Tuesday, January 29, 2013

புது மாப்பிள்ளைக்கும்....புதுப் பெண்ணிற்கும்!


நான் டெல்லியில் வேலை செய்தபோது, எனது நண்பனுக்கு திருமணம் ஆனது. அப்போது எங்கள் கம்பெனி ஒருவேளை மூடப்படலாம் என்ற சூழ்நிலை இருந்ததால், திருமணத்திற்குச் செல்லும்போது அவன் வீடு எதுவும் பார்த்து வைத்துச் செல்லவில்லை. எனவே திருமணம் முடிந்து அவன் மட்டும் திரும்பி வந்ததும், வீடு பார்க்க ஆரம்பித்தோம். தமிழர்கள் வாழும் பகுதி+நல்ல வீடு என்று அமைவது குதிரைக்கொம்பாகவே இருந்தது.



’பையனும் சென்னை. பெண்ணும் சென்னை’ என்பதால் பெண் அந்த நேரத்தில் தன் பிறந்த் வீட்டிற்குச் சென்றுவிட்டார். ’டெல்லி சென்ற பின் எப்போது பெற்றோரைப் பார்ப்போமோ..பல வருடம் உடன் இருந்தோரைப் பிரியப் போவதால், கிடைக்கிற கொஞ்ச நாளை பெற்றோருடன் கழிப்போம்’என்ற எண்ணத்திலேயே அந்தப் பெண் பிறந்த் வீடு சென்றார். ஆனால் பையனின் சொந்தங்கள் ‘இப்போதே பெண்ணிடம் கண்டிப்பாக இருங்கள். இல்லையென்றால் நாளை அவள் ராஜ்ஜியம் தான்’ என்று பையனின் பெற்றோரிடம் தூபம் போட, ஆரம்பித்தது பிரச்சினை.

‘பையனின் வீட்டில்தான் பெண் இருக்க வேண்டும்’ என்று நண்பனின் பெற்றோர் சொல்ல ஆரம்பித்தார்கள். துரதிர்ஷ்டவசமாக, அந்தப் பெண்ணின் அம்மா கடுமையான பேர்வழியாக இருந்தார். அவரது வார்த்தைப் பிரயோகங்களும் கொடூரமாகவே இருந்தது. என் நண்பனும் அந்தப் பெண்ணிடன் ‘நான் வீடு கிடைத்தும் வந்து விடுகிறேன்..எதற்குப் பிரச்சினை..நீ நம் வீட்டிற்கே சென்று இரு’ என்று புத்திமதி சொன்னான். அந்தப் பெண்ணின் தாய் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ‘இப்போது இறங்கிப்போனால், அப்புறம் காலம் முழுக்க நீ அடிமை தான்’ என்று பெண்ணிற்கு புத்திமதி சொன்னார். பெண் மறுக்க, நண்பன் கோபமானான். நாங்கள் ‘வீடு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நீ ஊருக்கு முதலில் போ..நேரில் போனால் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்து விடும்’ என்றோம். ஆனால் அதற்குள் நண்பன், தன் பெற்றோரின் பேச்சை நம்பி ‘அவள் எங்கள் வீட்டிற்கு வந்தால்தான், நான் ஊருக்குப் போவேன்’ என்று பிடிவாதமாக நின்றான்.

எல்லாவற்றிற்கும் முடிவாக, அந்த பெண்ணின் தாய் செய்த காரியம் அமைந்தது. ஆம், வரதட்சணை கேட்டு தன் பெண்ணை வீட்டை விட்டே விரட்டியதாக அவர் போலீஸில் கம்ப்ளெய்ண் கொடுத்தார். அதன்பின் மூன்று வருடங்கள் வழக்கு இழுத்தது. ஜீவனாம்சத் தொகையுடன் சேர்த்து முப்பது லட்சங்கள் செலவழித்துத் தான், பையன் அந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டான். இங்கே இருவீட்டாரின் பிடிவாதமே அந்த திருமண பந்தத்தை முறித்துப்போட்டது.

நமது சமூக அமைப்பில் திருமணம் என்பது இரு மனங்களின் இணைவு மட்டும் அல்ல, இருவேறு குடும்பங்களின்/வம்சங்களின் இணைப்பு ஆகும். இருதரப்புகளும் இணைந்து செயல்படவேண்டிய அவசியம், நமது வாழ்க்கை முறையில் இருக்கிறது. பொதுவாக இரண்டு மனிதர்களிடையே அறிமுகம்/நட்பு ஏற்படும்போது, பலவாறாக அவதானித்தே நாம் அந்த நட்பை ஏற்கிறோம் அல்லது நிராகரிக்கிறோம். அப்படியிருக்கும்போது, இருவகைப்பட்ட குடும்பங்களின் இணைவு என்பது சாதாரண விஷயமே அல்ல.

நம் மக்களைப் பொறுத்தவரை ஆண் என்பவன் ஒருபடி உயர்ந்தவன் எனும் மனநிலையே இருக்கிறது. அதற்கு உடல்பலம் மட்டுமல்லாது ஆணின் பொருளாதார விடுதலையும் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே மாப்பிள்ளை வீட்டார் என்பவர்கள் முறுக்கேறியவர்களாகவும், பெண் வீட்டார் என்போர் இறங்கிச் செல்ல வேண்டியவர்களாகவுமே பெரும்பாலான இடங்களில் இருக்கின்றார்கள். எனது திருமண காலகட்டத்தில் இருவீட்டாரின் மனநிலையை நன்கு கவனித்து வந்திருக்கிறேன்.



ஆண் வீட்டாரின் சிந்தனையானது, பெண் என்பவள் புகுந்த வீட்டில் அடங்கிப் போக வேண்டியவள் என்பதாகவே இருக்கிறது.’திருமணத்தின்போது இறங்கிபோய் விட்டால், பையன் காலம் முழுதும் பெண் வீட்டாரின் பிடியிலேயே சிக்கி விடுவான். இத்தன நாள் வளர்த்தது அதற்காகவா?’ எனும் மனப்பான்மையும் அதற்குக் காரணம்.பெண்ணிற்கு பருவம் வந்த வயது முதல் பல்வேறு பிரச்சினைகள். ஆனால் ஆணுக்கு அத்தனைக்கும் சேர்த்து ஒரே ஒரு பிரச்சினை தான். அது, தாயையும் மனைவியையும் ஒரே நேரத்தில் சரிசமமாக கவனிக்க வேண்டிய பிரச்சினை. ஒத்துப்போகாத மாமியார்-மருமகள் அமைந்துவிட்டால், அந்த ஆணுக்கு வாழ்க்கை நரகம் தான்.

வேலைக்காக சொந்த ஊர்/குடும்பம் விட்டு நகரும் இந்த காலகட்டத்தில், அவர்கள் வெவ்வேறு இடத்தில் இருக்கும்வரை மாமியார்-மருமகள் பிரச்சினை என்பது ஓரளவு சமாளிக்ககூடிய ஒன்றாகவே ஆகியுள்ளது.ஆனாலும் சொந்த-பந்தங்களைச் சாமாளிப்பது தான் மணமகன் - மணமகளுக்கு உள்ள பெரும் சவால். புது மருமகளை (சில இடங்களில் மட்டும், மருமகனை) எடை போட்டுப் பார்த்து, திரியேற்றும் சொந்தங்களே இங்கு அதிகம். இவ்வாறு சொந்த பந்தங்களாலும், குடும்ப கௌரவம் பற்றிய பதட்டத்தாலும் பெற்றோர்கள் தவறு செய்ய விழையும்போது, நிதானமாக இருக்க வேண்டிய பொறுப்பு, மண மகனுக்கும், மண மகளுக்கும் இருக்கிறது. ஏனென்றால்....

வயோதிகத்தால் என் தந்தையார் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாய் கிடந்து, தொடர்ந்து சுய நினைவற்றவராய் இரண்டு மாத வேதனைக்குப்பின் இறைவனடி சேர்ந்தார். அந்த இரண்டு மாதமும் அவரை குளிப்பாட்டி, உணவூட்டி, கழிவகற்றி சகலமும் பார்த்துக்கொண்டது என் தாயார் மட்டுமே. (அப்போது மதுரை கல்லூரியில் படித்துக்கொண்டிருந்ததால், வார விடுமுறைக்கு மட்டுமெ வரும்படி எனக்கு கட்டளை)

என் தந்தையார் அவ்வாறு இருந்தபோது, அவரின் உடன்பிறந்த அண்ணனும், அவரின் குடும்பத்தாரும் அடுத்த வீட்டில் தான் இருந்தார்கள். ஆனாலும் எட்டிப்பார்க்கவில்லை. என் தாயாரின் உடன்பிறப்புகளும் ஒருநாள் சம்பிராயத்திற்கு எட்டிப்பார்த்துவிட்டு, கிளம்பிப்போய் விட்டார்கள். அது அவர்களின் குற்றம் அல்ல, அதுவே யதார்த்தம்.

அந்த யதார்த்தம் நமக்குச் சொல்வது ஒன்று தான். நமது பெற்றோரால் நமது கடைசி காலம் வரை நம்முடன் இணைந்து வர முடியாது. உடன்பிறந்தாரும் நம்முடைய பிரச்சினைக்காக, ஒரு அளவிற்கு மேல் நம்முடன் வர முடியாது. இன்று உட்கார்ந்து உட்கார்ந்து பேசி, மூட்டி விடும் சொந்தங்களும் நம் இழவு நாள் அன்றே தலைகாட்டும்.

நம் நிழல்போல, நம்முடன் தொடர்ந்து பயணிக்கப்போவது நமது கணவன்/மனைவி மட்டுமே. இந்த யதார்த்தம் புரிந்ததால்தான், நம் பெற்றோர் திருமணத்திற்கு வரன் தேடுகையில் அவ்வளவு பதட்டப்படுகின்றனர். நல்ல கையில் தன் பிள்ளையை ஒப்படைக்கவேண்டுமே என்ற கவலை இருதரப்பு பெற்றோருக்குமே இருக்கிறது.

அப்படி பல விஷயங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, திருமணம் முடித்தபின், சகிப்புத்தன்மையின்றி ஈகோ பிரச்சினையால் இந்த பந்தம் முறிவடையாமல் காக்க வேண்டியது அவசியம். அந்த விழிப்புணர்வு, பெற்றோரைவிட மணமக்களுக்கே அதிகம் இருக்க வேண்டும்.

 திருமண நேரத்திலும், திருமண வாழ்வில் முதல் வருடத்திலும் இரு வீட்டாரிடம் ஏற்படும் சலசலப்புகள் வழக்கமானவை, அது பெரியோர் மட்டத்திலேயே முடிக்கப்பட வேண்டியவை என்ற புரிதலுடன் தம்பதிகள், தங்கள் மணவாழ்வைத் தொடங்க வேண்டும். அதுவே கடைசிவரை உங்களைக் காக்கும்.

வாழ்க வளமுடன்.


மேலும் வாசிக்க... "புது மாப்பிள்ளைக்கும்....புதுப் பெண்ணிற்கும்!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, January 16, 2013

திமுக ஸ்டாலின் கையில்....அதிமுக யார் கையில்?

நீண்டநாட்களாகவே திமுக தொண்டர்களும் அரசியல் நோக்கர்களும் எதிர்பார்த்த அறிவிப்பு ஒருவழியாக வந்துவிட்டது. திமுக தலைவர் ஒருவாறாகத் துணிந்து அறிவித்துவிட்டார் ‘ஸ்டாலின் தான் அடுத்த தலைவர்’ என்று.

இந்திய ஜனநாயகம் பல கட்சி ஜன்நாயகமாக இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதும் இருகட்சி ஆட்சிமுறையே செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் இருபெரும் அரசியல் கட்சிகளாக அதிமுகவும் திமுகவுமே செயல்பட்டு வந்திருக்கின்றன.

ஒரு ஜனநாயக நாட்டில் ஆளும்கட்சிக்கு இணையாக அல்லது ஆளும்கட்சியை விடவும் வலுவுள்ளதாக எதிர்க்கட்சி இருக்க வேண்டியது அவசியம். அதுவே ஆளும்கட்சிக்கு லகானாகச் செயல்படும். அந்த வகையில் அதிமுக வைத் தவிர்த்த கட்சிகள் என்று பார்த்தால், திமுக-மதிமுக-பாமக-தேமுதிக இருக்கின்றன.

இவற்றில் மதிமுகவும் பாமகவும் கூட்டணி அல்லக்கைகளாகவே தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டுவிட்ட நிலையில், தேமுதிக இன்னும் ‘நானும் ரவுடி தான்’ என்று களத்தில் நிற்கிறது.

சென்ற தேர்தலில் வாக்களித்த தமிழக வாக்காளர்களே எதிர்பார்க்காத வகையில் ‘எதிர்க்கட்சித் தலைவர்’ எனும் பெரும் பொறுப்பு விஜயகாந்த்திற்குக் கிட்டியது. திமுக-அதிமுகவிற்கு மாற்றாக தன்னைச் சொல்லிக்கொள்ளும் விஜயகாந்த், அந்தப் பொன்னான வாய்ப்பை சரியான முறையில் உபயோகப்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். என்ன தான் சட்டமன்றத்தில் தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்களைப் பொறுத்தவரை திமுக தான் உண்மையான எதிர்க்கட்சியாக இப்போதும் திகழ்கிறது.(திமுக இல்லாத, ஜெயலலிதா-விஜயகாந்த் மட்டுமே இருக்கும் அரசியல் சூழ்நிலையை கற்பனை செய்யவே பயமாக உள்ளது.)

ஆளும்கட்சியாக இருக்கும்போதைவிட, எதிர்க்கட்சியாக இருக்கும்போது சிறப்பாகச் செயல்படும் ஒரே கட்சி திமுக தான். ஆனால் அதன்’வலிமையான எதிர்க்கட்சி’எனும் பிம்பத்திற்கு ஊறு விளைவிப்பதாக இருந்தது ஸ்டாலின் அழகிரி இடையேயான வாரிசுச் சண்டை. தொண்டர்கள்-கட்சி நிர்வாகிகளில் பெரும்பான்மையானோர் ஸ்டாலினை ஆரம்பம் முதலே ஆதரித்தாலும், அழகிரியின் வளர்ச்சியும் கட்சியின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கவே செய்தது.

கட்சியில் ஸ்டாலின் - அழகிரி என இரு பிரிவுகள் உண்டாகியிருந்தாலும், தொண்டர்கள் அனைவருமே கலைஞருக்கு கட்டுப்பட்டவர்கள் தான். அந்த வகையில் கலைஞரின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. கலைஞரின் காலத்திலேயே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், எம்.ஜி.ஆருக்குப் பின் அதிமுக உடைந்தது போல் திமுகவும் உடைய நேரிடும். பின்னர் வந்த தேர்தலில் அதிமுக ஜெ-ஜா அணி தோல்வி அடைந்தது போலவே, திமுகவும் பெரும் தோல்வியை அடைந்திருக்கும். அதன்பின்பும் ஸ்டாலின் - அழகிரி இணைந்திருக்காவிட்டால், கட்சியே காணாமல் போகும் அபாயமும் உண்டு.இதை அழகிரி தரப்பு உணர்ந்து கொள்வது அவசியம். ஏனென்றால் திமுக இல்லாமல் ஸ்டாலினால் வாழ முடியும். ஆனால் அழகிரிக்கு அரணாக இருப்பது திமுக தான்.

மாற்று என்பது தற்போதையதை விட மேம்பட்டதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வலிமையான மாற்று இன்னும் உருவாகிவிடாத நிலையில், திமுகவின் இந்த அறிவிப்பை வரவேற்போம்.(இது வாரிசுத் திணிப்பு ஆகாது என்பதை நண்பர் கஸாலியின் இந்தப் பதிவு விளக்குகிறது.)

திமுக தனது அடுத்த தலைமுறைத் தலைவரை அறிவித்துவிட்ட நிலையில், அடுத்து அதிமுகவும் தனது அடுத்த தலைமுறைத் தலைவரை இப்போதிலிருந்தே முன்னிறுத்துவது அவசியம். ஸ்டாலின் போன்றே அந்தத் தலைவரும் நீண்ட அரசியல் அனுபவம் பெற்றவராய் இருப்பதும் அவசியம். தமிழகத்தின் பெரும் கட்சியான அதிமுகவிற்கான அடுத்த தலைமையை தொண்டர்களுக்கு அடையாளம் காட்டும் பொறுப்பு ஜெயலலிதாவிற்கு உண்டு.

இன்னும் இருபது வருடங்களுக்கு ஜெயலலிதாவே நீடிப்பார் என்று வைத்துக்கொண்டாலும், ஸ்டாலின் போன்ற மற்றொரு அனுபவமிக்க தலைவர் அதிமுகவிற்கு தலைமைப் பொறுப்பு ஏற்க, இப்போதே ஒருவரை முன்னிறுத்த வேண்டும். முதுமை-தள்ளாமை-ஓய்வு எனும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, சீக்கிரமே ஜெயலலிதா அதற்கான ஆயத்த வேலைகளை ஆரம்பிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
மேலும் வாசிக்க... "திமுக ஸ்டாலின் கையில்....அதிமுக யார் கையில்?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, January 12, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
’என் கதை கதை-உன் கதை கதை...உன் கதை என் கதை!’என ஒரு மல்லுக்கட்டிற்குப் பின் வெளியாகும் படம் என்பதாலும், ’இன்று போய் நாளை வா’படத்தின் ரீமேக் என்பதாலும் சந்தானம்-பவர் ஸ்டார் காம்பினேசன் என்பதாலும் என் எதிர்பார்ப்பைக் கிளப்பிய படம். வழக்கம்போல் ஒருநாள் முன்னதாக, படமும் விமர்சனமும் இங்கே ரிலீஸ்!

 ஒரு ஊர்ல.....................:
அந்த ஒரு ஊர்ல ஒரு ஃபிகரும் அவரது குடும்பமும் புதிதாகக் குடியேற, அந்த ஃபிகரை மடக்க மூன்று ஹீரோக்களுக்கு வரும் ஆசையும் அதற்கு அவர்கள் செய்யும் அழிச்சாட்டியமுமே கதை
திரைக்கதை:
ஆரம்பம் முதல் இறுதிவரை காமெடியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இறங்கியிருக்கிறார்கள். ’கல்யாணம் டூ கருமாதி’காண்ட்ராக்டராக சந்தானமும், வயதாகியும் யூத்தாக வெளியில் ஜொள்ளிக்கொண்டு திரியும் பவர் ஸ்டாரும், மூவரில் கொஞ்சம் சின்சியர் லவ்வராக(ஹீரோவாம்!) அறிமுக நடிகர் சேதுவும் ஊரில் ஃபிகர் கிடைக்காமல் நண்பர்களாக அலைந்து கொண்டிருப்பதைச் சொல்லி முடித்ததும் ஹீரோயின் அறிமுகம்.

அந்த ஃபிகரை கிடைக்க வேண்டும் எனும் ஆவலில் மூவரும் ஆளுக்கொரு ரூட்டை பிடிக்கிறார்கள். சேது ஹீரோயின் அம்மாவிற்கு எடுபிடி வேலைகள் செய்ய,சந்தானம் ஹீரோயின் சித்தப்பா (வி-தா-வ-கணேஷ்)விடம் பாடக சிஷ்யனாய்ச் சேர, பவர் ஸ்டார் ஹீரோயின் அப்பாவான மாஸ்டர் சிவசங்கரனிடம் நாட்டியப் பேரொளியாக(!) களமிறங்குகிறார்கள். சந்தானம் மற்றும் பவர் ஸ்டார் குரு-க்களிடம் செய்யும் காமெடி அதகளம்.
ஒவ்வொரு சீனும் சிரிக்கும்படி இருக்க வேண்டும் என்று களமிறங்கியிருக்கிறார்கள். பெரும்பாலான சீன்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

சந்தானம்:
படத்தின் ஹீரோவாக ஒருவர் இருந்தாலும், மெயின் கேரக்டராக சந்தானம் கலக்குகிறார். ‘மார்கழிக் குளிர்ல ரொம்ப நேரம் குனிஞ்சு நிற்காத’ என்பதில் ஆரம்பித்து ‘ நைட் தூக்கம் வர்லையா? ஏன், மத்தியானமே தூங்கிட்டயா?’ என கலாய்க்கும் வசனங்களால் வழக்கம்போல் சூப்பர். ஹீரோயினைக் கரெக்ட் பண்ண, கணேஷிடம் அவர் படும்பாடு சிரிப்பை வரவழைக்கிறது. அதுவும், பானைக்குள் அவர் உட்கார்ந்திருக்கும் சீன், கலக்கல்.

பவர் ஸ்டார் சீனிவாசன்:
அறிமுகக் காட்சியிலேயே பள்ளி மாணவியை லவ்வ, அந்தப் பெண் ‘உங்களை என் அப்பா கல்யாண ஃபோட்டோ பார்த்திருக்கேன்..என் அப்பா ஃப்ரெண்ட் தானே நீங்க?’ என்று கேவலப்படுத்த, ரகளையாக அறிமுகம் ஆகிறார் பவர் ஸ்டார். 
பல இடங்களில் அபாரமான   பாடி லாங்வேஜ்களால் கலக்குகிறார். வாயை வைக்கும் விதம், உடலை அசைக்கும் பாங்கு என பவர் ஸ்டார், ஒரு முழு காமெடியனாக இதில் அவதாரம் எடுத்திருக்கிறார். இனி ஹீரோவாக நடிப்பது போன்ற காமெடிகளைப் பண்ணுவதை விட்டுவிட்டு, காமெடியனாக நடிக்க ஆரம்பிக்கலாம்.பல சீன்களில், இவரது பிரசன்ஸே சிரிப்பை வரவழைக்கிறது.


ஹீரோவும் ஹீரோயினும்:

அறிமுக நடிகர் சேது என்பவர் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். நடிப்பு, காமெடி என எல்லாவற்றியும் நன்றாகவே பண்ணியிருக்கிறார்.நல்ல படம் அமைந்தால், மேலே வரலாம்.

சொம்பு ரொம்ப......................
 ஹீரோயினாக விஷாகா சிங். பக்கத்து வீட்டுப் பெண் போல் இருக்கிறார். (நான் சொன்னது, என் பக்கத்து வீட்டு பெண் போல..அவ்வ்!). ஆனாலும் பவருக்கு ஜோடியாக ஆட, அனுஷ்காவா வருவார்? ஏதோ கிடைத்தவரை ஓகே என இவரைப் போட்டிருப்பார்கள் போல..லாங் ஷாட்டில் குமரியாகவும், க்ளோஷப்பில்...சரி, வேணாம்..பாவம்!

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- ’இன்று போய் நாளை வா’படத்துடன் ஒப்பிடும்போது, அதில் இருந்த உயிர்ப்பு இதில் இல்லை.

- காமெடி..காமெடி என்று போகும்போது, ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டுகிறது.

- தேவையில்லாமல் வரும் பாடல்கள். தமிழ்ப்படம் என்றால், இத்தனை பாட்டுகள் அவசியம் வைத்தே ஆக வேண்டுமா என்ன?

- தனித்தனியாக காட்சிகள் களை கட்டினாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஏதோ ஒரு வெறுமை தெரிகிறது.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- சந்தானம்

- பவர் ஸ்டார்

- காமெடி..காமெடி..காமெடி

- எல்லா நடிகர்களிடமிருந்தும், நகைச்சுவையான நடிப்பை வாங்கிய இயக்குநர் மணிகண்டனின் திறமை

அப்புறம்...:

திரைக்கதைத் திலகம் பாக்கியராஜ், அந்த காலகட்டது ஆண்களின் உணர்வை துல்லியமாகப் பதிவு செய்த அளவிற்கு இந்தப் படம் செய்யவில்லை. ராதிகாவிடம் இருந்த வெகுளித்தனம், இந்த ஹீரோயினிடம் மிஸ்ஸிங். மொத்தத்தில் ஒரிஜினலுடன் ஒப்பிடாவிட்டால், ரசிக்கலாம்.

பார்க்கலாமா? :
-  காமெடிக்காக ஒரு முறை பார்க்கலாம்.

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!
மேலும் வாசிக்க... "கண்ணா லட்டு தின்ன ஆசையா - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, January 5, 2013

கற்பழிப்பு : ஆடை தான் காரணமா?

அந்தக் குழந்தைக்கு மூன்று வயது இருக்கும். நான் படித்த பள்ளியில் சமையல் வேலை செய்த ஆயாவின் மகள் அவள். ஒருநாள் உடலெல்லாம் கீறலுடன் விடுதியின் பின்புறம் கிடந்த மகளை, அந்தத் தாய் கதறியபடி தூக்கிக்கொண்டு ஓடியது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. 'பெண் குழந்தையாயிற்றே..பெயர் கெட்டுவிடுமே' என போலீஸிற்குச் செல்ல அந்த தாய் அஞ்சியதால், அதைச் செய்த மிருகம் தப்பியது.  


எனது கல்லூரி நண்பனின் ஊரில் ஒரு மனவளர்ச்சி குன்றிய ஒரு பெண் இருந்தாள். திடீரென ஒருநாள், அந்தப் பெண் கர்ப்பமாய் இருப்பது தெரியவந்தது. அந்தப் பாதகத்தைச் செய்த காமுகன் யாரென்று யாருக்கும் தெரியவில்லை, அந்தப் பெண்ணுக்கே தெரியவில்லை என்பது தான் சோகம். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு, அந்தப் பெண் இறந்துபோனாள். அந்தப் பெண்ணின் பெற்றோர், அந்தக் குழந்தையுடன் வேறு ஊர் நகர்ந்தனர்.

நான் டெல்லியில் பணிபுரிந்த பொழுது, ஒருநாள் இரவு என் அறை நண்பன் பதட்டத்துடன் ரூமிற்கு வந்தான். 'என்ன விஷயம்?' என்று கேட்டபோது, பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு பெண்ணை இருவர் ரேப் செய்வதைப் பார்த்ததாக பதட்டத்துடன் சொன்னான். மறுநாள் செய்தித்தாள்களில் அதைப் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. நண்பர்களிடம் கேட்டதில், அது போல் ஆயிரம் கதை சொன்னார்கள்.

நான் குவைத்திற்கு பேஃமிலியைக் கூட்டிவந்தபோது, எனது அரபி நண்பர்கள் சொன்னது 'தனியாக எங்கேயும் பெண்களை அனுப்ப வேண்டாம்' என்று தான். இங்கே என் வீட்டருகே இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு பிலிப்பைன்ஸ் பெண், சில காமுகர்களால் காரில் தூக்கிச் செல்லப்பட்டாள். ( அதிகம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது பிலிப்பைன்ஸ் பெண்கள் தான். சில வழக்குகளும் நடந்துகொண்டிருக்கின்றன.)


நீங்களும் உங்கள் வாழ்நாளில் இது போன்று, வெளியில் சொல்லப்படாத பல பாலியல் வன்கொடுமைகளைக் கடந்து வந்திருப்பீர்கள். பொதுவாகவே இத்தகைய வன்கொடுமைகள் எளியோர் மேலேயே நிகழ்த்தப்படுகின்றன. ஒரு எம்.எல்.ஏ-மந்திரி-போலீஸ் உயரதிகாரிகளின் வீட்டுப் பெண்களைவிட, ஏழை-அதிகாரமற்ற வீட்டுப்பெண்களே இதற்குப் பழியாகிறார்கள். எத்தனையோ லாக்கப் ரேப்கள் நம் நாட்டில் நடந்ததுண்டு. ஆனால் அந்த போலீஸ்காரர்கள், தன் உயரதிகாரர்களின் வீட்டுப் பெண்கள்மேல் கை வைத்ததுண்டா? வாச்சாத்தி போன்ற கொடூர சம்பவங்கள் எல்லாமே எளியோர் மீதுதான் நிகழ்த்தப்படுகின்றன.

ஆனால் பல அறிவாளிகளும் சொல்கிறார்கள் 'பெண்கள் ஆடை  அணியும் விதம் தான் கற்பழிப்புக்குக் காரணம்' என்று. அந்த அறிவுஜீவி மடையர்களைக் கேட்கிறேன்:

- நான் மேலே சொன்ன மூன்று வயதுக் குழந்தையின் ஆடையா நாய்களே, உங்களுக்கு காமத்தைத் தூண்டுகிறது?

- தமிழக மாணவி புனிதா, பள்ளிச்சீருடையில் செல்லும்போது தானே கற்பழிக்கப்பட்டிருக்கிறாள். மனச்சாட்சியற்ற மிருகங்களே, உங்களுக்குப் பள்ளிச் சீருடையுமா காமத்தைத் தூண்டும் விஷயம்?

அனைத்து மதத்தைச் சார்ந்த வெறியர்களும், இதுதான் சமயமென்று, தங்கள் மதப்பிரச்சாரத்தை முன்னெடுப்பதைப் பார்க்கையில் அருவெறுப்பாக இருக்கிறது. இவர்கள் வாழும் சமூகத்தில் நம் பிள்ளைகள் நடமாட வேண்டியிருக்கிறதே என்று கவலையாகவும் உள்ளது.

பெண் என்பவளுக்கு கற்பு என்பதை விலங்காக நாம் பூட்டி வைத்திருக்கிறோம். அவள் எப்படியும் வாய் தீறந்து வெளியில் சொல்ல மாட்டாள் என்ற தைரியத்திலேயே பல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன.

எந்தப் பெண்ணாவது வெளியில் சொன்னால், அந்தப் பெண்ணையே குற்றவாளியாக்கும் கேவலமான மனிதர்கள் வாழும் உலகம் இது.

நான் இதுவரை வசித்துவந்திருக்கும் அனைத்து இடங்களிலும், பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணையே முதல் குற்றவாளியாக்கும் மனிதர்களையே கண்டிருக்கிறேன்:

- அவ ஏன் அங்க போனா?
- அவ ஆபாசமா ட்ரெஸ் போட்டிருந்துப்பா.
- எல்லாருந்தான் அங்க போனாங்க..அவளுக்கு மட்டும் ஏன் நடந்துச்சு? வேற ஏதாவது காரணம் இருக்கும்பா.

 இப்படி பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக ஆக்க முயல்பவர்களே அதிகம்.

அடி-உதை-வெட்டு-குத்தை விட பாலியல் வன்முறை கொடூரமானது. அது உடல்ரீதியாக மட்டுமல்லாது, மனரீதியிலும் ஒரு பெண்ணை/அவளைச் சார்ந்தோரை சிதைத்துவிடுகிறது. அந்தக் கொடூரத்திலிருந்து உள்வியல்ரீதியாக மீண்டுவருவதே, கஷ்டமான விஷயமாக ஆகிவிடுகிறது.

எனவே, முதலில் பாலியல் வன்முறை என்பது இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் பச்சிளம் குழந்தை முதல் முதிர் பெண்கள் வரை, அனைவர் மீதும் உடல்/உளவியல் ரீதியில் நடத்தப்படும் வன்முறை என்பதைப் புரிந்துகொள்வோம்.

இத்தகைய மிருகங்கள், சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்கள். எனவே கற்பழிப்புக்கான தண்டனையாக தூக்குதண்டனை அல்லது ஆண்மை நீக்கத்துடன்கூடிய ஆயுள்தண்டனையுமே சரியானதாக இருக்க முடியும்.

அதற்குக் குரல் கொடுக்கும் நல்ல வாய்ப்பாக, டெல்லி பாலியல் வன்முறைச் சம்பவம் அமைந்துள்ளது. அங்கே நடக்கும் பெரும் போராட்டங்களுக்குக் காரணம், அங்கே இதுபோன்று வெளியில் சொல்லப்படாத ஆயிரமாயிரம் நிகழ்வுகள் தொடர்ந்து நடப்பதால் தான். இந்த மீடியாக்களுக்கும் இப்பொழுதுதான் இந்தக் கொடுமை கண்ணிற்குத் தெரிகின்றது.

எனவே இதுவே பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கடும் சட்டம் இயற்றப்பட நல்ல சமயம்.  அரசு மற்றும் நீதியமைப்பிற்கு உறைக்கும் வண்ணம், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களுக்கும் தார்மீக ஆதரவளிப்போம். கடும் சட்டம் இயற்றப்படும்வரை, தொடர்ந்து குரல் கொடுப்போம்.

மேலும் வாசிக்க... "கற்பழிப்பு : ஆடை தான் காரணமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.