Pages

Thursday, January 21, 2016

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 69

69.ஜெனர் - ஃபேமிலி / செண்டிமெண்ட்

தமிழ் சினிமாவில் காதலுக்கு அடுத்து வெற்றிகரமான ஜெனராக இருப்பது, ஃபேமிலி ஜெனர் தான். பொதுவாகவே நாம் உணர்வுப்பூர்வமானவர்கள் என்பதால், செண்டிமெண்ட்டுக்கு என்றும் மதிப்பு குறைவதில்லை. புதிதாக திரைக்கதை எழுத வரும் தேர்ந்தெடுப்பது த்ரில்லர் ஜெனரைத் தான். ஆனால் வெற்றிப்படங்களின் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தால், ஃபேமிலி செண்டிமெண்ட் படங்கள் அல்லது செண்டிமெண்ட்டை பி-ஸ்டோரியாக கொண்ட படங்களின் தாக்கத்தை உணரலாம். சமீபத்திய உதாரணம், த்ரிஷ்யம் / பாபநாசம். எனவே ஆக்சன், கேங்ஸ்டர் என எந்தவொரு ஜெனரில் திரைக்கதை எழுதினாலும், அதில் செண்டிமெண்டிற்கு இடம் இருந்தால் தயங்காமல் செண்டிமெண்ட்டைப் பொதுமான அளவு கலந்து அடியுங்கள்!

டிவிக்கள் வந்தபின், முழுமையான ஃபேமிலி செண்டிமெண்ட் படங்களுக்கு மதிப்பு குறைந்துவிட்டாலும், பி ஸ்டோரியை டெவலப் செய்ய உதவும் என்பதால் இந்த ஜெனரின் வகைகளைப் பார்ப்போம்.

1. உறவுக் கதைகள்: 
ஒரு குடும்பத்தில் இருக்கும் இரு உறவுகளின் உணர்வை மட்டும் மையப்படுத்தி வருபவை, இந்த வகைப் படங்கள். உதாரணமாக கணவன் - மனைவி, அண்ணன் - தங்கை, அண்ணன் - தம்பி, அப்பா-மகன், அம்மா - மகன் என்று குறிப்பிட்ட உறவை மட்டும் விரிவாக எடுத்துச் சொல்பவை இந்த உறவுக் கதைகள். நட்புக் கதைகளையும் இதே உறவுக்கதைகளின் கீழ் அடக்கிவிட முடியும்.

தாய் பாசம் பற்றி எடுக்கப்பட்ட படங்களைப் பட்டியலிட்டால் இந்தப் பதிவு போதாது. தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் செண்டிமெண்ட் அது. அதில் இருந்து மாறுபட்டு, அப்பாவுக்கும் மகனுக்குமான உறவைப் பற்றிப் பேசிய படம் தவமாய் தவமிருந்து. அண்ணன் - தங்கை பாசம் என்றதும் இப்போதும் நம் நினைவுக்கு வருவது பாசமலர். படம் வெளியாகி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனபின்பும், இன்றும் பாசமலரை விடச் சிறந்த அண்ணன் - தங்கை படம் வரமுடியவில்லை. ஒரு திரைக்கதை மாணவனாக நாம் இந்தப் படங்களை முழுமையாக ஸ்டடி செய்ய வேண்டும். எதனால் இத்தகைய படங்கள் இன்றும் போற்றப்படுகின்றன, எப்படி அந்த கேரக்டர்கள் படைக்கப்பட்டிருக்கின்றன என்று ஆராய்வது அவசியம்.

இரு உறவுகள் ஒற்றுமையாக இருந்தன, அதன்பின் அவை ஏதோ பிரச்சினையால் பிரிந்தன, மீண்டும் ஒன்றாக இணைந்தன என்பது தான் இந்தவகைப் படங்களின் ஒன்லைன். பொதுவாக பிரிவு நடக்கும்போது, இருவரும் ஒருவரையொருவர் எதிரியாக நினைத்து சண்டை போடுவதும், பிறகு உண்மை/தவறு புரிந்து இணைவதும் வழக்கம். பாசமலரைப் பொறுத்தவரை வாழ்க்கை அவர்களை சுற்றிச் சுற்றி அடித்துப் பிரித்தாலும், அண்ணனும் தங்கையும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுப்பதே இல்லை. ஆடியன்ஸ் இரு கேரக்டரையும் ஒன்று போல் நேசிக்கும் அளவிற்கு திரைக்கதையை செதுக்கியிருப்பார்கள். இன்றுவரை சிவாஜியா, சாவித்திரியா, யார் பாசம் உயர்ந்தது எனும் கேள்வி எழவே இல்லை. இருவரையும் சமமாகவே மக்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

கவனித்துப் பார்த்தால், தவமாய் தவமிருந்து படத்திலும் அப்பா - மகன் கேரக்டர் ஸ்கெட்ச்சிலும் திரைக்கதையிலும் பாசமலர் டெக்னிக் இருப்பதைப் பார்க்கலாம். மகனும் நல்லவன், அப்பாவும் நல்லவர். சந்தர்ப்ப சூழ்நிலை தான் வில்லன். அந்த ஜெனரில் எவ்வளவோ படங்கள் வந்தாலும், இத்தகைய நுணுக்கமான வேலைப்பாடுகள் தான் அந்த படங்களுக்கு தனித்தன்மையைக் கொடுத்தன. இதைத் தான் ஒவ்வொரு வெற்றிப்படங்களில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

2. குடும்பக் கதைகள்:

’ஒரு அமைதியான, அழகான குடும்பம். அங்கே ஒரு பிரச்சினை வந்து அமைதி குலைகிறது. இறுதியில் எல்லாம் சுபம்.’என்பது தான் இவ்வகைக் கதைகளின் ஒன்லைன். விசுவின் அத்தனை படங்களையும் இந்த வகையின் கீழ் கொண்டுவந்துவிடமுடியும். டிவி சீரியல்களை வாழ வைப்பதே இந்த குடும்பக் கதைகள் தான். டிவி சீரியல்களின் வருகைக்குப் பின் ஃபேமிலி செண்டிமெண்ட்டில் இத்தகைய ‘குடும்பத்தில் பிரச்சினை’கதைகளுக்கு வரவேற்பில்லாமல் போனது. ஆனாலும் வானத்தைப் போல, ஆனந்தம் போன்ற படங்கள் நல்ல பாடல்கள் மற்றும் நகைச்சுவையின் துணையோடு களமிறங்கி வெற்றி கொண்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கே.எஸ்.ரவிகுமாரின் நாட்டாமை டைப் படங்கள் எல்லாமே இந்த ஜெனரின் கீழ் தான் வரும். அதில் காமெடி, பாட்டு, காதல், ஆக்சன் என எல்லாவகையான மசாலாக்களையும் தூவி, விசு சாயலே இல்லாமல் ஆக்கி வெற்றி பெற்றவர் கே.எஸ்.ரவிகுமார்.

எனவே குடும்பக் கதைகளுக்கு மார்க்கெட் இல்லாவிட்டாலும், அவற்றை புதுமையாகச் சொன்னால் வெற்றி பெறவே செய்யும். அதற்கு சமீபத்திய உதாரணம், பாபநாசம். சமீப காலத்தில் கிராமங்கள்வரை ரீச் ஆன கமலஹாசன் படம் பாபநாசம் தான். அதற்குக் காரணம், அதில் இருந்த த்ரில்லர் ஜெனர் அல்ல; ஃபேமிலி ஜெனர் தான்.

இந்த ஆண்டு கமல் இரண்டு த்ரில்லர் படங்களில் நடித்தார். ஒன்று பாபநாசம், இன்னொன்று தூங்காவனம். பாபநாசத்தில் குடும்பத்திற்கு ஆபத்து, தூங்காவனத்தில் மகனுக்கு ஆபத்து. பாபநாசம் அடைந்த வெற்றியை தூங்காவனத்தால் அடைய முடியவில்லை. காரணம், செண்டிமெண்ட் எனப்படும் எமோசன் அங்கே இல்லாததால் தான். பாபநாசத்தை விடவும் வேகமான த்ரில்லர் தூங்காவனம். ஆனால் ஹீரோவின் பதைபதைப்பினை ஆடியன்ஸ் அடையாததால், படம் தோல்வியடைந்தது. அதற்குக் காரணம் மகனுக்கும் அப்பாவுக்குமான உறவும், (பிரிந்து போன) மனைவிக்கும் கணவனுக்குமான உறவும் தெளிவாக, நம் மண் மணம் கமழ சொல்லப்படாதது தான்.

எனவே த்ரில்லர் கதை தான் எழுதுவேன் என்று துடிக்கும் இள ரத்தங்கள், செண்டிமெண்ட்டின் மதிப்பை உணர பாபநாசத்தையும் தூங்காவனத்தையும் பத்து முறை பார்க்கவும்.


3. புது வரவுக் கதைகள்:

’அமைதியான குடும்பம் ஏதோவொரு பிரச்சினையில் சிக்கிக் கிடக்கிறது. அங்கே ஒரு புது கேரக்டர் வந்து, எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கிறது’என்பது தான் இவ்வகைக் கதைகளின் ஒன்லைன். இந்த வகைப் படங்களை வெற்றிகரமாகச் செய்தவர், இயக்குநர்  விக்ரமன். இந்த ஒன்லைனை வைத்து புது வசந்தம், கோகுலம், பூவே உனக்காக என்று சூப்பர் ஹிட் படங்களாகக் கொடுத்தார். குறிப்பாக பூவே உனக்காக படத்தின் ஸ்பெஷாலிட்டியே, காதல் ஜெனரும் ஃபேமிலி ஜெனரும் மிகச் சரியாக மிக்ஸ் ஆனது தான். கேரக்டர்களின் இயல்பு மாறும், பிரச்சினை மாறும். ஆனால் இதே ஒன்லைனை வைத்து தொடர்ந்து அவரால் ஹிட் கொடுக்க முடிந்தது. ஒரு ஹீரோ புது இடத்திற்குப் போய் மாற்றங்களை உருவாக்குகிறான் என்றாலே நாம் விக்ரமன் படங்களை ஒருமுறை ரெஃபரென்ஸ் செய்துகொள்வது நல்லது!

------------

ஒரு கதையை டெவலப் செய்யும்போது ஏ ஸ்டோரியின் ஜெனர் வேண்டுமானால் நமக்குத் தெளிவாகத் தெரியலாம். பி ஸ்டோரி என்பது பொதுவாக தானே டெவலப் ஆகி வரும் விஷயம். பி ஸ்டோரி காதல் தான் என்று நினைத்து டெவலப் செய்யும்போது, அதைவிட ஃபேமிலி ஜெனர் சரியாக வரும் சூழ்நிலை வரலாம். எனவே இதுவரை பார்த்த ஜெனர் வகைகள் அனைத்தையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எந்த ஜெனர் சரி என்பது சில நேரம் நம்மை விட நம் கதை நன்கு அறியும்.

இனி பாகம் IV-ல் பார்த்த திரைக்கதை எழுதுவது எப்படி என்பதன் மீதிப் பகுதிகளைப் பார்த்துவிட்டு சுபம் போடுவோம்!

(தொடரும்)

No comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.