Tuesday, March 18, 2014

வாக்காளப் பெருமக்களே! (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல 
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே!
நாளைக்கு ஊருக்குப் போறேன். மார்ச் 21 முதல் 31வரை, இந்தியா வாசம்! ஏப்ரல் ஒன்னுவரை பதிவு வராது. ஃபேஸ்புக்குக்கு முடிஞ்சா வர்றேன். திரும்பி வந்தப்புறம் நின்னுபோன குழாயியல் தொடரையும் இன்னொரு புது தொடரையும் ஆரம்பிக்கிறதா எண்ணம். பார்ப்போம். நான் திரும்பி வர்றவரைக்கும் உங்களுக்கு போரடிக்கலாம். அதனால டெய்லி ஜெயமோகன் எழுதற மகாபாரதம் தொடரை படிக்கும்படி கேட்டுக்கறேன் சாமியோவ்!

கொலைவெறி:
நண்பர் ஒருத்தர்க்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்குன்னு ஹோட்டல்ல ட்ரீட் கொடுத்தாரு. எல்லாரும் நல்லா ஆர்டர் பண்ணும்போது ‘(வருங்கால) வீட்டுக்காரம்மா என்னை ஒருவேளைக்கு மூணு இட்லி தான் சாப்பிடச் சொல்லி இருக்கு’ன்னு சொன்னாரு. இப்பவே ஆரம்பிச்சிடுச்சா? நமக்குப் பரவாயில்லைன்னு நினைச்சுக்கிட்டு ‘அதென்ன மூணு இட்லி கணக்கு?’ன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொன்னாரு ‘உடம்பை குறைக்கச் சொல்லியிருக்காங்க. அவங்க வெயிட் 45 கிலோ. என் வெயிட் 90 கிலோ’ன்னாரு. நம்ம வாய் சும்மா இருக்குமா? ‘அதுசரி..அப்போ உயிர்பயம் இருக்கத்தானே செய்யும்’ன்னு சொல்லிட்டேன்!

மனுசன் காண்டாகிட்டாரு. பார்ட்டி முடியவரை முகம் கொடுத்தே பேசலை. அது பரவாயில்லை. கடைசீல பில்லு வந்துச்சு. ‘இந்தாய்யா பில்லு’ன்னு கொடுக்கிறேன். ‘பேசாத..போய்யா’ன்னு கோவிச்சுக்கிட்டு எந்திரிச்சுப் போய்டாரு. யோவ்..யோவ்ங்கிறேன். ம்ஹூம். திரும்பியே பார்க்கலை! அப்புறம் என்ன செய்ய..நாந்தான் கட்டுனேன். ஏன்யா ஒரு வரி டயலாக்குக்கு இவ்ளோ அபராதமா? புதுசால்ல இருக்கு! (அந்த நண்பர், நம் ப்ளாக்கை தொடர்ந்து படிப்பவர் என்பது கூடுதல் தகவல்!...கூல், மாப்ஸ்!)
ராஜ தந்திரம்:
எங்க தலைமையோட ராஜ தந்திரத்தைப் பார்த்தியான்னு ஆரம்பிச்சாரு அந்த கட்சிக்காரரு. எனக்கு ஒன்னும் தெரியலியேன்னேன். ‘அதாம்ப்பா..கரெக்ட்டா தான் நடிச்ச படத்தை தேர்தலப்போ ரிலீஸ் பண்ணாங்க பார்த்தியா’ன்னாரு. அதுல என்ன ராச தந்திரம்ன்னு கேட்டேன். ‘என்னாப்பா இப்படிக் கேட்கிறே? மக்கள் படத்தைப் பார்த்தா, ஓட்டை எங்களுக்குத் தானே போடுவாங்க’ங்கிறாரு. அடப்பாவிகளா..முன்னாடி இதைச் சொன்னதுக்குத் தானடா தீப்பொறி ஆறுமுகத்தை விரட்டி விரட்டி அடிச்சீங்க! பலதடவை ஆட்சி பண்ணியும், இப்படித் தான் ஓட்டு வாங்க வேண்டி இருக்கா? பலே, பலே!
புண்ணிய பூமி:
ஊர்ல தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிச்சிருச்சு போல. ஒரு ’ரிட்டயர்டு ஆபீசர்’ சொன்ன பழைய கதை ஒன்னு ஞாபகம் வருது. அப்போதைய சி.எம்(யாருன்னு சொல்ல மாட்டேன்!) எங்க கோவில்பட்டிக்கு பிரச்சாரத்துக்கு வர்றதா ப்ளான். மேடையெல்லாம் பக்காவா போட்டவங்களுக்கு, கூடவே ஏசியோட பாத்ரூம் ரெடி பண்ணி வைக்கவும் உததரவு வந்திருக்கு. ஆபீசர்களும் ‘சரி..அவசரத்துக்கு ஒதுங்குவாங்களே’ன்னு ஏசி டாய்லெட்(!) ரெடி பண்ணிட்டாங்க.மறுநாள் காலைல சி.எம்.வர்றாங்க. முதல் நாள் ஈவ்னிங் ஆபீசர்ஸ்க்கு ஒரு டவுட். பாத்ரூம்ன்னா குளிக்கவும் செய்வாங்களோன்னு! அப்புறம் அடிச்சுப்பிடிச்சு பைப் கனெக்சன் கொடுத்து குளிக்கவும் ஏற்பாடு பண்ணா, ஷவர் பைப்பும், ஹெட்டும் கோவில்பட்டி கடைகள்ல இல்லை. (எப்படி இருக்கும்?..கோவில்பட்டில தான் குளிக்கவே மாட்டீங்களேடா-ங்கிற மாதிரி கொலைவெறி கமெண்ட்ஸை தவிர்க்கவும்!)

மதுரைல தான் இருக்குன்னு தகவல் வரவும் சீனியர் ஆபீசர் நைட்டு பத்து மணிக்குக் கிளம்பி மதுரை ஓடறார். அங்க ஒரு கடைக்காரனை மிரட்டி, அவர் வர்றவரை உட்கார வச்சிருக்காங்க. இவர் போய் வாங்கிவந்து, எல்லாத்தையும் ஃபிட் பண்ணி முடிக்கும்போது காலை மணி அஞ்சு. மனுசர் அப்புறம் தான் நிம்மதியா தூங்கப்போனாரு. இப்போ கோவில்பட்டி பற்றி முக்கிய சிறுகுறிப்பு.
கோவில்பட்டி சாதாரண ஊர் கிடையாது. அது ஒரு புண்ணிய பூமி. இம்சை அரசன், சிரிப்பு போலீஸ் ரமேஷ், செங்கோவின்னு பல சித்தர்கள் அவதரிச்ச பூமி. அது தெரிஞ்சதாலயோ என்னவோ, அந்த சி.எம். பாத்ரூம் பக்கமே போகலை. நம்மால இந்த ஊரு மாசுபட்டுடக்கூடாதுன்னு, அடக்கிக்கிட்டு அடுத்த ஊருக்குப் போய்ட்டாங்க.

தூங்கி எந்திருச்சு வந்த ஆபீசர், ’நமக்கு புரமோசன் உண்டா?’ன்னு தெரிஞ்சுக்க நேரா ஏ.சி.பாத்ரூம்க்குப் போய் பார்த்திருக்காரு. எல்லாமே புதுசா அப்படியே இருக்கு. ‘இதுக்காடா நைட்டு ஃபுல்லா ஒரு பெரியமனுசனை தூங்கவிடாம அலைய வச்சீங்க?’ன்னு அந்த ஷவர் ஹெட்டைப் புடுங்கி, தலையிலயே அடிச்சுக்கிட்டாராம். ம்..இப்போ லட்சியம் வேற பெருசு!..எத்தனை ஆபீசர் மண்டை உடையப்போகுதோ? 

தீவிரமா யோசிக்கிறது:

ம்..இவங்க என்ன செய்றாங்க?
 கூத்தணி:

முடிச்சவிக்கி : ஏண்டா, இப்படி பொம்பளைப்படமா போடறியே? வெட்கமா இல்லை உனக்கு?

நான்: இல்லைண்ணே..சும்மா ஒரு ஜாலிக்கு.

முடிச்சவிக்கி : பெண்களை கேவலப்படுத்துறதுல என்னடா ஜாலி?

நான்: இல்லைண்ணே..கொஞ்சம் நாமளும் படிக்கிறவங்களும் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமேன்னு...

முடிச்சவிக்கி : அதுக்கு பொம்பளைப் படமாடா போடுறது? இந்த பொழைப்புக்கு..

நான்: (ஆஹா..ஓவராப் போறாரே..ரைட்டு..மொள்ளமாரிகளோட அந்த ஆயுதத்தை எடுத்துட வேண்டியது தான்!), அண்ணே..பொறுமையா நான் சொல்றதைக் கேளுங்க

முடிச்சவிக்கி : என்ன?..சொல்லு.

நான்: அண்ணே, நான் ஒரு மதச்சார்பற்ற ஆளு. கரெக்ட்டா?

முடிச்சவிக்கி : ஆமா. அதுக்கென்ன?

நான்: நீங்களும் ஒரு மதச்சார்பற்ற ஆளு. கரெக்ட்டா?

முடிச்சவிக்கி : ஆமா.

நான்: இப்படி நாமளே அடிச்சுக்கிட்டா, அது மதவாத சக்திகளுக்கு இடம் கொடுத்த மாதிரி ஆகிடாதாண்ணே?

முடிச்சவிக்கி : ம்..நீ சொல்றதும் சரி தான்யா

நான்: அது!..இப்போ நாட்டுக்கு அதிக ஆபத்து ’மஜா’வாலயா? மதவாதத்தாலயா?

முடிச்சவிக்கி : மதவாதத்தால தான்.

நான்: அப்போ நாம ஒத்துமையா மதவாதத்தை எதிர்க்க வேண்டாமா? அதனால என் மொள்ளமாறித்தனத்தைப் பத்தி நீங்க பேசக்கூடாது. உங்க முடிச்சவிக்கித்தனத்தைப் பத்தி நான் பேச மாட்டேன்.

முடிச்சவிக்கி : கரெக்ட்டாச் சொன்னப்பா..!

ஆகவே மக்களே, வரும் தேர்தலில் மதவாதச் சக்திகளை அழித்திட அருமைத் தம்பி-நீதிமான்-பெண்ணியவாதி செங்கோவியின் ஆலோசனைப்படி..................................!

மேலும் வாசிக்க... "வாக்காளப் பெருமக்களே! (நானா யோசிச்சேன்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

31 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, March 16, 2014

The Lodger (1927) - திரை விமர்சனம்

தலைவர் ஹிட்ச்காக் தனது கலைப்பயணத்தை ஆரம்பித்தது மௌனப்படங்களின் காலமான 1920களில். பத்து மௌனப்படங்களை இயக்கி இருக்கிறார். அதில் முதல் ’ஹிட்ச்காக் ஸ்டைல்’ மூவியாக உருவானது தி லாட்ஜர் படம். மௌனப்படமாக ஒரு த்ரில்லரைக் கொடுப்பது சவாலான காரியம். அதில் முதல்முறையாக இறங்கி ஜெயித்தார் ஹிட்ச்காக். ஆனால் இது அவரது ஃபேவரிட்டான சஸ்பென்ஸ் டைப் மூவி அல்ல, சர்ப்ரைஸ் டைப் மூவி.
ஒரு சிட்டியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் Blonde பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அங்கே இருக்கும் ஒரு லாட்ஜில் தங்க ஹீரோ வருகிறான். வந்ததுமே ரூமில் இருக்கும் Blonde பெண்களின் ஓவியங்களைப் பார்த்து சைக்காலஜிக்கலாக பதறுகிறான். அந்த படங்களை ரூமை விட்டே எடுக்கிறார்கள். அந்த லாட்ஜ் ஓனர் பெண்மணிக்கு ஹீரோ மேல் சந்தேகம் வருகிறது. லாட்ஜ் ஓனரின் பெண்ணிற்கு ஹீரோ மேல் காதல் வருகிறது. அந்த சீரியல் கில்லரை விசாரிக்கும் போலீஸ் ஆபிசர்க்கு ஹீரோயினை கல்யாணம் செய்துவைப்பதாக ஏற்கனவே ஒரு ப்ளான் இருக்கிறது. இப்படி எல்லாப் பக்கமும் இடியாப்பச் சிக்கலாக, அப்புறம் என்ன ஆச்சு என்பது தான் கதை.

ஒரு ப்ளாண்ட் பெண், ஸ்க்ரீன் முழுக்க முகத்தையும் முடியையும் பரப்பி ‘வீல்’ என்று அலறும் காட்சியுடன் படம் அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. அந்தக் காலத்தில் அது ஒரு புதுமையான ஷாட். ஒரு கண்ணாடி ஃப்ளோரில் அந்த பெண்ணை படுக்க வைத்து, ஸ்க்ரீன் முழுக்க ப்ளாண்ட் ஹேர் பரவிக்கிடக்கும்படி செய்து, கண்ணாடிக்குக் கீழே கேமிராவை ஃபிட் செய்து எடுத்திருக்கிறார்கள். ஒரு பெண், குறிப்பாக ப்ளாண்ட் ஹேர் பெண் கொலை செய்யப்படுகிறாள் எனும் மெசேஜை ஆடியன்ஸுக்கு இந்த ஒரு ஷாட்டிலேயே சொல்லி அசத்துகிறார் ஹிட்ச்காக்.
பலவிதங்களில் இந்தப் படம், தற்போது வரும் படங்களுக்கு முன்மாதிரியாக விளங்கிவருகிறது. ஒரு இடத்தில் ஒரு ஆபத்து இருக்கிறது. அது முதலில் படத்தில் வரும் கேரக்டர்களில் ஒருவருக்கு மட்டும் தெரிகிறது. அதை அவர் வெளியே சொன்னாலும் யாரும் நம்புவதில்லை. தொடர்ந்து நடக்கும் சம்பவங்களால், ஒவ்வொருவராக அதை உணர்கிறார்கள். லேட்டஸ்ட் படங்களில், உணர்கின்ற ஒவ்வொருவரும் கொல்லப்படுவார்கள். இன்னொரு பக்கம் போலீஸ் அல்லது சைண்டிஸ்ட் அல்லது வேறு யாரோ ஒரு குழு, இந்த ஆபத்தை அழிக்க வேலை செய்துகொண்டிருக்கும். இறுதியில் அந்த குழுவும், பாதிக்கப்பட்ட குழுவில் மிஞ்சியோரும் இணைந்து அந்த ஆபத்தை அழிப்பார்கள். ஜூராசிக் பார்க் போன்ற அத்துவானக் காட்டுக்குள்ளே ஒரு ஆபத்து என்று சொல்லும் கதைகளாலும், புதிதாகக் குடியேறும் பங்களாவில் பேய் எனும் கான்செப்ட்டானாலும், தி லாட்ஜரின் திரைக்கதையை தெரிந்தோ, தெரியாமலோ பின்பற்றித்தான் ஆகவேண்டும்.

அந்த டெம்ப்ளேட் போன்ற இன்னொரு முக்கியமான விஷயம், ஹீரோவுக்கும் வில்லனுக்கும் (அல்லது இரு ஹீரோக்களுக்கும்) இடையே அஃபிசியலாக மட்டுமல்லாது பெர்சனலாகவும் பிரச்சினை இருப்பது. சீரியல் கில்லர் என சந்தேகிக்கப்படும் ஹீரோ லவ் பண்ணுவது, அந்த கேஸை டீல் பண்ணும் போலீஸ்காரரின் வுட்பியை! இது படத்தில் மேலும் கான்ஃப்ளிக்ட் உண்டாவதற்காகவும், பார்ப்போருக்கு ஆவலை மேலும் தூண்டுவதற்காகவும் யூஸ் ஆகும் டெக்னிக். இதை ஃபாலோ செய்த பல படங்களில் உடனே ஞாபகம் வருவது ஜெண்டில் மேன்!
மற்றவர்களுக்கு மட்டுமல்ல, ஹிட்ச்காக்கிற்கே இந்தப் படம் தான் ரெஃபரென்ஸாக அமைந்தது.அவரது ஃபேவரிட் தீம் ஆகிய ‘ஒரு அப்பாவி மேல் பழி சுமத்தப்படுவது. அவன் தப்பி ஓடியபடியே தன்னை நிரபராதி என்று நிரூபிப்பது’ என்பதற்கு ஆரம்பப்புள்ளி இந்தப்படம் தான்.  இதுவும் ஒரு நாவலில் இருந்து தான் படமாக்கப்பட்டது. நாவலைப் படித்து முடித்ததும் ஹிட்ச்காக்கிற்கு முதலில் முடிவு செய்த விஷயம், கதையை யாருடைய பாயிண்ட் ஆஃப் வியூவில் சொல்வது என்பது தான். நாவலில் ஒரு கதையை சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு பாத்திரங்கள் தாங்கி, நகர்த்தும். ஆனால் சினிமாவில் அதைச் செய்தால், படம் திக்கற்று அலைபாய்வது போல் தோன்றிவிடும். எனவே அந்த லாட்ஜ் ஓனர் பெண்மணியின் பார்வையில், கதை நகர்வதாக முடிவு செய்தார் ஹிட்ச்காக். ஏனென்றால் அந்த லாஜ்ட் தான் எல்லா முக்கிய கேரக்டர்களும் கூடும் இடமாக இருக்கிறது.

சிறந்த எக்ஸ்போசிசன் உள்ள படங்களில் ஒன்று, இந்த தி லாட்ஜர். ‘ஒவ்வொரு செவ்வாயும் ப்ளாண்ட் பெண்கள் கொலைசெய்யப்படுகிறார்கள். போலீஸ் தீவிரமாக முயற்சித்தும் பிடிக்க முடியவில்லை. கில்லர் ஒரே இடத்தில் இருக்காமல், தொடர்ந்து மூவ் ஆகிக்கொண்டே இருக்கிறான்’ என்பது போன்ற விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆடியன்ஸுக்கு தெரியப்படுத்தும் ஸ்டைல் தான் ஹிட்ச்காக்கின் பலம்!

படத்தின் இறுதியில் ஹீரோ கை விலங்குடன் தப்பி ஓடுவதாகவும், அதை மறைக்க கஷ்டப்படுவதாகவும் சில சீன்கள் வரும். பலவருடங்களுக்குப் பிறகு, அதைப் பற்றி அவரிடம் ‘இந்த ஐடியா எப்படித் தோணுச்சு?’ என்று கேட்டதற்கு அவர் கேஷுவலாகச் சொன்ன பதில் : “அதுவா?..அப்போ ஒரு ஜெர்மன்காரன் எழுதுன புக் ஒன்னு ஃபேமஸா இருந்துச்சு. கை விலங்கோட ஒருத்தன் சமூகத்தில் நடமாடுனா எப்படி மக்கள் ரியாக்ட் பண்ணுவாங்கன்னு பெர்சனலா செஞ்சு பார்த்து நாவல் எழுதி இருந்தான். அதை பேஸ் பண்ணித்தான் அந்த சீன்ஸ் வச்சேன்’. இதைப் படிக்கவும் பதறிவிட்டேன். ‘அய்யய்யோ காப்பி..ஹிட்ச்காக்குக்கு ஒன்னுமே தெரியாது. முட்டாள்.’ன்னு யாரும் கத்துடுவாங்களோன்னு நினைச்சேன். அப்புறம்தான் ஞாபகம் வந்தது, அவர் தமிழன் இல்லை. ஹாலிவுட்காரர்னு!
படம் வெளியாகி, பிரிட்டிஷ் படங்களிலேயே சிறந்த படம் என்று பெயர் வாங்கியது. (ஆம் பாஸ். அவர் ஹாலிவுட்டுக்கு வந்தது பின்னாளில் தான்.). படமும் கமர்சியலாக சூப்பர் ஹிட். ஆனால் படம் முடித்து ரிலீஸ்க்கு முன்னால் என்ன ஆச்சு தெரியுமா? ‘இதெல்லாம் தேறாது. புது கான்செப்ட்டா இருக்கு. மக்களுக்கு புரியாது’ என்று விநியோகஸ்தர் கம்பெனி ஆட்கள் ரிலீஸ் பண்ண மறுத்துவிட்டார்கள். அந்த கம்பெனி பாஸும் மறுத்துவிட கெஞ்சிக் கூத்தாடி ஹிட்ச்காக் படத்தை வெளியே கொண்டுவந்தார். இந்த விஷயத்தில் மட்டும், உலகம் முழுக்க ஒன்றுபோலத் தான் இருக்கிறார்கள் போலும்!

படத்திற்கான யூடியூப் லின்க் கீழே :

http://www.youtube.com/watch?v=hrxn4A5Nc-Mமேலும் வாசிக்க... "The Lodger (1927) - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, March 13, 2014

நிமிர்ந்து நில் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
இயக்குநர் சமுத்திரக்கனி மேல் ஒரு மரியாதை எப்போதுமே எனக்கு உண்டு. கமர்சியல் வட்டத்துக்குள் நின்றுகொண்டே, சமூக அக்கறையுள்ள படத்தைக் கொடுக்கும் ஆர்வம் உள்ளவர். இது அந்நியன் டைப் அறச்சீற்றக்கதை என்பதால் இறங்கி அடித்திருப்பார் என்று நம்பிப் போனேன். என்ன ஆச்சுன்னு சொல்றேன், வாங்கோ!
ஒரு ஊர்ல..:
வெளியுலகம் தெரியாமல், நியாய தர்மம் பற்றி போதிக்கப்பட்டே வளர்ந்த ஒருவன், இந்த சமூகத்தில் வாழ முற்படும்போது சந்திக்கும் லஞ்சம் போன்ற பிரச்சினைகளை அவன் எதிர்கொண்டு சமாளித்து வெல்வதே கதை.

உரிச்சா....:
சிலையும் நீயே..சிற்பியும் நீயே. உன்னை சரி செய்துகொள். உலகம் சரியாகும் என தன்னைச் செதுக்கும் ஜெயம் ரவியுடன் படம் ஆரம்பிக்கிறது. பள்ளி முதல் கல்லூரிவரை குருகுலம்/மிஷனரி ஹாஸ்டலில் வளரும் அப்பாவியாக அறிமுகம் ஆகிறார் ஜெயம் ரவி. அவர் ஏன் நம்மை மாதிரி கெட்டுப்போகாம இருக்கிறார் என்பதற்கு லாஜிக்கான காரணத்தைச் சொல்லி நிமிர வைக்கிறார்கள்.

டிராஃபிக் போலீஸிடம் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல ஆரம்பிக்கிறது பிரச்சினை. அங்கிருந்து ஸ்டேசன் போய், கோர்ட்டுக்குப் போய் ’உலகம் என்றால் என்ன? அம்மையப்பன் என்றால் என்ன?’ என்று தெளிந்து வெளியே வருகிறார். ஆனாலும் நீதி-நேர்மைப்படியே வாழ்வேன் என்று பிடிவாதமாக தொடர்கிறார். லஞ்சத்தை ஒழிக்க தெளிவாகத் திட்டமிட்டு, ஒரு ஸ்டிங் ஆபரேசனில் பலரையும் சிக்க வைக்கிறார்.

’டிராஃபிக்’ என்று ஆரம்பித்து ‘வைக்கிறார்’ வரை மேலே சொன்ன பாராவில் நடக்கும் காட்சிகள் செம ஸ்பீடு. ஜெயம்ரவியை அப்பாவியாக வேறு காட்டுவதால், நம்மால் படத்துடன் ஒன்றி ரசிக்க முடிகிறது. அமலா பாலூ - சூரியின் நட்பும் புதிதாக இருந்தது. முதல் காட்சியில் ஆரம்பித்து இண்டர்வல்வரை ‘பின்னீட்டாங்கய்யா’ என்று ஆச்சரியப்படும் அளவிற்கு, படம் நிமிர்ந்து நிற்கிறது.
பிரச்சினை இரண்டாம் பாதியில் தான் ஆரம்பிக்கிறது. திடீரென ஆந்திரா மசாலாவைத் தூவி தமிழ்ப்படத்தை தமிங்குப் படமாக ஆக்குகிறார்கள். இன்னொரு ஜெயம் ரவி ஆந்திராவில் இருந்து எண்ட்ரியாகிறார்கள். கூடவே வில்லன்களான லஞ்சப்பார்ட்டிகளையும் காமெடியன்களாக ஆக்கிவிடுகிறார்கள். கூடவே தேவையற்ற பாடல்காட்சிகளும் சேர்ந்துகொள்ள, பின்னு பின்னெறு பின்னி எடுக்கிறார்கள் நம்மை!

அதிலும் கானா பாலாவின் பாடல் வரும்போது நொந்தே போகிறோம். முதல் பாதியில் தீயாக இருந்த வசனங்கள் எல்லாம், சவசவ இரண்டாம்பாதியால் பேசியே கொல்றாங்கப்பா என்று ஆகிவிடுகின்றன. மொத்ததில் ’நிமிர்ந்து நில்’ படம் நிமிர்ந்தது, ஆனால் நிற்கவில்லை. வாட் எ பிட்டி, வாட் எ பிட்டி!

ஜெயம் ரவி:
தொடர்ந்து நல்ல இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் அதிர்ஷ்டசாலி. முதல்பாதியில் வரும் அப்பாவி கேரக்டர்க்கு அவரது முகமும் அவரது கீச்சுக்குரலும் கச்சிதமாகப் பொருந்துகின்றன. சமூகத்தைப் புரிந்துகொள்ளாமல் வெகுளியாக சிக்கலில் மாட்டுவதும், மற்றவர்களை மாட்டிவிடுவதுமாக அட்டகாசமான நடிப்பு. ஆனால் நரசிம்ம ரெட்டி கேரக்டரில் பார்க்கும்போது எரிச்சல் தான் வருகிறது. ஓவர் ஆக்ட்டிங் செய்தே ஆகவேண்டிய கேரக்டரைசேசன். 
அமலா பாலூ:
முதல்பாதியில் காமெடி மற்றும் காதல் ஏரியாவைப் பார்த்துக்கொள்கிறார். சீரியசாக போகும் கதையில், நம்மை கூல் செய்யும் அருமருந்து, இந்த பாலூ. இரண்டாம்பாதியில் இவருடைய இடத்தை நரசிம்ம ரெட்டி(!) பிடித்துவிட, டூயட் பாட்டுக்கு மட்டும் வந்துபோகும் அவலநிலைக்கு ஆளாகிறார். முந்தைய படங்களைவிட, இதில் அவருக்கு ஓரளவு நல்ல கேரக்டர் தான்.

சொந்த பந்தங்கள்:
பிரம்மனுக்கு அப்புறம் இதிலும் சூரி அடக்கி வாசித்திருக்கிறார். அளவான நடிப்பு + காமெடி என சரியான ரூட்டைப் பிடித்துவிட்டார் என்றே நினைக்கிறேன். கோபிநாத் இதில் கோபிநாத்தாகவே வருகிறார். நடிப்பு தான் வரமாட்டேன் என்கிறது. அதே நீயா-நானா ஓப்பனிங் சீன் ஸ்டைலில் படம் முழுக்க பேசுகிறார். ஆனாலும் அந்த வாய்ஸ், சான்சே இல்லை! சரத்குமார் இருக்கிறார். உருப்படியாக ஒன்றும் இல்லை. சித்தப்புவை இன்னும் கொஞ்சம் யூஸ் பண்ணி இருக்கலாம்.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- இரண்டாம் பகுதி
- தேவையில்லாத இடத்தில் எல்லாம் வரும் பாடல்கள்
- தெலுங்கு மார்க்கெட்டிற்காக, முதல்பாதியில் இருந்த தரத்தை தாரை வார்த்தது
- எல்லா கேரக்டரும் ஓவரா பேசுவது போல் வரும் ஃபீலிங். 

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- கொஞ்சம்கூட போரடிக்காத முதல்பாதி. 
- போலிக்கு மட்டும் தான் இன்னும் போலி வரலை என்பது போன்ற நச் வசனங்கள். விஜயகாந்த் படங்களில் கேட்டது. ரொம்ப நாளாச்சு, இத்தகைய சூடான வசனங்களைக் கேட்டு!
- ஆக்சன் ஹீரோவாக இல்லாமல் சாமானியனாக ஜெயம் ரவி கேரக்டரை அமைத்தது
- அமலாபாலூ+சூரி+ஜெயம் ரவி கூட்டணியில் வரும் கலகலப்பான காட்சிகள்

பார்க்கலாமா? :

முதல்பாதிக்காகவே நிச்சயம் பார்க்கலாம்.

மேலும் வாசிக்க... "நிமிர்ந்து நில் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, March 12, 2014

Dial M for Murder (1954) - திரை விமர்சனம்

ஹிட்ச்காக்கின் படங்களில் எனக்குப் பிடித்த படங்களைப் பற்றி ஒவ்வொன்றாக எழுதி, பதிவுலகை மெருகேற்றுவது(!) என்று முடிவு செய்திருக்கிறேன். அந்த வகையில் இன்று Dial M for Murder படம் பற்றிய ஒரு பார்வை. 
Frederick Knott என்பவர் எழுதிய ஒரு நாடகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. நம் ஊர் போன்று கதையை உருவுவது, கதையாசிரியரை கழட்டிவிடுவது என்றெல்லாம் செய்யாமல், Frederick Knott-ஐயே படத்தின் திரைக்கதையையும் வார்னர் ஸ்டுடியோ எழுத வைத்தார்கள். க்ரைம் பட மன்னன் ஹிட்ச்காக்கிற்கு கதை பிடித்துப்போக, ஜெகஜோதியாக உருவானது Dial M for Murder.

கதை மிகவும் சிம்பிள் தான். ஹீரோவின் மனைவி ஹீரோயின்(சரி..சரி.). அவருக்கு ஒரு க்ரைம் கதை எழுத்தாளருடன் கள்ளத்தொடர்பு. ஃபேஸ்புக்-சாட் இல்லாத காலத்திலேயே எழுத்தாளர்கள் இதில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்பதை அறிக. சரி, கதைக்குப் போவோம். அந்த எழுத்தாளரை நண்பர் என்று சொல்லி, வீட்டுக்கே கூட்டிவந்து கும்மி அடிக்கிறார் ஹீரோயின்.(இவள்லாம் ஹீரோயினா என்று டென்சன் ஆகக்கூடாது..அய்யோ, கதை சொல்ல விடுங்கய்யா). இவர்கள் தொடர்பை ஹீரோ கண்டிபிடிக்கிறார். கூடவே கள்ளக்காதலன் எழுதிய லவ் லெட்டரும் ஹீரோ கையில் சிக்குகிறது. இப்போ ஹீரோயினை போட்டுத்தள்ள ஹீரோ முடிவெடுக்கிறார். (சபாஷ், வெள்ளையத்தேவா!).
கொலை செய்ய, கல்லூரியில் தன்னுடன் படித்து(!) இப்போது க்ரிமினலாக இருக்கும் ஒருவனைப் பிடிக்கிறார் ஹீரோ. பக்காவாக ஒரு ப்ளான் போடுகிறார். அதாவது, கள்ளக்காதலனுடன் இரவு அவர் ஒரு பார்ட்டிக்குப் போய் விடுவார். ஹீரோயினிடம் இருக்கும் வீட்டுச்சாவியை வீட்டுக்கு வெளியே வைத்துவிட்டுச் செல்வார். கொலைகாரன், சாவியால் வீட்டைத் திறந்து(ரைட்டு..!) உள்ளே சென்று பதுங்கி இருக்க வேண்டும். சரியாக இரவு 11 மணிக்கு ஹீரோ ஃபோன் செய்வார். பத்தினி வந்து ஃபோனை எடுப்பார். அப்போது ஒரே சதக்! 

திட்டம் கேட்பதற்கு பக்காவாக இருந்தாலும், அக்காவை ஆஃப் செய்ய முடிந்ததா? என்பது தான் படமே. மேலே சொன்ன எல்லாமே முதல் பத்து நிமிடத்திற்குள் முடிந்துவிடும். அதன்பிறகு நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள், அக்மார்க் ஹிட்ச்காக் படம் என்பதை நிரூபிக்கின்றன. 

நாடகத்தின்படி அனைத்துக் காட்சிகளுமே ஒரே இடத்தில் ஹீரோ வீட்டு ஹாலில் நடப்பதாகவே இருந்ததாம். அதை படமாக எடுக்கும்போது, கொலையை உள்ளூரிலும் விசாரணையை ஃபாரினிலும்(!) வைக்கவே, படைப்பாளிகளுக்கு தோன்றும். ஆனால் ஹிட்ச்காக், அந்த இடம் கதைக்கு கொடுத்த க்ரிப்னஸ்ஸை விட விரும்பவில்லை. கூடுதலாக இரண்டு இடங்களில் சில நிமிட காட்சிகள் மட்டுமே வைத்துவிட்டு, முழுக்க முழுக்க ஹாலிலேயே படத்தையும் முடித்தார். அவரைப் பொறுத்தவரை, நாடகத்தின் அடிப்படைத் தகுதியே, அந்த வரையறுக்கப்பட்ட இடத்திற்குள்(மேடை-ஹால்) கதை நடப்பது தான். அதை டெவலப் செய்கிறேன் பேர்வழி என்று கெடுப்பது சரியல்ல என்று முடிவு செய்தார்.

இந்த இடத்தில் வரையறுக்கப்பட்ட, எல்லைக்கு உட்பட்ட கதை சொல்லல் என்பது பற்றியும் பார்த்துவிடுவோம். ஒரு கதை அல்லது திரைக்கதையானது எவ்வளவுக்கு எவ்வளவு குறைவான இடங்களில், குறைவான(தேவையான) கேரக்டர்களுடன் இருக்கிறதோ, அந்தளவுக்கு படமும் க்ரிப்பாக இருக்கும். ஆடியன்ஸும் எளிதாக படத்தை உள்வாங்கிக்கொள்ள முடியும். கிராமத்தில் ஆரம்பிக்கும் கதை, தேவையே இல்லாமல் சிட்டிக்குப் போய், இறுதிக்காட்சிவரை புதுப்புது கேரக்டர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தால், நாம் ‘இன்னும் என்னெல்லாம் வரப்போகுதோ?’ என்று டர்ர் ஆகிவிடுவோம். சமீபத்திய உதாரணம், பிரம்மன்.(அதைப் பற்றி இன்னும் விரிவாக ஒருநாள் பார்ப்போம்!).
எனவே தான் ஹிட்ச்காக், இதில் ஒரு ஹால் மற்றும் ஐந்து முக்கிய கேரக்டர்களை மட்டுமே வைத்து பக்காவான த்ரில்லரைக் கொடுக்கிறார். ஏற்கனவே சஸ்பென்ஸும் சர்ப்ரைஸும் பதிவில் பார்த்தது போல், இந்தப் படத்திலும் கொலையாளி யார் என்பதை அவர் மறைக்கவே இல்லை. கொலையாளியை போலீஸ் பிடிக்குமா, இல்லியா? ஹீரோ-ஹீரோயினுக்கு என்ன ஆகிறது எனும் சஸ்பென்ஸைத் தான் முக்கியமாக வைத்திருக்கிறார். அதனால்தான் இறுதிக்காட்சிவரை படம் பரபரப்பாகப் போகிறது. இறுதிவரை நாமும் போலீஸ் கண்டுபிடிக்குமா என்று சீட் நுனியில் உட்கார்ந்து படம் பார்க்கிறோம்.

தெளிவான கதையோட்டம் உள்ள, சிம்பிளான த்ரில்லர் மூவி, Dial M for Murder (1954).
மேலும் வாசிக்க... "Dial M for Murder (1954) - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, March 9, 2014

Non-Stop (2014) - திரை விமர்சனம்

Taken மற்றும் taken-2 ஆகிய கடைசி இரு ஆக்சன் படங்களுக்குப் பிறகு Liam Neeson நடிப்பில் வெளியாகி இருக்கும் அடுத்த ஆக்சன் – த்ரில்லர் படம் Non-Stop. தாத்தா இதிலும் இறங்கி அடித்தாரா என்று பார்ப்போம், வாருங்கள்! 

யு.எஸ்.ஏ. ஏர் மார்ஷலான ஹீரோ, ஒரு நான் – ஸ்டாப் ப்ளைட்டில் பயணிக்கிறார். அப்போது அவருக்கு ஒரு மெசேஜ் வருகிறது. ஒரு அக்கவுண்ட்டில் 150 மில்லியன் போடும்படியும், இல்லையென்றால் ஃப்ளைட்டில் இருப்போர், ஒவ்வொரு இருபது நிமிடத்திற்கும் ஒருவராக கொல்லப்படுவர் என்று. ஹீரோ எப்படி அனைவரையும் காப்பாற்றுகிறார் என்பதே கதை.

கதையைக் கேட்கும்போது ‘Die Hard on the Flight’ என்றே தோன்றியது. ஆனால் இரு படத்திற்கும் ஒரு பெரிய வித்தியாசத்தை வைத்திருக்கிறார்கள். அது, ஹீரோ தான் ஃப்ளைட்டைக் கடத்தி வைத்திருப்பதாக எல்லோரும் நினைக்கும்படி சம்பவங்கள் நடப்பது.

படம் ஆரம்பிதததுமே ஹீரோ ஒரு குடிகாரர், கேன்சரால் குழந்தையை இழந்தவர், டைவர்ஸ் ஆனவர் என்று சட சடவென பழைய கதையைச் சொல்லிவிட்டு, ஏர்போர்ட்டிற்கு வந்துவிடுகிறார்கள்.
ஏர் மார்ஷல் எனும் பதவி, ஃப்ளைட் பயணத்திற்கு பாதுகாப்பு கொடுக்கின்ற, ஃப்ளைட் கடத்தல் போன்றவற்றை சமாளித்துக் காப்பாற்றும் ஒரு ரகசிய ஏஜெண்ட் போன்ற பதவி. ஹீரோவுக்கென்று தனி நெட்வொர்க்கில் வேலை செய்யும் ஃபோனும் உண்டு. அந்த சீக்ரெட் நெட்நொர்க் ஃபோனிற்கு மெசேஜ் வருவதில் இருந்தே, படம் வேகம் எடுக்கிறது. ’நான் சொல்லும் அக்கவுண்ட்டிற்கு 150 மில்லியன் டாலர் அனுப்பவில்லையென்றால், அடுத்த 20 நிமிடத்தில் ஒரு கொலை விழும்’ என்று மெசேஜ் வர, ஹீரோ அது யாரென்று கண்டிபிடிக்க முயல்கிறார். சரியாக, 20வது நிமிடத்தில் ஒரு கொலை விழுகிறது. அதைச் செய்வது ஹீரோ தான். கூடவே, அந்த அக்கவுண்ட் ஹீரோ பேரில் இருப்பதாகவும் தகவல் வர, அங்கே ஆரம்பிக்கும் ஸ்பீடு கடைசிவரை குறையவே இல்லை.

படம் முழுக்கவே ஃப்ளைட்டில் தான் என்றாலும் போரடிக்கவே இல்லை. அதிலும் கடைசி இருபது நிமிடங்கள், சான்ஸே இல்லை. செம ஃபாஸ்ட்! படத்தின் பெயரைப் போலவே, படமும் நான் ஸ்டாப்பாக பறக்கிறது.

பயணியாக Julianne Moore (பாட்டி) மற்றும் ஏர் ஹோஸ்டஸாக Scooty McNairyம் நடித்திருக்கிறார்கள். கதைப்படி ஹீரோயினோ கிஸ் சீனோ கிடையாது என்றாலும், கண்ணுக்கு ஆறுதல் இந்த இருவர் தான். குறிப்பாக ஸ்கூட்டி!
Dude with Problem பாணி திரைக்கதை தான். தெளிவான திரைக்கதையுடன் சொல்லி அடித்திருக்கிறார்கள். ஹாலிவுட் பாக்ஸ் ஆபீசில் நம்பர் ஒன்னாக, சூப்பர் ஹிட்  ஆகியிருக்கிறது படம்.

Liam Neeson ஹாலிவுட்டில் எனக்குப் பிடித்த ஒருவர். 60 வயது தாண்டிய நிலையில் நீசனுக்கு எப்படித்தான் இப்படி கதைகளும் ஆக்சனும் அமைகிறதோ? மனிதர் பின்னி எடுக்கிறார். வயதுக்கு ஏற்ற வேடம் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என்பது தான் அவரது வெற்றிக்கு அடிப்படை. இதிலும் அப்படியே!

படத்தின் இயக்குநர் Jaume Collet-Serra. இவர் நீசனுடன் இணைந்து ஏற்கனவே Unknown படத்தைக் கொடுத்தவர். அதே ஜோடி மீண்டும் இணைந்து, ஜெயித்திருக்கிறார்கள். ஆக்சன் பட ரசிகர்கள், குறிப்பாக டேக்கன் 1 &2 வை ரசித்தவர்கள், தவறவிடக்கூடாத படம், Non-Stop.

மேலும் வாசிக்க... "Non-Stop (2014) - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

24 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, March 3, 2014

தமிழ்ஸ்ஸ்.காமில்..ஆடுகளம் – தமிழில் ஒரு உலக சினிமா!

தமிழ்ஸ்ஸ்.காமில் எழுதி வரும் தமிழில் ஒரு உலக சினிமா தொடரில் இந்த வாரம் : ஆடுகளம்

லின்க்: http://tamilss.com/2014/03/03/touc-aadukalam/

 
மேலும் வாசிக்க... "தமிழ்ஸ்ஸ்.காமில்..ஆடுகளம் – தமிழில் ஒரு உலக சினிமா!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, March 1, 2014

பொம்மை வியாபாரமும் சினிமா வியாபாரமும்

ஒரு ஊரில் குயவர் ஒருவர் இருந்தார். களிமண்ணில் பொம்மை செய்து, கலர் கலராக பெயிண்ட் அடித்து, சில ஜிகினா வேலைகள் செய்து அழகான குட்டிப்பொம்மைகளை தயாரிப்பது தான் அவர் வேலை. கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஒரு பொம்மைக்கு தயாரிப்புச் செலவு ஏழு ரூபாய் வந்தது. அதை ஒரு செட்டியார், ஒரு பொம்மை பத்துரூபாய் என மொத்தவிலைக்கு வாங்கிக்கொள்வது வழக்கம். பத்து ரூபாய் பொம்மையை பதினைந்து ரூபாய் முதல்  இருபது ரூபாய்வரை டிமாண்ட்டுக்கு ஏற்ப செட்டியாரும் விற்றுவந்தார். இருவருக்குமே லாபம்.
அதன்பின் இந்த பொம்மை வியாபாரத்தில் அதிபுத்திசாலி ஆசாமி ஒருவர் இறங்கினார். அவரும் குயவரிடம் பத்து ரூபாய்க்கு பொம்மைகள் வாங்கிக்கொண்டு போய் மெரீனா பீச்சில் கடை போட்டார். முதலில் வந்த ஒரு குடும்பம், தன் குழந்தைகளுக்கு பொம்மைகளை வாங்கியது. புத்திசாலி இருபது ரூபாய் சொல்லி, பதினைந்து ரூபாயில் பேரம் முடிந்தது. 

அடுத்து ஒரு காதல் ஜோடி வந்தது. புத்திசாலி, ஒரு பொம்மைவிலை நாற்பது ரூபாய் என்றார். பேரம், முப்பது ரூபாயில் முடிந்தது. அதற்கடுத்து ஒரு புதுமண ஜோடி வந்தது. பொம்மை விலை நாற்பது சொல்லி, இருபத்தைந்து ரூபாய்க்கு பேரம் முடிந்தது. பின்னர் வந்த ஒரு அன்றாடங்காய்ச்சி குடும்பம், பொம்மைகளை பத்து ரூபாய்க்கு கேட்டது. இவர் கஷ்டப்பட்டு பன்னிரெண்டு ரூபாய்க்கு விற்றார். மீதி இருந்த ஒன்றிரண்டு பொம்மைகளை அடுத்துவந்தவர்களிடம் பத்து ரூபாய்க்கே விற்றுவிட்டு கடையைச் சாத்தினார்.
பத்து ரூபாய்க்கு வாங்கிய பொம்மை, வாடிக்கையாளரைப் பொறுத்து பத்து-பதினைந்து-இருபத்தைந்து-முப்பது என்று வியாபாரம் முடிந்தது. அதற்கு முன் செட்டியாரும் இதையே தான் செய்துவந்தார். ஆனாலும் நம் புத்திசாலி வியாபாரி, கார்ப்போரேட் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தவர் என்பதால் செட்டியாருக்கு தோன்றாத ஒன்று புத்திசாலிக்கு தோன்றியது. 

குயவரிடம் சென்ற புத்திசாலி, “உன் பொருள் முப்பது ரூபாய்க்கு விற்கிறது. அதை ஏழு ரூபாயில் தயாரிப்பது தவறு. எனவே குறைந்தது பதினைந்து ரூபாய் செலவளித்தாவது அதை தயாரிக்க வேண்டும். நான் இருபது ரூபாய்க்கு வாங்கிக்கொள்கிறேன். முப்பது ரூபாய்க்கு வாங்க வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.” என்று உசுப்பேற்றினார். சரி, முன்பைவிட இரண்டு ரூபாய் அதிகம் கிடைக்கிறதே என்று, அதுவரை லோக்கல் பெயிண்ட்டில் பொம்மையை அலங்கரித்தவர் விலையுயர்ந்த பெயிண்ட்டிற்கு மாறினார். அவரிடம் வேலை பார்த்த தொழிலாளர்களும், விஷயம் அறிந்து சம்பளத்தை ஏற்றினார்கள். பெயிண்ட் வியாபாரிகளும் விலையை ஏற்றினார்கள். செட்டியார் இந்த பைத்தியக்காரத்தனத்தை ஏற்றுக்கொள்ளாமல் விலகிக்கொண்டார். புத்திசாலி எல்லா பொம்மைகளையும் வாங்கிகொண்டு மெரீனாவுக்குப் போனார்.
அடுத்து என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும். காதல் ஜோடிகள் மற்றும் புதுமணத் தம்பதிகளைத் தவிர மற்றவர்கள் இதை வாங்க முன்வரவில்லை. பாதிக்கு மேல் விற்காமல் போனதால், பொம்மை விலையை நாற்பதில் இருந்து எண்பது ரூபாய்க்கு ஏற்றினார். புதுமண தம்பதிகளும் காணாமல் போனார்கள். குழம்பிய புத்திசாலி குயவரிடம் ‘ உன் பொருளை வாங்கியதால் எனக்கு பெரும் நஷ்டம். அடுத்த லாட்டை குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டும்’ என்று சண்டைக்குப் போனார். அவரோ ‘ உன்னால் பெயிண்ட் விலையும் கூலியும் கூடிவிட்டது. இனி நானே நினைத்தாலும் குறைந்த விலைக்கு தயாரிக்க முடியாதே?’ என்று சண்டை போட்டார். வாடிக்கையாளர்கள் பார்த்தார்கள். இந்த இண்டர்நெட் காலத்தில் பொம்மை எதற்கு? ஆன்லைனிலேயே வீடியோ கேம் விளையாடலாம் என்று மாற்றுவழியில் இறங்கிவிட்டார்கள்.

இப்போது குயவரும் புத்திசாலியும் புலிவால் பிடித்த கதையாக, இதில் இருந்து எப்படி மீள்வது? வாடிக்கையாளர்களை திரும்ப எப்படி நம் பக்கம் கொண்டு வருவது என்று விழித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு பொம்மை ஏதோ ஒரு காரணத்தால் முப்பது ரூபாய்க்கு விற்றுவிட்டால், அதே ஆட்களின் அடுத்த பொம்மையின் தயாரிப்பு/விநியோகச் செலவையே முப்பது ரூபாய்க்கு ஏற்றிவிடுவது என்னவகையான புத்திசாலித்தனம்? இதில் ஏழு ரூபாய்க்கு தயாரிப்பவர்களின் பொம்மைக்கு கடையில் இடம் கிடையாது என்ற அரசியல் வேறு!
ஒரு குக்கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவன்கூட, இந்த பிஸினஸ் டெக்னிக்கை ஃபாலோ பண்ண மாட்டானே? இது என்ன வகை வியாபாரம் என்று நமக்குப் புரியவில்லை. உங்களுக்காவது புரிகிறதா?

போனஸ்: மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம், இங்கே குவைத்தில் நான்கு வாரம் ஓடி இருக்கிறது. கடைகளில் சென்று சிடி கேட்டால், நான்கு வாரமும் இல்லையென்று சொல்லிவிட்டார்கள். நேற்றுப் போய் த்ரிஷ்யம் சிடி கேட்டேன். இந்த மாத கடைசியில் தான் ஒருஜினல் டிவிடி வருகிறது. அதன்பின் வாருங்கள் என்று அனுப்பி விட்டார்கள். 

த்ரிஷ்யத்திற்குப் பின் வெளியான ஜில்லா, வீரம் சிடிகள் ரிலீஸ்க்கு அடுத்த நாளில் இருந்தே கடைகளிலும் நெட்டிலும் கிடைக்கின்றன. விஜய் ரசிகர்கள், வீரம் படத்தின் டொரண்ட் லின்க்க்கையும் அஜித் ரசிகர்கள் ஜில்லாவின் டொரண்ட் லின்க்கையும் போட்டி போட்டு ஃபேஸ்புக்கில் பரப்பியது ஞாபகம் வந்தது. தயாரிப்பாளரில் ஆரம்பித்து ரசிகர்கள்வரை, தமிழ் சினிமா புத்திசாலிகளால் நிரம்பி வழிவது தெரிகிறது. இப்படியே இருங்கப்பா..சீக்கிரமே ஓஹோன்னு வருவீங்க!


மேலும் வாசிக்க... "பொம்மை வியாபாரமும் சினிமா வியாபாரமும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.