Pages

Monday, August 11, 2014

சாட்சி - சிறிய கதை

அந்தப் பெண்ணை நம்ப முடியாமல் பார்த்தபடி நின்றிருந்தேன்.

ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்த அவள்என்னைப் பார்த்துவிட்டு திரும்ப ஜன்னல் பக்கமே திரும்பிக்கொண்டாள்.

'ஹலோ..எச்சூஸ்மீஎன்ற தடிமனான குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். அந்த சிங்கப்பூர் ஃப்ளைட்டில் ஏறிய தமிழ்க்'குடிமகனும்’ அவளுக்குப் பின்னே நீன்ட க்யூவும். திடுக்கிட்டுஅவசர அவசரமாக அந்தப் பெண்ணின் அருகே இருந்த சீட்டில் உட்கார்ந்தேன்.

பலமுறை விமானத்தில் பயணம் செய்திருந்தாலும், 'சிஸ்டர்..இன்னும் கொஞ்சம்என்று இறங்கும்வரை சுதியேற்றும் குடிமகன்களிடம் சிக்கிக்கொள்வதே வழக்கம். அதிசயமாக ஒரு பெண். சொக்கா!

எதிரே இருந்த சின்ன டிவி ஸ்க்ரீனில் 'எங்கள் ஃப்ளைட்டில் ஏறினால்எப்படியெல்லாம் பரலோகம் போகலாம்..அதை எப்படித் தவிர்க்க முயற்சிக்கலாம்எனும் வழக்கமான வீடியோ ஓட ஆரம்பித்தது. பெண் இன்னும் ஜன்னலையே முகர்ந்து பார்த்துக்கொன்டிருந்தாள்.

விமானம் ரன் வேயில் ஓட ஆரம்பித்து வேகம் பிடிக்கையில், என் கையை யாரோ இறுகப் பிடிப்பது தெரிந்தது. அருகில் இருந்த பெண்மணி தான். கண்ணை மூடியபடி, என் கையைப் பிடித்தபடி பயத்துடன்! 

எனக்குப் பறப்பது போல் இருந்தது. அது ஃப்ளைட் டேக் ஆஃப் ஆனதால் தானா என்று தெரியவில்லை. இன்னைக்கு அதிர்ஷ்டத்திற்கு மேல் அதிர்ஷ்டமாக இருக்கிறதே என்று ஆச்சரியத்தில் மிதந்தேன்.

விமானம் நேராகப் பறக்க ஆரம்பிக்கவும்என் கை விடுதலை செய்யப்பட்டது.
"ஃபர்ஸ்ட் டைம் ஃப்ளைட்ல வர்றீங்களா?" என்று ஆரம்பித்தேன்.
"இல்லை. ரெண்டு-மூணு மாசத்துக்கு ஒரு தபா  வரும்" என்று வித்தியாசமான உச்சரிப்புடன் பதில் வந்தது.
"தமிழ் இல்லையா?"
"ம்ஹூம்..ஆந்த்ரா"


"என்ன வேலை பார்க்கிறீங்க?"
"அதைச் சொன்னால் போலீஸ் பிடிச்சிடும்"

'ஆஹா..இது ஐட்டமா?' என்று எனக்கு பக்கென்று ஆகியது. சிங்கப்பூரில் அது லீகல் என்பதால்,தொழில் முடித்துத் திரும்புகிறார் என்று புரிந்தது. என் சிங்கப்பூர் நண்பனிடம் என்னை அங்குள்ள ரெட் லைட் ஏரியாவுக்கு கூட்டிப் போகும்படி கெஞ்சியும்அவன் மறுத்துவிட்டான். தவறாக நினைத்து விடாதீர்கள்.

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த எல்லாருக்கும் போலவேஎனக்கும் இலக்கியவாதி ஆகும் ஆசை உண்டு. பாலியல் தொழிலாளிகள் போன்ற விளிம்புநிலை மனிதரைச் சந்தித்தால்ஒரு காத்திரமான கதையை எழுதிவிடலாம் எனும் நம்பிக்கையும் உண்டு. இது தெரிந்ததால் தான் அவன் மறுத்துவிட்டான். ஏனோஅவனுக்கு இலக்கியவாதிகளைப் பிடிப்பதில்லை.

இருக்கட்டும்..இப்போது பார்த்தால்ஒரு ரெட் லைட்டே அருகே அமர்ந்திருக்கிறது.  நல்ல கதைக்கருவை தேற்றி விட வேன்டும் என்று முடிவு செய்யும்போதே குளிபான மங்கை வந்து'எஸ்..சார்என்று நின்றார். இருவருக்கும் ஜூஸ் வாங்கிக் கொண்டு இலக்கிய விசாரணையை ஆரம்பித்தேன்.

"கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க..எவ்ளோ கிடைக்கும்?"

"மாசம் பத்தாயிரம். டெய்லி எத்தனை பேர் வந்தாலும் ஏத்துக்கணும். மாசத்துல மூணு நாள் கடவுள்  கொடுத்த லீவ்"

"எவ்வளவோ வேலை இருக்கே.இதுக்கு ஏன்...?"

"இருக்கு..விதி"

'ஆஹா..வருது..வருதுஎன்றுநினைத்தபடியே "விதின்னா?"என்றேன்.

'ஊரில் விவசாயம் இல்லை. புருசனும் திடீர்னு இறந்துட்டார். தெரிஞ்ச அக்கா ஒன்னு இதுல இழுத்து விட்டுச்சு. அப்படியே போகுது"

அதே கதை. வறுமை - குடும்ப பாரம் - கே.பாலச்சந்தர்.

இதை இப்போ எழுதினால் மதிக்க மாட்டாங்களே..சரிஒரு க்ரைம் நாவலாவது...

"ஊர்ல தெரிஞ்சிடாதா?" என்றேன்.

"ம்ஹூம்..துபாய்ல மூணு மாசம். இங்கே..பஹ்ரைன்னு மாத்திக்கிட்டே இருப்பாங்க. வருசத்துக்கு ஒரு தபா தான் ஊருக்குப் போவேன். ஃபாரின்ல வீட்டு வேலைன்னு அம்மாபிள்ளைககிட்ட சொல்லி இருக்கேன்."

"ஓ..போற இடத்துல ஏதாவது பிரச்சினைன்னா சிக்கல் தானே"

"இல்லை..அவங்களுக்கு எல்லா லெவல்லயும் ஆள் இருக்கு. காப்பாத்திடுவாங்க"

இமிக்ரேசன் ஃபார்மை நிரப்பிக்கொள்ளும்படி ஏர் ஹோஸ்டஸ் கொடுத்துவிட்டுப் போனார்.

“எனக்குத் தெரியாது. எழுதிக்கொடுங்களேன்” என்றாள்.

சரி அதையாவது செய்வோம் என்று இருவருக்கும் எழுதி முடித்தேன். சற்று நேரம் அமைதியாகக் கழிந்தது. ’இலக்கியம்லாம் வேஸ்ட்டு..எழுதி எவன் சம்பாதிச்சிருக்கான்?’ என்று எனக்கு நானே ஆறுதல் சொல்ல ஆரம்பித்தேன். என்ன நினைத்தாளோ, திடீரென ஹேட்பேக்கில் இருந்து, ஒரு சிறிய மணிபர்ஸை எடுத்தாள்.

அதைப் பிரித்து ஒரு சிறிய பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை எடுத்து என்னிடம் நீட்டினாள்.

“என் வீட்டுக்காரர்”

ஒரு கிராமத்து முகம். என்ன சொல்வதென்று தெரியாமல் அவர் முகத்தைப் பார்த்தேன்.

”எப்பவும் என்கூட வச்சிருப்பேன்”

“எப்பவுமா?”

சட்டென்று கண் கலங்கி “ஆமாம்” என்று சொல்லிவிட்டு, ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டார்.

டிஸ்கி: Based on a real story. 

15 comments:

  1. சாதாரணக் கதையாய் பயணித்து கடைசியில் மனதில் தைத்து விட்டது...
    அருமை செங்கோவி.

    ReplyDelete
    Replies
    1. படைப்பாளியின் பாராட்டுக்கு நன்றி.

      Delete
  2. சோபா சக்தியின் "தேவதைகளின் நகரம்" கதையையே மிஞ்சிட்டீங்களே, நீங்க ஒரு இலக்கியவாதிதாண்ணே.

    ReplyDelete
    Replies
    1. அதென்ன மாப்பூ, கூச்சப்படாம அப்படிச் சொல்லிட்டீர்!

      Delete
  3. என்னமோ நடக்கப் போகுது,ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
    Replies
    1. மூணு வருசம் முன்னாடி...நடந்தாச்சு!

      Delete
    2. அது தெரிஞ்சது தானே!அதுக்கு அப்புறமா......இன்னிக்கு/இனிமேல நடக்கப் போகுதுங்குறேன்,ஹ!ஹ!!ஹா!!!

      Delete
  4. அருமையான கதை முடிவு மனதை நெருடுகின்றது.

    ReplyDelete
  5. கடைசியில் ஒரே ஒரு போட்டோவைக்காட்டி , முதலில் காண்பித்த அத்தனை அபத்தங்களையும் தூக்கி எரிந்து விட்டீரய்யா

    ReplyDelete
    Replies
    1. அப்போ முக்கால்வாசிக் கதை அபத்தமா இருக்குன்னு சொல்றீங்க..நோட் பண்ணிக்கறேன்!!

      Delete
  6. தொழிலாளின்னாலே ஆந்திராதான்..... ஹி..ஹி.... நல்ல கவனிப்பு.... அப்புறம் கிளைமேக்ஸ் செம செண்ட்டிமெண்ட்....... கிளுகிளுப்பா ஆரம்பிச்சி.. கலங்கலா முடிச்சிட்டீங்க.....

    ReplyDelete
    Replies
    1. //தொழிலாளின்னாலே ஆந்திராதான்// என்ன ஒரு ஜீகே..சூப்பர்ணே.

      Delete
  7. சிறுகதையும் திரைக்கதை இலக்கணத்தோடு.. அருமை நண்பா!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறேன் ஆவி.

      Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.