Tuesday, September 8, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 55

காதல் - ஜெனர்

கதையில்லாமல்கூட எத்தனையோ தமிழ் சினிமாக்கள் வந்திருக்கின்றன. ஆனால் காதல் இல்லாமல் தமிழ் சினிமா வருவது அபூர்வம். அந்தவகையில் காதல் என்பது ஏ ஸ்டோரியாகவும் பி ஸ்டோரியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஜெனராக இருக்கிறது. ’என்னய்யா இது...இவங்களுக்கு லவ்வை விட்டால் ஒன்னும் தெரியாதா?’ என்ற விமர்சனம் சினிமா மேல் வைக்கப்படுகின்றது. ஆனால் காதலைப் பற்றி சினிமா மட்டும் தான் பேசுகின்றதா?

கதைகளும் காவியங்களும் கவிதைகளும் பல நூற்றாண்டு காலமாக பேசிக்கொண்டே இருக்கின்றன. எவ்வளவு எழுதினாலும் பேசித் தீராத விஷயமாக எழுத்தாளர்களுக்கு காதல் இருக்கிறது. அதையே சினிமாவும் செய்கின்றது. சில நேரங்களில் கிளுகிளுப்பு அம்சமாக, சில நேரங்களில் தீவிர ஆய்வுக்குரிய விஷயமாகவும் காதல் சினிமாவில் பேசப்பட்டு வருகின்றது. தேவதாஸுடன் நிறுத்தியிருக்கலாம். அல்லது வசந்தமாளிகையுடன்..அட்லீஸ்ட் வாழ்வே மாயம் படத்துடன் காதல் படங்களை நிறுத்தியிருக்கலாம். இன்னும் ஏன் அலைபாயுதே, காதல், பருத்திவீரன் என வந்துகொண்டே இருக்கின்றன? அவை ஏன் வெற்றியும் பெறுகின்றன?

இதற்கு முதலில் காதல் என்றால் என்ன என்று புரிந்துகொள்ள முயற்சிப்போம். காதல் ஜெனரையும் புரிந்துகொள்ள இது உதவும்.

காதலின் ஆரம்பம், இனக்கவர்ச்சி தான். ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும் வரும் ஈர்ப்பு தான் அடிப்படை. பள்ளிக்காலங்களில் வரும் பல காதல்களும் இந்த இனக்கவர்ச்சி வட்டத்தைத் தாண்டாதவை.

நட்பும் செக்ஸும் கலந்த கலவையே காதல் என்று ஒரு வரையறை கொடுக்கலாம். உயிரையே கொடுக்கும் நட்புடன், இனக்கவர்ச்சி சேரும்போது காதலாகிறது. செக்ஸ் வைத்துக்கொண்டே, ஜஸ்ட் நண்பர்களாகவே இருந்த ஆத்மாக்களை நான் அறிவேன். எனவே இந்த டெஃபனிசனை முடிவானதாக வைத்துக்கொள்ள முடியாது. (சத்திய சோதனை!)

உடல் கவர்ச்சியை மீறிய, சாகும்வரை ஒட்டி உறவாடிய, உறவாடும் காதலையும் நாம் பார்க்கிறோம். ‘உனக்காக நான் எதுவும் செய்வேன்’ எனும் இருதரப்பு(!) மனநிலையில் இருந்து வருவது அத்தகைய காதல். பெரும்பாலான சினிமாக்கள் முன்வைப்பது இத்தகைய காதலைத் தான். வாழ்க்கையில் அரிதான விஷயம் என்பதால், இதற்கு கவர்ச்சி அதிகமாக இருப்பது யதார்த்தம் தான்.

ஆனாலும் காதல் என்பது எல்லா இடங்களிலும் அப்படி இல்லை. காதலில் நடப்பது என்ன? நீட்சேவும் ஓஷோவும் ’காதல் என்பது மீண்டும் தாயைத் தேடி ஒருவன் மேற்கொள்ளும் பயணம்’ என்கிறார்கள். ஒருவன் பருவ வயது வந்ததுமே, தாயிடமிருந்து விலக்கப்படுகிறான். ‘நான் ஆண்..நீ பெண்’ எனும் பிரிவினை இயல்பாகவே தாயிடம்கூட வந்துவிடுகிறது. எனவே மீண்டும் தாயின் அரவணைப்பைத் தேடும் பயணமாக காதலும், மீண்டும் கருவறையை அடையும் முயற்சியாக காமமும் இருப்பதாக ஓஷோ ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ நூலில் சொல்கிறார். எல்லோருமே ஒரு வகையில் பிள்ளையார் தான். அம்மா மாதிரி துணை தேடும் ஆட்கள் தான்.

சரி, இது தான் காதல் என்று முடித்துவிடலாமா?

அம்மா இறந்தால் அல்லது பிரிந்தால், எவனும் தற்கொலை செய்வதில்லை. காதலி/காதலன் பிரிந்தால் தற்கொலை செய்கிறார்கள். காதலின் பிரிவு என்பது தாங்க முடியாத வலியைக் கொடுக்கிறது. தாய், தந்தையின் பிரிவைவிட அதிக வலி கொடுக்கும் விஷயமாக இருக்கிறது. இந்த இடத்தில் அது தாய்ப்பாசத்தையும் தாண்டிய ஏதோவொரு தேடலாக ஆகிறது. அது என்ன?

ஒரு பெண் தன் காதலை மறுத்தால், ஆண் பெரும் துயரத்திற்கு ஆளாகிறான். முட்டாளாக இருந்தால், ஆசிட் அடிக்கிறான். இங்கே ஈகோ என்பதன் பங்கினை மறுக்க முடியாது. என் நண்பன் ஒருவன் ஒரு பெண்ணைக் காதலித்தான். இது எங்கள் நட்பு வட்டத்தில் மட்டுமல்லாது எல்லோருக்கும் தெரியும். அந்த காதலில் அவன் தோல்வி அடைந்தான். அவனைத் தேற்றிக்கொண்டு வருவது பெரிய வேலையாக ஆனது. அதே நண்பர்கள் குழுவுல் இன்னொருவனும் காதலித்தான். அடியேன் மட்டுமே அதை அறிவேன். அவனும் காதலில் தோற்றான். ஒரு வாரத்தில் ‘நம்ம என்ன மச்சி செய்ய?’ என்று சகஜமானான்.

எனது நம்பிக்கை, பலருக்கும் தெரிந்த காதலாக இருக்கும்போது அது பலருக்கும் தெரிந்த தோல்வியாக ஆகிறது. சைக்கிளில் இருந்து விழுந்தவன் ‘யாரும் பார்த்திட்டாங்களா?’என்று பார்க்கும் மனநிலை. ஈகோ எவ்வளவு தூரம் அடிவாங்குகிறதோ, அவ்வளவு தூரம் வலி அதிகரிக்கிறது. ஒருவன் தன்னைக் காதலிக்கிறான் என்பது ஒரு பெண்ணின் ஈகோவை திருப்திப்படுத்துகிறது. ஒரு ஆணுக்கும் அப்படியே. எனவே ஈகோவிற்கு காதலுக்குமான தொடர்பையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

எந்த பெண் வெறுத்தால் ஈகோ காயமடைகிறதோ, அதே பெண் நேசித்தால் ஆண் அவளிடம் சரணடைகிறான். ஆச்சரியமாக ஈகோ அங்கே இல்லாமல் ஆகிறது. சரணாகதி எனும் விஷயம் பக்தியிலும் காதலிலும் மட்டுமே காணக்கிடைப்பதாக இருக்கிறது. ‘அவ  சந்தோசம் தான் முக்கியம்...அவர் சொன்னால் சரியாத்தான் இருக்கும்’ என்று வாழும் பல தம்பதிகளை நான் அறிவேன். (ஆமாம் பாஸ்..அதுவும் லவ் தான்!)

’லவ் பண்ணும்போது செக்ஸ் வச்சுக்காதீங்கப்பா..அப்படி வச்சுக்கிட்டா, அட்ராக்சன் குறைஞ்சிடுது. அப்படியே கொஞ்சநாள்ல லவ் போயிடுது’என்று சீரியஸாக ஒரு ஆபீஸ் நண்பர் சக நண்பர்களிடம் அட்வைஸ் செய்வது வழக்கம். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது!

ஒரு காதல் ஜோடியை நான் அறிவேன். அவன் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் இருந்தான். அவள் காலேஜில் படித்துக்கொண்டிருந்தாள். தெய்வீகக் காதல் தான். பிறகு அவள் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்குப் போனாள். கொஞ்சநாளில், காதல் பணால். எனவே பொருளாதாரமும் ‘ஆம்பளை ஒருபடி மேலே இருக்கணும்’ என்று இருவருமே(!) நினைப்பதும் காதலைப் பாதிக்கும் அம்சங்களாகின்றன.

‘எனக்காகவே ஒருவன்...எனக்கா வாழ ஒருத்தி’ எனும் திருப்தியும் காதலுக்கு ஒரு காரணமாகிறது. ‘எனக்காகவா இவ்வளவு நேரம் காத்திருக்கிறாய்? எனக்காகவா இதை வாங்கி வந்தாய்?’ என ஒருவருக்கொருவர் காட்டும் அக்கறை, காதலில் உள்ள ஸ்பெஷல் விஷயம்.


பள்ளிப்பருவத்தில் மட்டுமல்லாது ஐம்பது வயதிலும் கூட காதல் வருகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், எப்போது வந்தாலும் மனதிற்கு கிளர்ச்சி தருகிறது. எத்தனை பேர் இருந்தாலும், காதலன்/காதலியைப் பார்க்கும்போது பொங்கும் சந்தோசமே தனி தான். ‘காதலித்துப் பார்’ எனும் வைரமுத்து கவிதை தான் ஞாபகம் வருகிறது.

இன்னும் வேண்டுமென்றால்,
எனது மன்மதன் லீலைகள் நாவலையும் நீங்கள் படித்துக்கொள்ளலாம். சரி, அதெல்லாம் இருக்கட்டும். காதல் என்பது என்ன?.................எனக்கு நிஜமாத் தெரியாது பாஸ்!

எனக்கு மட்டுமில்லை, இங்கே யாருக்கும் சரியாகத் தெரியாது. நான்கு குருடர்கள் யானையைத் தடவிப்பார்த்த கதையாகத்தான் காதலைப் பற்றி அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறோம். சில இடங்களில் அது இனக்கவர்ச்சியாகவும், சில இடங்களில் சரணாகதியாகவும், சில இடங்களில் அதையும் தாண்டிப் புனிதமானதாகவும் இருக்கிறது.

’கழுதை எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்..திரைக்கதைக்கும் இதற்கும் என்னய்யா சம்பந்தம்’ என்கிறீர்களா?

மேலே சொன்னபடி, காதல் என்பது பல பரிமாணங்களைக் கொண்ட பிரமாண்டமான விஷயமாக இருக்கிறது. மேலே சொன்ன வகைகளில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு, நாம் கதை சொல்லலாம். இனக்கவர்ச்சியா? (பன்னீர் புஷ்பங்கள், துள்ளுவதோ இளமை) ஈகோ பிரச்சினையா?(குஷி, வசந்தமாளிகை) சரணாகதியா?(தேவதாஸ், வாழ்வே மாயம்) அல்லது உங்கள் வாழ்வில் நீங்கள் பார்த்த புதிய கோணமா?

எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அதைச் சுற்றி கேரக்டர்களை வடிவமைக்கும்போது அல்லது உருவாக்கிய கேரக்டர்கள் மேல் இந்த தீமைப் போடும்போது, காதல் ஜெனர் கிடைக்கும். இதனால் தான் காதல் என்பது அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக இருக்கிறது. பேசித் தீராத விஷயமாக காதலை படைப்பாளிகள் கொண்டாடுகிறார்கள்.

இனி காதல் ஜெனருக்குள் நுழைவோம்..

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

  1. Thalaiva... you are are the living sujatha... Keep it up...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.