Pages

Friday, August 29, 2014

நெஞ்சில் ஓர் ஆலயம் - பாடல்களும் கண்ணதாசனும்


இப்போதெல்லாம் கதையை மறைத்து வைக்கும் போக்கு பரவலாக இருக்கிறது. படம் பார்க்கும் அன்பர்கள், படத்தின் கதையை வெளியே சொல்ல வேண்டாம் என்றெல்லாம் வேண்டுகோள்கள் விடப்படுகின்றன. சில இயக்குநர்கள் இதனால் தானோ என்னவோ கதையே இல்லாமல் படம் எடுத்து, கிளைமாக்ஸில் படத்தை முடிக்கிறார்கள்!

ஆனால் இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டாலே போதும், இந்தப் படத்தின் கதையைச் சொல்லிவிடலாம். அது, எந்தவிதத்திலும் படம் பார்ப்பதைப் பாதிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், படத்துடன் நம்மை மேலும் ஒன்ற வைக்க, கதையுடன் இணைந்து வரும் அந்தப் பாடல்கள் உதவுகின்றன. விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்களின் இசையமைப்பில், ஒவ்வொரு பாடலுமே தேவ கானம் தான். கூடவே கண்ணதாசனின் தமிழும் சேர்ந்துகொள்ள, கேட்கக் கேட்கச் சலிக்காத பாடல்களாக எல்லாப் பாடல்களுமே அமைந்துவிட்டன. 

காதலன் பாடும் முதல் பாடலே படத்தின் கதையைச் சொல்லிவிடுகிறது:
வருவாய் என நான் தனிமையில் இருந்தேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்!
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க! 

( எங்கிருந்தாலும் வாழ்க - என்பது இன்றும் தேவதாஸ்களின் தேசிய வரியாக இருக்கிறது)

கணவன் பாடும் இரண்டாவது பாடல், பழைய காதலர்களின் வாழ்வில் விதியின் விளையாட்டைப் பற்றிப் பேசுகிறது:

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை....நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்!

கணவன் இருவரையும் சேர்த்து வைக்க தயாராகிவிட்டான் என்பதை சீதா பாடும் இந்தப் பாடல் சொல்கிறது:

சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே!

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா?
தெருவினிலே விழுந்தாலும் வேறோவர் கை தொடலாமா?

கணவன் பிரியும் நேரத்தில் மனைவியை மணக்கோலத்தில் பார்க்க விரும்புவதைச் சொல்லும் பாடல்:

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏனிந்த கோலத்தை கொடுத்தாயோ
முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ
முகத்தை பார்த்து கொள்ள துடித்தாயோ..!

சீதாவின் உறுதியையும் கிளைமாக்ஸையும் அதே பாடலின் இந்த வரிகள் சொல்லும்:
மாயப் பறவை ஒன்று வானில் பறந்து வந்து
வாவென அழைத்ததைக் கேட்டாயோ?

பறவை பறந்து செல்ல விடுவேனா? 
அந்த பரம்பொருள் வந்தாலும் தருவேனா? 

சினிமா என்பது இயக்குநரின் ஊடகம் தான். ஆனால் கவிஞர் கண்ணதாசன் தன் மொழிப்புலமையால், பாடல் காட்சிகளில் சினிமாவை தன் ஊடகமாக ஆக்கிவிடுவதில் சித்தர். இதிலும் கவிஞரின் சித்துவேலையை இந்த வரிகளில் காணலாம்:

ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா?
ஒரு மனதில் ஒரு முறை தான் வளரும் உறவல்லவா?

படத்தின் அடிநாதமே, காதலனிடம் அன்பைப் பொழிந்த அதே பெண், கணவனிடமும் அதே அன்பை நேர்மையாகப் பொழிகிறாள் என்பது தான். இங்கே அதற்கே வேட்டு வைக்கிறார் கவிஞர். காதலனின் கொடியில் காதல் பூ மலர்ந்திருக்கிறது. அதைக் கணவனும் அறிவான். அவனுக்குத் தெரியும் என்பது, மனைவிக்குத் தெரியாது. அந்தச் சூழலில் ‘ஒருமுறை தான் மலரும்’ என்றால், பொய் சொல்வதாக ஆகாதா? அதைக் கேட்டால் கணவனுக்குக் கோபம் வராதா?

அவனுக்குக் கோபம் வருவதில்லை. அவளும் பொய் சொல்லி, ஏமாற்றும் ஆள் இல்லை. பின் ஏன் அப்படிச் சொல்கிறாள்?

கவிஞர் இந்த வரிகளின் மூலம், அவளுக்கு முதலில் இருந்தது காதலே அல்ல..வெறும் இனக்கவர்ச்சி (infatuation) தான் என்கிறார். அதனால் தான் அவளால் அதில் இருந்து வெளியேற முடிகிறது. கணவனும் அதைப் புரிந்துகொண்டதாலேயே, குழந்தையின் தவறென்று இலகுவாக எடுத்துக்கொள்கிறான் என்று புதிய விளக்கத்தையே இந்த வரிகளில் கொடுத்துவிடுகிறார். இதே கவிஞர் தான் வானம்பாடியில் இப்படி எழுதினார்:

ஒரு முறை தான் காதல் வரும் தமிழர் பண்பாடு.
அந்த ஒன்றை எது வெல்வது தான் கேள்வி இப்போது!

அதையே தான் இங்கும் சொல்கிறார், ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா? என்று.

கவிஞர் கண்ணதாசனிடம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், இப்படித் தான் பட்டையைக் கிளப்பிவிடுவார்.  சாந்தி படத்தில் வரும் ‘யார் இந்த நிலவு?’ பாடலைக் கேட்டதும் சிவாஜி மிரண்டு விட்டார். இதே விஸ்வநாதன் ராமமூர்த்தி-கண்ணதாசன் கூட்டணியுடன் டி.எம்.சௌந்தர ராஜனும் இணைந்து கலக்கிய பாடல் அது. 

‘இதற்கு எப்படி நடிக்க?’ என்று அவர் ஒரு வாரம் யோசித்து, அந்த சிகரெட் பிடித்தபடியே பாடும் டெக்னிக்கைக் கையாண்டார். முன்பு தமிழ் சினிமாவில் இத்தகைய ஆரோக்கியமான போட்டி இருந்தது. அது தான் நெஞ்சில் ஓர் ஆலயத்திலும் எதிரொலித்தது.

8 comments:

  1. கவிதையில் அசத்த அருமையான சிச்சுவேஷன் உள்ள படம்.. கண்ணதாசன் அசத்தியிருப்பார்.. இதற்கு மேல் பொருத்தமாக இங்கே எழுதிவிட முடியாது என்னும் நிலைக்கு நம்மை யோசிக்க வைத்து விடுவார்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஆவி..அவர் காலம், தமிழ் சினிமாவின் பொற்காலம்.

      Delete
  2. நல்ல வேளை கண்ணதாசன் காலத்தில் இணையம் இல்லை.
    இருந்தால் அவரையும் காப்பி...காப்பி என கழுவி ஊத்தி இருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ’உன் கண்ணில் நீர் வழிந்தால்’ என்று இப்போது அவர் எழுதி இருந்தால்...!!

      Delete
  3. கதைக்கு உயிரூட்டும் விதமாகப் பாடல்கள் புனைவதில்,கவியரசரை மிஞ்ச ஆள் இல்லை.

    ReplyDelete
  4. அருமையான எழுத்து செங்கோவி...
    ஒரு மனதில் ஒருமுறைதான் வளரும் உறவல்லவா '
    இந்த வரிக்கு கணவன் என்னும் உறவையே குறிப்பதாக நினைக்கிறேன் செங்கோவி... படத்தின் அடிநாதமே காதலாக இருப்பதால், அதை இனக்கவர்ச்சி என்று சாதாரணமாகக்கடந்து விட முடியவில்லை. அந்த வரியை அந்தப்பெண் பார்வையில் பார்க்கும்போது, அவள், இன்னொருவரை கணவராக தன் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வரித்துப்பாடிய வரிகளாகக்கொள்ளலாம்.

    ReplyDelete
  5. அருமையான எழுத்து செங்கோவி...
    ஒரு மனதில் ஒருமுறைதான் வளரும் உறவல்லவா '
    இந்த வரிக்கு கணவன் என்னும் உறவையே குறிப்பதாக நினைக்கிறேன் செங்கோவி... படத்தின் அடிநாதமே காதலாக இருப்பதால், அதை இனக்கவர்ச்சி என்று சாதாரணமாகக்கடந்து விட முடியவில்லை. அந்த வரியை அந்தப்பெண் பார்வையில் பார்க்கும்போது, அவள், இன்னொருவரை கணவராக தன் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வரித்துப்பாடிய வரிகளாகக்கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான கோணம். நன்றி.

      Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.