Wednesday, August 6, 2014

நாயகன் - தமிழில் ஒரு உலக சினிமா

தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய படம் நாயகன். ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படம் என்றால் அது நாடகத்தனமாகவும் தொடர்ச்சியின்றி ஜம்ப் ஆவதாகவுமே இருக்கும் எனும் நம்பிக்கையை உடைத்து நொறுக்கிய படம் நாயகன். மணிரத்னம், கமலஹாசன், ஸ்ரீராம், இளையராஜா, தோட்டாதரணி, பி.லெனின் - வி.டி.விஜயன் என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கிய இந்த காவியம், டெக்னிகலாக தமிழ் சினிமா பலநூறு அடிகள் பாய உதவியது.
மும்பையில் வாழ்ந்த வரதராஜ முதலியார் எனும் தமிழ் தாதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, மணிரத்தினம் எழுதிய கதையே நாயகன் திரைப்படம். வரதராஜ முதலியார் படத்தில் வேலு நாயக்கராக வந்தார். தூத்துக்குடியில் ஒரு கொலை செய்துவிட்டு மும்பை ஓடிவரும் சிறுவன் வேலு, மும்பை தாராவியில் வாழும் மக்கள் மதிக்கும் ஒரு தலைவனாக எப்படி ஆனான் என்று பேசுகிறது படம்.

திரைத்துறை மாணவர்கள் ஒரு பாடமாகக் கற்கவேண்டிய பொக்கிஷம், இந்த படத்தின் திரைக்கதை. ஐந்து பகுதிகளாக வேலு நாயக்கரின் வாழ்க்கை, இந்த திரைக்கதையில் பிரிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் கொலை செய்துவிட்டு ஓடிவருவது முதல் பகுதி, மும்பையில் பாய் ஆதரவில் வளர்ந்து பாய் இறந்தவுடன் போலீஸ்காரனைக் கொல்லும் தைரியம் மிகுந்த இளைஞனின் வாழ்க்கை இரண்டாம் பகுதி, மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்தபடியே தாராவியில் முக்கியமான ஆளாக உருவெடுப்பதும் மனைவியை இழப்பதும் மூன்றாம் பகுதி, மகன் தலையெடுப்பதும் இறப்பதும் அதனால் மகள் விலகிச் செல்வதும் நான்காம் பகுதி, இறுதிப்பகுதியில் திரும்பி வரும் மகளின் கணவனால் வேலு நாயக்கரின் ஆட்சி முடிவுக்கு வருவதும், நாயக்கர் கொல்லப்படுவதும்.  ‘பத்து வருடங்களுக்குப் பிறகு’ எனும் டைட்டில் போடும் வேலையெல்லாம் படத்தில் இல்லை. பெரும்பாலும் ஒரு காலகட்டத்தில் இருந்து இன்னொரு காலகட்டத்திற்கு, பாடல்காட்சியிலேயே ஸ்மூத்தாக நகர்ந்திருப்பார்கள்.

தலைவன் என்று யாரும் தனியே பிறப்பதில்லை. இந்த சமூகம், ஒரு தைரியமான மனசாட்சியுடன் உரசும்போது தீப்பொறியாக தலைமைப்பண்பு உருவாகி விடுகிறது. ஒரு யூனியன் லீடரின் மகன் தான் வேலு நாயக்கர். நியாயமான கூலி கேட்டுப் போராடியதற்காக தீவிரவாதி என்று பெயர்சூட்டி, சுட்டுக்கொல்கிறது போலீஸ். பத்து வயதுச் சிறுவனான வேலு அந்த தந்தையிடம் ஒரு கேள்வி கேட்கிறான் ‘யூனியன் லீடராய் இருப்பது தப்பா அப்பா?’. அதற்கான பதிலை மும்பைக்கு வந்தபின் பாய் சொல்கிறார் ‘நாலு பேருக்கு உதவும்ன்னா, எதுவும் தப்பில்லை’. அந்த பதில் தான் வேலு நாயக்கர் பின்னால் மக்களுக்கு நல்லது செய்யும் தாதாவாக உருவெடுப்பதற்கு அடிநாதம். அது தான் வேலு நாயக்கரின் வேதம். அதன்பின் வேலு நாயக்கர் ஒரு தாதாவாக உருவெடுப்பதை எதுவும் தடுப்பதில்லை.
கமலஹாசன் எனும் அற்புதமான நடிகரின் படங்களில் முக்கியமானது நாயகன். இயல்பான நடிப்பில் வேலு நாயக்கரை கண் முன்னே கொண்டுவந்திருப்பார். இளைஞனாக இருப்பதில் ஆரம்பித்து, பொறுப்பான குடும்பத்தலைவனாக ஆகும்போது முகத்தில் அவர் காட்டும் முதிர்ச்சி, வயதானதும் காலை அகட்டி நடக்கும் ஸ்டைல், பேச்சு தடுமாறுவது, இறந்த மகன் உடலைப் பார்த்து கதறுவது, மகளுடன் விவாதித்து தோற்பது என பல காட்சிகளில் நடிப்பின் உச்சத்தை தொட்டிருப்பார். கமலஹாசன் போன்ற நடிகர் இல்லையென்றால், இந்தப் படத்தையே எடுத்திருக்க முடியாது.

இசைஞானி இளையரஜாவின் 400வது படம் இது. ‘தென்பாண்டிச் சீமையிலே’ என்று ஆரம்பிக்கும் அவரது இசைத்தாலாட்டு, படம் முழுக்க நம்மைக் கிறங்க வைக்கிறது. படத்தில் அந்தப் பாட்டு வரும்போதெல்லாம் நமக்கு கண்கலங்கி விடுகிறது. இந்தப் படத்தின் இசை ஆல்பம் மிகவும் விஷேசமானது. தமிழ்மண் மணத்துடன் தென்பாண்டிச் சீமையிலே பாடல், மும்பை சாயலில் ‘நான் சிரித்தால்’ & ‘அந்திமழை வானம்’ ஆகிய பாடல்கள், ஆட்டம் போட வைக்கும் துள்ளிசைப்பாடலாக ‘நிலா அது வானத்து மேல’, மனதை மயக்கும் மெலொடியாக ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ என ஒவ்வொரு பாடலுமே நம் மனதைக் கொள்ளை கொள்பவை. பொதுவாக இளையராஜாவின் அற்புதமான பாடல்கள், நம் படைப்பாளிகளால் விஷுவலாக கற்பழிக்கப்படும். ஆனால் இதில் அவற்றை சிறப்பான முறையில் படம்பிடித்து, உரிய மரியாதை செலுத்தியிருப்பார்கள்.

இந்தப் படத்தில் வந்த பெரும்பாலான வசனங்கள் மறக்க முடியாதவை. எழுத்தாளர் பாலகுமாரன் ஒவ்வொரு சீனுக்குமே சுருக்கமாக, மனதில் தைக்கும் வசனமாக எழுதியிருப்பார். ‘நாலு பேருக்கு உதவும்ன்னா, எதுவும் தப்பில்லை, இனிமே அப்படித்தான், நான் அடிச்சா செத்திடுவே, அவங்களை நிறுத்தச் சொல், நீங்க நல்லவரா கெட்டவரா’ என எல்லாமே அசத்தலான வசனங்கள். பாலகுமாரன் கருத்துச் செறிவுடன் விலாவரியாக எழுதுவதில் வல்லவர். மணிரத்தினமோ அதிகம் தன் கதாபாத்திரங்களைப் பேச விடாதவர். இரண்டும் இணைந்தபோது, ஒரு புதுவகையான அனுபவம் நமக்குக் கிடைத்தது.

இந்தப் படத்தில் கமலின் நண்பராக வந்த ஜனகராஜின் நடிப்பு மிகவும் யதார்த்தமாகவும் அதே நேரத்தில் படத்தின் இறுக்கத்தைப் போக்கும்வகையில் ஜாலியானதாகவும் இருக்கும். இன்று குணச்சித்திர நடிப்பில் புகழ்பெற்று விளங்கும் நடிகை சரண்யா நாயகியாக அறிமுகமான படம் இது. கொஞ்ச நேரமே வந்தாலும் நிறைவான நடிப்புடன் விடைபெறுகிறார். கமலின் மகளாக வருபவர், மலையாள நடிகை கார்த்திகா. திரைத்துறையில் மொத்தமே நான்கு வருடங்கள் இருந்த, இருபது படங்களில் மட்டுமே நடித்த நடிகை. தமிழில் இரண்டு படங்கள், நாயகன் தவிர்த்து பூவிழி வாசலிலே படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனாலும் காலமெல்லாம் அவர் பெயர் சொல்லும்படி நாயகனில் நடித்துவிட்டார். படத்தின் உண்மையான நாயகி, கார்த்திகா தான்.

எதுவும் தப்பில்லை எனும் கொள்கைப்படி வாழ்க்கையில் முன்னேறும் வேலுநாயக்கரிடம், அவரது மனசாட்சியாக நின்று கேள்வி கேட்பது அவர் மகள் தான். சரண்யா இறக்கவுமே ‘அம்மா சாக நீங்க தான் காரணம்ன்னு சொல்றாங்களே, உண்மையா?’ எனும் கேள்வியை சிறுகுழந்தையாக கேட்கிறாள். பதில் கிடைக்காமலே சென்னை செல்லும் அவள் வளர்ந்து பெரியவளாக ஆனபின், மீண்டும் வேலுநாயக்கரை கேள்வி கேட்பவளாக திரும்பி வருகிறாள். ‘ தட்டிக்கேட்க நீங்க யார்? உங்களுக்கு சரின்னு படறது ஊருக்கு தப்பாகத் தெரியும்’ என்று சொல்கிறாள். எல்லா விஷயத்திலும் ஒரு மறுபக்க நியாயம் இருக்கும் என்று நம்புகிறாள். அவளது கேள்விகள், இங்கே எது சரி? எது தவறு எனும் வாழ்க்கையின் பொருள் தேடும் கேள்வியாக நம் முன் எழுந்து நிற்கிறது.

கருப்பு-வெள்ளை என வாழ்க்கையில் எல்லாவற்றையும் நல்லது-கெட்டது, சரி-தவறு என்று தீர்மானித்துவிட முடிவதில்லை. வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயலும் எல்லாருக்குமே, பெரும் சிக்கலாக இந்த சரி-தவறு எனும் தரம்பிரித்தல் இருக்கிறது. அநியாயமாகக் கொள்ளை அடிப்பவன் நலமாக வாழ்வதும், நல்லவன் பசியால் சாவதையும் நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். வேலு நாயக்கரும் சிறுவனாக அப்படி ஒரு உலகைப் பார்க்கிறார். நியாயம் கேட்டுப் போராடும் தந்தையை, சட்டம் குற்றவாளி என்று வன்முறையை ஏவுகிறது.

ஒரு துடிப்பான இளைஞனாக வேலுநாயக்கர் பதிலுக்கு அதே வன்முறையை கையில் எடுக்கிறார். மும்பை வந்தபின்னும், வன்முறை தான் அதிகார வர்க்கத்திடம் இருந்து மக்களைக் காக்க உதவுகிறது. வன்முறை தவறு என்று பல சித்தாந்தங்கள் சொன்னாலும், வாழ்க்கை சொல்லும் பாடம் வேறாக இருக்கிறது. படிக்காத பாமரனான வேலு நாயக்கருக்கு, வன்முறை மூலம் எதிராளிகளின் வன்முறையை எதிர்கொள்வது எளிதாக இருக்கிறது. அந்த வன்முறை மூலம் புற வாழ்க்கையில் வெற்றிகளை அடைந்துகொண்டே போகிறான். ஆனால் ஒவ்வொரு வெற்றிக்கும் சொந்த வாழ்வில் அவன் ஒரு பலி கொடுக்க வேண்டியிருக்கிறது.

தூத்துக்குடியில் இருந்து தப்பி மும்பை வந்தாலும், போலீஸின் சூழ்ச்சி வலையில் சிக்கி தந்தையை இழக்க தானும் காரணம் ஆகின்றான். தாராவியில் ஒரு தாதாவாக உருவெடுக்க, ஆரம்பத்தில் பெரியவர் பாயை பலி கொடுக்கிறான். ஹார்பரை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த வெற்றிக்காக மனைவியை பலி கொடுக்கிறான். வயதான பின்னும் தன் சாம்ராஜ்யத்தை தொடர்ந்து நடத்த முயல்கையில், மகனைப் பலி கொடுக்கிறான். எல்லா வெற்றிகளுக்குப் பின்னும் ஒரு சொந்த இழப்பு நிற்கிறது. அதற்கு தன் தவிர்க்க இயலாத வன்முறைப்பாதையும் ஒரு காரணம் என்பதை அவன் மனசாட்சி அறியும். அந்த மனசாட்சியின் குரலில் மகள் பேசும்போது, அவள் முன் மண்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை அவனுக்கு!
படத்தின் முதல் பகுதியிலேயே ‘நீங்க நல்லவரா’ எனும் பொருள்படும் கேள்வியையே வேலு தன் அப்பாவிடம் கேட்கிறான். அவர் பதில் சொல்வதில்லை. ஒரு தலைமுறை தாண்டியபின் அதே கேள்வி, வேலு நாயக்கரிடமே வந்து நிற்கிறது. இந்த சமூக மக்களின் பார்வையில் ஒரு தலைவனாக அவன் செய்தது எல்லாம் சரியே. ஆனால் அவனது மகளின் பார்வையில் எல்லாமே தவறாகிவிடுகிறது. இங்கே யாருடைய தரப்பின் பக்கம் நியாயம் இருக்கிறது எனும் கேள்வியை படம் பூதாகரமாய் எழுப்பி நிற்கிறது. வேலு நாயக்கருக்கும் அதே குழப்பம் வருகின்றது. படம் எழுப்பும் கேள்வியையே வேலு நாயக்கரின் பேரனும் கேட்கிறான், ’நீங்க நல்லவரா? கெட்டவரா?’ என்று. படத்தின் மையக்கருவே அந்தக் கேள்வி தான். வேலு நாயக்கருக்கு பதில் தெரிவதில்லை. ஆனால் படத்தின் இயக்குநர் பதில் சொல்ல வேண்டும் அல்லவா? 

வேலு நாயக்கர் ஒரு நல்லவனால் கொல்லப்பட்டால், அவர் கெட்டவர் எனும் முடிவுக்கு வந்துவிடலாம். ஒரு கெட்டவனால் கொல்லப்பட்டால், நல்லவன் எனும் முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால் இங்கே வேலு நாயக்கர் கொல்லப்படுவது, மனவளர்ச்சியற்ற ஒருவனால்! சரி-தவறு என்று தர்க்கரீதியாக பிரித்தறியத் தெரியாத, குழந்தையைப் போன்ற ஒருவனால் வேலு நாயக்கர் கொல்லப்படுகிறார். இயக்குநர் மணிரத்தினம் சாமர்த்தியமாக படம் பார்க்கும் பார்வையாளனிடமே அந்தக் கேள்வியைத் தள்ளிவிடுகிறார். ஏனென்றால், அந்த கேள்விக்குப் பதில் இல்லை.
’வேலு என்று ஒருவன் இருந்தான். பெரிய தாதாவாக வந்தான்’ என்று சாதாரணமாகச் சொல்லி இருக்க வேண்டிய கதை. வேலு நாயக்கரின் புறவுலக வெற்றிக்கும் சொந்த வாழ்க்கையின் தோல்விக்குமான உணர்ச்சிப் போராட்டமாக படத்தை வடிவமைத்தால்தான், இந்தப் படம் உலக சினிமா ஆகியது.  கேங்ஸ்டர் படங்களில் மாஸ்டர்பீஸாக இன்னும் இந்தப் படம் நிலைத்து நிற்பதற்குக் காரணம், அது தான். Time Magazine தன்னுடைய "All-Time 100 Best Films" லிஸ்ட்டில் நாயகனையும் வரிசைப்படுத்தியது, இந்த படத்திற்குக் கிடைத்த கிடைத்த மற்றொரு கௌரவம்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

 1. ஆகச் சிறந்த அலசல்.

  ReplyDelete
 2. \\ஆனால் இங்கே வேலு நாயக்கர் கொல்லப்படுவது, மனவளர்ச்சியற்ற ஒருவனால்! சரி-தவறு என்று தர்க்கரீதியாக பிரித்தறியத் தெரியாத, குழந்தையைப் போன்ற ஒருவனால் வேலு நாயக்கர் கொல்லப்படுகிறார். \\ படம் வந்தப்போ வரதராஜ முதலியார் உயிருடன்தான் இருந்தார்.


  \\இயக்குநர் மணிரத்தினம் சாமர்த்தியமாக படம் பார்க்கும் பார்வையாளனிடமே அந்தக் கேள்வியைத் தள்ளிவிடுகிறார். ஏனென்றால், அந்த கேள்விக்குப் பதில் இல்லை. \\காட் ஃபாதர் படத்தில் அவன் செத்தான், அதான் பதில்.

  ReplyDelete
  Replies
  1. பிரமாதம்..அப்படித் தான்..அதே ரூட்ல போங்க.

   Delete
 3. மிகச் சிறந்த அலசல்.//பம்பாயில்/மும்பையில் நம் நடுத்தர வர்க்க,மக்களின் யதார்த்த வாழ்க்கையைக் கண் முன்னே பார்க்கும் பாக்கியம் கூட,இந்தப் படத்தின் மூலம் கிட்டியது!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் புதிய அனுபவமாக இருந்தது.

   Delete
 4. செமையான படம்ய்யா மும்பையை கலக்கிய படம், இதே போல வினோத் கண்ணா மற்றும் மாதுரி தீட்சித் ஹிந்தி ரீமேக்குல நடிச்சாங்க ஆனாலும் நம்ம நாயகன் தான் பயங்கர வெற்றியாக ஓடியது !

  ReplyDelete
  Replies
  1. மொழி தெரியாத ஊரில் ஹீரோ ஜெயிக்கிறான் என்பதே படத்தின் சிறப்பம்சம். ஹிந்திப் படத்தின் தோல்விக்கு அதுவும் ஒரு முக்கியக் காரணம்.

   Delete
 5. மிக மிக அருமை. உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதுக்கு இணங்க , கமல் போலீஸ் அதிகாரியை கொன்றதுக்காக மனவளர்ச்சியற்ற சிறுவனால் கொல்ல படுகிறார்.

  ReplyDelete
  Replies
  1. கரெக்ட்..ஆனால் ஏன் அந்தச் சிறுவனை மனவளர்ச்சியற்றவனாகப் படைத்தார் என்பது தான் மேட்டர்.

   Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.