் இது உண்டாக்குகிறது. தலைவன்/தலைவி மேல் ஆயிரம் ஊழல் குற்றச்சாட்டு சொன்னாலும், அதைப் புறம்தள்ளி கட்சிக்கு விசுவாசத்துடன் இருப்பவனுக்கு நீங்கள் காட்டும் மரியாதை, இது தானா?
கலைஞர் எனும் பெயருக்காகவே ஓட்டுப்போடும் பெரும்கூட்டம் இங்கே இருக்கிறது. இறந்து பல ஆண்டுகள் ஆனாலும் எம்.ஜி.ஆருக்காகவே ஓட்டுப்போடும் கூட்டம் ஒன்று இங்கே இருக்கிறது. இந்த காசுக்கு ஓட்டு எனும் கேவலம் தொடர்ந்தால், நாளை இந்தக் கூட்டம் மனம் வெதும்பிக் கலையும் என்பதே உண்மை. 

ஸ்டாலினும் ஜெயலலிதாவும் அவர்களுக்கென்று ஒரு செல்வாக்கையும் தொண்டனுடன் ஒரு பிணைப்பையும் உருவாக்க வேண்டுமேயொழிய, இந்த ஃபார்முலா கை கொடுக்கும் என்று நினைத்தால், அது காலப்போக்கில் கட்சிக்கு பேரழிவைத் தரும். கட்சிகளின் அழிவு, ஜனநாயகத்தின் அழிவு!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

13 comments:

  1. உண்மையை உள்ளபடி உரைத்திருக்கிறீர்கள்.///நீங்கள் செய்வது என்னவென்று தெரிகிறதா முட்டாள்களே!..........அம்மா கையால் சாப்பிட்டுவிட்டு ‘இந்தா காசு..ஹோட்டல்ல காசு வாங்கிக்கிறாங்கல்ல..நீ ஏன் வாங்க மாட்டேங்கிறே?////புரிந்து கொள்வார்களா?இல்ல,அடுத்த எலெக்க்ஷன் லயும்.........!நல்ல சாட்டையடிப் பகிர்வு/பதிவு!

    ReplyDelete
  2. உண்மைதான் ஆனால் பொதுக்குழு உயர் பீடம் இதை அறியாமல் இருப்பது போல காட்டும் நாடகம்!ம்ம்

    ReplyDelete
  3. //தனிமரம் said...
    உண்மைதான் ஆனால் பொதுக்குழு உயர் பீடம் இதை அறியாமல் இருப்பது போல காட்டும் நாடகம்!ம்ம்//

    சீக்கிரமே பீடம் விழித்துக்கொள்ளும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. இதுவும் நல்லது தான். இந்த தலைவர்கள் மீதான பாசப் பிணைப்பு / பக்தி / விசுவாசம் இவற்றால் தொண்டர்கள் அடைந்தது என்ன? ஒன்றுமே இல்லை! இவற்றை வைத்து இந்த தலைவர்கள்தான் பலனை அறுவடை செய்தனர்.. வேற்று அலங்காரப் பேச்சிலும், ரோஸ் கலர் பௌடரிலும் மயங்கி ஒட்டு போட்டது போதும்.. கொஞ்ச நாள் காசுக்காக ஒட்டு போடுவார்கள். அதன் பின் உண்மையான இஷ்யுக்கள் மீது ஒட்டு போடுவார்கள். இது நல்லது என்னை பொருத்தவரை!

    ReplyDelete
  5. திருமங்கலம் ஃபார்முலாவிற்கு முன்(னோ)டியே சாத்தான்குளம்தான் என்பதை மறந்துவிட்டீர்களே செங்கோவி. கடந்த ஜெ ஆட்சியில் சாத்தான்குளம் இடைத்தேர்தலில் நீலமேகவர்ணம் ஜெயிக்க முதல்வர் ஜெ பட்டிதொட்டியெல்லாம் பிரச்சாரம் செய்தார். சாத்தான்குளத்தை தேவன்குளமாக மாற்றுவேன் என்று சொல்லி பண மழை பொழிந்தது வரலாறு.

    ReplyDelete
  6. நீங்கள் செய்வது என்னவென்று தெரிகிறதா முட்டாள்களே!...
    தெரியதுனா நினைக்கரீர்கள்? அவர்கள் நம்மை முட்டாள்கள் என்று நினைக்கிரர்கள்..

    ReplyDelete
  7. @bandhu உண்மையான இஷ்யூக்கள் மீது நிரந்தரமாக மக்கள் கவனம் திரும்பும் என்று நான் நம்பவில்லை.

    ReplyDelete

  8. //ரஹீம் கஸாலி said...
    திருமங்கலம் ஃபார்முலாவிற்கு முன்(னோ)டியே சாத்தான்குளம்தான் என்பதை மறந்துவிட்டீர்களே செங்கோவி//
    சாத்தான்குளம் இடைத்தேர்தலுக்குப் பிறகு நடந்த சட்டமன்றத்தேர்தலில் அந்த ஃபார்முலா பின்பற்றப்படவில்லை. ஆனால் திருமங்கலம் இடைத்தேர்தலுக்குப் பிறகு நடந்த பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களிலும் அது ஃபாலோ செய்யப்பட்டது. எனவே அழகிரிக்கே இந்த பெருமை போய்ச் சேர்கிறது!

    ReplyDelete
  9. // adithya Thenmozhi said...
    நீங்கள் செய்வது என்னவென்று தெரிகிறதா முட்டாள்களே!...
    தெரியதுனா நினைக்கரீர்கள்? அவர்கள் நம்மை முட்டாள்கள் என்று நினைக்கிரர்கள்..//

    அதுவும் சரிதான்!

    ReplyDelete
  10. முதல்ல நம்ம மக்களின் நியாபக மறதி மாறனும்ய்யா !

    ReplyDelete
  11. ஒரு வேளை அப்படி சின்னத்திற்காகவும், தலைவனின் சிரிப்பிற்காகவும் இன்னும் ஓட்டுப் போடும் மக்கள் இருந்தால் அவர்கள் திருந்தட்டும். கல்வியும் தகவல் தொழில்நுட்பமும் (நியூஸ்) இவர்களை இன்னும் மாற்றவில்லை என்றால் அது மிகப்பெரிய தோல்வியே.


    அப்படிப்பட்ட கூட்டம் கலைவதே தமிழகத்திற்கு நல்லது என சிந்தியுங்கள், அதைவிட்டு ஸ்டாலினும் ஜெயும் இன்னும் இந்தக் கூட்டத்தை எப்படித் தக்கவைப்பது என்ற சிந்தனைகள் தேவையற்றது.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.