Pages

Monday, August 19, 2013

சித்திரம் பேசுதடி - திரை விமர்சனம் (பாகம்-2)

கதை நாயகனும் குறிக்கோளும்:

சிறுகதை, நாவல், நாடகம், சினிமா என எந்தவொரு வடிவத்திற்குமே அடிப்படையாக இருக்கவேண்டியது "இது யாரைப் பற்றிய கதை?" எனும் கேள்விக்கான பதில் தான். சித்திரம் பேசுதடியைப் பொறுத்தவரை இது திரு என்பவனின் கதை. திரு தான் இந்தக் கதையின் மையம். அவன் வாழ்க்கையில் தான் அண்ணாச்சி நுழைகின்றார். அவன் வாழ்க்கை மாறுகின்றது. தொடர்ந்து சாரு வருகின்றாள். அவன் வாழ்க்கை, வேறு திசையில் திரும்புகின்றது. தொடர்ந்து சாருவின் அப்பாவினால், அவன் வாழ்க்கை தலைகீழாகப் புரட்டப்படுகிறது. இறுதியில் அவனது எல்லாப் பிரச்சினைகளும் தீர்கிறது.

ஒரு நல்ல திரைக்கதையில் கதையின் நாயகனுக்கு தெளிவான குறிக்கோள் இருக்க வேண்டும். அது ஆடியன்ஸ் உணர்ச்சிகளுடன் விளையாடும் அடிப்படைப் பிரச்சினையாக இருக்க வேண்டும். பெரும்பாலான தமிழ்ப்படங்களைப் போலவே இங்கே காதல் தான் முக்கியப் பிரச்சினையாகிறது. அந்த காதல் மூலமாக,  தன் வாழ்க்கையை மேம்படுத்துவதே திருவின் குறிக்கோள்.

புரிந்து கொள்வதில் எவ்வித சிக்கல்களும் இல்லாத, மிகவும் சிம்பிளான குறிக்கோள் அது. படம் பார்க்கும் மக்கள் அனைவரின் குறிக்கோளாக இருப்பது, வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வது தான். படிப்பு, வேலை,கல்வி, அறிவு, பணம் என நாம் செய்யும் செயல்களின் நோக்கம் அனைத்துமே நம்மை மேம்படுத்திக்கொள்வது தான். இந்தக் கதையின் நாயகனின் குறிக்கோளும் அதுவாகவே இருப்பதால், படம் பார்ப்போர் எளிதில் அவனுடன் ஐக்கியம் ஆகின்றார்கள். அங்கிருந்து ஆரம்பிக்கின்றது படத்தின் வெற்றி.


இங்கே வெற்றி என்று நான் சொல்வது வியாபார வெற்றியை அல்ல. ஒரு படம், கமர்சியல் படமேயானாலும், ரசிகனுக்கு நல்ல படம் பார்த்த திருப்தியைக் கொடுக்க வேண்டும். அதுவே உண்மையான வெற்றி. 'வியாபாரம் / பணத்தை மட்டுமே அளவீடாகக் கொண்டு ஒரு படத்தை வெற்றி-தோல்வி என்று சொல்லக்கூடாது. நாங்க என்ன பாலியல் தொழிலா செய்கிறோம்?' என்று பாலுமகேந்திரா சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்டார். நியாயமான கேள்வி தானே அது?

அந்த நோக்கத்திற்கான பயணத்தில் திரு சந்திக்கும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுமே இந்தப் படத்தின் திரைக்கதை.

ஒரு படம் வெற்றிப்படமாக அமையவேண்டும் என்றால், கதாநாயகனே எல்லா செயல்களையும் செய்பவனாக இருக்கவேண்டும். வேறொருவருக்கு எதிர்வினை ஆற்றுபவனாக, பிறரின் கைப்பாவையாக இருக்கக்கூடாது. அது படம் பார்க்கும் ரசிகனை திருப்திப்படுத்தாது.


அதற்கு சமீபத்திய உதாரணமாக ஏழாம் அறிவு படத்தினைக் குறிப்பிடலாம். ஏழாம் அறிவு படத்தின் கதை இது தான் : ஒரு கல்லூரி மாணவி, தன் ஆராய்ச்சிகளின் முடிவில் போதி தர்மனின் வாரிசின் மூலமாக, போதி தர்மனை (அல்லது அவரது இயல்புகளை) மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று கண்டுபிடிக்கிறாள். இதையறிந்த சீன எதிரிகள் இந்த திட்டத்தை நசுக்க முயல்கிறார்கள். இதில் அவள் வென்றாளா? போதிதர்ம ஆவி(!!)ம் வாரிசின் உடலில் உயிர்த்தெழுந்ததா?

இந்தக் கதை முழுக்க முழுக்க கதாநாயகியின் கதை. கதாநாயகன், நாயகியின் கைப்பாவை மட்டுமே. எவ்விதக்குறிக்கோளும் கிடையாது. குப்பையில் போடப்பட்ட 'காதழும்', 'அடிக்கணும்..திருப்பி அடிக்கணும்' எனும் கடைசிக்கட்ட ஞானோதயமும் மட்டுமே கதாநாயகனின் தீரச்செயல்கள். ஆனால் படத்தின் முக்கியக்குறிக்கோள், நாயகியின் கையில் சிக்கிவிட்டதால், படம் பார்த்தோர் முழு திருப்தி பெற முடியவில்லை.

அந்தவகையில் சித்திரம் பேசுதடி நாயகனின் குறிக்கோளும் செயல்பாடுகளும் தெளிவானவை. நாயகியைக் காதலிப்பதை அவனே முடிவு செய்கிறான். பெரும் பழியை ஏற்பதையும் அவனே முடிவு செய்கிறான். நாயகியை விட்டு விலகவும், அண்ணாச்சியைவே எதிர்க்கவும் அவனே முடிவு செய்கிறான்.
மிஷ்கினின் நாயகன், சினிமாப் பார்வையாளனைத் திருப்திப்படுத்தும் அடிப்படைப் பண்புகளுடம் படைக்கப்பட்டிருப்பதே திரைக்கதையின் முதல் வெற்றி.

(அலசல்-தொடரும்)


13 comments:

  1. அலசல் அற்புதம்... தொடருங்கள்.

    ReplyDelete
  2. முதல் பாகத்தின் லிங்க் தந்திருக்கலாமே..

    ReplyDelete
  3. அருமையான அலசல்.திரைப் படத்தை தயாரித்தவர்கள்/இயக்கியவர்கள் இந்தக் கோணத்தில் எல்லாம் சிந்தித்திருப்பார்களா?என்பது சந்தேகமே!

    ReplyDelete
  4. அருமையான அலசல்... தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  5. அலசல் தொடரட்டும் தொடர்கின்றேன்.

    ReplyDelete
  6. நல்ல அலசல்... இனி தொடர்கிறேன்...

    ReplyDelete
  7. //தமிழ்வாசி பிரகாஷ் said... [Reply]
    முதல் பாகத்தின் லிங்க் தந்திருக்கலாமே..//

    கீழே தொடர்புள்ள பதிவுகளில் இருக்கிறதே!

    ReplyDelete
  8. // Subramaniam Yogarasa said... [Reply]
    அருமையான அலசல்.திரைப் படத்தை தயாரித்தவர்கள்/இயக்கியவர்கள் இந்தக் கோணத்தில் எல்லாம் சிந்தித்திருப்பார்களா?என்பது சந்தேகமே! //

    ஐயா,மிஷ்கின் தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவர். அவரது சில பெர்சனல் நடவடிக்கைகள் நமக்கு ஒவ்வாமையைக் கொடுத்தாலும், அவரது சினிமா அறிவும், திறமையும் காலம் தாண்டி அவர் பெயர் சொல்லும். எனவே, அவர் அறியாததை நான் சொன்னேன் என்று சொல்வது சரியா?

    ReplyDelete
  9. // சே. குமார் said... [Reply]
    அருமையான அலசல்... தொடருங்கள்... தொடர்கிறோம்... //

    நன்றி குமார்.

    ReplyDelete
  10. //
    தனிமரம் said... [Reply]
    அலசல் தொடரட்டும் தொடர்கின்றேன். //

    நன்றி நேசரே

    ReplyDelete
  11. //
    திண்டுக்கல் தனபாலன் said... [Reply]
    நல்ல அலசல்... இனி தொடர்கிறேன்... //

    தொடருங்கள் தனபாலன்.

    ReplyDelete
  12. ஒவ்வொரு முறை சித்திரம் பேசுதடி,அஞ்சாதே பார்க்கும் போதும் ஏதாவது ஒரு காட்சியாவது அட!இப்படி கூட எடுக்கலாமானு தோணும்.

    ReplyDelete
  13. அவர் அறியாததை அல்ல,நாம் அறியாததை நீங்கள் சொன்னீர்கள்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.