Monday, April 16, 2018

ஆண்டாள் : தேடிச் சோறு நிதந் தின்று..*த்தா டேய்


1930களில் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறை ஒழிப்பு மசோதாவைக் கொண்டுவருகிறார். பிராமணர்கள் எல்லோரும் ‘புனிதமான தேவதாசி தொழிலை ஏன் ஒழிக்க வேண்டும்?’என்று கொந்தளிக்கிறார்கள். சத்தியமூர்த்தி அய்யர் ‘கோவில் ஆச்சாரம் கெட்டுவிடும். யார் இனிமேல் தேவதாசிகள் செய்த புனிதத் தொழிலை செய்வார்கள்?’என்று சட்டமன்றத்திலேயே கேட்கிறார். அதற்கு டாக்டர்.முத்துலட்சுமிரெட்டி ‘ரொம்ப முக்கியம்னா, உங்க இனப் பெண்களையே செய்யச் சொல்லுங்கள்’என்று செருப்படி கொடுக்கிறார். ஆனாலும் ராஜாஜி அந்த மசோதாவைக் கிடப்பில் போடுகிறார். 1947-ல் தான் தேவதாசிமுறை ஓமந்தூராரால் ஒழிக்கப்படுகிறது.

மொத்தத்தில், 1930களில்கூட தேவதாசி என்பது புனிதமான தொழிலாகத் தான் பிராமணர்களுக்கு தெரிந்திருக்கிறது. 2017ல் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றி அற்புதமான ஒரு உரையை வழங்குகிறார். அதில் ‘அர்ச்சகரால் வளர்க்கப்பட்ட ஆண்டாள் தேவதாசி குலத்தில் பிறந்த குழந்தையாக இருக்கலாம் என்று ஒரு ஆய்வு சொல்கிறது’ என்று சொல்கிறார். அதாவது, ஆண்டாள் தேவதாசியாக வேலை பார்த்தார் என்று சொல்லவில்லை. அந்த குலத்தில் தான் பெண் குழந்தைகளை கோவிலுக்கு வழங்கும் வழக்கம் இருப்பதால், குழந்தை ஆண்டாளும் கோவிலில் போடப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார். அவ்வளவு தான், பிராமணர்கள் கொதித்தெழுந்துவிட்டார்கள். எப்படி ஆண்டாளை ‘தேவதாசி குலத்தில் பிறந்தவர்’என்று சொல்லலாம் என்று!

1930ல் கூட தேவதாசி வேலை புனிதம் என்றால், 7ம் நூற்றாண்டிலும் புனிதமான தொழிலாகத் தானே இருந்திருக்க வேண்டும்? இதில் எதிர்க்க என்ன இருக்கிறது? இருப்பினும், வைரமுத்து வருத்தம் தெரிவிக்கிறார். ‘தேவதாசி என்று சொன்னதை தாசி, வேசி என்று திரித்துவிட்டார்கள்’ என்று விளக்கம் சொல்லிக் கலங்குகிறார். பதிலுக்கு கிடைத்ததோ, அக்ரஹார ‘ஹோத்தா, ஹொம்மா’ வசை தான்.

வைரமுத்துவுக்கு இன்னும் தான் செய்த தவறு புரியவில்லை. யாராவது சூத்திரன் வீட்டுப் பெண்ணை ‘தேவதாசி’ என்று சொல்லியிருந்தால், ‘அதில் என்ன தப்பு...அது புனிதமான தொழில் தானே’ என்று இப்போதும் எச்சை போன்றோர் சொல்லியிருப்பார்கள். அய்யரால் வளர்க்கப்பட்ட ஆண்டாளைச் சொல்லிவிட்டார் என்பது தான் பிரச்சினையே. இப்போதும் சூத்திரர்கள் செய்தால், தேவதாசி வேலை புனிதமானது தான்.

இது என்ன இரட்டை நிலை? அது எப்படிச் சரி என்று குழம்புவோர்க்கு சமகால உதாரணத்தைத் தருகிறேன்.

அரசியல் புரோக்கரும் ஜெயலலிதாவுடன் சேர்ந்து டாஸ்மாக் சரக்கு விற்ற சாராய வியாபாரியுமான சோ ராமசாமியின் துக்ளக் பத்திரிகைக்கு விபரம் தெரிந்ததில் இருந்தே வாசகன் நான். ‘அதைப் படிக்காதே...அத்தனையும் விஷம்’ எனும் நட்புகளில் அறிவுரையையும் தாண்டி துக்ளக் வாசகனாக இருந்தேன்.

சந்தன வீரப்பனைப் பிடிக்கச் சென்ற அதிரடிப்படையினர் வாச்சாத்தி மக்களிடம் விசாரணை என்ற பெயரில் நடத்திய அட்டூழியங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். பெண்களை நிர்வாணமாக்கி, பிறப்புறுப்பில் எலக்ட்டிக் ஷாக் கொடுத்தது ஒரு உதாரணக் கொடுமை. இதுபற்றி சோ ‘போலீஸ் என்றால் அப்படி விசாரிக்கத்தான் செய்வா. ஒரு கிரிமினலுக்கு சப்போர்ட் செய்தால் இதையெல்லாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும். மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறார். அதனால் உண்மையைச் சொல்லுங்கோ என்று கேட்டால் இவர்கள் சொல்வார்களா?’என்ற ரீதியில் எழுதியிருந்தார். தர்க்கரீதியில் சரியான வாதம் தான்.

பிறகு சில வருடங்கள் கழித்து காஞ்சி ஜெயேந்திரன் கொலைக்கேஸில் கைது செய்யப்பட்டார். சங்கரராமனின் கடித்ததில் ஜெயேந்திரன் ஒரு மாமிக்கு பட்டுப்புடவை வாங்கிக்கொடுத்த கசமுசா விவரம் இருந்தது. எனவே மாமி போலீஸ் ஸ்டேசனுக்கு அழைக்கப்பட்டார். ‘மாமி, ஸ்வாமி ஏன் நோக்கு பட்டுப்புடவை கொடுத்தா?’ என்று விசாரிக்கப்பட்டார். அவ்வளவு தான் சோ-விற்கு வந்ததே கோபம். ‘எப்படி ஒரு குடும்பப் பெண்ணை விசாரணைக்கு அழைக்கலாம்?’ என்று துக்ளக்கில் பொங்கிவிட்டார். இத்தனைக்கும் மாமி நிர்வாணமாக்கப்படவில்லை, பிறப்புறுப்பில் வயரும் சொருகப்படவில்லை.
வாச்சாத்தி பெண்களுக்குச் செய்யப்பட்ட கொடுமைகள் எல்லாம் சரி என்றும் பிராமணப் பெண்மணியிடம் நடத்தப்பட்ட சாதாரண விசாரணை தப்பு என்றும் தோன்றுவது ஏன் என்று யோசித்தேன். பார்ப்பனீயம் என்றால் என்ன என்று அன்று தெளிவாகப் புரிந்துகொண்டேன்.

இன்றைக்கு தேவதாசி விஷயத்திலும் அத்தனை பிராமணர்களும் சோ ராமசாமியாக மாறி ஆர்ப்பரிக்கிறார்கள். ’உங்க வீட்டுப் பெண் செய்தால் புனிதம்..அதையே எங்க வீட்டுப் பெண் செய்வதாகக் கூறினால்கூட பாவம்’ என்று தெளிவாகச் சொல்கிறார்கள். பல விஷயங்களில் நியாயமாக நடந்துகொள்ளும்/எழுதும் பிராமண நண்பர்கள்கூட, இந்த இரட்டை மனநிலையுடன் தான் இருக்கிறார்கள்.

இந்த பிரச்சினையில் ஒரே ஒரு சந்தோசம் என்னவென்றால், ஆண்ட பரம்பரை வந்து சிக்கிக்கொண்டது தான்.

’நாம அய்யருகளை மதிக்கணும். சாமின்னு தான் கூப்பிடணும். அப்போத் தானே நம்மால் தாழ்த்தப்பட்டவன், நம்மளை மதிப்பான்; சாமீன்னு சொல்வான்’ என்பது தான் ஆண்டைகளின் அடிப்படைக் கொள்கை. ஆனால் தலித் இயக்கங்களின் எழுச்சிக்குப் பின், தலித்கள் ‘நீ எதையோ திங்கறேங்கிறதுக்காக நாங்க திங்க முடியுமா?’என்று இந்த டீலிங்கில் இருந்து வெளியேறிவிட்டார்கள். ஆனால் ஆதிக்க சாதிகளுக்கு அது இன்னும் உறைக்கவே இல்லை. ஊர்களில் பெரிய கோவில்களைக் கட்டுவார்கள். முடிவில் அய்யரிடம் ‘சாமீ’ என்று சரணடைந்துவிடுவார்கள்.

ஒரு பிராமணர் பூசாரியாக இருக்கலாம். டீக்கடைக்காரராக இருக்கலாம். ஐடியில் வேலை செய்யலாம். எங்கிருந்தாலும் அவர்களை ஆண்டைகள் விளிப்பது ‘சாமி’ என்று தான். எனக்குத் தெரிந்த தலித் நண்பர்கள் ‘சாமி’ சரணத்தை விட்டு எப்போதோ வெளியேறிவிட்டார்கள். ஆனால் ஆபீஸில்கூட ‘சாமி’ என்று சக ஊழியரை அழைக்கும் அடிமைத்தனம் ஆதிக்க சாதிகளிடம் எஞ்சி இருக்கிறது. இது பிராமணர்களுக்கும் நன்றாகத் தெரியும். அதனால் தான் வைரமுத்துவை ‘வேசி மகனே’ என்று தைரியமாக எச்சை ராஜாவால் சொல்ல முடிகிறது. இதையே வேறு ஜாதித் தலைவர் சொல்லியிருந்தால், பெரும் கலவரம் ஆகியிருக்கும். ’அய்யரு தானே சொன்னாரு..பாக்கியம்’ என்று தான் அடிமைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை.

ஆத்திகர்களான நமக்கு இந்த ‘சாமீ’ விஷயத்தில் குழப்பமும், மனச்சிக்கலும் இருக்கிறது. இந்த குழப்பத்தை எனக்குத் தீர்த்து வைத்தது ஒரு நாட்டுக்கோட்டை செட்டியார் நண்பர். கோவில்களை கட்டுவது, பாரமரிப்பது போன்றவை அவர்களது குடும்ப வழக்கம். எனவே சிறு வயதில் இருந்தே பூசாரிகளை பார்த்து வந்திருக்கிறார்கள். சம்பளத்திற்காக வீட்டிற்கு வந்து நிற்கும் பூசாரிகளைப் பார்த்திருக்கிறார். எனவே, அவரைப் பொறுத்தவரை ‘பிராமணர்கள் என்போர் கோவில் ஊழியர்கள்’..அவ்வளவு தான்.

’நீங்கள் எல்லாம் வலியப் போய் சாமீ..சாமீ என்று கூப்பிடுகிறீர்கள். பிறகு அவர்களின் சுயசாதி அபிமானமும் ஆச்சாரமும் உங்களைச் சுடும்போது ‘அடேய்..பார்ப்பான்’ என்று பொங்குகிறீர்கள். கோவில் ஊழியர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். எந்த அளவிற்கு என்று தான் உங்களுக்குத் தெரியவில்லை. நீங்களே அடிமையாக ஒப்புக்கொண்டு, பிறகு நீங்களே ‘அய்யருங்க எல்லாம் மோசம்’ என்றும் பேசித் திரிகிறீர்கள்’ என்று நண்பர் நம் மனச்சிக்கலை விளக்கினார்.

பிறகு ஆண்டவன் புண்ணியத்தில் இரு கோவில்கள் கட்டுவதிலும் பராமரிப்பதிலும் என் பங்களிப்பை அளிக்கும்நிலை வந்தபோது, அவர் சொன்னதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். ‘எல்லாத் தொழிலுமே புனிதம் தான். எல்லா கோவில் ஊழியர்களுமே புனிதமானவர்கள் தான். எல்லாருமே மனிதர்கள் தான். காசுக்கு ஏற்ப சேவையை ஏற்றி/இறக்கும் சாமானியர்கள் தான்’ என்று புரிந்துபோனது.

‘பூசாரிகள் ஒன்றும் சாமிகள் அல்ல..கோவில் ஊழியர்கள் தான். அவர்களது வருமானம் என்பது ஏதோவொரு வகையில் நமது காசு தான். நமக்கு சேவை செய்யவே அவர்கள். அதைச் சரியாகச் செய்யும்வரை மரியாதை!’ என்பது தான் நமது மனநிலையாக இருக்க வேண்டும். எனவே முதலில் ‘சாமீ’ என்பதை விட்டு ஒழியுங்கள். நீங்களே சாமி ஆக்கிவிட்டு, பிறகு ‘அன்னிக்கே பெரியார் சொன்னார்’ என்று புலம்பாதீர்கள்.

இந்த களேபரத்திலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், பிராமணர்கள் ஆண்டாள் விஷயத்தில் வலியத் திரித்து வம்பு செய்வதை எல்லோருமே புரிந்திருக்கிறார்கள். மத்தியில் பிஜேபி ஆட்சியைப் பிடித்ததற்கே இந்த ஆட்டம் என்றால், தமிழ்நாட்டில் கொஞ்சம் இடம் கிடைத்தாலும் ஐந்தாயிரம் வருசம் பின்னோக்கி நம்மை கொண்டு சென்றுவிடுவார்கள் என்பதை இந்த வம்புப் போராட்டம் எல்லோருக்கும் புரிய வைத்திருக்கிறது. மகிழ்ச்சி.

அப்புறம், பிராமண நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். யாராவது சாமி என்று அழைத்தால் ‘நான் சாமி இல்லை. கர்ப்பகிரகத்தில் இருக்கறவா தான் சாமி. என்னை சாமின்னு கூப்பிட்டால் சூத்துல கட்டி வந்து சாவேள்’ என்று தன்மையாக சூத்திரர்களுக்கு எடுத்துச் சொல்லவும்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.