Tuesday, August 1, 2017

வேலாயுதம் - திரை விமர்சனம் அல்ல சாமியோவ்...

லகத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா கொடுப்பேன், தொழில்நுட்பரீதியாக தமிழ்சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்துவேன், நடிப்பில் புதிய பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வேன் - என்றெல்லாம் விஜய் எப்போதாவது எங்காவது சொல்லியிருக்கிறாரா?

தீபாவளிக்காக 4 நாள் லீவில் போய்விட்டு வந்தால், வேலாயுதத்தை வைத்து  நடந்திருக்கும் ரணகளத்தைப் பார்க்கவும் அப்படி ஒரு சந்தேகமே வந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் படம் வந்தாலும் சரி, அஜித் - விஜய் படங்கள் வந்தாலும் சரி, இப்படி ஒரு ஆரவாரம் எழும்புவது வழக்கமாப் போய்விட்டது.
என்னைப் பொறுத்தவரை சுப்பிரமணியபுரம், ஆரண்ய காண்டம், எங்கேயும் எப்போதும் போன்ற படங்களுக்கான அளவிகோல் வேறு, இந்த மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கான அளவுகோல் வேறு. இரண்டரை மணி நேரம் ஜாலியாக பொழுதுபோக வேண்டும், காதில் சுற்றப்படும் பூவின் அளவு முடிந்தவரை கம்மியாக இருக்க வேண்டும், அவ்வளவு தான்.

பலரும் ரஜினி-அஜித்-விஜய் படங்களுக்கு முன்முடிவுகளுடன் விமர்சனம் எழுதுவது போன்றே தெரிகின்றது. நல்லவேளையாக 4 நால் லீவில் வேலாயுதம்-ஏழாம் அறிவு இரண்டையும் இணையப் பாதிப்பு இல்லாமல் பார்த்து விட்டேன். (சில நண்பர்கள் நேர்மையாக விமர்சனம் எழுதி உள்ளதும் தெரிகிறது..)

வேலாயுதம் படத்தின் கதை என்ன, நடிகர்கள்/டெக்னிசியன்கள் யார் என்பது பற்றி இந்நேரம் உங்களுக்கு மனப்பாடமே ஆகியிருக்கும். எனவே அதை விடுத்து..

இயக்குநர் ’ரீமேக்’ ராஜா என்ற ஜெயம் ராஜாவின் ஸ்பெஷாலிட்டியே தமிழ் ரசனைக்கு ஏற்றாற்போல், படத்தை மாற்றிவிடுவது தான். இதிலும் அதையே செய்திருக்கிறார். அதுவும் முதல் பாதி காமெடிக் கலக்கல். இந்தப் படத்தைப் பார்த்து ஒரு காட்சியில்கூட நீங்கள் சிரிக்கவில்லையென்றால், உங்களுக்கு பி.வி.நரசிம்மராவ் விருது கொடுக்கலாம். 

பொதுவாக அண்ணன் தங்கை பாசம் என்றால் மனதைப் பிழியும் செண்டிமெண்ட் காட்சிகள் தான் இருக்கும். இதிலோ ஏறக்குறைய முக்கால்மணி நேரத்திற்கு ஜாலி லூட்டி தான். கில்லியில் தங்கையுடன் சண்டை போடுவதில் காமெடி செய்த விஜய், இதில் பாசத்தைப் பொழிவதில் காமெடி செய்கிறார். அதுவும் ட்ரெய்னில் பிச்சைக்காரனுக்கு சோறு போடும் காட்சியில் சிரித்துச் சிரித்து வயிறே வலித்து விட்டது.
இரண்டாம் பாதியில் தான் அண்ணன் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கிறார். ஆனால் அதை முழுதாக ரசிக்க விடாமல் கடைசி வரை நம்மை பயத்திலேயே வைத்திருப்பது விஜய்யின் குருவி-சுறா போன்ற முந்தைய படங்கள் தான். இந்தப் படத்தின் கதையே சூப்பர் ஹீரோ கதை என்பதால், ஒரே அடியில் தளபதி 10 பேரை அடித்தாலும் நாம் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

படத்தின் காமெடியில் மீதியை சந்தானம் பார்த்துக்கொள்கிறார். எப்போதும் ஜெயம் ராஜா-சந்தானம் கூட்டணி கலக்கும். இதிலும் திருடர் ஆக முயலும் கேரக்டரில் சிரிக்க வைக்கிறார்.

’குழந்தைத் தொழிலாளர்’ சரண்யா மோகனுக்கும் படத்தில் முக்கியமான வேடம். கல்யாண நாளில் கிஃப்ட் பார்சலை எடுத்துக்கொண்டு ஓடும் சீன் செம பரபர. பொம்மரில்லுவில் ஃப்ரெஷ் ஆக இருந்த ஜெனிலியா இதில் முத்திப் போய் வருகிறார்.(உனக்கு அப்படித் தான் தெரியும்..) ஆனால் நடிப்பில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிடுவது இவர் தான்.

அடுத்து வருவது 

ஹன்சிகா அவர்கள். 

தலைவி நடிப்பைத் தவிர எல்லாத்தையும் இந்தப் படத்தில் காட்டுகிறார். அந்த கிராமப் பெண் கேரக்டருக்கும் அவர் சுத்தமாகப் பொருந்தவில்லை என்பதையும் நாம் வருத்தத்தோடு ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். சிவபெருமான் (அல்லது சிவாஜி?) போல் ’நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே’ என்று தலைவியும் பாடலாம். 

படத்தில் ரசிக்கும்படி அமைந்த இன்னொரு விஷயம் அந்த ரயில் ஃபைட் சீன் அட்டகாசம். ஃபைட் சீன்களில் விஜய் இவ்வளவு ரிஸ்க் எடுப்பது இது தான் முதல் முறை என்று நினைக்கின்றேன்.

தெலுங்கு ஆசாமிகள் போன்ற வில்லன் ஆட்கள் தான் படத்தின் பெரிய குறை. அதுவும் இப்படி ஒரு உள்துறை அமைச்சரை தெலுங்குப் படத்தில் தான் பார்க்க முடியும்.

படத்தைப் பற்றி மொத்தமாகச் சொல்வதென்றால் வேல்+ஆயுதம் என்று பிரித்துக்கொள்ளலாம். முன்பாதி ’வேல்’ எப்போதும் போல் எல்லோருக்கும் நன்மையே செய்கிறது. இரண்டாம் பாதி ஆயுதம் விஜய் ரசிகர்களுக்காக செய்யப்பட்டது. ஒருவேளை உங்களுக்கும் பிடிக்கலாம்.

மேலும் வாசிக்க... "வேலாயுதம் - திரை விமர்சனம் அல்ல சாமியோவ்..."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

89 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.