Showing posts with label பொறியியல். Show all posts
Showing posts with label பொறியியல். Show all posts

Saturday, April 15, 2017

வெளிநாட்டு வேலைவாய்ப்பு : எங்கே செல்லும் இந்தப் பாதை….



அமெரிக்கா ஐ.டி. ஊழியர்களுக்கு விசா தருவதில் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சிங்கப்பூரும் அமெரிக்காவின் பாதையில் நடைபோட ஆரம்பித்துள்ளது. ஏறக்குறைய எல்லா நாடுகளுமே ‘மண்ணின் மைந்தர்’ கோஷத்தை நோக்கி நகர்கின்றன. 

பலரும் இது ஏதோ ஐ.டி.துறையை மட்டுமே பாதிக்கும் விஷயம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஐ.டி.துறையில் மட்டுமல்லாது, எல்லா துறைகளுமே இந்த நகர்வினால் கடும் பாதிப்புக்கு ஆளாகப் போகின்றன. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் எல்லாமே அபாயகரமான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.

அரபு தேசங்களில் அரசு வேலை என்பது நமக்கு எளிதாக கிடைத்துக்கொண்டிருந்தது. கடந்த ஐந்து வருடங்களில் வேறு வழியில்லை என்றால் மட்டுமே வெளிநாட்டவருக்கு அரசுவேலை எனும் நிலை வந்திருக்கிறது. ‘ஏன் வெளிநாட்டவரை எடுக்கிறோம்?’ என்று சம்பந்தப்பட்ட துறை அரசுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அது இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. தனியார் கம்பெனிகளிலும் மண்ணின் மைந்தர்களை வேலையில் அமர்த்தும்போக்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இனி பத்து வருடங்களில் வெளிநாட்டு ஒயிட் கால்ர் ஜாப் என்பது அரிதான விஷயமாக ஆகப் போகிறது.

ஆயில் கண்டுபிடிக்கப்பட்டபோதும் சரி, கணிணித்துறை வளர்ச்சி ஆரம்பிக்கப்பட்டபோதும் சரி, போதுமான பணியாளர்கள் இந்த தேசங்களில் இல்லை. எனவே எல்லா நாடுகளுமே உலகில் உள்ள திறமைசாலிகளை எல்லாம் வரவேற்று, அரவணைத்தன. இப்போது உள்ளூரிலேயே எல்லோரும் படித்து, வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள்.

அரபிகள் தங்கள் குழந்தைகளை ஐரோப்பா/அமெரிக்காவில் படிக்க அனுப்புகிறார்கள். படித்து முடித்து வந்ததும், அவர்களுக்கு வேலை கொடுப்பது அரசாங்கத்தின் கடமை ஆகிறது. எனவே ஒரு வெளிநாட்டு ஆசாமி வேலையை விடுகிறார் என்றால், அந்த வேலையை தனது குடிமக்களுக்கு மாற்றிவிடவே அரசுகள் முனைகின்றன. இதை ஒரு தவறாக யாரும் சொல்ல முடியாது.

ஆனால் இது நம்மை மோசமாக பாதிக்கப்போகிறது என்றே அஞ்சுகிறேன். நமது தலைமுறைவரை, படித்தால் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ வேலை செய்து பிழைத்துவிடலாம் என்பதே நிலை. தற்போது வெளிநாட்டு வேலை இல்லை என்று ஆகும்போது, அத்தனை மனிதவளமும் உள்ளூர் நோக்கித் திரும்பும். அவர்களுக்கு வேலை தருவதற்கான கட்டமைப்பு நம்மிடம் இல்லை.

ஜப்பான், சீனா நோக்கி பயணிக்கலாம் எனும் சிந்தனை விழித்துக்கொண்டோரிடம் வந்திருக்கிறது. ஆனால் எத்தனை நாள் ஓடிக்கொண்டே இருக்க முடியும்?

நமது மத்திய, மாநில அரசுகள் இந்த அபாயத்தை உணர்ந்திருக்கின்றனவா, அதற்கான தொலைநோக்குத் திட்டத்தை வைத்திருக்கின்றனவா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். 

பள்ளி செல்லும் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு இதுபற்றிய விழிப்புணர்வு வரவேண்டியது அவசியம், அவசரம். இனியும் கார்போரேட் அடிமைகளை மட்டும் உற்பத்தி செய்யாமல், சுய தொழில் பற்றிய ஆர்வத்தையும் நம் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டிய நேரம் இது.

இந்தியாவில் அதிக வேலை வாய்ப்பைத் தரும் தொழில், விவசாயம். ஆனால் அதனை அழித்து ஒழிப்பதில் தான் நம் அரசுக்ள் முனைப்பாக இருக்கின்றன. எனவே விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட வேண்டியதாகிறது. பிள்ளைகளை படிக்க வைத்து ‘நீயாவது தப்பிச்சுப் போயிடு’ என்று அனுப்பி வைக்க வேண்டியிருக்கிறது. எனது அப்பாவே என்னை அப்படித்தான் அனுப்பி வைத்தார். ஆனால் இனி போக்கிடம் இல்லை என்று ஆகும்போது, விவசாயம் உள்ளிட்ட வேலைகளை லாபகரமாக ஆக்குவது எப்படி என்று நமது அரசுகள் அக்கறையுடன் யோசிக்க வேண்டிய நேரம் இது.

‘எப்படியாவது கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வச்சிட்டாப் போதும்..பிழைச்சுக்குவாங்க’ என்று நம்பும் அப்பாவி பெற்றோர்கள் கால மாற்றத்தையும் உணர வேண்டிய நேரம் இது. வளர்ந்த நாடுகளைப் போலவே இங்கும் டிகிரி படிப்பு என்பது எல்லோரிடமும் இருக்கும் அடிப்படை விஷயமாக ஆகிவிட்ட காலம் இது.எனவே அடிமைகளை மட்டும் வார்த்தெடுக்காமல், சொந்தக்காலில் நிற்கவும் பிள்ளைகளை பழக்குவோம்.


மேலும் வாசிக்க... "வெளிநாட்டு வேலைவாய்ப்பு : எங்கே செல்லும் இந்தப் பாதை…."

Tuesday, February 24, 2015

இனிமேல்....படித்தால் மட்டும் போதுமா?

குலத்தொழிலை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது, நம் சமூகம். நாட்டில் நாகரீகம் மலர, மலர தொழிலும் கல்வியும் ஜனநாயகமாக்கப்பட்டன. அப்போது கல்வி என்பதையே கட்டாயமாகப் புகுத்த வேண்டிய அவலநிலை நம் நாட்டில் இருந்தது. ஏறக்குறைய 25 ஆண்டுகளாக நமது அரசாங்கம் கல்வி பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது. பள்ளி ஆசிரியர்களும் அக்கறையுடன் கல்வியை வலுக்கட்டாயமாகத் திணித்தார்கள். (ஸ்கூல் போலீஸ் பற்றி இங்கே சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.)

ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. ஒரு கூலித் தொழிலாளிகூட தன் பிள்ளையை ப்ரைவேட் ஸ்கூலில் படிக்க வைக்கிறார். ஸ்கூல் வேன்களில் பிள்ளைகள் பயணிப்பது, கிராமங்களில்கூட காணக்கிடைக்கும் காட்சியாகிவிட்டது. இது ஆரோக்கியமான, வரவேற்கத்தக்க விஷயம். கூடவே இதுவொரு சிக்கலையும் கொண்டு வந்துள்ளது.
கல்வியைப் பரவலாக்க உழைத்த அளவிற்கு, நம் அரசாங்கங்கள் வேலைவாய்ப்பில் அதற்கு இணையாக உயர்த்த உழைத்தார்களா என்றால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வருடமும் எத்தனை பேர் படித்து வெளியே வருவார்கள், அப்போது அவர்களுக்கு எத்தனை வேலை வாய்ப்புகள் காத்திருக்கும்?' என்பது பற்றியெல்லாம் இங்கே யாருக்கும் எப்போதும் பெரிய தொலைநோக்குப் பார்வை இல்லை.


முந்தைய தலைமுறைக்கு கல்வி பெரும் வரப்பிரசாதமாக இருந்தது. படித்தாலே போதும், ஏதாவது ஒரு வேலைக்குப் போய்விடலாம் எனும் வாய்ப்பு இருந்தது. காரணம், படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் இப்போது எல்லாருமே படித்தவர்கள் என்று ஆகும்போது, டிகிரி சர்ட்டிஃபிகேட் மட்டுமே வேலை கேட்பதற்கான தகுதி என்பது போய்விட்டது.

இதற்கு சமீப காலத்தில் நாம் பார்த்த ஐ.டி. வேலை வாய்ப்பினை உதாரணமாகச் சொல்லலாம். 1990களில் ஐ.டி.நிறுவனங்கள் வந்தபோது, இங்கே போதுமான ஐ.டி.வல்லுநர்கள் இல்லை. எனவே ஏதாவது ஒரு டிகிரி படித்திருந்து, கூடவே ஒரு ஐ.டி.கோர்ஸ் படித்த சர்ட்டிஃபிகேட் இருந்தாலே வேலை கிடைத்தது. இஞ்சினியரிங்கில் ஐ.டி.படித்தவர்களுக்கு மட்டுமல்லாது, மெக்கானிக்கல், சிவில் படித்திருந்தாலும் கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலைகிடைக்கும் காலம் இருந்தது.

ஆனால் எவ்வித தொலைநோக்குமின்றி, கன்னாபின்னாவென்று பொறியியல் கல்லூரிகளை ஆரம்பித்தார்கள். விளைவு, இன்றைக்கு ஐ.டி.படித்த 12 பேரில் ஒருவருக்கே வேலை கிடைப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது.அப்படியென்றால், மெக்கானிக்கல் போன்ற வேறு பிராஞ்சில் படித்த பொறியியல் மாணவர்களுக்கோ, ஆர்ட்ஸ் காலேஜில் படித்த வேறு மாணவர்களுக்கோ இனி அங்கே (பெரும்பாலும்) இடம் இல்லை.

இந்த ஐ.டி.சூழ்நிலை எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.  வேலை வாய்ப்புச் சந்தையில் சப்ளை அதிகமாகி விட்டது, டிமாண்ட் குறைந்துவிட்டது. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது தான் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். இதைத் தனி மனிதனாக எப்படி எதிர்கொள்ளலாம் என்று யோசித்தால்....

1.மேற்படிப்பு:
1970-80களில் டிப்ளமோ படிப்பு என்பது வேலைவாய்ப்பை அள்ளித்தரும் விஷயமாக இருந்தது. பொறியியல் கல்லூரிகள் வந்ததும், எஞ்னியரிங் டிகிரி அந்த இடத்தைப் பிடித்தது. இப்போது பி. இ. மலிந்துவிட்டநிலையில், இதற்கு அடுத்த இடம் நோக்கி நாம் நகரலாம். நமது எம்.இ-ஐ விட அமெரிக்க எம்.எஸ் இன்னும் மதிப்புடன் இருக்கிறது.

2. புதிய அலை: 1990களில் நமக்கு வரப்பிரசாதமாக வந்தது ஐடி அலை. அதற்கு முன்பு 1970களில் தொழிற்சாலைகளின் வரவு வேலை வாய்ப்பைக் கொடுத்தது. அதுபோன்று அடுத்து என்ன வருகிறது என்று பார்க்கலாம். (என் சிற்றறிவுக்கு ஒன்றும் பிடிபடவில்லை.)

3. வெளிநாடு வேலை வாய்ப்பு : நமக்கு முன்பே 100% கல்வியறிவு பெற்ற சேட்டன்கள் காட்டிய வழி. ஆனால் உலகம் முழுக்கவே சூழ்நிலை இப்போது மாறிவருகிறது. உதாரணமாக, வளைகுடா நாடுகளில் மண்ணின் மைந்தருக்கே வேலை எனும் கொள்கை மிகத்தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிரது.இன்றைய சூழ்நிலையில் ஒரு அரபி ஒரு டிகிரி முடித்தாலே அரசு வேலையில் சேர்துவிட முடியும். அரபி ஆண்களும் பெண்களும் அதிக அளவில் இங்கே வேலையில் சேர்ந்து வருகிறார்கள். அந்நியருக்கு அரசு வேலை என்பது ஏறக்குறைய நிறுத்தப்பட்டு விட்டது. இன்னும் 20 வருடங்களில் தனியார்க் கம்பெனிகளிலும் அதே நிலைமை வர வாய்ப்பு உள்ளது. எனவே ஐ.டி.க்காரன் மட்டும் தான் நாசமாப் போறான் எனும் கனவில் இருக்கும் பிறதுறை ஆசாமிகள் கொஞ்சம் விழித்துக்கொள்ளலாம்.

4. புதிய கல்விமுறை : நமது இன்றைய எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம் என்ன என்று பார்த்தால்.....நம் கல்விமுறை தான். 'படி, வேலை கிடைக்கும்'..'நல்லாப் படிச்சத்தான் நல்ல வேலைக்குப் போக முடியும்' என்றுசொல்லியே நம் பிள்ளைகளை வளர்க்கிறோம். அதாவது படிப்பு என்பது பிள்ளைகளை ஏதாவது ஒரு கம்பெனியில் அடிமைகளாக ஆக்குவது என்றே நம்புகிறோம். சுயதொழில் செய்து சொந்தக் காலில் நிற்பது பற்றி நமக்கு எவ்வித சிந்தனையும் இல்லை. காரணம், பாதுகாப்பு பற்றிய பயம்.

நம்மில் பெரும்பாலோனோர் முதல் தலைமுறை பட்டதாரிகள். வறுமையை கல்வியால் வென்றவர்கள். எனவே மீண்டும் ரிஸ்க் எடுத்து பிஸினஸ் செய்து, ஆரம்பித்த இடத்திற்கே பிள்ளைகளை அனுப்பி விடுவோமோ எனும் பயம் இருக்கிறது. ஆனால் வி.ஐ.பிகளாக பிள்ளைகளைஆக்குவதைவிட, படிப்புடன் சுயதொழில்கள் பற்றிய அறிவையும் பிள்ளைகளுக்கு பள்ளியிலும் வீட்டிலும் புகுத்துவது அவசியம் ஆகிறது. குஜராத் போன்று சுயதொழில் சார்ந்த சமூகமாக நாம் மாறவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

விவசாயத்தில் ஆரம்பித்து ரியல் எஸ்டேட்வரை எல்லாத் தொழில்கள் பற்றிய அறிவுடன் நம் பிள்ளைகள் வளரட்டும். படித்தால் வேலைக்குப் போகலாம் எனும் அடிமை மனோபாவத்தை மட்டும் உண்டாக்காதீர்கள். ஏனெனில் இனிவரும் காலத்தில் டிகிரி சர்ட்டிபிகேட் என்பது வேலைக்கான உத்தரவாதச் சீட்டு அல்ல!
மேலும் வாசிக்க... "இனிமேல்....படித்தால் மட்டும் போதுமா?"

Sunday, March 10, 2013

எல்போ - வகைகள் (குழாயியல்_6)

முன்னுரை:

இன்றைய பதிவில் எல்போ எனப்படும் இணைப்பானைப் பற்றிப் பார்ப்போம். அதற்கு முன்..


பொறியியலின் மொழி வரைபடம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். குழாயியலில் வரைபடங்கள் இரு விதங்களில் வரையப்படுகின்றன. ஒன்று, 12” மற்றும் அதற்குட்பட்ட அளவு குழாயியலை வரைய ஒற்றைவரி வரைபடங்கள்(Single Line Drawings) பயன்படுகின்றன.(ஆனால் நடைமுறையில் 1 1/2” மற்றும் அதற்குட்பட்ட அளவுகளுக்கு மட்டுமே இவை உபயோகப்படுத்தப்படுகின்றன).12”க்கு (நடைமுறையில் 1 1/2”க்கு) மேற்பட்ட அளவு குழாயியலை வரைய இரட்டைவரி வரைபடங்கள் (Double line drawings) பயன்படுகின்றன:


4.1.1 எல்போக்கள்(Elbows):

ஒரு குழாயானது ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நேர்கோட்டிலேயே செல்வது நடைமுறைச் சாத்தியமானது அல்ல. ஒரு தொழிற்சாலையின் கட்டமைப்பைப் பொறுத்து குழாயானது இடது/வலதாகவோ, மேல்/கீழாகவோ திரும்ப நேரிடும். கீழே உள்ள படத்தில் காட்டியபடி, புதிதாக ஒரு குழாயினை கொண்டு செல்ல வேண்டும் என்று கருதுவோம்:
புதிய குழாயானது, முதலில் கீழ் நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. பிறகு வலது பக்கமாகத் திரும்ப வேண்டும். பின்னர் ஏற்கனவே இருக்கும் ஒரு குழாயினை அடுத்து, மேல்நோக்கிப் போக வேண்டும். இப்படி ஒரு சூழ்நிலை அமையும்போது,குழாயின் போக்கினை கீழ்/மேலாகத் திருப்பவோ அல்லது இடது/வலதாகத் திருப்பவோ உதவுபவையே எல்போக்கள் ஆகும்.

ஆங்கில எழுத்தான " L"வடிவத்தில் குழாயின் போக்கினைத் திருப்பப் பயன்படுவதாலேயே இவை எல்-போ என்று அழைக்கப்படுகின்றன.அதாவது "எல்" வடிவத்தில் 'போ' என்று திரவத்திற்கு கட்டளையிடும் குழாயியல் உறுப்பே எல்போ ஆகும்.

எல்போக்கள் 90 பாகை கோணத்தில் மட்டுமல்லாது 45 பாகை கோணத்திலும் கிடைக்கின்றன.அவற்றை முறையே 90 பாகை எல்போ மற்றும் 45 பாகை எல்போ என்று அழைப்பர்.

45 பாகை எல்போ என்பது குழாயை 45 கோணத்தில் கொண்டு செல்லவும், மேலே உள்ள படத்தில் காட்டியபடி இடப்பற்றாக்குறை உள்ள இடங்களில் 90 பாகைக்கு மாற்றாகவும் பயன்படுகின்றன.


எல்போக்களிலும் நான்கு வகைகள் உள்ளன.

4.1.1.1. நீள் ஆர எல்போக்கள் (Long Radius Elbows):

பெட் ரோகெமிக்கல் மற்றும் பெட் ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது இந்த வகை எல்போக்கள் தான்.



4.1.1.2. குறு ஆர எல்போக்கள் (Short Radius Elbows):

இவை பொதுவான பயன்பாட்டில் இல்லை. இருப்பினும், நியமங்களின் அடிப்படையில் தேவைப்பட்டால், பயன்படுத்தப்படும்.


4.1.1.3. குறுகும் எல்போக்கள் (Reducing Elbows):
சில நேரங்களில் ஒரே இடத்தில் குழாயின் போக்கைத் திருப்ப எல்போவையும், அதன் அளவைக் குறைக்க குறைப்பான்களையும் உபயோகிக்க வேண்டியிருக்கும். அங்கே இந்த இரண்டு இணைப்பான்களை இணைக்க இடமில்லையென்றால், இந்த குறுகும் எல்போக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

4.1.1.4. பொருத்திணைவு எல்போக்கள் (Mitered Elbows):

90 பாகை, 45 பாகை மட்டுமல்லாது சில நேரங்களில் 67 பாகை/33 பாகை என முழு வட்ட எண்களாக இல்லாமல், இடைப்பட்ட பாகையிலும் குழாயினைத் திருப்ப வேண்டி வரலாம். அத்தகைய நேரங்களில் வழக்கமாகக் கிடைக்கும் எல்போக்களை வெட்டி, ஒட்டு வேண்டுமென்கிற கோணத்தில் எல்போக்கள் உருவாக்கப்படும். அவையே பொருத்திணைவு எல்போக்கள் ஆகும்.

முந்தைய பதிவுகளில் சுட்டியபடி,எல்போக்களும் கீழ்க்கண்ட இணைப்பு முறைகளில் கிடைக்கின்றன:

-முட்டுப் பற்றவைப்பு (Butt Welding) இணைப்பான்கள்
-பொருந்து வாய் பற்றவைப்பு (Socket Welding) இணைப்பான்கள்
-மரை இணைப்பு (Threaded Connection) இணைப்பான்கள்

அடுத்த பதிவில் டீ இணைப்பான்களைப் பற்றிப் பார்ப்போம்.

(தொடரும்)

மேலும் வாசிக்க... "எல்போ - வகைகள் (குழாயியல்_6)"

Friday, December 21, 2012

இணைப்பான்களும் அவற்றின் வகைகளும் (குழாயியல்_5)

ன்றைய பதிவில் இணைப்பான்களின் வகைகளைப் பற்றியும், அவற்றில் எல்போ எனும் இணைப்பான் பற்றியும் பார்ப்போம்.

வரையறை:

ஒரு குழாய் செல்லும் திசையினை மாற்ற உதகின்ற அல்லது குழாயில் இருந்து வேறொரு கிளையினை உருவாக்க அல்லது குழாயின் அளவினைக் குறைக்க உதவுபவையே இணைப்பான்கள் (Fittings) ஆகும்.










வகைகள்:

இணைப்பான்கள் என்பவை பொதுவாக ஒரு குழாயை இன்னொரு குழாயுடன் இணைக்கப் பயன்படுபவை என்பதால், சென்ற குழாய் பற்றிய பாடத்தில் சொல்லியபடி இணைக்கும் முறையினைப் பொறுத்து ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படும் :

4.1. முட்டுப் பற்றவைப்பு (Butt Welding) இணைப்பான்கள்

4.2. பொருந்து வாய் பற்றவைப்பு (Socket Welding) இணைப்பான்கள்

4.3.மரை இணைப்பு (Threaded Connection) இணைப்பான்கள்

4.4. குழாய்ப் பட்டை இணைப்பான்கள் (Flanges)

4.5. அச்சுக் கிளைகள் (O-Lets)


4.1.முட்டுப் பற்றவைப்பு (Butt Welding) இணைப்பான்கள்:

சென்ற குழாய் பற்றிய பாடத்தில் சொல்லியபடியே, இவ்வகை இணைப்பான்கள் சாய்வு முனை (Bevel End) கொண்டிருக்கும். மேலும் முட்டுப் பற்றவைப்பு முறை மூலம் இணைக்கப்படும். 2" மற்றும் அதற்கு மேற்பட்ட குழாய்களை இணைக்கப் பயன்படுபவை இவ்வகை இணைப்பான்கள் ஆகும். எனவே குழாயியலில் அதிகளவு பயன்படுவது இவ்வகை இணைபான்களே ஆகும். இனி இதன் உள்வகைகளைப் பார்ப்போம்:

1. எல்போக்கள்(Elbows)
2. டீ-க்கள்(Tee)
3. குறைப்பான்கள் (Reducers)
4. மூடிகள்(Caps)

4.2. பொருந்து வாய் பற்றவைப்பு (Socket Welding) இணைப்பான்கள்:

1 1/2”மற்றும் அதற்குக் குறைவான குழாய்களை இணைக்கப் பயன்படுபவை பொருந்து வாய் பற்றவைப்பு (Socket Welding) இணைப்பான்கள் ஆகும். இவற்றின் உள்வகைகள்:

1. எல்போக்கள்(Elbows)
2. டீ-க்கள்(Tee)
3. அச்சுக் குறைப்பான்கள் (Swages)
4. மூடிகள்(Caps)
5. இடையிணைப்பான்கள்(Couplings)
6. குழாய்ப் பொருத்திகள்(Unions)


4.3.மரை இணைப்பு (Threaded Connection) இணைப்பான்கள்:

1 1/2”மற்றும் அதற்குக் குறைவான குழாய்களை இணைக்கப் பயன்படுபவை மரை இணைப்பு இணைப்பான்கள் ஆகும். இவை காலப்போக்கில் கசிவிற்கு வழிவகுக்கும் என்பதால், இவற்றை பொதுவாக தண்ணீர்க் குழாய்களை இணைக்கவே பயன்படுத்துவர்.பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டு செல்லும் குழாய்களை இணைக்க மரை இணைப்புகலைப் பயன்படுத்துவதௌத் தவிர்ப்பது நல்லது. இவற்றின் உள்வகைகள்:

1. எல்போக்கள்(Elbows)
2. டீ-க்கள்(Tee)
3. அச்சுக் குறைப்பான்கள் (Swages)
4. மூடிகள்(Weld Caps)
5. இடையிணைப்பான்கள்(Couplings)
6. குழாய்ப் பொருத்திகள்(Unions)

இனி இணைப்பான்களின் உள்வகைகளை ஒவ்வொன்றாக அடுத்து வரும் பார்ப்போம்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "இணைப்பான்களும் அவற்றின் வகைகளும் (குழாயியல்_5)"

Wednesday, December 5, 2012

Codes & Standards (குழாயியல்_பாகம் 4)


3. சட்டத்தொகுப்புகளும் நியமங்களும் திட்ட விவரணைகளும் ( Codes- Standards - Specification)

டிஸ்கி : இன்றைய பதிவு, கொஞ்சம் தியரி தான்..இனி அடிக்கடி ASME/API போன்ற நியமங்கள் பற்றி அடிக்கடி பார்ப்போம் என்பதால், அதைப் பற்றிய அடிப்படைப் புரிதலுக்காக இந்தப் பதிவு.

பொறியியலில் எந்தவொரு செயலினைச் செய்வதற்கும், வரையறுக்கப்பட்ட செயல்முறைகள் உள்ளன. அவை காலம் காலமாக பொறியியல் துறையில் நாம் அடைந்த வெற்றி/தோல்விகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவையாகும். சில அரசு நிறுவனங்கள் மற்றும் சில தனியார் நிறுவனங்கள், பொறியியலில் ஒவ்வொரு துறைக்கும் தெளிவான செயல்முறைகளை தொகுத்து வைத்துள்ளன. அந்த வகையில், குழாயியல் துறைக்கும் சில நியமங்கள், ASME, API போன்ற நிறுவனங்களால் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி சுருக்கமாக இங்கே காண்போம்.

சட்டத்தொகுப்புகளும் (Codes) நியமங்களும் (Standards) :

Codes  எனப்படும் சட்டத்தொகுப்புகள், குழாயியல் டிசைன், கட்டுமானம் போன்றவற்றிற்குத் தேவையான, அடிப்படையான சில வழிமுறைகளைச் சொல்பவையாகும். இவை பொதுவாக குறிப்பிட்டு வரையறுக்காமல் பொதுவான தன்மையுடையவையாக இருக்கும். நியமங்கள் என்பவை தெளிவான வழிமுறைகளுடன் கூடிய, செயல்முறைகள் மற்றும் விதிகளின் தொகுப்பாக இருக்கும்.

உதாரணமாக, ஒரு குழாயானது துருப்பிடித்தலில் இருந்து காக்கப்பட, வண்ணம் பூசப்பட வேண்டும் என்று மட்டுமே சட்டத்தொகுப்பு சொல்லும். நியமம் என்பது அந்த வண்ணப்பூச்சானது, எவ்வளவு தடிமனுக்குப் பூசப்பட வேண்டும், எத்தனை முறை பூசப்பட வேண்டும், என்னென்ன வேதிப்பொருட்களை உள்ளடக்கியதாக, அந்த வண்ணப்பூச்சு இருக்க வேண்டும் என விலாவாரியாக வகுத்துச் சொல்லும்.

ஆனாலும் நடைமுறையில் சட்டத்தொகுப்புகளும், நியமங்களும் தெளிவாகப் பிரித்தறிய முடியாவண்ணமே உள்ளன.

இருப்பினும், ASME. API, BS, IS போன்ற நிறுவனங்களால் தொகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை சட்டத்தொகுப்புகள் என்றும், சேவைப் பயனர்(Client)களின் விதிமுறைத் தொகுப்பை நியமங்கள் என்றும் கொள்ளலாம்.

திட்ட விவரணைகள் (Project Specification):

திட்டம் என்பது குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக, சேவைப் பயனர்களால் ஆரம்பிக்கப்படும் பெரும்பணி ஆகும். அந்த திட்டத்தை நிறைவேற்ற தெளிவான திட்ட விவரணைகள் சேவைப்பயனர்களால் கொடுக்கப்படும்.

திட்ட விவரணை என்பது கீழ்க்கண்ட விவரங்களை உள்ளடக்கி இருக்கும்:

1. திட்டத்தின் நோக்கமும், செய்யப்பட வேண்டிய காரியங்களையும் உள்ளடக்கும் ஒப்பந்த ஆவணம்.
2. குழாய், குழாய்ப்பட்டை, இணைப்பான்கள், வால்வுகள் உள்ளிட்ட குழாயியலின் பாகங்கள், எந்த உலோகத்தால் செய்யப்பட வேண்டும் என குறிப்பிடும் உலோக விவரணைகள்
3. குழாயியல் கட்டுமானம் சார்ந்த விதிமுறைகள்
4. அவற்றைச் சோதிக்கும் வழிமுறைகள்
5. மேற்கண்டவற்றை விரிவாக எடுத்துரைக்கும் சேவைப் பயனரின் நியமங்கள்

உதாரணமாக, கொள்கலனில் இருந்து இரண்டாவது தொட்டிக்கு தண்ணீரினைக் கொண்டு செல்வது தான் நம் திட்டம் என்றால், அந்த குழாயியல் பாகங்களின் உலோகங்கள் என்ன, பம்ப்பின் கொள்திறம் என்ன, தொட்டியின் கொள்ளளவு என்ன என்பது போன்ற சகல விஷயங்களும் திட்ட விவரணையில் தரப்படும்.

நியம நிறுவனங்கள்:
நாம் குழாயியலில் பயன்படுத்தும் சில நியமங்களை உருவாக்கும் சில நிறுவனங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன:

1. The American Petroleum Institute (API)
2. The American Nataional Standards Institute (ANSI)----இது இப்போது ASME உடன் இணைக்கப்பட்டுவிட்டது.
3. The American Society for Testing and Materials (ASTM)
4. The American Welding Soceity (AWS)
5. The Manufacturers Standardization Soceity of Valves and Fittings (MSS-SP)
6. The American Society of Mechanical Engineers (ASME)
7. Biritish Standards (BS)
8. Indian Standards (IS)
9. DIN standards
10. JIS Standards


ASME நியமங்கள்:

குழாயியலில் அதிகம் பயன்படுத்தப்படுபவை ASME சட்டத்தொகுப்புகள் தான்.கீழே உள்ள நியமங்கள், குழாயியலுக்கு அடிப்படையானவை:


ASME B31.1 : Power Piping (இது மின்நிலையங்களில் பயன்படுகிறது.)

ASME B31.2 : Fuel Gas Piping----(தற்போது உபயோகத்தில் இல்லை. இதற்குப் பதிலாக ANSI Z223.1 பயன்படுத்தப்படுகிறது.)

ASME B31.3 : Process Piping (இது பெட்ரோலிய மற்றும் ரசாயன நிறுவனங்களில் பயன்படுவது.)

ASME B31.4 : Pipeline Transportation Systems for Liquid Hydrocarbons and Other Liquids -- (ஒரு இடத்தில் இருந்து மற்றோர் தொலைதூர இடத்திற்கு அல்லது ஒரு நாட்டில் இருந்து மற்றோர் நாட்டிற்கு பெட்ரோலியம் போன்ற திரவங்களைக் கொண்டு செல்வதற்கான நியமம் இது.)

ASME B31.5 : Refrigeration Piping and Heat Transfer Components

ASME B31.8 : Gas Transmission & Distribution Piping Systems (வாயுப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான குழாயியல் நியமம் இது.)

ASME B31.9 : Building Services Piping B31.9

ASME B31.11 - Slurry Transportation Piping Systems


ஒரு திட்டம் என்ன திரவத்தை, எவ்வாறு கொண்டு செல்லப்போகிறது என்பதைப் பொறுத்து, அதற்குரிய நியமத்தின்படி குழாயியல் வடிவமைக்கப்படுகிறது. பொதுவாக சேவைப்பயனரின் திட்ட விவரணையிலேயே எந்த நியமத்தின்படி நாம் வடிவமைப்பு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கும்.

(நாங்கள் B31.3, B31.4 & B31.8 மட்டுமே உபயோகிக்கிறோம்.)

அடுத்த பகுதி முதல், குழாயியலின் பாகங்களைப் பற்றிய பதிவுகள் தொடரும்.


டிஸ்கி-2 : சென்ற பதிவில் குழாய்க்கான நியமங்களாக சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தேன்..அவை:

ASME B36.10M - Welded and Seamless Wrought Steel Pipe
ASME B36.19M - Stainless Steel Pipe


இதே போன்று வரும்பகுதிகளிலும் தொடர்ந்து நியமங்கள் குறிப்பிடப்படும். இவை அனைத்துமே இணையத்தில் இலவசமாக (திருட்டு பிடிஎஃப்-ஆக) கிடைக்கிறது. 

குழாயியல்  படிக்க உண்மையில் ஆர்வம் உள்ளோர், தரவிறக்குங்கள். (காப்பி ரைட் பிரச்சினை காரணமாக இங்கே லின்க் கொடுக்க விரும்பவில்லை.) சும்மா, ஒரு தடவை வாசித்துக்கொள்ளுங்கள். அவை அனைத்தும் மனப்பாடமாக தெரிய வேண்டிய அவசியம் இல்லை.இவை ரெஃபரென்ஸ் டாக்குமெண்ட்ஸ் மட்டுமே. ஆனால் எந்த நியமம், எதற்கு என்று தெரிந்திருப்பது அவசியம். அதை மட்டும் மனப்பாடம் செய்யுங்கள்.

மேலும் வாசிக்க... "Codes & Standards (குழாயியல்_பாகம் 4)"