Showing posts with label மற்றவை. Show all posts
Showing posts with label மற்றவை. Show all posts

Sunday, April 6, 2014

ஒரு பிள்ளை பெற்றால் போதுமா?

தாத்தா பாட்டி காலத்தில் வீட்டுக்கு 12 பிள்ளைகள் என்பதுகூட சகஜமான விஷயமாக இருந்தது. சென்ற தலைமுறையில் நான்கு முதல் இரண்டு குழந்தைகளாக குறைந்துவிட்டது. இப்போது இரண்டு என்பதே அதிகம் எனும் எண்ணம் பலருக்கும் வந்துவிட்டது. ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். இன்றைய பொருளாதாரச் சூழலில் ஒன்றை வளர்ப்பதே பெரிய விஷயம் என்று பலரும் நினைக்கிறார்கள். எனது நண்பர்களிடம் நான் எப்போதும் ஒற்றைப் பிள்ளையுடன் நிறுத்தாதீர்கள் என்றே சொல்லி வந்திருக்கிறேன். 

நான் ஒற்றைப்பிள்ளையாக, தனியாக வளர்ந்ததை நண்பர்கள் அறிவீர்கள். அதனால் இண்ட்ரோவெர்ட்டாக ஆனதும், புதுநபர்களுடன் பேசவேண்டும் என்றால் கூச்சத்தால் திருவுதிருவென விழிப்பதையும் நெருங்கிய நண்பர்கள் நன்றாகவே அறிவார்கள். அந்த ஸ்டார்ட்டிங் ட்ரபுளை என்ன செய்தும், இன்னும் மாற்ற முடியவில்லை. ஆனால் அதையும் தாண்டி, வேறு சில அனுபவங்களே ஒரு பிள்ளை போதாது எனும் முடிவுக்கு என்னைக் கொண்டு சென்றன.
நான் ஸ்கூலில் படிக்கும்போதே எனது (வளர்ப்பு)அப்பாவிற்கு 60 வயது தாண்டிவிட்டது. பொதுவாகவே எப்போதெல்லாம் எனக்கு காலாண்டு,அரையாண்டு, முழுப்பரிட்சை நடக்கிறதோ, அப்போதெல்லாம் அவருக்கு உடம்புக்கு முடியாமல் போய்விடும். அது எதனால் என்று எங்களுக்குப் புரிவதே இல்லை. ‘பிள்ளையை படிக்க விடுதாரா இந்த மனுசன்?’என்ற அம்மாவின் புலம்பலுடனே ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவார். கிராமத்தில் கடை வைத்திருந்தோம். அதை நாலைந்து நாள் பூட்டினால் சோத்துக்கு சிங்கி அடிப்பதோடு, கஸ்டமர்களையும் இழக்க வேண்டிவரும்.

எனவே அம்மா கடையில் தான் இருக்க வேண்டி வரும். நான் பரிட்சைக்குப் போயே ஆக வேண்டும். கடைக்கு டவுனில் இருந்து சரக்கும் வாங்கி வரவேண்டும். அப்போது கிராமத்துக்கு பஸ் வசதியும் கிடையாது. எனவே காலையில் கிளம்பி, பலசரக்கு-மிட்டாய்-காய்கறிக் கடைகளில் சரக்கு லிஸ்ட்டையும் காசையும் கொடுத்துவிட்டு, ஆஸ்பத்திரி போய் அப்பாவைப் பார்த்து சாப்பாடு கொடுத்துவிட்டு, பள்ளிக்குப் போய் பரிட்சை எழுதுவேன். அப்பாவும் வேறு வழியின்றி தனியே மேனேஜ் பண்ணுவார். தெரிந்த டாக்டர் என்பதால், நர்ஸ்களும் பார்த்துக்கொள்வார்கள். கணக்குப் பரிட்சை எழுதும்போதே கறிவேப்பிலைக்கு காசு கொடுத்தோமா, அப்பாவுக்கு பக்கத்து ரூம் ஆட்கள் டீ வாங்கிக் கொடுத்திருப்பார்களா என்ற சிந்தனை ஓடும். 

இதில் கொடுமை என்னவென்றால், அந்த ஆஸ்பத்திரி தெருவிற்கு அடுத்த தெருவில் தான் நான் பிறந்த வீட்டார் இருந்தார்கள். பெற்றவரோ, அண்ணனோ, அக்காக்களோ எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள். (என் அப்பா, என்னைப் பெற்றவருக்கு சித்தப்பா தான்!) பரிட்சை முடிந்ததும், மார்க்கெட்டுக்குப் போய் சரக்கு வாங்கி, சைக்கிளில் வைத்துக்கொண்டு கிராமத்துக்குப் போவேன். வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு, அப்பாவுக்கு சாப்பாடும் அடுத்த பரிட்சைக்கான புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டும். மாலை வரை இருந்துவிட்டு, இரவு வீடு வருவேன். முன்பின் அறியாத பக்கத்து ரூம் ஆட்களிடமும் இரவில் அப்பாவையும் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு வருவேன்.
அந்த நேரங்களில் தனியே ஓடுவது மிகவும் கஷ்டமாக இருக்கும். இன்னொரு பிள்ளையையும் தத்தெடுத்திருக்கலாமே என்று நினைத்துக்கொள்வேன். சுமையை கொஞ்ச நேரம் கைமாற்றக்கூட ஆள் இருக்காது. நான் காலேஜ் படிக்க மதுரை ஹாஸ்டலில் தங்க வேண்டி வந்தபோது தான், ரொம்பக் கவலையாக இருந்தது. இனியும் தொந்தரவு தர வேண்டாம் என்பதாலோ என்னவோ, அப்பா நான் மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே காலமானார். ஒருவேளை இன்னொரு தம்பி இருந்திருந்தால், இன்னும் கொஞ்சகாலம் ஆஸ்பத்திரிக்கும் வீட்டிற்கும் அவர் அலைந்தே வாழ்ந்திருக்கலாம். 

கெட்டதற்கு மட்டுமல்ல, நல்லதற்கும் இன்னொரு ஆள் தேவை என்று பின்னாளில் காலம் புரிய வைத்தது. கல்யாணம் என்றால் ஆயிரத்தெட்டு சடங்கு, சாத்திரங்களை வைத்திருக்கிறார்கள், நம் மக்கள். பத்திரிக்கை கொடுப்பதில் ஆரம்பித்து திருமணத்திற்கு முந்தைய நாள் ஊர் அழைப்பு, மூன்றாவது முடிச்சை சகோதரி போடுவது, தாய் மாமன் முக்கியத்துவம் என்று பல சாத்திரங்கள். ‘கல்யாணம் கட்டிப்பார்’ என்ற பழமொழிக்கு என்ன அர்த்தம் என்பதை சொந்த, பந்தங்கள் தங்களது வீம்பு, வெட்டி பந்தா மூலம் நன்றாகவே புரிய வைப்பார்கள். தூரத்து சொந்தமாக இருந்தாலும் மாப்பிள்ளையோ, மாப்பிள்ளையின் உடன்பிறப்போ அல்லது அப்பாவொ தான் நேரில் வந்து அழைக்க வேண்டும். இல்லையென்றால் ‘என்னை மதிக்கலை’ என்று பெரிய ரகளை நடக்கும். எனவே ஒவ்வொரு வீட்டிற்கும் நானே போக வேண்டிய நிலை.

மண்டபம் புக் பண்ணுவதில் ஆரம்பித்து சமையலுக்கு சாமான் வாங்குவதுவரை வேலைகள் இன்னொரு பக்கம் குவிந்து கிடக்கும். இதற்கெல்லாம் பங்காளிகளைத் தான் நாட வேண்டும். எனக்கு நான்கு பங்காளிகள் குடும்பம் உண்டு. மூத்தவருக்கு மட்டும் மூன்று ஆண்பிள்ளைகள். மற்றவர்களுக்கு ஒரு பிள்ளை தான். அதனால் மூத்தவர் காட்டும் பந்தா இருக்கிறதே..அப்பப்பா. 

மீதி மூன்று குடும்பங்களும் அருகில் இருக்கும் டவுனுக்குப் போவதென்றால்கூட மூத்தாரிடம் சொல்லிவிட்டுத் தான் செல்ல வேண்டும். இல்லையென்றால், பேச்சு வார்த்தையே நின்றுவிடும். பிறகு கெஞ்சி கூத்தாடி சமாதானப்படுத்துவார்கள். அதே சமயத்தில் திடீரென மூத்தார் குடும்பம் எங்கேயோ கிளம்பிப் போய்விடும். மறுநாள் வந்தவுடன் கேட்டால், ‘அதுவா..திருச்செந்தூர் போய்ட்டு வந்தோம்’ என்பார்கள் கேஷுவலாக. நீ சொல்லாமப் போறியேன்னு கேட்க முடியாது. ஏனென்றால் நல்லது, பொல்லதுக்கு அலைய மூன்று ஆண்பிள்ளைகள் அங்கே உண்டு! கூடப்பிறந்த அவர்களுக்கே அப்படி என்றால், பங்காளியான, ஒற்றை ஆளாக நிற்கும் என் நிலைமையை நீங்களே யோசித்துக்கொள்ளலாம்.

கல்யாணம் முடியும் முன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பட்டேன். கல்யாணத்துக்கு முதல்நாள், தங்கமணி ஊரில் ரிசப்சன் வைத்திருந்தார்கள். அதற்குக்கூட நான் போகவில்லை. நான் இல்லையென்றால், ஒருவேலையும் நடக்காது என்று தெரியும். ரிசப்சனுக்கு வரவில்லையே என தங்கமணிக்கு சென்ற வருடம்வரை என்மேல் கோபம் உண்டு. சென்ற வருடம், பையனுக்கு மொட்டை போட்டு, காது குத்தும் பங்சனில் தான் அவர் பங்காளிகளின் அருமை, பெருமையை நன்றாக உணர்ந்தார். 

அப்போது என் குடும்பம் மூன்று பேராக ஆகியிருந்ததால், நானே பஸ் புக் செய்து, சமையலுக்கு ஆள் பிடித்து, திருச்செந்தூரில் மண்டபமும் புக் செய்தேன். பங்காளிகளை சும்மா வந்தால் போதும் என்று அழைப்பு மட்டுமே கொடுத்தேன். என்ன செய்தார்கள் தெரியுமா? ‘அதெப்படி எங்களைக் கேட்காம எல்லா வேலையையும் அவனே செய்யலாம்?’ என சண்டை போட்டுவிட்டு ஒருத்தரும் வரவில்லை. பையன் வந்த தைரியத்தில் நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவும் இல்லை.

இப்படி எல்லா வகையிலும் தனியே அவஸ்தைப் பட்டுவிட்டதால், இன்னொரு குழந்தையும் அவசியம் தேவை என்றே முடிவு செய்திருந்தேன். அது ஆணோ, பெண்ணோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. மூத்தவனை தனியே விட்டுவிடக்கூடாது..நாம் பட்ட கஷ்டத்தை அவன் பட்டுவிடக்கூடாது. குறைந்த பட்சம் அவர்களுக்கு திருமணம் ஆகும்வரையாவது ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள் என்று நினைத்தோம். ஆண்டவன் அருளால் சென்ற வாரம் இரண்டாவதும் ஆண் குழந்தையாக பிறந்தது. இனிமே நானோ, மூத்தவன் பாலாவோ தனி ஆள் இல்லை என்பதே சந்தோசமாக இருக்கிறது. 
இன்னும்கூட இரண்டு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாகவே இருக்கிறது. ஆனால் பிரசவத்தின் மீது எனக்கு இருக்கும் பயத்தினாலும், ஒரு வருடத்திற்கு தங்கமணி படும் அவஸ்தையாலும் போதும் என்று முடிவு செய்துவிட்டேன். இரண்டாவது குழந்தை பிறந்த செய்தியறிந்து ஃபேஸ்புக்கிலும், மெயிலிலும், போனிலும் வாழ்த்துச் சொன்ன நண்பர்களுக்கு நன்றி. 

முந்தைய டெலிவரிப் பதிவு(!) : பிரசவ நேரத்தில் கணவன் தேவையா? 

மேலும் வாசிக்க... "ஒரு பிள்ளை பெற்றால் போதுமா?"

Wednesday, October 30, 2013

தீபாவளியைக் கொண்டாடலாமா?

இந்த சுதந்திர நாட்டுல நிம்மதியா ஒரு பண்டிகை கொண்டாட முடியலை.அந்நிய எலும்புத்துண்டுக்கு குரைக்கிற நாய்கள், இந்த வருடமும் ஆரம்பித்துவிட்டது. நரகாசுரன் தமிழனாம்..அவனை ஆரிய(!) சக்திகள் கொன்னதைப் போய்க் கொண்டாடுறீங்களே பதர்களா என்று வழக்கம்போல் வாங்கியகாசுக்கு கூவ ஆரம்பித்துவிட்டார்கள்.
 
நம்ம மரமண்டைக்கும் பகுத்தறிவுக்கும் ரொம்ப தூரம் தான்..ஆனாலும் புராணத்துல சொல்லியிருக்கிற மேட்டரைப் புரிஞ்சிக்கிட்டுத்தான் இந்த பகுத்தறிவுவியாதிகள் பேசுதான்னு குழப்பமா இருக்கு.
 
விஷ்ணு தன்னோட வராக அவதாரத்துல பூமாதேவிகூட லவ்ஸ் ஆகுறாரு..அதுக்கு கைமேல பலனா நரகாசுரன் பிறக்கிறாரு..அப்பாலிக்கா இப்போதைய அஸ்ஸாம் ஏரியாவுல, அப்போதைய தமிழன் ஒரு ராஜ்ஜியத்தையே அமைக்குறாரு..பவர் கைக்கு வந்தா, நம்மாளுக பவர் ஸ்டாரைவிட ஓவரா ஆடுவாங்களே..அதனாலாவரு ஆட்டம் ஓவராப் போகுது.
 
ஆனாலும் தமிழன் நரகாசு புத்திசாலி. அதனால பிரம்மாவை குடையாக்குடைஞ்சு ஒரு வரம் வாங்கிடுதாரு, என்னன்னா மம்மியைத் தவிர வேற யாரலயும் தனக்கு சாவு வரக்கூடாதுன்னு! மம்மின்னா பூமாதேவி, 'அய்யய்யோ..கொல்றாங்களே' புகழ் மம்மி இல்லை.
 
புராணத்தோட இன்னொரு வெர்சன் என்ன சொல்லுதுன்னா, விஷ்ணுவோட இன்னொரு அவதாரத்தால தான் 'சன்'ன்னுக்குச் சாவுன்னு தெரிஞ்ச மம்மி, 'நோ..நோ..சன்னை என்னைத் தவிர எவனும் காலி பண்ணக்கூடாது'ன்னு வரம் வாங்கிக்குது. எப்படியோ, மம்மியால தான் சாவுன்னு மட்டும் கன்ஃபார்ம் ஆகுது. பூமாதேவி வேற, சோ கள்ளக்காதலால் மகனின் தலையில் கல்லைப் போட்ட தாய்-ன்னு நியூஸ் வர சான்ஸே இல்லைன்னு நம்ம நரகாசுக்கும் நிம்மதி!
 
புராணத்துல ஒரு ட்ராபிக் ராமசாமி உண்டு..யாராவது ஓவரா ஆடுனா, விஷ்ணு/சிவன்கிட்ட மனு கொடுக்கிறது அவர் வழக்கம். அவரு பேரு இந்திரன். அவரே ஒரு குஜால் பேர்வழிதான்னாலும், நரகாசு ஆட்டம் தாங்காம, விஷ்ணுகிட்டப் போய் கம்ளைண்ட் பண்ணுதாரு. 'டி.எஸ்.பியா புரமோசன் வரட்டும், பார்த்துக்கிறேங்கிறேங்கிற மாதிரி அவரும் 'கிருஷ்ண அவதாரம் எடுக்கும்போது கவனிச்சுக்கிறேன், அந்தப்பயல'ன்னு சொல்லி அனுப்புதாரு.
 
 
வின்டோஸ் புது வெர்சன் இறங்குற மாதிரி, விஷ்ணு-பூமாதேவி கப்புள்ஸ், கிருஷ்ணா-சத்யபாமாவா 'யாதவ' ஜாதில அவதரிக்கிறாங்க. இப்போ இந்திரலோக லேடீஸ்லாம் புது மம்மிகிட்ட  வந்து நரகாசு ஆட்டத்தைச் சொல்ல, மம்மி காண்டாகிடுது. வீட்டுக்காரரைக் கூப்பிட்டு, அவனைத் தூக்குய்யான்னு சொல்லிடுது. கடவுளே ஆனாலும் கணவன்னு ஆனப்புறம் எதிர்த்துப் பேச முடியுமா?
 
கிருஷ்ணர் பீகார்ல இருந்து படையெடுத்து அஸ்ஸாம் போயி, ஃபைட் பண்றாரு. விதின்னு ஒன்னு இருக்கும்போது நைனாவால என்ன செய்ய முடியும்? சோ, கிருஷ்ணரையே சாச்சுப்புடுதான் நரகாசு. அவ்வளவு தான், மம்மிக்கு வந்துச்சே கோவம்..'என் புருசனை அடிக்கிற ரைட்ஸு என்னைத் தவிர எவனுக்கும் இல்லைடா ங்கொய்யால'ன்னு ஒரே போடு, நரகாசு காலி!
 
அப்படி மண்டையைப் போடும்போது தான் நரகாசுக்கே மேட்டர் எல்லாம் புரியுது.அதனால எல்லாரும் என் ஆட்டத்தை படிப்பினையா வச்சு, இதை மறந்திடாம இருக்கும்படியா வருசாவருசம் கொண்டாடுடுங்கன்னு கேட்டுக்கிடுதாரு. ஆக்சுவலா தீபாவளிங்கிறது அஞ்சுநாள் பண்டிகைய இருந்து, மூணுநாளா ஆகி, இப்போ ஒருநாளா நிக்குது. அதுல முதநாள் மட்டும்தான் நரகாசுக்கு!
 
ஒகே..இப்போ இந்த பகுத்தறிவுக் கும்பலுக்கு ஏன் ***ல எரியுதுன்னு பார்ப்போம். அவங்க என்ன சொல்றாங்கன்னா, 'நரகாசு ஒரு தமிழ்மன்னன்..ஒரு தமிழனோட ராஜ்ஜியத்தை அழிச்சதைப் போய்க் கொண்டாடுறீங்களே, இது நியாயமா?' ன்னு.
 
முதல்லயே சொன்ன மாதிரி நமக்குப் பகுத்தறிவெல்லாம் கிடையாது. 'படிச்சிருக்கோம், உழைக்கத்தெம்பிருக்கு..நமக்கு எதுக்கு நக்கிப் பொழைக்கிற பொழப்பு'ன்னு பகுத்தறிவுப்பக்கம் நான் போறதே இல்லை. பகுத்தறிவில்லாத கூமுட்டையான நமக்குத் தோணுறது இது தான்..

1. அஸ்ஸாம் அப்போ தமிழ்நாடாத்தான் இருந்துச்சு...நரகாசுரன் தமிழந்தான்னே வச்சிக்குவோம். அப்போ அந்த தமிழனோட அப்பா-அம்மா யாரு? அவங்களும் தமிழங்க தானே? அட்லீஸ்ட் விஷ்ணுவோ அல்லது பூமாதேவியோ தமிழாத்தானே இருக்கணும்? இப்படி விஷ்ணுவைஅல்லது பூமாதேவியை தமிழராக் காட்டுன புராணத்தை, ஆக்சுவலி நாம பாரட்டத்தானே செய்யணும்? நியாயத்துக்கு தமிழனுக்காக பொங்குறவங்க, அந்த தமிழனைப் பெத்த தமிழர்களை வணங்கலாமே!
 
2. மூதாதையர் வழிபாடுங்கிறது நம்ம கலாச்சாரத்துலயே இருக்கிற விஷயம். நம்ம தாத்தா நரகாசுரர்(!), நம்மகிட்ட வேண்டி இதை ஒரு விழாவாக் கொண்டாடுங்கன்னு சொன்னப்புறம், உங்களை மாதிரி மூஞ்சைத் தொங்கப்போட்டுக்கிட்டிருந்தா, அவர் ஆவி ஃபீல் பண்ணாது? தாத்தா செத்தன்னிக்கே குத்தாட்டம் போடற இனம்யா நாங்க.

3. திராவிடம்-ஆரியம் பேசுற/ஆராய்கிற பலரும் ஒத்துக்கிட்டவிஷயம், யாதவ ஜாதிங்கிறது திராவிடத்தைச் சேர்ந்தது! அப்போ ஒரு திராவிட மன்னன் கிருஷ்ணனால, தமிழன் நரகாசுரன் கொல்லப்பட்டானா? நாம் தமிழர் இயக்கம் மாதிரி சில ப்யூர் தமிழ்வாதிங்க, பகுத்தறிவுவாதிகளின் திராவிடக்கொள்கையால தான் தமிழன் வீழ்ந்தான்னு சொல்றாங்களே..அது அப்போ நரகாசுரன் பீரியடுலேயே ஸ்டார்ட் ஆகிடுச்சா?..ஓ, அதனால தான் இந்தப் பண்டிகை பேரைக் கேட்டாலே எரியுதா பிரதர்ஸ்!

4. கிராமத்துல சில கிழவிங்க இருக்கும். பிடிக்காத பக்கத்து வீட்டுக்காரன் வீட்ல விஷேசம்னா என்னத்தையாவது புலம்பித் திட்டிக்கிட்டே திரியும்ங்க..முடிஞ்சா சண்டையும் இழுப்பாங்க..அதுகளுக்கு விவரம் அவ்வளவு தான்...பகுத்தறிவுக்குமா? பிடிக்கலைன்னா மூடிக்கிட்டு இருக்கலாமேய்யா!
 
5. எந்த ஒரு விஷயமானாலும் நாங்க நல்லதையே பார்க்கும்போது, அது எப்படிய்யா அதுல இருக்கிற/இல்லாத குறைகள் மட்டும் அவங்களுக்குத் தெரியுது..இந்த மனநோய்க்குப் பேரு என்ன?

எது எப்படியோ, நம்ம தாத்தா திவசத்தை விஷேசமாக் கொண்டாட வேண்டியது நம்ம கடமை..வெடிங்கய்யா பட்டாசை!
 

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...பரவும் தீபஒளி, எல்லார் வாழ்விலும் இருளை அகற்றட்டும்!
 
மேலும் வாசிக்க... "தீபாவளியைக் கொண்டாடலாமா?"

Monday, October 7, 2013

தம்பதிகள், குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடலாமா?

குழந்தையின்மை என்பது 
நவீன சமுதாயத்தைப் 
பீடித்திருக்கும் புற்றுநோய்! - Vicki Donor படத்திலிருந்து.

மீப காலமாகவே புதுமணத் தம்பதிகளிடம் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறைந்த பட்சம் இரண்டு வருடங்களுக்காவது வாழ்க்கையை எஞ்சாய் பண்ண வேண்டும், இருவரும் வேலை பார்த்து பணம் சேமித்துக்கொள்ள வேண்டும என பல நியாயமான காரணங்களின் அடிப்படையில் இந்த முடிவானது தம்பதிகளால் எடுக்கப்படுகிறது. ஆனால் இத்தகைய முடிவை எடுக்கும் முன், நாம் சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.

சொல்லு..கேட்போம்!
 குழந்தையற்ற ஒரு தம்பதியால் தத்தெடுத்து வளர்க்கஏப்பட்டவன் என்ற முறையில், ஒரு பெண் மலடிப்பட்டத்துடன் வாழ்வதன் கொடுமையை நான் மற்றவரை விட நன்கறிவேன். என்ன தான் சமூகம் நாகரீகம் அடைந்துவிட்டதாகக் கூறினாலும், சொந்தக்காரர்கள் மத்தியில், விஷேச தினங்களில் சமூகத்தின் உண்மைக் குணம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். யாராவது தற்செயலாக ஏதாவது கூறினால்கூட, அதுவும் சமூகத்தின் கேலியாகவே தாய்மையடையாத பெண்ணால் உணரப்படும். தவிர்க்கப்பட வேண்டிய, ஆனால் தவிர்க்க முடியாத உளச்சிக்கல் அது.

இரண்டு ஆண்டுகள் சந்தோசமாக புதுமண வாழ்வை அனுபவிப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதற்காக குழந்தைப் பிறப்பைத் தவிர்ப்பது, பின்னாளில் உங்களுக்கு வேதனையான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதே உண்மை. ரெண்டு வருசம் தள்ளிப்போட்டால் குழந்தை பிறக்காதென்று மருத்துவம் சொல்கிறதா? என்று நீங்கள் என்மீது பாயலாம். நான் மருத்துவன் அல்ல, நான் கண்ட பலரின் அனுபவங்களின் அடிப்படையிலேயே இதைப் பேச விழைகின்றேன்.

முதலாவதாக, புதுமணத் தம்பதிகள் குறிப்பாக பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. ஆண்களைப் பொறுத்தவரை, திருமணம் ஆகும்வரை பெண் என்பவள் வெறும் சதைப்பிண்டம் தான். அவளுக்குள்ளும் ஒரு மனது உண்டு என்பதோ. அவளும் வலியும், வேதனையும், வருத்தமும், அவமானமும் அடையக்கூடிய ஒரு உயிர் என்றோ ஆண்களுக்கு உறைப்பதில்லை. ஆணைப் பொறுத்தவரை, பெண் என்பவள் செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டும் ஒரு டாய், அவ்வளவே!
அடப்பாவி!
ஆனால் திருமணத்திற்குப் பின், 24 மணி நேரமும் ஒரு பெண்ணுடன் வாழும்போதே, ஆண் அவளை செக்ஸைத் தாண்டி பார்க்கத் துவங்குகிறான். இன்னொருவகையில் சொல்வதென்றால், பார்க்க வைக்கப்படுகின்றான். அவளும் தன்னைப் போலவே கோபப்படுவாள்/வருத்தப்படுவாள், தனக்கு தன் வீட்டார் போலவே அவளுக்கும் ஒரு பின்புலமும், பாசம் காட்டும் ஜீவன்களும் உண்டு, அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் உண்டு என்று ஆண் கல்யாணத்திற்குப் பிறகே புரிந்து கொள்கிறான்.

பெரும்பாலும், ஒரு வருட காலமாவது ஆகிறது அவனுக்கு உறைக்க! இது நல்ல விஷயம் தான். அதே நேரத்தில் இது பெண்ணின் மீதான ஈர்ப்பைக் குறைத்துவிடுகிறது. இதையே பெரியவர்கள் நாகரீகமாக ‘ஆசை அறுபது நாள்..மோகம் முப்பது நாள்’ என்று சொல்லி வைத்தார்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து, அந்தப் பெண் (இப்போது பெண்மணி) மீதான ஈர்ப்பு என்பது, அவர்களுக்கிடையிலான உறவின் தன்மையைப் பொறுத்ததாக ஆகிவிடுகிறது. அன்பான உறவு நீடித்தால் ஓகே. இல்லையென்றால்.........!

அடுத்ததாக, பொருளாதாரப் பிரச்சினைகள். பணத்தேவை என்பது  இரண்டாயிரம் சம்பளத்தில் ஆரம்பித்து இரண்டு லட்சத்தைத் தாண்டினாலும் தீருவதில்லை. நாம் இது தான் இலக்கு என்று ஒரு ஸ்டேட்டஸுக்கு உயரும்போது, மற்றொரு இலக்கு வந்து நிற்கிறது. இன்று பெரும்பாலும் ஆண்-பெண் இருவரும் சம்பாதிக்கும் நிலையில், அது உண்டாக்கும் ஈகோ சார்ந்த பிரச்சினைகள் வேறு. இவை உண்டாக்கும் மன அழுத்தங்கள், பாலியல் ஈர்ப்பைக் குறைப்பது மட்டுமல்லாது விந்தணு எண்ணிக்கையையும் குறைப்பதை இன்றைய மருத்துவம் கண்டுகொண்டுள்ளது.

அடுத்ததாக, சம்பந்தி வீட்டார் தொல்லை. நமது சமூகத்தைப் பொறுத்தவரை திருமண வாழ்வு என்பது இரு மனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமல்ல. அது இரு குடும்பங்களின் உறவு மட்டுமல்ல. அது இருவேறு வம்சங்களின் உறவு. ‘எங்க செய்முறை வேற..இப்படிச் செய்யலியா? நாங்க என்ன குறைஞ்சவங்களா?’ என்று சொந்தபந்தங்கள் கிளப்பும் பஞ்சாயத்துகளிலேயே, பாதி மனநோயாளியாக ஆக வேண்டியிருக்கும். மாமியார் பிரச்சினை போனஸ். கூடவே நாத்தனாரும் இருந்துவிட்டால், அமோகம் தான்.

குறித்துக்கொள்ளுங்கள் புதுமணத் தம்பதிகளே...ஒரு குழந்தையைப் பெற்றெடுக்காதவரை மாமியாரும் நாத்தனாரும், அந்தப் பெண்ணை இந்தக் குடும்பத்தின் அங்கத்தினராக, பையனின் மேல் உரிமையுள்ளவளாக மனதளவில் ஏற்றுக்கொள்வதே இல்லை. என்னுடைய பல நண்பர்களும், குழந்தையைப் பெற்றபிறகே தங்கள் சகோதரி(நாத்தனார்)களிடம் இருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள். (‘இவங்களுக்கு குழந்தை இல்லாட்டியும் நல்லதே’ என்று எண்ணும் நல்ல உள்ளங்களையும் நான் கண்டிருக்கிறேன்!)

இன்றைய வாழ்க்கை முறை, நம் உடலில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விளைவுகள் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். சீக்கிரமே வயதிற்கு வருவது, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, கருவுறாமை, கருச்சிதைவு என்று முந்தைய தலைமுறை கண்டிராத பல விஷயங்களையும், பெரும்பாலான இன்றைய தலைமுறை கண்டுகொண்டிருக்கிறது. குறிப்பாக அதிக உடல் உழைப்பற்ற, ஏ.சி.வாழ்க்கை முறையின் விளைவுகளோ இவை என்று நான் ஐயுறுகிறேன்.
ஓகே..யோசிக்கிறேன்!
எனவே தான் நவீன வாழ்க்கைமுறை உங்கள் உடலை சிதைக்கும் முன், ஆண்-பெண் ஈர்ப்பு குறையும் முன், சமூக-பொருளாதார சிந்தனைகள் உங்களை முடக்கும் முன் குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுங்கள். இந்த விஷயத்தில் எந்தவொரு தாமதத்தையும் அனுமதிக்காதீர். ‘இன்னும் விஷேசமில்லையா?’ எனும் பெரியோரின் கேள்வியை தொல்லையாக எடுத்துக்கொள்ளாதீர். அது தொல்லை அல்ல, அனுபவத்தால் விளைந்த எச்சரிக்கை.

‘ஆண்டவன் நமக்கு கொடுப்பது என்று முடிவு செய்திருந்தால், இரண்டு வருடம் கடந்தாலும் கொடுக்கத்தானே செய்வான்?’ என்று தத்துவரீதியாக நீங்கள் யோசிக்கலாம். இருந்தாலும், எளிதாக உங்களுக்குள் முடிய வேண்டிய விஷயத்தை சிக்கலாக்கி, ஆண்டவனை வேறு தொந்தரவு செய்ய வேண்டுமா என்று யோசியுங்கள்.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற.


மேலும் வாசிக்க... "தம்பதிகள், குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடலாமா?"

Sunday, August 25, 2013

மன்மோகன் சிங்கை குறை சொல்லும் அப்பாடக்கர்களே..

ஏதோ கொஞ்சம் ரூபா மதிப்பு குறைந்துவிட்டது. உடனே 2 X 2 என்றால் என்னவென்று கால்குலேட்டர் இல்லாமல் கணக்கப்போடத் தெரியாத சவலைகள், பொருளாதார மேதை திரு.மன்மோகன் சிங் அவர்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அவ்வளவு கேவலப்படுத்துகிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக திரு.மன்மோகன் சிங் அவர்கள் செய்த சாதனைகளையும், ஒரு இந்தியனாக அவர் பிறந்ததற்காக, நாம் பெருமைப்படுவதன் அவசியத்தையும் விளக்குவதே இந்தப் பதிவு.
 பத்தாண்டுகளுக்கு முன்பு உலகைப் பிடிக்க ஆரம்பித்த பொருளாதாரத் தேக்க பூதம், 2007ல் முழுவீச்சில் எல்லா நாடுகளையும் சிக்கலில் தள்ளியது. பெரியண்ணன் அமெரிக்காவே ஆடிப்போய் விட்டது. அங்கேயே வேலையில்லாத் திண்டாட்டம், புதிய தொழில்கள் தொடங்கமுடியா நிலை, நிறுவனங்கள் கையில் போதிய நிதி/ஆர்டர் இல்லாமை என அமெரிக்கா டவுசர் கழண்ட காலம் அது. அப்போது டாலரின் மதிப்பு 40 ரூபாய்களில் இருந்தது.

அமெரிக்காவை அமெரிக்கர்களே காப்பாற்ற முடியாத நேரத்தில், மன்மோகன் அவர்கள் அவதார்-ஆக உருவெடுத்தார்,

அப்போது அமெரிக்காவிடம் ஒரு போர்க்கப்பல் இருந்தது. அந்த கப்பல், 30 வருடங்கள் முழுமையாக உபயோகப்படுத்தப்பட்ட, அடுத்து உடைத்து வீசப்படவேண்டிய கப்பல். அப்போது நம் அவதார் கண் திறந்தார். அந்தக் கப்பலை இந்தியக் கப்பல்படைக்காக 400 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்வதாக அறிவித்தார். அதே 400 கோடி ரூபாய் நிதி திரட்டவே நெய்வேலி என்.எல்.சி.-யை தனியார் மயமாக்குவதாக, தற்போது அவதார் சொல்வதில் இருந்து, 400 கோடி என்பது லேசுப்பட்ட சமாச்சாரம் அல்ல என்று நாம் அறிந்து கொள்ளலாம்!

அமெரிக்கா என்பது மக்கள் அல்ல. அங்குள்ள நிறுவனங்கள் தான். அது ஒரு முழு முதலாளித்துவ தேசம். ஆனாலும் அதிசயமாக மக்கள் ஒரு விஷயத்திற்காக ஒன்றுகூடிப் போராடி, வெற்றிகண்டர்கள். அது, அங்கே இனிமேல் அணு உலை கட்டக்கூடாது என்பது தான். அணு உலை அமைக்கும் நிறுவனங்கள் எல்லாம் நொடித்துப்போயின.

நிறுவனங்கள் நொடித்தால், வேலை இழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம். என்ன செய்வது என்று அவர்கள் திகைத்தபோது, அவதார் மீண்டும் கருணை காட்டினார். இந்தியாவில் பலத்த எதிர்ப்பையும் மீறி அணுசக்தி ஒப்பந்தம் மூலம் 20 உலைகளுக்கு மேல் அமைக்கப் போவதாக அறிவித்தார். 'ஆஹா..ஆஹா..2000 வருடங்கள் கழித்து வருவதாகச் சொல்லிச் சென்ற இயேசுபிரான் இவர் தானோ?' என்று அமெரிக்கர்களே குழம்பும் வண்ணம், அடுத்தடுத்து தனது பொருளாத அறிவின் மூலம் பல திட்டங்களை செயல்படுத்தினார். அதுவும், இந்தியாவில் இருந்தபடியே. அடடா..அடடா!

ஏதோ நம்மால முடிஞ்சது..!
 இப்போதுகூட வால்மார்ட் போன்ற ஏழை பொட்டிக்கடை முதலாளிகளுக்கு இந்தியாவின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறார். அவர்கள் கடை வைத்தாலும் மக்கள் வாங்க வேண்டுமே? 'இவர்கள் ரேசனிலேயே வாழ்வதற்கு அரிசி, பருப்பும், சாவதற்கு மண்ணெண்ணெயும் வாங்கிக்கொண்டிருக்கிறார்களே' என்று சிந்தித்த நம் பொருளாதரச் சிற்பி, மெதுவாக ரேசன் கடைகளை அழிக்கும் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, இனிமேல் உங்கள் அக்கவுண்ன்டிலேயே காசு போட்டு விடுவோம். நீங்கள் அதை எடுத்துக்கொண்டு, இப்போதைக்கு அண்ணாச்சி கடையிலும், பின்னாளில் வால்மார்ட்டிலும் பொருள் வாங்கிக்கொள்ளலாம். இந்திய அரசின் நிர்வாகச் சுமையைக் குறைத்த மாதிரியும் ஆச்சு, அமெரிக்க பொட்டிக்கடை அண்ணாச்சிகளுக்கு கஸ்டமர் பிடித்துக்கொடுத்த மாதிரியும் ஆயிற்று.

எவ்வளவு தீர்க்க தரிசனம் உள்ள, பொருளாதார சிந்தனைச் சிற்பி அவர். இவ்வாறாக, பல்வேறு திட்டங்கள் தீட்டி, திவாலாகப் போன அமெரிக்காவையே காப்பாற்றிய மன்மோகனையா குறை சொல்கிறீர்கள்? ஒரு இந்தியனால் அமெரிக்கா மேலெழுகிறது என்பது உலக அரங்கில் நமக்கெல்லாம் பெருமை என்று புரியவில்லையா அறிவிலிகளே?

டாலரில் நாம் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தும் நேரம் இது என்று சொல்கிறார்கள்.  கூடவே வட்டியும் உண்டு. அதனாலேயே ரூபாய்,அளவுக்கதிகமாக மதிப்பு வீழ்த்தப்படுவதாக பொருளாத உலகில் ஒரு கிசுகிசு உலவுகிறது. அதாவது 40 ரூபாய் கடன் வாங்கிவிட்டு, தற்போதிய மதிப்பில் 65 ரூபாய் திருப்பிச் செலுத்தப் போகிறோம். அமெரிக்காவிற்கு எவ்வளவு பெரிய நன்மையை நாம் செய்கிறோம்! அப்பேர்ப்பட்ட வல்லரசையே தூக்கி நிறுத்தும் நிஜ வல்லரசு நம் பொருளாதார மேதை மன்மோகன் என்பதை நினைவில் வையுங்கள்.

எங்கள் மண்ணுமோகனிடம் நேர்மை இல்லாமல் இருக்கலாம், சூடுசுரணை இல்லாமல் இருக்கலாம்..ஏன், தேச பக்திகூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரிடம் பொருளாதர அறிவு இல்லை என்று சொல்லாதீர்கள். தான் நினைத்ததை முடித்த, அமெரிக்க ரட்சகர் அவர்.

வாழ்க மண்ணு! வளர்க அமெரிக்க சிட்டிசன் ஆகிவிட்ட அவர் பொண்ணு!



மேலும் வாசிக்க... "மன்மோகன் சிங்கை குறை சொல்லும் அப்பாடக்கர்களே.."

Saturday, March 2, 2013

டாஸ்மாக்கை எதிர்க்கும் ஐயா.சசிபெருமாளை ஆதரிப்போம்!

தமிழக அரசு மதுக்கடைகளை தானே ஏற்று நடத்துவதாக முன்பு அறிவித்தபோது, என்ன நடக்கும் என்று நாம் அஞ்சினோமோ அவையெல்லாம் இப்போது ஏறக்குறைய நடந்தேறி விட்டன.


தமிழக பள்ளி மாணவர்களில் 45% பேருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நமது குழந்தைகளுக்கும் நாளை இதே நிலைதான் வரும் என்று அனைவரும் அஞ்ச வேண்டிய நிலை வந்துவிட்டது.

சமீபத்தில் வந்த செய்திகள் சில :
- குடித்துவிட்டு பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தவன் கைது.
- ஆறாம் வகுப்பு மாணவர்களிடம் குடிப்பதற்கு காசு கேட்டு மிரட்டிய பதினோறாம் வகுப்பு மாணவர்கள்
- குடிக்க பணம் தர மறுத்த மனைவியைக் கொன்ற குடிகாரக் கிழவர்
- ஊனமுற்ற மகனின் சம்பளத்தை குடித்தே அழித்த தந்தை கொலை
- டாஸ்மாக்கில் சரக்கு வாங்கிவிட்டு, சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் கீழே விழுந்து பாட்டில் குத்தி பலி.

................இப்படி நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவங்கள் தினசரிச் செய்தியாகின்றன. ஒரு சில குடும்பங்களைப் பாதிக்கும் விஷயமாக இருந்த குடி, இப்போது பல குடும்பங்களையும் தெருவுக்குக் கொண்டு வந்துள்ளது.

சில குடும்பங்களின் பிரச்சினையாக இருந்த குடி, இப்போது சமூகப்பிரச்சினையாக மாறியுள்ளது. ஆங்காங்கே மக்களே போரட்டம் நடத்தி/டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். காந்திய மக்கள் இயக்கம், மனித நேயக்கட்சி உள்ளிட்ட பல அமைப்புகளும் பல்வேறு போரட்டங்களை நடத்தியுள்ளன.

பாமக நிறுவனர் ராமதாஸ் பல வருடங்களாக மதுவுக்கு எதிராக குரல் கொடுத்துவருகிறார். அவரைத் தொடர்ந்து மதிமுகவும் இப்போது மதுவுக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளது. மேலும்  பாமக, மதிமுக போன்ற கட்சிகள் களத்தில் இறங்குவது, சமூகத்தில் இது பற்றிய ஒரு விவாதத்தை துவக்க வழிவகுக்கும் என்ற வகையில், அவர்களின் பங்களிப்பு முக்கியமாகிறது.

இப்படி பல்வேறு தரப்புகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த போதிலும், இவர்களிடையே ஒற்றுமை இல்லாததால் வெறும் பத்திரிக்கைச் செய்திகளாகவே இவை நின்றுவிட்டன.

 இத்தகைய சோகமான சூழலில் தான் ஐயா.சசிப்பெருமாள் எனும் காந்தியவாதி சென்னை மெரீனாவில் மதுவிலக்குக் கோரி சென்ற மாதம் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். உடனே கொதித்தெழுந்த அரசு, அவரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்ததோடு இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத அசிங்கமாக அவர்மீது தற்கொலை முயற்சி வழக்குப் போட்டது.

ஆனாலும் அவர் தனது போராட்டத்தை நிறுத்திகொள்ளாமல், உண்ணாவிரத்ததைத் தொடர்ந்தார். இப்போது சிறையில் இருந்து வெளியாகி, மீண்டும் சென்னை மெரீனாவில் காந்தி சிலை அருகே 32ம் நாளாக உண்ணாவிரத்தை மேற்கொண்டுள்ளார்.

அவரை பாமக, மதிமுக,மநேக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் பல அமைப்புகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருப்பதோடு, மதுவிலக்கு வேண்டும் என அரசுக்கும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

'உடனே மதுவிலக்கு வேண்டும்' என பிடிவாதப்போக்குடன் ஐயா.சசிப்பெருமாள் அவர்கள் போராடவில்லை. அவர்களின் கோரிக்கைகள் யதார்த்தமானவையாக உள்ளன. அவை:

- கடைகளின் எண்ணிக்கையை முதலில் குறையுங்கள்

- கடைகளின் நேரத்தைக் குறையுங்கள்

- 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனைசெய்வதை உடனே நிறுத்துங்கள்

- வழிபாட்டுத்தலங்கள், கல்விக்கூடங்கள், பேருந்து நிலையங்கள் அருகே இருக்கும் மதுக்கடைகளை அகற்றுங்கள்

- மதுவினால் வரும் வருமானத்திற்கு ஈடாக மாற்று வழிகளைச் செயல்படுத்துங்கள்

- பின்னர் படிப்படியாக பூரண மதுவிலக்கைக் கொண்டு வாருங்கள்.

உண்ணாவிரதப் பந்தலில்...

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தமிழருவி மணியன் அங்கம் வகிக்கும் காந்திய மக்கள் இயக்கமானது ஏற்கனவே மதுவினால் வரும் வருமானத்தை எப்படி வேறுவழியில் ஈடுகட்டுவது என்று தெளிவான செயல்திட்டத்தை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.(22000 கோடி ரூபாய் வருமானமீட்ட, வழிவகைகள் அரசுக்கு சொல்லப்பட்டுவிட்டது.)

எனவே தமிழக அரசு இன்னும் காலம் தாழ்த்தாமல், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

பல்வேறு சிறு எதிர்ப்பலைகளாய் இருந்த மது அரக்கனுக்கு எதிரான போராட்டத்தை ஒன்று குவிக்கும் வாய்ப்பாக ஐயா.சசி பெருமாளின் போராட்டம் அமைந்துள்ளது.

அவரின் வேண்டுகோள், லட்சக்கணக்கான பெண்களின் வேண்டுகோள். இந்த சமூகத்தின்மீது அக்கறையுள்ள லட்சக்கணக்கான சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள். இந்த அரசு, மக்கள் டாஸ்மாக்கிற்கு எதிராக திரள ஆரம்பித்துவ்பிட்டதைப் புரிந்துகொண்டு, இப்போதாவது செயலில் இறங்க வேண்டியது அவசியம்.

நாளை(ஞாயிறு) மாலை, சென்னை மெரீனாவில் ஐயா,சசிப்பெருமாள் போராடும் இடத்தருகே மனித சங்கிலி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னைவாசிகளும், சென்னைப்பதிவர்களும், மே17 இயக்கம் போன்ற தன்னலமற்ற இயக்கத் தோழர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், புதிய தலைமுறை தவிர்த்து பிற ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளிக்கொண்டுவர ஆர்வமின்றி இருக்கின்றன. சமூக அக்கறையுள்ள பதிவர்கள், தொடர்ச்சியாக இதுபற்றிப் பதிவிட்டு, இந்தப் போராட்டம் வெற்றிபெற உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.


நீங்கள் குடிப்பவர்களாகவே இருந்தாலும், உங்கள் குழந்தைகள் குடிகாரர்கள் ஆவதை விரும்ப மாட்டீர்கள் தானே? தமிழகப் பள்ளிக்குழந்தைகளையும் உங்கள் குழந்தைகளாக நினைத்து, குடிப்பழக்கம் உள்ள பதிவர்களும் இந்தப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்று வேண்டுகிறேன்.

தொடர்புடைய முந்தைய பதிவு : டாஸ்மாக்கும் திருட்டும் விபச்சாரமும்
மேலும் வாசிக்க... "டாஸ்மாக்கை எதிர்க்கும் ஐயா.சசிபெருமாளை ஆதரிப்போம்!"