Sunday, July 6, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-13)


13.வில்லன் - ஹீரோவின் பிரதி பிம்பம்

மாநகரக் காவல் என்று ஒரு விஜயகாந்த் படம். முதல் காட்சியில் சிலர் வாக்கிங் போவார்கள். அப்போது எதிரே பைக்கில் வரும் ஆனந்தராஜ், ஒரு வாளை நீட்டியபடியே வந்து அவர்களை கிராஸ் செய்வார். அப்போது வாக்கிங் வந்த ஆளின் தலை வாளில் பட்டு, துண்டாகும்.

அந்த படத்தைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் அந்த முதல் காட்சியும், அந்த படம் முழுக்க ஆனந்தராஜூக்கு கொடுக்கப்பட்ட பிண்ணனி இசையும் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்த முதல் கொலைக்குப் பின் ஆனந்தராஜ் வரும்போதெல்லாம், நமக்கும் பதட்டம் வரும்.
பே கில்லராக வந்த பாத்திரங்களிலேயே டாப் என்று அந்த கேரக்டரைச் சொல்லலாம். அந்த மாதிரி வலுவான கேரக்டராக அல்லது விஷயமாக உங்கள் வில்லன் இருக்க வேண்டியது அவசியம். புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன் என அந்த நேரத்தில் வந்த விஜயகாந்த் படங்களில் வில்லன் கேரக்டர் கச்சிதமாக இருக்கும்.

அதன்பிறகு அப்படி அமைந்தது இயக்குநர் தரணியின் படங்களில் தான். தில் படத்தை எடுத்துக்கொண்டால், அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டர் கொடுத்த டெரர் எஃபக்ட் சாதாரணமானதல்ல. ஏற்கனவே பார்த்தபடி ஹீரோவின் லட்சியமே போலீஸ் ஆவதாக இருக்க, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருடன் மோதும் சூழல் அதிக பரபரப்பை படத்திற்குக் கொடுத்தது.

அதே போன்றே தூள் படத்தில் அதிகாரமிக்க மந்திரி போதாதென்று, சொர்ணாக்கா கேரக்டரையும் பசுபதி கேரக்டரையும் படைத்திருப்பார் தரணி. இன்றளவும் கொடூரமான பெண் என்று ஒரு ஆளை சுட்டிக்காட்ட, நாம் சொர்ணாக்கா பெயரைத்தான் சொல்கிறோம். அந்த மாதிரி வித்தியாசமான வில்லன் கேரக்டர்கள் என்றும் வாழும்.

தரணியின் அடுத்த படமான கில்லியில் ‘செல்லம்’ பிரகாஷ்ராஜ் கேரக்டர். ஒரு மந்திரியின் மகன். அந்த மந்திரியிடம் கைகட்டி நிற்கும் போலீஸ்காரரின் மகன் தான் ஹீரோ. ஒரு வலுவான முரண்பாடு அங்கே இயல்பிலேயே வந்துவிட்டது. அதன்பிறகு இருவரையும் மோத வைக்கும்போது, தீப்பொறி பறந்தது. இன்றளவும் விஜய்யின் டாப் #1 படமாக கில்லி நிற்கிறது.
வில்லனை ஒரு கேரக்டராக வடிவமைக்க முடியவில்லை என்றால், சூழ்நிலையையே வில்லனாக கொண்டுவர வேண்டும். பாக்கியராஜ் இதைச் செய்வதில் வல்லவர். முந்தானை முடிச்சு, அந்த ஏழுநாட்கள் போன்ற படங்களில் முக்கிய கேரக்டர்களில் சூழ்நிலை தான் வில்லனாக வரும். முந்தானை முடிச்சு படத்தைப் பொறுத்தவரை ‘இன்னொரு திருமணம் செய்ய மாட்டேன்’ என்று முதல் மனைவிக்கு வாக்கு கொடுத்துவிடுகிறார் பாக்கியராஜ். முதல்மனைவி இறந்தபின் ‘சித்தி கொடுமை’ பயமும் வில்லனாக சேர்ந்துகொள்கிறது. இரண்டுமே வலுவான வில்லன்கள். இந்த இரண்டையும் ஊர்வசி வெல்ல வேண்டும் என்று வரும்போது, சுவாரஸ்யமும் கூடவே வந்துவிடுகிறது.

வில்லன் ஒரு ஆள் என்றால் நல்ல ஆக்சன் படங்களை கவனித்துப் பாருங்கள். சூழ்நிலையே வில்லன் என்றால் பாக்கியராஜ், பாரதிராஜா, பாலச்சந்தர் போன்றோரின் படங்கள் உதவும்.

ஒரு சாதாரண வில்லன் கேரக்டர்கூட, ஒரு நல்ல வில்லன் நடிகரின் நடிப்பால் பவர்ஃபுல் கேரக்டராக ஆகிவிடும். சொதப்பலான ஆளிடம் மாட்டினால், நல்ல வில்லன் கேரக்டர்கூட சொதப்பிவிடும். ஆனால் அதெல்லாம் திரைக்கதை எழுதும் நம் கையில் இல்லை. எனவே ஹீரோ கேரக்டர் போன்றே வில்லன் கேரக்டரையும் குறிப்பிட்ட நடிகரை மனதில் வைத்து எழுதாமல் இருப்பது நல்லது.

இன்னொரு விஷயம், வில்லன் என்றால் பார்ப்பவர் பீதி அடையும்படி கொடூரமான ஆளாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஹிட்ச்காக் ‘வில்லன் என்பவன் படித்த, வசீகரமான ஆளாக இருப்பது முரண்பாட்டைக் கூட்டும்’ என்றே சொல்கிறார். அவர் படங்களின் வில்லன்கள் எல்லாருமே அமைதியான, வசீகரமான ஆட்கள் தான்.
தமிழில் வில்லனாகப் பிரபலம் அடைந்த நம்பியார், ரஜினிகாந்த், சத்தியராஜ், பிரகாஷ்ராஜ், ரகுவரன், ஆனந்தராஜ் ஆகியோரிடம் ஒரு ஒற்றுமை உண்டு. அது, வில்லனாக வரும்போதும் அவர்களால் மெல்லிய காமெடி செய்ய முடியும். வில்லத்தனத்தை இழக்காமலேயே, நம்மை சிரிக்க வைக்க அவர்களால் முடியும். அத்தகைய கேரக்டர்களை ஸ்டடி செய்யுங்கள். எப்படி வில்லனாக இருந்தும், மக்கள் மனதில் இடம்பிடித்தார்கள் என்று புரிந்துகொள்ள, அந்த கேரக்டர் ஸ்கெட்ச்சும் அவர்களின் மேனரிசமும் உதவும்.

உங்கள் கதையில் வில்லனுக்கு இடம் இல்லையே என்று குழம்பாதீர்கள். வில்லன் கண்டிப்பாக இருப்பான், வேறு வடிவில். வில்லன் இல்லையென்றால் முரண்பாடு இல்லை. முரண்பாடு இல்லையென்றால் கதையே இல்லை. உங்கள் வில்லனை எவ்வளவு வலுவானவனாக ஆக்குகிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது விஷயம்!

(தொடரும்)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

  1. ஒவ்வொரு பாகத்திலும் படம் சக்சஸ் பார்முலாக்களை தெளிவா சொல்லிட்டே போறீங்க

    ReplyDelete
  2. மாநகர காவல் படத்தில் ஆனந்தராஜ் "ஒரு நாட்டின் பிரதமரையே கொல்ற எனக்கு நீ சர்வ சாதாரணம்"என்று சொல்லும்போதே நமக்கு வயித்தில் புளிய கரைக்கும் !

    ReplyDelete
    Replies
    1. அண்ணே, வசனம் வரைக்கும் ஞாபகம் வச்சிருக்கீங்களே! எனக்கு ‘ஏத்தம் ஒன்னு போடுகிறபோது, ஏத்துக்காத நெல்லு வயல் ஏது’ தான் ஞாபகம் இருக்கு!

      Delete
  3. வழக்கம்போல சூப்பரா எழுதியிருக்கீங்க..

    இந்த மிகச்சிறந்த வில்லன்கள் வரிசைல, திரைக்கதையையே வில்லனாகவும் ஆடியன்சை அபலைக் கதாநாயகியாகவும் ஆக்கி கதறக் கதறக் கற்பழிக்க வைத்த சுறா உலக வரலாற்றிலேயே ஒரு திரைக்காவியம். இன்னிக்கு கூட நினைச்சாலே குலை நடுங்கற ஒரு அனுபவத்தை தந்த படம்னா டக்குன்னு நினைவுக்கு வர்றது சுறா தானே?

    ReplyDelete
    Replies
    1. //திரைக்கதையையே வில்லனாகவும் ஆடியன்சை அபலைக் கதாநாயகியாகவும் // ஹாஹா..நல்ல உவமை. ரசித்தேன். அது மாதிரி நிறையப் படங்கள் உண்டு.

      Delete
  4. மாநகரக்காவல் வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை பாடல் இன்னும் மறக்க முடியாது அது போல ஆனந்தராஜ் நடிப்பும் தனித்துவம்! அவரோடு ச்ம்கால்த்தில் வில்லனாக வந்த சரத்குமார் இன்று பிரபல்யம் என்றாலும் ஆன்ந்தராஜ் டாப் ! உண்மையில் விஜய்காந்த் திரையில் பல வில்லன் நடிகர்களை உச்சியில் ஏற்றிவிட்டார் என்றால் மிகையில்லை !ம்ம் அருமையான் விளக்கம் தொடருட்டும்!

    ReplyDelete
    Replies
    1. விஜயகாந்த் ஒரு ஆக்சன் ஹீரோ என்பதால், அவருக்கு வலுவான வில்லன் கேரக்டர்கள் அவசியம். அதனாலேயே அந்த வில்லன்கள் புகழ் அடைந்தார்கள்.

      Delete
  5. வில்லன்களின் ஆனந்தராஜ் சூப்பர்ஸ்டார் இருவரும் டாப்

    ReplyDelete
  6. எல்லோறுக்கும் புரியும் படி எழியதமிழில் தமிழ் படங்களை உதாரணப்படுத்தி எழுதுவது சிறப்பானது சிலர் எழுதுறாங்க வாயிலே வராத ஹாலிவூட் படங்களை உதாரணம் காட்டி அதைவிட இது மிக நல்லது வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  7. அருமையான பாடம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கு நன்றி சுரேஷ்.

      Delete
  8. சக்ஸஸ் பார்முலாவை அருமையா சொல்லிக்கிட்டு வாறீங்க...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வேலையில்லா பட்டதாரி படத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? அதில் வரும் வில்லன் கதாப்பாத்திரம் அந்த அளவிற்கு பலமானதாக இல்லயே………………இருப்பினும் படம் வெற்றி பெற்றுவிட்டதே !

    ReplyDelete
  10. தனுஷ்+அனிருத்+காமெடி தான் படத்தைக் காப்பாற்றியது. அந்தப் படம், எந்த திரைக்கதை விதிக்குள்ளேயும் அடங்காத காவியம். அப்போ அது மாதிரியே நாமும் எழுதலாமே என்று கேட்பீர்கள். அப்படி எழுதப்படட்ட பல படங்கள் ரிலீஸே ஆகாமல் கிடக்கின்றன. இந்த படத்தைப் பார்த்த யாருமே வாங்க முன்வரவில்லை என்பதையும் நினைவில் வையுங்கள். இப்படிப் படம் எடுப்பது மிகவும் ரிஸ்க்கான வேலை. நமக்கு அது வேண்டாம்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.