Friday, April 29, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_3


தூரத்தே என்னைப்
பார்க்கையில் உன் விழிகள்
விரிந்து வரவேற்கும்.
என் கவிதையினை
கேட்கையில் உன் கண்கள்
அமைதியாய் அங்கீகரிக்கும்.
விரல்கள் எதிர்பாராது
தீண்டுகையில் உன் கண்கள்
வெட்கத்தால் மின்னும்.
என்னைப் பிடிக்கவில்லையென
சொன்னபோது மட்டும்
உன் கண்கள் உன்னுடன்
ஒத்துழைக்க மறுப்பதேனோ?

முந்தைய பகுதியில் இருந்து..

”பிரவீணா” என்றான் மதன்.

நாங்கள் மூவரும் திடுக்கிட்டோம். 

பிரவீணா எங்கள் காலேஜில் படிக்கும் பெண். செம ஃபிகர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவள்!

அழகானவள். அழகு என்றால் ஜொள்ளு விட வைக்கும் அழகல்ல. அது ஒரு வகையான கம்பீரம் கலந்த அழகு. ஏதோவொரு வகையில் அவளிடமிருந்து தன்னம்பிக்கை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். வெறுமனே ’பிக்அப்-ட்ராப்’ என்று யோசிக்க முடியாத அழகு அது. அந்தப் பெண்ணிடம் மதன் மனதைப் பறி கொடுத்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை தான்.

“பிரவீணாவா என்னடா சொல்றே?” என்று பழனி கேட்டான்.

”ஆமாண்டா, நான் பிரவீணாவை லவ் பண்றேன். ஆனா அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்கா, இல்லையாண்ணே தெரியலை. ஆனா என்கூட நல்லா பாசமாப் பழகுறாடா” என்றான் மதன். 

“அட லூசுப் பயலே, கூடப் படிக்கிறவனாச்சேன்னு அவ நல்லாப் பேசியிருப்பா. அதுக்காக லவ்வுன்னா எப்படிடா?” 
"அவ என்கிட்ட தான் ரொம்ப க்ளோஸா பழகுறா. என்னை ரொம்பக் கேர் எடுத்துப் பேசுறா. அவளும் எனக்கு இல்லேன்னு ஆயிடுச்சுன்னா, நான் செத்திடுவேன்” 
மூவரும் அதிர்ந்து போனோம்.

”அப்போ, சின்சியராத் தான் லவ் பண்றயா?” என்றேன்.
“ஆமாடா, எனக்கு அவ இன்னொரு அம்மா மாதிரிடா” என்றவாறு மீண்டும் அழ ஆரம்பித்தான்.
இந்த காதல் என்ற விஷயம் மிகவும் ஆச்சரியமான ஒன்று தான். எவ்வளவு பெரிய துக்கத்தையும் மறக்கடிக்கிற வல்லமை காலத்திற்கு உண்டு. ஆனால் காலத்தை விடவும் விரைவாக நம்மை மீட்கின்ற விஷயம் காதல். வாழ்க்கையில் கடும் தோல்வியைச் சந்தித்த பலரும் உத்வேகத்துடன் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள காதல் உதவுகிறது.

தாயை இழந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த மதனுக்கு, வரப்பிரசாதமாய் இந்தக் காதல் வந்தது. எனக்கும் அது நிம்மதியைத் தந்தது. இந்த விஷயத்தில் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தோம். 

“சிவா, பிரவீணாவும் நீயும் லேப்ல ஒரே செட் தானே?” என்று கேட்டான் பழனி.
“ஆமா” என்று தயங்கியவாறே சொன்னான் சிவா.

“டேய், அப்போ இவனையே அவகிட்ட தூது அனுப்பினா என்ன?”

ஒரு வாரத்திற்கு முன்பு இது நடந்திருந்தால், நானே இதற்கு ஒத்துக் கொண்டிருப்பேன். ஆனால் இப்போது...

டந்த வாரம் இரவில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். யாரோ எழுப்புவது போல் இருந்தது. கண் விழித்தால், சிவா!

“என்னடா?” என்றேன்.
“நண்பா, எனக்கு அவசரமா ஒன்னுக்கு வருதுடா” என்றான் சிவா!
நான் மிரண்டு போய் “அதுக்கு என்னை என்னடா செய்யச் சொல்றே?” என்றேன்.
“இல்லைடா, மணி பண்ணெண்டு ஆகுது. பாத் ரூம் போகப் பயமா இருக்கு. துணைக்கு வாயேன்” என்றான்.

எங்கள் ஹாஸ்டலில் பாத்ரூம் எல்லா ரூம்களுக்கும் பொதுவாக, அதே வராண்டாவிலேயே இருக்கும். ஐந்து ரூம் தள்ளிப் போக வேண்டும். பிரச்சினை அது அல்ல. பேய் நடமாட்டம் உள்ளதாக வதந்தி உண்டு. ஹாஸ்டலுக்குப் புதிதாக யார் சேர்ந்தாலும் வாட்ச்மென் அதைச் சொல்லிப் பயமுறுத்துவார்கள்.

பழனியிடம் வாட்ச்மேன் அதைச் சொன்னபோது, பதிலுக்கு “வர்றது தான் வருது, நல்ல பொம்பளைப் பேயா வரட்டும்!” என்றான்.
அதன்பிறகு அந்த வாட்ச்மேன் அவனை எங்கு பார்த்தாலும் முறைப்பார்.

னவே சிவாவை இந்தக் காரியத்தில் இறக்குவது நல்லதல்ல என்று நினைத்தேன்.

ஆனால் மதன் சிவாவை உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டான்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_3"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, April 27, 2011

49ஓ போட்டவர்கள் நக்ஸலைட்களா - கியூ பிராஞ்ச் போலீசின் அராஜக விசாரணை

இன்று வந்துள்ள செய்தி அதிகார வர்க்கத்தின் ஆணவத்தைக் காட்டுவதாக உள்ளது. கடந்த தேர்தலில் 49ஓ-விற்கு ஓட்டுப் போட்டவர்களுக்கும் நக்ஸலைட் அமைப்புகளுக்கும் தொடர்பு உண்டா என்று கியூ பிராஞ்ச் போலீஸார் விசாரணை செய்கிறார்களாம். இன்று வக்கீல் சத்தியன்சந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொது நலமனு தாக்கல் செய்து, கியூ பிராஞ்சின் விசாரணைக்குத் தடை வாங்கி உள்ளார்.

எந்த சட்டத்தின் அடிப்படையில் இந்த விசாரணையை நடத்துகின்றார்கள் என்றே தெரியவில்லை. 49ஓ-வுக்கு ஓட்டுப் போடுவது சட்டப்படி தவறு அல்ல, அது நம் உரிமை. நியாயத்திற்கு 49ஓ-வை வாக்களிக்கும் இயந்திரத்தில் சேர்க்க வேண்டும். அதற்கு வக்கற்ற தேர்தல் கமிசனும் புத்திசாலி அதிகாரிகளும், 49ஓ போட வந்தவர்களை தனிப்படிவம் நிரப்பச் சொல்லி, பூத் ஏஜெண்டுகளுக்குக் காட்டிக் கொடுத்ததே தவறு. அத்தோடு நிறுத்தாமல், இப்போது 49ஓ போட்ட 24,594 பேரின் விவரங்களை கியூ பிராஞ்சுக்குக் கொடுத்துள்ளதாக வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

49ஓ என்பது தான் என்ன? ‘எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளது. ஆனால் தற்போதைய அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கை இல்லை. அவர்களின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யவைக்கவும், நல்ல மாற்று சக்திகளை அரசியலுக்கு வரவழைக்க விரும்புகிறேன்’ என்பது தானே. நக்ஸலைட்கள் அடிப்படையில் இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்தவர்கள். அவர்களும், அவர்கலோடு தொடர்புடையவர்களும் மெனக்கெட்டு, வாக்குச்சாவடிக்கு வந்து 49ஓ போடுவார்கள் என்று நிஜமாகவே இந்த அரசு நினைக்கிறதா? கொஞ்சம் யோசிக்கும் திறமை உள்ளவனனுக்குக் கூட இதில் உள்ள அபத்தம் புரிந்திருக்குமே!

உண்மையில் இவர்கள் செய்ய விரும்புவது மிரட்டல் தான். அடுத்த முறை 49ஓ போட மக்கள் யோசிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடனே இந்த விசாரணையை இவர்கள் செய்வதாகத் தெரிகிறது. 49ஓ-விற்கு ஆதரவாக இணையதளங்களும், பத்திரிக்கைகளும் செய்தி வெளியிடுவதும், 24,000 பேர் துணிந்து ஓட்டுப் போட்டிருப்பதும் இவர்கள் கண்ணை உறுத்துகிறது போலும். யாருக்கு ஓட்டுப் போட்டோம் என்று நாமோ, வேறு யாருமோ வெளியில் சொல்வது சட்டப்படி தவறு. அப்படி இருக்கையில், இந்த கியூ பிராஞ் போலீஸார் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டுயது அந்தப் பட்டியலை அவர்களிடம் கொடுத்தோர் மீது தான்!
நீதிமன்றம் தேர்தல் கமிசனிடமும் க்யூ பிராஞ்ச் போலீஸிடமும் இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது. தேர்தல் கமிசனும் ‘நாங்கள் கொடுக்கவில்லை, பூத் ஏஜெண்ட்டுகளோ தேர்தல் அதிகாரிகளோ கொடுத்திருக்கலாம்’ என்று பதில் சொல்லி உள்ளது. இவர்களை நம்பித் தான் நமது ஓட்டுப் பெட்டியை ஒரு மாதத்திற்கு ஒப்படைத்துள்ளோம்!

தேர்தல் கமிசன் கொடுக்கவில்லை என்றால், கியூ பிராஞ்சிற்கு அந்தப் பட்டியலைக் கொடுத்தது யார் என்று நீதிமன்றத்தில் அவர்கள் சொல்ல வேண்டும். அதைக் கொடுத்தோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஏதோ தா.கிருட்டிணன் வழக்கு, சன் டி.வி அலுவலகம் தாக்கப்பட்ட வழக்குகளையெல்லாம் தீர விசாரித்து முடித்துவிட்டதாகவும், வேறு வேலையே இல்லாதது போன்றும் கியூ பிராஞ்ச் போலீஸ் இந்த விசாரணையில் இறங்கி இருப்பதைப் பார்த்தால் சிரிப்பதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.

மேலும் வாசிக்க... "49ஓ போட்டவர்கள் நக்ஸலைட்களா - கியூ பிராஞ்ச் போலீசின் அராஜக விசாரணை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, April 24, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_2

முந்தியது ஏனோ - என்னைச்
சுமந்ததால் தானோ - நான்
பிந்தியதும் ஏனோ - சித்தம்
கலங்கிடத் தானோ?

முடிந்தது ஏனோ - வெறுமை
புரிந்ததால் தானோ - நான்
தொடர்வதும் ஏனோ - உன் அருமை
புரிந்திடத் தானோ!


அறைக்குள் நுழைந்து லைட்டைப் போட்டோம்.

அங்கு மதன் அழுதவாறே அமர்ந்திருந்தான். 

பழனியும் சிவாவும் அதிர்ந்தனர்...

நான் அமைதியாக நின்றிருந்தேன். எனக்கு இது புதிதில்லை. மதன் ஏற்கனவே சில முறை அழுவதை நான் பார்த்திருக்கிறேன். காரணம் கேட்டால் அவன் சொல்வது இல்லை. 

ஒருநாள் என்னை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அந்த வீட்டில் நுழைகையில் முன்னறையில் அவன் அம்மா ஃபோட்டோ மாலையுடன் வரவேற்றது. நான் அதிர்ச்சியுடன் ஒன்றும் சொல்லாமல் உள்ளே நுழைந்தேன். அவன் அப்பா உள்ளிருந்து வந்து என்னை வரவேற்றார்.

“நீ தான் செங்கோவியா..நிறையத் தடவை உன்னைப் பத்திச் சொல்லி இருக்கான்..அதான் பார்ப்போம்னு உன்னைக் கூட்டிட்டு வரச் சொன்னேன். வா, உட்கார்”

நான் என்ன சொல்வதென்று தெரியாமல் புன்னகைத்தபடியே அமர்ந்தேன். 
“மதன், நீ கடைக்குப் போய் தம்பிக்கு ஏதாவது கூல்ட்ரிங்ஸ் வாங்கிட்டு வா” என்று அவனை அனுப்பி வைத்தார்.

மதன் வெளியேறியதும் “மதனுக்கு அம்மா இல்லையா?” என்று தயக்கத்துடன் கேட்டேன்.

“ஆமாம் தம்பி, அதுக்காகத் தான் உன்னை கூட்டிட்டு வரச் சொன்னேன்” என்றார். நான் குழப்பத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

“மதன் பத்தாம் வகுப்பு படிக்கும்போது திடீர்னு அவன் அம்மா ஹார்ட் அட்டாக்ல இறந்துடுச்சு. அஞ்சே நிமிசம் தான்..எல்லாம் முடிஞ்சது. கட்ந்த ரெண்டு வருசத்துல நான் ஒருவழியா மனசைத் தேத்திக்கிட்டேன். ஆனால் மதன் தான்..” என்றவாறே கண் கலங்கினார்.

“அவன் கேட்கிற காசெல்லாம் தர்றேன். வேணும்ங்கிற பொருளெல்லாம் வாங்கித் தர்றேன். ஆனாலும் அவனுக்கு இன்னும் அம்மா இறந்த துக்கம் தீரலை. தீராது தான். இருந்தாலும் இனிமே தானே அவன் வாழ்க்கையே ஆரம்பிக்குது. அவன் நிறையப் பேருகூடப் பழகணும், துக்கத்தை மறக்கணும்னு தான் அவனை ஹாஸ்டல்ல சேர்த்தேன். இங்க வரும்போதெல்லாம் உன் பேரைச் சொல்லிக்கிட்டிருப்பான். அதான் உன்னை வரவழைச்சேன். நீ தான் அவனுக்கு ஒத்தாசையா இருக்கணும். அவனைக் கொஞ்சம் பார்த்துக்கிடுவியா?”

என்னால் பேச முடியவில்லை. ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனுக்கு என்ன தர முடியும்?

நான் பிறந்த சில நிமிடங்களிலேயே தாயை இழந்தவன். (பிறகு வேறொரு நல்ல உள்ளங்களால் தத்தெடுக்கப் பட்டேன்)

தந்தையை இழந்த குடும்பம் பொருளாதாரத்தை இழக்கிறது. தாயை இழந்த குடும்பம் ஆன்மாவை இழக்கிறது. ஊமைக்காயத்தின் வலி போல் வெளித்தெரியாமல், தாயை இழந்த வீட்டில் இருள் இருந்து கொண்டே உள்ளது. எல்லாவித கொண்டாட்டங்களுக்குப் பின்னாலும் வெறுமை சிரித்துக் கொண்டு நிற்கிறது.

எனக்கு மதன் மேல் அன்பு பொங்கியது.
”நான் பாத்துக்கிறேன்ப்பா” என்றேன்.

”என்னடா? என்னாச்சு? ஏண்டா அழறே?” என்று மதனை பழனியும் சிவாவும் உழுப்பிக் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் சுய நினைவுக்கு வந்தேன்.

மதன் கண்ணீரைத் துடைக்கத் துடைக்க வழிந்து கொண்டே இருந்தது.

“எதுக்குடா அழறே..எங்க கிட்ட சொல்லேண்டா” என்று சிவா அதட்டினான். 
“பிரவ்வ்வ்” என்றவாறே அழுதான் மதன்.
“ப்ரவ்னா என்னடா?” என்று பழனி கேட்டான்.
”பிரவீணா” என்றான் மதன்.

நாங்கள் மூவரும் திடுக்கிட்டோம். 

பிரவீணா எங்கள் காலேஜில் படிக்கும் பெண். செம ஃபிகர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவள்!

(தொடரும்)
மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_2"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

37 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, April 23, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_1

ஜெனிஃபர் அவனை இறுக்கி அணைத்திருந்தாள். வேகமாக வீசிய காற்று கூட அவர்களுக்கிடையே நுழைய முடியவில்லை. அவர்களது பைக் எங்களை வேகமாகக் கடந்தது.

நாங்கள் மூவரும் ’ஆ’வென வாய் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த ரோட்டில் சென்று கொண்டிருந்த பலரும் அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள். திரும்பிப் பார்க்காமல் இருக்க, திருப்பரங்குன்றம் ஒன்றும் பெரிய நகரமல்ல. அங்கு உள்ளோருக்குத் தெரியும் நாங்கள் எந்தக் கல்லூரி மாணவர்கள் என!

அவன் தர்மா, எங்கள் சீனியர். ஜெனிஃபர் எங்களது காலேஜ் ஜூனியர். செம ஃபிகர் என்று நண்பர்களால் அழைக்கப்படுபவள். நான் அதை ஒத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் அவள் சிம்ரன் மாதிரி ஸ்லிம்மாக இருப்பாள்.

“நாம எப்படா இப்படிப் போறது” என்றேன்.

“நமக்கு அதெல்லாம் கிடைக்கவே கிடைக்காதுடா! நமக்கு விதிச்சதெல்லாம் இது தான்” என்றவாறு பழனி சுவரைக் காட்டினான்.

அங்கு ஷகீலாவின் ‘இளமை இதோ! இதோ!’ போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. நான் சிரித்தவாறே சிவாவைப் பார்த்தேன். பார்வையிலேயே அந்தப் படத்துக்குப் போவதென தீர்மானம் நிறைவேறியது. திரும்பி தியேட்டரைப் பார்த்து நடக்க ஆரம்பித்தோம். 

பழனி “டேய், மதனைக் கூட்டி வந்திடலாமா”- என்று கேட்டான்.
“அவன் வர மாட்டாண்டா. ஒருநாள் சீன் படச் சிடி பார்க்கக் கூப்பிட்டதுக்கே முகத்தைச் சுழிச்சான், அவன் தியேட்டருக்கா வரப் போறான்?” என்றான் சிவா. 

பேசியபடியே தியேட்டருக்குள் நுழைந்தோம். ஷகீலா படம் வழக்கம் போல் ‘இருக்கு..ஆனா இல்லை’ தான். பழனி தான் கடுப்பாகி விட்டான்.

“ச்சே, இனிமே இவ படத்துக்கு வரவே கூடாதுடா” என்றான்.
“போன தடவையும் இதே தான் சொன்னே” என்று நொந்து போன குரலில் சிவா பதில் சொன்னான்.
“எதுக்கு இப்படி அரைகுறையாக் காட்டணும், இதுக்கு ஒழுங்கா மூடிக்கிட்டே நடிக்கலாமே?” என்றான் பழனி.

நான் பொறுமையாக அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்:”அவ என்ன வேணும்னா அரைகுறையாக் காட்டுறா..பாவம், அவ்வளவு தான் மறைக்க முடியுது”

இனிமே ஷகீலா படத்துக்கே போவதில்லை என்று வழக்கம்போல் பிரசவ வைராக்கியத்துடன் முடிவு செய்தபடியே ஹாஸ்டலுக்குத் திரும்பினோம்.

அறைக்குள் நுழைந்து லைட்டைப் போட்டோம்.

அங்கு மதன் அழுதவாறே அமர்ந்திருந்தான். 

பழனியும் சிவாவும் அதிர்ந்தனர். 

மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_1"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

30 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, April 22, 2011

கோ - திரை விமர்சனம்

கனாக் கண்டேன், அயன் என வித்தியாசமான கதைக்களனைத் தேர்ந்தெடுக்கும் கே.வி.ஆனந்த், இந்தப் படத்தில் தேர்ந்தெடுத்து இருப்பது பத்திரிக்கைத் துறையை. ஆனந்த்-சுபாவின் சொந்தப் பத்திரிக்கை அனுபவங்களை வைத்தே, இந்தக் கதையை உருவாக்கி உள்ளார்கள். நான் பத்திரிக்கைத் துறையுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பில் இருப்பவன் என்ற முறையில் இந்தப் படத்தினை ரொம்பவே எதிர்பார்த்திருந்தேன். (என்ன தொடர்பா?..சின்ன வயசுல இருந்தே குமுதம், விகடன் படிக்கிறேங்க..அது போதாதா?) கதை என்னன்னா.......
மலைமுழுங்கி மகாதேவனாக ஒரு முதல்வர்(பிரகாஷ் ராஜ்), மலையோடு அந்த மலைமுழுங்கியையும் விழுங்கக் காத்திருக்கும் ஒரு எதிர்க்க்கட்சித் தலைவர்(கோட்டா சீனிவாச ராவ்), மாற்று சக்தியாக படித்த இளைஞர்களின் சிறகுகள் அமைப்பு(அஜ்மல்) என மும்முனைப் போட்டியுடன் தேர்தல் வருகிறது. நம்மைப் போன்றே இருதரப்பின் மீதும் அதிருப்தியில் இருக்கும் தின அஞ்சல் நிருபர்களான கார்த்திகா-பியாவும், ஃபோட்டோகிராஃபரான ஜீவாவும் சிறகுகள் அமைப்பின் சேவையால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் பற்றிய செய்தியை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றனர். அதனால் மக்கள் மத்தியில் சிறகுகள் அமைப்புக்கு ஆதரவு பெருகிறது. 

அஜ்மலில் வளர்ச்சி ஆளும் & எதிர்க்கட்சிகளின் கண்ணை உறுத்துகிறது. அடுத்து நடக்கும் அஜ்மலின் பிரச்சாரக் கூட்டத்தில் வெடிகுண்டு வெடிக்கிறது. பியாவும், சிறகுகள் அமைப்பின் சில உறுப்பினர்களும் அந்த வெடிவிபத்தில் உயிர் இழக்கின்றனர். ஜீவாவும் அஜ்மலும் கல்லூரி நண்பர்கள் என்பதும் திட்டமிட்டே இந்த இயக்கத்தைக் கட்டமைத்ததும் தெரிய வருகிறது. வெடிவிபத்திற்குப் பின் ஜீவாவும், அஜ்மலும் என்ன செய்தனர், வெடிவிபத்திற்குக் காரணம் யார், எதனால் அது நிகழ்ந்தது என்பதை பரபரவென ஸ்பீடான திரைக்கதையுடன் சொல்லி இருக்கின்றனர்.
ஜீவாவுக்கு இந்தப் படம் கமர்சியலாக முக்கியமான படம் தான். விளையாட்டுத் தனமான இளைஞனாக பாத்திரத்துடன் பொருந்திப் போகிறார். முதல் காட்சியிலேயே பைக்கில் காட்டும் சாகசம் கலக்கல். டைரக்டர்’ஸ் ஆக்டராக ஜீவா தன்னை நிரூபிக்கிறார். காதல், ஜாலி, ஆக்சன் என எல்லாவித நடிப்பையும் அனாயசமாக வெளிப்படுத்துகிறார். கே.வி.ஆனந்த் ஜீவாவை அழகாகக் காட்டி இருக்கிறார். கார்த்திகா சின்சியர் சிகாமணியாக வருகிறார். வில் போன்ற புருவமும், காந்தக் கண்களும் மட்டுமே தேறுகிறது. நடிப்பும் வருகிறது.மற்றபடி, பொண்ணு சுமார் தான். என்ன இருந்தாலும் அவங்கம்மா மாதிரி வருமா...

படத்தில் கலக்கியிருப்பது பியா தான். செம ஜாலியான கேரக்டரைசேசன், நம்ம நானா யோசிச்சேன் பகுதி மாதிரி! கேஷூவலாக ‘நான் அயிட்டம் ஆனா, எனக்கு என்ன ரேட்?’ என்பதும், ஜீவாவுடன் காட்டும் அன்னியோன்யமும், சேலை கட்டிவிட்டு நடந்து வரும் ஸ்டைலும் அட..அட.! ஒரு ஃப்ரெண்ட்லி நேச்சர் கேரக்டர் என்பதை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்.எல்லாப் படத்திலும்/ஸ்டில்லிலும் பியாவுக்கு ஒரு டைட் டவுசரையே மாட்டி விடுவார்கள். நல்லவேளையாக இதில் வேறு நல்ல காஸ்ட்யூம்களைத் தந்திருக்கிறார்கள். ஜீவா கார்த்திகாவைக் காதலிப்பதை அறியும் ஹோட்டல் சீனில் கலக்கி விடுகிறார். படத்தில் காமெடி இல்லாத குறையைத் தீர்ப்பது பியா தான். செம ஜாலிப் பட்டாசு!
அஜ்மலும் கனமான பாத்திரத்தை ஏற்று, செவ்வனே செய்திருக்கிறார்.கோட்டா சீனிவாசராவ், பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் என சரியான பாத்திரத் தேர்வுகள். 
படத்திற்குப் பிளஸ் பாயிண்ட் திரைக்கதையும், ஒளிப்பதிவும் தான். சுபாவும் .ரிச்சர்ட்.எம்.நாதனும் படத்தைத் தூண்போல் தாங்கி உள்ளனர். பீட்ட ஹெயின் கிளைமாக்ஸ் ஃபைட் சீன் தூள்!

ஹாரிஸ் ஜெயராஜ் இசை பற்றி என்ன சொல்ல..வரவர மாமியார் கழுதைபோல ஆனாளாம்ங்கிற மாதிரி, இந்தாளு இப்படி ஆகிட்டாரே. ’என்னமோ ஏதோ’ மட்டுமே தேறுகிறது. மற்றபடி, எல்லாப் பாட்டுமே எங்கேயோ கேட்ட ஃபீலிங் தான். ஒரு இடத்தில் பிண்ணனி இசையில் டைட்டானிக் ஃபேமஸ் க்ளிப்பையே ஸ்லோவா இழுத்துப் போட்டிருக்கார். அவ்வளவு தானா..சரக்கு காலியான்னு தெரியலை! 

முதல் பாதியில் ஜாலியாகச் செல்லும் படம், இரண்டாம் பாதியில் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்கிறது. எடுத்துக்கொண்டிருக்கும் கதைக்களனும், இடங்களும் தமிழ்சினிமாவில் இவ்வளவு இயல்பாகக் காட்டியதே இல்லை. ஒரே ஒரு பாடல் தேவையில்லாத, பொருந்தாத இடத்தில் ’பணத்துக்காக எதுவும் செய்வாங்களா?’ என அரசியல்வாதிகளைப் பற்றி கார்த்திகா பேசும்போது வருகிறது. அதை நீக்கிவிட்டாலும் நல்லதே!
டைட்டில் சீன், வெடிகுண்டு வெடிக்கும் சீன், கிளைமாக்ஸ் ஃபைட் சீன் போன்றவற்றில் கே.வி.ஆனந்தின் டச் தெரிகிறது. சிறுசிறு குறைகள் இருப்பினும், தரமான ஜாலியான, அதே நேரத்தில் விறுவிறுப்பான கமர்சியல் படம் கொடுத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். மொத்த டீமிற்கும் பாராட்டுகள்.

கோ - விறுவிறுப்பான சுபா நாவல்!

மேலும் வாசிக்க... "கோ - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

58 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, April 21, 2011

காதல் கவிதை முதல் கண்றாவிக் கவிதை வரை..எழுதுவது எப்படி..(கண்டிப்பாக 18+)

டிஸ்கி: குழந்தைகளும் பெண்களும் தயவு செய்து இந்தப் பதிவைத் தவிர்க்கவும்! அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி!


டிஸ்கி-2: இது ஒரு நகைச்சுவைப் பதிவு. உண்மையான கவிஞர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!

வருங்காலக் கவிஞர்களே!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

கவிதை என்பது படிப்போர்க்கு ஒரு கலவையான உணர்ச்சியைக் கொடுக்கவேண்டும். சரி.. கலவையான உணர்ச்சி என்பது என்ன?..உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் ப்ரவுசிங் பண்ணும்போது, ஒரு டேப்பில் ‘சக்தி விகடனையும்’ ஒரு டேப்பில் ‘உண்மைத் தமிழனையும்’ மற்றொரு டேப்பில் ‘You tube-mallu hot’-ஐயும் திறந்து வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி பார்க்கும்போது தோன்றும் உணர்ச்சி ‘கலவையான உணர்ச்சி’க்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

இப்போது கவிதைக்கும் வாக்கியத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம். வாக்கியம் என்பது வார்த்தைகளை தொடர்ந்து எழுதி முற்றுப்புள்ளியுடன் முடிப்பது.
கவிதை
என்பது
வார்த்தைகளை
அல்லது
சில ஒத்த  விஷயங்களை
வரிக்கு
ஒன்று
என
ஒவ்வொன்றாக
எழுதி
ஆச்சரியக் குறியுடன் முடிப்பது!

கவிதைகளை காதல் கவிதைகள், புரட்சிக் கவிதைகள், பின் நவீனத்துவக் கவிதைகள், உடனடிக் கவிதைகள் எனப் பிரிக்கலாம். இப்போது ஒவ்வொன்றையும் எப்படி எழுதுவது எனப் பார்ப்போம்.

1.காதல் கவிதைகள்:
இதை எழுத ஒருதலைக்காதலாவது நீங்கள் செய்திருக்க வேண்டும். இதை எழுதுவது மிக எளிது. பார்த்தும் என்ன தோன்றுகிறதோ அது எவ்வளவு கேனத்தனமாக இருந்தாலும் அப்படியே எழுதிவிட வேண்டும். இவை பின்னால் பின் நவீனத்துவக் கவிதைகள் எழுத உபயோகப் படும். உதாரணமாக, என் முன்னாள் காதலி பெயரில் நான் எழுதிய கவிதை கீழே:

குஷ்பூ
நீயே ஒரு
பூ.
உனக்கெதற்கு
தலையில்
பூ!(அடடே..ஆச்சரியக் குறி)

2. புரட்சிக் கவிதைகள்:
இவைகள் ஜாதி, பொருளாதார வர்க்க பேதம், பகுத்தறிவு போன்றவை பற்றி எழுதப்படுபவை. பயப்பட வேண்டாம். நீங்கள் இந்தியா போன்ற தேசத்தில் இருப்பவர் என்றால், உடனே கதவைத் திறந்து, உங்கள் தெருமுனை வரை காலாற நடந்துவிட்டு வாருங்கள். இப்போது நீங்கள் பார்த்தவற்றை வசதி அடிப்படையில் ஒன்றன்பின் ஒன்றாக எழுதினால் கவிதை ரெடி:

நவீன இந்தியா
பளபளக்கும் பங்களாக்கள்
பாய்ந்து செல்லும் பென்ஸ் கார்கள்
ஜீன்ஸ் அணிந்த இளைஞர் கூட்டம்
குப்பைத்தொட்டியைக் கிளறும் பிச்சைக்காரன்! (உச்..உச்..உச்)

பகுத்தறிவுக் கவிதைகளை எழுதும்போது உங்கள் வீட்டுப் பெண்கள், வீட்டில் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அவர்களை அந்த நேரத்தில் கோவிலுக்கு அனுப்பிவிடுவது இன்னும் நல்லது!

3. பின் நவீனத்துவக் கவிதைகள்:
இவை அதிரடிக் கவிதைகள், உணர்ச்சிக் கவிதைகள் என பல பெயர்களில் அழைக்கப் படுகின்றன. இப்போது இதை எப்படி எழுதுவதெனப் பார்ப்போம்.

நீங்கள் இளம்வயதில் காதலித்த, உங்களுக்கு பல்பு கொடுத்த பெண்ணை நினைத்துக்கொள்ளுங்கள். இப்போதுள்ள கடுப்புடன் அல்ல, அப்போதிருந்த காதலுடன் நினைத்துக் கொள்ளுங்கள். அப்படித் தோன்றும் காதல் கவிதையை குறித்துக் கொள்ளுங்கள்..இப்படி:

பார்த்ததும் புன்னகைத்த அவளை
உள்ளத்தைத் திருடிய அவளை
நினைவிலேயே வாழும் அவளை
நினைத்து நினைத்து அழுகின்றேன்!(ரொம்ப நல்லது)

இப்போது ஏதாவது பலான பட டிவிடியை/வெப் சைட்டை திறந்துகொள்ளுங்கள். உள்ளங்கால் முதல் உச்சி வரை மோந்து பார்க்கும் மலையாளைப் படங்கள் வேலைக்காகாது. நல்ல Hardcore படமாகத் தேர்ந்தெடுங்கள். அதில் வரும் ஹீரோ நீங்கள்தான் என வழக்கம்போல் நினைத்துக் கொண்டு பார்த்ததை எழுதுங்கள்:

ஆவேசத்துடன் நெருங்கி
உடையைப் பறித்து
நினைத்த படியெல்லாம் முயங்கி
மூச்சு வாங்கினேன்.

இப்போதான் மெயின் மிக்சிங்..நம்ம ஃபோட்டோஷாப் வேலன் சார் மாதிரி இந்த 2 கவிதைகளையும் கச்சிதமாகச் சேர்த்தீர்கள் என்றால் பின் நவீனத்துவக் கவிதை ரெடி :

கரையாத காமம்
பார்த்ததும் புன்னகைத்த அவளை
ஆவேசத்துடன் நெருங்கி
உள்ளத்தைத் திருடிய அவளின்
உடையைப் பறித்து
நினைவிலேயே வாழும் அவளுடன்
நினைத்த படியெல்லாம் முயங்கி
மூச்சு வாங்க அழுகின்றேன்!

ஏதோவொரு புரிந்தும் புரியாதது போன்ற எஃபக்ட் வருகிறதல்லவா..இதே போன்று வேறு வேறு பெண்கள் மற்றும் படங்களைப் பார்த்து எழுதி தொடர்ந்து பயிற்சி செய்தால் கவிதை வசப்படும்.

எச்சரிக்கை: நீங்கள் ஆண் கவிஞர் என்பதால் நேரடிக் கெட்டவார்த்தை எழுத அனுமதியில்லை

4. உடனடிக் கவிதைகள்:
இவை தீபாவளி-பொங்கல் போன்ற பண்டிகைகளின்போதோ, பூகம்பம், சுனாமி வரும்போதோ, பைலட் விமானத்தை நட்டுக்குத்தலாய் இறக்கும்போதோ எழுதப்படுபவை. முதலிலேயே இவற்றை எதிர்பார்த்து எழுதி, கேட்ட உடன் சொல்ல நீங்கள் தயாராய் இருக்க வேண்டும். 


உதாரணமாக என் அலுவலக நண்பர் ஒருவர் சுனாமி பற்றி கவிதை சொல்லுமாறு என்னிடம் ஒருநாள் கேட்டார். நானும் ஒரு ‘சுனாமிக் கவிதை’ சொன்னேன். அதன்பிறகு அவர் என்னிடம் பேசவேயில்லை. அந்தக் கவிதையை இங்கு போடலாமா-ன்னு யோசிச்சேன். அப்புறம் நீங்களும் கடுப்பாகிட்டா, என் கடை என்னாகிறது? அதனால தான் அதை எழுதலை!

விடாமுயற்சியோடு, தொடர்ந்து எழுதிப் பழகுங்கள், கவிதை வசப்படும்! நன்றி!வேண்டுகோள்: பின்னூட்டத்தில் கவிதை எழுதி பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.

மேலும் வாசிக்க... "காதல் கவிதை முதல் கண்றாவிக் கவிதை வரை..எழுதுவது எப்படி..(கண்டிப்பாக 18+)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

47 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, April 20, 2011

செங்கோவி பெயர்க் காரணம் - தொடர்பதிவு

பதிவர்களில் யாரோ ஒரு புண்ணியவான்/புண்ணியவதி, பதிவர்கள் தங்கள் பெயர்க்காரணம் பற்றி ஒரு புராணம் பாட வேண்டும் என்று தொடர்பதிவை ஆரம்பித்து விட்டார். கடைசியாக அந்தத் தொடர் பதிவில் எழுதிய பிரபலப் பதிவர் கொட்டைப்புளி, என்னைத் தொடரும்படி அன்புடன் கேட்டுக் கொண்டார். நான் அன்புக்கு அடிமை என்பதால் (ச்சே..ச்சே..தங்கமணி பேரு அன்பு இல்லீங்க!) எழுத ஒப்புக்கொண்டேன். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு..

’ஒவ்வொரு மனிதனும் உடலில் மச்சத்தைச் சுமந்துகொண்டு திரிவது போன்றே, சொந்த ஊரின் நினைவுகளையும் சுமந்து கொண்டே திரிகின்றான்’ என்று எஸ்.ராமகிருஷ்ணன் எங்கோ எழுதி இருந்தார். 


அந்த மனிதர்களில் ஒருவன் நான்.நான் முதல் முதலாக என் சொந்த ஊரை விட்டு வெளியேறியது எஞ்சினியரிங் காலேஜில் சேருவதற்காக மதுரை வந்த போது தான். அந்த நேரத்தில் மதுரையே அந்நிய மண் போல் தெரிந்தது. 


அப்போது தான் (1997ல்) இணையம் பிரபலமாகிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஒரு மின்னஞ்சல் முகவரி ஆரம்பிப்பது என்று நண்பர்கள் முடிவு செய்தனர். அப்போது தான் என்ன பெயர் வைப்பது என்று குழப்பம் வந்தது.

சொந்த மண்ணை விட்டுப் பிரிந்து இருந்த எனக்கு என் ஊரின் பெயரைத் தவிர வேறெதும் நினைவில் இல்லை. நான் பிறந்த ஊர் கோவில்பட்டி. எங்களது பூர்வீக ஊர் கோவில்பட்டி அருகில் உள்ள செண்பகப்பேரி(செண்பகப்பூ ஏரி!) என்ற கிராமம். எனவே மின்னஞ்சலை செண்-கோவி (SHEN-KOVI) என்று வைத்தேன். 


நெருங்கிய நண்பர்கள் செண்கோவி என்று கூப்பிட ஆரம்பித்து, செங்கோவி என்று நிலைத்தது. செங்கோவி என்று நண்பர்கள் அழைக்கும்போதெல்லாம் எங்கள் ஊர் செம்மண் வாசம் ஞாபகம் வரும்.(இதை யாராவது நக்கல் பண்ணீங்க, பிச்சுப்புடுவேன் பிச்சு!)

மரியாதைக்குரிய பதிவர்(!) சிரிப்பு போலீஸ் பிறந்த ஊரும் கோவில்பட்டி தான். அவருக்கு நானும் அவர் ஊர் தான் என்று இப்போது வரை தெரியாது. அது தெரியாமலேயே வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தினார். அதுக்குப் பேரு தான் உள்ளுணர்வோ..இல்லே ஊருணர்வோ? 

மேலும் வினையூக்கி என்ற பெயரில் எழுதி வரும் மூத்த பதிவர் செல்வா, எனது கல்லூரி நண்பர். கல்லூரிக் காலத்தில் என்னுடன் தீவிர இலக்கிய/அரசியல்  விவாதம் புரிபவர். படிப்பு முடிந்த பின் பத்து வருடங்களாக எங்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை. சில வருடங்களுக்கு முன் ஏதோவொரு பதிவர் சந்திப்புப் புகைப்படத்தில் அவரைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். 


ஆனாலும் என்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தொடர்ந்து அவரது பதிவைப் படிப்பதும் வேறு பெயர்களில் பின்னூட்டம் இடுவதுமாய் இருந்தேன். நேற்று தான் அவருக்கு மின்னஞ்சலில் என் ப்ளாக் அட்ரஸை அனுப்பி வைத்தேன். இன்ப அதிர்ச்சி என்றால் என்ன என்று நேற்று அவர் உணர்ந்திருப்பார். அந்தளவிற்கு கல்லுளிமங்கன் நான்! சும்மா ஜாலிக்குத் தான் இதைச் சொல்லவில்லை. இதிலென்னய்யா ஜாலி-ன்னு கேட்கக்கூடாது!

இது தான் எனது பெயர் உருவான வரலாறு!..இந்த தொடர் பதிவைத் தொடர நான் அழைப்பது:

டிஸ்கி:என்னைத் தொடர் பதிவிற்கு அழைத்த பிரபலப் பதிவர் கொட்டைப்புளி’-ன்னு சும்மா தான் எழுதினேன். அப்படி ஒரு ஆளே கிடையாது. பின்னே என்னங்க, யாருமே என்னை மனுசனா மதிச்சு தொடர்பதிவுக்குக் கூப்பிடலை. அதான் காண்டாயிட்டேன்.

இனிமேலாவது ஏதாவது தொடர்பதிவு போச்சுன்னா, என்னை அம்போன்னு விட்டுடாமக் கூப்பிடுங்க, இல்லே அடிக்கடி பிரபலப் பதிவர் கொட்டைப்புளியை நீங்க சந்திக்க வேண்டியிருக்கும்!

மேலும் வாசிக்க... "செங்கோவி பெயர்க் காரணம் - தொடர்பதிவு"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

65 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, April 15, 2011

வெந்நீர் வைப்பது எப்படி? (தேர்தல் ஸ்பெஷல்)

நாம் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் இந்த சமூகத்திற்கு ஏதாவதொரு வகையில் பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு நான் பதிவெழுதி வருவது நீங்கள் அறிந்ததே. அந்த வகையில் இன்று வெந்நீர் வைப்பது எப்படி என்று சொல்கிறேன். ஆரம்பிப்போமா..

முதல்ல இப்போ என்னாத்துக்கு வெண்ணி-ன்னு சொல்றேன். தேர்தல் பிரச்சாரம்ங்கிற பேர்ல இந்த அரசியல்வியாதிங்க அடிச்ச கூத்துல எல்லாரும் கிர்ரடிச்சுப் போயி இருப்பீங்க. அதனால இப்போ ஒரு எழுமிச்சம்பழத்தைத் தலையில தேச்சுக்கிட்டு, வெண்ணியை ஊத்துனா தெளிவாயிடும். அதனால இந்தப் பதிவை தேர்தல் ஸ்பெஷல்-னு வச்சுக்கோங்களேன்.

வெண்ணி வைக்க முதல்ல தேவை தண்ணி தான். தண்ணி-ன்னா கேப்டன் தண்ணி இல்லை, பச்சத் தண்ணி. அப்புறம் ஒரு பெரிய பாத்திரம் தேவை. பெரிய்ய பாத்திரம்னா ‘குஷி’ல மும்தாஜ் ஏத்துக்கிட்டாங்களே, அது மாதிரி பாத்திரம்னு நினைச்சுக்காதீங்க. நான் சொல்றது ஈயம் பித்தளைப் பாத்திரம்..அதாவது சட்டி! அடுத்துத் தேவை ஒரு அடுப்பு..அடுப்பு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்..
சாரிங்க, அடுப்பு படம் எவ்வளவு தேடியும் கிடைக்கலை..அதனால தான் இந்த இடுப்பு படத்தைப் போட்டிருக்கேன். ஒரு எழுத்து தானே வித்தியாசம்..அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க பாஸ்.

சரி, இப்போ பாத்திரத்துல தண்ணியைப் பிடிச்சிக்கோங்க. இப்போ வெயில் காலம்கிறதால அந்த தண்ணி ஒருவேளை சூடா இருக்கலாம். நமக்குத் தேவை பச்சத்தண்ணி. அதனால அதை முதல்ல ஆற வைக்கணும். அதனால அந்த தண்ணிப் பாத்திரத்தை உங்க வீட்டுல நடு ஹால்ல வச்சுட்டு, ஃபேனை ஹை-ஸ்பீடுல போடுங்க. 

இந்த விஷயத்தை ரொம்ப ஜாக்கிரதையாப் பண்ணனும். நடு ஹால்ல அந்தத் தண்ணி கொட்டி, உங்க சொந்தக்காரங்க வழுக்கி விழுந்துட்டா, அவங்க பிட்டாணி நகண்டிடும். அப்படியில்லாம உங்க தங்கமணியோட சொந்தக்காரங்க வழுக்கி விழுந்துட்டா, உங்க பிட்டாணியும் சேர்த்து நகட்டப்படும். அதனால ஜாக்கிரதையா தண்ணியை ஆற வைங்க.

ஓ.கே.  இப்போ அடுப்பைப் பத்த வைங்க. அடுத்து அடுப்பு மேல சட்டியைத் தூக்கி வைங்க. கரெக்டாப் படிங்க மக்கா..சட்டியை..ஜட்டியை இல்லை..அடுப்பு மேல ஜட்டியைப் போட்டா எரிஞ்சு போயிடும். (’போனாப் போவுது’ என்பது போன்ற ஆபாசப் பின்னூட்டங்களைத் தவிர்க்கவும்!). சரி, ஹீட் ட்ரான்ஸ்ஃபெர்-ங்கிற வெப்பக் கடத்தல் 3 வழில நடக்கும். ஒன்னு, டைரக்ட் காண்டாக்-னால..தீ மேல சட்டி உட்கார்ந்திருக்குல்ல..அது மாதிரி..இதுக்குப் பேரு Conduction!

இப்போ சட்டி, ஹீட்டை தண்ணிக்கு கடத்தும். அதனால அடில இருக்குற தண்ணி சூடாகும். அதனால அதனோட அடர்த்தி(Density) குறைஞ்சுடும். மேல இருக்குற வெயிட்டான தண்ணி, கீழ இறங்கும், கீழ இருக்குற சூடான தண்ணி மேல ஏறும். இப்படியே தொடர்ந்து, தண்ணியோட டெம்பரேச்சர் 100 டிகிரி செல்சியஸ் ஆனதும் தண்ணி ஆவியாக ஆரம்பிக்கும். இந்த மொத்த பிராசஸ்க்குப் பேரு Convection! இன்னொரு டைப் ரேடியேசன், சூரிய ஒளி மாதிரி..அது எதுக்கு நமக்கு..வெண்ணி வைக்க முத ரெண்டும் போதும்! 
இப்போ தொட்டுப் பாருங்க..யாரையா?..தண்ணியைத் தாங்க..இப்போ சூடு போதுமான அளவுக்கு இருக்கான்னு பாருங்க. ஓகே-ன்னா அடுப்பை அணைங்க..ஆமாங்க, அடுப்பைத் தாங்க! இப்போ நீங்க என்ன செய்யணும்னா ’ஏய்’ நமீதா மாதிரி, ’மேரா நாம் ஜோக்கர்’ பத்மினி மாதிரி, ’அந்த ஏழு நாட்கள்’ அம்பிகா மாதிரி, ’துரோணா’ ப்ரியாமணி மாதிரி, ’பூவிலங்கு’ குயிலி மாதிரி ’பாத்ரூம்’ த்ரிஷா மாதிரி குளிக்கணும். 

என்ன மக்கா, இப்போ எப்படி வெந்நீர் வைக்கணும்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா..ஏதாவது சந்தேகம் இருந்தா பின்னூட்டத்தில் தயங்காமல் கேட்கவும்.

குளித்து வாழ வேண்டும் - பிறர்
பார்க்கக் குளித்திடாதே!

மேலும் வாசிக்க... "வெந்நீர் வைப்பது எப்படி? (தேர்தல் ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

46 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, April 14, 2011

தமிழ்ப்புத்தாண்டும் ராஜபாளையம் அய்யனார் சாமியும்

ஒவ்வொரு வருடமும் எங்களுக்கு சித்திரை ஒன்றாம் தேதி விஷேசமானது. எங்களுக்கு என்றால், எங்கள் வம்சத்தைச் சேர்ந்த நூறு குடும்பங்களுக்கு! காலம் காலமாக, எங்கள் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்தே சித்திரை ஒன்றாம் தேதியன்று எங்கள் குலதெய்வம் அய்யனார் சாமியைத் தரிசித்து புத்தாண்டை ஆரம்பிப்பது எங்கள் குல வழக்கம். 

எங்கள் குல தெய்வம் அய்யனார், ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் வீற்றிருக்கிறார். இந்தப் பகுதி இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பாலாறும் நீராறும் ஒன்றாகச் சேரும் இடத்தில், அய்யனார் கோவில் அமைந்துள்ளது. 

வருடத்தின் மற்ற வாரங்களில் புதன் மற்றும் சனிக்கிழமை மட்டுமே இந்தக் கோவில் திறந்திருக்கும். அந்த நேரங்களில் சென்றால், ஏகாந்தச் சூழலில் அய்யனார் ஆற்றில் குளித்துவிட்டு, அமைதியாக அய்யனாரைத் தரிசித்து மகிழ முடியும். புத்தாண்டு அன்று கூட்ட்ம் நெரியும். பொதுவாக நான் அதிகாலை ஐந்து மணிக்கே அங்கு சென்றுவிடுவது வழக்கம். அப்போது தான் மனதார அய்யனாரைத் தரிசிக்க முடியும்.

அய்யனார் சாமி இங்கு வலப்பக்கம் பூர்ணாவும் இடப்பக்கம் புஷ்கலாவும் வீற்றிருக்க, தம்பதி சமேதராகக் காட்சி தருகிறார். அவர்கள் மட்டுமல்லாது, இங்கு வனகாளி,வனலிங்கம், தலைமலைசுவாமி, பெருமாள்-லட்சுமி, மாடன்-மாடத்தி, ரக்காச்சி அம்மன், வனப்பேச்சியம்மன், கருப்பசாமி, தர்மராஜர், சப்தகன்னிமார் ஆகியோரும் காவல் தெய்வமான அய்யனாருக்கே காவல் தெய்வமாக சின்ன ஓட்டக்காரனும் பெரிய ஓட்டக்காரனும் அருள்பாலிக்கிறார்கள்.

இந்தியாவில் எங்கு இருந்தாலும் புத்தாண்டு அன்று அனைவரும் குடும்பத்துடன் இங்கு வந்து சேர்வர். பெரும்பாலும் அனைத்துக் குடும்பங்களும் முதல் நாள் இரவில் எங்கள் கிராமத்தில் கூடும். பிறகு அதிகாலையில் அனைவரும் ஒன்றாக வேன், பஸ், லாரி போன்றவற்றில் கிளம்புவோம். கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, இருவேளை கட்டுச் சோற்று உணவையும் முடித்து விட்டு, மாலை தான் அங்கிருந்து திரும்புவோம். 

ஒருவருக்கொருவர் சண்டையிட்ட குடும்பங்கள் கூட, அந்த ஒருநாளில் ஒரே இடத்தில் கூடி இருப்பதால் பகை மறந்து சமாதானம் ஆவர். ஒருவேளை அதற்காகவும், சொந்தம் விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காகவும் தான் புத்தாண்டு அன்று இங்கு கூடும் வழக்கத்தை ஏற்படுத்தினர் போலும். இந்த வழக்கம் எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனால் எங்கள் தாத்தாவின் தாத்தாவும் இதே போன்று இங்கு வந்து குலதெய்வத்தை வழிபட்டு விட்டே, புத்தாண்டைத் துவங்கியதாய் அறிகிறோம்.


காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்
பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான் 

- என்று கந்த புராணத்தில் சாத்தா படலத்தில் சிறப்பித்துப் பாடப்பெற்ற கடவுள், இந்த தம்பதி சமேத அய்யனார். நீங்கள் ராஜபாளையம் அருகில் இருந்தால் ஒருமுறை இயற்கை வனப்பு மிகுந்த அய்யனார் கோவிலுக்குச் சென்று அய்யனைத் தரிசித்துவிட்டு வாருங்கள்.

இந்தப் புத்தாண்டில் அய்யனாரப்பனும் முருகனும் உங்களுக்கு எல்லா வளங்களையும் தர அருள்புரியட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

தண்டாமரை முகமும் மலர்க்கண்களும் தன் கரத்தே
செண்டாயுதமும் தரித்து எமையாளும் சிவக்கொழுந்தைக்
கண்டேன் இரண்டு கரங்கூப்பினேன் வினைக் கட்டறுத்துக்
கொண்டேன் அழியாப் பெருவாழ்வு தான்வந்து கூடியதே!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!


நன்றி: பதிவில் உள்ள புகைப்படங்கள் நந்தகுமார் எனும் அன்பரின் பிகாசா தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்!

மேலும் வாசிக்க... "தமிழ்ப்புத்தாண்டும் ராஜபாளையம் அய்யனார் சாமியும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

37 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, April 12, 2011

ஓய்ந்தது பிரச்சாரம்..ஒழியட்டும் காங்கிரஸ் பிசாசுகள்!

கடந்த இரு வாரங்களாக நம்மைத் திணறத் திணற அடித்த தேர்தல் பிரச்சாரம் ஒருவழியாக ஓய்ந்து விட்டது. இரு கூட்டணிகளும் தங்கள் தரப்பை மக்கள் முன் வைத்துள்ளன.  யாரை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது என்பதில் நம்மிடையே குழப்பங்கள் இருந்தாலும், இந்தத் தேர்தலில் நம் ரத்தத்தைக் குடித்த காங்கிரஸ் பிசாசுகள் ஒழியவேண்டும் என்பதில் குழப்பம் வேண்டாம். 
மீனவர் பிரச்சினையில் இணையம் முதல் தெருமுனை வரை எல்லாப் போராட்டங்களும் நடத்தியாகி விட்டது. இதோ, மீண்டும் நான்கு மீனவர்களைக் காணவில்லை. ஒருவரின் சடலம் தாக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த அன்னையும் பிள்ளையும் இதுபற்றி மூச்சு விடவில்லை. ஒரு பெரிய ஜனநாயக நாட்டுக் குடிமக்களை, ஒரு சிறிய சர்வாதிகார நாடு தொடர்ந்து தாக்கிக் கொலை செய்வதும், அதைக் கண்டிக்கக்கூட வக்கற்ற நிலையில் மத்திய அரசு இருப்பதும் வெட்கக்கேடு.

ராஜீவ் காந்தி என்ற ஒரு மனிதர் கொலை செய்யப்பட்டதற்கே பதறினோம். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கே வாக்களித்து நம் அனுதாபத்தை வெளிப்படுத்தினோம். ஆனால், இப்போது 540க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இழந்துள்ளோம். சிறு சலனம் கூட அவர்களிடமிருந்து வரவில்லை.

ராஜீவ் மரணச் செய்தி கேட்டதும், தமிழகமே பதறியது. எனக்கு இப்போதும் அந்த இரவு ஞாபகம் உள்ளது. அந்தக் கொலைக்கு பின்னர் காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், பெருவாரியான தமிழர்கள் அப்போது மிகவும் வருத்தப்பட்டார்கள் என்பதே உண்மை. அதனாலேயே அப்போதைய அதிமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் வெற்றி வாகை சூடியது. உங்கள் வீட்டில் விழுந்த இழவிற்குக் கண்ணீர் வடித்தோமே, ஆறுதலாய் இருக்கட்டுமென அரியணையில் ஏற்றினோமே, அதற்கு நீங்கள் காட்டும் நன்றியா இது? எங்கள் வீட்டில் தொடர்ந்து விழும் இழவுகளின் ஒப்பாரிச் சத்தம் எப்படி உங்களுக்குக் கேட்க மறுக்கிறது?
மனசாட்சி என்ற ஒன்று இல்லாத அரசியல்வாதிகளைக் கண்டிருக்கிறோம். இப்போது தான் மனது என்ற ஒன்றே இல்லாத அரசியல்வாதிகளைப் பார்க்கின்றோம். எமது ஈழச் சொந்தங்களுக்காகப் பேசினால், அது அடுத்த நாட்டுப் பிரச்சினை என்று எங்கள் வாயை அடைப்பீர்கள். தமிழக மீனவனுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்? 

எம்மைப் பற்றிய எவ்வளவு கேவலமான மதிப்பீடு இருந்தால், இங்கே வெட்கமின்றி வாக்குக் கேட்டு வருவீர்கள்? பணத்தை விட்டெறிந்தால் பீ தின்னும் சமூகம் என்று முடிவே செய்து விட்டார்களா? சொந்த ஜாதிக்காரன் நின்றால், ஜாதிப்பாசத்தில் ஆதரித்து விடுவோம் என்ற நம்பிக்கையா? கூட்டணியில் இருப்பதால், ஏமாளிக் கூட்டணிக் கட்சிக்காரன் ஓட்டுப் போட்டுவிடுவான் என்ற தெனாவட்டா? 

இந்தத் தேர்தலில் காங்கிரஸ்க்கு கிடைக்கப் போகும் முடிவை வைத்தே, தமிழினம் இந்தியாவில் மதிக்கப்படும். காங்கிரஸ் இப்போதும் வெற்றி பெற்றால், இந்திய அளவில் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலையே ஏற்படும். ஏற்கனவே உலகில் எங்கு தமிழனுக்கு அடி விழுந்தாலும் கவனிக்க மாட்டார்கள். இப்போது ஜெயிக்கவும் வைத்து, நம் மானரோஷமற்ற தன்மையை நிரூபிக்கப் போகிறீர்களா?

ஒன்று இரண்டல்ல, இருபதினாயிரம் உயிர்கள் புல்டோசர் வைத்து நசுக்கப்பட்டன. அரசியல்வாதிகள் செய்யும் ஊழலைத் தான் மறந்து தொலைப்போம், இந்தப் படுபாதகச் செயல்களையும் மறப்பது மனிதம் தானா? 

கொஞ்சமாவது நம் மனதில் ஈரம் இருந்தால், மனசாட்சி என்ற ஒன்று இன்னும் உயிரோடு இருந்தால் இந்தத் தேர்தலில் காங்கிரஸைப் புறக்கணிப்போம். 


மேலும் வாசிக்க... "ஓய்ந்தது பிரச்சாரம்..ஒழியட்டும் காங்கிரஸ் பிசாசுகள்!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, April 10, 2011

மெக்கானிகல் எஞ்சினியர்களுக்கு_தொடரின் நிறைவுப் பகுதி

இதுவரை மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் என்னென்ன வகையான வேலைகள் உள்ளன, அதற்கு எவ்வாறு ரெசியூம் ரெடி பண்ண வேண்டும் எனப் பார்த்தோம். இன்று தொடரின் நிறைவுப் பதிவாக இண்டெர்வியூ பற்றிய சில டிப்ஸ்களும், முடிவுரையும். 

பலரும் அட்டெண்ட் பண்ணும் நேர்முகத் தேர்வில், நீங்கள் மட்டும் தனித்துத் தெரியவேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? பலரது சி.வி.க்களில் உங்கள் சி.வி.கவனிக்கப்பட என்ன செய்தீர்களோ அதையே இங்கும் செய்ய வேண்டும். 

சென்ற பதிவிலேயே சொன்னபடி, இண்டெர்வியூ செல்லும் முன் உங்கள் சி.வி.யில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் தெளிவான ஐடியா உங்களுக்கு இருக்க வேண்டும். சி.வி.யில் உள்ள எந்தவொரு வார்த்தையைப் பிடித்தும் கேள்விகள் எழலாம்.உங்கள் சி.வி.யில் NDT என்ற வார்த்தை இருந்தால், அதன் விரிவாக்கம், உபயோகம், செய்முறை என எல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். 

முதலில் அந்தக் கம்பெனி பற்றியும், வேலை செய்யப்போகும் டிபார்ட்மெண்ட் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

’அதற்கேற்றால் போல்’ தயார் செய்த சி.வி.யை நன்றாக மனதில் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

இண்டர்வியூவில் பொதுவாக முதலில் கேட்கப்படும் கேள்வி ‘Tell about yourself' தான். எனவே உங்களைப் பற்றிய சிறு அறிமுக உரையை தயார் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து உங்கள் கல்வி பற்றிக் கேட்கப்படும். தொடர்ந்து உங்களுடைய ஹாபீஸ் என்னென்ன? ரீடிங் என்றால் என்ன பத்திரிக்கை படிப்பீர்கள் என்பது போன்ற எளிய கேள்விகள் கேட்கப்படும். இவையெல்லாம் உண்மையில் உங்களை ரிலாக்ஸ் பண்ணவும், உங்களைப் பற்றிய ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ளவுமே. இதற்கு உண்மையைச் சொன்னால் போதும். என்ன படிப்பீர்கள் என்ற கேள்விக்கு வேலை சம்பந்தப்பட்ட பத்திரிக்கை எதையாவது நீங்கள் படித்திருந்தால் அதைச் சொல்லலாம்.

அதன் பிறகு டெக்னிகல் கேள்விகள் ஆரம்பிக்கும். உங்கள் ஏரியா ஆஃப் இண்டெரெஸ்ட் / வேலை பார்த்த துறை பற்றிக் கேள்விகள் கேட்கப்படலாம். நீங்கள் ஏற்கனவே நன்றாகத் தயார் செய்துகொண்டு வந்திருந்தால் எளிதாகப் பதில் சொல்லலாம். கவனியுங்கள் பதில் ‘சொல்ல’ வேண்டும். ஒப்பிக்காதீர்கள். 

மெக்கானிகல் லைனில் வேறெதும் அப்டிடியூட் டெஸ்ட், குரூப் டிஸ்கசன் போன்றவை பெரும்பாலும் கிடையாது. ஒரு சில கம்பெனிகளே அவற்றை நடத்தும். அதைப் பற்றி முன்பே விசாரித்துக் கொள்ளுங்கள்.

’எனக்கொரு வேலை கொடுங்கள். எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை. நான் சின்ஸியராக வேலை செய்வேன்’ என்று தான் பலரும் சொல்வார்கள். நீங்கள் முதலிலேயே இந்த வேலை பற்றி தெளிவாக அறிந்திருப்பதால், அந்த வேலைக்கு எது தேவையோ, அதைக் குறிப்பிட்டுப் பேசுங்கள். குறிப்பிட்டுப் பேசுங்கள். உதாரணமாக ‘டிசைன் எஞ்சினியராக வேலை செய்யவே விருப்பம். டிராயிங்கில் எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம்..டிசைன் சாஃப்ட்வேர் இது-இது தெரியும்’ என்று சொன்னால்  நிச்சயம் கவனிக்கப்படுவீர்கள்.

இண்டர்வியூவிற்கு நேரத்திற்குச் செல்வது, நீட்டாகச் செல்வது போன்ற அடிப்படை விஷயங்களை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

---------------------------------

நான் ஒரே பதிவாக இதை எழுதலாம் என்று தான் ஆரம்பித்தேன். பிறகு தான் புரிந்தது, ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டுக்கும் ஒரு பதிவு தேவைப்படும் என்று. இந்தத் தொடரின் முதல் நோக்கம், மெக்கானிகல் எஞ்சினியர் என்பது பல வேலைகளைக் குறிக்கும் ஒரு பொதுச்சொல், ஒன்றிற்கொன்று சம்பந்தமில்லா துறைகளைக் கொண்ட ஏரியா இது என்பதை மெக்கானிகல் படிக்கும் மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே.

பெரும்பாலான என் போன்ற முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு கம்பெனிச் சூழ்நிலை பற்றி எதுவும் படிக்கும்போது தெரிவதில்லை. எனவே தான் ஒவ்வொரு டிபார்ட்மெண்டின் தினசரி நடவடிக்கைகள் இந்தத் தொடரில் விளக்கப்பட்டன. மேலும், எங்கு அதிக சம்பளம் கிடைக்கும், எதைத் தவிர்ப்பது என்று தெரியாமல் தவறான துறைகளில் மாட்டிக்கொள்ளும் அவலமும் நடக்கிறது. அதைப்பற்றியும் இப்பொழுது ஒரு தெளிவு, உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். 

சொலல்வலன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது - என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கினை மனதில் கொண்டு, உங்கள் வாழ்வில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள். 

இந்தத் தொடருக்கு ஆதரவளித்து பின்னூட்டமும் ஓட்டும் அளித்த நண்பர்களுக்கு நன்றி.

மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், இந்தப் பதிவை எப்போது படித்தாலும் பின்னூட்டதிலோ மின்னஞ்சலிலோ கேளுங்கள்.

மேலும் வாசிக்க... "மெக்கானிகல் எஞ்சினியர்களுக்கு_தொடரின் நிறைவுப் பகுதி"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

26 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.