Wednesday, May 24, 2017

கடுகு - சினிமா விமர்சனம்


தமிழில் வந்த சிறுகதைகளில் மிக முக்கியமானது, அசோகமித்ரனின் புலிக்கலைஞன். அதிக அளவில் விவாதிக்கப்பட்ட, விவாதித்தாலும் தீராத உள்ளடக்கம் கொண்ட கதை புலிக்கலைஞன். சினிமா வாய்ப்புத் தேடி வரும் ஒரு அப்பாவி, தனக்கு புலிவேஷம் கட்டி ஆடத்தெரியும் என்கிறான். பசியால் வாடிய தேகமும், மிகுந்த பவ்யமும் கொண்ட அந்த அப்பாவி சொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவன் அவர்கள் முன் புலிவேஷம் கட்டி, ஆடிக்காட்டத் தயாராகிறான். அடுத்து எழுத்தாளர் அசோகமித்ரனின் அற்புதமான நடை, அந்த சினிமா அலுவலத்திற்குள் புலிக்கலைஞன் காட்டும் புலிப்பாய்ச்சலை கண்முன் நிறுத்துகிறது. நிஜப்புலியே வந்துவிட்டதுபோல் எல்லோரும் பயந்துபோகிறான். ஆட்டம் முடிந்ததும், மீண்டும் சாதரணன் ஆகி வாய்ப்புக்காக கெஞ்சி நிற்கிறான். புலியைக் காணவில்லை!

ஒரு கலைஞன் என்பவன் யார், அந்தக் கலையில் ஈடுபடும்போது அவன் எவ்வாறு இன்னொரு ஆளாக மாறிப்போய்விடுகிறான் என்பதை இந்தளவுக்கு எந்த எழுத்தாளரும் துல்லியமாகப் பதிவு செய்ததில்லை. எழுத்தாளன், நடனக்கலைஞன், பாடகன், இசையமைப்பாளன் என யாராக இருந்தாலும், அவர்களையும் மீறி கலை தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. பல சாதனையாளர்கள் மீண்டும் மீண்டும் ‘இது இறைவனின் லீலை. நான் வெறும் கருவி’ என்று சொல்லிப் பணிவது இதனால் தான். கலையைச் ‘செய்யும்வரை’ அது கலையாக இருப்பதில்லை. அது தானே நிகழும்போதே, கலை ஆகிறது. அந்த நேரத்தில் கலைஞனும் அவனை மீறிய வேறொரு உருவை அடைகிறான்.

இது கலைக்கு மட்டும் தான் என்றும் குறுக்கிவிட முடியாது. ஒரு பீரோவை நகர்த்துவதற்கு நான்குபேரைக் கூப்பிடும் பெண்மணி, அதே பீரோ தன் குழந்தை மேல் சாய்ந்தால், பாய்ந்து வந்து பீரோவைப் பிடித்து நிமிர்த்துவிடுவாள். அங்கே அவளுக்குள் உறங்கும் அன்பு, அவளை மீறி வெளிப்பட்டுவிடுகிறது. ஏதோவொரு நெருப்பு, எல்லோருக்குள்ளும் கனன்றுகொண்டுதான் இருக்கிறது.

இவ்வாறு சிந்திக்கச் சிந்திக்க பல்வேறு திறப்புகளை புலிக்கலைஞன் கதை கொடுத்துக்கொண்டேயிருக்கிறது. இன்னும் தீவிர விவாதத்திற்கு உட்படும் கதையாக அது இருக்கிறது. அதில் இருந்து ‘புலிக்கலைஞனுக்குள் உறைந்திருக்கும் புலி’ என்ற ஒன்லைனை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று யூகிக்கிறேன். ஏறக்குறைய அதே ஹீரோ கேரக்டர், அதே போன்ற சினிமா சம்பந்தப்பட்ட காட்சியுடன் படத்தில் அறிமுகம் ஆகிறது.

ட்ரான்ஸ்ஃபர் ஆகும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் எடுபிடியாக ஹீரோ ராஜகுமாரனும் தரங்கம்பாடிக்கு வருகிறார். அந்த அழகான ஊர் தான் கதைக்களம். இந்த படத்தை மேலும் அழகாக்குவது, படத்தில் வரும் மனிதர்கள்.

சாதுவான புலிக்கலைஞன் கேரக்டருக்கு ராஜகுமாரனைத் தவிர வேறு ஆளை இப்போது நினைத்துப்பார்க்க முடியவில்லை. அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்றபோது கிண்டலாகவே எடுத்துக்கொண்டோம். ஆனால் படத்தைப் பார்க்கும்போது, சரியான தேர்வு என்று தோன்றியது. கிடைத்த வாய்ப்பில், புலியாகப் பாய்ந்திருக்கிறார். அவரது பேட்டிகளைப் பார்க்கும்போது, இயல்பிலேயே மனிதர் அப்பாவித்தனம் நிரம்பியவராகவே தெரிகிறார். இன்றளவும் தேவயானி அவரை விட்டுக்கொடுக்காமல் பேசுவதற்கும், காதலிப்பதற்கும்   அந்த இன்னோசன்ஸ் தான் காரணம் என்று நினைக்கிறேன். இன்ஸ்பெக்டரிடம் எடுபிடி வேலை செய்வது, ‘தீபிகா படுகோனிடம்’ ஃபேஸ்புக்கில் சாட் செய்வது, ஹீரோயின் ராதிகா ப்ரசீதா மேல் காட்டும் ப்ரியம், அந்த ட்ரெய்ன் காட்சி, கொடுமை கண்டு பதறுவது, இறுதியில் பொங்குவது என்று மனிதர் பொளந்துகட்டியிருக்கிறார். நிறுத்தி, நிதானமாகப் பேசுவது சிலகாட்சிகளில் பொருந்தாமல் போனாலும், அவருக்குள் காத்திருந்த புலிக்கலைஞன் பாய்ந்திருக்கிறான் கடுகில்.


அந்த ஊர் சேர்மனாக, வளரும் அரசியல்வாதியாக பரத். நல்லவன், கெட்டவன் என்றெல்லாம் பிரித்துப்பார்க்க முடியாத ஒரு யதார்த்தமான கேரக்டர். இன்றைய அரசியல்வாதிகளை நாம் திட்டித்தீர்த்தாலும், அவர்களும் ஏதோவொரு காலத்தில் நல்லவர்களாக இருந்தவர்கள் தான். கட்சிச் செலவு, பிரச்சாரத்திற்கு ஆகும் செலவு, ஓட்டுக்கு காசு வாங்கும் நல்லவர்கள் என எல்லாமாகச் சேர்ந்து, அவர்களை ‘அரசியல்வாதி’யாக மாற்றிவிடுகிறது. தமிழ்சினிமாவில் அப்படி முதிர்ந்த அரசியல்வாதிகளை காட்சிப்படுத்தியிருந்தாலும், இந்த மாற்றம் நடக்கும் ட்ரான்சிசன் பீரியடை அதிகம் பதிவு செய்ததில்லை. பதவி மேல் இருக்கும் மெல்லிய ஆசை, அதை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் வெட்கச்சிரிப்புடன் எம்.எல்.ஏ கனவு பற்றிப் பேசுவது, பதவிக்காக மனசாட்சி பின்வாங்கும் காட்சி என ஒரு இயல்பான கேரக்டரை பரத் மிகச்சரியாக உள்வாங்கி நடித்திருக்கிறார். சமீபகாலமாக மொக்கைப்படங்களில் மட்டுமே நடித்துவந்த பரத்திற்கு கடுகு ஒரு திருப்புமுனை.

படத்தில் வரும் இன்னொரு முக்கியமான ஆள், அனிருத் கேரக்டரில் வரும் பாரத் சீனி. இவர் படத்தின் தயாரிப்பாளர் & விஜய் மில்டனின் தம்பி. பொதுவாக தயாரிப்பாளர்கள் ஹீரோவாக நடிப்பார்கள் அல்லது படம் முழுக்க டாமினேட் பண்ணுவார்கள். இதில் ஏறக்குறைய காமெடியன் கேரக்டரில் வருகிறார் பாரத் சீனி. ராஜகுமாரனும் இவரும் ஃபேஸ்புக்கை வைத்து அடிக்கும் சீன்கள் எல்லாம் கலகலப்பு தான். அந்த அனிருத்திற்கும் ஒரு அழகான ஒருதலைக் காதல். இவர் செய்வதெல்லாம் பரத்தின் காதலுக்கு சாதகமாகப் போக, சுபிக்‌ஷா பரத்திடம் மனதைப் பறிகொடுக்கிறார். இவையெல்லாம் மெல்லிய காமெடியாக நகர, இரண்டாம்பாதியில் ஒரு சீனில் தான் யார் என்று தன் காதலிக்கு உணர்த்துகிறார். அருமையான காட்சி அது.

சுபிக்‌ஷா கேரக்டருக்கு அதுவொரு இக்கட்டாண தருணம். எல்லா கேரக்டரையும் சரியாகப் பதிவு செய்த படம், இந்த கேரக்டரை ஏனோ கண்டுகொள்ளாமல் நகர்கிறது. அவருக்கு காதல் வந்த காரணங்களுக்கு உரியவன் பாரத்சீனி, ஆனால் அவர் மனதைப் பறிகொடுத்திருப்பதோ பரத்திடம். இறுதிக்காட்சியில் பரத்துடனே அவர் போகிறார். அதை பாரத் சீனி கேரக்டரும் மிக இயல்பாக எடுத்துக்கொள்கிறது. பாரத் சீனியா, பரத்தா என அவருக்கு வந்திருக்கும் மனசஞ்சலத்தை இயக்குநர் ஏனோ காட்சிப்படுத்தவில்லை.

ஆசிரியையாக வரும் ராதிகா ப்ரசீதா, குற்றம் கடிதல் படத்திலேயே நடிப்பால் நம்மைக் கலங்கடித்தவர். இதிலும் அப்படியே. அதிலும் அவரது ஃப்ளாஷ்பேக் உருக்கம். அதை இயக்குநர் சொல்லியிருக்கும்விதம், பிரமாதம். செய்யாத தவறுக்கு வாழ்நாள் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கும் கேரக்டர். ராஜகுமாரன் மேல் அவருக்கு வரும் காதலில் வலி நிறைந்த யதார்த்தம். தன் ஃப்ளாஷ்பேக்கை சொல்லி முடித்ததும், இருவரும் கைபிடித்து அமர்ந்திருக்கும் ஷாட், ஒரு விஷுவல் கவிதை. புல்லரித்துவிட்டது. இவ்வளவு அழகான, டச்சிங்கான ஷாட்டை அந்த இடத்தில் எதிர்பார்க்கவே இல்லை. கிளைமாக்ஸில் இந்த கேரக்டர் தரும் ட்விஸ்ட்டும், அது ராஜகுமாரனை புலியாக மாற்றுவதும், பரத் முன்பு கொடுத்த டிப்ஸை வைத்தே புலி அவரை வீழ்த்துவதும் நல்ல திரைக்கதைக்கான அடையாளங்கள்.

சின்னப் பெண கீர்த்தி, இன்ஸ்பெக்டராக வரும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், அமைச்சர் தாடி வெங்கட் போன்ற எல்லாக் கேரக்டர்களும் மீட்டருக்குள் நடித்திருக்கிறார்கள். இரண்டாம்பாதி முழுக்க வரும் ஒரு பிண்ணனி இசை அருமையாக இருந்தது. தரங்கம்பாடியை கேமிரா சுற்றிச்சுற்றி அழகாக காட்சிப்படுத்தியிருந்தது.

இவ்வளவு ப்ளஸ் பாயிண்ட் இருந்தும், படத்தை பின்னுக்கு இழுப்பது மூன்று விஷயங்கள்.

ஒன்று, இண்டர்வெல் சம்பவம் நடக்கும் இடம். அவ்வளவு பேர் மேடை அருகே கூடியிருக்க, மினிஸ்டர் அப்படி நடந்துகொள்வது காட்சியின் நம்பகத்தன்மையை சுத்தமாக குலைத்துவிடுகிறது. அது தனியே ஒரு பங்களாவில் நடந்ததாக காட்சிப்படுத்தியிருக்கலாம். படத்தின் முக்கியமாக காட்சியில் எப்படி கோட்டைவிட்டார்கள் என்று தெரியவில்லை. படம் பார்ப்பவர்கள், இந்தக்குறையை மன்னித்தால் தான் இரண்டாம்பாதியை ரசிக்க முடியும்.

இரண்டு, ஓவர் செண்டிமெண்ட்டாக இரண்டாம்பாதி நகர்வது. சின்னப்பெண் பாதிக்கப்பட்டதே போதுமானதாக இருக்கும்போது அவரை சாகடிப்பது ஓவர் டோஸ்.

மூன்று, கிளைமாக்ஸில் பரத் திருந்தியதும் கத்தியை எடுத்துக்கொண்டு கிளம்புவது. தப்பைத் தட்டிக்கேட்க அரசியல்ரீதியான வழிகளே இல்லையா, என்ன? ஒரு மசாலாப்படத்தில் இப்படி கிளைமாக்ஸ் சீன் வைக்கலாம். இந்த மாதிரி யதார்த்தப்படத்தில், அதுவொரு தேவையற்ற நீட்சி.

இந்தக் குறைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல சினிமா பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது கடுகு.

மேலும் வாசிக்க... "கடுகு - சினிமா விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, May 14, 2017

பிரம்ம ராட்சஷர் - சிறுகதை

வன் கட்டிலின் அருகே வெறித்த பார்வையுடன் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. தூங்கிக்கொண்டிருந்தாலும் தன்னால் உணர முடிகிறதே என்று இன்ஸ்பெக்டர் சங்கரன் ஆச்சரியப்பட்டார். ஆச்சரியம் பயமாய் மாறி, கையில் ஆயுதம் ஏதும் வைத்திருக்கிறானா என்று பார்க்க முயற்சித்தார். இல்லையென்று கண்ணைத் திறக்காமலேயே முடிவுக்கு வந்தார். நாம் தான் கண்ணையே திறக்கவில்லையே, பின்னே எப்படி என்று குழப்பமாகவும் இருந்தது. தான் இப்போது தூங்குகிறோமா, விழித்திருக்கிறோமா என்று தூங்கிக்கொண்டே யோசித்தார். தூக்கம் தான் என்று புத்தி சொன்னது.

அடுப்புக்குழல் ஊதுவது போன்ற சீரான, மெல்லிய குறட்டை ஒலி லட்சுமியிடமிருந்து வருவது தெரிந்தது. லட்சுமி! அவன் அவளையுமா பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார். வேர்த்திருந்தது. அவன் அங்கே இல்லை. லட்சுமி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவன் இங்கே தான் இருக்கிறான் என்று உள்ளுணர்வு சொன்னது. பயப்படுகிறாயா என்று மனம் கேலி செய்தது. எழுந்து ஜன்னல் திரையை விலக்கி, கீழ் தளத்தையும் ரோட்டையும் பார்த்தார். அங்கே அவன் நின்றிருந்தான்.


சங்கரன் ஓடிச்சென்று மொபைலை எடுத்தார். செக்யூரிட்டிக்கு கால் செய்தார். கீழே ரிங் போகும் சத்தம் கேட்டது.  கையில் மொபைலுடன் கீழே ஓடினார். அங்கே அவன் இல்லை. செக்யூரிட்டி தூங்கிய சுவடுகளை மறைத்தவராக ‘என்ன சார்?’ என்றார். காலியான தெருவைப் பார்த்த சங்கரன் ஒன்றும் சொல்லாமல் முறைத்தபடி திரும்பினார்.


யார் அவன்? என்ன தான் அவனுக்கு வேண்டும்? ஏறக்குறைய ஒரு மாதமாக இதே டார்ச்சர் தான். எங்கு சென்றாலும் பின் தொடர்கிறான். ஸ்டேசனுக்கு வெளியே நிற்கிறான். தியேட்டருக்குப் போனால் அங்கேயும் வருகிறான். பத்தடி தொலைவில், எப்போதும் பதுங்கத் தயாராகவிருக்கும் வேட்டை நாய் போல! இதுவரை வெளியில் சொல்லவில்லை. வெளியே சொல்ல கொஞ்சம் வெட்கமாகவும் இருக்கிறது. என்னவென்று சொல்வது? சங்கரன் தலையை உலுப்பிக்கொண்டார்.

ஆஜானுபாகுவான, ஸ்டேசனையே நடுங்க வைக்கும் இன்ஸ்பெக்டர், தன் பின்னால் தொடர்ந்து வரும் ஒருவனை பிடிக்க முடியாமல் பயந்துபோய் கம்ப்ளைண்ட் கொடுத்தார் என்றால் உள்ளுக்குள் சிரிக்க மாட்டார்களா? ஸ்டேசனிலேயே தான் இல்லாத நேரம் கேலிப்பேச்சு ஓடும். ஆனால் இப்போது வேறு வழியும் இருப்பதாகத் தெரியவில்லை. கெத்து குறையாமல் சொல்வது எப்படி என்ற யோசனையுடன் சங்கரன் படுக்கையில் சாய்ந்தார்.


ஸ்டேசனில் நுழையும்போதே ஏட்டு ஓடிவந்தார்.

“சார், இன்னைக்கு கோர்ட்டுக்குப் போகணும். வித்யா ஆசிட் கேஸ். டைம் ஆகிடுச்சு சார்?”

அவன் கொடுத்த தொல்லையில் இந்த முக்கியமான விஷயத்தை மறந்தது உறைத்தது. ஸ்டேசனுக்குள் போகாமல் ஏட்டுடன் ஜீப்பை நோக்கி நடந்தார்.

“நம்ம சைடு ஸ்ட்ராங்காத் தானே இருக்கு?”
“ஆமா சார். நக்கீரன், ஜூ.வி.ன்னு எல்லாத்திலயும் ஆர்டிக்கிள் வந்திருக்கு சார்.”

சங்கரன் பெருமிதத்துடன் சிரித்துக்கொண்டார். வழக்கமான ஆசிட் வீச்சு தான். காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு என்று ஒருநாள் செய்தியுடன் முடிந்திருக்க வேண்டிய விஷயம். ஆனால் சங்கரன் விடவில்லை. அந்த பெண்ணிடம் மரண வாக்குமூலம் வாங்கினார். ஒரே நாளில் குற்றவாளிகளை கைது செய்தார். 
முதலில் ஒருவன் மட்டும் அவளை பின் தொடர்ந்திருக்கிறான். பிறகு நண்பர்களை கூட்டிவந்து ‘இவள் தான் என் ஆளு’ என்று காடியிருக்கிறான். பலமுறை பின் தொடராதே என்று வித்யா சொல்லியும் கேட்கவில்லை. திடீரென ‘ஒருநாள் தான் டைம்..நாளைக்கு உன் முடிவைச் சொல்லு’ என்று மிரட்டியிருக்கிறான். மறுநாளும் அவள் மறுக்க, ஆசிட்டை எடுத்து முகத்தில் வீசிவிட்டான். கொடூரம்.

வாக்குமூலம் வாங்கி, இரண்டு நாள் சங்கரனால் சாப்பிடவே முடியவில்லை. அங்கே முகமே இல்லை. இப்போது நினைத்தாலும் சங்கரனுக்கு கையெல்லாம் நடுக்கம் எடுத்தது. கோபத்துடன் ஏட்டிடம் சொன்னார், “கோர்ட் மட்டும் அவனுகளை விட்டுச்சு..ஏதாவது ஒரு கேஸ்ல பிடிச்சு, நானே என்கவுண்டர்ல போடுவேன்யா”

ஏட்டு அதை ஆமோதிப்பவராக தலையாட்டினார்.

கோர்ட் வழக்கம்போல் வாய்தா கொடுத்தது. ஆதாரங்களும் சாட்சிகளும் இருப்பதால், கேஸை இழுக்க முடியுமே ஒழிய தப்பிக்க முடியாது என்று பப்ளிக் பிராசிக்யூட்டர் ஆறுதல் சொன்னார். அப்போது தான் சங்கரன் அவனை அங்கே பார்த்தார். அதே வெறித்த பார்வையுடன் கோர்ட் வளாகத்துக்குள் நின்றிருந்தான். 

சங்கரன் ஏட்டை லேசாக இடித்து, “அங்கே நிற்கிறவனைப் பாரும்” என்றார்.
ஏட்டு நிமிர்ந்து பார்த்துவிட்டு “அங்கே யாருமே இல்லையே சார்” என்றார்.
”என்ன அவசரம்? ஒருமணி நேரம் கழிச்சு பார்க்க வேண்டியது தானே?” என்று பல்லைக் கடித்தார் சங்கரன்.

இருவரும் வெளியே வந்து ஜீப்பில் அமர்ந்ததும், அவனைப் பற்றி எல்லாவற்றையும் சொன்னார்.

“நிம்மதியா தூங்க முடியலை. ஸ்டேசன் வேலைகள்ல கவனம் போக மாட்டேங்குது. இன்னைக்குப் பாரும், கோர்ட்டுல் எவ்வளவு முக்கியமான கேஸு. அதை விட்டுட்டு, அவனையே நினைச்சுக்கிட்டு வர்றேன். நாம ஓரளவுக்காவது நியாயமத்தானே நடந்துக்கறோம். பெரிய யோக்கியன் லிஸ்ட்லயும் நம்மை வைக்க முடியாது, அயோக்கியன் லிஸ்ட்லயும் வைக்க முடியாது. என்மேல யாருக்குய்யா கோபம்?”

இன்ஸ்பெக்டர் தன்னிடம் ஆலோசனை கேட்பதே ஏட்டுக்குப் பெருமையாக இருந்தது. நன்றாக பயந்து போயிருக்கிறார் என்பதைப் பார்க்க வேடிக்கையாகவும் இருந்தது. வீட்டுக்குப் போனதும் சம்சாரத்திடம் சொல்ல வேண்டும். சிரிப்பாள்.

“என்னய்யா சிரிக்கிறீரு?” என்ற சங்கரன் குரலில் பீதியடைந்தவராக “இல்லை சார்...யோக்கியன் - அயோக்கியன்னு பேசுனீங்களா..அதான். சார், ஒருவேளை இப்படி இருக்குமோ? “ என்று சீரியஸ் மோடுக்கு வந்தார். ‘எப்படி’ என்று இன்ஸ்பெக்டர் கேட்பதற்குள் ஏதாவது பாயிண்ட் பிடித்து தப்பித்துவிடவேண்டும் என்று மைக்ரோசெகண்டில் சிந்தனை ஓடியது.

சங்கரன் நல்லவர். நிதானமாகவே “எப்படி இருக்குமோ?” என்று கேட்டார்.

“சமீபத்துல நீங்க உருப்படியா...அதாவது தீவிரமா வேலை பார்த்தது இந்த வித்யா கேஸ்ல தானே சார். பேப்பர் வரைக்கும் பேர் வந்து நல்ல பப்ளிசிட்டி. அதனால இந்த அக்யூஸ்ட்டுக்கு வேண்டப்பட்டவங்க யாராவது இருக்குமோ?” என்று கேட்டுவிட்டு, ஏட்டு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

“ஆமாய்யா...இருக்கும். அப்படி மட்டும் இருந்துச்சு..இவனுகளை பெர்மனெண்ட்டா உள்ளே வச்சிடலாம்”

ஏட்டு இந்த விஷயத்தில் கான்ஸ்டபிள் யாரையும் உள்ளே விடாமல், தானே முடிப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தார். மூத்தவன் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறான். சின்னவன் தறுதலை. எப்படியும் அவனுக்கும் காக்கியை மாட்டிவிட வேண்டும். சங்கரன் முசுடு என்றாலும், பிடித்துப்போனால் நன்றாகச் செய்வார்.

“இரண்டு கான்ஸ்டபிளை மஃப்டில என்னை ஃபாலோ பண்ணச் சொல்லும்” என்றார் சங்கரன்.

அவசரமாக மறுத்தார் ஏட்டு.

“சார். சிரிப்பாங்க சார். உங்களுக்கு ஒரு டெரர் இமேஜ் இருக்கு. நீங்க தான் ஸ்டேசனுக்கே காவல்தெய்வம் மாதிரி. நீங்க போய் அவங்க பாதுகாப்பை கேட்கலாமா? மஃப்டின்னாலும் போலீஸ்ன்னு கண்டுபிடிச்சிருக்கிறது ஈஸி சார். என் பசங்க ரெண்டுபேரும் கெட்டிக்காரங்க சார். ராத்திரி பகல் பார்க்காமல் உங்களை ஃபாலோ பண்ணி, அவனை இன்னும் ரெண்டே நாளில் தூக்குறோம் சார்”

சொன்னபடியே ஏட்டுவின் பிள்ளைகள் செய்தார்கள். இன்ஸ்பெக்டரை பின் தொடர்ந்தவனை உடனே பிடிக்காமல், அவன் தங்கியிருக்கும் லாட்ஜ்வரை கண்டுபிடித்துவிட்டு, மடக்கிப் பிடித்தார்கள். தூக்கிக்கொண்டு வந்து ஸ்டேசனில் போட்டார்கள். சங்கரன் ஆவேசம் கொண்டவராக, அவன் மேல் பாய்ந்தார். என்னவென்றே தெரியாமல், கான்ஸ்டபிள்களும் அடித்தார்கள். முன்பல் ஒன்று உடைந்து வாயில் இருந்து ரத்தம் கொட்டியது. அதைப் பார்த்தபிறகே சங்கரன் திருப்தியாகி, நிதானத்துக்கு வந்தார்.

அவனைத் தூக்கி உட்கார வைத்தார்கள். ஏட்டுவின் இளைய மகன் ஓடிப்போய் தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தான். அவன், தண்ணீரும் ரத்தமுமாய் சட்டை நனையக் குடித்தான்.

ஏட்டு அவனை நெருங்கி “யாருடா நீ?” என்றார்.

“வித்யா லவ்வர்” என்றான் அவன்.

ஸ்டேசனே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது. ஏட்டு உறுதிப்படுத்திக்கொள்ள மீண்டும் கேட்டார் “ஆசிட் கேஸ்..வித்யா லவ்வரா நீ?”

அவன் ஆமென்று தலையாட்டினான்.

இன்ஸ்பெக்டர் அவன் அருகே மண்டியிட்டு அமர்ந்தார்.

“அந்த கேஸ்ல அக்யூஸ்ட்களை ஒரேநாள்ல பிடிச்சவண்டா நான். என்னை ஏண்டா ?”

அவன் நிதானமாக “என்னை ஏன் சார் பிடிச்சு, அடிக்கிறீங்க?” என்றான்.

சங்கரனுக்கு சுர்ரென்று கோபம் தலைக்கேறியது. ஏட்டு உள்ளே வந்து “உன்னை வேற என்னப்பா செய்யணும்?” என்றார்.

அவன் மீண்டும் “என்னை ஏன் அடிக்கிறீங்க? ரீசன் சொல்லுங்க” என்றான்.

ஏட்டு “நீ சாரை டெய்லி ஃபாலோ பண்ணியிருக்கிறே..நைட்டுகூட அவர் வீட்டுப்பக்கம் போய் நின்னிருக்கிறே. ரைட்டா?”

“ஆமாம்..ஃபாலோ பண்றது தப்புன்னு சட்டம் சொல்லுதா?” என்றான்.

அவன் கேள்வியில் கேலி ஏதும் இல்லை. மிக சீரியஸாகத் தான் பேசுவதாக ஏட்டுக்கு தெரிந்தது.

“இப்போ நான் ஃபாலோ பண்ணதால என்ன ஆச்சு?”

சங்கரன் கடுப்பாகி “என்ன ஆச்சா? டேய்...”என்று ஆரம்பித்தவர் கையைப் பிடித்து ஏட்டு நிறுத்தினார். சங்கரன் கௌரவத்திற்கு பங்கம் வராதவகையில் “ஒரு அரசாங்க அதிகாரியை பின் தொடர்ந்து, கடும் மன உளைச்சலை கொடுத்திருக்கிறே நீ.” என்றார்.

அவன் ரத்த வாயுடன் சிரித்தான். “மன உளைச்சல்..இதைத் தானே சார் நாங்களும் சொன்னோம்” என்றான்.

சங்கரன் புரியாமல் “என்ன?” என்றார்.

அவன் கண்கள் கலங்கி, கண்ணீர் வடிந்தது.

“வந்தோமே சார்...நானும் வித்யாவும் ரெண்டு மாசம் முன்னே வந்தோமே சார். ‘என்னை ஒருத்தன் டெய்லி ஃபாலோ பண்றான். கம்ப்ளைண்ட் கொடுக்கணும்’னு அவ உங்ககிட்டே வாசல்ல வச்சு சொன்னா. நீங்க நின்னுகூட என்னன்னு கேட்கலியே சார். ‘இதெல்லாம் ஒரு கேஸாம்மா..இனிமே வராதடான்னு சொல்லு..போ’ன்னுட்டு ஜீப்ல ஏறிப் போய்ட்டீங்க. “

சங்கரனுக்கு லேசாகத் தான் அது நினைவில் இருந்தது. அவன் தொடர்ந்து பேசினான்.

“நீங்க போலீஸ். கவர்மெண்ட்டே உங்களுக்குப் பின்னால இருக்கு. உங்க மேல் கைவைச்சா, மொத்த போலீஸும் வேட்டையாடும். அவ்வளவு பாதுகாப்பு உங்களுக்கு இருக்கு. ஆனாலும் சும்மா உங்க பின்னால வந்த என்னைப் பார்த்து எப்படிப் பயந்தீங்க? நிம்மதியா தூங்குனீங்களா? வேலைல கான்செண்ட்ரேட் பண்ண முடிஞ்சதா? இவ்வளவு அதிகாரம் இருக்கிற உங்களுக்கே இதை தாங்க முடியலியே...பாவம் சார், அவ. ஒரு ஃபேன்ஸி ஸ்டோர்ல வேலை செய்ற கூலிக்காரப் பொண்ணு. அவ எப்படி சார் தாங்குவா?”

குற்றவுணர்ச்சியில் கனத்த மௌனத்துடன் ஸ்டேசன் நின்றது. அவன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தொடர்ந்து பேசினான்.

“இங்க ஒரு இன்ஸ்பெக்டரை ஃபாலோ பண்ண முடியாது..ஒரு கான்ஸ்டபிளை ஃபாலோ பண்ண முடியாது. ஆனால் வேலைக்குப் போற பொண்ணுங்களை ஃபாலோ பண்ணலாம். படிக்கப்போற பொண்ணுங்களை ஃபாலோ பண்ணலாம். அவங்க எப்படி சார் நிம்மதியா படிப்பாங்க? வேலை பார்ப்பாங்க? ஒருநாள் நீங்க வந்து அந்தப் பையனை சத்தம் போட்டிருந்தாலே போதுமே...ஒருத்தன் டெய்லி ஃபாலோ பண்றான். இவ தான் என் லவ்வர்னு ஃப்ரெண்ட்ஸை கூட்டிட்டு வந்து காட்டறான். எல்லார்கிட்டயும் அப்படியே சொல்றான். கடைசியில் அவ ஒத்துக்கலேன்னதும், ஈகோ பிரச்சினையா எடுத்துக்கறான். ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி அவமானமாப் போய்டுது. கடைசியில் ஆசிட் அடிக்கிறான். வீட்டை விட்டு வெளில வந்ததைத் தவிர, என் வித்யா பண்ண தப்பு என்ன சார்? அவ வீட்ல இருக்க முடியாது சார். அவ வேலை பார்த்தாத்தான் சாப்பாடே..கொன்னுட்டீங்க சார்..எல்லாருமாச் சேர்ந்து என் வித்யாவைக் கொன்னுட்டீங்க சார். ஒரு நிமிசன் நின்னு கேட்டிருந்தீங்கன்னா, இது நடந்திருக்காதே சார்”

அழுதபடியே எழுந்தான். சங்கரனும் ஏட்டும் எழுந்தார்கள்.

“நீங்க பெரிய ஆபீசரா இருக்கலாம் சார். பெரிய கேஸைத் தான் டீல் பண்ணுவேன்னு இருக்கலாம். ஆனாலும் இன்னொரு வித்யா இங்கே வந்தான்னா, கொஞ்சம் நின்னு என்னனு கேளுங்க சார். உங்களுக்கு புண்ணியமாப் போகும்”

கையெடுத்து கும்பிட்டுவிட்டு, விந்தியபடியே அவன் ஸ்டேசனை விட்டு வெளியேறினான்.

மேலும் வாசிக்க... "பிரம்ம ராட்சஷர் - சிறுகதை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, April 29, 2017

பாகுபலி 2 – பிரம்மாண்டத்தின் உச்சம்

பாகுபலி-1ல் கதையே இல்லை..வெறும் கேரக்டரை மட்டுமே அறிமுகப்படுத்தினேன் என்று ராஜமௌலி சொன்னாலும், அது உண்மை இல்லை. அங்கே ஒரு கதை இருந்தது. தன் மகன் வந்து மீட்பான் என்று தாய் காத்திருக்க, காதலிக்காக தாய் என்று தெரியாமலேயே மகன் மீட்டு வருகிறான் என்று ஒரு முழுமையான சித்திரத்துடன் முதல்பாகம் வந்தது.
இரண்டாம் பாகத்தில் தாய் ஏன் சிறைப்பட்டாள் என்றும் மில்லியன் டாலர் கேள்வியான கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்றும் சொல்லியிருக்கிறார்கள். 

மகாபாரதத்தில் திருதராஷ்டிரன் பார்வையற்றவன். எனவே தம்பி பாண்டுவை மன்னன் ஆக்குகிறார்கள். அடுத்த தலைமுறையிலாவது தன் ரத்தம் முடிசூட வேண்டும் எனும் திருதராஷ்டிரனின் நியாயமான ஆசையும், பாஞ்சாலியை சபதம் செய்ய வைக்கும் கௌரவர்களின் கீழ்த்தரமான நடவடிக்கையும் தான் மகாபாரதப் போருக்கு அடிப்படை. பாகுபலி-2 படத்தின் கதையில் மகாபாரதத்தின் மேலே சொன்னதின் தாக்கம் நிறையவே இருக்கிறது.

பாகுபலிக்கும் தேவசேனாவிற்குமான காதல் காட்சிகளே முதல்பாதியை ஆக்கிரமிக்கின்றன. வழக்கம்போல் பிரம்மாண்டம் & அழகுடன் நகைச்சுவையும் சேர முதல்பாதி களைகட்டுகிறது. சத்தியராஜின் வசனங்களுக்கு தியேட்டரில் சிரிப்பலை. இடைவேளையிலேயே விதியின் சதியால் தேவசேனாவிற்காக, அம்மாவையே பாகுபலி எதிர்க்க வேண்டியதாகிறது.

தொடர்ச்சியான பிரிவும் துரோகங்களும் சூழ்ச்சிகளும் முதல்பாகத்தின் ஆரம்பக்காட்சிக்கு இட்டுச்சென்கின்றன. அதை இரண்டாம்பகுதியில் விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

முதல் பாகம் போன்றே இதிலும் பிரம்மாண்டமாக மிரட்டியிருக்கிறார்கள். யானைக்கு மதம் பிடிப்பதாகட்டும், மூன்று அம்புகளை தொடுக்க பிரபாஸ் அனுஷ்காவிற்கு சொல்லிக்கொடுக்கும் சண்டைக்காட்சி, பாகுபலியின் பிள்ளையை ரம்யாகிருஷ்ணன் மாடத்தில் இருந்து உயர்த்திப்பிடிக்கும் காட்சியாகட்டும் விஷுவல் எஃபக்ட்ஸை உணர்வுப்பூர்வமாக பயன்படுத்துவது எப்படி என்று ராஜமௌலி துல்லியமாக அறிந்திருக்கிறார்.


பிரபாஸின் நடிப்பும் உழைப்பும் பாராட்டுக்குரியது. அவரே ஒரு பேட்டியில் சொன்னது போல், இன்னொரு படத்தில் இதே அளவிற்கு உழைத்தால் பாடி தாங்காது. மறக்க முடியாத ஆளுமை.

படம் முழுக்க அனுஷ்கா தான். தமன்னா கிளைமாக்ஸ் யுத்தத்தில் தான் வாளுடன் ஓடிவருகிறார். ஒரு நண்பர் ‘இந்த பாகத்திலாவது தமன்னா திரும்பி நிற்பாரா?’ என்று கேட்டிருந்தார். இதுவொரு பிரம்மாண்டப்படம் என்பதால், அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லியிருந்தேன். நான் சொன்னபடியே ஆயிற்று. அவரை நிற்கவே விடவில்லை. இதில் எங்கே திரும்புவது.


அனுஷ்கா தற்போது ஆண்ட்டி மாதிரி ஆகிவிட்டாரே என்று கவலை(?)யுடன் உள்ளே போனால், பழைய அனுஷ்காவாக கொடியிடையுடன் வந்து அசத்திவிட்டார். அழகும் கம்பீரமும் ஒருங்கே அமைவதெல்லாம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அனுஷ்கா, அந்த வரம் வாங்கி வந்த தேவதை. வழக்கமான மருமகள் போல், அம்மாவையும் மகனையும் வாய்த்துடுக்கால் பிரிப்பதைப் பார்க்கத்தான் ஒரு மாதிரியாக இருந்தது!

பிரபாஸ் & அனுஷ்கா தோன்றும் எம்.ஜி.ஆர்த்தனமான மக்கள் கொஞ்சும் காட்சிகளும், கிளைமாக்ஸ் யுத்தக்காட்சிகளும் சற்று போரடிக்கின்றன. மற்றபடி, படம் முழுக்க போரடிக்காமல் சென்றது.

படகில் ஏற பாகுபலியின் தோளில் தேவசேனா நடப்பது, படகு பறப்பது, கரடி வேட்டை, அனுஷ்கா கோட்டையில் நடக்கும் போர்காட்சிகள் என்று படம் முழுக்க கண்களுக்கு விருந்து தரும் விஷுவல் ட்ரீட்ஸ் நிறைய. பாகுபலியின் பலமே அது தான்.

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதற்கு பதில் தான் இந்த படத்தின் கதை என்பதால், கதையைப் பற்றி ஒன்றும் சொல்லாமலேயே முடித்துக்கொள்கிறேன்.

படம் முடியும்போது ஒரு சோகம் நம்மைக் கவ்விக்கொள்கிறது. அதற்குக் காரணம், பாகுபலி படம் அவ்வளவு தானா, இந்த மேஜிக் சினிமாவில் அடுத்து எப்போது நிகழும் என்பது போன்ற சிந்தனைகள் தான். படம் முடிந்தபின்னும் ஆடியன்ஸ் ஒரு நிமிடம் ஸ்க்ரீனையே வெறித்தபடி உட்கார்ந்திருக்கிறார்கள். வேறுவழியின்றி பாகுபலிக்கு பிரியாவிடை கொடுத்தபடி வெளியேறுகிறோம். பாகுபலி டீமின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, இந்த அன்பு தான்!
  
மேலும் வாசிக்க... "பாகுபலி 2 – பிரம்மாண்டத்தின் உச்சம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, April 17, 2017

இனியாவும் மாலாக்காவும் பின்னே ஷிவதாவும்...


'வாகை சூட வா’ பார்த்தபோது, இனியா ஒரு நல்ல நடிகையாக வருவார் என்று நினைத்தேன். மிக யதார்த்தமான நடிப்புடன், ஒரு கிராமத்துப்பெண்ணை பிரதிபலித்திருந்தார்.

ஆனால் கொஞ்சநாளிலேயே ஒரு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடினார். பிறகு கள்ளக்காதல் கேரக்டர் என்றாலே இனியா தான் என்று பெயர் வாங்கிவிட்டார். ஏன் இப்படி ஆனது என்று எவ்வலவு யோசித்தும் புரியவில்லை.

இப்போது, மாலாக்கா முறை. சிஜாவோ..ரோஸோ..ஏதோ ஒரு பெயர்..அது என்னவாக இருந்தால் என்ன, நமக்கு அவர் மாலாக்கா தான். (உங்களுக்குமா அங்கிள்னு ஷாக் ஆகக்கூடாது!)

கோழிகூவுது, மாசாணி என இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்தார். கோழிகூவுது படத்தின் சில ஸ்டில்கள் கவனிக்க வைத்தன. நல்ல பாந்தமான முகம். ஒரு ஹோம்லி ஹீரோயினாக வலம் வருவார் என்று நினைத்தேன். நினைத்தபடியே மாலாக்காவாக வந்தார்.
ஆனால் அடுத்து பைரவா பார்த்தபோது நெஞ்சே வெடித்துவிட்டது. கீர்த்தி சுரேஷ் தங்கையாம்..இவர் அக்காவாம்..கீர்த்தி விஜய்க்கு ஜோடியாம்..இவர் ஒரு வில்லன் நடிகருக்கு ஜோடியாம்.றெக்க படத்தில் லஷ்மி மேனனை ஹீரோயின் என்று சொன்னதையே ஊர் நம்பவில்லை. இதில் பைராவா இப்படிச் செய்தால் படம் எப்படி ஓடும்கிறேன்?

இவர் ஏன் இது மாதிரி சப்பையான கேரக்டர்களை எல்லாம் ஒத்துக்கொள்கிறார் என்று தெரியவில்லை. கொஞ்சம் பொறுமையாக இருந்து முயற்சி செய்தால், இரண்டாம் கட்ட ஹீரோயினாக வலம் வர முடியும்.

ஒருவேளை பொருளாதார அழுத்தங்கள் இனியாவிற்கும் மாலாக்காவிற்கும் இருக்குமோ, என்னவோ!

அந்தவகையில் சரியான வழியில் பயணிப்பது ஷிவதா தான். நெடுஞ்சாலை என்று ஒரு படம் 2014ல் வந்தது. அதில் வரும் ஹீரோயின் கேரக்டர் அருமையாக இருக்கும். அதில் நல்ல நடிகை என்று பெயர் எடுத்தவர் பிறகு காணாமல் போனார். இப்போது அதே கண்களுடன் (!) திரும்பி வந்திருக்கிறார். இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க பெர்ஃபார்மன்ஸ், அதே கண்கள் படத்தில்.

 
இடையில் திருமணம் வேறு ஆகிவிட்டதாக விக்கிபீடியா கிலி கிளப்புகிறது. ஆனாலும் அட்டகாசமான பெர்ஃபார்மன்ஸுடன் பார்த்த எல்லோர் மனதிலும் தந்திராவாக சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டார். அடுத்து எஸ்.ஜே.சூர்யாவுடன் மாயா இயக்குநர் படத்தில் நடிக்கப்போவதாக செய்தி பார்க்க, சந்தோசமாக இருக்கிறது.

மாலாக்காவை ஷிவதாவிடம் ட்யூசன் அனுப்ப வேண்டும்!
மேலும் வாசிக்க... "இனியாவும் மாலாக்காவும் பின்னே ஷிவதாவும்..."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, April 15, 2017

வெளிநாட்டு வேலைவாய்ப்பு : எங்கே செல்லும் இந்தப் பாதை….அமெரிக்கா ஐ.டி. ஊழியர்களுக்கு விசா தருவதில் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சிங்கப்பூரும் அமெரிக்காவின் பாதையில் நடைபோட ஆரம்பித்துள்ளது. ஏறக்குறைய எல்லா நாடுகளுமே ‘மண்ணின் மைந்தர்’ கோஷத்தை நோக்கி நகர்கின்றன. 

பலரும் இது ஏதோ ஐ.டி.துறையை மட்டுமே பாதிக்கும் விஷயம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஐ.டி.துறையில் மட்டுமல்லாது, எல்லா துறைகளுமே இந்த நகர்வினால் கடும் பாதிப்புக்கு ஆளாகப் போகின்றன. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் எல்லாமே அபாயகரமான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.

அரபு தேசங்களில் அரசு வேலை என்பது நமக்கு எளிதாக கிடைத்துக்கொண்டிருந்தது. கடந்த ஐந்து வருடங்களில் வேறு வழியில்லை என்றால் மட்டுமே வெளிநாட்டவருக்கு அரசுவேலை எனும் நிலை வந்திருக்கிறது. ‘ஏன் வெளிநாட்டவரை எடுக்கிறோம்?’ என்று சம்பந்தப்பட்ட துறை அரசுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அது இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. தனியார் கம்பெனிகளிலும் மண்ணின் மைந்தர்களை வேலையில் அமர்த்தும்போக்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இனி பத்து வருடங்களில் வெளிநாட்டு ஒயிட் கால்ர் ஜாப் என்பது அரிதான விஷயமாக ஆகப் போகிறது.

ஆயில் கண்டுபிடிக்கப்பட்டபோதும் சரி, கணிணித்துறை வளர்ச்சி ஆரம்பிக்கப்பட்டபோதும் சரி, போதுமான பணியாளர்கள் இந்த தேசங்களில் இல்லை. எனவே எல்லா நாடுகளுமே உலகில் உள்ள திறமைசாலிகளை எல்லாம் வரவேற்று, அரவணைத்தன. இப்போது உள்ளூரிலேயே எல்லோரும் படித்து, வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள்.

அரபிகள் தங்கள் குழந்தைகளை ஐரோப்பா/அமெரிக்காவில் படிக்க அனுப்புகிறார்கள். படித்து முடித்து வந்ததும், அவர்களுக்கு வேலை கொடுப்பது அரசாங்கத்தின் கடமை ஆகிறது. எனவே ஒரு வெளிநாட்டு ஆசாமி வேலையை விடுகிறார் என்றால், அந்த வேலையை தனது குடிமக்களுக்கு மாற்றிவிடவே அரசுகள் முனைகின்றன. இதை ஒரு தவறாக யாரும் சொல்ல முடியாது.

ஆனால் இது நம்மை மோசமாக பாதிக்கப்போகிறது என்றே அஞ்சுகிறேன். நமது தலைமுறைவரை, படித்தால் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ வேலை செய்து பிழைத்துவிடலாம் என்பதே நிலை. தற்போது வெளிநாட்டு வேலை இல்லை என்று ஆகும்போது, அத்தனை மனிதவளமும் உள்ளூர் நோக்கித் திரும்பும். அவர்களுக்கு வேலை தருவதற்கான கட்டமைப்பு நம்மிடம் இல்லை.

ஜப்பான், சீனா நோக்கி பயணிக்கலாம் எனும் சிந்தனை விழித்துக்கொண்டோரிடம் வந்திருக்கிறது. ஆனால் எத்தனை நாள் ஓடிக்கொண்டே இருக்க முடியும்?

நமது மத்திய, மாநில அரசுகள் இந்த அபாயத்தை உணர்ந்திருக்கின்றனவா, அதற்கான தொலைநோக்குத் திட்டத்தை வைத்திருக்கின்றனவா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். 

பள்ளி செல்லும் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு இதுபற்றிய விழிப்புணர்வு வரவேண்டியது அவசியம், அவசரம். இனியும் கார்போரேட் அடிமைகளை மட்டும் உற்பத்தி செய்யாமல், சுய தொழில் பற்றிய ஆர்வத்தையும் நம் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டிய நேரம் இது.

இந்தியாவில் அதிக வேலை வாய்ப்பைத் தரும் தொழில், விவசாயம். ஆனால் அதனை அழித்து ஒழிப்பதில் தான் நம் அரசுக்ள் முனைப்பாக இருக்கின்றன. எனவே விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட வேண்டியதாகிறது. பிள்ளைகளை படிக்க வைத்து ‘நீயாவது தப்பிச்சுப் போயிடு’ என்று அனுப்பி வைக்க வேண்டியிருக்கிறது. எனது அப்பாவே என்னை அப்படித்தான் அனுப்பி வைத்தார். ஆனால் இனி போக்கிடம் இல்லை என்று ஆகும்போது, விவசாயம் உள்ளிட்ட வேலைகளை லாபகரமாக ஆக்குவது எப்படி என்று நமது அரசுகள் அக்கறையுடன் யோசிக்க வேண்டிய நேரம் இது.

‘எப்படியாவது கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வச்சிட்டாப் போதும்..பிழைச்சுக்குவாங்க’ என்று நம்பும் அப்பாவி பெற்றோர்கள் கால மாற்றத்தையும் உணர வேண்டிய நேரம் இது. வளர்ந்த நாடுகளைப் போலவே இங்கும் டிகிரி படிப்பு என்பது எல்லோரிடமும் இருக்கும் அடிப்படை விஷயமாக ஆகிவிட்ட காலம் இது.எனவே அடிமைகளை மட்டும் வார்த்தெடுக்காமல், சொந்தக்காலில் நிற்கவும் பிள்ளைகளை பழக்குவோம்.


மேலும் வாசிக்க... "வெளிநாட்டு வேலைவாய்ப்பு : எங்கே செல்லும் இந்தப் பாதை…."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, April 14, 2017

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
*60 தமிழ் வருடங்கள்...*
01. பிரபவ - நற்றோன்றல்
Prabhava1987-1988
02. விபவ - உயர்தோன்றல்
Vibhava 1988–1989
03. சுக்ல - வெள்ளொளி
Sukla 1989–1990
04. பிரமோதூத - பேருவகை
Pramodoota 1990–1991
05. பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்
Prachorpaththi 1991–1992
06. ஆங்கீரச - அயல்முனி
Aangirasa 1992–1993
07. ஸ்ரீமுக - திருமுகம்
Srimukha 1993–1994
08. பவ - தோற்றம்
Bhava 1994–1995
09. யுவ - இளமை
Yuva 1995–1996
10. தாது - மாழை
Dhaatu 1996–1997
11. ஈஸ்வர - ஈச்சுரம்
Eesvara 1997–1998
12. வெகுதானிய - கூலவளம்
Bahudhanya 1998–1999
13. பிரமாதி - முன்மை
Pramathi 1999–2000
14. விக்கிரம - நேர்நிரல்
Vikrama 2000–2001
15. விஷு - விளைபயன்
Vishu 2001–2002
16. சித்திரபானு - ஓவியக்கதிர்
Chitrabaanu 2002–2003
17. சுபானு - நற்கதிர்
Subhaanu 2003–2004
18. தாரண - தாங்கெழில்
Dhaarana 2004–2005
19. பார்த்திப - நிலவரையன்
Paarthiba 2005–2006
20. விய - விரிமாண்பு
Viya 2006–2007
21. சர்வசித்து - முற்றறிவு முழுவெற்றி
Sarvajith 2007–2008
22. சர்வதாரி - முழுநிறைவு
Sarvadhari 2008–2009
23. விரோதி - தீர்பகை
Virodhi 2009–2010
24. விக்ருதி - வளமாற்றம்
Vikruthi 2010–2011
25. கர - செய்நேர்த்தி
Kara 2011–2012
26. நந்தன - நற்குழவி
Nandhana 2012–2013
27. விஜய - உயர்வாகை
Vijaya 2013–2014
28. ஜய - வாகை
Jaya 2014–2015
29. மன்மத - காதன்மை
Manmatha 2015–2016
30. துன்முகி - வெம்முகம்
Dhunmuki 2016–2017
*31. ஹேவிளம்பி - "பொற்றடை"*
*Hevilambi 2017–2018*
*(இவ்வருடம் "பொற்றடை" தமிழ் புத்தாண்டு)*
32. விளம்பி - அட்டி
Vilambi 2018–2019
33. விகாரி - எழில்மாறல்
Vikari 2019–2020
34. சார்வரி - வீறியெழல்
Sarvari 2020–2021
35. பிலவ - கீழறை
Plava 2021–2022
36. சுபகிருது - நற்செய்கை
Subakrith 2022–2023
37. சோபகிருது - மங்கலம்
Sobakrith 2023–2024
38. குரோதி - பகைக்கேடு
Krodhi 2024–2025
39. விசுவாசுவ - உலகநிறைவு
Visuvaasuva 2025–2026
40. பரபாவ - அருட்டோற்றம்
Parabhaava 2026–2027
41. பிலவங்க - நச்சுப்புழை
Plavanga 2027–2028
42. கீலக - பிணைவிரகு
Keelaka 2028–2029
43. சௌமிய - அழகு
Saumya 2029–2030
44. சாதாரண - பொதுநிலை
Sadharana 2030–2031
45. விரோதகிருது - இகல்வீறு
Virodhikrithu 2031–2032
46. பரிதாபி கழிவிரக்கம்
Paridhaabi 2032–2033
47. பிரமாதீச - நற்றலைமை
Pramaadhisa 2033–2034
48. ஆனந்த - பெருமகிழ்ச்சி
Aanandha 2034–2035
49. ராட்சச - பெருமறம்
Rakshasa 2035–2036
50. நள - தாமரை
Nala 2036–2037
51. பிங்கள - பொன்மை
Pingala 2037–2038
52. காளயுக்தி - கருமைவீச்சு
Kalayukthi 2038–2039
53. சித்தார்த்தி - முன்னியமுடிதல்
Siddharthi 2039–2040
54. ரௌத்திரி - அழலி
Raudhri 2040–2041
55. துன்மதி - கொடுமதி
Dunmathi 2041–2042
56. துந்துபி - பேரிகை
Dhundubhi 2042–2043
57. ருத்ரோத்காரி - ஒடுங்கி
Rudhrodhgaari 2043–2044
58. ரக்தாட்சி - செம்மை
Raktakshi 2044–2045
59. குரோதன - எதிரேற்றம்
Krodhana 2045–2046
60. அட்சய - வளங்கலன்
Akshaya 2046–2047
ஆண்டின் தமிழ்ப் பெயர்களை இங்கு வழங்கியுள்ளோம்...
இனி எந்த தங்குத்தடையும் இன்றி, 60 தமிழ் வருடங்களை தமிழ்ப்பெயரோடு தமிழ் புத்தாண்டு வாழ்த்துவோம்...!
நன்றி : Surya Suresh
மேலும் வாசிக்க... "இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, April 10, 2017

சினிமா விமர்சனம் மூன்று நாட்களுக்கு அப்புறம்…..அப்புறம்?


நான் தீவிரமாக இணையத்தில் புழங்கிய காலத்தில் வியாழக்கிழமையே விமர்சனம் போட்டுவிடுவேன். அதற்காக நள்ளிரவில் காத்திருக்கும் பல நண்பர்கள் உண்டு. படம் ரிலீஸ் ஆகும் முன்பே நெகடிவ்வாக போடுவதால், வசூல் பாதிக்கிறது என்று சில சினிமா நண்பர்கள் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து என்னிடம் வருத்தப்பட்டார்கள்.

’மோசமான படத்தை நன்றாக இருக்கிறது என்று சொன்னால் என் நம்பகத்தன்மை போய்விடுமே?’ என்றேன். ‘நல்லா இருந்தால் மட்டும் சொல்லு..இல்லே விமர்சனம் போடாதே’ என்றார்கள். அப்படியென்றால் அதற்குப் பெயர் விமர்சனம் அல்ல, சொம்படித்து வாழ்வது. இந்த பிழைப்பு எதற்கு என்று இப்போதெல்லாம் புதுப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை. மிக நல்ல படம் – மிக மோசமான படக்கள் பற்றி மட்டும் கொஞ்சம் புலம்புகிறேன்.


ஒரு தொழில் செய்பவராக, சினிமா நண்பர்களின் வேண்டுகோள் நியாயமானது தான். ஆனால் விமர்சனத்திற்கும் நியாயம் செய்ய வேண்டும், சினிமாவிற்கும் நல்ல செய்ய வேண்டும் என்றால் சும்மா தான் இருக்க வேண்டும். அதைத் தான் விஷால் இன்று சொலியிருக்கிறார்.

நெருப்புடா ஆடியோ ரிலீஸ் பங்சனில் ‘படம் ரிலீஸான முதல் மூன்று நாட்களுக்கு மீடியா விமர்சனம் எழுத வேண்டாம்’ என்று விஷால் கேட்டுக்கொண்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் அதை ஆமோதித்திருக்கிறார். லாரன்ஸ் இன்னும் ஒருபடி மேலே போய் விமர்சனம் செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொங்கியிருக்கிறார்.

உண்மையில் சினிமா மிக மோசமான நிலையில் தான் இருக்கிறது. முன்பெல்லாம் சினிமா மட்டுமே மக்களின் பொழுதுபோக்காக இருந்தது. டிவியும் இண்டர்நெட்டும் பொழுதுபோக்கை வீட்டுக்குள்ளேயே கொண்டுவந்தபின், தியேட்டருக்கு போவது என்பது அவசியமா எனும் கேள்வி எழுந்து நிலைபெற்று நிற்கும் காலம் இது.

டிக்கெட் விலை, பார்க்கிங் கொள்ளை, கேண்டீன் கொள்ளை என்றெல்லாம் புறக்காரணிகள் இருந்தாலும், நேரம் என்பதும் பலருக்கு முக்கியமான விஷயமாக ஆகிவிட்டது. அரைநாள் செலவழித்து தியேட்டருக்குப் போவதை விட, ஹாயாக வீட்டிலேயே படுத்துக்கொண்டு விரும்பிய நேரத்தில் படம் பார்க்கும் மனநிலை எப்போதோ வந்துவிட்டது. எல்.இ.டி டிவி என்பது சர்வசாதாரணமாக பலரின் வீடுகளிலும் இருக்கிறது.

எனவே தியேட்டருகுப் போக வேண்டும் என்றால் ஒரு வலுவான காரணம் மக்களுக்கு தேவைப்படுகிறது. படம் நன்றாக இருக்கிறது என்று தெரிந்தால் ஒழிய யாரும் வீட்டை விட்டு நகர்வதில்லை. அதையும் இண்டர்நெட் சொல்லிவிடுகிறது. போட்டி நிறைந்த உலகில், முதலில் யார் சொல்வது என்று பெரும் போட்டியே நிகழ்கிறது. வலைத்தளங்கள், யூடியூப் மட்டுமல்லாது விகடன், ஹிந்து போன்ற பெரிய ஊடகங்கள்கூட சுடச்சுட விமர்சனம் போட வேண்டிய நிலை.

ஒரு படத்தின் ஆயுளே இன்று ஏழுநாட்கள் தான். அடுத்த வெள்ளிக்கிழமை வேறுபடம் ரிலீஸ் ஆகிவிடுகிறது. இதில் முதல் மூன்றுநாட்களுக்கு விமர்சனம் செய்யாதே என்றால், திங்கட்கிழமை போடும் விமர்சனம் யாருக்கு உதவும்?

’யாராவது படம் எப்படி இருக்கிறது என்று சொல்லட்டும்..நல்ல ரிசல்ட் வந்தால் தியேட்டருக்குப் போவோம்’ என்பது தான் மக்களின் மனநிலை. ஆனால் ‘விமர்சகர்கள் படம் எப்படி என்று சொல்வதால் தான் மக்கள் வருவதில்லை. இவர்கள் சும்மா இருந்தால் தியேட்டர் நிறைந்துவிடும் ’என்று சினிமாக்காரர்கள் தீவிரமாக நம்புகிறார்கள். நடைமுறை யதார்த்தம் இவர்களுக்கு புரியவில்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த மூன்று நாள் விரதம், இழப்பையே கொண்டுவரும்.

விமர்சனம் என்றால் திட்டுவது மட்டும் தான் என்று முழு கோலிவுட்டும் நம்புகிறார்கள். எத்தனையோ நல்ல படங்களை பாராட்டியிருப்பதை யாரும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை.

பெரிய நடிகர்கள், இயக்குநர்களின் படங்களுக்கு விமர்சனம் தேவையில்லை. எப்படியும் மூன்றுநாள் வசூல் கிடைத்துவிடும். உதாரணமாக காற்று வெளியிடை படம் இங்கே வெள்ளி-சனி இரண்டுநாளுமே ஹவுஸ்ஃபுல்.

ஆனால் சிறுபடங்களின் நிலை? நன்றாக இருக்கிறது என்று சொல்லாமல் யாரும் தியேட்டர் பக்கம் வரமாட்டார்கள். சமீபத்தில் வந்த துருவங்கள் பதினாறு, குற்றம் 23, மாநகரம் எல்லாம் பரவலாக மக்களை அடைந்ததிற்கு உடனடி விமர்சனங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. 

சிறுபடங்கள் பற்றி வெள்ளி-சனி-ஞாயிறு விடுமுறைகளில் பேசாமல் இருந்துவிட்டு, நான்காவது நாள் திங்கட்கிழமை நன்றாக இருக்கிறது என்று சொன்னால் அதைப் பார்க்க தியேட்டரில் படமும், மக்களுக்கு நேரமும் இருக்குமா?

தியேட்டரில் படம் பார்ப்பது என்பது ஆடம்பரமான விஷயமாக ஆகி மாமாங்கம் ஆகிவிட்டது. கமலஹாசனுன் சேரனும் முயன்றது போல் இனி சினிமாவை எப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்வதும், திருட்டு விசிடியை முழுக்க ஒழிப்பதும் தான் உண்மையிலேயே பயன் தரும்.

ஹாலிவுட்டாக இருந்தாலும் சரி, கோலிவுட்டாக இருந்தாலும் சரி..வெளியாகும் படங்களில் 10% முதல் 15% வரை தான் நல்ல படங்களாக இருக்கின்றன. அது தான் நடைமுறை யதார்த்தம். எனவே விமர்சனங்களும் 15% தான் பாசிடிவ்வாக சொல்ல முடியும். மீதி நெகடிவ்வாகத் தான் இருக்கும். ஏன் பெரும்பாலான படத்தை திட்டுகிறாய் என்ற கேள்வியை எல்லா விமர்சகர்களும் சந்தித்துக்கொண்டே தான் இருக்கிறோம். இருப்பதைத் தானே சொல்ல முடியும்?

ஏறக்குறைய ஆறுவருடங்களுக்கு மேல் விமர்சகனாக இருக்கிறேன். குவைத்தில் ஒவ்வொரு வாரமும் முதல்நாளே தியேட்டருக்குப் போய் படம் பார்க்கிறேன். நான் படம் மட்டும் பார்ப்ப்பதில்லை, ஆடியன்ஸின் மனநிலையையும் சேர்த்தே கவனிக்கிறேன். எப்போது தியேட்டர் ஹவுஸ்ஃபுல் ஆகிறது, எப்போது கூட்டம் குறைய ஆரம்பிக்கிறது, எப்போது தியேட்டர் காலி ஆகிறது என்று ஆறு வருடங்களாக கவனித்து வருகிறேன்.
குறிப்பாக நடிகர் கார்த்தியின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் தியேட்டருக்குள் கண்ணாரக் கண்டிருக்கிறேன். 

பருத்தி வீரன் – பையா – நான் மகான் அல்ல என்று தொடர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்தார். மக்களுக்கு அவர் மேல் நம்பிக்கை வந்துவிட்டது. முதல் முன்று நாட்களுமே சிறுத்தைக்கு டிக்கெட் புக் ஆனது. அதுவும் சூப்பர் ஹிட்.

அடுத்த ரஜினி இவர் தான் என்றார்கள். கார்த்தியின் அடுத்த படமாக சகுனி வந்தது. தியேட்டர் ஹவுஸ்ஃபுல் தான். ஆனால் யாருக்கும் படம் திருப்தி தரவில்லை. அதற்கு அடுத்து அலெக்ஸ்பாண்டியன். மக்களுக்கு இன்னும் கார்த்தி மேல் நம்பிக்கை இருந்தது. அலெக்ஸ் பாண்டியனுக்கும் நல்ல ஓப்பனிங். தியேட்டர் ஹவுஸ்ஃபுல். ஆனால் இந்த படமும் தோல்வி. 

அடுத்து வந்தது ஆல் இன் ஆல் அழகுராஜா. பாதி தியேட்டர் தான் ஃபுல் ஆகியிருந்தது. சகுனி-அலெக்ஸ் பாண்டியன் கொடுத்த அனுபவத்தில் பாதி மக்கள் எஸ்கேப். மீதிப்பேரையும் அழகுராஜா வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இன்றுவரை இழந்துவிட்ட அந்த மார்க்கெட்டை மீட்க கார்த்தி போராடிக்கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் கார்த்தி – மணிரத்னம் காம்போவிற்கு தியேட்டர் ஹவுஸ்ஃபுல் ஆகியிருந்தது. அந்த மக்களின் நம்பிக்கையை எப்படி சிதைத்தார்கள் என்பதையும் கண்ணாரக் கண்டேன்!

இப்படித்தான் தற்போதைய சிஸ்டம் இயங்குகிறது. தியேட்டருக்குப் போவது என்று ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது. எல்லோரும் வருவதில்லை. திருட்டு சிடி அல்லது ஆன்லைன் தான். தியேட்டருக்கே போகாத பல குடும்பங்களை நான் அறிவேன். 

தியேட்டருக்கு வரும் மக்களும், நடிகர் அல்லது இயக்குநர் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே முதல்நாள் தியேட்டருக்கு வருகிறார்கள். இல்லையென்றால் யாராவது இந்த படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் மட்டுமே அடுத்த நாள் டிக்கெட் புக் செய்கிறார்கள். ஆன்லைன் விமர்சனமோ அல்லது நண்பர்களின் பரிந்துரை இல்லாமல் காசையும் நேரத்தையும் செலவளிக்க இங்கே யாரும் தயாரில்லை.

ரஜினி – விஜய் –அஜித் – சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி ஆகியோரின் படங்கள் தான் இங்கே முதல் மூன்று நாட்களுக்கு ஹவுஸ்ஃபுல் ஆகின்றன. மீதி எல்லோருக்கும் பிழைப்பு ஓடுவது, விமர்சனங்களை வைத்துத் தான்.
ஊர் வாயை மூட முடியாது. டெக்னாலஜியுடன் போட்டிபோட முடியாது. இப்போது ஊர் வாய் டெக்னாலஜி வளர்ச்சியால் விமர்சனம் என்ற பெயரில் கொதிக்கிறது. இதை எதிர்த்து அடக்க முடியாது. 

எனவே மக்கள் விழிப்பதற்குள் அதிக தியேட்டரில் ரிலீஸ் செய்து சுருட்டிவிடுவோம் என்ற செயல்திட்டம் போன்றே, வீட்டுக்குள்ளும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சினிமாவைக் கொண்டு சேர்ப்பது தான் இதற்கு இருக்கும் ஒரே வழி. மேலும் விளக்கத்திற்கு கமலஹாசனை விஷால் அணுகலாம்.
மேலும் வாசிக்க... "சினிமா விமர்சனம் மூன்று நாட்களுக்கு அப்புறம்…..அப்புறம்?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.