Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Saturday, August 27, 2011

ராஜீவ் உயிருக்கு ஈடாக இன்னும் எத்தனை உயிர்கள் தேவை?

’எங்கள் தேசத்தலைவரைக் கொன்றுவிட்டு எங்களிடமே நியாயம் கேட்கின்றீர்களா, சொரணைகெட்டவர்களே’ - சமீபத்தில் ஒரு இணையதளத்தில் ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், மதி.சாந்தன் ஆகியோர் பற்றிய கட்டுரைக்கு வந்த பின்னூட்டம் அது.

அந்தப் பின்னூட்டம் எனது டெல்லி வாழ்க்கையில் நான் சந்தித்த வட இந்தியர்களின் மனநிலையை அப்படியே பிரதிபலிப்பதாய் அமைந்தது. ஆங்கில செய்தித்தாள்களையே படிக்கும் என் சக அலுவலுக நண்பன், இறுதிக்கட்டப்போரில் முள்ளிவாய்க்கால் வீழ்ந்த செய்தி பார்த்துவிட்டு ‘இனி செத்தாங்க. ஒருத்தன்கூட உயிரோட இருக்கக்கூடாது. எங்க ராஜீவையே கொன்னீங்கள்ல..சாவுங்கடா” என்றான். அருகில் இருந்த எனக்கு கோபம் சுரீர் என்று வர “இங்கே கசாப் வீடு புகுந்து சுடுகின்றான்..பாராளுமன்றத்துக்குள்ளேயே தாக்குதல் நடத்துகின்றார்கள். பாகிஸ்தானை ஒடுக்க துப்பில்லாத நம் அரசு, அங்கு மட்டும் பாய்ந்து குதறுவது ஏன்? அங்கு இறப்பது புலிகள் மட்டுமே அல்ல..அப்பாவி மக்களும். அதை நினைவில் வை” என்று வாதத்தில் இறங்கினேன். அவனும் பதில் பேச ரசாபாசம் ஆயிற்று. முடிவில் இவனும் இயக்கத்து ஆளோ என்ற சந்தேகத்துடன் எல்லோரும் பார்க்கும் நிலையே எனக்கு வந்து சேர்ந்தது.

அந்த பின்னூட்டமும், வட இந்திய நண்பனும் பிரதிபலிப்பது ஒட்டுமொத்த சாமானிய இந்தியர்களின் மனோபாவத்தையே. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ‘ராஜீவைக் கொன்னுட்டாங்க. பதிலுக்கு அவங்களை தண்டிக்கணும்’ எனப்தே. மற்றபடி ஈழப்போராட்ட வரலாறு பற்றியோ, ராஜீவ் கொலை வழக்கு விசாரணை பற்றியோ அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. தமிழர்களின் மனநிலையும் இனப்படுகொலை வரை அதுவாகவே இருந்தது. இப்போதும் பெருவாரியான மக்கள் ‘ராஜீவை கொன்னது தப்பு தானே..அப்போ தண்டிக்கப்பட வேண்டியது தான்’ என்றே நினைக்கின்றனர். அவர்களை நோக்கியே நாம் இப்போது பேச வேண்டியது அவசியம்.

ராஜீவ் கொலை என்பது அந்த வகையில் புலிகளின் அரசியல் தற்கொலையே. அரசியல்ரீதியாக அவர்கள் தனிமைப்பட்டுப் போக, அதுவே முக்கியக் காரணம் ஆயிற்று. நியாயரீதியில் புலிகள் தரப்பில் காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், செப்டம்பர் 11க்குப் பின் மாறிவிட்ட உலக அரசியல் சூழலில் புலிகளை வெறும் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தி முடக்க ராஜீவ் கொலையே முக்கிய ஆயுதம் ஆயிற்று.

முதலில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது ராஜீவ் கொலைவழக்கின் விசாரணை இன்னும் முடிந்துவிடவில்லை, அது பாதியிலேயே விடை தெரியாத பல கேள்விகளுடன் நிற்கின்றது என்பதையே. ஏதோ எல்லோரையும் விசாரித்து முடித்து இறுதித் தீர்ப்பாக இந்த தூக்குதண்டனை வழங்கப்பட்டுவிடவில்லை.

மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் 1991ம் வருடமே ராஜீவ் கொலை பற்றிய நீதிமன்ற விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகளை தமிழன் எக்ஸ்பிரசில் எழுதினார். இன்னும் அதற்கு நம் புலனாய்வு அமைப்பு விடை கண்டுபிடிப்படாத நிலையில் மேலும் பல கேள்விகள் இங்கே இருந்தும் வந்து சேர்ந்தது.

இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படைக் கேள்விகள் இவையே :

1. ராஜீவின் அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும் முண்டியடித்துக்கொண்டு, அவருடன் நின்று போஸ் கொடுத்து தன் கோஷ்டியை வலுப்படுத்திகொள்ளும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், சரியாக குண்டு வெடிக்கும் நேரம் ராஜீவை தனியே விட்டது ஏன்? ராஜீவின் நிகழ்ச்சி நிரலில் முதலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூர், திடீரென சேர்க்கப்பட்டது ஏன்?

2. ராஜீவ் 1991 மே 21ல் கொலை செய்யப்படுகிறார். அதற்கு முந்தைய நாள் இரவு சேலம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுப்பிரமணியசாமி, அவசராவசரமாக டெல்லி செல்ல வேண்டும் என்று கூறிவிட்டுக் கிளம்பினார். ஆனால் மறுநாள் வரை அவர் டெல்லி செல்லவில்லை. இடையில் அவர் சென்றது எங்கே? சந்திராசாமியை சென்னையில் சந்தித்ததாகவும், இருவரும் பெங்களூர் சென்றதாகவும் ஜெயின் கமிசனில் எழுந்த குற்றச்சாட்டுக்கு இன்று வரை சுவாமி பதிலளிக்கவில்லை. அவர்கள் பெங்களூர் சென்றது சிவராசன் குழுவினர் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவா?

3. சந்திராசாமியின் பின்புலத்தில், கர்நாடக காங்கிரஸ்காரரான மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

4. ராஜீவ் கொலை நடந்தது இரவு 10.10 மணிக்கு. மூப்பனார் மற்றும் ஜெயந்தி நடராஜனால் ராஜீவ் உடல் கண்டெடுக்கப்பட்டு, அவர் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது 10.40 மணிக்கு. ஆனால் 10.25க்கு தன் கட்சிக்காரர் திருச்சி வேலுச்சாமியிடம் ஃபோனில் பேசிய சுப்பிரமணியசாமி ‘ராஜீவ் செத்துட்டார்?’ என்கிறார்.இந்தியாவில் யாருக்குமே தெரியாத அந்தத் தகவல் சுவாமிக்கு தெரிந்தது எப்படி? ஜெயின் கமிசன் விசாரணையில் இந்த விசயம் கேட்கப்பட்டபோது ‘இலங்கையில் இருந்து ஒரு நபர் தகவல் கொடுத்ததாகச் சொன்னார். அது யார், ஏன் குறிப்பாக சுவாமிக்கு தகவல் கொடுத்தனர் என்று கேட்டதற்கு பதில் இல்லை.ஏன்?

5. ’ராஜீவ் கொலை பற்றி முன்னரே சோனியாவுக்குத் தெரியும்’ என்று சுப்பிரமணியசுவாமியே ஒரு பேட்டியில் சொன்னார். மற்றவர்கள் மேல் பொடா/தடா பாய்ச்சும் காங்கிரஸ், இதைக்கேட்டபின்னும் சுவாமியை ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்க பயந்தது ஏன்?

6. சாதாரண குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவரையே வெளிநாடு செல்ல அனுமதிக்காத அரசு, இந்த முக்கிய வழக்கில் சம்பந்தப்பட்ட சந்திராசாமி 2007ல் வெளிநாட்டுக்கு ஓட அனுமதித்தது ஏன்?

7. ஜெயின் கமிசன் ‘ சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை மேலும் விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லையே..ஏன்?

8. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை? அமெரிக்க சி.ஐ.ஏ. ஏஜண்ட் என்று வர்ணிக்கப்படும் சுப்பிரமணிய சுவாமியின் பங்கும் இதில் உறுதிப்பட்ட நிலையில். அமெரிக்க சதி பற்றி ஏன் விசாரிக்கவில்லை? இந்திய அரசு பயந்ததா?

9. அப்போதைய காங்கிரஸ் கூட்டாளியான ஜெயலலிதாவிற்கு, ராஜீவ் கொலை பற்றி முன்னரே தெரியுமா?

மேலதிக கேள்விகளை எழுப்பும் முன்னாள் சிபிஐ அதிகாரியின் வீடியோ பேட்டி இங்கே!

ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் ஏற்றுவது சரி தானே என்று எண்ணிக்கொண்டிருக்கும் இந்தியர்கள், இந்த விரிவான பின்புலத்தில் இந்தத் தீர்ப்பின் அபத்தத்தைப் பார்க்க வேண்டியது அவசியம். சந்திரசாமி, சுப்பிரமணியசாமி என்று ஆரம்பிக்கும் குற்றவாளிகள் பட்டியல், விடுதலைப்புலிகள், பிற விடுதலை அமைப்புகள், அமெரிக்க சி.ஐ.ஏ. என்று நீள்வதைக் கவனியுங்கள். இவர்களை விசாரிக்க தைரியமற்ற நமது புலனாய்வு அமைப்பு, இந்த வழக்கை இழுத்து மூட கொடுக்கும் பலியே இந்த மூன்று உயிர்கள்.

இந்தத் தண்டனை ராஜீவ் கொலையாளிகளை தண்டிக்க அல்ல, உண்மையான கொலையாளிகளை தப்புவிக்கவே என்பதை நாம் உணர்வோம்.இந்த தண்டனை நிறைவேற்றல் மூலமாக காங்கிரஸ் பல அரசியல் காய்களை நகர்த்துகின்றது.

முதலாவது அன்னா ஹாசாரேயால் உருவாகியுள்ள சலசலப்பை அடக்க, மீடியாவை திசை திருப்ப இது உபயோகமாகும்.

ராஜீவ் கொலையாளிகள் தண்டிக்கபடவேண்டும் என்று நினைக்கும் பெருவாரியான இந்தியர்களை திருப்திப்படுத்த இது உதவும்.அடிவாங்கி இருக்கும் காங்கிரஸ் இமேஜை இது சரி செய்யலாம்.

தமிழகத்தில் புதிதாக ஈழத்தாய் அவதாரம் எடுத்து, காங்கிரஸ்க்கு பெரிய குடைச்சல் கொடுக்கும் ஜெயலலிதாவிற்கு வைக்கப்படும் செக் ஆக இது இருக்கலாம். மேலே எழுப்பப்பட்ட கடைசிக்கேள்விக்கான விடையில் அடங்கியுள்ளது ஜெ.வின் எதிர்வினை.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றால்,அது மேல்மட்டத்தில் இருந்து ஆரம்பிக்கட்டும். பேரறிவாளன் இரண்டு பேட்டரிகளை மே முதல் வாரத்தில் வாங்கினாராம். சிவராசனுக்கு அதை கொடுத்திருக்கலாம் எனபது குற்றச்சாட்டு. இந்த கொலை பற்றி சிவராசன், தானு தவிர வேறு யாருக்கும் கடைசிவரை தெரியாது என்பதே நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்படும் விஷயம். அப்படி இருக்க, பேரரறிவாளன் அறியாமல் செய்த விஷயமாகவே இது ஆகிறது.

ஈழ விடுதலை அமைப்புகளுக்கு பெட்ரோல் முதல் ஆயுதங்கள் வரை தமிழகத்தில் இருந்து சப்ளை ஆகிக்கொண்டிருந்த நேரம் அது. அந்த நேரத்தில் ஒரு இலங்கைத் தமிழருக்கு பேட்டரி வாங்கித் தந்தவருக்கு தூக்கா? (அந்த பேட்டரியை சிவராசனிடம் கொடுத்தார் என்பதற்கும் ஆதாரம் இல்லை..அது யூகமே!)

நமது நண்பர், சக பதிவர் மதி.சுதாவின் அண்ணனான குற்றம்சாட்டப்படுள்ள சாந்தன், வெளிநாடு செல்வதற்காக இந்தியாவுக்கு கடல்வழியாக வந்தவர். அப்போது ஈழத்தமிழர்கள் அவ்வாரு வருவது நம் அரசாங்களாலேயே கண்டுகொள்ளப்பாடாமல் இருந்த விஷயம். வெளிநாடு செல்லவேண்டும், தன் குடும்பநிலையை உயர்த்த வேண்டும் என நம்மைப் போன்றே எண்ணிய சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் அவர். அவர் இந்தியாவில் ஆவணங்கள் இன்றி நுழைந்த ஒரே காரணத்தினாலேயே இறந்துவிட்ட வேறு சாந்தனுக்குப் பதிலாக பலிகடா ஆக்கப்பட்டவர் அவர்.

இந்த வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்திய ஆட்சியாளர்கள்/அதிகார வர்க்கம் ஆரம்பம் முதலே முனைப்புடன் செயல்படுகிறது. புலி பற்றிய பயத்தில் பிதற்றாமல், அந்த எளிய உயிர்களின் மேல் உங்கள் கவனத்தை வைக்கவேண்டிய நேரம் இது. இங்கு நீதி நிலைநாட்டப்படவில்லை, குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது என்பதை உணருங்கள்.

இப்போது தமிழக முதல்வர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை நிறுத்தக்கோர முடியும் என்கிறார்கள். வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட இன உணர்வாளர்கள் இந்த விஷயத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். நீங்கள் சார்ந்துள்ள / சாராத அமைப்புக்கு இந்த விஷயத்தில் நியாயத்தின் அடிப்படையில் உங்கள் தார்மீக ஆதரவைத் தாருங்கள்.
நன்றி!
மேலும் வாசிக்க... "ராஜீவ் உயிருக்கு ஈடாக இன்னும் எத்தனை உயிர்கள் தேவை?"

Sunday, February 20, 2011

பார்வதி அம்மாள் மரணமும் மலேசியா வாசுதேவனின் மரணமும்

இன்று வேறொரு பதிவு போடலாம் என்றுதான் வந்தேன். இணையத்தைப் பார்த்தால், இரு துக்கச் செய்திகள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் இன்று காலை இயற்கை எய்தினார். கடந்த பத்து வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அய்யாவின் மறைவைத் தொடர்ந்து இப்போது தாயாரும் மறைந்து விட்டார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது மறைவால் வாடும் தமிழ்ச் சொந்தங்களுடன் என் துக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

என் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பாகவே கருதுவதால். உணர்வுகளை மேலும் விவரிக்க இயலவில்லை..

மற்றொரு இழப்பு மலேசியா வாசுதேவன்...

 அவர் பாடிய பாடலான ‘ஒரு கூட்டுக்கிளியாக’ நான் அடிக்கடி கேட்கும் பாடல்..’வேர்வை மழை சிந்தாமல் வெள்ளிப்பணமா’ எனும்போது ஏதோ செய்யும். உடலால் மறைந்தாலும் பாடல்களில் உயிர்வாழ்வார். 

அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்கலுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
மேலும் வாசிக்க... "பார்வதி அம்மாள் மரணமும் மலேசியா வாசுதேவனின் மரணமும்"