Tuesday, December 22, 2015

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்! – மேலும் சில கேள்விகள்/பதில்கள்


கேள்வி: நீங்கள் நாத்திகரா?
பதில்: நிச்சயமாக இல்லை. நான் ஒரு தீவிர மதநம்பிக்கையுள்ள இந்து.

கேள்வி: அப்புறம் ஏன் இதை ஆதரித்துப் பேசுகிறீர்கள்?
பதில்: நீங்க தானே பாஸ் ‘நாத்திகர் ஏன் இதைப் பேசறா? இது ஆத்திகர் பிரச்சினை. ஆத்திகர் பேசட்டும்’னு சொன்னீங்க?

கேள்வி: எல்லா பிராமணரும் அர்ச்சகர் ஆக முடியாது, தெரியுமா? பிராமணரே என்றாலும், குறிப்பிட்ட குலம் கோத்திரத்தில் பிறந்திருக்க வேண்டும் தெரியுமா?

பதில்: அப்படியென்றால், நீங்கள் எங்கள் பக்கம் நிற்க வேண்டும் செண்ட்ராயன்! அந்த ஏற்றத்தாழ்வையும் சட்டம் மூலம் ஒழிக்கலாம், வாருங்கள்!


கேள்வி: அவாளுக்கு வேண்டுமென்றால், பாடி காடி முனீஸ்வரர் போன்று தனியாக கோவில்கட்டி விடலாமே?

பதில்: அதை நீங்கள் சொந்தமாக உழைத்துக் கட்டிய கோவிலில் இருந்தல்லவா சொல்ல வேண்டும்? நீங்கள் உட்கார்ந்திருப்பதே, எங்கள் சொத்து. இதில் ஓனர் மாதிரிப் பேசலாமா?


கேள்வி: ஏதோ சில கோவில்களில் தான் கொஞ்சம் நல்ல வரும்படி வருகிறது. பல கோவில்களில் எங்களாவே கஷ்டப்படறா,தெரியுமோ?

பதில்: அப்படியென்றால், உங்களில் சிலர் மட்டும் உண்டு கொழுத்துக்கொண்டு, மற்றவர்களை பட்டினியில் போட்டிருக்கிறார்கள். இது தவறு என்பதை நாங்களும் ஒத்துக்கொள்கிறோம். எனவே எல்லா அரசு வேலையிலும் இருப்பது போல், இங்கேயும் ட்ரான்ஸ்ஃபர் சிஸ்டம் கொண்டுவரலாமா? அப்பாவியான அந்த பிராமணர்களுக்காக, நீங்கள் அதைத்தானே கேட்டிருக்க வேண்டும்? பரவாயில்லை, இப்போது கேட்போம்.


கேள்வி: காசுக்காகத்தானே இந்த 207பேர் வர்றா? வருமானமில்லாத கோவிலில் போட்டால் நிப்பாளா? ஓடிற மாட்டா?

பதில்: மேலே சொன்ன ட்ரான்ஸ்ஃபர் பதில் தான் இதற்கும். ஒரு சாரார் மட்டும் வருமானமுள்ள கோவில்களில் செழிக்க, மற்றவர்கள் நிரந்தரமாக கஷ்டப்படக்கூடாது இல்லையா? எனவே, ட்ரான்ஸ்பர்!


கேள்வி: காசை எதிர்பார்க்காமல் பக்தி உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் எங்களவா பல கோவில்களில் சேவை செய்கிறார், தெரியுமா?

பதில்: நன்றாகவே தெரியும். எங்கள் ஊர் குலதெய்வம் கோவிலில் என் தாத்தா தான் பூசாரி. அவருக்குப் பிறகு யார் என்று கேள்வி வந்தபோது ‘நோ..நோ..ஐ ஆம் எஞ்ஞினியர்’ என்று சொல்லி தப்பி ஓடிவந்துவிட்டேன். பிறகு வேறு யாராவது பொறுப்பை ஏற்றுக்கொள்வார்களா என்று பார்த்தால், யாருமில்லை.

பிறகு, பக்கத்து நகரான கோவில்பட்டியில் இருந்து ஒருவரை அழைத்து வந்தோம். செவ்வாய், வெள்ளி மட்டும் வருவதாக ஏற்பாடு. மாதச் சம்பளம், ஆயிரம் ரூபாய். இதே மாதிரி மேலும் சில கோவில்களில் அவர் வேலை செய்கிறார். மாதச்சம்பளம் ஐந்தாயிரம் வந்தால் பெரிது.

எனவே, தட்டில் விழும் காசு தான் அவரை வாழ வைக்கிறது. கஷ்ட ஜீவனம். ஆனாலும் அம்மனை அவர் தன் குழந்தையைப் போல சீராட்டுவார். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வார். இன்றைக்கு அம்மன் அங்கே இருப்பதே அவரால் தான் என்பேன். இல்லையென்றால், பூஜையின்றி எப்போதோ கோவில் களையிழந்து போயிருக்கும்.

இதே போன்று பல பிராமணர்களை எனக்குத் தெரியும். அவர்களில் சேவைக்கு எப்போதும் நான் தலைவணங்குகிறேன். அவர்களின் கஷ்டத்திற்கு நீங்களும், உங்களின் சிஸ்டமும் ஒரு காரணம் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்? வாரிசுரிமை இல்லையென்று சட்டம் சொன்னாலும், சில குடும்பத்தினர் மட்டுமே வருமானமுள்ள கோவில்களை பிடித்துவைத்திருப்பது உங்களுக்கேதெரியும். ஆனால் போராட்டம் என்பது அபச்சாரம் என்று ரத்தத்தில் ஊறியிருப்பதால், வேறு யாராவது தான் போராடி இதை மாற்ற வேண்டும், இல்லையா?


கேள்வி: தகுதியற்ற நபர்களும் இந்த சட்டத்தால் வேலைக்கு வந்துவிடலாம், இல்லையா?

பதில்: மாமனார் ஊரில் ஒரு கோவிலை எடுத்துப் பெரியதாக கட்டி நிர்வகிக்கிறார். அந்தக் கோவில் அர்ச்சகரும் சேவைக்கு ஒரு நல்ல உதாரணம். வம்சவம்சாக, இதே தொழிலில் இருக்கும் குடும்பம். அம்மனை அலங்கரித்து தீபம் காட்டினார் என்றால், அம்மனே நேரில் வந்துவிட்டது போல் உடல் சிலிர்க்கும். ஆனால் அவர்கள் பிராமணர்கள் அல்ல, புலவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இதே போன்றே வேளார், பிள்ளைவாள் அர்ச்சகர்களும் உண்டு.

பிராமணர்களிடம் இருக்கும் மாயை, தாங்கள் மட்டுமே தகுதியானவர் – தங்களை மட்டுமே ஆண்டவன் அர்ச்சகராக அனுப்பி வைத்திருக்கிறான் என்பது. அது உண்மையல்ல என்று கொஞ்சம் யோசித்தாலே புரியும். பழனி கோவிலையும், சமயபுரம் கோவிலையும் டெவலப் செய்து, உங்களுக்குக் கொடுத்ததே நான் – பிராமின்ஸ் தானே? தகுதி இல்லையென்றால், அவையெல்லாம் டெவலப் ஆகியிருக்குமா? மற்ற கோவில்களில் தான் தெய்வம் குடியிருக்குமா?

இருப்பினும்………………………உங்கள் கேள்வியில் உள்ள நியாயத்தை நான் ஒத்துக்கொள்கிறேன்.

தகுதியற்ற நபர்களை அர்ச்சகராகப் பார்க்க நேரிட்டால், உங்களுக்கு எப்படி வலிக்கும் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பூசாரி, தன் இடுப்பில் பான்பராக் சொருகியிருந்ததைப் பார்க்கும்போது எனக்கு வலித்திருக்கிறது. திருச்செந்தூர் பூசாரிகள் எப்போதும் பக்தர்களிடம் நாய் மாதிரி எரிந்து விழும்போதும் எனக்கு வலித்திருக்கிறது. அவர்கள் எல்லாம் பிராமணர்கள் என்பதை விட்டுத்தள்ளுவோம்.

இப்போது வரும் நான் – பிராமின்ஸில் சிலரும் அப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால், நீங்கள் கொதித்தெழுவீர்கள். இதுவரை உங்களவா தவறு செய்தபோது கொதிக்காத ரத்தம் அப்போது கொதிக்கும். எனவே கோவில்களில் நடக்கும் தவறுகளைத் தடுக்க, சரியான அமைப்பை நீங்கள் உருவாக்குவீர்கள். ஏற்கனவே அப்படி ஒரு அமைப்பு இருந்தால், அது செயல்பட ஆரம்பிக்கும். இது கோவில்களுக்கு நல்லது தானே?

அப்புறம் இன்னொரு விஷயம்…மேலே ஒரு புலவர் குடும்பம் பற்றிச் சொன்னேன், இல்லையா? அதில் அந்தக் குடும்பத்துப் பையனும் அரசு நடத்திய ஆகம பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றிருக்கிறார். இந்த சட்டம் அமலுக்கு வந்தால், வம்சவம்சமாக வறுமையில் வாடிய ஒரு பூசாரிக் குடும்பத்திற்கு ஒரு வழி பிறக்கும்.

நாத்திகர்கள் இந்த விஷயத்தை முன்னெடுப்பதால், அர்ச்சகர்களின் தகுதி பற்றி சந்தேகம் வருவது இயல்பு தான். ஆனால் உண்மையில் பல பூசாரி குடும்பங்கள் இந்த சட்டத்தால் பயன்பெறும் என்பதே யதார்த்தம்.


கேள்வி: சரி, பயிற்சி பெற்றவர் ஆகமவிதிகளின்படி நடக்கலாம். அவர் குடும்பமும் அப்படியே நடக்கலாம். ஆனால் அவர்களின் சொந்தங்கள் அப்படி ஆச்சாரமாக இருப்பார்கள் என்று சொல்ல முடியுமா? அந்த வீடுகளில் இவர் அன்னந்தண்ணி எடுக்காமல் இருப்பாரா?

பதில்: உங்கள் கேள்விக்கு என்ன அர்த்தம் என்றால்…

ஒரு பிராமணர் அர்ச்சகராக இருக்கிறார். அவர் மற்ற சொந்தக்கார பிராமண வீடுகளில் புழங்குகிறார். அத்தனை பிராமணர்களும் ஆச்சாரத்துடன் தான் இருக்கிறார்கள். அவர்களின் சொந்தத்தில் ஒருவர்கூட, ஆச்சாரம் கெட்டவர்கள் இல்லை. அத்தனையும் சொக்கத் தங்கங்கள். ஆனால் மற்றவர்கள் மட்டும் தான் மோசம், இல்லையா?

நான் டெல்லியில் வேலை செய்தபோது, என் அலுவலக /அறை நண்பன் ஒருவன் இருந்தான். மாலை ஆனதும், கையில் சிகரெட்டுடனும் பிராந்தி பாட்டிலுடன் தான் உட்காருவான். அவன் ஒரு பிராமின். அவன் அப்பா ஒரு கோவில்குருக்கள்.

என்ன செய்யலாம், குருக்களை வேலையை விட்டுத் தூக்கிவிடலாமா? குருக்களின் சொந்தக்கார குருக்களையும் வேலையை விட்டுத் தூக்கிவிடலாமா? அதை விடுங்கள், காஞ்சிபுரம் கில்மா குருக்களின் சொந்தக்கார குருக்களை என்ன செய்யலாம்?

முதலில், பிராமணர்கள் அத்தனை பேரும் சுத்தமானவர்கள்; மற்ற எல்லோரும் அசுத்தமானவர்கள் என்று நினைப்பதை விட்டொழியுங்கள். உங்கள் பிரச்சினைக்கெல்லாம் மூல காரணமே, இந்த மனநிலை தான்!


கேள்வி: இந்து மதத்தை அழிக்கவே, ஆச்சாரத்தைக் கெடுக்கும் இந்த சட்டத்தை நாத்திகர்கள் கொண்டுவருகிறார்களா?
 
பதில்: ஒட்டுமொத்த நோக்கில், இந்து மதத்திற்கு நன்மை செய்வதாகவே இது அமையும். ஆந்திராவிலும், கேரளாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் தான் இது. இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இது காலத்தின் கட்டாயம். 

மேலும், விதவை மறுமணம், பெண் விடுதலை போன்ற விஷயங்களை எல்லாம் இதே நாத்திகர்கள் எழுப்பியபோது, நீங்கள் இதே வாதத்தைத் தான் முன்வைத்தீர்கள். இப்போது அந்த விஷயங்களால், அதிக பயன்பெற்றிருப்பது நீங்கள் தான்.

அதே போன்றே, இந்த மாற்றத்தையும் ஒருநாள் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.................ஒரு சக இந்து!


மேலும் வாசிக்க... "அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்! – மேலும் சில கேள்விகள்/பதில்கள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, December 20, 2015

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்! - பாகம் 1

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்!


நான் காந்தியத்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்த கொஞ்சநாட்களிலேயே என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம், காந்தியத்திற்கும் பிராமண சுபாவத்திற்கும் உள்ள சில ஒற்றுமைகள். நமக்கெல்லாம் தெரிந்த ஒற்றுமை அஹிம்சை. அதையும் தாண்டி பல ஒற்றுமைகள் அங்கே உள்ளன.

எப்போதும் சமரசத்திற்கு தயாராக இருப்பதும், முதலில் கிடைப்பதை தக்க வைத்துக்கொண்டு பிறகு அடுத்த அடியை எடுத்து வைப்பது, எந்த நிலையிலும் எதிராளியுடனான உறவை முறித்துக்கொள்ளாமல் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருப்பது போன்றவை முக்கியமான அம்சங்கள்.

ஒரு கற்பனை உதாரணத்தை இப்போது பார்ப்போம். ஒரு அலுவலகத்தில் சனிக்கிழமையும் வேலைக்கு வரவேண்டும் என்று புதிய ரூல்ஸ் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். எல்லோரும் போய், அன்றைக்கு ஃபார்மலில் வராமல் கேஷுவல் ட்ரெஸ்ஸில் வரலாமா என்று கேட்கிறார்கள். பாஸ் தீர்ப்பு சொல்கிறார், ”வரலாம்..ஆனால் லெக்கின்ஸுக்கும் டைட்டான ஜீன்ஸிற்கும் அனுமதி இல்லை.”.

இப்போது நான் - பிராமின்ஸ், குறிப்பாக நம் போராளிகள் எப்படி ஹேண்டில் செய்வார்கள் என்று பார்ப்போம். முதலில் அவர்கள் புரட்சி மோடுக்குப் போவார்கள். ’பெண்ணிய விடுதலை, ஆடை சுதந்திரம், அடே காமக்கொடூரா...நாங்கள் என்ன உடுத்துவது என்று முடிவு செய்ய நீ யாரடா, உன் பொண்ணே காலேஜுக்கு லெக்கின்ஸ் தான் போட்டுட்டுப் போறா..உன் லட்சணம் தெரியாதா?’போன்ற வார்த்தைகள் வெடித்துச் சிதறும்.

தீர்ப்பு சொன்ன பாஸ் இன்னும் கடுப்பாகி, ‘நான் சொன்ன தீர்ப்பை வாபஸ் வாங்குகிறேன். எப்போதும்போல் ஃபார்மல்ஸிலேயே வாங்கடா நொண்ணைகளா!’ என்று ஆப்பு வைப்பார். ’உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா’என்பது புரிந்தாலும், ‘வெற்றி..வெற்றி..பாஸ் பயந்துட்டார்’ என்று கெத்தாக நிற்கும் புரட்சிக்கூட்டம்.

இதையே பிராமின்ஸ் எப்படி டீல் செய்வார்கள் தெரியுமா? முதலில் ‘வெற்றி..வெற்றி..பாஸ் மாதிரி நல்லவரைப் பார்ப்பது அரிது. லெக்கின்ஸ், ஜீன்ஸ் தவிர்த்து மற்ற கேஷுவல்ஸூக்கு அனுமதி அளித்த பரந்தாமனே போற்றி’ என்று சொல்லி, முதலில் கிடைத்த தீர்ப்பை மட்டுமல்லாது தீர்ப்பு சொன்ன பாஸையும் தன் பக்கம் கொண்டுவருவார்கள். கொஞ்சநாள் பாஸ் சொன்னதை கர்மசிரத்தையாக கடைப்பிடிப்பார்கள்.

அப்போது ஏதாவது ஒரு முட்டாள் ஒரு பத்திரிக்கையில் லெக்கின்ஸ் பற்றி ஒரு கட்டுரை எழுதுவான் (அல்லது இவர்களே ஒரு முட்டாளைவிட்டு எழுத வைப்பார்கள்.) ஊரே லெக்கின்ஸ் பிரச்சினைக்காக பற்றி எரியும். அப்போது பாஸிடம் போவார்கள். ‘சார், நம்ம ஆபீஸைப் பற்றியும் எவனாவது எழுதிடப்போறான். கம்பெனிப் பேர் கெட்டுவிடக்கூடாது என்பதால், லெக்கின்ஸ்/டைட் ஜீன்ஸையும் அனுமதிங்க சார்’ என்று பாஸ் மற்றும் கம்பெனியின் நலனுக்காகவே பிறப்பெடுத்தமாதிரி பேசுவார்கள். லெக்கின்ஸுக்கும் அனுமதி கிடைக்கும்.

ஒருவன் தனக்கு எதிராக 25%ம், ஆதரவாக 75%ம் கருத்து சொல்கிறான் என்றால், அவனை தகுந்த விதத்தில் ‘டீல்’ செய்து 100% எதிரியாக ஆக்குவது பெரும்பாலான நான் - பிராமின்ஸ் ஸ்டைல். ஆனால் தனக்கு எதிரான 25%-ஐ மறந்துவிட்டு, ‘வள்ளலே வாழ்க’ என்று ஃப்ளெக்ஸ் போர்டு மாட்டிவிடுவது பிராமின்ஸ் ஸ்டைல். (பிராமின்ஸ் பாராட்டிவிட்டான் என்றால், அது தனக்கு எதிரானது தான் என சில மண்டூஸ் கொதித்தெழுவார்கள் என்பதும் இதில் உள்ள சூட்சுமம்!)

பிராமணர்களை குறை சொல்லும் தொனியில் இதை நான் சொல்லவில்லை. அவங்ககிட்டே இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்று தான் சொல்கிறேன். (இந்த ஸ்டைல், எனக்கு அலுவலத்தில் மிகுந்த பயன் அளிப்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன். :) )

இப்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கும் சட்டம் பற்றி வந்த தீர்ப்பினைப் பார்ப்போம்.

1971ல் நடந்த சேஷம்மாள் வழக்கிலேயே ‘அர்ச்சகர் பதவி என்பது வாரிசுரிமை அடிப்படையில் வருவது அல்ல’ என்று தீர்ப்பு வந்துவிட்டது. ஆனால் ‘ஆகமவிதிகள் அறிந்த, தகுதியானவரைத்தான் அர்ச்சகர் ஆக்க வேண்டும்’ என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டது.

வழக்கம்போல் ‘அடே, உச்சிக்குடுமி நீதிமன்றமே’என்று பொங்கிவிட்டு, நாம் சைலண்ட் ஆகிவிட்டோம். பிறகு 2006ல் தெளிந்து ‘அனைத்து சாதியினருக்கும் ஆகமவிதிகள் கற்றுக்கொடுத்தால் போதுமே..சட்டப்படி அது செல்லுமே’ எனும் முடிவுக்கு அப்போதைய திமுக அரசு வந்தது. ‘அனைத்து சாதியினரும் அர்ச்சர் ஆகலாம்’ எனும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதற்கான பயிற்சிக்கூடங்களும் ஏற்படுத்தப்பட்டு, 207 பேர் தேர்ச்சிபெற்றார்கள்.

இதை எதிர்த்து பிராமணர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள். இப்போது தீர்ப்பு வந்திருக்கிறது. என்னவென்று....?

1. தமிழக அரசு கொண்டு வந்த, அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் அரசாணையை நீக்க முடியாது. அது செல்லும். (75% பாசிடிவ்)
2. ஆனால் ஆகம விதிகளின்படி தான் நியமனம் நடைபெற வேண்டும். (25% நெகடிவ்)

சரி, இதை ஊடகங்கள்...குறிப்பாக பிராமண ஊடகங்கள் தீர்ப்பு வந்த உடனேயே செய்தி வெளியிடுகின்றன. என்னவென்று...........??

"அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டம் ரத்து!”

இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ‘அறிவிருக்கா? தீர்ப்பை முழுசாப் படிச்சியா?’என்று கேட்க வேண்டிய விஷயம். ஏன் இப்படி செய்தி வெளியிட்டார்கள் என்று, முந்தைய லெக்கின்ஸ் உதாரணம் படித்த உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். உடனே ஃபேஸ்புக்கில் பலர் புரட்சி மோடுக்கு போனார்கள். ‘ஏ, உச்சிக்குடுமி நீதிமன்றமே..’என்று ஆரம்பித்தார்கள். பிராமணர்களுக்கு கொண்டாட்டம், அவர்கள் எதிர்பார்த்தது இதைத் தானே!

பகுத்தறிவுவாதிகள் என்ற போர்வையில் இறங்கும் சில மாற்றுமத போராளிகள்கூட ‘ச்சீ..இந்துக்களே, நாண்டுக்கிட்டு சாகுங்கள்’எனும் ரேஞ்சில் தங்கள் காரியத்தை செவ்வனே செய்தார்கள். கம்யூனிஸ்ட், வைகோ போன்றோர், உடனே மேல்முறையீடு செய்யுங்கள் என்று அறிக்கையும் விட்டார்கள். நல்லவேளையாக எப்போதும் உளறிக்கொட்டும் கி.வீரமணியும், கூடவே சுப.வீ.யும் இதில் தெளிவான அறிக்கை கொடுத்தார்கள்.

உண்மையில், இந்த தீர்ப்பு ‘அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்றே சொல்கிறது.

1. தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படவில்லை.
2. ஆகமவிதிகளின் படி தான் அர்ச்சகர் நியமனம் செய்யப்படவேண்டும்.

ஓகே..இதில் ஆகமவிதிகள் ‘பிராமணர் தான் அர்ச்சகர் ஆகவேண்டும்’ என்று சொல்வதாக பிராமணர்கள் அடித்துவிட, எப்போதும்போல் ஃபேஸ்புக் புரட்சி நடந்தது. உண்மையில், எந்தவொரு ஆகமத்திலும் அர்ச்சகரின் ஜாதி பற்றி குறிப்பிடப்படவே இல்லை. அதாவது ஆகமங்களின்படி ‘அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்பது தான் கதையில் பெரிய ட்விஸ்ட்!

1971ல் முட்டாள்தனமாக பொங்கி கோட்டைவிட்டது போன்றே, இப்போதும் நடக்க வேண்டும் என்பது தான் பிராமணர்களின் ஆசை. அதனால்தான் பிராமண ஊடகங்களும், பிராமணர்களும் ‘சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுத்து..எல்லோரும் ஆத்துக்குப் போய் புள்ளகுட்டிகளை படிக்க வைங்கோ..போங்கோ..போங்கோ’என சபையைக் கலைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். அதை உண்மை என்று நம்பும் அப்பாவி நான் - பிராமின்ஸ் இந்துக்களே, இப்போது காந்திய வழியில் இறங்குவோம். நிதானமாக இதை அணுகுவோம்.

தீர்ப்பின்படி, இப்போது நிலவரம் என்ன?

1. தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படவில்லை. (எனவே அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்.)
2. ஆகமவிதிகளின் படி தான் அர்ச்சகர் நியமனம் செய்யப்படவேண்டும். (ஆகமவிதிகள் பிராமணர்தான் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. எனவே அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்.)


‘அதர்வண வேதத்தில் ஏவுகணை தொழில்நுட்பம் இருக்கு. சாம வேதத்தில் சொன்னபடி, ஏரோப்ளேனே செய்யலாம். உண்மையான இந்துவாக இருந்தால், இதைப் பகிருங்கள்’ என்று வரும் அண்டப்புளுகுகளை ஷேர் செய்யும் அப்பாவிகள் நீங்கள் என்பதால் தான், ’ஆகமத்தின்படி பிராமணர்தான் அர்ச்சகர் ஆகணும்’ எனும் புரளி பாரம்பரிய ஊடகங்கள் மூலமாகவே பரப்பப்படுகின்றன. முதலில் அதை நம்பாதீர்கள், பரப்பாதீர்கள். ‘வெற்றி..வெற்றி’ என்று நாம் கூவ வேண்டிய நேரமிது. இப்போதும் ஏமாந்து போகாதீர்கள்.

இன்னொரு வேடிக்கையான தகவல். இந்து அறநிலையத்துறையின் கீழ் இருப்பது 36000 கோவில்கள். அதில் ஆகமவிதிப்படி இருப்பது 1200 கோவில்கள் தான் என்று அவாளே சொல்கிறார். ஆகமவிதிகள் தான் பிரச்சினை என்றால், முதலில் 1200 கோவில்கள் தவிர்த்து, மற்ற கோவில்களில் இந்த 207 பேரை நியமிக்கலாம் தானே?

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழக அரசே ஆகமவிதிகள் பயின்ற, தகுதியான நபர்களை அர்ச்சகர் ஆக்கலாம். ஏற்கனவே 207 பேர் தகுதி பெற்று இருக்கிறார்கள். அவர்களை உடனே அர்ச்சகராக நியமிப்பது தமிழக அரசின் கடமை.

 எனவே இளையராஜாவை எங்காவது பார்த்தால் ‘இந்த 207 பேரையும் அர்ச்சகராக நியமிப்பீர்களா?’என்று கேட்கும்படி ஊடக நண்பர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

------------------------------------

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் – கேள்வி 1:
பிராமணர்களை அழிக்க வேண்டும் என்பதற்காகவே கொண்டுவரப்படுகிறதா இந்த சட்டம்?

பதில்:

நாத்திகர்கள் இதை முன்னெடுப்பதால், இந்த சந்தேகம் வருவது இயல்பு தான். இந்த சட்டத்திற்குப் பின்னால் இருக்கும் நோக்கம், பிராமணர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ஆதிக்க சாதிகளுக்குமே எதிரான, உயர்வான நோக்கம். பிறப்பை மட்டுமே தகுதியாகப் பார்க்கும் இழிநிலையை மாற்றுவது தான் இதன்பின்னால் இருக்கும் நோக்கம். இந்த நோக்கத்தினால் பாதிப்பு பிராமணர்களுக்கு மட்டும் என்பதே பெரும் பொய்.

நமது சமூக அமைப்பில் தொழில்கள் ஜாதிவாரியாக பிரிக்கப்பட்டிருந்தன. ஒரு ஜாதியில் பிறந்தோர், இன்னொரு ஜாதியினரின் தொழிலைச் செய்ய முடியாது. உதாரணமாக, காவல் தொழில் தென்மாவட்டங்களில் தேவர் சாதி போன்ற ஆதிக்கசாதியினர் கையில் இருந்தது. காவல் அமைப்பில் ஒரு அங்கமான தலையாரி பதவியும் வாரிசு அடிப்படையிலேயே காலங்காலமாக இருந்து வந்தது.

அப்படித்தான் கோவில்பட்டி அருகே, என் நண்பனின் ஊரிலும் இருந்துவந்தது. தலையாரி குடும்பம் என்றே ஒரு குடும்பம் அங்கே இருந்தது. பரம்பரை பரம்பரையாக அவர்களின் வாரிசுகளே தலையாரிகளாக இருந்துவந்தார்கள். வாரிசு அடிப்படையில் பதவி என்பது வர்ணாசிரமத்தை கட்டிக்காக்கும் விஷயம் என்பதால், வாரிசுரிமை 1970களில் நீக்கப்பட்டது. (சரியான ஆண்டு, நினைவில் இல்லை).

அப்போது தலையாரியாக இருந்த தேவருக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அவர் மகன் வளர்ந்து பெரியவன் ஆனபோது, அதாவது தேவர் ஓய்வுபெற்றபோது பெரும்சிக்கல் எழுந்தது. 1980களில் அவரது பையனுக்கு வாரிசுரிமை அடிப்படையில் வேலை மறுக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, வேறொருவர் அந்த வேலையைப் பெற்றார். அவர் ஒரு தலித். சிக்கலின் தீவிரம், இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

வாரிசு, தேவர் என்றாலும் ஒரு அப்பாவி. எப்படியும் அப்பா வேலை கிடைத்துவிடும் என்று நம்பி வளர்ந்தவர். அது இல்லையென்றானதும், பதறிப்போனார். சொந்தங்கள் மீசை முறுக்கி, என்ன செய்யலாம் என்று ஆலோசித்தன. தலித்தை கொன்றுவிட்டால் என்ன எனும் யோசனை உதித்தது. இது தெரிந்த தலித், ஊரைவிட்டு ஓடிப்போனார்.

தலித்தைக் கொன்றாலும் வேலை வாரிசுக்கு கிடைக்காது, ஜெயில்வாசம் தான் மிஞ்சும் எனும் அறிவுரை தேவர்சாதியில் இருந்த சில பெரியோர்களாலேயே சொல்லப்பட்டது. எனவே சட்டப்படி, நீதிமன்றத்தை நாடி வேறு ஊரிலாவது வேலை கேட்போம் என்று முடிவுசெய்து கோர்ட் படியேறினார்கள்.

அந்த தலித் தலையாரியாக அந்த ஊரில் ரிட்டயர்டு ஆகும்வரை பணியாற்றினார். ஊரில் 90% தேவர்கள் தான். சிலசில முணுமுணுப்புகள் எழுந்தாலும், மிகக்கவனமாக பணியாற்றி, அந்த தலித் நல்ல பெயர் எடுத்தார். அவர் என் அப்பாவின் நண்பர் என்பதால், எனக்கு முழுக்கதையும் தெரியும். அதுபற்றி பேசும்போது அவர் ஒருமுறை சொன்னார்: காலங்காலமாக எங்கள் முன்பு நெஞ்சு நிமிர்த்தி நடந்தவர்கள். இப்போது என்னிடம் வந்து நிற்கவேண்டும் என்றால் கூசவே செய்யும். நாம் தற்செயலாக ஏதாவது செய்தால்கூட, அவர்களின் ஈகோ அடிவாங்கும். இப்போது நடந்துகொண்டிருப்பது ஒரு பெரிய சமூக மாற்றம். அதைப் பொறுமையாக, அட்ஜஸ்ட் செய்து தான் நாம் நடத்திக்காட்டவேண்டும். அடுத்த தலைமுறையில் இவ்வளவு எதிர்ப்பு இருக்காது.

அப்படித்தான் ஆனது. 2000ஆம் ஆண்டிற்கு அப்புறம், அவர் தலையாரியாக இருப்பது யாருக்கும் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஏனென்றால், தலித்கள் கலெக்டராக இருப்பதே சாதாரணமான நேரத்தில், தலையாரி ஒன்றும் பெரியவிஷயம் இல்லையே!

சரி, கோர்ட்டுக்குப் போன தேவரின் வாரிசு கதையைப் பார்ப்போம். 20 வருடங்களுக்கு மேலாக போராடினார். தாங்கள் இந்த நாட்டிற்கு(ஜமீனுக்கு) செய்த உயிர்த்தியாகங்கள் மற்றும் சேவைகளை எல்லாம் பட்டியல் போட்டார். எனவே, நியாயப்படி இந்த வேலை தனக்கு வருவது தான் சரியாக இருக்கும் என்று மன்றாடினார். ஆனாலும் கோர்ட் ‘இனியும் பிறப்பின் அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்க முடியாது’ என்று மறுத்துவிட்டது. பலவருட நீதிமன்றப் போராட்டம், சொந்தங்கள் மத்தியில் தலைகுனிவு, வறுமை எல்லாம் சூழ, தன் நாற்பதாவது வயதில் அவர் மனநிலைப் பாதிப்புக்கு உள்ளானார். நாற்பத்தி இரண்டாவது வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

‘இந்த நாட்டிற்கு ஒரு ஆபத்தென்றதும், வேல்கம்புடன் போருக்குப் போனது நாங்க. மற்ற ஜாதிகளின் பாதுகாப்பிற்காக, தாலியறுத்தது நாங்க. எல்லோரும் வணிகம் செய்து துட்டு எண்ணிக்கொண்டிருந்தபோது, எத்தனை பேர் செத்தார்கள் என்று பதறிக்கிடந்தது நாங்க. எங்க தியாகத்திற்கு பொருள் இல்லையா?’ என்று அந்த வீட்டுப்பெண்கள் கதறினார்கள்.

இன்றைக்கு பிராமணர்கள் அதையே கேட்கிறார்கள். ஒரு கோவிலுக்காக ஒரு குடும்பம் காலங்காலமாக உழைத்திருக்கிறது என்றால், அவர்களுக்குத் தானே அர்ச்சகர் வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

ஆனால் இங்கே ‘பிறப்பால் அனைவரும் சமம்’ எனும் சமூகநீதி நிலைநாட்டப்படுவது தான் முக்கியம். ஒருவனின் தகுதி என்பது, அவனின் சொந்த உழைப்பால் தான் வரவேண்டும். ஒரு குலத்தில் பிறந்ததாலேயே அவனுக்கு தகுதி உண்டு என்பதோ இல்லை என்பதோ ஜனநாயகப் பண்பும் அல்ல, மனிதநேயமும் அல்ல.

இன்றைக்கு பிராமணர்கள் சந்திக்கும் இந்த கஷ்டத்தை(?), ஏற்கனவே ஏதோவொரு விதத்தில் எல்லா ஜாதிகளும் அனுபவித்துத்தான் இங்கே சமூகநீதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எல்லா ஜாதிகளுமே தங்களுக்கான தொழிலை, பிறருடன் பகிர்ந்துகொண்டாக வேண்டிய கட்டாயம் இங்கே எப்போதோ வந்துவிட்டது. நீங்கள் கொஞ்சம் மேலே உட்கார்ந்து இருந்ததால், உங்களுக்கு இது தெரியாமல் போயிருக்கலாம்.
மொத்தத்தில், பழைய நாட்கள் போய்விட்டது. இந்த மாற்றம் பிடிக்கிறதோ இல்லையோ, இதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். ’எல்லோரும் மனுஷா தான்’ என்று இப்போதாவது உணர்வது தானே நியாயம்!

(தொடரும்)
 
மேலும் வாசிக்க... "அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்! - பாகம் 1"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, November 23, 2015

டபுள் மீனிங் டயலாக்ஸ் : ஒரு பார்வை


கோவில்பட்டி பகுதிகளில் 'புலவர் ஆட்டம்' எனும் நரிக்குறவர் ஆட்டம் பிரசித்திபெற்றது. கோவில் திருவிழாக்களில் 'புலவர்' என்று அழைக்கப்பட்ட, அந்தக் கலைஞர் இருந்தவரை தவறாமல் இடம்பெறும்.

கதையில், அவர் வம்ச வம்சமாக சாமியாடும் நபராக வருவார். அவருக்கு எதிராக, புதிதாகச் சாமியாட இன்னொரு போலிச்சாமி களமிறங்குவார். இருவருக்குமான போட்டி தான் கதை.

ஒரிஜினல் சாமியான புலவர் காலில் ஒரு பெண் விழுவார்.

பெண்: சாமி, எனக்கு குழந்தை வரம் வேண்டும்.
புலவர்: அப்படியா? சரி, எந்திரி பார்ப்போம்.

போலிச்சாமி: ஆமா எந்திரி தாயி...சாமி நல்லாப் பார்க்கட்டும். தா*ளி, நல்ல சாமீல்ல இது!

புலவர்: ஏம்மா, உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?
பெண்: கல்யாணம் ஆகாமலா பிள்ளைவரம் கேட்பாக?
புலவர்: புருசன் இருக்கானா?
பெண்: இருக்காக, துபாய்ல.

போலிச்சாமி: அப்புறம் **க்குள்ளயா குழந்தை பிறக்கும்?

புலவர்: சரி, நீ வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை நைட்டு என் வீட்டுக்கு வா..நான் போடறேன்.

பெண்: சாமீ??
புலவர்: திருநீறு போடறேன்மா.

போலிச்சாமி: ஏ, அது கிழட்டுச்சாமி. சக்தியெல்லாம் மங்கிப்போச்சு. அவங்கிட்டே போகாத. நீ என்கிட்ட வா. நான் இளஞ்சாமி.
புலவர்: அவனை நம்பாதே. போலிப்பய.

பெண்: சாமி, உங்களுக்குள்ள சண்டை வேண்டாம். நீங்க வெள்ளிக்கிழமை போடுங்க. அவர் செவ்வாய்க்கிழமை போடட்டும்.

போலிச்சாமி: எப்படிச் சொன்னா பாருய்யா, தீர்ப்பு. இவள்ல உத்தமி!

------------------- ஒரு பக்கம் ஊர் பெரியவர்கள், இன்னொரு பக்கம் பெண்கள், இன்னொரு பக்கம் விடலைகள் சூழ்ந்திருக்க, புலவர் ஆட்டம் நேரம் ஆக, ஆக இன்னும் களைகட்டும். சிரித்துச் சிரித்து வயிறு வலித்துவிடும். 

நமது கரகாட்டம் உள்ளிட்ட பெரும்பாலான கலைகளில் இரட்டை அர்த்த வசனங்களும் பாடல்களும் சகஜம். காரணம், செக்ஸ் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என இயல்பாக ஏற்றுக்கொண்ட மரபு அது. இத்தகைய நகைச்சுவைகள் மூலம், செக்ஸ் என்பது ஒரு கொண்டாட்டமாக வயது வந்தோருக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

செக்ஸை நகைச்சுவயாக அணுகுவது தவறு என்று சொல்லிவிட்டு, வாட்ஸப்பில் செக்ஸைத் தேடுகிறது இந்தத் தலைமுறை. அங்கே கிடைப்பது, வக்கிரம் தான். புலவர் ஆட்டம் பார்த்துவிட்டு, அடுத்த நாள் அன்ணன்மாரிடம் 'ஏன்ணே, புருசன் துபாய்ல இருந்தால் குழந்தை பிறக்காதா?' என்று கேட்டது ஞாபகம் வருகிறது!

'நஞ்சவெளியாக நான் இருக்கேன், நாத்து நட நீ வாறியா?' என்று பாடும் நமது பாரம்பரியக் கலைகளில் மட்டுமல்லாது கிராம வாழ்க்கையிலும் இரட்டை அர்த்த வசனங்கள் சகஜமாகவே இருந்துவந்தன/வருகின்றன.

ஒரு பெண், முந்தைய நாள் தன் வீட்டிற்குள் பாம்பு வந்துவிட்டதாக கூறினார். அதற்கு தாத்தா ஒருவர் 'அங்க, சுத்திச் சுத்தி பொந்தால்ல இருக்கு. பொந்துன்னு இருந்தால் பாம்பு வரத்தான செய்யும்!' என்றார். 'யோவ்' என்று பெண் அதட்ட, 'நான் உன் வீட்டைச் சொன்னேன்மா. வீட்டைப் பூசு!' என்று தாத்தா ஜகா வாங்கினார்.

ஒருமுறை கடைக்காரரிடம் ஒரு பெண் வாழைப்பழம் கேட்டு வந்தார். பழத்தார் ஏறக்குறைய காலியாகி, கொஞ்சம் அழுகிய பழங்கள் தான் இருந்தன. கடைக்காரர் ' நசிஞ்ச பழம் தான் இருக்குத்தா. இது வேலைக்கு ஆகாது, வேண்டாம்' என்று சிங்கிள் மீனிங்கில் தான் பதில் சொன்னார். 

அடுத்த செகண்ட், அந்த பெண் சொன்ன பதில் : அப்படியா மாமா? பாவம், அக்கா!

சொல்லிவிட்டு,அவர் போய் ஒரு நிமிடம் கழித்துத்தான் அவருக்கே அர்த்தம் புரிந்தது.

'சரிய்யா, இப்போ என்ன ஆச்சு? ஏன் இப்படி பிட்டா ஓட்டிக்கிட்டு இருக்கிறே?'ன்னு கேட்கிறீங்களா? சொல்றேன். 'யாமிருக்க பயமே' படத்தில் ஓவியா 'பூரிச்சண்டை' போட்டதைக் கண்டித்து சிலர் பொங்கியிருந்தார்கள். அப்போதே எழுத நினைத்தேன். ஐ ஆம் பிஸி. இப்போது நயந்தாரா 'உங்களைப் போடணும் சார்' என்று சொன்னதும், பலருக்கும் ஹார்ட் அட்டாக். தலைவியைவே தப்புத்தப்பா பேச வச்சிட்டாங்களே என்று! அதற்கான ஆறுதல் பதிவு தான் இது!!

செக்ஸ் சம்பந்தப்பட்ட எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடாது, அதே நேரத்தில் பாலியல் கல்வி வேண்டும் என்று இரண்டு மாறுபட்ட முற்போக்குக் கருத்துகள் ஒரே நபர்களால் இப்போதெல்லாம் சொல்லப்படுகின்றன. இதற்கு இரண்டு  காரணங்கள் தான்.

1. காமத்தை பாவமென்று கருதும் விக்டோரிய ஒழுக்கவிதிகளின் ஆதிக்கம். அது தான் நாகரீகம் என்று நம்பும் மனப்பான்மை.

2. பெண்ணியவாதம். பெரும்பாலான பெண்ணியவாதிகளைப் பொறுத்தவரை, காமம் என்பது ஆண் பெண்மீது செலுத்தும் ஆதிக்கம் மட்டுமே, அது அன்புக்கான வழியே அல்ல! எனவே காமத்தையும் காமம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் டெரராகவே அணுகுவது.

முந்தைய தலைமுறையிடம் இந்தப் பிரச்சினை இல்லை. வாழ்க்கையை எளிமையாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்த தலைமுறை அது. 

உண்மையில் இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது என்பது ஒருவகைக் கலை. கொஞ்சம் ஆபத்தான கலை என்றும் சொல்லலாம்.

மதில் மேல் பூனையாக வார்த்தைகளை கவனமாக உபயோகிக்க வேண்டும். அதிலும் சினிமா போன்ற வெகுஜன ஊடகத்தில் மிகவும் ஜாக்கிரதையாகப் பயன்படுத்த வேண்டும். கீழ்க்கண்ட விஷயங்களை, டபுள் மீனிங் டயலாக் பேசும்/எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. ஈவ் டீஸிங் செய்ய, அதை உபயோகிக்கக்கூடாது. ஒரு பெண்ணை உடல்ரீதியாக இழிவுபடுத்தவோ அல்லது படுக்கைக்கு அழைக்கும் கருவியாகவோ பயன்படுத்தக்கூடாது.

2. யாராவது பொங்கி எழுந்தால், நான் நல்ல மீனிங்கில் தான் சொன்னேன் என்று நீங்கள் சாதிக்கும் அளவிற்கு வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

3. பெரியவர்களுக்கு, அந்த இரண்டாவது மீனிங் தெளிவாகப் புரிய வேண்டும். டீன் ஏஜ் வயதினருக்கு 'அதைத் தான் சொல்றாங்களோ?'எனும் குறுகுறுப்பைக் கொடுக்க வேண்டும். சிறுவர்களுக்கு கண்டிப்பாகப் புரியக்கூடாது.

4. எனவே, கண்டிப்பாக அது விஷுவலாக காட்டப்படக்கூடாது. காட்சி, நாகரீகமானதாக இருக்க வேண்டும்.

5. வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. அந்த சூழ்நிலைக்கு, அந்த முதல் மீனிங் தேவைப்பட வேண்டும்.

6. முடிந்தவரை டபுள் மீனிங் பேசுபவர் அப்பாவியாக இருப்பது நல்லது.

முந்தானை முடிச்சு படத்தின் பாக்கியராஜ், ஊர்வசியை மனைவியாக ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கி வைத்திருப்பார். பிறகு கொஞ்சம், கொஞ்சமாக அவர் மனது மாறும். முதலில் ஊர்வசியின் சமையலை மட்டும் ஒத்துக்கொள்வார். அதையே ஊர்வசி தனக்கு சாதமாக ஆக்கிவ்டக்கூடாதே? எனவே..

பாக்கியராஜ்: சாப்பிட ஒத்துக்கிட்டதால, இறங்கி வந்துட்டேன்னு நினைச்சுடாதே!

ஊர்வசி: நீ ஏறவும் வேண்டாம், இறங்கவும் வேண்டாம். வந்து சாப்பிடு!

அவ்ளோ தான் பாஸ், டபுள் மீனிங்!
 
மேலும் வாசிக்க... "டபுள் மீனிங் டயலாக்ஸ் : ஒரு பார்வை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, November 12, 2015

வேதாளம் - திரை விமர்சனம்

 20 வருடங்களுக்கு முன்பு ஒரு படம் வந்தது. அடித்தட்டு ரசிகன் முதல் அனைவரையும் அசர வைக்கும் ஒரு திரைக்கதை அமைப்புடன் அந்தப் படம் வெளியானது. ஒரு ஆக்சன் ஹீரோ..ஆனால் அவர் அப்பாவியாக வருவார். என்ன பிரச்சினை வந்தாலும், சண்டை வேண்டாம் என்று ஒதுங்கிப் போவார். ‘திருப்பி அடி தலைவா!’ என்று ரசிகன் தியேட்டரில் கதறினாலும், ரத்தம் ஒழுக அடிவாங்கியபடியே சிரிப்பார் ஹீரோ. அதன்பிறகு அந்த கோல்டன் மொமெண்ட் வரும்..மாணிக்கம் பாட்ஷாவாக மாறும் அந்த கணம், பார்ப்பவர் உடல் சிலிர்க்கும்! இன்றளவும் டிவியில் ஓடினால், சேனல் மாற்ற முடியாத வசீகரமான படம், பாட்ஷா.

மற்ற ஆக்சன் ஹீரோக்களுக்கும், ஆக்சன் ஹீரோ ஆக ஆசைப்பட்டோருக்கும் பாட்ஷா ஒரு ட்ரெண்ட் செட்டர் ஆனது. சரத்குமார் முதல் விஷால் வரை, பலரும் பாட்ஷா அவதாரம் எடுத்து, தன் ஆசையைத் தீர்த்துக்கொண்டார்கள். பாட்ஷா ஃபார்மேட்டில் வந்த பல படங்கள் வெற்றிபெற்றன. கமல்கூட பாட்ஷாவாக விஸ்வரூபம் எடுத்தார். ஒவ்வொரு ரசிகனுக்கும் தன் ஹீரோவை பாட்ஷாவாக பார்க்க ஆசை உண்டு. அந்த கோல்டன் மொமெண்டில், தன் ஹீரோ எப்படி விஸ்வரூபம் எடுப்பார் என்று ரசிக்க ஆசை உண்டு. அஜித் ரசிகர்களுக்கு அப்படி ஒரு படம், வேதாளம்.

பாட்ஷாவாக சரத்குமார் மாறிய ‘ஏய்’ படத்தின் கதை தான் வேதாளத்தின் கதையும். கதையும் திரைக்கதை அமைப்பும் ஏய் படத்தின் உருவல் தான். ஆனாலும் கணேஷ் வேதாளமாக மாறும் தருணத்தில், தியேட்டரில் தீப்பொறி பறக்கிறது. ரசிகர்கள் கொண்டாடித்தீர்க்கிறார்கள். ‘தெறிக்க விடலாமா?’என்று அஜித் பாட்ஷாவாக மாறும் இடம், அதகளம். தொடர்ந்து இண்டர்வெல் ப்ளாக், லட்சுமி மேனன் அஜித்தை வரையும் சீன், சிக்னல் சீன் என ரசிகர்கள் கொண்டாட ஏகப்பட்ட விஷயங்களை படத்தில் வைத்திருக்கிறார்கள். ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கம், தன் ஹீரோவை பாட்ஷாவாக பார்த்ததில் தீர்ந்திருக்கும். லட்சுமி மேனனும் வழக்கம்போல் நடிப்பில் பின்னுகிறார்.

கொஞ்ச வருடங்களாகவே அஜித் ஏனோதானோவென்று தான் ஸ்க்ரீனில் வந்துகொண்டிருந்தார். நடிப்பதை விட்டுவிட்டு, நடப்பதை மட்டுமே செய்துவந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆக்டிவ்வான அஜித்தை இதில் பார்க்க முடிகிறது. முகத்தில் நல்ல எக்ஸ்பிரசனுடன், கோபத்தையும் பாசத்தையும் அப்பாவித்தனத்தையும் அப்படியே கொண்டுவந்திருக்கிறார். பழைய காதல் மன்னன்/அமர்க்களம் காலத்து அஜித்தை மீண்டும் பார்க்க முடிந்ததில் சந்தோசமே!

படத்தின் முதல் சீனில் இருந்து, கடைசி சீன்வரை அஜித், அஜித், அஜித் தான். நிச்சயம், அஜித் ரசிகர்களுக்கு இந்தப் படம் திருப்தி கொடுக்கும். ஆனால் மற்றவர்களுக்கு...?

சிறுத்தை சிவா ஒரு அருமையான தெலுங்குப்பட டைரக்டர் என்று இதிலும் நிரூபித்திருக்கிறார். மசாலாவில் கவர்ச்சி மட்டும் தான் மிஸ்ஸிங், மீதி எல்லாமே திகட்டத் திகட்ட கொட்டியிருக்கிறார். வீரம் முடித்தவுடன், அஜித் அழைத்து அடுத்த படம் செய்வோம் என்றதும் கதை கையில் இல்லாமல் இருந்திருக்கலாம். அதற்காக ‘ஏய்’ படத்தை உருவது கொஞ்சம் ஓவர் பாஸ்.

இன்னும் அரதப்பழசான கதை, ஐம்பது பேர் வந்தாலும் அடிக்கும் ஹீரோ, எத்தனை துப்பாக்கி இருந்தாலும் ஹீரோமேல் ஒரு குண்டுகூட பாயாத அதிசயம் எல்லாம் சேர்ந்து, படம் பார்ப்பவர்களை தெறிக்க விடுகின்றன. சூரியின் மோசமான காமெடி போர்சன் என்று இந்த படத்தைச் சொல்லலாம். கூடவே, லக்கி கேர்ள் ஸ்ருதி வேறு காமெடி என்ற பெயரில் உயிரை எடுக்கிறார்.’மாணிக்கம்’ கணேஷை விட, ‘பாட்ஷா’ வேதாளம் கலக்க வேண்டும். ஆனால் இங்கே வேதாளம் காமெடி ஹீரோவாக வருவது பெரும் மைனஸ்!


தியேட்டரில் உட்கார முடியாத அளவுக்கு மொக்கையான படம் இல்லை. கிளைமாக்ஸ்வரைக்குமே அவ்வப்போது ரசிக்கும்படி சில விஷயங்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன.ஆனால் இரண்டாம்பாதி முழுக்க இப்படித்தான் சீன் வரும் என்று யூகித்துவிட முடிகிறது. இன்னும் வலுவான கதையுடன், இதே தெறி மாஸ் உடன் இறங்கியிருந்தால் எல்லாத்தரப்பையும் கவர்ந்திருக்கலாம்.

தெலுங்கு மசாலாப் பட ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் பார்க்க வேண்டிய படம். அதற்கு மேல் சொல்ல, ஒன்றும் இல்லை!
மேலும் வாசிக்க... "வேதாளம் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, October 23, 2015

குறும்படம் எனும் சோதனை முயற்சி - ஒரு அலசல்

சினிமா என்பது வணிகமாக இருக்கும்நிலையில், அதற்கான மாற்று சினிமாவாக உருவானது தான் குறும்படம் என்பது. வணிக சினிமா பேசாத, கருத்துச்செறிவான விஷயங்களை அலசுவதற்கு குறும்படம் ஒரு சிறந்த வழி. அத்தகைய படங்கள் இப்போதும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த பதிவில் அப்படிப்பட்ட, சமூக அக்கறை கொண்ட சீரியஸ் குறும்படங்களைத் தவிர்த்துவிட்டு, மற்றவை பற்றிப் பார்ப்போம்.

பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநர்களாகச் சேர்வதற்கு ஒரு வழியாக மட்டுமே முன்பு (இப்போதும்) 'பொழுதுபோக்கு குறும்படங்கள்' இருந்துவந்தன. நல்ல கதை எழுதும் ஆற்றல் உள்ளவர்களைப் போன்றே, நல்ல ஷார்ட் ஃபிலிம் எடுப்போரையும் சினிமா அரவணைத்தது.

டிஜிட்டல் புரட்சிக்குப் பின் குறும்படம் எடுப்பது என்பது சாம்பார் வைப்பதைவிடவும் சாதாரணமான விஷயமாக ஆகிவிட்டது. சினிமாவிற்கு உள்ளே இருப்பவர்கள் மட்டுமல்லாது, வெளியே இருப்போரும் இதனை கோடம்பாக்க கதவைத் திறக்கும் சாவியாக புரிந்து வைத்திருக்கிறார்கள், அதில் ஜெயிக்கவும் செய்கிறார்கள்.

இந்தப் பதிவில் நான் பேச விரும்புவது, ஷார்ட் ஃபிலிம்களின் தரத்தைப் பற்றியும், அதை எடுப்போரின் மனநிலை பற்றியும் தான்.

ஏன் குறும்படங்கள் எடுக்கப்படுகின்றன?

1. கற்றுக்கொள்வதற்கு!
2. கற்றுத்தேர்ந்து, ஒரு நல்ல குறும்படம் கொடுப்பதற்கு.
3. அதன் மூலமாக, சினிமா வாய்ப்புகளைப் பெறுவதற்கு.

'பொண்ணு பார்க்கப்போவது கல்யாணம் செய்யத்தான்' என்பது மாதிரி ஷார்ட் ஃபிலிமின் அல்டிமேட் குறிக்கோள், சினிமா வாய்ப்பு தான்.

உண்மையிலேயே நம் மக்கள் அக்கறையுடனும் கடும் உழைப்புடனும் குறும்படங்களை எடுக்கிறார்கள். குறும்படமே கற்றுக்கொள்ளத்தான் என்பதால், தரம் பற்றியும் பெரிய பிரச்சினையில்லை. 'நாலஞ்சு ஷார்ட் ஃபிலிம் எடுக்கிறோம். கத்துக்கறோம். குறைகளை எல்லாம் சரிபண்றோம். அடுத்து, ஸ்ட் ரெய்ட்டா சினிமா தான்' என்று தெளிவான திட்டத்துடன் ஆரம்பிக்கிறார்கள். முதல் படம் எடுத்து முடிக்கும்வரை எல்லாம் சரியாகத்தான் போகிறது.

பிரச்சினை, குறும்படத்தின் விமர்சனத்தை எதிர்கொள்வதில் தான் ஆரம்பிக்கிறது. 90% பேருக்கு நெகடிவ் விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வது/எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. முதல்கட்ட குறும்படங்களின் நோக்கமே, 'நமக்கு என்ன தெரிகிறது? எங்கே தப்பு செய்கிறோம்?' என்று தெரிந்துகொள்வது தான். நம்முடைய படைப்பில் இருக்கும் எல்லாத் தவறும் நமக்குத் தெரியாது. அதை மற்றவர்கள் பார்த்துவிட்டுச் சொல்லட்டும் என்பது தான் அதை பொதுவில் வைக்கும் நோக்கம். அந்த நோக்கம் சரியாக நிறைவேறும்போது, சொதப்பிவிடுகிறார்கள் இந்த 'குழந்தை' படைப்பாளிகள்.

இந்த வாரம் என்ன படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது என்று எதிர்ப்பார்ப்பது போல், இந்த வாரம் என்ன குறும்படம் ரிலீஸ் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. உண்மையில் நண்பர்களும் சொந்தங்களும் தாண்டி, யாருக்கும் உங்கள் குறும்படங்கள் பற்றித் தெரிவதும் இல்லை. எனவே உங்கள் நெருங்கிய நட்பு வட்டத்தில் இல்லாத ஒருவர், உங்கள் குறும்படத்தைப் பார்க்கிறார் என்பதே பெரிய விஷயம். அடுத்து அவர் தன் பொன்னான நேரத்தைச் செல்வழித்து 'மொக்கைப் படம்..கொன்னுட்டான்' என்று சொல்கிறார் என்றால், அவரை கோவில்கட்டிக் கும்பிட வேண்டும்!

ஒரு குறும்படம் ரிலீஸ் ஆனதும் நமக்கு வருவது, மூன்றுவகையான விமர்சனங்கள் தான்.

1. நண்பர்களின் 'சூப்பர் மச்சி' விமர்சனம்
2. நெகடிவ் விமர்சனங்கள்
3. காழ்ப்புணர்ச்சி விமர்சனங்கள். (என்ன குறை என்று கேட்டால் சொல்லத்தெரியாது. இத்தகைய நெகடிவ் ஆசாமிகளின் கருத்தை ஒதுக்கித் தள்ளிவிடலாம்.)

குறும்பட விமர்சனங்களிலேயே மோசமானது, சூப்பர் மச்சி விமர்சனம் தான். நண்பரின் நண்பர் ஒருவர் படு திராபையான குறும்படம் எடுத்திருந்தார். ஃபேஸ்புக்கில் என் நண்பர் ஒருவர் அதற்கு 'அருமையான படம்' என்று கமெண்ட் செய்திருந்தார். என் நண்பரிடம் சாட்டில் போய் 'யோவ், அந்த டைரக்டர்(!)கிட்டே பெர்சனலா பேசும்போதாவது உண்மையைச் சொல்வீரா?' என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னது, 'நமக்கு எதுக்குய்யா வம்பு? ஏதோ முயற்சி பண்ரான், பாராட்டி வைப்போம்'.

எல்லாருமே காறித்துப்பினால், அடுத்த படத்தையே எடுக்க மாட்டீர்கள் தான். எனவே உங்களை ஊக்குவிக்கும் காரணியாக, நண்பர்களின் சூப்பர் மச்சி கமென்ட் இருக்கட்டும். ஆனால் அது முழுமையான உண்மை அல்ல. அதை உண்மையென்று நம்பிவிட்டீர்கள் என்றால், அங்கேயே தேங்கிப்போய்விடுவீர்கள்.

இன்னொரு குறும்படம் பார்த்துவிட்டு தற்கொலை மனநிலைக்கே போய்விட்டேன். குறைந்தது பத்து கெட்டவார்த்தைகளால் இயக்குநரை திட்டிவிட்டு, ஃபேஸ்புக்கை ஓப்பன் செய்தால் அவருக்கு ஒரு கமெண்ட் வந்திருந்தது : 'feeling proud to be your friend'. செத்தாண்டா சேகர் என்று நினைத்துக்கொண்டேன்.

அடுத்து கிடைப்பது நெகடிவ் விமர்சனங்கள். குறும்படம் எடுப்பதன் முதல் நோக்கமே, நெகடிவ் விமர்சனங்களை வாங்குவது தான். அதில் தான் தன் குறை என்னவென்று தெரியவரும். அப்படி எதிர்பார்த்தது கிடைக்கும்போது, படைப்பாளிகளுக்கு கடும் கோபம் வந்துவிடுகிறது. 'இத்தனை பேர் சூப்பர் மச்சின்னு சொல்லும்போது, இவன் என்னமோ அறிவுஜீவி மாதிரிப் பேசுறானே' என்று கடுப்பாகிவிடுகிறார்கள். சிலர் சண்டைக்கே வந்துவிடுகிறார்கள். சென்ற வருடம் ஒரு ஈழத்து நண்பரின் பதிவில் பெரும் சண்டை. அவர் ஒரு மொக்கை குறும்படத்தை நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டது தான் பிரச்சினை.

நெகடிவ் விமர்சனம் வரும்போது வலிக்கும் தான். அவமானமாகவும் இருக்கும். ஆனால் அதையெல்லாம் எதிர்கொண்டு, அதில் உள்ள நியாயமான விஷயங்களை ஏற்றுக்கொண்டால் தான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். பெரும்பாலானோர் உண்மையான/நெகடிவ் விமர்சனங்களைச் சொல்வதில்லை. எனவே உண்மையைச் சொல்கிற சிலரையும் விரட்டிவிட்டு, என்ன செய்யப் போகிறீர்கள்?

பெரும்பாலான குறும்பட இயக்குநர்களுக்கு விஷுவலாக கதை சொல்வது எப்படி என்றே தெரிவதில்லை. ஐந்து நிமிடங்களுக்கு அசையாத கேமிரா, ரியாக்சன் ஷாட்டே இல்லாத எடிட்டிங் என கூச்சப்படாமல் புரட்சி செய்கிறார்கள். நல்ல கதை(?) கிடைத்தால், ஷூட்டிங் கிளம்பிவிடுகிறார்கள். நல்ல கதை என்பது வேறு, நல்ல குறும்படம் என்பது வேறு.


கற்றுக்கொள்வது என்பது, படிப்பதும் படித்ததை அப்ளை செய்து படமாக்கிப் பார்ப்பதும், அதில் செய்த தவறுகளை விமர்சனங்கள் மூலம் தெரிந்து திருத்திக்கொள்வதும் தான். கற்றுக்கொள்ள படமெடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே தவறையே திரும்பத் திரும்ப செய்வது சரியான அணுகுமுறை அல்ல. குறைந்தபட்சம் The Five C's of Cinematography -புக்கையாவது ஒருமுறை வாசிக்கலாம்!

ஷார்ட் ஃபிலிம் எடுத்தவுடனே மணிரத்னம் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணாமல், கொஞ்சம் நிலத்தில் கால் ஊன்றி விமர்சனங்களைக் கவனியுங்கள். ஒருவர் த்ரில்லர் படம் எடுத்து அனுப்பியிருந்தார். ‘த்ரில்லருக்கான அம்சங்களே இல்லையே’ என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் , ‘தெரியும் பாஸ், த்ரில்லர் எல்லோருக்கும் பிடிக்காது.இப்படி நெகடிவ் விமர்சனம் வரும்ன்னு தெரியும்’. என்னத்தச் சொல்ல!!!

இப்போதெல்லாம் நான் குறும்படங்களுக்கு பொதுவில் விமர்சனம் எழுதுவதில்லை, படைப்பாளியின் சாட்டில் போய் சொல்வதோடு சரி. சினிமாவுக்குக்கூட எழுத முடிகிறது. குறும்படங்களுக்கு..அய்யய்யோ! நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கிறது.
 
மேலும் வாசிக்க... "குறும்படம் எனும் சோதனை முயற்சி - ஒரு அலசல்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.