Tuesday, May 31, 2011

சினிமாவும் கார்ப்போரேட் நிறுவனங்களும்

”தமிழ் சினிமாவுக்கு இனிமே வசந்தகாலம்தான்..ஹாலிவுட் சினிமா மாதிரி நம்ம சினிமாவும் மாறப்போகுது”

இரண்டு வருடங்களுக்கு முன்பு சினிமா ரசிகரான என் நண்பர் குதூகளித்தார். அப்போதுதான் ஐங்கரன், சாய்மீரா, மோசபியர், ரிலையன்ஸ் அட்லப்ஸ் போன்ற பெரிய கார்ப்போரேட் நிறுவனங்கள் நேரடி படத்தயாரிப்பில் இறங்கியிருந்தன. 

நான் அதை முழுதும் மறுத்தேன்.
“இல்லை நண்பரே..இந்த நிறுவனங்கள் அனைத்தும் கடும் நஷ்டத்தைச் சந்திக்கும். இது சினிமாத்துறைக்கும் நல்லதல்ல.. ஃபெண்டா மீடியா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இங்கு ஜெயிக்கமுடியாமல் போயிருக்கின்றன.” என்றேன். நண்பர் அப்போது அதை ஒத்துக்கொள்ளவேயில்லை. இன்று இந்த நிறுவனங்கள் இருப்பது கடும் நிதிச்சிக்கலில்...

மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் மேனேஜர் போலி பெட்ரோல் பில் கொடுத்து 150 ரூபாய் கமிசன் அடிப்பதை இந்தியா போன்ற தேசத்தில்தான் காணமுடியும். மிகப் பெரிய நிறுவனங்களின் உயர்பதவியில் இருப்பவர்கள் கடமை-கண்ணியம்-கட்டுப்பாட்டில் நமது அரசியல்வாதிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. அதுவும் அந்த நிறுவனம் ஒரு லிமிட்டேட் கம்பெனியாக இருந்துவிட்டால், கடிவாளம் அறுந்த குதிரையின் நிலைதான். போன வருடம் ஒரு பிரபல இதழில் வந்த கிசுகிசு இது:

”பட்டம் நடிகை இப்போதெல்லாம் சென்னை வந்தால், கார்ப்போரேட் நிறுவன டைரக்டர்களுடன் காரில் பறக்கிறாராம். நடிகர், இயக்குனர்களைப் பிடிப்பதைவிட நேரடியாக இவர்களைப் பிடிப்பதால் கைமேல் படங்கள்”

இது கிளுகிளுப்பான கிசுகிசு அல்ல. பெரிய நிறுவனங்களில் உள்ள அவல நிலை. ஒரு தனிப்பட்ட மனிதரின் சொந்தப் படமாக இருந்தால் அவராவது கொஞ்சம் அக்கறை கொள்வார். ஆனால் கார்போரேட் நிறுவனங்களின் நிலை அந்த வகையில் மோசம்தான். 
இவை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவன்ங்கள் என்பதால், இவர்கள் அள்ளி விட்டதில் பெரும்பகுதி மக்கள் பணம். மக்கள் பணத்தைக் கையாளும்போது தாராள மனதாய் நாம் நடந்துகொள்வதும் சகஜமே! (இத்தகைய நிறுவன்ங்களில் முதலீடு செய்வது பலமுறை யோசித்துச் செய்யவேண்டிய ரிஸ்க் மிகுந்த சமாச்சாரம்!)

நடிகர்களைக் கட்டுப்படுத்தாமல் அவர்களின் சுய சொறிதல்களுக்கு அடிபணிந்ததும், அவர்களின் சம்பளத்தை பல மடங்கு கூட்டிவிட்டதும் இந்த நிறுவனங்கள் செய்த மிகப் பெரிய தவறாகும்.

ஒரு நிறுவனத்தின் பணியானது ஒரு பொருளை(Product) தயாரிப்பது அல்லது தொலைத் தொடர்புத்துறை போன்ற சேவை(service)யினை அளிப்பது. சினிமாவைப் பொறுத்தவரை வரும் சிக்கல் என்னவென்றால் திரைப்படம் என்பதை முழுதாக பொருள்வகையிலோ சேவையிலோ சேர்க்க இயலாது. மேலும் படத்தயாரிப்பு என்பது முழுமையான தொழிலும் அல்ல. அது தொழிலும் சூதாட்டமும் சரிவிகித்தில் கலந்த ஒரு கலவை.

சினிமாவில் ஒரு நிறுவனம் ஜெயிக்கத் தேவை கண்டிப்பான தலைமை. ஏவிஎம், சின்னப்பத்தேவர் போன்ற, பெரிய ஸ்டார்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு தலமை இருந்ததால்தான் அந்த நிறுவனங்களால் சினிமாவில் இத்தனை வருடம் நிலைத்திருக்க முடிந்தது. 

எனவே, கண்டிப்பான தலைமையும், நேர்மையான சினிமா அறிவுள்ள அதிகாரிகளும் இல்லாதவரை கார்போரேட் நிறுவனங்களுக்கு சினிமாவில் லாபம் என்பது கனவே.

மேலும் வாசிக்க... "சினிமாவும் கார்ப்போரேட் நிறுவனங்களும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

45 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, May 30, 2011

என்னை சென்னையை விட்டே விரட்டிய ஆபாச சிடி


டிஸ்கி-1: இது ஆபாசப் பதிவு அல்ல. (நம்ம நிலைமை இப்படி ஆகிடுச்சே!)

டிஸ்கி-2: இது ஆபாச சி.டி. பற்றிய பதிவு

டிஸ்கி-3: இந்தப் பதிவில் உள்ள படங்களில் காணப்படும் நடிகைகளுக்கும் ஆபாச சிடிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த நல்ல பெண்மணிகளை நான் அவமானப்படுத்தி விட்டதாக யாரும் கருதினால், 108 தோப்புக்கரணம் போடத் தயாராக இருக்கிறேன்.

டிஸ்கி-4: ’யோவ், எத்தனை டிஸ்கிய்யா போடுவே..மேட்டருக்கு வாய்யா’ன்னு நீங்க கடுப்பாவது தெரிவதால், மிச்ச சொச்சம் டிஸ்கியை பதிவின் கடைசியில் போடுகிறேன்.

நான் சென்னையில குப்பை கொட்டிக்கிட்டடு இருந்த நேரம்..ஒரு வீட்ல வாடகைக்கு இருந்தேன். அந்த காம்பவுண்டுக்குள்ள மொத்தம் 3 வீடு. ஒன்னுல ஹவுஸ் ஓனரு. ரஃபா இருப்பாங்க. அதனால அவங்களை விடுங்க..இன்னொன்னுல தென் மாவட்ட குடும்பம்..ரொம்ப நல்லவங்க..ஒரு தம்பதியும் ஒரு குழந்தையும்! நானும் தெக்கத்தி ஆளுங்கிறதால என்கூட நல்லாப் பழகுனாங்க. அந்த சாரும் நல்லாப் பேசுவாரு. அந்த அக்காவும் ரொம்ப நல்லவங்க.வீட்ல கறிக்குழம்பு வச்சா, பாயாசம் வச்சா எனக்கும் கண்டிப்பாக் கொடுப்பாங்க. (அப்போ நல்லவங்க தான்!)
என் கம்பெனில அக்கவுண்ட் செக்சன்ல சிபி சிபின்னு ஒருத்தர் வேலை பார்த்தாரு.(நண்பரின் நலம் கருதி அவர் பெயர் மாற்றப்பட்டுள்ளது!) அவர் ரொம்ப தங்கமான மனுசன். ஏதாவது சீன் பட சிடி கிடைச்சா தன்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் ரவுண்ட்ல விடுவாரு. அதை ஃபாலோ பண்றதுக்குன்னே தனியா ஒரு எக்ஸெல் சீட் வச்சிருப்பாரு.

எந்த சிடி யார்கிட்ட, என்னைக்கு கொடுத்தாரு, அதை யாரெல்லாம் வச்சிருந்தாங்க, இப்போ யாரு வச்சிருக்காங்க-ன்னு எல்லா டீடெய்லும் அதுல இருக்கும். ஆனா சிபி கோவக்காரரு. சொன்ன டயத்துக்கு சிடியைத் திரும்பத் தரலேன்னா கெட்ட வார்த்தையிலேயே திட்டுவாரு. அதுகூடப் பரவாயில்லை..அடுத்த தடவை சிடி வந்தா தரமாட்டாரு. அந்த நேரத்துல தான் வரிசையா நடிகைங்கள்லாம் குளிக்கிறது எப்படி, ட்ரெஸ் மாத்துறது எப்படின்னு நடிச்சுக் காட்டுன சிடியா ரிலீஸ் ஆகிக்கிட்டிருந்துச்சு. அதனால சிபி மனசு கோணாம நாங்க நடந்துப்போம்!

ஒருநாளு ’இரு வெள்ளை ஆமைகள் செய்த வெள்ளாமை’-ன்னு ஒரு இங்கிலீஸ் சிடியை ரிலீஸ் பண்ணாரு. அது அவர் வச்ச பேரு. அதனால கூகுள்ல தேடாதீங்க.கிடைக்காது. நான் வாக்குத் தவறாத நல்ல பையங்கிறதால, பெர்ஃபார்மன்ஸ் அடிப்படையில அந்த சிடியை முதல்ல எனக்குத் தான் கொடுத்தாரு. வாங்கிக்கிட்டு நைட் ரூம்ல போய் கம்ப்யூட்டர்ல போட்டுப் பார்த்துக்கிட்டிருந்தேன்.(கம்ப்யூட்டர் கண்டுபுடிச்சதே அதுக்குத் தானே!)

அப்போப் பாத்து கதவை டபடபன்னு தட்டுற சத்தம். “யாரு?”ன்னு கேட்டேன். ‘நாந்தான்’ன்னாரு பக்கத்து வீட்டு சார்! அடடா..சார் வந்துருக்காரே..உடனே போனா மூஞ்சியைப் பாத்தே கண்டுபிடிச்சிடுவாரேன்னுட்டு, எப்பவும் எங்கூட இருக்குற திருக்குறளை குத்துமதிப்பா திறந்து ஒழுக்கமுடைமை-ல ரெண்டு குறளைப் படிச்சேன். பிறகு போய் கதவைத் திறந்தேன். 

’என்னப்பா பண்றே?’ன்னு கேட்டுக்கிட்டே என்னையும் தள்ளீட்டு உள்ள வந்தாரு. நான் ‘ஒன்னுமில்லே..கம்ப்யூட்டர்ல ஒர்க் பண்றேன் சார்’னு சொல்லும்போதே சிடி ட்ரைவ் பட்டனை அமுக்கிட்டாரு. இருவெள்ளாமைகளும் வெளில வந்திடுச்சு. அவர் அதை எடுத்துக்கிட்டு ’காலைல தர்றேன்’னு சொல்லீட்டு போய்க்கிட்டே இருந்தாரு. ’எப்படிக் கண்டுபிடிச்சாரு, நாம சத்தம் எதுவும் போடலியே.. ச்சே..திருவள்ளுவர்கூட நம்மைக் காப்பாத்தலியே’ன்னு நொந்து போனேன்.

காலைல 9 மணி பஸ்ஸைப் பிடிச்சாத்தான் ஆபீஸ்க்கு கரெக்ட் டயத்துக்கு போகமுடியும். அடுத்த பஸ்ஸைப் பிடிச்சா அரை மணி நேரம் லேட்டாத்தான் போக முடியும். அதனால 8.50க்கே கிளம்பிட்டேன். சரி, சார்கிட்ட சிடி வாங்குவோம்னு போனா சார் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாரு. அக்கா பக்கத்துல சோறு வச்சுக்கிட்டு இருந்துச்சு. இப்போ எப்படிக் கேட்கன்னு திரும்பி வந்துட்டேன். சரி, இன்னைக்கு 9 மணி பஸ் அவ்வளவு தான். 
லேட் ஆனாலும் பரவாயில்லை..சிடி இல்லாமப் போனா சிபி கொன்னுடுவாரு. இதுவரை கட்டிக்காத்த நல்ல பேரும் போயிடுமே. அப்புறம் எக்ஸெல்ல நம்ம பேரு கடைசிக்குப் போயிடுமேன்னு ஒரே யோசனை. திரும்ப சார் வீட்டு வாசலைக் க்ராஸ் பண்ணிக்கிட்டே நோட்டம் போட்டேன்.அப்பாடி..அக்கா உள்ளே சமையல் கட்டுல! சார் லுங்கில கையத் தொடச்சுக்கிட்டே வெளில வந்து ‘என்னப்பா?’ன்னாரு. எனக்கு பகீர்னு ஆயிடுச்சு. என்ன இப்படிக் கேட்காறேன்னுட்டு ‘சார்..அந்த சிடி சார்’ன்னேன். உடனே உள்ளே திரும்பிப் பார்த்தாரு. 

நான் கிசுகிசு குரல்ல சொன்னேன் ‘அக்கா உள்ள தான் இருக்கு”ன்னு. 

உடனே அவர் ‘ஏம்மாஆஆஆஆஆஆஆஆ’ன்னு கூப்பிட்டாரு.

எனக்கு கை காலெல்லாம் வெலவெலத்துப்போச்சு. 

அது உள்ளேயிருந்து’என்ன்ன்ன்னாஆஆஆஆங்ங்க”ன்னுச்சு. 

இவர் இங்கிருந்து சத்தமா ‘அந்த சிடியை தம்பி கேட்குது. எடுத்துட்டு வா’ன்னாரு. 

அதுக்கு அது இன்னும் சத்தமா ‘எந்ந்ந்ந்ந்ந்ந்ந்த சிடி?”ன்னுச்சு.

அதுக்கு அவர் சொன்னாரு ‘நைட் நம்ம பாத்த்த்த்த்த்த்த்த்தமே.........அந்த சிடி’

பூமி சுத்துதுங்கிர பூகோள உண்மையே எனக்கு அப்ப தான் அனுபவப்பூர்வமா தெரிஞ்சது.

உள்ள இருந்து அக்கா சிடியோட வந்துச்சு. நான் அக்காவுக்கு முகம் காட்டாம திரும்பி, அங்க இருந்த சுவத்தோட சுவரா பல்லி மாதிரி ஒட்டி நின்னுக்கிட்டேன். அது வந்து சார்கிட்ட சிடியைக் கொடுத்துச்சு. அப்பக்கூட அந்தாளு என் மேல பரிதாபப்படலை.

“தம்பி தானே கேட்டுச்சு..தம்பிகிட்ட கொடும்மா’ன்னு அடுத்த இடியை இறக்குனாரு. 

அக்காவும் கொடுத்துச்சு. 

நான் திரும்பியே பாக்காம கையை மட்டும் பின்னால நீட்டி வாங்கிக்கிட்டேன். 

அடச் சண்டாளங்களா..மனுஷங்களாய்யா அவங்க..ஈவிரக்கமே இல்லாத பாவிங்க....ஒரு பச்சப்புள்ளையை இப்படியா மிரட்டுவாங்க!

இனியும் இவங்க மூஞ்சிலயே முழிக்கக் கூடாதுன்னு, அந்த மாசமே சென்னையை விட்டே ஓடி வந்துட்டேன்.


டிஸ்கி -6: டிஸ்கி தொடர்கிறது..

டிஸ்கி-7: இந்தப் பதிவில் உள்ள படங்களில் காணப்படும் நடிகைகளுக்கும் ஆபாச சிடிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே இவர்கள் நடித்த சிடி என்று நினைத்து, யாரும் என்னிடம் அந்த சிடியைக் கேட்டு இம்சை செய்ய வேண்டாம்.

டிஸ்கி-8: அக்கா வீட்டு அட்ரஸ் யாருக்கும் தரப்பட மாட்டாது. (பதிவெழுத வந்தப்புறம், அது ஒன்னுதான்யா செய்யலை. அந்த வேலையையும் செய்ய வச்சுடாதீங்கய்யா...)

மேலும் வாசிக்க... "என்னை சென்னையை விட்டே விரட்டிய ஆபாச சிடி"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

84 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, May 29, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_13உன் வார்த்தைப்படியே

ஒருநாள் நானும்
காதல் மறந்திருப்பேன்.

அந்த நாளில்
உன்னைக் கண்டதும்என்
இதழ்கள் புன்னகைக்காது.

உன் கண்ணீரைத் துடைக்க
என் கைகளும் நீளாது.

உன் பெயர் சொல்ல
என் நாவும் எழாது.

என் உறவுக் கூட்டம்
உன்னை விலக்கி
என் உடலை எடுப்பார்கள்              
எரித்துப் புதையூட்ட!


"நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்பா. மதன் கேட்கிற மாதிரித் தெரியலை. இதுக்கு மேல அவன்கூடப் போராட எனக்கும் தெம்பில்லை” கசந்த உணர்வுடன் பேச ஆரம்பித்தார் மதனின் அப்பா.

“கட்டுனா அந்தப் பொண்ணைத் தான் கட்டுவேங்கிறான். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. மதனுக்கு ஒரு நல்ல சட்டை எடுக்கவே தெரியாது. அப்படி இருக்கும்போது, காலம்பூரா வாழப் போற பொண்டாடியை அவனால சரியா தேர்ந்தெடுக்க முடியுமா? இங்க என் சாதி சனமெல்லாம் ஏதாவது பிரச்சினைன்னா என் வீட்டுக்குத் தான் தேடி வர்றாங்க. நாந்தான் பஞ்சாயத்து பண்ணித் தீர்த்து வைக்கிறேன். நாளைக்கு என் மகன் அடுத்த சாதிப் பொண்ணைக் கட்டிக்கிட்டான்னு தெரிஞ்சா, என்னை மதிப்பாங்களா? அதான் எனக்கு ரொம்ப யோசனையா இருக்கு. நீ தான் அவனுக்கு நெருங்குன தோஸ்த் ஆச்சே..அதான் உன்கிட்ட மதனோட நிலை என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு கூப்பிட்டேன்.  அந்தப் பொண்ணோட அம்மா வேற உங்க பையனால தான் என் பொண்ணு வாழ்க்கை போச்சுன்னு புலம்புது. அது வேற கஷ்டமா இருக்கு. பெண் பாவம் பொல்லாதது இல்லையா? மதன் அம்மா போனப்புறம் இந்த வீடும் களை இழந்து போச்சு. மதனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சாத்தான் இங்க பழைய நிலைமை திரும்பும். அதனால மதன் விரும்புற பொண்ணையே கட்டி வச்சுடலாமான்னும் யோசனை.  என்ன செய்றதுன்னு தெரியலை.”

முழுக்க குழம்பிப் போய், மகனின் காதலுடன் போராடத் தெம்பின்றிப் புலம்பினார் மதனின் அப்பா. அம்மாவின் இடத்தில் ஜெனிஃபர் என்பது கேட்கவே நாராசமாய் இருந்தது எனக்கு.

“அப்பா, நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. மதன் சும்மா விளையாட்டாத் தான் அந்தப் பொண்ணு கூடப் பேச ஆரம்பிச்சான். அப்புறம் அந்தப் பொண்ணு அவனை விடாமப் பிடிச்சுக்கிச்சு. இப்பவும் அந்தப் பொண்ணு விட்டிடுச்சுன்னா, மதன் கொஞ்ச நாள்ல அவளை மறந்திடுவான்”

“இவனை மாதிரியே அந்தப் பொண்ணும் பிடிவாதக்காரியால்ல இருக்கா. இவன் இல்லைன்னா செத்திடுவாளாமே”

“இல்லைப்பா..அது வந்து..நான் என்ன சொல்றன்னா நம்ம வீட்டுக்கு வர்ற அளவுக்கு அது நல்ல பொண்ணு இல்லைப்பா”

“அப்படீன்னா?”

“வந்து..ஏற்கனவே எங்க சீனியர் ஒருத்தன்கூட சுத்துச்சு. அதுக்கு முன்னாடி அவங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பையனோட பழக்கமாகி பிரச்சினை ஆயிடுச்சாம். நல்ல பொண்ணுன்னா நீங்க சொல்றபடி மதனுக்குக் கட்டி வைக்கலாம். ஆனால்...மதன் கட்டுனா எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சிரிப்பாங்க..அதான் நிலைமை”

“ம்” மீசையை முறுக்கியபடியே யோசிக்க ஆரம்பித்தார். முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

“அப்போ என்ன தான் செய்யலாங்கிறே?”

“அந்தப் பொண்ணு மதனை விட்டு விலகணும். அது நடந்தாப் போதும், மதன் தானாத் திருந்திடுவான்”

“அப்படியா” என்ற படியே டெலிஃபோனை எடுத்தார்.

ஜெனிஃபரின் அம்மாவிற்கு டயல் செய்தார்.

“ஹலோ, யாரு பேசறது” ஜெனிஃபரின் அம்மாவின் குரல் கேட்டது.

“ம், உன் புருசன்” என்றார்.

“யாருங்க அது, மரியாதையாப் பேசுங்க”

”உனக்கென்னடி மரியாதை. மகளை ஊர் மேய விட்டுட்டுத் திரியிற நாயி. உன் பொண்ணு இப்போ மயக்கி வச்சிருக்காளே மதன். அவனோட அப்பா பேசிறேண்டி”

நான் வெலவெலத்துப் போய் உட்கார்ந்திருந்தேன். இவர் இவ்வளவு ஆக்ரோசமாய்ப் பேசுவார் என்று எனக்குத் தெரிந்ததே இல்லை. வசவு தொடர்ந்தது.

“நான் யாரு தெரியுமாடி..இங்க வந்து என் பேரைச் சொல்லிக் கேட்டுப்பாருடி.. இங்க என் முன்னாடி நின்னு பேச ஆம்பிளைங்களே பயப்படுவாங்க. பொட்டக்கழுதை, நீ என்னை ஃபோன் பண்ணி மிரட்டுறே, இல்லே. என் மகன் ஆம்பிளைடி..அவன் பொண்ணு பின்னாடி சுத்தத்தான் செய்வான். உன் பிள்ளைக்கு எங்கடி போச்சு அறிவு? ஏற்கனவே பலபேரு கூட ஊர் மேஞ்சவ தானே உன் பொண்ணு..இப்போ அடுத்தவனைப் பார்த்துப் போக வேண்டியது தானே? என்ன ம..க்குடி என் பிள்ளையை விடாமப் பிடிச்சு தொங்குறீங்க..சொத்து கிடைக்கும்னா? இங்க பாரு, நாங்க யாரு, என்ன ஜாதி, எப்படிப் பட்டவங்கன்னு உன்  பொண்ணுக்குத் தெரியாம இருக்கலாம். உனக்குமாடி தெரியாது? மதுரையைத் தாண்டிக்க மாட்டா உன் பொண்ணு. கண்டந்துண்டமா வெட்டி எறிஞ்சுடுவோம். பொணம்கூடக் கிடைக்காது, பாத்துக்கோ. எங்க வந்து காட்டுறீங்க உங்க தே...த்தனத்தை? இனி ஒரு தடவை உன் பொண்ணு என் பையன்கூட சுத்துறான்னு தகவல் வந்துச்சு, அதோட உன் பொண்ணை மறந்துடு”

ஆவேசமாய்ப் பேசி முடித்து விட்டு ஃபோனை வைத்தார். சிரிப்புடன் என் பக்கம் திரும்பினார்.

“சொல்லீட்டேன் தம்பி, இனிமே நம்ம பக்கம் வர மாட்டா. நான்கூட பொம்பளைப் பாவம் வந்துடக்கூடாதென்னு தான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். தே..கழுதைகளுக்கு என்ன மரியாதை சொல்லு”

நான் என்ன சொல்ல? ஒன்றும் சொல்லத் தெரியாமல் “ஆமாப்பா” என்றேன்.

“சரிங்க தம்பி, வாங்க ஏதாவது ஓட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டுட்டு, பஸ் ஏத்தி விடறேன்”

யோசனையோடே சாப்பிட்டு விட்டு, நல்லபடியாய் ஊர் வந்து சேர்ந்தேன்.

அப்போது மதன் சென்னையில் இருந்தான். அடுத்த இரு மாதங்கள் அவனை அப்பா மதுரைப் பக்கம் வரவிடவே இல்லை. மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிகச் சான்றிதழ் பெற வருமாறு கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தது. மதன் சந்தோசமானான்.

சான்றிதழ்களை வாங்கும் சாக்கில் ஜெனிஃபரைப் பார்த்து விடலாம் என்று சந்தோசத்துடன் வந்தான்.

“செங்கோவி, எப்படிடா இருக்கே? இன்னும் ஏண்டா ஊருலயே இருக்க..சென்னைக்கு வா. நாம சேர்ந்து வேலை தேடலாம்” ரொம்பக் குஷியுடன் பேசினான். ’சென்னை எவ்வளவு பெரிய ஊர் தெரியுமா’ எனப்து போன்ற பொது அறிவை மேம்படுத்தும் கேள்விகளைக் கேட்டான்.

எனக்கு குற்ற உணர்ச்சி உறுத்திக்கொண்டே இருந்தது. கிளம்பும்போது “போலாமாடா?” என்றேன்.

“என்னடா கேணத்தனமாக் கேட்கே? இவ்வளவு தூரம் வந்திட்டு ஜெனிஃபரைப் பார்க்காமல் போனா அவ்வளவு தான். கொன்னே போடுவாள்” என்றான்.

அப்போது ஒரு பைக் எங்களை நோக்கி வந்தது.

ஜெனிஃபரின் கிளாஸ்மேட் அந்தப் பைக்கை ஓட்டி வந்தான். அவன் பின்னால் ஜெனிஃபர் அமர்ந்திருந்தாள்.

”ஜெனி” என்று கூப்பிட்டான் மதன். அவள் அவனைப் பார்த்ததும் சலனமே இல்லாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.

ஜெனிஃபர் புதுக் காதலனை இறுக்கி அணைத்திருந்தாள். வேகமாக வீசிய காற்று கூட அவர்களுக்கிடையே நுழைய முடியவில்லை. அவர்களது பைக் எங்களை வேகமாகக் கடந்தது.மதனுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. மதன் எதுவும் பேசாமல் கோபத்துடன் பஸ் ஏறினான்.

அதன்பிறகு 4 வருடங்களுக்கு மதனை நான் சந்திக்கவில்லை.

-------------------------- மன்மதன் லீலைகள் - முதல் பாகம் முற்றும் --------------------------

(தொடரும்..)

மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_13"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

38 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, May 28, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_12

என் இரவுத் தோட்டத்தில்
கண்ணீர்ப் பாசனத்தில்
கவிதைப் பூக்கள் மலர்கின்றன.

என் தோட்டமெல்லாம்
காதல் வாசம்.
அள்ளி முகரஉன்
வருகை எதிர்பார்க்கும்
வாடா மலர்கள் அவை.

உன் இரவுத்தோட்டத்தில்
மலர்ந்த மலர்களைக் காண
வாசல் வந்து பார்க்கின்றேன்வாசம்கூட
வெளிவரா வண்ணம்
இறுகத் தாழிட்டிருக்கிறாய்.

பூக்களின் முகம் காண
வாசலில் தவமிருக்கையில்
என் இரவுத்தோட்டத்தில் - மீண்டும்
பூக்கள் மலர்கின்றன.

சந்தோச வானில் பூத்தாலும்
சோக பூமியில் பூத்தாலும்
காதல் வாசம் மாறாத
கவிதைப் பூக்கள் அவை!மதனும் ஜெனிஃபரும் தங்கள் காதலில் உறுதியாக நின்றார்கள். பெற்றோரின் அறிவுரை வேண்டாத விஷ்யம் ஆயிற்று. உண்மையில் பெற்றோரே வேண்டாத உறவாகினர்.

ஜெனிஃபரின் வீட்டில் முதலில் இறங்கி வந்தனர். மகள் இவ்வளவு பிடிவாதமாய் இருக்கும்போது, நாம் வேறு என்ன தான் செய்வது?அவர்களின் காதலை ஏற்காவிட்டால், தன்னைப் பிணமாகத் தான் பார்க்க முடியும் என்பதைத் தெளிவாக ஜெனிஃபர் தன் பெற்றோரிடமும் மதனிடமும் சொல்லி விட்டாள்.

மதனுக்கும் இவ்வுலகம் ஏன் தன் காதலை இப்படிக் கண் மூடித்தனமாக எதிர்க்கின்றது என்பதே புரியவில்லை. காதல் என்பது என்ன? அது ஒருவகையான அன்புப் பரிமாற்றமே. அதில் இந்த உலகத்திற்கு என்ன தான் பிரச்சினை? ஏன் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என அனைவருமே தடை போடுகின்றார்கள்? இந்த சமூகத்தின் மீதே கடுமையான கோபம் வந்தது மதனுக்கு. என்னிடம் திட்டித் தீர்த்தான்.

இந்தக் காதல் எப்படி ஆரம்பித்தது என்று எனக்குத் தெரியும் என்பதால் என்னால் இந்தக் காதலை சகித்துக் கொள்ளவே முடியவில்லை.

“டேய், நீ என்ன சொல்லி ஆரம்பிச்சே.? மேட்டர் முடியவும் அவளை கழட்டி விட்டுடுவேன்னு சொன்னே. அப்புறம் இருக்குற வரைக்கும் என் ஜாய் பண்ணிக்கிறேன்னு சொன்னே. இப்போ அவ இல்லேன்னா வாழ்க்கையே இல்லேன்னா என்னடா அர்த்தம்?”

“அதெல்லாம் உனக்குப் புரியாதுடா. நீயும் காதலிச்சுப் பார். அப்போத் தெரியும் காதலின் வலி என்னன்னு. “ என்று மதனும் சளைக்காமல் சினிமா டயலாக் போன்று பேசினான்.

இனியும் இப்படியே விட்டால், இவன் படிப்பும் பாழாகி விடும் என்று புரிந்தது.

“சரி, இப்போதைக்கு அப்பாகிட்ட முறைச்சுக்காத. முதலில் படிப்பு முடியட்டும். அதுவரைக்கும் பிரின்ஸிபால் சொன்னதைக் கேளு. அப்புறம் நல்ல வேலையில செட்டில் ஆனப்புறம், அப்பா ஒத்துக்கலாம். இப்போதைக்கு அடக்கி வாசி”

மதனுக்கும் அது சரியென்றே பட்டது. வார இறுதியில் மட்டும் இருவரும் வெளியே சுற்றுவது என முடிவெடுத்தனர். 

மதனின் அப்பாவும் அதிக செல்லமும் அதிகக் காசுமே பையனைக் கெடுத்து விட்டதாக எண்ணினார். எனவே தேவையான அளவிற்கு மட்டுமே பணம் கொடுக்க ஆரம்பித்தார். அதை வைத்து கொடைக்கானல் செல்ல முடியாது என்றாகியது. வெளியூர் செல்லும் ஏதாவது ஒரு பஸ்ஸில் ஏறிச் செல்வதும், ‘அரைகுறையாக’ பயணத்தை முடிப்பதுமாக மதனின் கடைசிச் செமஸ்டர் சென்றது.

எங்கள் கல்லூரி வாழ்க்கை முடியும் நாளும் வந்தது. உண்மையான உலகம், பல பாடங்களுடன் எங்களுக்காகக் காத்திருந்தது. செமஸ்டர் முடிந்ததும், டிகிரி சர்ட்டிஃபிகேட் வாங்கும் முன்னரே மதன் சென்னை சென்று, வேலை தேடத் துவங்கினான். 

மதனின் அப்பாவின் மனதும் சற்று இரக்கப் பட்டது. தனக்கு இருப்பதோ ஒரே மகன், அவனது ஆசைக்குக் குறுக்கே தான் நிற்பது சரி தானா? மகனின் காதலா, குடும்ப கௌரவத்திற்காக மகனின் வாழ்க்கையில் தான் விளையாடுவது சரி தானா? என்று யோசிக்கத் தொடங்கினார். 

அதே நேரத்தில் ஜெனிஃபரின் அம்மாவும் மதனின் அப்பாவை நெருக்கத் தொடங்கினார்.

“சார், என்குயரி அது இதுன்னு எங்க பொண்ணு பேரு கெட்டுப் போச்சு. அதுக்குக் காரனம் உங்க பையன் தான். இப்போ நாங்க வேற பையனுக்கு அவளைக் கட்டிக் கொடுக்கலாம். ஆனாலும், பின்னாடி உண்மை தெரிஞ்சா, அவ வாழ்க்கை என்னாகிறது?” என்று ஃபோனில் அடிக்கடி பேசினார்.

மதனின் அப்பா அவர்களின் காதலுக்கு ஒத்துக் கொள்வதென்று முடிவெடுத்தார். 

ஆனாலும் விதி வலியது. 

கடைசி நேரத்தில் என்னை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்று விரும்பினார். 

(தொடர்ச்சி நாளை..)
மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_12"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

30 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, May 24, 2011

டபுள் மீனிங் பாடல்களும் கவியரசு கண்ணதாசனும்

எனது மனங்கவர்ந்த திரைப்படக் கவிஞர்களின் முக்கியமானவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். அவரது பாடல்களில் உள்ள விசேஷத்தன்மையே எளிமையான வார்த்தைகளும் ஆழ்ந்த பொருளும் தான்.

நேற்றிரவு திடீரென பழைய பாடல்களைக் கேட்கவேண்டுமெனத் தோன்றியது. என்னிடமிருந்த கலெக்சனில் இருந்து பாடல்களை ஓட விட்டேன். அப்போது தான் இரட்டை அர்த்தப் பாடல்கள் எழுதுவதிலும் வல்லவராக கவிஞர் விளங்கிய விஷயம் தெரிந்தது. 

உதாரணமாக ’குலமகள் ராதை’யில் வரும் இந்தப் பாடலைப் பாருங்கள்:

பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்

இரவிலே அவனைக் காண நானும் நடப்பேன் - அவன் 
எல்லோரும் பார்க்கும்படி உயரத்தில் இருப்பான்.

இதில் என்ன இருக்கிறது, நிலாவை உவமையாக வைத்து எழுதப்பட்ட பாடல் தானே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் படம் பார்த்தவர்களுக்கு இங்கு கவிஞர் செய்திருக்கும் நுணுக்கமான வேலை புரியும்.

அந்தப் படத்தில் சிவாஜியின் பெயர் சந்திரன். அவரும் சரோஜாதேவியும் காதலர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து விடுவார்கள். பலநாட்கள் கழித்து அதே ஊருக்கு சர்க்கஸ் சாகசக்காரராக சிவாஜி திரும்பி வருவார். கூடவே அவரை ஒருதலையாகக் காதலிக்கும் தேவிகாவும். 

விஷயம் அறிந்து சரோஜாதேவி சிவாஜியைப் பார்க்க பகலில் செல்வார். ‘இப்போது பார்க்க முடியாது. இரவு சர்க்கஸ் நடக்கும்போது டிக்கெட் வாங்கி வந்து வேடிக்கை பார்த்து விட்டுப் போ’ என்று சொல்லி விரட்டி விடுவார் தேவிகா. சோகத்தில் சரோஜாதேவி பாடும் பாடல் தான் அது:

பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்

இரவிலே அவனைக் காண நானும் நடப்பேன் - அவன் 
எல்லோரும் பார்க்கும்படி உயரத்தில் இருப்பான்.

இதே படத்தில் ’சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா? ’ பாடலின் பல்லவியிலும் சரணத்தில் வரும்

சந்திரன் ஒளியை உண்டு வாழும்
சாதகப் பறவை ஆனேனே நானே’ என்ற வரிகளிலும் கவிஞர் புகுந்து விளையாடி இருப்பார்.

அடுத்து அவரது இரட்டை அர்த்தப் புலமை வெளிப்பட்ட படம் வசந்த மாளிகை. அதில் நடிகர் திலகம் ஜமீன்தார் வீட்டுப் பிள்ளை. ஆனாலும் அவர்மீது அன்பு காட்ட அங்கு யாருக்கும் மனதோ நேரமோ கிடையாது. 


அந்த நேரத்தில் அவருக்கு பெர்சனல் செகரட்டரியாக வரும் வாணிஸ்ரீ, அந்தஸ்து காரணமாக அவர் மீது அன்பு காட்டவும் முடியாமல், எனக்கென்ன வென்று தள்ளி நிற்கவும் முடியாமல் தடுமாறுவார். 
அதே வீட்டில் வீணை ஒன்றும் யாராலும் கவனிக்கப் படாமல் கிடக்கும். இது போதாதா கவிஞருக்கு. அந்த வீணையை வாசித்தபடியே வாணிஸ்ரீ (பி.சுசீலா) பாடும் பாடல் இது:

கலைமகள் கைப் பொருளே – உன்னை
கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் – உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ!

(கலைமகள்)

நான் யார் உன்னை மீட்ட – வரும்
நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட
ஏனோ துடிக்கின்றேன் – ஒரு
நிலையில்லாமல் தவிக்கின்றேன்
விலை இல்லா மாளிகையில் – உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ!

அவர் பாடுவது வீணைக்கும் பொருந்தும், சிவாஜிக்கும் பொருந்தும். அதிலும் ‘ஏனோ துடிக்கின்றேன்’ எனும் இடத்தில் பி.சுசீலாவின் குரலும் கே.வி.மகாதேவனின் இசையும் அட அட!

இப்போது சொல்லுங்கள், கவியரசர் இரட்டை அர்த்தப் பாடல் புனைவதிலும் வல்லவர் தானே?

டிஸ்கி-1: கவியரசர் எழுதிய அந்தப் பாட்டும் எனக்குத் தெரியும். ஆனாலும் கொஞ்ச நாளைக்கு அதைப் பத்திப் பேஷ் மாட்டேன்..பேஷ் மாட்டேன்!

டிஸ்கி-2: வேறு ஏதாவது எதிர்பார்த்து வந்த நல்ல உள்ளங்கள் எனது ‘நானா யோசிச்சேன்’ பகுதிக்குப் போய் கடுப்பைத் தணித்துக் கொள்ளவும்.

மேலும் வாசிக்க... "டபுள் மீனிங் பாடல்களும் கவியரசு கண்ணதாசனும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

34 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, May 22, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_11

தீராத பசிக்காக

தீவிர வேட்டை யில் இறங்கும்.

அனைத்தின் மீதும் அதன்

அதிகாரம் வெல்லும்.


எதிர்ப்பவனின் சிந்தனை

செயல்படாமல் முடங்கும்

எதிர்க்காதவனின் சக்தி

முழுதாக உறிஞ்சப்படும்.


பசித்திருக்கும் வேளையில்

பார்ப்போரை எல்லாம் குதறும்.

பசியாறிய வேளையில் 

பசுவெனச் சாதுவாய் இருக்கும்.

சிங்கம் போன்றது காமம்!

முந்தைய பகுதிகளுக்கு: இங்கே!


ந்திரித்து விட்ட ஆடு போல் வந்து சேர்ந்தான் மதன். 

“என்னடா முடிஞ்சுதா?” புலன்விசாரணையைத் தொடங்கினேன்.
“ம்”
“என்னடா, இண்டெரெஸ்ட்டே இல்லாமச் சொல்றே? ஊத்திக்கிச்சா?”
“இல்லைடா, முடிஞ்சிச்சு..அவ என்னை லவ் பண்றாளாம்டா”
“அதைத் தானே ஆரம்பத்துல இருந்தே சொல்றா..சரி, மேட்டர் முடிஞ்சிடுச்சில்ல, சீக்கிரம் கழட்டி விடுற வழியைப் பாரு”
“ம்”

டுத்த புதன்கிழமையும் லேப்புக்கு வராமல் ஜெனிஃபருடன் எங்கோ போனான் மதன்.
“இன்னும் ஏண்டா அவ கூடச் சுத்துறே?”
“நமக்கு காலேஜ் இன்னும் ஆறு மாசம்தானடா..அதுவரைக்கும் சுத்திக்கிறேண்டா..அப்புறம் யாரு இவளைத் திரும்பிப் பார்க்கப் போறாங்க?” என்றான் மதன்.

அதை அவன் உண்மையாகச் சொல்லவில்லை என்பது புரிந்தது. தினமும் அவளுடன் வெளியே செல்லத் தொடங்கினான்.

கண்ணீரும் காமமுமாய் அவர்களின் பொழுது நகர்ந்தது. நான் அவளை விட்டு விலகும்படி அறிவுறுத்துவேன். சரி, சரியென்று சொல்வான்.

அடுத்த நாளே அவள் கூப்பிட்டவுடன் கிளம்பி விடுவான்.

அது காதலும் இல்லாமல் காமமும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாய் அந்த உறவு தொடர்ந்தது. 

அவள் அழுதாள். அவன் அவளின் கண்ணீர் துடைத்தான். ‘நீ இல்லாமல் எனக்கும் வாழ்வில்லை’ என்று சத்தியம் செய்தான். அவள் சந்தோசத்தில் அவனைக் கட்டிக் கொண்டாள். காமத்தின் வழியே தனது சந்தோசத்தை அவனுக்கும் பகிர்ந்தளித்தாள்.

“நீங்கள்லாம் வேணும்னே அவளைத் தப்பாப் பேசுறீங்க..அவள் அப்படி இல்லை. அவளே எல்லாத்தையும் சொல்லிட்டா” என்று எங்கள் மீதே பாய்ந்தான்.

’இந்த ஆண்கள் ஏன் இப்படிக் குரூரமாய் இருக்கின்றார்கள்? ஏன் இப்படிச் சர்வ சாதாரணமாக ஒரு பெண்ணைப் பற்றி எந்த வித ஆதாரமும் இன்றி வம்பு பேசுகிறார்கள்? தங்கள் வீட்டுப் பெண் என்றால் இப்படிப் பேச நா எழுமா?’ தர்க்கரீதியாக விவாதிக்க முடியாத கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான்.

அவள் தினமும் ‘நீ இல்லேன்னாச் செத்துடுவேன்’ என்று அழுதாள். அழுது முடித்ததும் காமத்தில் அவனை மூழ்கடித்தாள். என்ன நடக்கிறதென்று புரியாத நிலைக்குப் போனான் மதன்.

வகுப்பறை நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் கல்லூரி வளாகத்தில் ஒன்றாகவே சுத்தினார்கள்.

பிரவீணாவின் முன் வெற்றிகரமான ஆண்மகனாய் நின்றான்.

கண்டிப்புக்குப் பெயர்போன எங்கள் கல்லூரி விழித்துக் கொண்டது. அவர்களின் வருகைப்பதிவேடுகள் ஆராயப்பட்டன. இருவரும் ஒரே நேரத்தில் வகுப்புகளை கட் அடித்ததை எளிதாகக் 

கண்டுபிடித்தார்கள். அவர்களின் பெற்றோருக்கு கடிதம் அனுப்பப் பட்டது.

“கல்லூரியின் நற்பெயரைக் கெடுக்கும்படி நடந்துகொண்ட உங்கள் மகன்/மகள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? நேரில் வந்து விளக்கம் கொடுக்கவும்” என்றது அக்கடிதம்.

தனின் அப்பா வந்திறங்கினார். அவர்களது ஊரில் கௌரமான மனிதர் அவர். சொந்தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை பஞ்சாயத்து செய்து தீர்த்து வைப்பவர். வட்டிக் கொடை 

வாங்கலும் உண்டு. அப்படி இருந்துவிட்டு என்கொயரிக்காக வந்ததை பெரிய அவமானமாக நினைத்தார்.

மதனிடம் ஒன்றும் பேசவில்லை. என்னிடம் மட்டுமே பேசினார்.

“என்னப்பா இது? நீயாவது என்கிட்ட முதல்லயே சொல்லி இருக்கலாமே?”
“இல்லேப்பா..சும்மா தான் பழகுறேன்னு சொன்னான்”
“இது நல்லாவாப்பா இருக்கு..இப்போ நான் என்ன செய்யணும்? எதுக்கு வரச் சொல்லி இருக்காங்க?”
“இனிமே என் பையன் இப்படி நடந்துக்க மாட்டான்னு உறுதி கேட்பாங்க. ஒருவேளை லெட்டர் ஏதாவது எழுதித் தர வேண்டி இருக்கும். அவ்வளவு தான்”

“மன்னிப்புக் கடிதமா? இவன் ஊர் மேஞ்சதுக்கு நான் ஒவ்வொருத்தர்கிட்டயும் மன்னிப்புக் கேட்கணுமா?”

“அப்ப்டி இல்லைப்பா..சும்மா எழுதிக் கொடுத்தாப் போதும்”

‘யாரு அந்தப் பொண்ணு? என்ன ஜாதி அவ?”
“இப்போ இருக்குறது திர்நெவேலி. சொந்த ஊரு வடக்க ஏதோ. அவங்க ...ஜாதி”
“ஓஹோ..எங்க ஜாதியும் கிடையாதா? ம்”

கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்று புரிந்து, எதுவும் பேசாமல் அமைதி ஆனோம்.

விசாரணை அறையின் வாசலில் காத்திருந்தேன்.

ஜெனிஃபரின் அம்மாவும் வந்திருந்தார்.

ஒரு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்தது. அவர்களது எல்லா ரிகார்டுகளும் அலசப்பட்டன. ’இனிமேல் ஒன்றாகக் கல்லூரி வளாகத்தில் சுற்றினாலோ, வகுப்புக்கு வராமல் போனாலோ கல்லூரியில் இருந்து நீக்கப்படுவர்’ என்ற அறிவிப்புடன் விசாரணை முடிந்தது.

வெளியில் வந்ததும் ‘இனிமேலாவது அவனை ஒழுங்கா இருக்கச் சொல்லுப்பா”என்றார்.

“இருப்பான்பா..என்னடா, நீயே சொல்லு”

மதன் பேசாமல் இருந்தான்.

“ஏன் துரை பேச மாட்டாரோ?” என்றார்.

“அவ தான் எனக்கு எல்லாம். அவ இல்லேன்னா இந்தப் படிப்பே எனக்குத் தேவை இல்லை.” என்றான் மதன்.

அதே நேரத்தில் ”அவன் இல்லேன்னா அடுத்த நிமிசமே நான் செத்திடுவேன்” என்று ஜெனிஃபர் தன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_11"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

43 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, May 21, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_10

மயிலுக்கு தோகையும்
குயிலுக்கு குரலும்
அணிகலனாய் அளித்தஇறைவன்
என்னை தனியே அனுப்பினான்.

எனது அணிகலன்
எதுவென கேட்டபோது
உனது பெயர் சொல்லி
சந்தோசத்தில் ஆழ்த்தினான்!முந்தைய பகுதிகளுக்கு: இங்கே!

இந்திய சமூகத்தில் ஆண்கள் சந்திக்கின்ற மிகப்பெரிய சவால் கடைக்குப் போய்க் காண்டம் வாங்குவது தான். 

அதுவும் முதன்முதலாக காண்டம் வாங்குவதென்பது வீர சாகசம் தான். முதலில் அதிகக் கூட்டம் வராத கடையைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆண்டவன் அருளால் அந்தக் கடையில் லேடீஸ் யாரும் வேலை செய்யக் கூடாது. நாம் போய் நிற்கும் நேரம், ஆண்கள்கூட அந்தக் கடைக்கு வந்துவிடக் கூடாது. இவ்வாறு தடை பல தாண்டி, காண்டம் வாங்க வேண்டி இருப்பதால் தானோ என்னவோ இந்திய மக்கள் தொகை எகிறிப் போய்க் கிடக்கிறது.

கொடைக்கானல் செல்வதென்று முடிவானதும் மதனும் காண்டம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானான்.

“அவளுக்கு நாம தான் ஃபர்ஸ்டான்னு தெரியலை. தெரிஞ்சாக்கூட தைரியமாக் காண்டம் இல்லாமப் போகலாம். இப்போ பயமா இருக்கு” என்று புலம்பியவாறே மதன் கடைக்குக் கிளம்பிப்போனான்.

கொஞ்சநேரத்தில் கையில் ஹார்லிக்ஸ் பாட்டிலுடன் வந்து சேர்ந்தான்.

“ டேய், இது எதுக்குடா?” என்றேன்.
“அட ஏண்டா நீ வேற..காண்டம் வாங்கத் தாண்டா போனேன். நான் போய் அந்த மெடிக்கல்ல நின்னுக்குட்டு, எப்படிக் கேட்கன்னு திகைச்சுக்கிட்டே நின்னனா, அப்போ திடீர்னு ரெண்டு லேடீஸ் வந்துட்டாங்க. மெடிக்கல்காரன் ‘என்ன தம்பி வேணும்’னு நச்சரிச்சிட்டான். அப்புறம் என்ன செய்யற்து, ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் கொடுன்னு வாங்கிக்கிட்டு வந்துட்டேன். இந்தாங்கடா நல்லாச் சாப்புடுங்க”

எங்களுக்குச் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகியது.

மதன் அடித்த அட்டெம்ப்ட்டில் வெற்றி பெற்றான். நண்பர்கள் பைக் தந்து உதவ, ஜெனிஃபருடன் கொடைக்கானலுக்கு கடைசிக் கன்னி யாத்திரை கிளம்பினான்.


“ரூம் போட்டுட்டு வெளில சுத்தலாமா, இல்லே சுத்தீட்டு மதியம் வந்து ரூம் போட்டுக்கலாமா?” ஆர்வத்தை அடக்கியபடி இயல்பாகக் கேட்டான் மதன்.

“ரூமுக்கு முதல்ல போயிடுவோம். ரிஃப்ரெஷ் பண்ணீட்டு அப்புறம் வெளில போகலாம்” என்றால் ஜெனிஃபர்.

பைக்கை அந்த லாட்ஜுக்கு விட்டான்.

அந்த லாட்ஜில் இருந்த ரிஷப்ஷனிஸ்ட், மிகமிக இயல்பாக அவர்களிடம் பேசினான். புதிய கஸ்டமர் மிரண்டு விடக்கூடாது என்ற அக்கறை அவன் பேச்சில் தெரிந்தது.

“ஃபைவ் தவுசண்ட்ஸ் அட்வான்ஸ் கொடுங்க சார். செகண்ட் ஃப்ளோர்ல ரூம் போடறேன். அங்க வியூ நல்லா இருக்கும். எந்தத் தொந்தரவும் இருக்காது சார். பாய், சாருக்கு ரூமைக் காட்டு”

அந்த முப்பது தாண்டிய பாய், அவர்களை ரூமிற்கு அழைத்துச் சென்றான். இது மிகவும் சாதாரண விஷயம் என்பது போன்றே அவன் முகம் இருந்தது. லாட்ஜில் உள்ள எல்லோருமே கஸ்டமர்களைக் கண்டுகொள்ளாமல் நடந்து கொள்ளப் பழகி இருந்தார்கள்.

ரூமைத் திறந்த படியே ”வேற எதுனா வேணும்னா ரிஷப்சனுக்குக் கூப்பிடுங்க சார். 9 டயல் பண்ணாப் போதும்” என்றான். சொல்லிவிட்டு, திரும்பிப் பாராமல் நடந்தான்.

ரூமிற்குள் ஜெனிஃபருடன் தயங்கியபடியே நின்றான் மதன்.

“அப்ப்ப்பா, பைக்ல இவ்வளவு தூரம் வந்தது டயர்ட் ஆகிடுச்சு” என்றபடியே அங்கிருந்த பெரிய கட்டிலில் சாய்ந்தாள் ஜெனிஃபர்.

“ம்..ஆமா, எனக்கும் தான்” என்றான் மதன். குரல் தொண்டையிலிருந்து வராமல் கிணற்றுக்குள்ளிருந்து வந்தது. 

“மதன்.. ஏன் நிக்கிறே?. உட்காரு... நான் உங்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?”

“என்ன?”

“என்னைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?”

மதன் மிரண்டான்.

“நான்..நான் உன்னைப் பத்தி...ரொம்ப நல்ல பொண்ணு..ரொம்ப அழகு..எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்” தத்துப் பித்தென்று உளறுவது மதனுக்கே தெரிந்தது.

“பொய் சொல்லாத..நான் சொல்லட்டா?”

மதன் அவளையே பார்த்தபடி பேசாமல் இருந்தான்.

“நீ என்னை தே......ன்னு தானே நினைக்கே?”

மதன் முகம் பேயறைந்தது போல் ஆகியது.

”சினிமாக்கு வா-ன்னு கூப்பிட்டே, வந்தேன். பார்க்குக்குப் போவோம்னு கூப்பிட்டே, வந்தேன். இப்போ லாட்ஜுக்கே கூட்டி வந்துட்ட! எனக்குத் தெரியும், காலேஜ்ல உன் ஃப்ரண்ட்ஸ்லாம் என்ன பேசிக்கிறாங்கன்னு. அந்த சீனியர்கூட நான் படுத்துட்டேன்னே சொல்றாங்க இல்லே? உண்மையில என்ன நடந்துச்சு தெரியுமா? எங்க கிளாஸ்ல டூர் போன அன்னைக்கு எங்கப்பா ஃபாரின் கிளம்பினார். அதனால அவரை வழியனுப்ப நான் திருவனந்தபுரம் போயிட்டேன். ஆனா அவன், நான் அவன்கூடத் தான் அன்னைக்குப் படுத்தேன்னு ஃப்ரண்ட்ஸ்க கிட்டச் சொல்லி இருக்கான். 

அவனுக்கும் எனக்கும் இடையில ஒன்னுமே இருந்ததில்லைன்னு நான் சொல்லலை. எங்க ரெண்டு பேருக்கு இடையில இன்ஃபாக்சுவேஷன் இருந்துச்சு. அவன் என்மேல உண்மையான அக்கறையோட இருக்கான்னு நான் நினைச்சேன். ஆனால், அவன் ஃப்ரண்ட்ஸ்ங்க கிட்ட என்னைப் பத்திக் கேவலமாப் பேசுறான்னு தெரிஞ்ச அந்த நிமிசமே அவனை நான் தூக்கி எறிஞ்சுட்டேன். அப்புறம் என்கிட்ட வந்து எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். நான் கண்டுக்கலை. அந்தக் கடுப்புல இன்னும் மோசமா என்னைப் பத்தி காலேஜ் முழுக்கப் பேசிகிட்டு இருக்கான்..

இந்த ஆம்பிளைங்க ஏன் இப்படி இருக்கீங்கன்னு எனக்குப் புரியலை மதன். போறபோக்குல ஒரு பொண்ணைப் பத்தி ஏதாவது சொல்லிடுவீங்க. அது உண்மையான்னே உங்களுக்குத் தெரியாது, ஆனா அது பொய்யின்னு நிரூபிக்கறது மட்டும் எங்க பொறுப்பு இல்லையா?” 

ஜெனிஃபரின் கண்கள் கலங்கி, கண்ணீர் மதனை மறைத்தது. கண்ணீரைத் துடைத்தபடியே தொடர்ந்தாள்.

”நான் படிச்சது எல்லாமே ஹாஸ்டல்ல மதன். ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்ல இருந்து இப்போ காலேஜ் வரைக்கும் ஹாஸ்டல் தான். என் அப்பா-அம்மாவே எனக்குக் கெஸ்ட் தான். என்னை வளர்த்தது சிரிக்கவே தெரியாத ஹாஸ்டல் வார்டன்ஸ் தான். அம்மா பாசமோ அப்பா பாசமோ எனக்குக் கிடைச்சதே இல்லை. எல்லா உறவுமே அஃபிஸியலாத் தான் எனக்கு அமைஞ்சது..அதனால தான் காலேஜ் வரவும் அந்த சீனியர் என்னை லவ் பண்றேன்னு சொன்னப்போ நான் ஏத்துக்கிட்டேன். என் மேலயும் அன்பு காட்ட ஒரு ஜீவன்னு எவ்வள்வு சந்தோசமா இருந்தேன் தெரியுமா? ஆனா அவனோட சுயரூபம் தெரிஞ்சப்போ, எனக்கு வாழ்க்கையே வெறுத்திடுச்சு மதன்.

அப்போ தான் பிரவீணாக்காக நீ கையை அறுத்துக்கிட்டது, அவளை உருகி உருகி காதலிக்கிறதெல்லாம் எனக்குத் தெரிய வந்துச்சு. இவ்வளவு சின்சியரா லவ் பண்ற ஒருத்தன் எனக்குக் கிடைச்சா, எவ்வளவு நல்லா இருக்கும்னு யோசிச்சேன். அதுக்கப்புறம் ஃபிரண்ட்ஸ்கிட்ட உன்னைப் பத்தி விசாரிச்சேன். நீ அம்மா இழந்த சோகத்தை என்கிட்டச் சொன்னாங்க.

உனக்குப் புரியுதா மதன்..நீயும் நானும் ஒன்னு. நமக்குத் தேவை அன்பு. அதைத் தான் நானும் நீயும் தப்பான இடத்துல தேடியிருக்கோம். இப்போ ஆண்டவர் அருளால நீ எனக்குக் கிடைச்சிருக்கே. உனக்கு என்ன தேவையோ அதை நான் தருவேன். உனக்கு எது சந்தோசமோ அதை நான் செய்வேன்” என்றபடியே கட்டியிருந்த சேலையின் மாராப்பை விலக்கினாள்.

”இதுக்காகத் தானே நீ என் பின்னால வந்தே? எடுத்துக்கோ..அதுக்கு அப்புறமும் உனக்கு என்மேல அன்பிருந்தா, நான் அதிர்ஷ்டசாலி. இல்லே, நான் உனக்கு புளிச்சுப் போயிட்டேன்னா, நான் கொடுத்து வச்சது அவ்வளவு தான்னு நினைச்சுக்கிறேன். வா!”

குழம்பிய நிலையில் மதன் அவளை எடுத்துக் கொண்டான்.

மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_10"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

42 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, May 18, 2011

பிரசவ நேரத்தில் கணவன் தேவையா?


எனக்கு பிரசவம் என்றால் பயம்.

என்னைப் பிரசவித்த கொஞ்ச நேரத்தில், என்னைக் கொஞ்சாமலே என் தாய் இறந்தார். அதுகூடக் காரணமாய் இருக்கலாம்.

சினிமாவில் கூட என்னால் பிரசவக் காட்சியைக் காண முடியாது. சிறு வயதில் இருந்தே, பிரசவக் காட்சி வந்ததென்றால் கண்ணையும் காதையும் நான் மூடிக் கொள்வது வழக்கம். கிம்டுகிக்-ன் படங்களை விடவும் கொடூரக் காட்சிகளைக் கொண்ட படம் ‘தாலாட்ட்டுக் கேட்குதம்மா’ தான். கதாநாயகியின் பிரசவ பயத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் அது. தெரியாமல் படம் பார்க்கப் போய்விட்டு, பாதியிலேயே ஓடி வந்தேன்.

திருமண வாழ்வில் நான் பயந்த விஷயமும் பிரசவம் தான். இதைத் தவிர்க்கவே முடியாதா என்று பலவாறு யோசித்திருக்கிறேன். ’நார்மல் டெலிவரியில் தான் ஆபத்து அதிகம், சிசேரியன் அப்படியல்ல’ என்று நானாகவே நினைத்துக் கொண்டேன். சிசேரியனுக்குப் பின் படுகின்ற கஷ்டங்களைப் பற்றி அப்போது எனக்குத் தெரியவில்லை. 

என் மனைவி கர்ப்பம் தரித்ததை அறிந்தபோது, சந்தோசமும் பயமும் சரி பாதியாக நின்றன.

ஆனால் என் மனைவி தைரியமானவர். நார்மல் டெலிவரி தான் என்பதில் பிடிவாதமாக இருந்தார். தினமும் வீட்டை குத்துக்காலிட்டு துடைப்பது, நடைப்பயிற்சி என்று நார்மல் டெலிவரிக்காகச் செய்ய வேண்டியவற்றை விடாமல் செய்து வந்தார்.
கூடவே ஒரு பயங்கரமான கோரிக்கையையும் வைத்தார். ஆம், பிரசவ நேரத்தில் நான் அருகில் இருக்க வேண்டும் என்றார். என்னால் அதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இதிலிருந்து எப்படியாவது தப்பி விடவேண்டும் என்றே முடிவு செய்தேன். ’பிள்ளை பெத்துக்கப் போறது அவங்க..பிரசவம் பார்க்கப் போறது டாக்டர். இடையில் நாம எதுக்கு’ என்று மனதிற்குள் நினைத்தபடியே சரி சரியென்று தலையாட்டி வைத்தேன்.

’மே இரண்டாவது வாரத்தில் பிரசவம் ஆகலாம்’ என்று டாக்டர் சொன்னார். ’அப்போ அந்த தேதியில் எங்காவது ஓடி விட வேண்டியது தான்’ என்று முடிவு செய்து ஒரு முக்கிய வேலை என்று சொல்லி விட்டு, கோவை போய்விட்டேன். ஆனாலும் அவர்கள் விடவில்லை. மறுநாளே ஃபோன் செய்து ’உடனே கிள்ம்பி வாங்க’ என்று கண்டிப்பான அழைப்பு வந்தது. வேறுவழியே இல்லாமல் ஊர் போய்ச் சேர்ந்தேன். 

முதல் நாளே வலி வர ஆரம்பித்து விட்டது. ‘வாங்க, உடனே ஆஸ்பத்திரி போவோம், என்றேன். அதற்கு ‘இந்த வலி போதாது. இன்னும் நல்லா வலிக்கணும். பொறுங்க’ என்று இரக்கமேயில்லாமல் அனுபவஸ்தர்கள் சொன்னார்கள். 

மறுநாள் காலையிலேயே கடுமையான வேதனை தங்கமணி முகத்தில் தெரிந்தது. வலிக்கிறதா என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ‘இப்பவாவது போவோம்..வாங்க..வாங்க’ என்று எல்லோரையும் அவசரப்படுத்தினேன்.

ஒரு வழியாக டாக்ஸிக்கு கால் செய்தோம். வந்தது. டிரைவர் ‘வண்டியைத் திருப்பி நிறுத்தவா’ என்றார். ’சரி, நிறுத்துங்க’ என்றேன். காரைத் திருப்பினால், பின் கண்ணாடியில் ‘யாமிருக்க பயமேன்’ எனும் முருகர் படம்!

கொஞ்சம் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. பிறகு ஆஸ்பத்திரிக்குச் சென்றோம்.     அஸ்பத்திரியை நெருங்க நெருங்க எனக்கு பயம் அதிகம் ஆகியது. ஆஸ்பத்திரியில் ஒரு ரூம் கொடுத்து ‘இன்னும் வலி வரணும். அதுவரைக்கும் இங்க வெயிட் பண்ணுங்க’ன்னு சொன்னாங்க. ‘இன்னுமா’ன்னு நடுங்கிப் போனேன்.

ஒரு வழியாக அடுத்த ஒரு மணி நேரத்தில் ‘பிரசவ அறைக்குள் அழைத்துப் போனார்கள். அதன் வாசலில் உள்ள பெஞ்சில் அமர்ந்திருந்தேன். இனி நம்மால் செய்ய முடிவதென்று ஏதுமில்லை என்பது புரிந்தது. திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என முருகரை வேண்டியபடியே அமர்ந்திருந்தேன்.

திடீரென உள்ளேயிருந்து ‘அம்மா’ என்ற அலறல் கேட்டது. எனக்கு கை கால் எல்லாம் நடுங்கி விட்டது. இனியும் நம்மால் தாங்க முடியாதென உணர்ந்தவனாக ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்து நின்று கொண்டேன். 

பிறகு மாமியார் ஓடி வந்தார். ‘மாப்ளே, குழந்தை பிறந்தாச்சு..சுகப்பிரசவம்’ என்று சொன்னார்.  அடுத்து அரைமணி நேரம் கழித்து குழந்தையை மட்டும் கொண்டு வந்தார்கள். ரோஸ் நிறத்தில் மிருதுவாக என் மகன். கையில் ஏந்திப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

திரும்ப குழந்தையை வாங்கிக் கொண்டு போனார்கள். ஒரு மணி நேரம் கழித்து என் மனைவியை அழைத்து வந்தார்கள். என்னைப் பார்த்ததும் தளர்ந்து போய்ச் சிரித்தார். எதுவும் சொல்ல முடியாமல் கை பிடித்து அழுத்தினேன். ‘இப்போ சந்தோசமா?’ என்றார். எனக்கு அழுகை வந்தது. எங்கள் வீட்டிலும் நல்ல படியாக ஒரு பிரசவம்!

சில நாட்கள் கழித்து ‘எதற்காக என்னை பிரசவத்தின் போது இருக்கச் சொல்லிக் கட்டாயப் படுத்தினாய்?’ என்று கேட்டேன்.

‘யார் இருந்தாலும் இல்லேன்னாலும், நீங்க இருந்தா மனசுக்குத் தெம்பா இருக்கும். நம்ம குழந்தை பிறந்த அந்த நிமிசச் சந்தோசத்தை கூட இருந்து பகிர்ந்துக்கணும்னும் நினைச்சேன். உள்ளே இருக்கும்போது கூட, வெளில இந்தப் புள்ளை காத்திருக்குதே.நல்லபடியாக் குழந்தையைப் பெத்துக்  காட்டணும்னு தோணுச்சு. வலியைத் தாங்க அதுவும் உதவியா இருந்துச்சு” என்றார்.

அலுவலக நண்பர் பயந்து கொண்டு, வேலையைக் காரணம் காட்டி, அவரது மனைவியின் பிரசவத்திற்குப் போகவில்லையாம். இன்று வரை அவருக்குத் திட்டு விழுகிறது. இப்போதெல்லாம் நண்பர்களுக்கு இந்த விஷயத்தில் நான் சொல்வது இது தான். ‘எப்படியும் பிரசவ அறைக்குள் கொஞ்ச நேரம் முன்பே அழைத்து விடுவார்கள். அவர்கள் உள்ளே நுழைந்த்தும், வெளியே ஓடிக் கொள்ளுங்கள். ஆனால் பயந்து கொண்டோ, அலட்சியத்தாலோ போகாமல் மட்டும் இருந்து விடாதீர்கள்.’

நமக்கு பெரிதாகத் தோன்றும் விஷயங்களெல்லாம் அவர்களுக்கு சாதாரணமாகத் தெரிகின்றது. நாம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கும் சிறு விஷயங்கள்கூட அவர்களுக்கு பெரிய சந்தோசத்தையும் மனத் திருப்தியையும் தருகின்றது.

கடுமையான வலியை எதிர்கொண்டு, ஏகப்பட்ட ரத்தத்தையும் இழந்து, ஏறக்குறைய உடலைச் சின்னாபின்னமாக்கி குழந்தையைப் பெற்றுக் கொடுப்பவர் பதிலுக்கு எதிர்பார்ப்பது நம் அருகாமையை மட்டும் தான். நம் வாழ்க்கைத் துணைக்காக அதைக் கூடச் செய்ய மாட்டோமா என்ன?

இன்று தான் அந்த நன்னாள். என் மகன் பால முருகனின் பிறந்த நாள்!

மேலும் வாசிக்க... "பிரசவ நேரத்தில் கணவன் தேவையா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

90 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.