Wednesday, July 31, 2013

சித்திரம் பேசுதடி - திரை விமர்சனம் (பாகம்-1)


அறிமுகம்:

தமிழ்சினிமாவில் வருடத்திற்கு 150 படங்களுக்கு மேல் வெளியாகின்றன. இந்தப் படங்களின் முன் நிற்கும் பெரும் சவால், மக்களின் கவனத்தைக் கவர்வது தான்.

சராசரி சினிமா ரசிகனை தியேட்டருக்கு வரவைக்க, பிரபல நடிகர்கள்/இயக்குநர்களின் பங்களிப்பு அவசியம் ஆகின்றது. அவ்வாறு இல்லாமல், புதிய இயக்குநர் மற்றும் புதுமுக நடிகர்களின் பங்களிப்பில் உருவாகும் படங்களின் வியாபார ரீதியிலான வெற்றி என்பது, இந்த தகவல் தொழில்நுட்பக் காலத்திலும், கஷ்டமான ஒன்றாகவே இருக்கிறது. ஆரண்ய காண்டம் படத்திற்கு நேர்ந்த கதியை நாம் அறிவோம். ஏறக்குறைய ஆரண்ய காண்டம் போன்ற மார்க்கெட்டிங் குறைபாடுகளுடன் 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான படம் தான் "சித்திரம் பேசுதடி".

புதிய இயக்குநர், புதிய இசையமைப்பாளர், புதிய ஹீரோ மற்றும் புதிய ஹீரோ என ஏறக்குறைய புதுமுகங்களாலேயே எடுக்கப்பட்ட இந்தப் படம், வெளியான உடனேயேபாக்ஸ் ஆபீஃஸில் சுருண்டதில் ஆச்சரியம் இல்லை. பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டாலும், படத்தில் இடம்பெற்ற 'வாளை மீனுக்கும்.."பாடல் சேனல்களில் சூப்பர்ஹிட் ஆனது.

அதே நேரத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு, இது வழக்கமான படம் அல்ல என்று புரிந்துபோக, படத்திற்கு மறுவாழ்வு பிறந்தது. அதே ஆண்டு மார்ச் மாதம், சித்திரம் பேசுதடி நிறைய நல்ல தியேட்டர்களில் அதிக பப்ளிசிட்டியுடன் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அதன்பின், அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக இந்தப் படம் ஆனது வரலாறு.

ஒரு நல்ல சினிமாவிற்கு பாடல்கள் தேவையோ இல்லையோ, ஆனால் சினிமா வியாபாரத்திற்கு பாடல் அவசியமாய் இருக்கிறது என்று பலருக்கும் புரிய வைத்தது கானா உலகநாதனின் 'வாளை மீனுக்கும்..' பாடல்.

 

ஒன் லைன்:

வறுமையின் காரணமாக அடியாள் வேலை பார்க்கும் திருவிற்கு, சாருலதாவுடன் மோதலுக்குப் பின் காதல் மலர்கிறது. அந்தக் காதலுக்கு இருதரப்பு குடும்பமும் சம்மதம் தெரிவித்த நிலையிலும், ஒரு பெரும் தடை ஏற்படுகிறது. அதையும் தாண்டி, அந்தக் காதல் ஜெயித்ததா?

தீம்:

நாம் ஒரு மனிதனின் குணாதியசத்தை தோற்றத்தையும் வசதியையும் வைத்தே கணக்கிடுகிறோம். வெளியில் தெரியும் தோற்றமே, உள்ளுக்குள்ளும் இருக்கும் என்று நம்புகிறோம். அது சரி தானா? அடியாளாய் அழுக்குச் சட்டையுடன் திரிபவனும், ஜென்டில் மேனாய் வெள்ளை உடைகளில் வலம்வருபவனும் உள்ளுக்குள்ளும் அப்படியே தான் இருக்கிறார்களா?

மொத்தத்தில் அகத்தின் அழகு முகத்தில் தெரியுமா?

கதை:

படிக்காத, வேலைக்காக அலையும் இளைஞனான திருநாவுக்கரசு என்ற திரு, ஆபத்தில் இருக்கும் இன்னொரு இளைஞனைக் காக்கிறான். அந்த இளைஞனின் தந்தை, அந்த ஊரில் ஒரு மினி தாதாவான அண்ணாச்சி. எனவே அவர் திருவை தன் அடியாளாக சேர்த்துக்கொள்கிறார்.

சாருலதா என்ற சாரு, அன்பான அப்பாவினால் வளர்க்கப்பட்ட மனித நேயமிக்க பெண். அவளின் அப்பாவின் நண்பர் நடத்தும் ஆர்பன் - எயிடு எனும் தன்னார்வுத் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.

திரு-சாரு எனும் இந்த இரு எதிரெதிர் துருவங்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. அவளின் அறிவுறுத்தலில் திரு அடியாள் வேலையை விட்டுத் திருந்த, இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர்.

இரு வீட்டாரும் இந்தத் திருமணத்திற்கு சம்மதித்து, திருமண ஏற்பாடுகள் நடக்கும் நேரத்தில், திரு விபச்சார வழக்கில் கைது செய்யப்படுகிறான். திருமணம் தடைபட, சாருவின் அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். திரு மீண்டும் அண்ணாச்சியிடம் வேலைக்குச் சேர்கிறான்.

சாரு, தன் அப்பாவின் நண்பரிடம் அடைக்கலம் ஆகிறாள். அவளுக்கு அவர் வேறு திருமண ஏற்பாடு செய்ய, அண்ணாச்சியால் அந்த திருமணத்திற்கு தடை ஏற்படுகிறது. அண்ணாச்சியின் பையன், சாருவைக் காதலிப்பதே அதன் காரணம்.

அண்ணாச்சியின் தடையை மீறி, சாருவின் திருமணத்தை நடத்தி வைக்க திரு முடிவுசெய்கிறான். அண்ணாச்சியைவே எதிர்த்து நிற்கின்றான். இறுதியில் சாருவும் அண்ணாச்சியும் உண்மையை உணர்ந்துகொள்ள, திருவின் காதல் ஜெயிக்கிறது.

அந்த உண்மை, படத்தின் மாபெரும் ட்விஸ்ட், தூண். விபச்சாரம் செய்யப் போனது திரு அல்ல, இளம்வயதிலேயே மனைவியைப் பறி கொடுத்து மகளுக்காகவே வாழ்ந்த சாருவின் அப்பா!

பொதுவாக காதலுக்கு அந்தஸ்து குறுக்கே வரும் அல்லது ஜாதி குறுக்கே வரும் அல்லது (இந்தப் படத்தில் வந்தது போல்) வில்லனின் ஒரு தலைக்காதல் குறுக்கே வரும். ஆனால் ஒரு சராசரி மனிதனின் பலவீனம், ஒரு காதலை, அந்த காதல் ஜோடிகளின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்ட அவலத்தை இந்தப் படம் சொன்னது. காதலுக்கு எதிரியாக வருபவரை வெறுத்தே பழகிய ஆடியன்ஸுக்கு, சாருவின் அப்பாவை எதிர்கொள்வது பெரும் அதிர்ச்சியாகவும் சவாலாகவும் இருந்தது. அதுவே இந்த சாதாரண காதல் கதையை, வித்தியாசமானதாக உயர்த்தியது.

"சினிமா என்பது கதை சொல்லும் மீடியா தான். நான் என் படங்களில் கதை தான் சொல்கிறேன்" என்று மிஷ்கின் முன்பொரு பேட்டியில் சொன்னார். அதற்கு இந்தப் படம் சாட்சி.

(அலசல் தொடரும்)

மேலும் வாசிக்க... "சித்திரம் பேசுதடி - திரை விமர்சனம் (பாகம்-1)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, July 29, 2013

ஹன்சிகா...எங்கிருந்தாலும் வாழ்க! (நானா யோசிச்சேன்)

டிஸ்கி: ரொம்ப நாள் கழிச்சு உங்களை சந்திக்கிறதுல சந்தோசம்..ஆனா இப்படி ஒரு துக்கமான மனநிலைமைல சந்திக்க வேண்டியதாப் போச்சே.....!

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
மாமா டவுசர் கழண்டுச்சே
மாமா டவுசர் அவுந்துச்சே....
மாமா டவுசர் கழண்டுச்சே
மாமா டவுசர் அவுந்துச்சே....!
பாடல் விளக்கவுரை:
போன மாசம் இந்தியாவில் விடுமுறையை நான் எஞ்சாய் பண்ணியதில், என் மாமனார் டவுசரும் என் மகனின் தாய்மாமன் டவுசரும் கிழிஞ்சதாக தகவல் கிடைச்சிருக்கு!

ஊருக்குக் கிளம்பும்போது ஒரு க்யூரியாசிட்டில தங்கமணி, தன் தந்தையார்கிட்ட 'நாங்க வந்ததுல எவ்வளவுப்பா எக்ஸ்ட்ரா செலவாச்சு?'ன்னு கேட்டிருக்கு. அதுக்கு அவரு 'ஜஸ்ட் ட்வென்ட்டி பைஃவ் தவுசண்ட் தாம்மா'ன்னு சொல்லியிருக்காரு. 25ஆ..அதுவும் ஒரு கிராமத்துல.........கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ? அவரு ஏர்போர்ட்ல வச்சு என்னை ஏன் அப்படிப் பார்த்தாருன்னு இப்பல்ல புரியுது!!

  பா..பா:
நம்ம மனீஷா கொய்யாப்ப..ச்சே...கொய்ராலா சமீபத்துல கேன்சரால பாதிக்கப்பட்டு, ஆபத்துக்கட்டத்துக்குப் போயி மீண்டு வந்தது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதுபத்தி ஒரு புத்தகமும் எழுதப்போறாங்களாம். ரொம்ப நல்ல விஷயம். கேன்சர் வந்தாலும் 20 வருசம் அதோடயே வாழ்ந்து காட்டுனவங்களை எனக்குத் தெரியும். பயந்து, மனசு விட்டுப்போறது தப்புன்னு எல்லாருக்கும் புரியற மாதிரி அந்தம்மா புக்ல எழுதப்போறாங்களாம். அதுக்கு அந்தம்மாக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

 
இந்தக் காலத்துல டாக்டர்கள்லாம் எந்தளவுக்கு சமூகப் பொறுப்புணர்வு இல்லாம இருக்காங்கங்கிறதுக்கு மனீஷா கதை ஒரு உதாரணம்...அந்தம்மா பாபா/முதல்வன் படத்துல நடிச்சப்பவே ஏதோ பயங்கர வியாதிக்கு ஆளான மாதிரி தான் இருந்துச்சு..எத்தனை டாக்டருங்க அந்த படங்களைப் பார்த்திருப்பாங்க. அப்பவே அந்தம்மாவைத் தூக்கிட்டுப் போயி டெஸ்ட் பண்ணியிருந்தா, நோய் இந்தளவுக்கு முத்தியிருக்காதுல்ல? மருத்துவம் படிக்காத நமக்கே, அந்தம்மா 'பா...பா'ன்னு ஆடறதைப் பார்த்து மைல்டா டவுட் வரும்போது, இந்த டாக்டர்களுக்கு கன்பாஃர்மா தெரிஞ்சிருக்க வேண்டாம்? இனிமேலாவது சமூகப் பொறுப்புணர்வோட படம் பாருங்கய்யா.

எங்கிருந்தாலும்...:  

நான் அப்படி என்னம்மா பெருசா தப்பு பண்ணிட்டேன்?..கொஞ்ச நாள் பிஸியா இருந்ததால பதிவு எழுதலை..அதுக்கெல்லாம் கோவிச்சுக்கிட்டு சிம்புவைக் கட்டிக்கப்போறேன்னு சொன்னா என்னம்மா நியாயம்?

அப்போ இத்தனை நாள் ஹன்ஸி மன்றத்தை உரம் போட்டு, தண்ணி ஊத்தி வளர்த்த நாங்கெல்லாம் என்ன இனாவானாவா?

சிம்பு கூட ஹன்சி நடிக்கப்போதுன்னு தெரிஞ்சப்பவே சொன்னேன் ‘அந்தாளு காளை மாட்டிலேயே கால்படி பால் கறப்பாரே?’ன்னு..சொன்னபடியே ஆயிடுச்சே..ச்சே..ச்சே!

‘சிம்புவை லவ் பண்றேன்’ன்னு சொன்னது கூடப் பரவாயில்லை. ஆனா ‘இது பெர்சனல் மேட்டர்’னு சொன்னதைத் தான் தாங்க முடியலை. ஒவ்வொரு ட்ரெஸ் போடும்போதும் ரசிகனுக்குப் பிடிக்குமா, பிடிக்காதான்னு யோசிச்ச ஹன்சிகா...ஒவ்வொரு தடவை மேக்கப் போடும்போதும் ரசிகனுக்குப் பிடிக்குமா, பிடிக்காதான்னு யோசிச்ச ஹன்சிகாவா இப்போ இப்படிப் பேசறது?

 அப்போ,

நீ போடற ட்ரெஸ் எங்களுக்குப் பிடிக்கணும்!
நீ போடற மேக்கப் எங்களுக்குப் பிடிக்கணும்! - ஆனா
உன்னை.......உன்னை கட்டிக்கிற ஆளை எங்களுக்குப் பிடிக்க வேண்டாம்..அது பெர்சனல், இல்லே?...எந்த ஊரு நியாயம்மா இது?
எம்மா, உனக்கு ஞாபகம் இருக்காம்மா?..நடிக்க வந்த புதுசுல டப்பிங் வாய்ஸ் ஒரு பக்கம் போகும்..உன் ரப்பர் வாய் இன்னொரு பக்கம் போதும்..அதையெல்லாம் பெரிசு பண்ணிக்காம, ‘வாயைவா பார்ப்பாங்க?’-ன்னு வைராக்கியமா வாழ்ந்தமே...அதுக்கு நீ காட்டுற நன்றியாம்மா இது?

வாழ்க்கைல நீ சக்தி மசாலா யூஸ் பண்ணியிருக்க மாட்டேன்னு தெரியும்..ஆனா மண்டைல இருக்கிற மசாலாவையும் நீ யூஸ் பண்றதே இல்லைன்னு தெரியாமப் போயிடுச்சே!

கல்யாணம் பண்ற வயசாம்மா இது?..கமலா காமேஷே இன்னும் கல்யாணத்தைப் பத்தி நினைக்கதப்போ, பச்ச மண்ணு..உனக்கென்னம்மா அவசரம்?

எப்படிப்பட்ட ரசிகர்களையெல்லாம் நீ இழக்கப்போறே தெரியுமா? தீயா வேலை செய்யணும் படத்துல நீ மெலிஞ்சிட்டேன்னு பயபுள்ளைக சொன்னாங்க..மெலிஞ்ச ஹன்சிகாவை எப்படிப் பார்ப்பேன்னு அந்தப் படத்தையே பார்க்காம விட்ட பாவிம்மா நானு, பாவி நானு. அப்புறம் தான் என் நண்பன் ஒருத்தன், ‘மச்சான்..மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க..தைரியமாப் பாரு’ன்னு ஆறுதல் சொன்னாம்மா..இதோ, இப்பத்தான் அந்தப் படத்த டவுன்லோடி வச்சிருக்கேன். அதுக்குள்ள இடி மாதிரி இப்படி ஒரு நியூஸ்.

இன்னும் அஞ்சு வருசம் கழிச்சுத்தான் கல்யாணம்னு சொல்லியிருக்கே..அஞ்சு வருசம் இருக்கு..அதுக்குள்ள முழிச்சுக்கோ, பொழைச்சுக்கோ! இல்லேன்னா............என்னத்தைச் செய்ய...கழுதை, எங்கிருந்தாலும் வாழ்க-ன்னு சொல்லிட்டு, அடுத்த அண்டா-குண்டாவைத் தேட வேண்டியது தான்.


எப்படிய்யா இது:

ஊர்ல மச்சினன்கூட ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப்போனேன். (ஓட்டலுக்குமா.......!) இலை போட வந்த சர்வர் என் மச்சினனைப் பார்த்ததும் "ஏ, மாப்ளே..நீ தானா?" அப்படீன்னாரு. மச்சினனும் "ஆமா மாமா...இங்க தான் வேலை பார்க்கறீங்களா?அதுசரி, இப்போ எத்தனையாவது போய்க்கிட்டிருக்கு?"ன்னு கேட்டான். அவர்"பதினைஞ்சாவது"ன்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு.

எனக்கோ டவுட்டு...15 கஸ்டமர் தானா இதுவரைக்கும் வந்திருக்காங்க?-ன்னு குழம்பி மச்சினன்கிட்ட கேட்டேன்..அதுக்கு அவன் சொன்னான், "மாமா, அது கஸ்டமர் கணக்கு இல்லை...அவர் கட்டிக்கிட்ட பொண்ணுங்க கணக்கு"
நமக்கு பகீர்னு ஆயிடுச்சு..என்னய்யா இது அநியாயம்..பதினைஞ்சு கல்யாணமா? எனக்கு ஒரே ஒரு பொண்ணு தர்றதுக்கு என்ன பாடு படுத்தினாங்க....சம்பளம் எவ்ளோ?, பாஃரின் போவியா? பொண்ணையும் கூட்டிட்டுப் போவியா? உன் கம்பெனி பாஃரின்லயும் இருக்கா? அங்க எவ்ளோ சம்பளம் கொடுப்பாங்க? உன் நட்சத்திரம் என்ன, ராசி என்ன?-ன்னு ஆயிரம் கேள்வி. எல்லாம் ஒத்துப்போன அப்புறமும், 'மாப்ளை வீடு' பார்க்கிறதுன்னு ஒரு சம்பிரதாயம். ஒரு 50 பேரு கிளம்பி வந்து மாப்ளை வீடு நல்ல வீடு தானான்னு சுவரையெல்லாம் தட்டிப்பார்த்தீங்களேய்யா? பக்கத்து வீட்டு ஆண்ட்டிககிட்டயெல்லாம் மாப்ளை தங்கம் தானான்னு என்ன ஒரு விசாரணை?

ஒழுங்காப் படிச்சு, உருப்படியான வேலைல இருக்கிறவனுக்கு இந்தப் பாடு..ஆனா நிரந்தரமா ஒரு வேலை/வருமானம் இல்லாத மனுசனை நம்பி ஒன்னு, ரெண்டு இல்லை...பதினைஞ்சு பொண்ணுங்க வந்திருக்குங்க..நாம் மனசு நொந்து யோசிச்சுக்கிட்டிருக்கும்ப்போதே அவரு சர்வ் பண்ண வந்தாரு.

மச்சினன் ஆரம்பிச்சான்,"என்னச்சு மாமா...14வதும் ஓடிடுச்சா?"

"ஆமா மாப்ள..நாமளும் பிடிச்சுப் பிடிச்சுத்தான் வக்கிறோம்..ஒன்னும் நிக்க மாட்டேங்குதுகளே..ஆனா அதுக்காக நாம மனசு விட்டுடலாமா? நம்ம கடமையை நாம செய்யணும்ல மாப்ளே?"-ன்னு பதிலுக்கு அவரு கேட்டாரு.

நல்ல ஆளுங்கய்யா-ன்னு நினைச்சுக்கிட்டு "அண்ணாச்சி, அடுத்த தடவை கல்யாணம் பண்ணும்போதே 'ஓடிப்போனா ஒரு லட்சம் கொடுத்துட்டு ஓடணும்'னு அக்ரிமெண்ட் போட்டுக்கோங்க..முதல்லயே போட்டிருந்தா லட்சாதிபதி ஆகியிரக்கலாம்ல?"ன்னு மனசு வெறுத்து அட்வைஸ் பண்ணிட்டுக் கிளம்புனேன்.

என்ன கொடுமை பாருங்கய்யா...பொண்ணுங்க எப்படித்தான் இந்த மாதிரி ஆளுகளாப் பார்த்து விழுறாங்களோ?...ஹூம்...நமக்கில்லே, நமக்கில்லே...சொக்கா!

ஸ்பெஷல் ஸ்டில்:
ரொம்ப மனசு நொந்துபோயி, மறுபடியும் நமீகிட்டயே சரணடைவோம்னு பார்த்தா, நமீ மூணு மடங்கு பெருத்துப்போயி நிக்குது..முன்னாடில்லாம் நமியோட முழு ஸ்டில்லே போட முடியும். இப்போப் பாருங்க, கால்வாசி உடம்பைக்கூட ஸ்டில்லுல அடக்க முடியலை..இதுக்காக 70எம்எம் ஸ்க்ரீன்லயா பதிவெழுத முடியும்?
மேலும் வாசிக்க... "ஹன்சிகா...எங்கிருந்தாலும் வாழ்க! (நானா யோசிச்சேன்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

60 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.