Saturday, January 5, 2013

கற்பழிப்பு : ஆடை தான் காரணமா?

அந்தக் குழந்தைக்கு மூன்று வயது இருக்கும். நான் படித்த பள்ளியில் சமையல் வேலை செய்த ஆயாவின் மகள் அவள். ஒருநாள் உடலெல்லாம் கீறலுடன் விடுதியின் பின்புறம் கிடந்த மகளை, அந்தத் தாய் கதறியபடி தூக்கிக்கொண்டு ஓடியது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. 'பெண் குழந்தையாயிற்றே..பெயர் கெட்டுவிடுமே' என போலீஸிற்குச் செல்ல அந்த தாய் அஞ்சியதால், அதைச் செய்த மிருகம் தப்பியது.  


எனது கல்லூரி நண்பனின் ஊரில் ஒரு மனவளர்ச்சி குன்றிய ஒரு பெண் இருந்தாள். திடீரென ஒருநாள், அந்தப் பெண் கர்ப்பமாய் இருப்பது தெரியவந்தது. அந்தப் பாதகத்தைச் செய்த காமுகன் யாரென்று யாருக்கும் தெரியவில்லை, அந்தப் பெண்ணுக்கே தெரியவில்லை என்பது தான் சோகம். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு, அந்தப் பெண் இறந்துபோனாள். அந்தப் பெண்ணின் பெற்றோர், அந்தக் குழந்தையுடன் வேறு ஊர் நகர்ந்தனர்.

நான் டெல்லியில் பணிபுரிந்த பொழுது, ஒருநாள் இரவு என் அறை நண்பன் பதட்டத்துடன் ரூமிற்கு வந்தான். 'என்ன விஷயம்?' என்று கேட்டபோது, பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு பெண்ணை இருவர் ரேப் செய்வதைப் பார்த்ததாக பதட்டத்துடன் சொன்னான். மறுநாள் செய்தித்தாள்களில் அதைப் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. நண்பர்களிடம் கேட்டதில், அது போல் ஆயிரம் கதை சொன்னார்கள்.

நான் குவைத்திற்கு பேஃமிலியைக் கூட்டிவந்தபோது, எனது அரபி நண்பர்கள் சொன்னது 'தனியாக எங்கேயும் பெண்களை அனுப்ப வேண்டாம்' என்று தான். இங்கே என் வீட்டருகே இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு பிலிப்பைன்ஸ் பெண், சில காமுகர்களால் காரில் தூக்கிச் செல்லப்பட்டாள். ( அதிகம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது பிலிப்பைன்ஸ் பெண்கள் தான். சில வழக்குகளும் நடந்துகொண்டிருக்கின்றன.)


நீங்களும் உங்கள் வாழ்நாளில் இது போன்று, வெளியில் சொல்லப்படாத பல பாலியல் வன்கொடுமைகளைக் கடந்து வந்திருப்பீர்கள். பொதுவாகவே இத்தகைய வன்கொடுமைகள் எளியோர் மேலேயே நிகழ்த்தப்படுகின்றன. ஒரு எம்.எல்.ஏ-மந்திரி-போலீஸ் உயரதிகாரிகளின் வீட்டுப் பெண்களைவிட, ஏழை-அதிகாரமற்ற வீட்டுப்பெண்களே இதற்குப் பழியாகிறார்கள். எத்தனையோ லாக்கப் ரேப்கள் நம் நாட்டில் நடந்ததுண்டு. ஆனால் அந்த போலீஸ்காரர்கள், தன் உயரதிகாரர்களின் வீட்டுப் பெண்கள்மேல் கை வைத்ததுண்டா? வாச்சாத்தி போன்ற கொடூர சம்பவங்கள் எல்லாமே எளியோர் மீதுதான் நிகழ்த்தப்படுகின்றன.

ஆனால் பல அறிவாளிகளும் சொல்கிறார்கள் 'பெண்கள் ஆடை  அணியும் விதம் தான் கற்பழிப்புக்குக் காரணம்' என்று. அந்த அறிவுஜீவி மடையர்களைக் கேட்கிறேன்:

- நான் மேலே சொன்ன மூன்று வயதுக் குழந்தையின் ஆடையா நாய்களே, உங்களுக்கு காமத்தைத் தூண்டுகிறது?

- தமிழக மாணவி புனிதா, பள்ளிச்சீருடையில் செல்லும்போது தானே கற்பழிக்கப்பட்டிருக்கிறாள். மனச்சாட்சியற்ற மிருகங்களே, உங்களுக்குப் பள்ளிச் சீருடையுமா காமத்தைத் தூண்டும் விஷயம்?

அனைத்து மதத்தைச் சார்ந்த வெறியர்களும், இதுதான் சமயமென்று, தங்கள் மதப்பிரச்சாரத்தை முன்னெடுப்பதைப் பார்க்கையில் அருவெறுப்பாக இருக்கிறது. இவர்கள் வாழும் சமூகத்தில் நம் பிள்ளைகள் நடமாட வேண்டியிருக்கிறதே என்று கவலையாகவும் உள்ளது.

பெண் என்பவளுக்கு கற்பு என்பதை விலங்காக நாம் பூட்டி வைத்திருக்கிறோம். அவள் எப்படியும் வாய் தீறந்து வெளியில் சொல்ல மாட்டாள் என்ற தைரியத்திலேயே பல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன.

எந்தப் பெண்ணாவது வெளியில் சொன்னால், அந்தப் பெண்ணையே குற்றவாளியாக்கும் கேவலமான மனிதர்கள் வாழும் உலகம் இது.

நான் இதுவரை வசித்துவந்திருக்கும் அனைத்து இடங்களிலும், பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணையே முதல் குற்றவாளியாக்கும் மனிதர்களையே கண்டிருக்கிறேன்:

- அவ ஏன் அங்க போனா?
- அவ ஆபாசமா ட்ரெஸ் போட்டிருந்துப்பா.
- எல்லாருந்தான் அங்க போனாங்க..அவளுக்கு மட்டும் ஏன் நடந்துச்சு? வேற ஏதாவது காரணம் இருக்கும்பா.

 இப்படி பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக ஆக்க முயல்பவர்களே அதிகம்.

அடி-உதை-வெட்டு-குத்தை விட பாலியல் வன்முறை கொடூரமானது. அது உடல்ரீதியாக மட்டுமல்லாது, மனரீதியிலும் ஒரு பெண்ணை/அவளைச் சார்ந்தோரை சிதைத்துவிடுகிறது. அந்தக் கொடூரத்திலிருந்து உள்வியல்ரீதியாக மீண்டுவருவதே, கஷ்டமான விஷயமாக ஆகிவிடுகிறது.

எனவே, முதலில் பாலியல் வன்முறை என்பது இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் பச்சிளம் குழந்தை முதல் முதிர் பெண்கள் வரை, அனைவர் மீதும் உடல்/உளவியல் ரீதியில் நடத்தப்படும் வன்முறை என்பதைப் புரிந்துகொள்வோம்.

இத்தகைய மிருகங்கள், சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்கள். எனவே கற்பழிப்புக்கான தண்டனையாக தூக்குதண்டனை அல்லது ஆண்மை நீக்கத்துடன்கூடிய ஆயுள்தண்டனையுமே சரியானதாக இருக்க முடியும்.

அதற்குக் குரல் கொடுக்கும் நல்ல வாய்ப்பாக, டெல்லி பாலியல் வன்முறைச் சம்பவம் அமைந்துள்ளது. அங்கே நடக்கும் பெரும் போராட்டங்களுக்குக் காரணம், அங்கே இதுபோன்று வெளியில் சொல்லப்படாத ஆயிரமாயிரம் நிகழ்வுகள் தொடர்ந்து நடப்பதால் தான். இந்த மீடியாக்களுக்கும் இப்பொழுதுதான் இந்தக் கொடுமை கண்ணிற்குத் தெரிகின்றது.

எனவே இதுவே பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கடும் சட்டம் இயற்றப்பட நல்ல சமயம்.  அரசு மற்றும் நீதியமைப்பிற்கு உறைக்கும் வண்ணம், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களுக்கும் தார்மீக ஆதரவளிப்போம். கடும் சட்டம் இயற்றப்படும்வரை, தொடர்ந்து குரல் கொடுப்போம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

 1. சட்டம் இயற்றுவதோடு மட்டுமில்லாமல், முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். அதற்கான கண்காணிப்பு முறைகளும் பலப்படுத்தப்பட வேண்டும்.....!

  ReplyDelete
 2. இப்படியான மனித தூக்கை விட ஆண்மை நீக்கிய ஆயுள் தண்டனையே பொருத்தமானது.
  இந்த அறிவியல் உலகத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட எல்லோரையும் மேயர் என்றே கணக்கில் எடுத்து குற்றம் செய்தால் தண்டனை தரனும்.!

  ReplyDelete
 3. மனித மிருகங்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

  ReplyDelete
 4. மனித மிருகங்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

  ReplyDelete
 5. பாலியல் பலாத்காரங்களுக்கு ஆடை மட்டுமே காரணம் என்பது ஏற்புடையதில்லை. ஆனால், ஆடையும் ஒரு காரணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

  ReplyDelete
 6. கடுமையான சட்டங்கள் மூலமும், தனி மனித ஒழுக்கங்கள் மூலமுமே இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இல்லாவிட்டால் இது ஒரு தொடர்கதைதான்.

  ReplyDelete
 7. ஒரு படத்தில் விவேக் சொல்வார் மைனர் குஞ்சை சுட்டுட்டேன்னு. அதுவே தண்டனையாக அமையும் பட்சத்தில் இது குறையலாம்.

  ReplyDelete
 8. உண்மையில் சட்டத்தை இறுக்குவதுடன் மக்களிடம் அறிவுத்தல்களையும் அதிகம் பிரச்சாரம் செய்ய வேண்டும் சட்டத்தின் செயல்பாடுகளுடன்!

  ReplyDelete
 9. சரியான சாட்டையடிப் பகிர்வு.சட்டம் போட்டால் மட்டும் போதாது,நடைமுறைப்படுத்தவும் வேண்டும்,(மலேஷியா போல் சாட்டை அடியினால் தீர்த்து விட முடியாது!)

  ReplyDelete

 10. ஆணித்தரமான கருத்து பாஸ்...தண்டனைப் பயம் ஓன்று மட்டுமே இது போன்ற குற்றங்களைத் தடுக்க உதவும்.கவர்ச்சிகரமான உடைகள் உணர்ச்சிகளைத் தூண்டும்தான்.இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல.அப்படித் தூண்டபடவில்லை என்றால் அவன் மனிதனே அல்ல.ஆனால் அதை வெளிப்படுத்தும் விதத்தில் தான் மனிதன் விலங்குகளிடமிருந்து வேறு படுகிறான்.பாலியன் உணர்வுகளைத் தீர்த்துக்கொள்ள எவ்வளவோ வழிகளிருக்க அதை அப்பாவிப் பெண்கள்மீது வன்புணர்வு செய்துதான் தீர்த்துக்கொள்ள வேண்டுமா..? வெளிநாடுகளில் உள்ள தண்டனைப்பயம் நம்ம நாட்டில் இல்லாததுதான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 11. எவ்வளவுதான் சட்டங்கள் போட்டாலும் அதை மீறுகிறவர்களிடம் என்ன தான் செய்யமுடியும். தனி மனித ஒழுக்கம் இல்லாதவரை எதுமே செய்ய முடியாதுங்க.

  ReplyDelete
 12. //Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சட்டம் இயற்றுவதோடு மட்டுமில்லாமல், முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். அதற்கான கண்காணிப்பு முறைகளும் பலப்படுத்தப்பட வேண்டும்.....!//


  உண்மை தான்ணே..வழக்கு இழுத்தடிக்கப்படாமல் உடனே தீர்ப்பு வழங்கப்பட்டாலே பாதிப் பிரச்சினை தீர்ந்துவிடும்.

  ReplyDelete
 13. //Blogger காட்டான் said...

  இப்படியான மனித தூக்கை விட ஆண்மை நீக்கிய ஆயுள் தண்டனையே பொருத்தமானது.
  இந்த அறிவியல் உலகத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட எல்லோரையும் மேயர் என்றே கணக்கில் எடுத்து குற்றம் செய்தால் தண்டனை தரனும்.!//


  சரியான கருத்து மாமா. நீண்ட நாட்களுக்குப் பின் நம் கடைப்பக்கம் வந்ததற்கு நன்றி.

  ReplyDelete
 14. //Blogger Mary Jose said...

  மனித மிருகங்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.//

  இந்த முறை தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 15. //Blogger ரஹீம் கஸாலி said...

  பாலியல் பலாத்காரங்களுக்கு ஆடை மட்டுமே காரணம் என்பது ஏற்புடையதில்லை. ஆனால், ஆடையும் ஒரு காரணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.//


  ஆடையால் மட்டுமே பலாத்காரம் நிழழ்வதாக நான் நினைக்கவில்லை கஸாலி. கற்பழிக்கும் நபர்கள் ஏற்கனவே மனதளவில் மிருக நிலைக்குக்ச் சென்றுவிட்டவர்கள். அவர்களுக்கு ஆடை ஒரு பொருட்டல்ல. பெரும்பாலும் அவர்கள் இதே வேலையை பலபேரிடம் செய்துவருபவர்கள் தான். ஒரு யோக்கியன் (அல்லது நீங்களோ, நானோ) நின்றுகொண்டிருக்கும்போது, ஒரு பெண் கவர்ச்சியாக வந்தால், உடனே கற்பழித்துவிடுவோமா என்ன?

  மாணவி புனிதா, பள்ளிக்குச் செல்ல தினமும் அந்த காட்டுப்பாதையில் உள்ள ரயில்வே ட்ராக்கை கடந்தே செல்ல வேண்டும். அங்கே குடிபோதையில் இருந்த அந்த காமுகன், அந்தப் பெண் வந்தபோது கற்பழித்தான். அந்த மனநிலையில், அவன் புனிதாவை மட்டுமல்ல, உங்கள் வீட்டுப்பெண் வந்திருந்தாலும் அவன் அதையே செய்திருப்பான். என் வீட்டுப்பெண் வந்திருந்தாலும் அதையே செய்திருப்பான். ஆடை அந்த மிருகங்களுக்கு ஒரு பொருட்டல்ல.

  இந்தியாவில் நடக்கும் கற்பழிப்புகளில், வெறுமனே ஆடையினால் மட்டுமே நடந்த கற்பழிப்புகள் எத்தனை சதவீதம் என்று சொல்ல முடியுமா?

  ReplyDelete
 16. //தனிமரம் said...
  உண்மையில் சட்டத்தை இறுக்குவதுடன் மக்களிடம் அறிவுத்தல்களையும் அதிகம் பிரச்சாரம் செய்ய வேண்டும் சட்டத்தின் செயல்பாடுகளுடன்!//

  நீங்கள் சொல்வது முற்றிலும் சரி, நேசரே.

  ReplyDelete

 17. //
  Yoga.S. said...
  சரியான சாட்டையடிப் பகிர்வு.சட்டம் போட்டால் மட்டும் போதாது,நடைமுறைப்படுத்தவும் வேண்டும்,(மலேஷியா போல் சாட்டை அடியினால் தீர்த்து விட முடியாது!)//

  கற்பழிப்பு வழக்குகளுக்காக தனி விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுமென்று தெரிகின்றது. அப்படி அமைந்தால், இத்தகைய குற்றங்கள் வெகுவாகக் குறையும் ஐயா.

  ReplyDelete

 18. // Manimaran said...

  ஆணித்தரமான கருத்து பாஸ்...தண்டனைப் பயம் ஓன்று மட்டுமே இது போன்ற குற்றங்களைத் தடுக்க உதவும்.கவர்ச்சிகரமான உடைகள் உணர்ச்சிகளைத் தூண்டும்தான்.இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல.அப்படித் தூண்டபடவில்லை என்றால் அவன் மனிதனே அல்ல.ஆனால் அதை வெளிப்படுத்தும் விதத்தில் தான் மனிதன் விலங்குகளிடமிருந்து வேறு படுகிறான்.பாலியன் உணர்வுகளைத் தீர்த்துக்கொள்ள எவ்வளவோ வழிகளிருக்க அதை அப்பாவிப் பெண்கள்மீது வன்புணர்வு செய்துதான் தீர்த்துக்கொள்ள வேண்டுமா..? வெளிநாடுகளில் உள்ள தண்டனைப்பயம் நம்ம நாட்டில் இல்லாததுதான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். //


  உண்மை தான். மிருகங்களிடம் பயம் மட்டுமே செல்லுபடியாகும்.

  ReplyDelete
 19. // பூந்தளிர் said...
  எவ்வளவுதான் சட்டங்கள் போட்டாலும் அதை மீறுகிறவர்களிடம் என்ன தான் செய்யமுடியும். தனி மனித ஒழுக்கம் இல்லாதவரை எதுமே செய்ய முடியாதுங்க.//


  'யாரும் வெளியில் சொல்ல மாட்டார்கள்..சொன்னாலும் வழக்கு எளிதில் முடியாது' என்பதே இத்தகைய குற்றங்களுக்குக் காரணம்.கடுமையான சட்டங்கள் மூலம்,அந்த மிருகங்களின் மனதில் பயத்தை விளைக்கலாம்..அது குற்றங்களைக் குறைக்கும்.

  ReplyDelete
 20. செங்கோவி நீங்க இங்க ஒரு விஷயத்தை தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கீங்க. ஆடை ஒரு காரணம், எப்படி? அந்த ஆடை கற்பழிக்கப்பட்ட பெண்ணுடையதாக இருக்க வேண்டியதில்லை. வேறு பெண்களுடையாதாகக் கூட இருக்கலாம். அவங்க 'அப்படியும், இப்படியும்' ஆடைகளை அணிகிறார்கள், இவன் அதைப் பார்க்கிறான், மனதளவில் கெட்டுப் போகிறான், அந்த வெறியை வெளிப்படுத்த யார் கிடைக்கிறார்களோ அங்கே தீர்த்துக் கொள்கிறான். எனவே பெண்கள் உடை விஷயத்தில் கண்ணியமாக இருப்பது நல்லது. உடை விஷயமும் ஒரு காரணி, ஆனால் முழு காரணி அல்ல என்பதும் ஒப்புக் கொள்ளத் தக்கதே. கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று நீங்கள் காரணங்கள் அத்தனையும் லிஸ்டு போடுங்கள், அவை எல்லாவற்றையும் நீக்கி விட்டாலும் கற்பழிப்புகள் நடக்கத்தான் செய்யும், அதற்காக நீங்கள் போட்ட லிஸ்ட்டில் உள்ளது எல்லாம் காரணமே அல்ல என்று ஆகிவிடாது. அவற்றை தவிர்த்தால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்பதே உண்மை. கற்பழிப்புக்கு தண்டனைகள் கடுமையாக்கப் பட வேண்டும் அதை எல்லோரும் பார்க்கும் வகையில் நிறைவேற்றப் பட வேண்டும், நிச்சயம் இத்தகைய குற்றங்கள் குறையும்.

  ReplyDelete
 21. முழுக்க முழுக்க ஆடையையே நான் காரணம் சொல்லவில்லை செங்க்ஸ். ஆடையும் ஒரு காரணம் என்றுதான் சொல்லிருக்கேன். ஆடையால் பலாத்காரங்களின் சதவீதம் குறைந்திருந்தாலும் ஆடையாலும் குற்றங்கள் நடக்குதல்லவா? நான் அதைத்தான் சொன்னேன். ஆடையை மட்டும் குற்றம் சொல்லவில்லை.சொல்லவும் மாட்டேன்.

  ReplyDelete
 22. //பெண்கள் வீட்டு வேலை செய்வதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்..கற்பழிப்பு சம்பவங்கள் கிராமத்தில் அல்ல நகரங்களில் தான் நடக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.//

  இது இன்றைய செய்தி..இதுக்கு நேரடியாகவே 'பெண்கள் வெளியில் நடமாடுவதால்தான் கற்பழிப்பு நடக்கிறது. பெண்களின் காலை ஒடித்து வீட்டில் முடக்கினாலே கற்பழிப்புகள் நின்றுவிடும்' என்று சொல்லிவிடலாமே?

  பிற்போக்குத்தனத்தில் மதவாதிகள் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல போலும்!

  ReplyDelete
 23. //Jayadev Das said...
  அவங்க 'அப்படியும், இப்படியும்' ஆடைகளை அணிகிறார்கள்,//

  எது நல்ல ஆடை? சிலருக்கு சேலையே ஆபாசமாகத் தெரிகிறதே பாஸ்?

  ReplyDelete
 24. பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் ஆண்களின் கண்களுக்கு எல்லா ஆடையுமே கவர்ச்சி ஆடைதான். அதில் சேலைஎன்ன சுடிதார் என்ன?
  இந்த போக்கு மாறாதவரை எத்தனை சட்டம் போட்டாலும் அது ஏட்டுச்சுரக்காய்தான்

  ReplyDelete
 25. தனி மனித ஒழுக்கம் ரொம்ப அவசியம்.

  ReplyDelete
 26. //ரஹீம் கஸாலி said...
  பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் ஆண்களின் கண்களுக்கு எல்லா ஆடையுமே கவர்ச்சி ஆடைதான். அதில் சேலைஎன்ன சுடிதார் என்ன?
  இந்த போக்கு மாறாதவரை எத்தனை சட்டம் போட்டாலும் அது ஏட்டுச்சுரக்காய்தான் //

  சரியாகச் சொன்னீர்கள் கஸாலி..இந்திய நீதியமைப்பில் வாய்தா மேல் வாய்தா வாங்கி, வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் வாய்ப்பி இருப்பதாலேயே, இவர்கள் தைரியமாக இதைச் செய்கிறார்கள்.(ஒரு ஜனநாயக அமைப்பில் வாய்தாவை முழுக்க தவிர்க்க முடியாது தான்.)கற்பழிப்புக்கு தனி நீதிமன்றமும் ஒரு மாதத்தில் தீர்ப்பும் கொடுக்கப்பட்டாலே போதும், இத்தகைய குற்றங்கள் ஒழியும்.

  ReplyDelete
 27. நாடு வீதியில் வைத்து சுட்டு ,அல்லது தூக்கில் போடா வேண்டும் ..தண்டனைகள் கடுமை ஆனால் தான் தவறு செய்வபன் பயப்படுவான்

  ReplyDelete
 28. பதிவு படித்து முடிந்ததும் மனசை யாரோ பிசையிர மாதிரி இருக்கு :(
  இப்போ எல்லாம் எந்த பக்கம் திரும்பினாலும் கற்பழிப்பு கேசாவே கிடக்குது.... ஒரு ஆணாக இருக்கவே வெக்கமா இருக்கு :((

  ஒரு கொஞ்ச நேர சுகத்துக்காக ஒரு உயிரே எடுக்க எப்படித்தான் இவங்களுக்கு எல்லாம் மனசு வருதோ.....!!! எந்த எந்த மனித உருவத்துக்குள் மிருகம் இருக்கோ என்று கண்டு பிடிக்கவே முடியாமா இருக்கு...


  ஆடையால் சினிமாவால் கற்பழிப்பு என்பது சும்மா ஒரு சாட்டு...
  இனி எதிர் காலத்தில் இப்படி நடைபெறாமல் இருக்கவாது ஒவ்வொரு பெற்றோரும் ஆன் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும்... சுய ஒழுக்கம் மட்டுமே இதற்க்கு ஒரே வழி.

  கற்பழிப்பு குற்றவாளிககு மரண தண்டனை என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கப்படாது

  ReplyDelete
 29. நீங்கள் மேற்சொன்ன சில கற்பழிப்புகளுக்கு ஆடையை மட்டும் காரணம் சொல்ல முடியாது என்பது உண்மை தான்.இத்தைகைய காம வெறி பிடித்த சில மிருகங்கள் மகள்,தங்கை என்று கூட தான் பார்ப்பதில்லை.

  ReplyDelete
 30. நீங்கள் மேற்சொன்ன சில கற்பழிப்புகளுக்கு ஆடையை மட்டும் காரணம் சொல்ல முடியாது என்பது உண்மை தான்.இத்தைகைய காம வெறி பிடித்த சில மிருகங்கள் மகள்,தங்கை என்று கூட தான் பார்ப்பதில்லை.

  ReplyDelete
 31. அதே நேரத்தில் இந்த மிருகங்களின் இந்த செயலுக்கு கவர்ச்சி உடை காரணமில்லை என்று எவ்வாறு சொல்ல இயலும். சினிமா, டி.வி, சீரியல், பத்திரிகை அதில் உள்ள கிளுகிளுப்பு ஆடைகள் என அனைத்திற்கும் மறைமுக தொடர்பு உண்டு.

  ReplyDelete
 32. ஆகா பெண்களை போக பொருளாக மாற்றும் மனநிலையில் இருந்து விடு பட வேண்டும்.

  ReplyDelete
 33. கற்பழிப்புக்கு ஆடை மட்டுமே காரணம் இல்லைண்ணே, நம்ம கலாசாரத்து அடிப்படையில இருக்கற ஓட்டை தான் காரணம். இந்த பதிவ படிக்கறப்போ ஏனோ உங்களோட
  "இந்தியப் பெண்கள் ஏங்க இப்படி இருக்காங்க?" பதிவு ஞாபகம் வருது.

  ReplyDelete
 34. நல்லதொரு கவனிக்கத் தக்க வாதம், ஜெயதேவ் தாஸ். ஆடை, இடம் (தனிமை, இரவு, கேட்க ஆளில்லா நிலை, மது ) போன்றவை காரணிகளாக அமைவதில்லை. இரவும் தனிமையும், மது அருந்தும் வாய்ப்பு எல்லாருக்கும் அமைவதுதான், ஆனால் அனைவரும் தவறிழைப்பதில்லை. ஆனால் தவறிழைப்பவர்களுக்கான சூழ்நிலை, சாதகமான அம்சங்களாக அமைகின்றன. அதற்காக அது பாதிக்கப்பட்டவர்களின் மீதான குற்றச்சாட்டாக அமைவது கண்டிக்கத்தக்கதே. ஆனால் இவற்றைத் தவிர்க்கச் சொல்வது நல்லதே,

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.