Tuesday, September 29, 2015

Movies to Learn Series (ஃபேஸ்புக்கில் எழுதும் தொடர்)

Movies to Learn Series -1:

சினிமா விமர்சகனாக இருப்பதன் சாபக்கேடு, ஒரு படத்தை முழுக்க லயித்துப் பார்க்கமுடியாமல் போவது. படம் ஓடும்போதே, மனம் குறிப்புகளை எடுக்கத் துவங்கியிருக்கும். இதற்கு முன் வந்த இதே நடிகர்/இயக்குநரின் படம், இதே போன்ற கதை/காட்சிகள் வந்த படங்கள், பார்த்துக்கொண்டிருக்கும் படத்தில் வரும் நல்ல/மோசமான காட்சிகள் மற்றும் வசனங்கள் என பல விஷயங்கள் உள்ளே ஓடிக்கொண்டே இருக்கும்.

படம் முடிந்தபிறகு தான் விமர்சனம் பற்றி யோசிக்க வேண்டும் என்று நினைத்தாலும், கொஞ்சம் உருப்படியாக விமர்சனம் எழுத வேண்டும் என்றால், இதைச் செய்து தான் ஆகவேண்டும்.

முன்பு ஆங்கிலப்படங்களுக்கும் இதைச் செய்துகொண்டிருந்தேன். இந்தப் பிரச்சினையில் இருந்து என்னை உலுக்கி, வெளியே போட்ட படம் Amores Perros. விமர்சனம் எழுத வேண்டும் என்று பார்க்க ஆரம்பித்து, ’ஐயா..என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று காலில் விழ வைத்த படம். அதன்பின் இன்றுவரை அந்தப் படம் பற்றி ஒன்றுமே எழுதவில்லை. அந்தப் படத்திற்கு மரியாதை செய்ய, அதைவிட நல்லவழி எனக்குத் தெரியவில்லை.

அதிலிருந்து, பிறமொழிப்படங்களை முதன்முறை பார்க்கும்போது ‘சும்மா’ பார்ப்பது என்று வழக்கப்படுத்திக்கொண்டேன். விமர்சனம் என்று எதையாவது கிறுக்குகிறேன் என்றால், அது இரண்டாவது முறையாகப் பார்த்தபிறகு தான். ஹிட்ச்காக் படங்கள் என்றால் 3-4முறை பார்த்தபிறகே எழுதுவது பற்றி யோசிப்பது!

ஆனாலும் Amores Perros போன்ற படங்களைப் பற்றி, முடிந்தவரை ஒன்றும் எழுதுவதில்லை. கமர்சியல் / தமிழ்ப்படங்களைப் பற்றி எழுதிவிட்டு, நல்லபடங்களை உங்களுக்கு சொல்லாமலே போகிறோமே எனும் உறுத்தல் எப்போதும் உண்டு. இதைத் தீர்க்க இப்போது ஒரு எளியவழியை கண்டுபிடித்துவிட்டேன். அந்த படங்களின் அறிமுகம் ”மட்டும்” இங்கே அவ்வப்போது போடுகின்றேன்.

இவை பொழுதுபோக்குப் படங்கள் அல்ல. நல்ல சினிமா பார்க்க வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்களும் ’ஆன்லைன்’ திரைப்பட மாணவர்களும் தேடிப் பார்த்துக்கொள்ளவும். முதலில், Michelangelo Antonioni-வின் Blow Up(1966).

ஒரு ஃபோட்டோகிராபர் பார்க்கில் ஒரு ஜோடியை ஃபோட்டோ எடுக்கிறான். அந்த ஃபோட்டோக்களை டெவலப் செய்து பார்க்கும்போது, சம்திங் இஸ் ராங்....அந்த ஃபோட்டோக்களை ஆராயும்போது, ஒரு கொலைக்கான சாட்சியமாக அவை மாறுகின்றன. A thriller ended like a melodrama with unbelievable touch.

-----------------------------------------

Movies to Learn Series - 2:
 
தைரியம், தில்லு, எதையும் தாங்கும் உறுதி இருக்கிறவர்களுக்கு மட்டும் இந்தப் படம்...Bitter Moon (1992)

சைக்காலஜிக்கலா உங்களை இந்தப் படம் பாதிக்கலாம், ஜாக்கிரதை.

ஒன்லைன் என்னன்னா.....

ஒரு கப்பல் பயணத்தில் ஹீரோ செமயான ஃபிகர் ஒன்னைப் பார்க்கிறான். அதை உஷார் பண்ணலாம்ன்னு நினைக்கும்போது, ஒரு பக்கவாதம் வந்த ஆசாமி, குறுக்கே வர்றார்.

‘தம்பீ, நாந்தான் அவ புருசன்..நீ நினைக்கிறது நியாயம் தான்(!). ஆனால் அதுக்கு முன்ன என் கதையைக் கேளு..முழுசாக் கதை கேட்டால், அவ உனக்குத்தான்’-ன்னு ஒரு டீல் போடுறாரு.

என்னடா இது, கதை கேட்டா கட்டை கிடைக்குமான்னு ஹீரோவும் நாமும் கதை கேட்க ஆரம்பிக்கிறோம்.

அந்தக் கதை ஹீரோவை மட்டுமில்லை, நம்மையும் உலுக்கிப் போடுது...வேண்டாம், வேண்டாம்ன்னு ஹீரோவும் நாமும் கதறினாலும், கதை தொடர்கிறது...............!!

If you understand the movie, it's a world cinema.
Otherwise, it's an erotic movie.

Both way, you are benefited.
smile emoticon


‪#‎MoviestoLearn‬
------------------------------------
 
Movies to Learn-3:
 
நிலப்புரபுத்துவ காலகட்டத்தில் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு வேலை என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தியா மட்டுமல்லாது, ஆப்பிரிக்கா, ஜப்பான் என உலகத்தின் பல பகுதிகளிலும் இது வழக்கத்தில் இருந்தது. மன்னராட்சியும் அதைத் தொடர்ந்த காலனி ஆட்சியும் முடிவுற்றபோது, புதிய ஜனநாயகம் மலர்ந்தது. வேலைவாய்ப்பு என்பது ஜாதிக்கு அப்பாற்பட்டதாக ஆனது. எனவே ஜாதிப்புத்தி என்பதும் மெல்ல பொருளிழந்து போனது.

மாறிவிட்ட காலத்தைப் புரிந்துகொள்ளாமல், பழங்கால பெருமை/ சிறுமையிலேயே தங்கிவிட்ட மனங்கள் பல இங்குண்டு. இனி அவற்றுக்கு எவ்விதப் பொருளில்லை.

அவற்றைக் கைவிட்டு, புதிய காலகட்டத்திற்கு ஏற்ப நகர்வது காலத்தின் கட்டாயம்.

இதைப் பற்றிப் பேசிய படங்களில் இரு படங்கள் உலக அளவில் முக்கியமானவை. ஒன்று, Seven Samurai. இரண்டாவது தேவர் மகன். தொழில் சார்ந்த வாழ்க்கை முறையை உடைத்துக்கொண்டு, மனித இனம் மேலே எழ வேண்டிய அவசியம் பற்றி இருபடங்களும் பேசின. செவன் சாமுராயை விட, தேவர் மகன் வெளிப்படையாகவே இவ்விஷயத்தை விவாதித்தது.

அப்புறம் ஏன் தேவர் ஜாதிவெறிப் படம் என்று சிலரால் தேவர் மகன் திட்டப்படுகிறது என்கிறீர்களா? ஏனென்றால்...........

செவன் சாமுராயும் அப்படித்தான் சிலரால் திட்டப்பட்டது. தனது சாமுராய் ஜாதிப்பெருமையைக் காட்ட, அகிரா குரோசோவா இப்படத்தை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் கால ஓட்டத்தில் அப்படம், தனக்கான மரியாதையைப் பெற்று சிம்மாசனத்தில் அமர்ந்தது.

இந்தப் படங்களில் பேசப்படும் விஷயம், ஏதோ ஒரு ஜாதிக்கானது இல்லை. ஒவ்வொரு ஜாதிக்காரனும் தேவையற்ற ஜாதியின் பிடியில் இருந்து விடுபடுவது பற்றி இவை பேசுகின்றன. அது புரிந்தால், இவை ஏன் உலக சினிமாக்கள் என்பதும் புரிந்துவிடும்.

திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகிய மூன்றையும் கற்றுத்தேர, இந்தப் படங்கள் உதவும்.

‪#‎MoviestoLearn‬
--------------------------------------------------
 
Movies to Learn - 4:

திரைக்கதை பற்றி கற்றுக்கொள்வதற்கு இருக்கும் ஒரு வழி, ஒரே கதையை இருவேறு திரைக்கதையாசிரியர்கள் எப்படி அணுகியிருக்கிறார்கள் என்று ஸ்டடி செய்வது.

Patricia Highsmith என்பவர் 1955ல் எழுதிய நாவல் The Talented Mr. Ripley.

இது 1960ல் Purple Noon (French Title :Plein Soleil) என்ற ஃப்ரெஞ்ச் படமாக வந்து சூப்பர் ஹிட் ஆனது. அட்டகாசமான த்ரில்லர் படம் அது.

மீண்டும் அதே கதை, 1999-ல் The Talented Mr. Ripley எனும் நாவலின் பெயரிலேயே வெளியானது. இது ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர்.

முதல் படம் மிகவும் சிம்பிளான, நேரடியான த்ரில்லர். ஆனால் இரண்டாவது கொஞ்சம் சிக்கலானது. சில சைக்காலஜிக்கல் விஷயங்களையும் சேர்த்திருப்பார்கள். கொஞ்சம் அடர்த்தியான படம் இது.

இரண்டையும் ஒரே நேரத்தில் பார்க்கும்படி சிபாரிசு செய்கிறேன்.

கதை….

நாவலின் நாயகன் ஒரு அனாதை, வாழ வழி தேடி அலைபவன். அதே நேரத்தில் போர்ஜரி, கோல்மால் வேலைகள் செய்வதில் வல்லவன்.

அந்த ஊர் பணக்காரருக்கு ஒரு பிரச்சினை. அவரது மகன் அவரிடம் கோபித்துக்கொண்டு, வேறு ஊரில் வாழ்கிறான். அவரது பணத்தை மட்டும் மாதாமாதம் பெற்றுக்கொண்டு, காதலியுடன் வாழ்க்கையை எஞ்சாய் பண்ணுகிறான். அவனைத் திருத்தி, தந்தையிடமே கொண்டுவந்து சேர்க்க வேண்டும்.

ரிப்ளே அந்த வேலையை ஏற்கிறான். இதைச் செய்தால் ரிப்ளேக்கு 5000 டாலர்கள் கிடைக்கும். எனவே ரிப்ளேயைப் பொறுத்தவரை இது அவனுக்கு வாழ்வா, சாவா பிரச்சினை.

எனவே ரிப்ளே, அந்த மகனுக்கு கொடுப்பது இரண்டே ஆப்சன் தான். ஒன்று, அவன் திரும்பி வரவேண்டும். அல்லது……………………………..!

‪#‎MoviestoLearn‬



மேலும் வாசிக்க... "Movies to Learn Series (ஃபேஸ்புக்கில் எழுதும் தொடர்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, September 22, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 56



காதல் ஜெனர் - இன்னும் கொஞ்சம்

சென்ற பதிவில் காதல் என்றால் என்ன எனும் கேள்விக்கு கிடைக்கும் பதில்களை எல்லாம் பார்த்தோம். மற்ற ஜெனர்களைப் போல் அல்லாமல் காதல் ஜெனரில் வந்த
படங்களை வகைப்படுத்துவது கொஞ்சம் கஷ்டம் தான். இருப்பினும் சில வகைகளை இங்கே பார்ப்போம்.

தேவதாஸ்:
நெஞ்சை உருக வைக்கும் சோக காவியங்களுக்கு எல்லாம் இது தான் ஆரம்பம். வாழ்க்கையை சந்தோசமாக கொண்டாடும் ஒரு இளைஞனின் வாழ்வில் காதல் வந்தால்...’ என்பது தான் ஒன்லைன். பெரும்பாலும் சோகமுடிவு. மிகவும் சீரியஸான காதல் வகை இது. ‘நீ இல்லை என்றால் உயிர் வாழ மாட்டேன்’ எனும் நிலைக்கு ஒரு மனிதனைத் தள்ளுவது இவ்வகைக் காதல். 

தேவதாஸ்(1953) எனும் திரைப்படம் தான் இவ்வகைக் காதலுக்கு முன்னோடி.  இதையே வசந்தமாளிகையும், வாழ்வே மாயமும் வெவ்வேறு முறைகளில் சொல்லின. ஒரு வசதி படைத்த இளைஞன் - அவன் வாழ்வில் குறுக்கே வரும் ஒரு பெண் -  இருவருக்கும் மலரும் காதல் - ஆனாலும் ஒரு தடைக்கல் (ஈகோ/நோய்)-காதலை மறைக்க வேண்டிய கட்டாயம் - கிளைமாக்ஸ் பிரிவு அல்லது சேர்தல். இந்த ஐந்து  புள்ளிகளை வைத்துக்கொண்டு, விதவிதமான கோலங்களைப் போட முடியும். வசந்தமாளிகையில் தாயன்பு கிடைக்காத ஹீரோ எனும் பின்கதையை வைத்திருந்தார்கள்.

இதயம், பருத்திவீரன் போன்ற படங்களிலும் தேவதாஸின் கூறுகளைப் பார்க்க முடியும். ’காதல் மட்டும் வராமல் இருந்திருந்தால், இந்த ஹீரோக்களின் வாழ்க்கை எவ்வித சிக்கலும் இல்லாமல் போயிருக்குமோ?’என்ற எண்ணத்தையும் கொடுப்பவை தேவதாஸ் டைப் கதைகள். :)

கண்டதும் காதல்:
காதல் உண்டாக காரணம் ஏதுமின்றி, பார்த்ததும் காதலில் விழும் ஹீரோக்களைக் கொண்டவை இவ்வகைப் படங்கள். பொதுவாக ரொமாண்டிக் காமெடி போன்று லைட்டான சப்ஜெக்ட் படங்களாக இவை இருக்கும். அன்பே வா, அலை பாயுதே, விண்ணைத்தாண்டி வருவாயா என இளைஞர்களை அப்படியே பிரதிபலிப்பவை  இவ்வகைக் காதல் படங்கள்.

ஹீரோ, ஹீரோயினைப் பார்ப்பது - அவள் யார் என்று கண்டுபிடிப்பது-அவளை நெருங்குவது-காதல் மலர்வது வரை முதல்பாதியாகவும், காதலில்/காதலுக்கு வரும் பிரச்சினை - பிரிவு-மீண்டும் சேர்தல்/பிரிதல் என்பது இரண்டாம் பகுதியாகவும் கதை சொல்லப்படும்.

முக்கோணக் காதல் கதைகள்:

ஒரு ஹீரோ & இரண்டு ஹீரோயின்கள் அல்லது ஒரு ஹீரோயின் & இரண்டு ஹீரோக்கள் எனும் முக்கோணத்தில் சிக்கும் கதைகள் இவை. மின்னலே, மௌனராகம், நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாணப் பரிசு போன்றவை மிகச்சிறந்த உதாரணங்கள். இரண்டு ஹீரோக்கள் இருந்தாலும், ஆடியன்ஸை ஏதேனும் ஒரு ஹீரோவுடன் மட்டுமே ஐடெண்டிஃபை செய்ய வைப்பது இவ்வகைப் படங்களில் முக்கியம். இதில் கோட்டைவிட்ட படங்கள் எல்லாம் அடிவாங்கியிருக்கின்றன.

பழைய காதல் அல்லது புதிதாக நடக்கப்போகும் திருமண ஏற்பாடுகள் தான் இதில் வில்லன். எல்லோரும் நல்லவர்களே எனும் விக்ரமன் பாணி அப்ரோச் இவ்வகைக் கதைகளில் உத்தமம். வாழ்க்கை போகிற போக்கில் உண்டாக்கும் சூழ்நிலைகள் தான் நமக்கு நிஜவாழ்வில் வில்லனாக இருக்கின்றன. அதை அப்படியே பிரதிபலித்தால், வெற்றி நிச்சயம்.

பக்குவப்பட்ட காதல்கள்:
கண்டதும் காதல், பின்னாலேயே சுற்றுவது போன்ற அச்சுப்பிச்சுத்தனங்கள் இல்லாமல் உருவாகும் காதல்கள் இந்தவகையில் வரும்.  முதல் மரியாதை, மூன்றாம் பிறை, காதல் கோட்டை போன்ற படங்களை இதற்கு
உதாரணமாகக் கொள்ளலாம். காதல் வரும் முறையும், காதலர்கள் அதைக் கையாளும் விதமும் இங்கே முக்கியமான விஷயங்கள்.

காதலுக்கு எதிரான படங்கள்:
காதல் தான் வாழ்க்கையில் முக்கியமான அம்சம், காதல் இல்லையேல் வாழ்க்கையில்லை என்றெல்லாம் மற்ற வகைகள் ஜல்லியடிக்கும்போது, அதற்கு மாறுபட்டு வரும் படங்கள் இவை. காதலை வைத்தே காதல்
முக்கிமல்ல என்று கருத்து சொல்பவை இந்தப் படங்கள்.

பன்னீர் புஷ்பங்கள் படத்தினை இவ்வகைப் படங்களின் முன்னோடி எனலாம். இனக்கவர்ச்சியில் மயங்கி, வாழ்க்கையைத் தொலைக்காதீர் என்று சொன்னது அந்தப் படம். சமீபத்தில் வந்த காதல் திரைப்படத்தை, பன்னீர் புஷ்பங்களின் தொடர்ச்சியாக , அலைகள் ஓய்வதில்லை படத்தின் கிளைமாக்ஸில் ஆரம்பிக்கும் படம் என்று சொல்லலாம். (அலைகள் ஓய்வதில்லையும் ஹிட்..காதலும் ஹிட். இது தான் சினிமாவின் பவர்!)

அந்த 7 நாட்கள், ஆட்டோகிராஃப் போன்ற படங்களும் காதலை வாழ்க்கையின் எபிசோடுகளில் ஒன்றாகக் காட்டின. இந்த வரிசையில் காதலுக்கு மரியாதை படமும் முக்கியமானது. காதலை விட பெற்றோரே முக்கியம் என காதல் ஜோடி பிரிய, பெற்றோர் அதனாலேயே சேர்த்துவைக்க, தமிழ் சினிமா திடீரென பற்றிக்கொண்டது. அடுத்த 2-3 வருடங்களுக்கு விதவிதமாக, காதலை தியாகம் செய்து ஜெயித்தார்கள்.


நாம் முன்பே சொன்னபடி சென்ற பகுதியில் உள்ள ஒவ்வொரு வரியையும் எடுத்துக்கொண்டு, புதிய வகை காதல் படத்தைக் கொடுத்துவிடமுடியும். கடந்த இரண்டு பகுதிகளில் பார்த்தவை மட்டுமல்லாது, கீழ்க்கண்ட விஷயங்களையும் கவனத்தில் வைக்கவும்:

- ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு காதல் ஏன் தேவை என்று ஒரு காரணம் இருந்தால், ஆடியன்ஸ்  மனதில் அந்த கேரக்டருடன் ஒன்ற முடியும். உதாரணம், அமர்க்களம், முதல் மரியாதை, வசந்தமாளிகை

- மோதலுக்குப் பின் காதல் என்பது சலிக்காத செட்டப். இருவர் பார்த்தார்கள், காதலிக்க ஆரம்பித்தார்கள் என்பதில் முரண்பாடு இல்லை. எனவே சுவாரஸ்யமும் இல்லை. முதலில் முட்டிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு, அதைத் தாண்டி எப்படி காதல் மலர்கிறது என்பது தான் விஷேசம். உதாரணம், துப்பாக்கி.

- காதல் மலர்ந்தபின், காதலுக்கு வரும் பிரச்சினை என்ன என்பதில் தான் நம் க்ரியேட்டிவிட்டியைக் காட்ட முடியும். குஷி, சேது போன்ற படங்கள் புதுமையானவையாகத் தெரியக் காரணம்,அது தான்.

-காதல் படங்களில், குறைந்த பட்சம் முதல்பாதியில் ரொமான்டிக் காமெடி வருவது நன்றாக எடுபடும்.

- வன்முறையையும் கொடூரமான வில்லனையும் காதல் கதைகளில் தவிர்க்க வேண்டும்.  ஃபீல் குட் படமாகவே கொண்டு செல்வது தான் இதில் முக்கியம். (டிராஜடிக்கு மட்டும் இதில் விதிவிலக்கு)

காமெடி ஜெனர் பற்றி, அடுத்த பகுதியில் பார்ப்போம்.


ஃபேஸ்புக்கில் எழுதியது :
திரைக்கதையில் முக்கியமான விஷயம், நகைச்சுவை. நகைச்சுவை என்பது சிரிப்பதற்கு மட்டும் தான் பயன்படுவதாக நினைக்கிறீர்களா? உண்மை அதுவல்ல.

ஹிட்ச்காக் ஒருமுறை சொன்னார் ‘தியேட்டருக்கு வரும் கூட்டம், படம் ஆரம்பிக்கும்போது தனித்தனி ஆளாகத்தான் இருக்கும். அவர்களை ஒரே நபராக சேர்க்க வேண்டுமென்றால், அதற்கான எளிய வழி நகைச்சுவை தான். சோகமோ அல்லது கோபமோ ஒரே தாக்கத்தை எல்லோருக்கும் ஏற்படுத்தாது (படத்தின் ஆரம்பத்தில்). ஆனால் சிரிப்புக்கு அந்த சக்தி உண்டு. தியேட்டர் குலுங்கிச் சிரித்துவிட்டது என்றால், அனைவரும் ஒரே புள்ளியில் கூடிவிட்டார்கள் என்று தான் அர்த்தம். அதன்பின் விரும்பிய திசைக்கு அவர்களை இழுத்துவிடலாம்’.

Plant & Pay-off எனப்படும் நமது ‘நட்டு வச்ச ரோஜா செடி’ விஷயத்தில் மிகவும் கைகொடுக்கும் விஷயம், நகைச்சுவை. உதாரணமாக, கலகலப்பு படத்தில் ஹீரோவின் நாய், எதை தூக்கிப்போட்டாலும் கவ்விக்கொண்டுவந்துவிடும். இதை சாதாரண ஜோக்காக ஆரம்பத்தில் காட்டியிருப்பார்கள். பின்னர் ஹீரோ போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மாட்டும்போது, அந்த நாய் தான் கவ்விக் காப்பாற்றும்.

நகைச்சுவையால் வரும் இன்னொரு நன்மை, எங்காவது லாஜிக் இடித்தால் ஆபத்பாந்தவனாக இது காப்பாற்றும். அதாவது நேராகச் சொன்னால் ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனும் விஷயத்தைக்க்கூட, அவர்கள் சிரிக்கும்போது செய்தால் கண்டுகொள்ளமாட்டார்கள். உதாரணம், ஓகே கண்மணி. பிரகாஷ்ராஜ் போன்ற ஒரு கேரக்டர், கண்டிப்பாக லிவிங் டுகெதரை தன் வீட்டில் அனுமதிக்காது. இந்த ஜோடி கதைப்படி அவர் வீட்டில் தங்க வேண்டும். எப்படிச் செய்யப் போகிறார் மணி என்று படம் பார்க்கும்போது யோசித்துக் கொண்டிருந்தேன். அங்கே பிரகாஷ்ராஜின் மனைவி ஒரு டயலாக் சொல்கிறார் ‘அவர் கொஞ்சம் ஓல்டு டைப்..லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டுட்டு, ஜன்னல் வழியே கையையும் காட்டிட்டுத் தான் வண்டியைத் திருப்புவார்’ என்று. தியேட்டரே சிரித்துக்கொண்டிருந்தபோது, அந்த ஜோடி உள்ளே நுழைந்துவிட்டது. மேட்டர் ஓவர்!!

எனவே திரைக்கதையில் நகைச்சுவைக்காட்சி என்பது சிரிக்க வைக்க மட்டும் தான் என்று எளிதாக எடுத்துக்கொண்டு விடாதீர்கள். அது அதையும் தாண்டிப் புனிதமானது!

 (தொடரும்)


மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 56"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, September 11, 2015

யட்சன் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..:

ஆரம்பம் படத்திற்குப் பிறகு விஷ்ணுவர்த்தனனின் இயக்கம் + தயாரிப்பில், ஆர்யா-கிருஷ்ணா நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் யட்சன். ஆனந்த விகடனில் சுபா எழுதிய தொடர்கதைக்கு திரைவடிவம் கொடுத்திருக்கிறார்கள். நாவலை படமாக்குவது என்பது தமிழில் ரிஸ்க்கான விஷயம். இங்கே என்ன ஆனதென்று பார்ப்போம்.


ஒரு ஊர்ல :
நடிகன்  ஆக வேண்டும் என்ற ஆசையுடன் சென்னை வரும் கிருஷ்ணா, ஹீரோவாகும் முயற்சியில் இறங்குகிறார். தூத்துக்குடியில் ஒரு கொலை செய்துவிட்டு சென்னை வரும் ஆர்யா, இன்னொரு கொலை செய்யும் வேலையில் இறங்குகிறார். ஆனால் விதி ஆர்யாவை ஹீரோவாகவும்,  கிருஷ்ணாவை கொலை காரணாகவும் ஆக்குகிறது. ஏன், எதற்கு, எப்படி என்பதே கதை!

உரிச்சா:
ஹீரோயினுக்கு ஒரு ஸ்பெஷல் பவர் இருக்கிறது. யார் கையையாவது அவர் தொட்டால், அவர்களுக்கு வரப்போகும் ஆபத்து அவருக்கு தெரிந்துவிடும். இதற்கான ஓப்பனிங் சீனுடன் படம் தடால் என ஆரம்பிக்கிறது. மிகவும் சீரியஸான படம் போல் ஆரம்பித்தாலும், தூத்துக்குடியில் ஆர்யாவும் பழனியில் கிருஷ்ணாவும் அறிமுகம் ஆனதும் படம் ஜாலி மூடுக்கு வந்துவிடுகிறது.

இருவரும் சென்னை வருவதற்கான சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. நாவல் போன்றே ஒரு சீன் ஆர்யா, ஒரு சீன் கிருஷ்ணா என இருவரது லைஃபும் சொல்லப்படுகின்றன. இருவரும் சென்னை வரும்வரை கொஞ்சம் ஸ்லோவாக போகும் படம், அதன்பின் விறிவிறுப்பாகச் செல்கிறது. கிருஷ்ணா நடிகர் ஆக எடுக்கும் முயற்சிகளை விட, ஆர்யா மலேசியா தப்பிச் செல்ல முயல்வதும் ஹீரோயினைக் கொல்ல திட்டமிடுவதும் சுவார்ஸ்யமாக இருக்கிறது.

ஹீரோயினுக்கு இருக்கும் பவர், வில்லனுக்கு தொல்லை ஆகிவிட்டதால், ஆர்யா மூலம் ஹீரோயினைக் கொல்ல திட்டமிடுகிறார். அதற்கு மீடியேட்டராக தம்பி ராமையா. ஹீரோயினின் ஒருதலைக் காதலனாக பாலாஜி என கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சீரியஸான ஆக்சன் படம் ஆவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தும், காமெடி ஆக்சன் படமாக கொடுத்திருக்கிறார்கள்.

ஆர்யாவை ஹீரோவாக்கும் டைரக்டராக எஸ்.ஜே.சூர்யா, காமெடி டான் ஆக பொன் வண்ணன் என வருகின்ற கேரக்டர்கள் எல்லாம் சிரிக்க வைக்கின்றன. அதிலும் ஏன் வாத்தியார் ஒருவரை பொன்வண்ணன் ஆட்கள் கடத்துகிறார்கள் என்பது அல்டிமேட் காமெடி. இடைவேளையின்போது ஆள் மாறாட்டம் நடந்துவிட, அதன்பிறகு வரும் காட்சிகள் ஜாலியாக நகர்கின்றன. கிருஷ்ணாவை விட ஆர்யா, ‘அறிந்தும் அறியாமலும்’ ஸ்டைலில்  கலக்கியிருக்கிறார்.

வில்லன் யாரை வேண்டுமானும் கொல்வது, போலீஸ் சுதந்திரமாக வில்லனுக்கு உதவுவது, அரசியலுக்கு வர க்ளீன் இமேஜ் வேண்டும் என்று வில்லன் போராடுவது, ஆர்யா நடிக்க வந்தும் தூத்துக்குடி போலீஸ் அவரை விட்டுவைப்பது என லாஜிக் பல இடங்களில் உதைத்தாலும், ‘இது சீரியஸ் மூவி இல்லை பாஸ்’ எனும் டிஸ்கி காட்சிக்கு காட்சி தெரிவதால், படம் தப்பிக்கிறது.

ஆர்யா:
அதே அலட்டல் இல்லாத நடிப்பு...அல்லது நடிப்பே இல்லாத நடிப்பு என்றும் சொல்லலாம். கேஷுவலாக செய்திருக்கிறார். பொன்.வண்ணன் குரூப் மத்தியில் ஹீரோயினுக்கு புரபோஸ் பண்ணுவது, தம்பி ராமையாவை டீல் பண்ணுவது போன்ற சீன்களில் கலக்கியிருக்கிறார். ஏனோ லவ் சீன்ஸில் தான் எமோசன்ஸ் குறைவாக இருக்கிறது.

கிருஷ்ணா:
ஓவர் ஆக்டிங்கிற்குப் புகழ் பெற்ற கிருஷ்ணா, இதில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். ஆனாலும் அந்த நடிப்பு தான் இன்னும் கைவரமாட்டேன் என்கிறது. ஆர்யாவுக்கு ஈகுவலான கேரக்டர். ஏறக்குறைய சரிசமமான சீன்கள். இருந்தும், ஆர்யா தான் நம் மனதில் நிற்கிறார்.

தீபா சன்னதி & ஸ்வாதி:
என்னைப் போல் ஒருவனில் அறிமுகமான தீபா தான் மெயின் ஹீரோயின். ஸ்பெஷல் பவர் கொண்டவராக, நர்ஸாக வருகிறார். கதையே இவரை மையமாக வைத்துத்தான் என்பதால், நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டர். நன்றாகவே செய்திருக்கிறார்.

ஸ்வாதி..ஏறக்குறைய பத்து வருடம் முன்பு தாவணியில் வந்த சுப்ரமணியபுரம் ஹிட் ஆகியிருக்கலாம். அதற்காக இப்போதும் தாவணி கட்டி வருவது, ரொம்ப தப்பு மேடம். ‘இன்னுமா கோலம் போட்டுக்கிட்டு இருக்கிறா’ எனும் வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருகிறது!


பாசிடிவ் பாயிண்ட்ஸ்:

- சுவார்ஸ்யமான திரைக்கதை
- ஜாலியாகவே படத்தைக் கொண்டு சென்றிருப்பது
- ஆர்யா
- ஓம் பிரகாஷின் கேமிரா..அதிலும் இருமுறை வரும் கடற்கரை ஷாட், அட்டகாசம்.
- ஹீரோயினின் ஸ்பெஷல் பவருக்குள் டீப்பாக போனால், லாஜிக் கண்டபடி உதைக்கும் என்பதால் அதையும் கேஷுவலாகவே டீல் பண்ணியிருப்பது
- அந்த டபுள் வில்லன் ட்விஸ்ட்..செம!
- தம்பி ராமையா, பாலாஜி, அழகம்பெருமாள் என எல்லோருமே கலகலப்பை தக்க வைப்பது.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
- பாடல்கள்..யுவன் + விஷ்ணுவர்த்தன் என்றால் பாடல்கள் எப்படி இருக்கும்! இப்போது...ஹூம்!
- எல்லோருமே கொலையை சாதா தோசை ரேஞ்சுக்கு டீல் பண்ணும் லாஜிக்
- வில்லனாக நடித்திருப்பவருக்கு கேரக்டருக்கு ஏற்ற கெத்து இல்லை. நம் ஆள் யாரோ தான் டப்பிங் கொடுத்திருக்கிறார்கள். அந்த வாய்ஸ் மட்டும் கலக்கல்.


பார்க்கலாமா?


டைம் பாஸ் மூவி...பார்க்கலாம்.
மேலும் வாசிக்க... "யட்சன் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, September 8, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 55

காதல் - ஜெனர்

கதையில்லாமல்கூட எத்தனையோ தமிழ் சினிமாக்கள் வந்திருக்கின்றன. ஆனால் காதல் இல்லாமல் தமிழ் சினிமா வருவது அபூர்வம். அந்தவகையில் காதல் என்பது ஏ ஸ்டோரியாகவும் பி ஸ்டோரியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஜெனராக இருக்கிறது. ’என்னய்யா இது...இவங்களுக்கு லவ்வை விட்டால் ஒன்னும் தெரியாதா?’ என்ற விமர்சனம் சினிமா மேல் வைக்கப்படுகின்றது. ஆனால் காதலைப் பற்றி சினிமா மட்டும் தான் பேசுகின்றதா?

கதைகளும் காவியங்களும் கவிதைகளும் பல நூற்றாண்டு காலமாக பேசிக்கொண்டே இருக்கின்றன. எவ்வளவு எழுதினாலும் பேசித் தீராத விஷயமாக எழுத்தாளர்களுக்கு காதல் இருக்கிறது. அதையே சினிமாவும் செய்கின்றது. சில நேரங்களில் கிளுகிளுப்பு அம்சமாக, சில நேரங்களில் தீவிர ஆய்வுக்குரிய விஷயமாகவும் காதல் சினிமாவில் பேசப்பட்டு வருகின்றது. தேவதாஸுடன் நிறுத்தியிருக்கலாம். அல்லது வசந்தமாளிகையுடன்..அட்லீஸ்ட் வாழ்வே மாயம் படத்துடன் காதல் படங்களை நிறுத்தியிருக்கலாம். இன்னும் ஏன் அலைபாயுதே, காதல், பருத்திவீரன் என வந்துகொண்டே இருக்கின்றன? அவை ஏன் வெற்றியும் பெறுகின்றன?

இதற்கு முதலில் காதல் என்றால் என்ன என்று புரிந்துகொள்ள முயற்சிப்போம். காதல் ஜெனரையும் புரிந்துகொள்ள இது உதவும்.

காதலின் ஆரம்பம், இனக்கவர்ச்சி தான். ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும் வரும் ஈர்ப்பு தான் அடிப்படை. பள்ளிக்காலங்களில் வரும் பல காதல்களும் இந்த இனக்கவர்ச்சி வட்டத்தைத் தாண்டாதவை.

நட்பும் செக்ஸும் கலந்த கலவையே காதல் என்று ஒரு வரையறை கொடுக்கலாம். உயிரையே கொடுக்கும் நட்புடன், இனக்கவர்ச்சி சேரும்போது காதலாகிறது. செக்ஸ் வைத்துக்கொண்டே, ஜஸ்ட் நண்பர்களாகவே இருந்த ஆத்மாக்களை நான் அறிவேன். எனவே இந்த டெஃபனிசனை முடிவானதாக வைத்துக்கொள்ள முடியாது. (சத்திய சோதனை!)

உடல் கவர்ச்சியை மீறிய, சாகும்வரை ஒட்டி உறவாடிய, உறவாடும் காதலையும் நாம் பார்க்கிறோம். ‘உனக்காக நான் எதுவும் செய்வேன்’ எனும் இருதரப்பு(!) மனநிலையில் இருந்து வருவது அத்தகைய காதல். பெரும்பாலான சினிமாக்கள் முன்வைப்பது இத்தகைய காதலைத் தான். வாழ்க்கையில் அரிதான விஷயம் என்பதால், இதற்கு கவர்ச்சி அதிகமாக இருப்பது யதார்த்தம் தான்.

ஆனாலும் காதல் என்பது எல்லா இடங்களிலும் அப்படி இல்லை. காதலில் நடப்பது என்ன? நீட்சேவும் ஓஷோவும் ’காதல் என்பது மீண்டும் தாயைத் தேடி ஒருவன் மேற்கொள்ளும் பயணம்’ என்கிறார்கள். ஒருவன் பருவ வயது வந்ததுமே, தாயிடமிருந்து விலக்கப்படுகிறான். ‘நான் ஆண்..நீ பெண்’ எனும் பிரிவினை இயல்பாகவே தாயிடம்கூட வந்துவிடுகிறது. எனவே மீண்டும் தாயின் அரவணைப்பைத் தேடும் பயணமாக காதலும், மீண்டும் கருவறையை அடையும் முயற்சியாக காமமும் இருப்பதாக ஓஷோ ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ நூலில் சொல்கிறார். எல்லோருமே ஒரு வகையில் பிள்ளையார் தான். அம்மா மாதிரி துணை தேடும் ஆட்கள் தான்.

சரி, இது தான் காதல் என்று முடித்துவிடலாமா?

அம்மா இறந்தால் அல்லது பிரிந்தால், எவனும் தற்கொலை செய்வதில்லை. காதலி/காதலன் பிரிந்தால் தற்கொலை செய்கிறார்கள். காதலின் பிரிவு என்பது தாங்க முடியாத வலியைக் கொடுக்கிறது. தாய், தந்தையின் பிரிவைவிட அதிக வலி கொடுக்கும் விஷயமாக இருக்கிறது. இந்த இடத்தில் அது தாய்ப்பாசத்தையும் தாண்டிய ஏதோவொரு தேடலாக ஆகிறது. அது என்ன?

ஒரு பெண் தன் காதலை மறுத்தால், ஆண் பெரும் துயரத்திற்கு ஆளாகிறான். முட்டாளாக இருந்தால், ஆசிட் அடிக்கிறான். இங்கே ஈகோ என்பதன் பங்கினை மறுக்க முடியாது. என் நண்பன் ஒருவன் ஒரு பெண்ணைக் காதலித்தான். இது எங்கள் நட்பு வட்டத்தில் மட்டுமல்லாது எல்லோருக்கும் தெரியும். அந்த காதலில் அவன் தோல்வி அடைந்தான். அவனைத் தேற்றிக்கொண்டு வருவது பெரிய வேலையாக ஆனது. அதே நண்பர்கள் குழுவுல் இன்னொருவனும் காதலித்தான். அடியேன் மட்டுமே அதை அறிவேன். அவனும் காதலில் தோற்றான். ஒரு வாரத்தில் ‘நம்ம என்ன மச்சி செய்ய?’ என்று சகஜமானான்.

எனது நம்பிக்கை, பலருக்கும் தெரிந்த காதலாக இருக்கும்போது அது பலருக்கும் தெரிந்த தோல்வியாக ஆகிறது. சைக்கிளில் இருந்து விழுந்தவன் ‘யாரும் பார்த்திட்டாங்களா?’என்று பார்க்கும் மனநிலை. ஈகோ எவ்வளவு தூரம் அடிவாங்குகிறதோ, அவ்வளவு தூரம் வலி அதிகரிக்கிறது. ஒருவன் தன்னைக் காதலிக்கிறான் என்பது ஒரு பெண்ணின் ஈகோவை திருப்திப்படுத்துகிறது. ஒரு ஆணுக்கும் அப்படியே. எனவே ஈகோவிற்கு காதலுக்குமான தொடர்பையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

எந்த பெண் வெறுத்தால் ஈகோ காயமடைகிறதோ, அதே பெண் நேசித்தால் ஆண் அவளிடம் சரணடைகிறான். ஆச்சரியமாக ஈகோ அங்கே இல்லாமல் ஆகிறது. சரணாகதி எனும் விஷயம் பக்தியிலும் காதலிலும் மட்டுமே காணக்கிடைப்பதாக இருக்கிறது. ‘அவ  சந்தோசம் தான் முக்கியம்...அவர் சொன்னால் சரியாத்தான் இருக்கும்’ என்று வாழும் பல தம்பதிகளை நான் அறிவேன். (ஆமாம் பாஸ்..அதுவும் லவ் தான்!)

’லவ் பண்ணும்போது செக்ஸ் வச்சுக்காதீங்கப்பா..அப்படி வச்சுக்கிட்டா, அட்ராக்சன் குறைஞ்சிடுது. அப்படியே கொஞ்சநாள்ல லவ் போயிடுது’என்று சீரியஸாக ஒரு ஆபீஸ் நண்பர் சக நண்பர்களிடம் அட்வைஸ் செய்வது வழக்கம். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது!

ஒரு காதல் ஜோடியை நான் அறிவேன். அவன் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் இருந்தான். அவள் காலேஜில் படித்துக்கொண்டிருந்தாள். தெய்வீகக் காதல் தான். பிறகு அவள் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்குப் போனாள். கொஞ்சநாளில், காதல் பணால். எனவே பொருளாதாரமும் ‘ஆம்பளை ஒருபடி மேலே இருக்கணும்’ என்று இருவருமே(!) நினைப்பதும் காதலைப் பாதிக்கும் அம்சங்களாகின்றன.

‘எனக்காகவே ஒருவன்...எனக்கா வாழ ஒருத்தி’ எனும் திருப்தியும் காதலுக்கு ஒரு காரணமாகிறது. ‘எனக்காகவா இவ்வளவு நேரம் காத்திருக்கிறாய்? எனக்காகவா இதை வாங்கி வந்தாய்?’ என ஒருவருக்கொருவர் காட்டும் அக்கறை, காதலில் உள்ள ஸ்பெஷல் விஷயம்.


பள்ளிப்பருவத்தில் மட்டுமல்லாது ஐம்பது வயதிலும் கூட காதல் வருகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், எப்போது வந்தாலும் மனதிற்கு கிளர்ச்சி தருகிறது. எத்தனை பேர் இருந்தாலும், காதலன்/காதலியைப் பார்க்கும்போது பொங்கும் சந்தோசமே தனி தான். ‘காதலித்துப் பார்’ எனும் வைரமுத்து கவிதை தான் ஞாபகம் வருகிறது.

இன்னும் வேண்டுமென்றால்,
எனது மன்மதன் லீலைகள் நாவலையும் நீங்கள் படித்துக்கொள்ளலாம். சரி, அதெல்லாம் இருக்கட்டும். காதல் என்பது என்ன?.................எனக்கு நிஜமாத் தெரியாது பாஸ்!

எனக்கு மட்டுமில்லை, இங்கே யாருக்கும் சரியாகத் தெரியாது. நான்கு குருடர்கள் யானையைத் தடவிப்பார்த்த கதையாகத்தான் காதலைப் பற்றி அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறோம். சில இடங்களில் அது இனக்கவர்ச்சியாகவும், சில இடங்களில் சரணாகதியாகவும், சில இடங்களில் அதையும் தாண்டிப் புனிதமானதாகவும் இருக்கிறது.

’கழுதை எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்..திரைக்கதைக்கும் இதற்கும் என்னய்யா சம்பந்தம்’ என்கிறீர்களா?

மேலே சொன்னபடி, காதல் என்பது பல பரிமாணங்களைக் கொண்ட பிரமாண்டமான விஷயமாக இருக்கிறது. மேலே சொன்ன வகைகளில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு, நாம் கதை சொல்லலாம். இனக்கவர்ச்சியா? (பன்னீர் புஷ்பங்கள், துள்ளுவதோ இளமை) ஈகோ பிரச்சினையா?(குஷி, வசந்தமாளிகை) சரணாகதியா?(தேவதாஸ், வாழ்வே மாயம்) அல்லது உங்கள் வாழ்வில் நீங்கள் பார்த்த புதிய கோணமா?

எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அதைச் சுற்றி கேரக்டர்களை வடிவமைக்கும்போது அல்லது உருவாக்கிய கேரக்டர்கள் மேல் இந்த தீமைப் போடும்போது, காதல் ஜெனர் கிடைக்கும். இதனால் தான் காதல் என்பது அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக இருக்கிறது. பேசித் தீராத விஷயமாக காதலை படைப்பாளிகள் கொண்டாடுகிறார்கள்.

இனி காதல் ஜெனருக்குள் நுழைவோம்..

(தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 55"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.