Friday, August 29, 2014

நெஞ்சில் ஓர் ஆலயம் - தமிழில் ஒரு உலக சினிமா

தமிழ் சினிமாவில் இயக்குநர்களுக்கென்று தனி மரியாதையையும் ரசிகர் வட்டத்தையும் முதன்முதலில் உருவாக்கியவர் இயக்குநர் ஸ்ரீதர். அவரது பெரும்பாலான படங்கள், தமிழில் வந்த சினிமாக்களில் முக்கியமானவையே. அவற்றில் சிறந்த படமாக அமைந்தது, நெஞ்சில் ஓர் ஆலயம். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கும் கன்னடம், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு, எல்லா மொழிகளிலும் பெரும் வெற்றி பெற்ற படம் இது.
இலக்கியம் என்பது மனசாட்சியுடன் உரையாடுவது தான். விஷுவல் இலக்கியமான இந்த சினிமாவும் மூன்று கதாபாத்திரங்களின் மனசாட்சிக்களுக்கிடையே நடக்கும் போராட்டத்தை காட்சிப்படுத்தி, நம் மனசாட்சியுடன் உரையாடுகின்றது.

டாக்டர் முரளி (கல்யாண் குமார்) தன் பழைய காதலை நினைத்தபடியே, திருமணம் செய்யாமல் மருத்துவ சேவைக்கென வாழ்ந்து வரும் ஒரு நல்ல மனிதர். அவரின் பழைய காதலி சீதா (தேவிகா), தன் நோயாளி கணவனுடன் அதே மருத்துவமனைக்கு வந்து சேர்கிறார். மிகவும் நல்லவனான அந்த கணவன் வேணு(முத்துராமன்)வுக்கு புற்றுநோய். அதை ஆபரேசன் மூலம் குணப்படுத்தும் பொறுப்பு, டாக்டர் முரளிக்கு வந்து சேர்கிறது. கணவனின் உயிர், தன் பழைய காதலனின் கையில் சிக்கியிருப்பதை அறிந்து துடிக்கிறாள் சீதா. கணவனின் உயிர் காப்பாற்றப்பட்டதா என்பதே கிளைமாக்ஸ்.


இந்த படத்தின் பெரும் பலமே, ஸ்ரீதர் டாக்டர்-சீதா-கணவன் கேரக்டர்களை வடிவமைத்த விதம் தான். இங்கே யாருமே கெட்டவர்கள் இல்லை. கெட்ட காதலன் என்றோ, மோசமான கணவன் என்றோ ஒரு பக்கச் சாய்வே இல்லை. படத்தின் முக்கியமான மூன்று கேரக்டர்களுமே நல்லவர்கள். பொதுவாக நல்லவர்களுக்குத் தான் பிரச்சினை அதிகம்; சில நேரங்களில் நல்லவனாக இருப்பதே பிரச்சினை தான். அப்படி ஒரு சூழலில் தான் மூன்று கேரக்டர்களுமே சிக்கிக் கொள்கின்றன.

மருத்துவத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும் நல்ல மனிதனாக டாக்டர் முரளி வருகிறார். எனவே காதலியின் கணவன் என்றாலும், கடமை தவற அவனால் முடிவதில்லை. அவன் செய்யும் ஒரே தவறு, பழைய காதலியின் புகைப்படத்தைப் பார்த்து அவ்வப்போது அழுவது. அதைக்கூட சீதா ஒரு கட்டத்தில் நிறுத்திவிடுகிறாள். கணவனே முன்வந்து ‘நான் இறந்தால், இவளை மணந்துகொள்’ என்று சத்தியம் வாங்கியபிறகும், காதலை விட கடமையே பெரிதென்று நினைக்கின்றான். ’அவர் இறந்தால் நானும் இறப்பேனே தவிர, உன்னை மணக்க மாட்டேன்’ என்று சீதா பேசும் வசனம், டாக்டரை மிகவும் காயப்படுத்திவிடுகிறது. அது, அவனது நேர்மைக்கு விடப்பட்ட அறைகூவல். அது தரும் வேகம் தான், இறுதியில் அவன் உயிரைப் பறிக்கிறது. கல்யாண் குமார் மற்ற படங்களில் நடிக்கும்போதும், டாக்டராகவே எனக்குத் தெரிந்தார். இந்தப் படத்தில் அவருக்குக் கிடைத்த கேரக்டரும், அவரின் நடிப்பும் தந்த தாக்கம் அது.
டாக்டருக்கும் மனைவிக்குமான பழைய காதலை அறிந்து, முதலில் அவர்கள் மேல் கோபமும் ஏளனமும் கொள்கிறார். அடுத்து இருவருமே உத்தமர்கள் என்று அறிந்ததும் மனசாட்சியின் உறுத்தல் ஆரம்பித்துவிடுகிறது. அவர்களின் காதலைப் பிரித்தது, தன் பணம் தான் என்று புரிந்துகொள்கிறான். தன் வாழ்வு முடிவதற்கும் இருவருக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட வேண்டும் எனும் தவிப்பு வந்து சேர்ந்துவிடுகிறது. இருவரிடமும் சத்தியம் வாங்கிய பிறகே நிம்மதியாகிறான். 

இதில் இன்னொரு ஆச்சரியம், மனைவி மேலான அன்பும் பிடிப்பும் கொஞ்சமும் அவனுக்குக் குறைவதில்லை.’இன்னொருவனின் காதலி என்று ஒதுங்குவதும் இல்லை. பாடச் சொல்லிக் கேட்கிறான். திருமணக்கோலத்தில் பார்க்க விரும்புகிறான். திருமணத்தின்போது நடந்த சம்பவங்களையும், ஏன் முதலிரவைக்கூட அசைபோடுகின்றான். இவள் என்னுடையள் எனும் நினைவில் இருந்து, அந்த கேரக்டர் விலகுவதே இல்லை. கணவன் எனும் நிலையில் இருந்து கொஞ்சமும் இறங்குவதில்லை. அற்புதமான கேரக்டரைசேசன் அது. அவர்கள் காதல் பற்றித் தெரிந்து விலகிவிட்டு, இறுதியில் சேர்ந்திருந்தால்கூட இவ்வளவு எஃபக்ட் இருந்திருக்காது. அவர்களை விதி அங்கே கொண்டுவந்து சேர்த்ததே, ஒரு பழைய கணக்கை தீர்த்துவிட்டுப் போகத்தானோ என்று தோன்றுகிறது.

முத்துராமன், கல்யாண்குமார், தேவிகா ஆகிய மூன்று பேருக்குமே காலாகாலத்திற்கும் பெயர் சொல்லும் படமாக அமைந்தது இந்தப் படம். தமிழ் சினிமா உள்ளவரை இந்தப் படமும் இவர்களின் கேரக்டர்களும் கொண்டாடப்படும் என்பதே உண்மை.

இந்தப் படத்தில் குழந்தை நோயாளியாக குட்டி பத்மினி வரும் எபிசோடு, ஒரு நல்ல திரைக்கதை உத்தி. இந்த படத்திற்கு ட்ரெய்லர் போன்று, குட்டி பத்மினி கதை படத்திற்குள்ளேயே ஓடுகின்றது. இந்தக் குழந்தையின் முடிவே தன் கணவனுக்கு வரும் என்று சீதா நம்புகிறாள். நம்மையும் அப்படியே நம்ப வைக்கிறாள். ஆபரேசனில் குழந்தை பிழைத்து வெளியே வந்ததும், சீதாவுடன் சேர்ந்து நாமும் ஆசுவாசம் ஆகிறோம். அடுத்த நிமிடமே வலிப்பு வந்து இறக்கிறது அந்தக் குழந்தை. சீதாவின் அளவிற்கு நாமும் அதிர்ச்சியாகிறோம். சீதா கேரக்டரின் உணர்ச்சிகளுடன் நாம் ஒன்ற வைக்கும் விஷயமாகவும், ஒரு சஸ்பென்ஸை உருவாக்கும் விஷயமாகவும் குட்டி பத்மினி கதை வந்துபோகிறது.

 படத்தில் சுவாரஸ்யமான காட்சிகளுக்குப் பஞ்சம் இல்லை. டாக்டரிடம் இருக்கும் சீதாவின் போட்டோ, கணவன் கைக்கு வரும் காட்சி ஒரு உதாரணம். மணக்கோலத்தில் இருக்கும் காதலியை, தன்னையும் மீறி தவிர்க்க முடியாமல் டாக்டர் பார்ப்பதும் இன்னொரு அருமையான காட்சி. இடையிடையே நம்மை ரிலாக்ஸ் செய்ய, நாகேஷ்-மனோரமா-’அய்யா தெரியாதய்யா’ ராமாராவ் ஆகியோரின் காமெடி வந்து போகிறது.

இந்தப் படத்தின் விஷேசங்களில் ஒன்று, ஏ.வின்செண்ட்டில் ஒளிப்பதிவு. பல இடங்களில் அவர் வைத்திருக்கும் கேமிராக்கோணம் ஆச்சரியமூட்டுகிறது. ’சொன்னது நீ தானா?’ பாடலில் முத்துராமன் கட்டிலின் மேலே அமந்திருப்பார். தேவிகா கீழே அமர்ந்து பாடிக்கொண்டிருப்பார். முத்துராமனைக் காட்டும் கேமிரா, அப்படியே கீழே இறங்கி கட்டிலுக்கு அடியில் நுழைந்து தேவிகாவின் முன்னால் வந்து நிற்கும். அதை எப்படி எடுத்தார்கள் என்று பல வருடங்கள் யோசித்திருக்கிறேன். கேமிரா கட்டிலுக்குக் கீழே வரும்போது, முத்துராமனை கட்டிலுடன் அலேக்காக தூக்கிவிட்டார்கள் என்று சமீபத்தில் தான் அறிந்தேன்.


இந்தப் படம் வெளியானது 1962ஆம் ஆண்டு வெளியானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். விதவை மறுமணம் பற்றி பொறுப்புடன் பேசியது, இந்தப் படம்.
ஒரு தந்தையும், சகோதரனும் தன் வீட்டு விதவைப் பெண்ணிற்கு மறுமணம் செய்துவைப்பது தவறா? எனும் கேள்வியை எழுப்பியது. அவர்களுக்கு மட்டுமல்ல, இறக்கப் போகும் கணவனுக்கும் அந்த பொறுப்பு உண்டு என்று சொன்னது இந்தப் படம்.  ஆனால் அதைவிடவும் நான் முக்கியாக நினைப்பது, விடலைப்பருவக் காதலை இந்தப் படம் எதிர்கொண்ட விதம் தான். 

காதல் என்பது புனிதமானது, கதாநாயகி கதாநாயகனைத் தவிர வேறு ஒருவனால் தொடப்படக்கூடாது எனும் கட்டுப்பெட்டித்தனத்தினை இப்பொழுதும் தமிழ் சினிமா முழுக்க விட்டொழித்து விடவில்லை. ஆனால் வாலிப வயதில் காதல் வருவதும், சந்தர்ப்ப சூழ்நிலையால் வேறொருவருடன் வாழ நேர்வது சகஜம் என்று சொன்னது இந்தப் படம். அது மட்டுமல்ல, அப்படி வாழும் ஒரு பெண் கணவனுக்கு நேர்மையாகவும் மனசாட்சியுடனும் வாழ முடியும் என்றும் வாழ்க்கையின் நிதர்சனத்தை உடைத்துப் பேசியது இந்தப் படம். 

இதை புரட்சி, பெண்ணியம் என்றெல்லாம் ஜல்லியடிக்காமல் யாரும் சினிமாவில் சொல்லியிராத விஷயத்தை அப்போதே சொன்னார் ஸ்ரீதர். ‘ஒருத்தனை மனசுல நினைச்சுக்கிட்டு, இன்னொருத்தன்கூட எப்படி வாழ்றது?” என்பது போன்ற கடந்த காலத்திலேயே உறைந்து, வாழ்க்கையைத் தொலைக்கும் சிந்தனை எதுவும் கதாநாயகிக்குக் கிடையாது. ’குடும்பக் கஷ்டம், வாழ்க்கைச் சூழல்..என்ன செய்ய?’ என்பது போன்ற ஒரு நிமிட வசனத்தில், மிகச் சாதாரணமான விஷயமாக கடந்து செல்கிறாள் சீதா. தன்னை நம்பும் கணவனுக்கு உண்மையாக இருப்பதும், அவன் உயிரைக் காப்பதையும் தவிர வேறு சிந்தனை எதுவும் சீதாவுக்குக் கிடையாது. 

ஒருவேளை டாக்டரின் மனம் சஞ்சலப்பட்டுவிடுமோ என்று பயந்து, ‘கணவன் இறந்தால் நானும் இறப்பேன். உன் மனதின் சிறு ஓரத்தில்கூட, என்னுடன் வாழ வாய்ப்பு இருப்பதாக எண்ணி விடாதே’ என்று நேரடியாகவே எச்சரிக்கிறாள் சீதா. அந்த கேரக்டருக்கு ஏன் ஸ்ரீதர் அந்தப் பெயரை சூட்டினார் என்று நாம் உணரும் தருணம் அது. வேணு தன்னை நல்ல கணவனாக நிரூபித்துவிட்ட நிலையில், தானும் அந்த நல்லவனுக்கு இணையானவள் தான் என்று அந்த எச்சரிக்கையில் நிரூபிக்கிறாள் சீதா.

ஆபரேசன் வெற்றி அடைந்தால், கணவன் கிடைப்பான். ஆபரேசன் தோல்வி அடைந்தால் டாக்டர் (காதலன் என்று சொல்வது முறையல்ல. அவள் அவனை டாக்டர் என்றே தெளிவுடனும் கம்பீரத்துடனும் படம் முழுக்க அழைக்கிறாள்) கிடைப்பான். எனவே இதில் முழுதும் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எனவே சீதா இறுதிவரை போராடுவது, தாலி பாக்கியத்திற்காக அல்ல. தன்னை முழுக்க நம்பிய, தன்னை உண்மையிலேயே விரும்பிய கணவனுக்கு நேர்மையாக இருக்கவே அவள் போராடுகிறாள். தன் மனசாட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவே அந்தப் போராட்டம். அது கட்டுப்பெட்டித்தனமோ, குங்குமம்-பூ பிரச்சினையோ அல்ல. அந்த கேரக்டரும் சூழ்நிலையும் அப்படி வடிவமைக்கப்பட்டதில் தான், இந்தப் படம் தனித்துவம் வாய்ந்ததாக ஆகிவிடுகிறது. மூன்று கேரக்டர்களில், சீதா மிகவும் உயர்ந்தவளாக ஆகிவிடுகிறாள். 

’கணவனின் உயிர், காதலனின் கையில்’ எனும் கதைக்கருவை மட்டும் Casablanca எனும் ஆங்கிலக் காவியத்தில் இருந்து கடன் வாங்கி, அதைவிடவும் உணர்ச்சிகரமான படைப்பைத் தந்தார் ஸ்ரீதர். தமிழ் சினிமா பற்றி அறிய விரும்புபவர்களுக்கு, நாம் பரிந்துரைக்க வேண்டிய முதல் படம் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’.
போனஸ்: இந்தப் படத்தின் பாடல்களைப் பற்றிப் பேசாமல் ஒரு பதிவா என்று திட்டாதீர்கள். பதிவு நீண்டுவிட்டதால், அது இங்கே:


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

 1. வாவ்.. இது அசத்தல் பதிவு நண்பா.. கண்ணெடுக்காமல் படித்து முடித்தேன்.. "ப்ரணயம்" அப்படின்னு ஒரு மலையாள படம் இருக்கு.. இந்தப் படத்தோட சாரல் கொஞ்சம் அடிச்சிருக்கும்.. மோகன்லால் பண்ணினது.. பார்த்திட்டு எப்படியிருக்குன்னு சொல்லவும்..!

  ReplyDelete
  Replies
  1. முடிந்தால் பார்க்கிறேன்.

   Delete
 2. அந்தக் காலத்துப் 'படங்கள்', "கதை" யுடன் .............சீராக.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.