Saturday, December 2, 2017

தேவர் மகன் - தமிழில் ஒரு உலக சினிமா (பாகம்-2)



பரமக்குடி மண்ணின் மைந்தனான கமலஹாசனுக்கு தேவர் சாதி பற்றி அதிகளவு பரிச்சயம் உண்டு. கமலஹாசனின் அப்பா வக்கீலாக இருந்தவர். தேவர்சாதியினர் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்காக வாதாடிவர். ‘அய்யர் இருக்காரு..வெட்டுங்கடா..பார்த்துக்கலாம்என்று அவர்கள் துணிந்து வெட்டுகுத்தில் இறங்கிய சம்பவங்களை கமலஹாசனே பேட்டியில் சொல்லியிருக்கிறார். எனவே ஜனநாயகத்திற்கும் பழமைவாததிற்குமான போராட்டக்கதைக்கு, தேவர்சாதியை எடுத்துக்கொள்வது கமலுக்கு எளிதாக இருந்தது.


ஒரு எளிய கிராமத்தில் நடக்கும் சம்பவங்களாக கதையை அமைத்தார். தூவலூர் கிராமத்தில் வாழும் அண்ணன் தம்பிகளான இரு தேவர்களின் குடும்பத்திற்கிடையே பகை. அதன்காரணமாக ஊரே இரு பிரிவாகப் பிரிந்து அடித்துக்கொள்கிறது. பெரிய தேவருக்கு தன்னை நம்பி இருக்கும் மக்களுக்கு நல்லது செய்து, அவர்களை உயர்த்திவிட வேண்டும் என்று ஆசை. வெளிநாட்டில் படித்துவிட்டுத் திரும்பும் தன் மகன் சக்திவேல் அதைச் செய்வான் என்று நம்புகிறார். ஆனால் சக்திவேலுக்கோ சிட்டியில் ரெஸ்டாரண்ட் பிஸினஸ் செய்யத்தான் ஆசை. சின்னத் தேவரின் மகனான மாயத் தேவன், நிலபிரபுத்துவ மனநிலையில் ஊறியவன். காட்டுமிராண்டித்தனத்தை வீரமாக நினைத்துக்கொண்டிருப்பவன். திடீரென பெரிய தேவர் மரணமடைய, சக்திவேல் அப்பாவின் இடத்தில் உட்கார வேண்டிய சூழ்நிலை. பழமையில் ஊறிய மாயத்தேவனுக்கும், நவீன சிந்தனை கொண்ட சக்திவேலுக்கும் நேரடி மோதல் துவங்குகிறது. இந்த இரண்டு சிந்தனைகளில் எது வென்றது என்பதே கதை.

சக்திவேல் படித்து முடித்து, தன் காதலியுடன் ஊருக்கு வருகின்ற காட்சியுடன் படம் துவங்கிறது. மிகவும் கொண்டாட்டமான மனநிலையுடன் தெருவில் ஆடுபவனாக, அந்த மண்ணின் இயல்பற்ற சந்தோசமான இளைஞனாக சக்திவேல் கேரக்டர் அறிமுகப்படுத்தப்படுகிறது. தன் காதலுக்கு அப்பாவின் சம்மதம் பெறுவதும், காதலியின் அப்பாவுடன் சேர்ந்து ரெஸ்டாரண்ட் பிஸினஸ் ஆரம்பிப்பதையும் தவிர, அவன் மனதில் வேறு எண்ணங்கள் ஏதும் இல்லை. ஆனால் அந்த ஊரின் நிலையின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்குப் புரிகிறது

கோவில் பூட்டை உடைத்ததற்காக இசக்கியின் கை வெட்டப்படுவது, பதிலுக்கு எதிர்தரப்பின் குடிசைகள் கொளுத்தப்படுவது என வன்முறையை மிக இயல்பாக கையில் எடுக்கும் தன் இனத்தின் முரட்டுத்தனம், அவன் முகத்தில் அறைகிறது. நவீன கல்வி அவனுக்கு கற்றுக்கொடுத்திருக்கும் நாகரீகத்திற்கும், அந்த மக்களின் வாழ்வுமுறைக்கும் உள்ள வேறுபாட்டை அவன் உணர்கிறான். கொண்டாட்டமான மனிதன் என்பதில் இருந்து வாழ்வின் கசப்பை உணர்ந்தவனாக சக்திவேல் மாறுவதை, மிகத் தெளிவான திரைக்கதையுடன் காட்டுகிறார் கமலஹாசன். கொஞ்சமும் பிசிறு தட்டாத, நீட்டான திரைக்கதைகளுள் ஒன்றாக இதைச் சொல்லலாம். அதுவே பார்வையாளனை சக்திவேலாக உணரச் செய்கிறது. அதுவே இது படமல்ல, ஒரு கிராமத்து வாழ்க்கையைப் பார்க்கிறோம் என்ற உணர்வை கொடுத்துவிடுகிறது.

200 ஆண்டுகள் பின் தங்கிய மனநிலை கொண்டவர்கள் என்பதை காட்சிகளின் மூலமாகவும், ‘போலீஸ்.கோர்ட்டுன்னு போனா நியாயம் கிடைக்காதுய்யா..ஒன்னு பஞ்சாயத்து இல்லை வீச்சருவாபோன்ற வசனங்களின் மூலமாகவும் சொல்லிவிடுகிறார் கமல். பெரிய தேவரின் மறைவுக்குப்பின் தன் பொறுப்பை உணர்ந்து, தலைமைப் பொறுப்பை ஏற்பதும், மாயத்தேவர் தன்னை கீழே இழுக்க முயலும்போதெல்லாம், கற்ற கல்விக்கு தக்கப்படி நிற்கப் போராடுவதும் ஒரு விறுவிறுப்பை படத்திற்குக் கொடுத்துவிடுகிறது.

நடிகர் திலகத்தின் நடிப்பில் ஒரு மைல் கல் என்று இந்த படத்தைச் சொல்லலாம். நாடகத்தனமான ஆரம்பகட்ட சினிமாவில் நடித்தவர்கள், யதார்த்த சினிமாக் காலகட்டத்திற்கு வரும்போது ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிவிடுவார்கள். ஆனால் ஓவர் ஆக்ட்டிங் ஆனாலும் அண்டர்ப்ளே ஆனாலும், அசராமல் நின்று விளையாடியவர் நடிகர் திலகம். இந்தப் படத்தில் அவர் நடித்தார் என்று சொல்வதைவிட, வாழ்ந்தார் என்றே சொல்லலாம்.

தமிழ் சினிமாவின் சிறந்த காட்சிகள் என்று ஒரு பட்டியலிட்டால், சிவாஜியும் கமலும் பேசிக்கொள்ளும்பெருமையா..கடமைகாட்சி கண்டிப்பாக இடம்பெறும். இரு மாபெரும் நடிப்பு மேதைகளின் சங்கமம் அந்தக் காட்சி. சினிமா ரசிகர்களுக்கு அந்த காட்சி கிடைத்ததே ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் மையக்கருத்து தெளிவாக வெளிப்படும் அதே நேரத்தில், உணர்ச்சிமயமான நடிப்பால் இருவரும் நம்மை கலங்கடித்துவிடுவார்கள். முதல் தலைமுறை பட்டதாரிகள் அனைவருக்குமே ஒரு நிமிடம், தன் தந்தை ஞாபகம் வந்து செல்லும் அளவிற்கு, அந்த காட்சியில் உண்மை இருக்கும். மழைப்பிண்ணனி, சிவாஜி முன் கமல் மண்டியிட்டு உட்காரும் பெஃபெக்ட் காம்போசிசன் என பி.சி.ஸ்ரீராமும் கமலும் இழைத்து இழைத்து, அந்த காட்சியை நெய்திருப்பார்கள். ஜெயமோகன் எழுதியயாருடைய ரத்தம்என்ற பதிவு ஒன்று உண்டு. அதன் சாராம்சத்தை அப்போதே அந்த காட்சி வசனத்தில் பேசியிருப்பார்கள். ‘2000 வருசமா வெட்டருவாளும் வேல்கம்பையும் தூக்கிட்டுத் திரிஞ்ச பயக..விஞ்சானம் படிக்க வான்னா எப்படி வருவான்..நீ படிச்சவனாச்சே, கூட்டிட்டுப் போஎனும் வசனம் தான் படத்தின் கரு. அதை பார்வையாளனின் மனதில் ஆழப்பதிய வைத்துவிடும் அந்தக் காட்சி.

குறும்புத்தனம் நிறைந்த இளைஞனாக அறிமுகம் ஆகும் கமலஹாசன், கொஞ்சம் கொஞ்சமாக முகத்தில் முதிர்ச்சியைக்கூட்டிக்கொண்டு செல்வார். சிவாஜி இறந்ததும், கெட்டப்பை மாற்றி வந்து நிற்கும்போது, நமக்கு புல்லரித்துவிடும். அப்போது இளையராஜா கொடுக்கும்போற்றிப் பாடடிபிஜிஎம், காட்சியை உச்சத்திற்கே கொண்டு சென்றுவிடும். தண்ணீரில் மூழ்கி இறந்த குழந்தையை தூக்கும் காட்சியிலும் இறுதிக்காட்சியில்இந்த பாவம் என்னை சும்மா விடாதுடாஎன்று அழுது அரற்றியபடியே போகும்போதும் கமல் நடிப்பில் மிரட்டி இருப்பார்

தமிழ்த் திரையுலகில் அதிகளவு எதிர்ப்புகளை எதிர்கொண்டவர் என்று கமலஹாசனைச் சொல்லலாம். இந்து மத விரோதி, இஸ்லாமிய விரோதி, பிராமணீயத்தை தூக்கிப் பிடிப்பவர், முதலாளித்துவ அடிவருடி என்று பாரபட்சமில்லாமல் எல்லாத்தரப்பு எதிர்ப்பையும் சம்பாதித்து வைத்திருப்பவர். அவருடைய நேர்மையை எப்போதும் ஏதாவது ஒரு தரப்பிடம் அவர் நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதுபோல், கமலின் அப்பா ஒரு வக்கீலாக தேவர்சாதிச் சண்டைகளில் ஆஜரானவர். அதன் பாதிப்பில், ஒரு வக்கீல் கேரக்டரும் இந்த படத்தில் வரும். பிராமண வக்கீலாக மதன்பாப் அந்த கேரக்டரைச் செய்திருப்பார். சொந்த சாதி, அதிலும் தந்தையின் தாக்கத்தில் உருவான அந்த கேரக்டரை கமல், சகுனித்தனமான கேரக்டராக வடிவமைத்திருக்கும் பாங்கிலேயே, அவரின் நேர்மையை நாம் அறிந்து கொள்ளலாம். யாரோ ஒருவன் தப்பு செய்துவிட்டால் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதும், சொந்த சாதி/மதத்துக்காரனோ, கொள்கை/கட்சிக்காரனோ அதே தப்பைச் செய்தால் மூடிக்கொண்டிருக்கும் முற்போக்கு போலிக்கூட்டங்களுக்கு மத்தியில், படைப்புக்கு நேர்மையாக இருந்த உண்மையான கலைஞன் கமலஹாசன்.

பானுமதியாக வரும் கௌதமியின் நடிப்பையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நாம் அறிந்தவரை, அவர் அதற்கு முன் எந்த படத்திலும்நடித்ததேஇல்லை எனலாம். டூயட்டுக்கு ஆடியே காலத்தைக் கழித்த நடிகை. இதில் அவ்வளவு யதார்த்தமான நடிப்பு. ரேவதி போன்ற திறமைமிக்க நடிகையைவே, இதில் அவர் மிஞ்சியிருப்பார். ‘ஒய் சக்தி..ஒய்என்று அழும் காட்சியும், கடைசியாக முத்தம் கொடுத்துவிட்டுகோ மேன்என்று சொல்லும் காட்சியும் மட்டுமே கௌதமியின் திரைவாழ்க்கைக்குப் போதுமானது. ஆரவாரமாக அறிமுகமாகும் முதல் காட்சியில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் அவரை வர வைத்திருப்பார்கள். இரண்டாவது முறை வரும் காட்சியில், அடுத்து அவர் எதிர்கொள்ளப்போகும் அதிர்ச்சியை உத்தேசித்து சேலையில் பாந்தமாக வர வைத்திருப்பார்கள். காஸ்ட்யூம் டிசைன் என்பது காட்சியின் இயல்புக்கு எப்படி ஒத்திருக்க வேண்டும் என்பதற்கு அது ஒரு நல்ல உதாரணம்.

ரேவதி போன்ற நடிகைக்கு இந்த மாதிரி வெகுளிக்கேரக்டர் எல்லாம் தூசி மாதிரி. அட்டகாசமாகச் செய்திருப்பார். ‘நான் தான் சாரி..என்னால தான் சாரிஎன்று பேசும் காட்சியும், கௌதமியிடம் தனியாக பேசும் காட்சியும் அவரது நடிப்புக்குச் சான்று. படத்தின் முக்கியமான கேரக்டராக நாசர். நீண்ட மூக்கும், இறுகிய முகபாவமுமாக வன்முறை வெறி பிடித்த கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு. தேவர்சாதியின் இன்னொரு முகத்தை தெளிவாகத் தன் நடிப்பில் கொண்டுவந்திருப்பார்

தேவர் மகன் படத்திற்கு இருபெரும் தூண்களாக இளையராஜாவின் இசையையும் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவையும் சொல்லலாம். போற்றிப் பாடடி பெண்ணே பாடல், அந்த சாதியின் தேசிய கீதமாக ஆகிப்போனது மட்டுமில்லாமல், 90களில் நடந்த ஜாதிக்கலவரத்திலும் முக்கியப்பங்காற்றியது. அந்த பாடலும், அதை உருவாக்கியவர்களின் சாதி முரணும், அது சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கமும் தனி ஆய்வுக்குரியது. சினிமாப் பாடல்களில் வேறு எதற்கும் இந்த சிறப்பு(??) கிடையாது. படத்தின் பிண்ணனி இசையிலும் கலக்கியிருப்பார் இளையராஜா. ரேவதியின் செண்ட்டிமெண்ட் காட்சிகளில் அவர் போட்டிருக்கும்மாசறு பெண்ணேஇசையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்

ஒரு குறிப்பிட்ட சாதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம், அனைத்துத் தரப்பினரின் ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது. அதற்குக் காரணம், இந்தப் படத்தின் மையக்கரு. தேவர்சாதி வன்முறையில் உறைந்தது போலவே, பெருந்தலைவர் காமராசர் கல்விக்கண்ணைத் திறந்து வைக்கும்வரை பிறசாதிகளும் தங்களது குலத்தொழிலில் உறைந்தே கிடந்தன. கல்வி என்பது மறுக்கப்பட்ட, எட்டாத விஷயமாகவே இருந்து வந்தது. அதன்பின் வந்தது தமிழகத்தின் மறுமலர்ச்சிக்காலம் எனலாம். படிப்பு மட்டுமே தன் சந்ததியை முன்னேற்றும் என்று பலரும் கண்டுகொண்டார்கள். எல்லா சாதியிலும், குடும்பத்திலும் படிப்பு கட்டாயமாக்கப்பட்டது. பல குழந்தைகளுக்கும் கல்வி, கட்டாய வன்முறை மூலமாகவே ஊட்டப்பட்டது. அதற்கு சமூகக் காரணமும் இருந்தது

அந்த கல்வி எல்லா சமூகத்திலும் ஒரு தரப்பை மேலே கொண்டுவந்தது. அதன்பின் படித்த பெரும்பாலானோர்க்கு வெளியுலகம் புரிந்தது. சாதிய கோட்பாடுகளுக்கு, நாகரீக உலகில் இடமில்லை என்பதும் புரிந்தது. இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் சாதிக்கட்டு என்பது வெறும் மாயமான் தான் என்பதை கல்வி உணர வைத்தது. எல்லா சாதிக்கோட்பாடுகளும், சம்பிரதாயங்களும் பொதுவெளியில் விவாதத்திற்கு உள்ளாகின. ஆண்டான் - அடிமை காலம் முடிந்ததை கற்றோர் உணர்ந்தார்கள். காந்தியம், பெரியாரியம் போன்ற எல்லா இசங்களுமே சாதியமைப்பின் அபத்தத்தை எல்லா மட்டத்திற்கும் கொண்டுசென்றன

அப்போது எல்லா சாதியிலும் கற்றவருக்கும், கல்வியில்லாமல் பின் தங்கிவிட்டவர்களுக்கும் இடையே சிந்தனையளவில் பெரும் இடைவெளி ஏற்பட்டது. அந்த இடைவெளி பற்றிப் பேசியதாலேயே, எல்லாராலும் தேவர் மகனுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ள முடிந்தது. சாதி என்பது தொழில்முறை அடுக்கு மட்டுமே அல்ல, அது வம்சத்தின் நீட்சி. படித்து முடித்ததும், தனக்கு கீழே இருக்கும் வம்சத்துடன் உறவை அறுத்துகொண்டு, தன்னைப்போலவே படித்த தன்சாதி ஆட்களுடன் ஐக்கியமானோர் உண்டு. தன்னைப் போலவே, சொந்த பந்தங்களும் கல்வி எனும் ஏணியைப் பற்றி மேலே வரவேண்டும் என்று நினைத்தவர்களும் உண்டு. அதற்குக் காரணம், இன்னும் கீழே இருக்கும் பிறரை கைவிட்டுவிடக் கூடாது எனும் கருணையே

தேவர் மகன் படம் அந்த கருணையின் கதை. ‘பிள்ளைகுட்டிங்களைப் படிக்க வைங்கடாஎனும் கமலின் கடைசிக்காட்சிக் கதறல், அந்த கருணையின் வெளிப்பாடு. அதனால்தான் ஈர மனதுள்ள அனைவரின் நெஞ்சிலும், இந்த தேவர் மகன் தனி இடம் பெற்றது. இந்த உலகசினிமா தொடரிலும் சிறப்பான இடத்தினைப் பெறுகிறது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.