Wednesday, August 31, 2011

மங்காத்தா - திரை விமர்சனம்

’அஜித்தின் ஐம்பதாவது படம். சமீபத்தில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று’ என்றெல்லாம் இருந்தாலும் பெயருக்கு ஏற்றாற்போல் கிளைவுட் நைன், ஞானவேல்ராஜ், சன், சித்தி என பலரும் இந்தப் படத்தை வைத்து மங்காத்தா ஆடி, ஒரு வழியாக தமிழகத்தில் இன்று ரிலீஸ் ஆகும் படம். (குவைத்தில் சித்தி ரிலீஸ் செய்யவில்லை!!). வழக்கம்போல் விமர்சனம் படத்தை முந்திக்கொண்டு பாய்கிறது இங்கு...
அஜித் நாற்பது வயது நிரம்பிய சஸ்பெண்ட் ஆகியிருக்கும் போலீஸ் அதிகாரி. அர்ஜூன் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலை வளைத்துப் பிடிக்க நிறுத்த நியமிக்கப்படும் ஸ்பெஷல் ப்ராஞ்ச் போலீஸ் ஆஃபீசர். கிரிக்கெட் சூதாட்டத்தின் மையமாக மும்பையும் அதன் முக்கியப் புள்ளியாக ஜெயப்ரகாஷும் இருக்கிறார்கள். ஜெயப்ரகாஷின் மகளான த்ரிஷாவும் அஜித்தும் லவ்வர்ஸ். ஐபிஎல் போட்டி நடைபெறும் நேரத்தில் 500 கோடி ரூபாய் பணம் மொத்தமாக மும்பை வந்து பிரியப்போவதை அர்ஜீன் தெரிந்து கொண்டு, மும்பையில் தன் டீமுடன் களமிறங்கிறார். 

ஜெயப்ரகாஷிடம் வேலை செய்யும் அடிப்பொடி வைபவ் தன் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்தப் பணத்தை பிரிக்க திட்டமிடுகின்றனர். சஸ்பெண்ட் ஆன போலீஸ் அதிகாரி அஜித்தும் த்ரிஷா மூலம் ஜெயப்ரகாசை நெருங்கி, அந்தப் பணத்தை நோட்டம் இடுகிறார். பணம் வந்து சேரும் நாளில் போலீஸ் கெடுபிடி அதிகம் ஆக, ஜெயப்ரகாஷ் குரூப் அதிகம் உஷாராகிறது. திருட ப்ளான் போட்ட 4 பேரும் அஜித்தும் ஒன்றாக கைகோர்த்து பணத்தை லவட்டுகிறார்கள். ஒரு பக்கம் அர்ஜூன் விரட்ட, மறுபக்கம் ஜெயப்ரகாஷ் விரட்ட, அது போதாதென்று திருடிய 5 பேரும் மாற்றி மாற்றி அடித்துக்கொள்கின்றனர். இறுதியில் அந்தப் பணம் யாருக்குச் சேர்ந்தது...திட்டம் போட்ட அஜித்திற்கா, வில்லன் குரூப்பிற்கா, போலீஸிற்கா..அல்லது அம்போவா என்பதை வெள்ளித்திரையில் காண்க.
கதையே இல்லாமல் படம் எடுக்கிறார்கள் என்று பலரும் சொன்னதாலோ என்னவோ வெங்கட் பிரபு இவ்வளவு சிக்கலான கதையை எடுத்துக்கொண்டு களம் இறங்கி இருக்கின்றார். அஜித் - ஜெயப்ரகாஷ்-த்ரிஷா-அர்ஜுன் - 4 பேர் - என எல்லோருமே கதையின் முக்கிய பாத்திரங்களாக இருப்பதால் எல்லோரின் கேரக்டரையும் தெளிவாக சொல்ல வேண்டிய கட்டாயம். அப்படி எல்லோரையும் சொல்லி முடிக்கவே 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இன்னும் எத்தனை புது கேரக்டர் வரபோகுதோ என்று பயப்படும் அளவிற்கு ஒவ்வொரு சீனிலும் ஒரு கேரக்டர் வந்துகொண்டே இருக்கிறது. அது செட்டில் ஆனவுடன் ஆரம்பிக்கிறது மங்காத்தா ஆட்டம். அதன் பிறகு செம விறுவிறுப்பு தான்..திரைக்கதைக்கு அதிகம் மெனக்கட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. 

நெகடிவ் கேரக்டரில் அஜித்.....தலயின் ஐம்பதாவது படம். பொதுவாக இந்த மாதிரி முக்கியமான படத்தை எல்லோரும் சோலோ ஹீரோவாகவே செய்ய விரும்புவார்கள். அப்படி இல்லாமல் இந்தக் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டதே தைரியமான முடிவு தான். நாற்பது வயது ஆள், அதுவும் போலீஸ் என்று சொல்லிவிட்டதால் தொப்பையும் நரைத்த முடியும் நச்சென்று பொருந்திப்போகிறது. வயதிற்கேற்ற மெச்சூரிட்டியுடன் ப்ளான் செய்வதும் பணத்தின் மேல் உள்ள ஆசையால் எதற்கும் துணிவதுமாக அஜித் கலக்கி எடுக்கிறார். தொப்பை என்று கிண்டல் பண்ணுவோருக்கு பதிலடியாக ‘ஆமாய்யா பார்த்துக்கோ’ எனும்படி ஒரு பாடலில் சட்டை இல்லாமலே........செம தில் தான்! இந்தப் படத்தில் ஆடவும் செய்திருக்கிறார், நாற்பது வயதிற்கே உரிய கூச்சங்களுடன். அஜித் ரசிகர்களுக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் தல திரும்பக் கிடைத்திருக்கிறார்.
கமலா காமேஷ் (அதாங்க த்ரிஷான்னும் சொல்வாங்களே..) அஜித்திற்கு பொருத்தமான ஜோடியாக எனக்குத் தோன்றவில்லை. ஆனாலும் நல்ல ட்ரெஷிங் சென்ஸ் இருப்பதால் பார்க்கமுடிகிறது..இதற்கு மேல் சொன்னால் த்ரிஷா ரசிகர்கள் கோபித்துக்கொள்வார்கள் என்பதால்......

’வேஸ்ட் பண்ணிட்டாங்க மக்கா’ன்னு புலம்பும்படியாக வைபவ்-க்கு ஜோடி ஆக்கிட்டாங்க. தலக்கு ஒரு சீன்ல அஞ்சலி ஒரு கும்பிடு போடுகிறது. அம்புட்டுதேன். அஞ்சலிக்கும் ஒரு தனி டூயட்..அதிலேயே நாம் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டதால் மனது சற்று ஆறுதல் அடைகிறது.
அர்ஜூன் இப்போதும் தான் ஒரு ஆக்சன் கிங் என்று நிரூபிக்கிறார். சண்டைக்காட்சிகளில் அதே வேகம். அஜித்திற்கு இணையாக கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர். இருவரும் மோதும் காட்சி அமர்க்களம். வைபவ் உள்ளிட்ட நான்கு பேரில் வழக்கம்போல் பிரேம், நம் கவனத்தை ஈர்க்கிறார். படத்தில் காமெடிக்கு இவர் மட்டுமே என்பதால் அடர்த்தியான திரைக்கதையில் பெரிய ரிலீஃபாக இவர் இருக்கிறார். 

படத்தில் குறையென்று பார்த்தால்........ அதிக கேரக்டர்களும், ஆரம்பத்தில் அதை ஞாபகம் வைக்க ரசிகர்கள் அவஸ்தைப்படுவதும் முக்கியக் குறை. அடுத்து காமெடி என்ற பெயரில் அந்த நான்கு பேர் குறிப்பாக பிரேம் அஜித்துடன் அடிக்கும் லூட்டி+டயலாக்குகள் நிறைய நேரம் மொக்கையாகவே உள்ளது. இவ்வளவு தூரம் கதைக்கு மெனக்கெட்டவர்கள் லாஜிக்கும் கொஞ்சம் பார்த்திருக்கலாம். 
போலீஸ்காரர் என்று தெரிந்தும் ஜெயப்ரகாஷ் அஜித்தை சந்தேகபடாதது, மும்பையில் எல்லா கேரக்டரும் தமிழ் பேசுவது,  தேவையில்லாமல் வரும் மியூட் செய்யப்பட்ட ஆங்கில.தமிழ் கெட்ட வார்த்தகள், எதிர்பார்த்த கிளைமாக்ஸ், அஜித்தின் பணவெறிக்கு காரணாமாக எதுவும் சொல்லப்படாதது(நிஜத்துக்கு அது சரி தான்..சினிமாவில் நம் மக்களுக்கு காரணம்/நியாயம் தேவை) இந்த மாதிரிக் கதைக்கு இரண்டு வகையான கிளைமாக்ஸ் தான் வைக்க முடியும்..அந்த இரண்டுமே இந்தப் படத்தில் வருகிறது. 

யுவன்சங்கர் ராஜா படத்தின் பெரிய பலம். பாடல்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார், அஜித்தே ஆடும் அளவிற்கு! சிக்கலான திரைக்கதைக்கு பிரவீண் & ஸ்ரீகாந்த் எடிட்டிங் கைகொடுக்கிறது. பிரேம் சம்பந்தப்பட்ட சில மொக்கை சீன்களை இன்னும் கொஞ்சம் ’கட்’டி இருக்கலாம். சக்தி சரவணனின் ஒளிப்பதிவு வர்ணஜாலம் காட்டுகிறது. ஓப்பனிங் மங்காத்தா சாங்கில் லட்சுமிராயில் ஆரம்பித்து முழு படத்தையே கலர்ஃபுல் திருவிழாவாக ஆக்குகிறது அவர் ஒளிப்பதிவு.
படம் நல்ல படமா, இல்லையா என்றால்..........ஏகன்/அசலை விட பலமடங்கு பெட்டர்.  நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு திருவிழா தான். மற்றவர்களும் ரசிக்க முடியும். வெங்கட் பிரபு வைத்திருக்கும் அந்த கிக்கிலிபிக்கிலி குரூப்பைக் கொஞ்சம் அடக்கி, இன்னும் படத்தை ஷார்ப் ஆக்கியிருக்க முடியும். இருப்பினும் சமீபத்தில் வந்த கமர்சியல் படங்களை ஒப்பிடும்போது இது பெட்டர் தான். அஜித்திற்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் ஓகே ரகத்தில் ஒரு படம்.

மங்காத்தா - ஆட்டம் மோசம் இல்லை!

மேலும் வாசிக்க... "மங்காத்தா - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

140 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, August 30, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_41

மீலா தன் குழந்தையுடன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தாள். மதனின் அப்பா கேட்டைத் திறந்துகொண்டு கோபமாக வருவதைப் பார்த்தாள். அவர் இப்படி ஆக்ரோசமாக வருவது புதிதல்ல. வழக்கமாக ஏதாவது கட்டைப் பஞ்சாயத்து செய்துவிட்டோ, யாரிடமாவது சண்டை போட்டுவிட்டோ வரும்போது, அவர் முகம் இப்படியே இருக்கும். 

ஜமீலா அவரைப் பார்த்து வாங்கப்பா என்று சொல்வதிலேயே பாதிக்கோபம் போய் விடும். பேரனைப் பார்த்துவிட்டால் மீதிக்கோபமும் போய், குழந்தையாகி விளையாட ஆரம்பித்துவிடுவார்.

இப்போதும் ஜமீலா “வாங்கப்பா” என்று சொன்னபடியே எழுந்து நின்றாள்.

”என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது? கேணப்பய மாதிரித் தெரியுதா?”

சத்தமாக கடும் கோபத்துடன் மதன் அப்பா அப்படிக்கேட்டதும் ஜமீலா ஆடிப்போனாள். பயத்தில் பேச்சு வராமல் உடல் நடுங்க ஆரம்பித்தது.

“எங்க குடும்பம் எப்பேர்ப்பட்ட குடும்பம்னு தெரியுமா? மதன் அம்மாவுக்கு இங்கே எப்படிப்பட்ட மரியாதை இருந்தது தெரியுமா? எல்லாரும் கையெடுத்துக் கும்பிடுற அளவுக்கு உத்தமியான பொம்பளை அவ. ஆனா..ச்சீ..உன்னை மாதிரி கழிசடையை அவ இடத்துல வச்சனேன்னு நினைக்கும்போது எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்னை கொன்னுடலாமான்னு தோணுது”

“நா..நான் என்னப்பா தப்பு பண்ணேன்?” ஜமீலா கண்ணில் கண்ணீர் வழியக் கேட்டாள்.

“என்னமா நடிக்கிறே..இப்படி நடிச்சுத்தானே என் பையனை ஏமாத்துன? அழுதா ஏமாந்திடுவோமா? உண்மையைச் சொல்லு..நீ ஏற்கனவே கல்யாணம் ஆனவ தானே? அங்க இருந்து அத்துக்கிட்டு வந்தவ தானே?”

ஜமீலா அதிர்ந்து போனாள். இது திடீரென இவருக்கு எப்படித் தெரியும் என்று யோசித்தபடியே “ஆமாப்பா” என்றாள்.

“ஆமாவா..எவ்வளவு திமிராச் சொல்றே..இத்தனை நாள் இதை மறைச்சு ஏமாத்துன பயம் கொஞ்சமாவது தெரியுதா உனக்கு..உன்னை மாதிரி ஓடுகாலியை வீட்ல கொண்டுவந்து வச்சனே, அது என் தப்பு..மகன் சந்தோசம் தான் முக்கியம்னு எங்க சாதி கௌரவத்தை விட்டு உன்னை குடும்பத்துல சேர்த்தமே அதுக்கு இந்த அவமானம் தேவை தான்.இனி ஒரு நிமிசம் நீ இங்க இருக்கக்கூடாது. எனக்கு இருக்கிற ஆத்திரத்துக்கு அடிச்சே கொன்னுடுவேன். பொட்டச்சியாச்சேன்னு பார்க்கிறேன்..கிளம்பு..இப்பவே கிளம்பு”

இனி இவரிடம் பேசிப் புரியவைக்க முடியாது என்று தெரிந்தது. ஜமீலா அழுதபடியே தன் பொருட்களை சூட்கேஸில் எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

வெளியே தெருவே கூடி இருந்தது. ‘என்ன பிரச்சினை..ஏன் இப்படிச் செய்றீங்க’ என்று அவரைக் கேட்க அங்கே யாருக்கும் தைரியம் இல்லை. வேறு ஜாதி/மதப் பெண் போய் தொலைந்தால் சரி எனும் மனப்பான்மையும் அங்கே இருந்தது.

ஜமீலா அத்தனை பேரையும் கடந்து மெயின் ரோட்டிற்கு வந்து பஸ் ஸ்டாப்பில் நின்றாள். எங்கு போவது என்று தெரியவில்லை. பிறந்த வீட்டிற்குப் போக முடியாது. வேறு தோழிகளுடனும் தொடர்பு இல்லை. மதனின் நண்பர்களை தொடர்பு கொள்ளலாமா? அது வீட்டுப்பிரச்சினையை வெளியில் கொண்டுபோனது போல் ஆகிவிடுமே.

வந்த பஸ்ஸில் ஏறினாள்.

“எங்கம்மா போகணும்” என்றார் கண்டக்டர்.

“எங்க போகுது இந்த பஸ்?”

கண்டக்டர் ஒரு மாதிரியாகப் பார்த்தபடியே “ மாட்டுத் தாவணி” என்றார்.

“சரி, அதுக்கே ஒன்னு கொடுங்க” என்று டிக்கெட் வாங்கிக்கொண்டாள்.

மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்ட் கூட்டத்தில் அவளும் கலந்து அங்கேயே உட்கார்ந்திருந்தாள். அழுத பையனுக்கு பால் வாங்கிக்கொடுத்துவிட்டு, மதனுக்கு ஃபோன் செய்தாள். அவன் எடுக்கவில்லை. திரும்பத் திரும்ப அடித்தபடியே இருந்தாள். எந்த பதிலும் இல்லை.

‘என்ன செய்கிறான்..யார் இவரிடம் சொன்னது..நான் ஆரம்பத்திலேயே மறைக்க வேண்டாம் என்று சொன்னேனே..அவனோட க்ளோஸ் ஃப்ரெண்ட்டான பழனி, செங்கோவிகிட்டக் கூட சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டானே..இனி யார் என்னை நம்புவார்கள்’ என்று யோசித்தபடியே பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்திருந்தாள். எந்தப் பஸ்ஸிலும் ஏறாமல் பல மணி நேரமாக அங்கேயே இருந்ததால், சில ஆண்களும் கடைக்காரர்களும் வினோதமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். 

ஒருவன் செல்ஃபோனை வெறுமனே காதில் வைத்துக்கொண்டு “சொல்லும்மா..நான் இருக்கேன்ல..எவ்வளவு வேணும்..சொல்லு “ என்றான். ஜமீலா பயந்து போனாள். தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம்கூட ஒரு பெண் தனியே பொது இடத்தில் அமர்ந்திருக்க முடியாது என்பது புரிந்தது. அவள் அங்கிருந்து எழுந்து வேறு பக்கம் நோக்கி நடந்தாள். அங்கே ராஜபாளையம் பஸ் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள். 

லட்சுமியக்கா ஞாபகம் வந்தது. ஜமீலாவின் பிரசவத்தின்போது உதவி செய்ய லட்சுமியக்கா வந்திருந்தார். மதனுக்கு அவர் அக்கா முறை. ராஜபாளையம் அருகே ஏதோ கிராமம் என்று சொன்னார்கள். பிரசவத்திற்குப் பிறகும் ஃபோனில் என்ன செய்யவேண்டும், கூடாது என அறிவுரை சொல்லிக்கொண்டே இருப்பார். தமிழ்நாட்டில் தனக்குத் தெரிந்த ஒரே ஆள் அவர் தான் என்பது ஜமீலாவிகுப் புரிந்தது. ராஜபாளையம் பஸ்ஸில் குழந்தையுடன் ஏறினாள்.

லட்சுமிக்கு ஃபோன் செய்தாள். 

“அக்கா, நான் ஜமீலா பேசுறேன்”

”ஜமீலாவா..நல்லாயிருக்கியாம்மா?”

“ம்..ஊர்ல தானே இருக்கீங்க?”

“ஆமா.ஏன்மா”

“இல்லே..நான் ராஜபாளையம் வர்றேன்..அப்படியே உங்களையும் பார்க்கலாம்னு”

“இம்புட்டு தூரம் வந்திட்டு, பார்க்காமலா போவே? போனா சும்மா விட்ருவனா? வாம்மா..ராசாளயம் வந்திட்டு போன் பண்ணு..அவரை பஸ் ஸ்டாண்டுக்கு வரச் சொல்றேன்”

“சரிக்கா”

ஜமீலா ஃபோனை வைத்தாள். ஆனாலும் பயமாகவே இருந்தது. ’மதனின் அப்பாவை எதிர்த்துக்கொண்டு, என்னை வீட்டில் தங்க விடுவார்களா என்று தெரியவில்லை. முதலில் போவோம். இதைத் தவிர வேறு வழியில்லை.’ என்று துணிந்தாள்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_41"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

43 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

யோக்கியப் பதிவர்களை நசுக்கும் அயோக்கியப் பதிவர்கள்...

பதிவுலகில் அவ்வப்போது எழும் ஒப்பாரி, மீண்டும் இப்போது எழத் தொடங்கியுள்ளது. அநேகமாக இதை ஆரம்பித்து வைத்தவர் நிரூபனாக இருக்கலாம்.அங்கே பேசியவற்றின் தொடர்ச்சியாக எழுந்த சிந்தனைகளின் தொகுப்பாக இதை எழுதுகின்றேன்..

கமர்சியல் பதிவர்களால் நல்ல காத்திரமான இலக்கியப் பதிவுகள், நல்ல பதிவுகள் பல வாசகர்களைச் சென்றடையாமல் போவதாகவும் இதற்கு என்ன செய்யலாம் என்றும் தீவிரமாக ஆலோசனைகள் நடந்து வருகின்றன. வழக்கம்போல் நம் மக்கள் விஷயத்தின் அடிநாதத்தை தவற விடுவதாகவே எனக்குத் தோன்றுகின்றது. 

மொக்கை போடும் கூர்மையான புத்திசாலிகள், நடிகைகளின் கில்பான்சி படம் போடும் நல்லவர்கள், அயராது காப்பி பேஸ்ட் பதிவு போடும் உழைப்பாளிகள், உருப்படியாக எதையும் எழுதாமல் வெறுமனே பின்னூட்டம்/ ஓட்டு போட்டே பிரபலம் ஆவோர் போன்ற புண்ணிய ஆத்மாக்களே நம் மக்களால் கமர்சியல் பதிவர்கள் என்று சுட்டியும் அயோக்கியப் பதிவர் என்று திட்டியும் காட்டப்படுகின்றனர். 

நல்ல கதை/கவிதையை படைப்போரும், இங்கே வந்து கதை / கவிதை எழுதப் பழகிக்கொண்டிருப்போரும் உண்மையிலேயே சமூகத்திற்குப் பயனளிக்கும் விவாதங்களைக் கிளப்பும் பதிவுகளை எழுதுவோரும், சினிமா/அரசியல்/நகைச்சுவை/காத்திரமான படைப்புகள் என எதுவுமே எழுதத் தெரியாதவர்களும் யோக்கியப் பதிவர்கள் என்று பெருமையுடன் அழைக்கப்படுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் பதிவுலகில் எழுப்பப்படும் குற்றச்சாட்டு, நல்ல பதிவுகள் மக்களைச் சென்றடைய விடாமல் கமர்சியல் பதிவர்கள் கெடுக்கின்றார்கள் என்பதே. பதிவுலகம் என்பது நமது நிஜ உலகின் பிரதிபலிப்பு என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. எனவே நாம் முதலில் நிஜவுலகில் நல்ல படைப்புகளின் நிலை என்ன என்று பார்க்கலாம்.

2009ஆம் ஆண்டு திடீரென எழுத்தாளர்களுக்கு தரப்படும் ராயல்டி குறித்து சலசலப்பு எழுந்தது. அப்போது ஜெயமோகன் ‘ஒரு வருடத்திற்கு எனது புத்தகம் ஆயிரம் விற்றாலே பெரிய விஷயம் என்றார். சும்மாவே புலம்பும் சாருநிவேதிதா ‘எல்லாரும் ஓசியில் என் தளத்தைப் படிக்கிறாங்களேயொழிய யாரும் என் புத்தகங்களை வாங்குவதில்லை’ என்று அழுதார். மற்றொரு முக்கிய படைப்பாளியான எஸ்.ராமகிருஷ்ணன் ‘ஆம்..எனக்கும் அப்படியே’ என்று கொஞ்சம் கெத்தாக ஒப்புக்கொண்டார்.

‘தமிழகம் ஏன் இவ்வளவு மோசமான நிலையில் உள்ளது? நல்ல இலக்கியங்கள் மக்களைச் சேர இனி நாம் என்ன செய்ய வேண்டும்’ என தீவிரமான விவாதம் மொத்தமே 100 பிரதிகள்கூட விற்காத இலக்கிய சிற்றிதழ்களில் நடந்தது. அதன்பிறகு என்ன செய்வதென்றே தெரியாமல் அது அடங்கியது.

அதே நேரத்தில் குமுதமும் விகடனும் தமிழ்நாட்டிலேயே நாங்கள் தான் நம்பர்.1 பத்திரிக்கை..எங்கள் புத்தகம் ஒவ்வொரு வாரமும் 5 லட்சம் பிரதிகள் விற்கின்றன என்று உரக்க சொல்லிக்கொண்டிருந்தன. மசாலாப் பொடி, சோப்பு டப்பா கொடுத்து குங்குமமும் கொஞ்சநாள் அதைச் சொன்னது.

விஷ்ணுபுரம், ஜீரோடிகிரி, உபபாண்டவம் என தீவிர இலக்கியப் படைப்புகள் ஆயிரம் பிரதியைத் தாண்ட முடியாத நேரத்தில், கமர்சியல் பத்திரிக்கைகள் லட்சங்களில் பேசிக்கொண்டிருந்தன. 

நம் பதிவர்கள் அளவிற்கு ஜெயமோகன், சாரு வகையறாவிற்கு ஞானம் இல்லாததால் விகடன்/குமுதத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழவில்லை. அந்த அளவிற்கு ஆண்டவன் நம்மைக் காப்பாற்றினான்.

ஏன் இப்படி நிகழ்கிறது என்று கொஞ்சம் யோசிப்போருக்கும் உண்மை புரியும். முதலில் பெருவாரியான மக்கள் படிப்பது பொழுதுபோக்கிற்காகவே. உக்கிரமான, சிந்தனையைத் தூண்டும் படைப்புகளை நாடி யாரும் படிப்பதில்லை.

ஏற்கனவே சொந்த வாழ்விலும், அலுவலத்திலும் அழுத்தம் தாளாமல் தன்னை ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள வருவோரே இங்கு 80%க்கும் அதிகம். அவர்களது ஒரே நோக்கம் பொழுதுபோக்குவதும், கவலை மறந்து சிரிப்பதுமே. அந்த வகையில் இந்த கமர்சியல் பத்திரிக்கைகள் உளவியல்ரீதியாக இந்த சமூகத்திற்கு ஆற்றிக்கொண்டிருக்கும் பங்கு பாராட்டத்தக்கது. (சினிமாவும் அப்படியே!)
குமுதம் படிக்கும் லட்சக்கணக்கான மக்களில் பத்தாயிரம் பேரால் கூட விஷ்ணுபுரத்தை படிக்க(அதாவது வெறுமனே வாசிக்க)க்கூட முடியாது. அதை ஆயிரம் பேரால்கூட உள்வாங்கவும் முடியாது.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இலக்கியம் படிக்கவும் தேர்ந்த வாசிப்பு அனுபவமும், இந்த வாழ்வின் இயங்குமுறை பற்றிய சில அடிப்படைக் கண்ணோட்டமும்(அது தவறாகவோ, மாறிக்கொண்டோ இருக்கலாம்) தேவை.

அதாவது இலக்கியம் என்பது எப்போதும் எங்கும் வெகுஜன மக்களுக்கானது அல்ல. பாரதியின் காலம் முதல் இப்போது வரை ஒரு சிறு வாசகர் வட்டத்தாலேயே இலக்கியமானது கவனிக்கப்படுகிறது. பாரதியின் இறுதி ஊர்வலத்திற்கு வந்தோர் வெறும் 13 பேர்கள் தான் என்பதில் அடங்கியுள்ளது நம் புலம்பலுக்கான பதில்.

எப்போதும் நல்ல படைப்பு என்பது எழுதிய அக்கணமே நம்மை பெரும் திருப்தியில் ஆற்றிவிடும். அதன்பிறகு எழுதியவன் செய்வதெல்லாம் இதை எத்தனை பேர் சரியாக புரிந்துகொள்கிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பதே. எழுத்தாளனுக்கு ஆத்மதிருப்தி தர ஒரு பத்துப் பேர் (அதிகபட்சமாக) அதனை விளங்கிக் கொண்டாலே போதும்.

உலக இலக்கியம் பற்றியோ, நமது இலக்கியச் சூழல் பற்றியோ எவ்வித அடிப்படைப் புரிதலும் இன்றி, அய்யய்யோ..யாரும் வர மாட்டேங்கிறாங்களே..கமர்சியல் பதிவர்கள் என் பொழப்பை கெடுக்கிறாங்களே ‘ என்று கூவுவதை விடுங்கள். அதிக கூட்டம் வந்தால் ‘சம்திங் ராங்’ என்று சந்தேகப்படக் கற்றுக்கொள்ளுங்கள்.

பல வருட உழைப்பில் உருவான புத்தகமே வருடத்திற்கு ஆயிரம்கூட விற்பதில்லை..அதாவது ஒரு வருடத்திற்கு ஆயிரம் ஹிட்ஸ்கூட வாங்குவதில்லை என்பதை நினைவில் வையுங்கள். அதை ஒப்பிடும்போது, நமக்கு வருவது பெரும் கூட்டம் என்பது புரியும்.

கமர்சியல் பதிவர்கள் யாரும் எனக்குத் தெரிந்தவரை யாரையும் கையைப் பிடித்து இழுத்து வருவதில்லை..யாரையும் கத்தியைக் காட்டி மிரட்டியும் அழைத்து வருவதில்லை. அந்த வாசகர் வட்டம் தானாகவே உருவாகி வருவது. கமர்சியல் எழுதியும் ஹிட் ஆகாத பதிவர்களும் இங்கு உண்டு. நம் மக்கள் தங்களுக்கு எது தேவையோ, அதை அவர்களே தேர்ந்தெடுப்பார்கள்.

எந்தவொரு கமர்சியல் பதிவரும் யோக்கியப் பதிவருக்கு கூட்டம் வரக்கூடாது என்ற குறிக்கோளுடன் பதிவிடுவதில்லை. தனக்குத் தெரிந்ததை, பிடித்ததை பகிர்ந்து கொள்கிறார்கள். ‘நீ ஏன் 

இதை எழுதுறே..நீ ஏன் அதை அப்படி எழுதக்கூடாது’ என்று மிரட்டுவது பாசிசம். உங்களுக்குப் பிடித்ததைத் தான் எழுத வேண்டும் என்றால், உங்கள் ப்ளாக்கிலேயே எழுதி விடலாமே..தனியாக ஒரு ப்லாக் எதற்கு?

’நல்ல கருத்துகள் (மட்டுமே) அதிக வாசகர்களைச் சேரவேண்டும். அதுவே சமூகத்திற்கு நல்லது ‘ என்ற உங்கள் நோக்கம் சரி தான், ஆனாலும் நடைமுறை யதார்த்தம் நிஜவுலகிலும் பதிவுலகிலும் அப்படி இல்லை என்பதை நினைவில் வைப்போம்.

நல்ல படைப்பு வாசகனிடம் தொடர்ந்த சிந்தனையைக் கோரும். அதற்கு இங்கு யாரும் தயாராக இல்லை, அதற்கு அவர்களிடம் நேரமும் இல்லை என்பதை நினைவில் வைத்தால் குழப்பம் இல்லை.

மேலும், எழுதுவது மட்டுமே நம் வேலையாக இருக்கட்டும். எதைப் படிப்பது என்பதை வாசகரே தீர்மானிக்கட்டும். ஏனென்றால் அவர்கள் நம்மை விடவும் புத்திசாலிகள்!

இந்தப் பதிவிற்குச் சம்பந்தப்படாத ஒரு தகவல்...

தமிழ்மண தர வரிசைப் பட்டியலில் இருந்து எனது வலைப்பூவை நீக்கும்படி தமிழ்மணத்திடம் கேட்டுக்கொண்டுள்ளேன். இனி என் வலைப்பூ அங்கே காணப்பட மாட்டாது. நன்றி.

மேலும் வாசிக்க... "யோக்கியப் பதிவர்களை நசுக்கும் அயோக்கியப் பதிவர்கள்..."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

201 comments:

«Oldest   ‹Older     Newer›   Newest»
«Oldest ‹Older     Newer› Newest»

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, August 29, 2011

அன்னா ஹசாரேயின் வெற்றியும் அவதூறுகளும்


’ஒரு தலைவர் பெரும்பான்மையான மக்களால் புகழப்படுகிறார் என்றால், அவர் ஒரு அயோக்கியனாகத் தான் இருக்க வேண்டும்’ என்று எண்ணும் மனநிலைக்கு நம்மை தற்காலத் தலைவர்கள் கொண்டு சென்றுள்ளனர். இப்படி ஒரு துரதிர்ஷ்டமான நிலை, உலகில் வேறெங்கும் நிலவுகிறதா எனத் தெரியவில்லை.'

- எனது இன்றைய காந்தி விமர்சனப் பதிவில் காந்திக்காக எழுதிய வரிகளை திரும்பவும் ஒரு காந்தியவாதிக்காகச் சொல்ல வேண்டிய நிலை. அண்ணா ஹசாரே தனது ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியபின் அவர் மீது தான் எத்தனை வசைகள்.
அவரையே ஊழல்வாதி என்றார்கள்.

ஜாதி வெறியர் என்றார்கள்.

ஆர்.எஸ்.எஸ்., பாஜக போன்ற காவி அமைப்புகளின் கைக்கூலி என்றார்கள்.

அன்னிய சதி என்றார்கள்.

அவரது வாழ்க்கையில் இருந்து என்னென்ன குறைகளையெல்லாம் தேடிக் கண்டுபிடிக்க முடியுமோ, அத்தனையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துச் சொன்னார்கள். இப்படி கடுமையாக எதிர்க்கும் அளவிற்கு அவர் அப்படி என்ன கேட்டுவிட்டார்?

தேர்தல் கமிசன் போல, மனித உரிமைக் கமிசன் போல ஊழலுக்கு எதிரான ஒரு சுதந்திர அமைப்பு தேவை என்றார். ஊழல்வாதிகளிடமே ஊழலை விசாரிக்கும் அதிகாரம் இருப்பது கேலிக்கூத்து என்றார். இதில் அவருக்கு தனிப்பட்ட முறையில் பயனளிக்கக்கூடிய விஷயம் ஏதாவது உண்டா?

அவர் ஜாதி வெறியர் என்று கொண்டால், லோக்பால் மூலமாக அவரது ஜாதி வெறி அடையும் நன்மை என்ன? 

பாஜகவின் கைக்கூலி என்றால், நாளை பாஜகவுக்கே ஆப்பு வைக்க வாய்ப்புள்ள லோக்பாலுக்கு அவர் ஏன் போராட வேண்டும்?

அன்னிய சதியா இது? இந்தியாவில் ஊழலை ஒழிக்க எந்த அன்னிய நாடு ஐயா சதி செய்வது? பெயரைச் சொல்லுங்கள்.. அந்த திசைக்கு ஒரு கும்பிடு போட்டுக்கொள்கிறோம்.

ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது காங்கிரசுக்கு எதிரான போராட்டம் என்று காங்கிரசே வெளிப்படையாக ஒத்துகொண்டது தான் கேலிக்கூத்து.

காந்தியின் காலத்தில், காந்தி மீது என்னென்ன வசைகள் பொழியப்பட்டனவோ, அவற்றையே திரும்ப இப்போதும் அட்சுரம் பிசகாமல் சொல்கிறார்கள். ஆனால் இந்த அறிவுஜீவிக்கூட்டத்தை எளிய மக்கள் எப்போதும் ஒதுக்கியே வந்துள்ளார்கள். இவர்கள் என்ன தான் கூக்குரலிட்டாலும் உண்மை காலம் தாழ்ந்தாவது வெளியே வந்துவிடுகின்றது.
பகத்சிங்கை தூக்கிலிட காந்தியே காரணம் என்றும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தூக்கிலிடுங்கள் என்று அவர் சொன்னதாகவும், பகத்சிங் விடுதலைக்கு அவர் எதுவுமே செய்யவில்லை என்றும் உச்சபட்ச அவதூறு காந்தியின் காலத்தில் அவரைப் பற்றிப் பரப்பப்பட்டது, இப்போது காந்தி பகத்சிங் விடுதலைக்காக எழுதிய கடிதம் வெளியில் வந்துள்ளது. 

இந்த அவதூறுகளுக்கு அவர் தன் வாழ்நாளில் பதில் சொல்லவே இல்லை. காரணம், ’இவர்களுக்கு அவதூறு செய்வதைத் தவிர வேறு வேலையில்லை. அதையே தொழிலாக, கொள்கையாக வைத்திருக்கிறார்கள். நமக்கு ஆக்கப்பூர்வமான வேலைகள் நிறைய உள்ளது ‘ என்று அவர் புரிந்து வைத்திருந்தார். 

அண்ணா ஹசாரேவும் இவர்களுக்குப் பதில் சொல்லவில்லை. எந்தவொரு காந்தியவாதியும் பதில் சொல்ல மாட்டார். ஏனென்றால் அவர்கள் செயல்வீரர்கள். அவர்களது கவனம் எல்லாம் செயலின் மீதே, பேச்சின் மீது அல்ல.

நமக்குப் பிடிக்காத பக்கத்து வீட்டுக்காரன் ஓடி வந்து, உன் வீட்டில் தீ எரிகிறது..வா அணைப்போம் என்று கூப்பிட்டால் ‘நீ யோக்கியனா?..அன்னைக்கு என்ன சொன்னே..போன மாசம் பெரியசாமிகிட்ட வாங்குன கடனை திருப்பிக் கொடுக்காதவன் தானே நீ..போன தேர்தல்ல அந்தக்கட்சிக்கு ஓட்டுப் போட்டவன் தானே நீ..அயோக்கியப் பயலே..நீ வந்து என் வீட்டுத் தீயை அணைக்க கூப்பிடுவே..நான் வரணுமா..என்னை என்ன முட்டாள்னு நினைச்சியா..நான் அறிவுஜீவி தெரியுமா?” என்று நாம் எப்போதாவது சொல்வோமா? பதறி எழுந்து அழைத்தவர் பற்றிக் கவலையின்றி ஓடுவோம் அல்லவா? 

ஆனால் அதுவே நம் நாட்டில் பற்றி எரியும் பிரச்சினை என்றால் எல்லா நியாயமும் பேசுகின்றோம். எல்லாக் கேள்விகளையும் கேட்டு, அழைத்தவரின் ஜாதகத்தை ஆராய்கிறோம். விசித்திரமான மனிதர்கள் தான் நாம். 

ஆனால் காந்தியத்திற்கு இது புதிய விஷயம் அல்ல என்பதால், அண்ணா அது பற்றிய கவலையின்றி தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அந்த உறுதியே பாஜக-கம்யூனிஸ்ட்கள் என்ற இரு துருவங்களின் ஆதரவையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. 

காந்தியம் எப்போதும் சமரசத்தை நாடுவது, எல்லோருடனும் நட்புக்கரம் நீட்டி அவரது ஆதரவையும் பெறவே அது முயலும். இந்த அடிப்படைப் புரிதல் இன்றி, அவர் மதவாதிகளின் கைக்கூலி என்றார்கள். இதே வழிமுறை மூலம் சுதந்திரம் வாங்கி 65 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னும், நமக்கு காந்தியம் பற்றிப் புரியவே இல்லை. காந்தியை அறிந்து கொள்ள நாம் முயலவேயில்லை என்பதையே இது காட்டுகிறது.

’லோக்பால் வந்துவிட்டால் ஊழல் ஒழிந்துவிடுமா ‘ என்ற கேலிப்பேச்சு இன்னொரு பக்கம். சினிமாவில் நடப்பது போல், மெசின் கன்னை எடுத்து படபடவென ஊழல்வாதிகளைச் சுட்டு ஒரே நாளில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இங்கு பிரச்சினை நம் ஜனநாயக அமைப்பில் உள்ள ஓட்டை தானேயொழிய, இப்போதிருக்கும் அரசியல்வாதிகள் அல்ல. இவர்கள் போனால், வேறொருவர் வந்தும் இதையே செய்வார். எத்தனை பேரைச் சுடுவது?
ஜனநாயக முறையிலான மாற்றம் என்பது எருமை மாட்டில் மழை பெய்வது போல. எந்தவித பரபரப்பும் இன்றி, மெதுவாகவே மிக மெதுவாகவே நிகழும். தீவிரமான சுதந்திரப் போராட்டமே 20 ஆண்டுகளுக்கு மேல் நடந்தது. இந்த லோக்பாலும் பத்து வருடங்களுக்கு மேலாக பேசப்பட்டு வரும் விஷயம். ஒரு பெரிய முயற்சியில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றமே இப்போது மத்திய அரசுக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்டுள்ள உடன்பாடு.

மக்கள் மத்தியில் ஊழலுக்கு எதிராக உள்ள மனப்பான்மையையும், ஒரு வயதான கிழவர் நினைத்தால்கூட அந்த மக்களை ஒன்றுதிரட்டிவிடும் ஆபத்தையும் நம் ஊழல்வாதிகளுக்கு உறைக்க வைத்ததே இந்தப் போராட்டத்தின் ஆகப் பெரிய வெற்றி!

ஜெய் ஹிந்த்!

மேலும் வாசிக்க... "அன்னா ஹசாரேயின் வெற்றியும் அவதூறுகளும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

109 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, August 28, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_40

அறிவிப்பு :
நேற்றைய முக்கியப் பதிவான ராஜீவ் உயிருக்கு ஈடாக இன்னும் எத்தனை உயிர்கள் தேவை? -ஐ தவற விட்டவர்கள், தயவு செய்து அதனைப் படித்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி!


மீலாவுக்கு மதுரை ஓரளவு பழகியிருந்தது. மதனின் அப்பா பேரனை கொஞ்சுவதிலேயே பெரும்பகுதி நேரத்தைக் கழித்தார். கரடுமுரடான சுபாவம் உள்ள அவர் இப்படி பேரனுடன் விளையாடுவது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

‘இதுவரைக்கும் இந்தாளு ஏதாவது பிள்ளையை தூக்கி இருக்காரா..இப்போ பேரன் வரவும் இறக்கி விடமாட்டேங்கிறாரே’ என்று உறவுகள் ஆச்சரியப்பட்டன. ஜமீலாவிற்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தன. அவள் கேட்பது எல்லாம் வாங்கித்தர வேலையாட்களுக்கு மதன் அப்பா சொல்லி வைத்திருந்தார்.

ஆனாலும் ஜமீலாவிற்கு ’ விசா ஏன் இப்படி லேட் ஆகிறது, மதன் எப்போது தன்னை அழைத்துக்கொள்வான் ‘ என்ற யோசனையே ஓடிக்கொண்டிருந்தது. மகனுக்கும் இடையில் பாஸ்போர்ட் அப்ளை பண்ண முயற்சித்தாள். அதற்கு மதனின் அனுமதி வேண்டும் என்றும், அஃபிடவிட்டில் அவன் கையெழுத்திட்டு அனுப்பவேண்டும் என்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் சொல்லி திருப்பி அனுப்பினார்கள்.மதனிடம் அது பற்றிப் பேசலாம் என்றால் அவனிடம் இருந்து ஒரு வாரமாக ஃபோனே இல்லை. என்ன செய்கிறான் என்றே தெரியவில்லை....

தனை ஒருவாரமாக யோஹன்னா ’அப்பாவிடம் பேசியாகிவிட்டதா’ என்று நச்சரித்துக்கொண்டிருந்தாள். 

“மதன், எனக்கும் உன் அப்பாகிட்ட பேசணும்னு ஆசையா இருக்கு. அவர் ஒத்துக்கலேன்னா என்கிட்ட கொடு. நான் பேசுறேன். எனக்கு என் அப்பாவைத் தான் பார்க்க கொடுத்துவைக்கலை. உன் அப்பாவைப் பார்த்தாவது என்னை நான் ஆறுதல் படுத்திக்கறேன். “

மதனுக்கு இந்த விஷயத்தை எப்படி அடுத்து கையாளுவது என்று தெரியவில்லை. ’இவளை மணந்தால் இங்கேயே குடிமகன் ஆகி, நமது லைஃப் ஸ்டைலே மாறி விடும். ஆனால் இவள் அப்பாவிடம் பேசியே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்கிறாளே..அப்பாவிடம் எப்படிப் பேச? என்ன சொல்ல முடியும்? எனக்கு வேறு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்றால் ஒத்துக்கொள்வாரா? அதற்கு சான்ஸ் கம்மி தான். ஜமீலாவைக் கைவிடுவதை அவர் ஒத்துக்கொள்ள வாய்ப்பே இல்லையே..என்ன செய்ய’ நாளெல்லாம் யோசனையிலேயே மதன் சுற்றினான்.

இடையில் யோஹன்னாவின் அம்மா வேலை விஷயமாக ஃப்ரான்ஸ் சென்றிருந்தாள். அங்கிருந்து சாட் பண்ணினாள். மதனிடம் பேச வேண்டும் என்று ஆர்வமாய்ப் பேசினாள். மதனை வெப் கேமில் பார்த்துவிட்டு, நல்ல ஜோடிப்பொருத்தம் என்றாள். 

“நீங்க உங்க அப்பாகிட்ட பேசிட்டுச் சொல்லுங்க. நான் ஒரு முக்கியமான அஃபிசியல் டூரில் இருக்கேன். நான் திரும்பி வரவும் மேரேஜை வச்சிக்கலாம்..ஆனால் உங்க அப்பா சம்மதம் முக்கியம்னு நான் நினைக்கிறேன்’ என்றாள்.

மதனும் ‘கண்டிப்பாகப் பேசுகிறேன்..அவர் ஒத்துப்பார்னு நம்புறேன்’ என்றான்.

விசா முடிவதற்கான நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்த நிலையில், மதன் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தான். ஃபோனை எடுத்து அப்பாவிற்கு கால் செய்தான்.

“அப்பா”

“மதனா..நல்லா இருக்கியாப்பா?’
“ம்...இருக்கேன்ப்பா”

“என்னப்பா கம்முன்னு பேசுறே..என்ன ஆச்சு..உடம்பு கிடம்பு சரி இல்லையா?”

“ப்ச்..விடுங்கப்பா..நீங்க நல்லா இருக்கீங்கள்ல..எனக்குன்னு இந்த உலகத்துல உண்மையா அன்பு காட்ட இருக்கிறது நீங்க தானே..”

‘என்னப்பா இப்படிப் பேசுறே..என்ன ஆச்சு..எங்க இருக்க? ஆஃபீஸ்லயா?”

‘இல்லைப்பா..ஒரு வாரமா ஆஃபீஸ் போகலை..”

“ஏன்..ஏன்..என்ன ஆச்சுய்யா..ஆஃபீஸ்ல ஏதும் பிரச்சினையா?”

“ஆஃபீஸ்ல இல்லைப்பா..விடுங்கப்பா..நான் அப்புறம் பேசுறேன்”

“என்னய்யா..என்ன ஆச்சு..அப்பாக்கு பதறுதில்ல..என்னன்னு சொல்லு.”

“ஏம்ப்பா நான் யார் மேலல்லாம் அன்பு காட்டுறனோ அவங்கள்லாம் என்னை ஏமாத்துறாங்க இல்லே விட்டுட்டுப் போயிடறாங்க?”

“இப்போ யாருய்யா உன்னை ஏமாத்துனது?”

“வேண்டாம்பா..இங்க எனக்குன்னு யாருமே இல்லை..அது மட்டும் நல்லா தெரியுது..என்..னால பேச முடியலை”

“அழறியா? ஆம்பிளை நீ அழற அளவுக்கு என்னய்யா நடந்து போச்சு..அப்பா நான் இருக்கேன்ல..நீ அழறதைப் பார்த்திட்டு சும்மா இருப்பனா? ஏன் யாருமே இல்லேன்னு சொல்றே? நான் இருக்கேன்.ஜமீலா இருக்கா..என் பேரன் இருக்கான்..அப்புறம் என்னய்யா?”

“வேணாம்பா..அவளைப் பத்திப் பேசாதீங்க..நான் ஏமாந்துட்டேன்பா”

“என்னய்யா சொல்றே..என்ன ஏமாந்துட்ட?”

”அப்பா..அவ என்னை முட்டாளா ஆகிட்டாப்பா..என்னை மட்டுமில்ல நம்ம எல்லாரையும் முட்டாளா ஆகிட்டா” 

மதன் பேசுவதை நிறுத்தி அழத்தொடங்கினான். மறுமுனையில் மதனின் அப்பா உணர்ச்சிவசப்பட்டவராய் நின்றிருந்தார்.

“என்ன விஷயம்னு சொல்லுய்யா..அப்பா இருக்கேன்ல..இங்க நமக்காக எத்தனை பேரு இருக்காங்க..சொல்லு”

“அப்பா..ஜமீலா ஏற்கனவே..”

“ஏற்கனவே..என்னப்பா ஏற்கனவே?”

“அவ ஏற்கனவே கல்யாணம ஆனவளாம்பா. அவ கேரக்டர் சரி இல்லேன்னு அவ முத புருசன் அவளை டைவர்ஸ் பண்ணிட்டானாம்..என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சிட்டாப்பா..நல்லவ மாதிர் நடிச்சு நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டா”

“என்னது..அவ ஏற்கனவே அத்துக்கிட்டு வந்தவளா? என்னப்பா சொல்றே? யாரு உனக்கு இதைச் சொன்னது?”

”அவ கிளாஸ்மேட் பொண்ணு ஒன்னை இங்க பார்த்தேன்பா..அவ தான் எல்லாத்தையும் சொன்னா..அவளுக்காக நான் உங்களைக் கூட தூக்கிப் போட்டேன்..ஆனா அவ இந்த டைவர்ஸ் விஷயத்தைப் பத்தி ஒன்னுமே சொல்லாம என்னை நம்ப வச்சி ஏமாத்திட்டாப்பா..உங்க மனசை கஷ்டப்படுத்துன பாவத்துக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்பா”

“டேய்..அவ நம்மளப் பத்தி என்னடா நினைச்சுக்கிட்டு இருக்கா? நாம என்ன சொம்பன்களா..நான் உம்னு ஒரு வார்த்தை சொன்னா வீச்சருவா, வேல்கம்போட ஓடிவர நூறு பேரு இங்க இருக்கான்..என் வீட்லயே அந்த அவிசாரி தன் வேலையைக் காட்டிட்டாளா..அழாத..அழாதய்யா..அப்பா இருக்கேன்ல..நீ ஃபோனை வை..நான் பார்த்துக்கிறேன், நான் பார்த்துக்கறேன்யா அந்த தே..முண்டையை.”

(புதன் கிழமை..தொடரும்)
மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_40"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

48 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, August 27, 2011

ராஜீவ் உயிருக்கு ஈடாக இன்னும் எத்தனை உயிர்கள் தேவை?

’எங்கள் தேசத்தலைவரைக் கொன்றுவிட்டு எங்களிடமே நியாயம் கேட்கின்றீர்களா, சொரணைகெட்டவர்களே’ - சமீபத்தில் ஒரு இணையதளத்தில் ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், மதி.சாந்தன் ஆகியோர் பற்றிய கட்டுரைக்கு வந்த பின்னூட்டம் அது.

அந்தப் பின்னூட்டம் எனது டெல்லி வாழ்க்கையில் நான் சந்தித்த வட இந்தியர்களின் மனநிலையை அப்படியே பிரதிபலிப்பதாய் அமைந்தது. ஆங்கில செய்தித்தாள்களையே படிக்கும் என் சக அலுவலுக நண்பன், இறுதிக்கட்டப்போரில் முள்ளிவாய்க்கால் வீழ்ந்த செய்தி பார்த்துவிட்டு ‘இனி செத்தாங்க. ஒருத்தன்கூட உயிரோட இருக்கக்கூடாது. எங்க ராஜீவையே கொன்னீங்கள்ல..சாவுங்கடா” என்றான். அருகில் இருந்த எனக்கு கோபம் சுரீர் என்று வர “இங்கே கசாப் வீடு புகுந்து சுடுகின்றான்..பாராளுமன்றத்துக்குள்ளேயே தாக்குதல் நடத்துகின்றார்கள். பாகிஸ்தானை ஒடுக்க துப்பில்லாத நம் அரசு, அங்கு மட்டும் பாய்ந்து குதறுவது ஏன்? அங்கு இறப்பது புலிகள் மட்டுமே அல்ல..அப்பாவி மக்களும். அதை நினைவில் வை” என்று வாதத்தில் இறங்கினேன். அவனும் பதில் பேச ரசாபாசம் ஆயிற்று. முடிவில் இவனும் இயக்கத்து ஆளோ என்ற சந்தேகத்துடன் எல்லோரும் பார்க்கும் நிலையே எனக்கு வந்து சேர்ந்தது.

அந்த பின்னூட்டமும், வட இந்திய நண்பனும் பிரதிபலிப்பது ஒட்டுமொத்த சாமானிய இந்தியர்களின் மனோபாவத்தையே. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ‘ராஜீவைக் கொன்னுட்டாங்க. பதிலுக்கு அவங்களை தண்டிக்கணும்’ எனப்தே. மற்றபடி ஈழப்போராட்ட வரலாறு பற்றியோ, ராஜீவ் கொலை வழக்கு விசாரணை பற்றியோ அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. தமிழர்களின் மனநிலையும் இனப்படுகொலை வரை அதுவாகவே இருந்தது. இப்போதும் பெருவாரியான மக்கள் ‘ராஜீவை கொன்னது தப்பு தானே..அப்போ தண்டிக்கப்பட வேண்டியது தான்’ என்றே நினைக்கின்றனர். அவர்களை நோக்கியே நாம் இப்போது பேச வேண்டியது அவசியம்.

ராஜீவ் கொலை என்பது அந்த வகையில் புலிகளின் அரசியல் தற்கொலையே. அரசியல்ரீதியாக அவர்கள் தனிமைப்பட்டுப் போக, அதுவே முக்கியக் காரணம் ஆயிற்று. நியாயரீதியில் புலிகள் தரப்பில் காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், செப்டம்பர் 11க்குப் பின் மாறிவிட்ட உலக அரசியல் சூழலில் புலிகளை வெறும் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தி முடக்க ராஜீவ் கொலையே முக்கிய ஆயுதம் ஆயிற்று.

முதலில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது ராஜீவ் கொலைவழக்கின் விசாரணை இன்னும் முடிந்துவிடவில்லை, அது பாதியிலேயே விடை தெரியாத பல கேள்விகளுடன் நிற்கின்றது என்பதையே. ஏதோ எல்லோரையும் விசாரித்து முடித்து இறுதித் தீர்ப்பாக இந்த தூக்குதண்டனை வழங்கப்பட்டுவிடவில்லை.

மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் 1991ம் வருடமே ராஜீவ் கொலை பற்றிய நீதிமன்ற விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகளை தமிழன் எக்ஸ்பிரசில் எழுதினார். இன்னும் அதற்கு நம் புலனாய்வு அமைப்பு விடை கண்டுபிடிப்படாத நிலையில் மேலும் பல கேள்விகள் இங்கே இருந்தும் வந்து சேர்ந்தது.

இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படைக் கேள்விகள் இவையே :

1. ராஜீவின் அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும் முண்டியடித்துக்கொண்டு, அவருடன் நின்று போஸ் கொடுத்து தன் கோஷ்டியை வலுப்படுத்திகொள்ளும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், சரியாக குண்டு வெடிக்கும் நேரம் ராஜீவை தனியே விட்டது ஏன்? ராஜீவின் நிகழ்ச்சி நிரலில் முதலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூர், திடீரென சேர்க்கப்பட்டது ஏன்?

2. ராஜீவ் 1991 மே 21ல் கொலை செய்யப்படுகிறார். அதற்கு முந்தைய நாள் இரவு சேலம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுப்பிரமணியசாமி, அவசராவசரமாக டெல்லி செல்ல வேண்டும் என்று கூறிவிட்டுக் கிளம்பினார். ஆனால் மறுநாள் வரை அவர் டெல்லி செல்லவில்லை. இடையில் அவர் சென்றது எங்கே? சந்திராசாமியை சென்னையில் சந்தித்ததாகவும், இருவரும் பெங்களூர் சென்றதாகவும் ஜெயின் கமிசனில் எழுந்த குற்றச்சாட்டுக்கு இன்று வரை சுவாமி பதிலளிக்கவில்லை. அவர்கள் பெங்களூர் சென்றது சிவராசன் குழுவினர் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவா?

3. சந்திராசாமியின் பின்புலத்தில், கர்நாடக காங்கிரஸ்காரரான மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

4. ராஜீவ் கொலை நடந்தது இரவு 10.10 மணிக்கு. மூப்பனார் மற்றும் ஜெயந்தி நடராஜனால் ராஜீவ் உடல் கண்டெடுக்கப்பட்டு, அவர் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது 10.40 மணிக்கு. ஆனால் 10.25க்கு தன் கட்சிக்காரர் திருச்சி வேலுச்சாமியிடம் ஃபோனில் பேசிய சுப்பிரமணியசாமி ‘ராஜீவ் செத்துட்டார்?’ என்கிறார்.இந்தியாவில் யாருக்குமே தெரியாத அந்தத் தகவல் சுவாமிக்கு தெரிந்தது எப்படி? ஜெயின் கமிசன் விசாரணையில் இந்த விசயம் கேட்கப்பட்டபோது ‘இலங்கையில் இருந்து ஒரு நபர் தகவல் கொடுத்ததாகச் சொன்னார். அது யார், ஏன் குறிப்பாக சுவாமிக்கு தகவல் கொடுத்தனர் என்று கேட்டதற்கு பதில் இல்லை.ஏன்?

5. ’ராஜீவ் கொலை பற்றி முன்னரே சோனியாவுக்குத் தெரியும்’ என்று சுப்பிரமணியசுவாமியே ஒரு பேட்டியில் சொன்னார். மற்றவர்கள் மேல் பொடா/தடா பாய்ச்சும் காங்கிரஸ், இதைக்கேட்டபின்னும் சுவாமியை ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்க பயந்தது ஏன்?

6. சாதாரண குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவரையே வெளிநாடு செல்ல அனுமதிக்காத அரசு, இந்த முக்கிய வழக்கில் சம்பந்தப்பட்ட சந்திராசாமி 2007ல் வெளிநாட்டுக்கு ஓட அனுமதித்தது ஏன்?

7. ஜெயின் கமிசன் ‘ சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை மேலும் விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லையே..ஏன்?

8. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை? அமெரிக்க சி.ஐ.ஏ. ஏஜண்ட் என்று வர்ணிக்கப்படும் சுப்பிரமணிய சுவாமியின் பங்கும் இதில் உறுதிப்பட்ட நிலையில். அமெரிக்க சதி பற்றி ஏன் விசாரிக்கவில்லை? இந்திய அரசு பயந்ததா?

9. அப்போதைய காங்கிரஸ் கூட்டாளியான ஜெயலலிதாவிற்கு, ராஜீவ் கொலை பற்றி முன்னரே தெரியுமா?

மேலதிக கேள்விகளை எழுப்பும் முன்னாள் சிபிஐ அதிகாரியின் வீடியோ பேட்டி இங்கே!

ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் ஏற்றுவது சரி தானே என்று எண்ணிக்கொண்டிருக்கும் இந்தியர்கள், இந்த விரிவான பின்புலத்தில் இந்தத் தீர்ப்பின் அபத்தத்தைப் பார்க்க வேண்டியது அவசியம். சந்திரசாமி, சுப்பிரமணியசாமி என்று ஆரம்பிக்கும் குற்றவாளிகள் பட்டியல், விடுதலைப்புலிகள், பிற விடுதலை அமைப்புகள், அமெரிக்க சி.ஐ.ஏ. என்று நீள்வதைக் கவனியுங்கள். இவர்களை விசாரிக்க தைரியமற்ற நமது புலனாய்வு அமைப்பு, இந்த வழக்கை இழுத்து மூட கொடுக்கும் பலியே இந்த மூன்று உயிர்கள்.

இந்தத் தண்டனை ராஜீவ் கொலையாளிகளை தண்டிக்க அல்ல, உண்மையான கொலையாளிகளை தப்புவிக்கவே என்பதை நாம் உணர்வோம்.இந்த தண்டனை நிறைவேற்றல் மூலமாக காங்கிரஸ் பல அரசியல் காய்களை நகர்த்துகின்றது.

முதலாவது அன்னா ஹாசாரேயால் உருவாகியுள்ள சலசலப்பை அடக்க, மீடியாவை திசை திருப்ப இது உபயோகமாகும்.

ராஜீவ் கொலையாளிகள் தண்டிக்கபடவேண்டும் என்று நினைக்கும் பெருவாரியான இந்தியர்களை திருப்திப்படுத்த இது உதவும்.அடிவாங்கி இருக்கும் காங்கிரஸ் இமேஜை இது சரி செய்யலாம்.

தமிழகத்தில் புதிதாக ஈழத்தாய் அவதாரம் எடுத்து, காங்கிரஸ்க்கு பெரிய குடைச்சல் கொடுக்கும் ஜெயலலிதாவிற்கு வைக்கப்படும் செக் ஆக இது இருக்கலாம். மேலே எழுப்பப்பட்ட கடைசிக்கேள்விக்கான விடையில் அடங்கியுள்ளது ஜெ.வின் எதிர்வினை.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றால்,அது மேல்மட்டத்தில் இருந்து ஆரம்பிக்கட்டும். பேரறிவாளன் இரண்டு பேட்டரிகளை மே முதல் வாரத்தில் வாங்கினாராம். சிவராசனுக்கு அதை கொடுத்திருக்கலாம் எனபது குற்றச்சாட்டு. இந்த கொலை பற்றி சிவராசன், தானு தவிர வேறு யாருக்கும் கடைசிவரை தெரியாது என்பதே நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்படும் விஷயம். அப்படி இருக்க, பேரரறிவாளன் அறியாமல் செய்த விஷயமாகவே இது ஆகிறது.

ஈழ விடுதலை அமைப்புகளுக்கு பெட்ரோல் முதல் ஆயுதங்கள் வரை தமிழகத்தில் இருந்து சப்ளை ஆகிக்கொண்டிருந்த நேரம் அது. அந்த நேரத்தில் ஒரு இலங்கைத் தமிழருக்கு பேட்டரி வாங்கித் தந்தவருக்கு தூக்கா? (அந்த பேட்டரியை சிவராசனிடம் கொடுத்தார் என்பதற்கும் ஆதாரம் இல்லை..அது யூகமே!)

நமது நண்பர், சக பதிவர் மதி.சுதாவின் அண்ணனான குற்றம்சாட்டப்படுள்ள சாந்தன், வெளிநாடு செல்வதற்காக இந்தியாவுக்கு கடல்வழியாக வந்தவர். அப்போது ஈழத்தமிழர்கள் அவ்வாரு வருவது நம் அரசாங்களாலேயே கண்டுகொள்ளப்பாடாமல் இருந்த விஷயம். வெளிநாடு செல்லவேண்டும், தன் குடும்பநிலையை உயர்த்த வேண்டும் என நம்மைப் போன்றே எண்ணிய சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் அவர். அவர் இந்தியாவில் ஆவணங்கள் இன்றி நுழைந்த ஒரே காரணத்தினாலேயே இறந்துவிட்ட வேறு சாந்தனுக்குப் பதிலாக பலிகடா ஆக்கப்பட்டவர் அவர்.

இந்த வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்திய ஆட்சியாளர்கள்/அதிகார வர்க்கம் ஆரம்பம் முதலே முனைப்புடன் செயல்படுகிறது. புலி பற்றிய பயத்தில் பிதற்றாமல், அந்த எளிய உயிர்களின் மேல் உங்கள் கவனத்தை வைக்கவேண்டிய நேரம் இது. இங்கு நீதி நிலைநாட்டப்படவில்லை, குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது என்பதை உணருங்கள்.

இப்போது தமிழக முதல்வர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை நிறுத்தக்கோர முடியும் என்கிறார்கள். வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட இன உணர்வாளர்கள் இந்த விஷயத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். நீங்கள் சார்ந்துள்ள / சாராத அமைப்புக்கு இந்த விஷயத்தில் நியாயத்தின் அடிப்படையில் உங்கள் தார்மீக ஆதரவைத் தாருங்கள்.
நன்றி!
மேலும் வாசிக்க... "ராஜீவ் உயிருக்கு ஈடாக இன்னும் எத்தனை உயிர்கள் தேவை?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

67 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_39

டிஸ்கி : ஏன் லீலைகள் இன்னும் வரலை..வாரத்துக்கு 4 எழுதறேன்னு சொன்னல்ல? கண்ட கர்மத்தையெல்லாம் எழுதற..அதுக்கு பதிலா லீலைகளை எழுதலாம்ல? - அப்படீன்னு மெயில் அனுப்பி திட்டுற புண்ணியவான்களே..மன்னிச்சுக்கோங்க. இந்த வாரம் நீங்க சொன்னபடியே எழுதறேன். ரம்ஜான் லீவு வேற வருது. சோ, டோண்ட் ஒர்ரி..

“நான் வாய் திறந்து சொன்னாத்தான் உனக்குத் தெரியுமா? என்னோட ஒவ்வொரு அசைவுலயும் என் காதல் தெரியவில்லையா?” என்றாள் வெட்கத்துடன்.

வெட்கத்துடன் நின்ற யோஹன்னாவை அருகில் பார்த்ததும், மதன் தான் எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்தான். 

”யோஹன்னா...உட்கார்”

யோஹன்னா மதனின் அருகில் சோஃபாவில் அமர்ந்தாள்.

“மதன், நான் உன் அப்பாகூடப் பேசணும்”

’என்னடா இது’ என்று துணுக்குற்ற மதன் “ஏன்?” என்றான்.

“இது என்ன கேள்வி..நாம கல்யாணம் பண்ணிக்கப்போறோம்..நான் என் அம்மாகிட்ட உன்னைப் பத்தி ஏற்கனவே சொல்லிட்டேன். நீயும் உன் அப்பாகிட்டச் சொல்லு. அவர் கல்யாணத்துக்கு வந்தா நல்லா இருக்கும். டூரிஸ்ட் விசா நான் அரேஞ்ச் பண்றேன்.”

“யோஹன்னா..புரியாமப் பேசாத. இந்தியால லவ் மேரேஜுங்கிறது சாதாரண விஷயம் இல்லை. வேற ஜாதி, மதப் பொண்ணுன்னாலே ஒத்துக்க மாட்டாங்க. நீ வேற நாடு..எப்படி அப்பா ஒத்துப்பார்? நாம முதல்ல கல்யாணம் பண்ணிப்போம். அப்புறம் அவருக்கு தகவல் சொல்லிக்கலாம்”

யோஹன்னாவுக்கு அதில் உடன்பாடு இல்லை.

“இல்லை மதன்..நீ அவர்கிட்ட விஷயத்தை சொல்லிடு. ஒருவேளை அவர் இதுக்கு ஒத்துக்கலேன்னா அப்புறம் நாமா கல்யாணம் பண்ணிக்கலாம். நாமாகவே இப்போ எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.”

மதன் இந்த இரவு நேரத்தை விவாதத்தில் கழிக்க விரும்பவில்லை.

“ஓகே..நீ சொல்றதும் சரிதான்..நான் அவர்கிட்டப் பேசுறேன். அவரும் கல்யாணத்துக்கு வந்தா நல்லாத் தான் இருக்கும்”

யோஹன்னா மகிழ்ந்தாள்.

“குட் பாய்” என்றாள்.

“யோஹன்னா, ஏன் என்னைப் பிடிச்சிருக்கு உனக்கு?”

“ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கைத்துணையிடம் தன் தந்தையையே தேடுகிறாள்..சிக்மண்ட் ஃப்ராய்டு....படிச்சதில்லையா?”

“ம்..இதையே எங்க ஓஷோவும் சொல்லி இருக்காரே..ஒவ்வொரு ஆணும் பெண்களிடம் தேடுவது தன் தாயையேன்னு”

“ம்..அப்புறம் என்ன சொன்னார்?”

“உண்மையில் காமத்தில் என்ன தான் நிகழ்கிறது? ஆணுக்கு என்ன தான் தேவை? ஆணின் ஆழ்மனதில் இன்னும் கருப்பையில் வாழ்ந்த காலம் படிந்துள்ளதோ? மீண்டும் கருப்பையில் நுழைவதற்கான போராட்டம் தான் காமமா? அப்படியென்றால் அது முடிவற்றதாயிற்றே..காமத்திற்கும் காமத்தினால் வரும் அயர்ச்சிக்கும் அடிப்படை அது தானா?”

யோஹன்னாவிற்கு எப்போதும் தத்துவ புத்தகங்களில் நாட்டம் உண்டு. அவள் தொடர்ந்தாள்.

“பெண் குழந்தைகள் எப்போதும் தந்தை மேலே பிரியம் கொள்கிறார்கள். அழகான பெண்கள் அவலட்சணமான ஆண்களை மணக்கும் காரணம் தான் என்ன..ஒருவேளை தன் தந்தையின் சாயலை அவனிடம் கண்டதாலா? பெண்ணுக்குத் தேவை அண்மை.......எப்போதும் பிரியாமல் கூட இருந்தே அன்பைப் பொழியும் தன்மை”

“யோஹன்னா, மனதில் இருக்கும் அன்பை எப்படி வெளிப்படுத்துவது? கவிதை எழுதியா? அப்படி திட்டமிடலுடன் தொடங்கினால் அது வார்த்தை அடுக்கும் விளையாட்டாகி விடாதா? வேறு எப்படி அன்பை வெளிப்படுத்த முடியும்..காமம் வெறும் உடற்பசியா அல்லது மனதில் பெருகும் அன்பைப் பரிமாறும் வழிமுறையா? ஆயிரம் வார்த்தைகள் எழுதினாலும் சொல்ல முடியாத ஆறுதலை ஒரு அரவணைப்பு சொல்லி விடுகிறதே..தொடுதல் வெறும் உடல்களின் தீண்டலா?”

சொல்லிவிட்டு மதன் யோஹன்னாவின் கையை மென்மையாகப் பற்றிக் கொண்டான். யோஹன்னா தொடர்ந்தாள்.

“இல்லை..தொடுதல் மனதில் இருப்பதை அடுத்தவருக்கு கடத்தும் உபகரணம்...அன்பைச் சொல்ல சொற்கள் போதுமா? ஒருகட்டத்தில் சொற்கள் பொருளிழந்து விடுகின்றன..வெறும் எழுத்துக்குவியலாய் மாறிப்போகின்றன”

” அப்படியென்றால் இப்போது நான் என் அன்பை எப்படிச் சொல்ல யோஹன்னா?”

யோஹன்னாவின் மனது சிலிர்த்தது. காதோரம் நரம்புகளின் ரீங்காரம் கேட்டது. மதனின் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். 

”யோஹன்னா..இது வார்த்தைகள் உதிரும் நேரமா? மனதில் இருந்த அன்பு உடலெல்லாம் பரவி நிற்பது தெரிகின்றதா? கை கோர்த்தல் போதுமா? என்னைப் பார் யோஹன்னா....ஏன் கண்களை மூடுகிறாய்.அன்பின் அழுத்தம் தாங்கவில்லையா? யோஹன்னா.........”

என் உதட்டில் இருப்பது 
ஷெல்லியின் வரியா?
உன் உதட்டில் தெரிவது 
கம்பனின் வரியா?
இரண்டையும் இணைத்து
புதுக்கவிதை சமை.

ஃப்ராய்டின் கருத்து கொண்டு
வெட்க ஆடை விலக்கு.
ஓஷோவின் வழி பற்றி 
தத்துவ தரிசனம் செய்.

தத்துவத்தின் பாதையில்
தொலைந்தோர் அநேகம்.
எனை விட்டு விடாது 
இறுகப் பற்று.

சலனமற்ற தன்மையில்
சலிப்பே மிஞ்சும்.
இயங்கு - அதுவே
பிரபஞ்ச அடிப்படை
இயக்கம் - அதுவே
என்றும் சாஸ்வதம்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_39"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

108 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, August 26, 2011

விட்டு விடுதலையாகி.......

டுப்பில் பால் கொதிப்பதையே பார்த்தபடி நின்றிருந்தாள் சுப்புத்தாய்.  

‘தாயீ”

வாசலில் இருந்து சங்கையாவின் குரல் கேட்டது.

“சின்னையா, திண்ணைல ஒக்காருங்க. வாரேன்” என்றாள்.

வயதானதால் வந்துவிட்ட தடுமாற்றத்தை தடுக்க வைத்திருக்கும் கம்பை திண்ணை ஓரமாகச் சாய்த்து வைத்து விட்டு உட்கார்ந்தார் சங்கையா. 

‘மணி நாலாயிடுச்சா..மனுசன் கரெக்டா வந்திடுதாரே..பாவம் அவருக்கும் வேற போக்கிடம் ஏது..பிள்ளைக ரெண்டும் வெளிநாடு போறேன்னு போச்சுக. இப்போ என்ன ஆச்சோ தெரியல..இங்க மட்டும் என்ன வாழுதாம்..எம்புருசனும் தான் போனாரு..ஒரு தகவல் இல்லியே..அதை நெனைச்சாலே பதறுது’ என்று யோசித்தபடியே காஃபியை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.

அந்த கிராமத்துத் தெருவில் வெயில் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்தது.

“இந்தாரும்..”

“ஏந்தாயி, முருகேசனை எங்க?”

“அவனா..இன்னிக்கு எளவட்டப் பயகல்லாம் குத்தாலம் டூர் போயிருக்காகல்ல..அவனும் அடம்பிடிச்சுப் போயிருக்கான்”

“ அப்படியெல்லாம் அனுப்பாத தாயி..ஒனக்கு இருக்குற ஒரே ஆறுதல் இப்போ அவன் தான்.”

“என்ன சின்னய்யா இப்படிச் சொல்லுதீக..அவுக எங்க இருந்தாலும் என்னை மறக்க மாட்டாக..வந்திடுவாக” சுப்புத்தாயின் கண் கலங்கியது. தப்பான பேச்சை எடுத்துவிட்டோம் என்று சங்கையாவிற்குப் புரிந்தது.

பத்து வருடங்களுக்கு முன் ஒரு ஏஜெண்ட் மூலமாக சுவீசே நாட்டிற்கு சம்பாதிக்கப் போனான் சுப்புத்தாயின் புருசன் கருப்பசாமி. அதன்பிறகு அவனைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. 

அடுத்த வருடமே சங்கையாவின் இரண்டு மகன்களும், இன்னும் மூன்று பேரும் யார் பேச்சையும் கேளாமல் சுவீசே கிள்மபிப் போனார்கள். அதன்பிறகு அவர்களிடம் இருந்தும் ஒரு தகவலும் இல்லை.

சங்கையா பேச்சை மாற்றினார்.

“இந்த எம்சிஆரு தனியா கட்சி ஆரம்பிக்கப்போறாராம்ல..ரேடியோல செய்தி கேட்டயா?”

“ஆமா..நல்ல மனுசன்..வரட்டும்..வரட்டும்” என்று கண்ணைத் துடைத்துக்கொண்டாள் சுப்புத்தாய்.

”தேவை இல்லாம கலைங்கரு அவரை பெரிய ஆளாக்கிப்புட்டாரு”
“அவரு ஏற்கனவே பெரிய ஆளு தான் சின்னய்யா”

சங்கையா சிரித்துக்கொண்டார். எம்ஜிஆர் பற்றிய பேச்சு எடுத்தாலே சுப்புத்தாயிடம் ஒரு குழந்தைத்தனம் வந்து விடும். 

'நல்ல புள்ள..கருப்பன் தான் என்ன ஆனான்னு தெரியலை..பாவம்’ என்று சங்கையா யோசித்துக்கொண்டிருக்கும்போதே, தெருவில் சலசலப்பு கேட்டது. மூலை வீட்டு லட்சுமி அலறியபடி ஊர் எல்லையைப் பார்த்து ஓடினாள்.

”எய்யா..என்ன ஆச்சு?” பதறியபடியே சுப்புத்தாய் ஓடிய ஒருவனைக் கேட்டாள்.

“ஏத்தா..நம்ம பசங்க போன லாரி மேல பஸ் மோதிடுச்சாம் முக்கு ரோட்டுக்கிட்ட..ஓடியா”

“அய்யோ..எம்புள்ள” பெரிய அலறல் சுப்புத்தாயிடம் இருந்து எழுந்தது.

அவளும் எழுந்து ஓட ஆரம்பித்தாள்.

கனுக்கு காய்ச்சல் அடிக்கிறதா என்று அவள் பலமுறை தொட்டுப் பார்த்ததுண்டு. வயிறு நிறைந்ததா என்றும் தொட்டுப் பார்த்ததுண்டு. சாலையோரம் வீசப்பட்டிருந்த மகனின் நெஞ்சில் கை வைத்து அவனுக்கு துடிப்பு இருக்கிறதா என்று தொட்டுப்பார்க்கும் கொடிய நிலை அவளுக்கு இன்று வந்துசேர்ந்தது.

“அய்யோ...என் வம்சம் போச்சே” என்ற கதறல் அடுத்த நொடியில் அவளிடம் இருந்து எழுந்தது. எல்லாப் பக்கமும் மரண ஓலங்கள். அந்த லாரியின் நடுவில் பஸ் புகுந்திருந்தது. அடி பட்டோர் ரண வேதனையில் துடித்தபடி இருந்தனர். உயிரற்ற உடல்களை உறவினர்கூட்டம் சூழ்ந்து அழுதுகொண்டிருந்தது. சுற்றிலும் உடல் உறுப்புகள் சிதறிக்கிடந்தன.

சுப்புத்தாய் நடை பிணமானாள். உடன் இருந்த ஒரு உறவையும் பலி கொடுத்த துக்கத்தை அவளால் தாங்க முடியவில்லை. அடுத்த வீட்டில் இருந்தோரே கடந்த ஒருவாரமாக அவளுக்குச் சாப்பாடு வலுக்காட்டாயமாக கொடுத்துக்கொண்டிருந்தார்கள். சங்கையா திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தார்.

திடீரென்று கார் ஒன்று தெருவின் முனையில் தெரிந்தது. ’நம்ம ஊருக்கு பிளசர்ல யாரு வாரா’ என்று சங்கையா பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கார் சுப்புத்தா வீட்டு வாசலில் நின்றது. காரில் இருந்து சுப்புத்தாயின் புருசன் கருப்பசாமி இறங்கினான்.

“தாயீ..யாரு வந்திருக்கா பாரு...ஒம்புருசன் கருப்பன் வந்துட்டான்” என்று கூவினார் சங்கையா. 

உள்ளே இருந்து ஓடி வந்தாள் சுப்புத்தாய்.

“சாமீ.. வந்துட்டீகளா?” என்று கேட்டவாறே மயங்கிச் சரிந்தாள்.

கனின் இழப்பில் இருந்து சீக்கிரமே மீண்டான் கருப்பசாமி. சுப்புத்தாயின் நிலை தான் மோசமாக இருந்தது. அவளுக்கு மகன் வீட்டில் நடமாடியதே எப்பொதும் கண்ணுக்குத் தெரிந்தது. 

“வாம்மா..நாம போய் கொல தெய்வத்தை கும்பிட்டுட்டு வரலாம்” என்றான் கருப்பசாமி.

“சாமியா..அப்படி ஒன்னு இருக்கா? இருந்த ஒரு புள்ளயையும் பறிச்சுட்டு நிக்கறதுக்குப் பேரு சாமியா?” விரக்தியும் கோபமுமாகக் கேட்டாள் சுப்புத்தாய்.
“சரி..வீட்லயே இருந்தா உனக்கு கஷ்டமா இருக்கும். நான் சொல்றதைக் கேளு. சும்மா போய்ட்டு வருவோம்”

அரை மனதுடன் கிளம்பினாள் சுப்புத்தாய். அவர்களின் குலதெய்வம் பக்கத்து ஊரில் மலைமேல் பத்திரமாக இருந்தது. சுப்புத்தாய் கோவில் வராண்டாவிலேயே நின்றுகொண்டு, உள்ளே போக மறுத்துவிட்டாள். 

கருப்பசாமி போய் கும்பிட்டுவிட்டு, கையில் திருநீறு, குங்குமத்துடன் திரும்பி வந்து உட்கார்ந்தான். மலைமேல் மாலைநேரக் காற்று இதமாக வீசியது.

“நான் சுவீசே போய்ட்டு திரும்பி வரலேங்கவும் என்ன நினைச்சே?”

“எப்படியும் வந்திருவீகன்னு நம்புனேன். ஆனாலும் பயம்மாத் தான் இருந்துச்சு. ஒவ்வொரு நாளும் பொட்டு வச்சிக்கும்போது...அய்யோ, கோயில்ல வச்சு அதைப் பேச வேண்டாம்..எப்பிடி அங்க கஷ்டப்படுதீகளோ, என்ன ஆச்சோன்னு தினமும் யோசனை தான்”

“லெட்டர் எதுவும் போடாததுக்கு என்னை மன்னிச்சிடு தாயி..ஏன் நான் கஷ்டப்படுவேன்னு நினைச்சே?”

“இதென்ன கேள்வி..போன மனுசன்கிட்ட இருந்து ஒரு தகவலும் இல்லேன்னா எப்படி இருக்கும். ஒங்களுக்குப் பின்னால கிளம்பின சங்கையா பசங்ககிட்ட இருந்தும் ஒரு தகவலும் இல்லை..மனுசிக்குப் பயமா இருக்காதா?”

“அங்கே நாங்க எப்படி இருந்தோம், தெரியுமா? ஒரு ஹோட்டல்ல தான் வேலை எங்களுக்கு. மூணு வேளையும் நல்ல சாப்பாடு. பசின்னா என்னன்னு அந்த பத்து வருசத்துல தெரியல..நல்ல காசு. உண்மையைச் சொல்லணும்னா குடி, கூத்தின்னு தான் இருந்தோம். ஊரு நினைப்பே கொஞ்சநாள்ல மறந்து போச்சு. அப்பப்போ ஒன் ஞாபகம் வரும். ஆனாலும் அதைவிட்டு வர முடியலை..அந்தப் பசங்க இப்போ எல்லாத்தையும் மறந்துட்டு, ரொம்ப ஜாலியா அங்க இருக்காங்க. நாளையை பத்துன கவலையே இல்லை”

சுப்புத்தாய்க்கு கோபம் வந்தது. ஆனாலும் சண்டை போட வலுவின்றி பேசாமல் உட்கார்ந்திருந்தாள். கருப்பசாமி தொடர்ந்தான்.

“முருகேசன் போனது நம்மளுக்கு பெரிய இழப்பு தான். ஆனா அவனுக்கு அதனால கஷ்டம் ஒன்னும் இல்லேன்னு நினைக்கேன்”

“என்ன பேசுதீக..?”

“முருகேசன் இப்போ எங்க இருப்பான்? என்ன பண்ணிக்கிட்டு இருப்பான்?..சொல்லு.”

“அது எப்படி நமக்குத் தெரியும்?”

“அப்புறம் ஏன் கவலைப் படறோம்?”

“என்னங்க கிறுக்குத்தனமாப் பேசுதீங்க...?”

“நான் சொல்றதை நல்லா யோசிச்சுப்பாரு. நான் சுவீசே போனப்புறம் என் நிலைமை என்னன்னு தெரியாம கஷ்டப்பட்டே. இப்போ நான் அங்க எப்படிச் சந்தோசமா இருந்தேன்னு சொல்லிட்டேன். அதே மாதிரி இப்போ முருகெசன் நிலைமை என்னன்னு தெரியலை இல்லியா..அப்புறம் எதை வச்சு அவனுக்கு கெடுதல் நடந்துட்டதா அழறோம்?”

சுப்புத்தாய் குழப்பத்துடன் பார்த்தாள்.

“சுப்பு, இங்க நாம என்ன செய்றோம்? பசிக்குது..சாப்பிடறோம்..திரும்பப் பசிக்கத் தான் செய்யுது. பிள்ளையே போனாலும் சாப்பிடாம இருக்க முடியுதா? நாம இங்க வாழுறது சுதந்திரமான வாழ்க்கையா? நம்ம கட்டுப்பாட்டுல இங்க என்ன இருக்கு? நாமல்லாம் அடிமைகள்..வயித்துக்கு அடிமைகள்..சுதந்திரம் இல்லாததுக்குப் பேரு வாழ்க்கையா? அப்புறம் எதை வச்சு இது மேலான வாழ்க்கைன்னும், செத்தப்புறம் மோசமான இடத்துக்குப் போயிட்டதாவும் நாம நினைக்கிறோம்?

ஒருவேளை நாம செத்துப் போற இடம் சுவீசே மாதிரியோ, சொர்க்கம்னு சொல்லுதாங்களே அது மாதிரியோ இருக்கலாம் இல்லியா? நாம அங்க போகும்போது நம்ம புள்ள ஓடியாந்து ‘அப்பாடி..வந்துட்டீகளா..உங்களை நினைச்சுத்தான் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன். இப்படி அநியாயமா அந்த உலகத்துல தனியா விட்டுட்டு வந்துட்டமேன்னு’ நம்மளைப் பார்த்து கேட்கலாம் இல்லியா..நாம இப்போ அழறதே அப்போ வேடிக்கை ஆகிடும், இல்லியா?”

“நீங்க சொல்றது பாதி புரியல எனக்கு”

“மரணம் மோசமான விஷயம்னு எதை வச்சு நாம முடிவுக்கு வர்றோம்? இதை விட நல்ல வாழ்க்கையா அது ஏன் இருக்கக்கூடாது? பசியில்லாத, பஞ்சம் இல்லாத, சூதுவாது இல்லாத சுத்தமான உலகமா அது ஏன் இருக்கக்கூடாது? நமக்கு விதிக்கப்பட்ட தண்டனையா இது ஏன் இருக்கக்கூடாது? இதிலிருந்து விடுதலை ஆகறவங்களைப் பார்த்து, அடிமைகள் நாம அழறது வேடிக்கை இல்லையா?”

கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள் சுப்புத்தாய்.

“சரி..என்னமோ சொல்லுதீக..விடுங்க அந்தப் பேச்சை.” என்றாள் சுப்புத்தாய்.

கோவில்மணி அடித்தது. கன்னத்தில் போட்டுகொண்டாள்!

மேலும் வாசிக்க... "விட்டு விடுதலையாகி......."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

120 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.