Sunday, July 31, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_31

“செங்கோவி, இது பெரிய புராஜக்ட். வேலை அமெரிக்கால. அங்க போறதுல உங்களுக்கு அப்ஜெக்சன் ஏதும் இல்லையே?”

அமெரிக்காவா..அப்ஜெக்சனா..என்னாங்கடா பேசுறீங்க..எவனாவது நம்மளை வைச்சு காமெடி கீமெடி பண்றானா?

மதனுக்கு கால் பண்ணினேன். அவனும் ஒரு சந்தோசமான செய்தியை வைத்திருந்தான்.

“நீ நாய்மாமன் ஆகப் போறடா” என்றான்.

”என்னடா சொல்றே?” என்றேன்.

“ஜமீலா கன்சீவ் ஆயிருக்காடா”

“அப்படியா..அப்போ நீ கிழவன் ஆயிட்டயா...சந்தோசம்டா” என்றேன்.

பிறகு டெல்லி விஷயத்தைச் சொன்னேன்.

“அமெரிக்காவா? நல்ல கம்பெனியான்னு விசாரிடா. ஏதாவது டுபாக்கூர் கம்பெனியா இருக்கப்போகுது” என்றான்.

கம்பெனிப் பெயர் சொன்னேன். 

”அந்தக் கம்பெனியா..அய்யர் அங்க தான்டா இருக்கான். ஃபோன் நம்பர் தர்றேன். பேசு” என்றான்.

அய்யர் என்று அழைப்பட்ட கோபால கிருஷ்ண அய்யங்கார், நான் சென்னைக் கம்பெனிக்கு வரும் முன் இங்கு வேலை பார்த்தவன். எங்களுக்கு ஜூனியர். எனக்கு நேரடித் தொடர்பில்லை என்பதால் தயங்கியவாறே அழைத்தேன்.

“சின்னக் கம்பெனி பாஸ். புதுசு. ஆனால் கை நிறையக் காசு. வேற ஒன்னும் பிரச்சினை கிடையாது. இவங்களுக்கு சீனா, சிங்கப்பூர்னு பல இடங்கள்ல புராஜக்ட் போயிக்கிட்டு இருக்கு. நீங்களும் வாங்க” என்றான். சந்தோசமாக அந்த வேலைக்கு ஒத்துகொண்டேன்.

மும்பைக் கம்பெனிக்கு மெயில் அனுப்பி ‘உடனே சேர முடியாது. மூன்று மாதம் டைம் வேண்டும்’ என்றேன். அவர்களும் சரியென்று சொல்ல, அதை ஒரு சேஃப்டிக்கு க்ளோஸ் பண்ணாமல் வைத்துகொண்டேன்.

நண்பர்களுக்கு விஷயம் பரவியது. எல்லோரும் கேட்ட ஒரே கேள்வி “அப்போ, மதன்?” என்பது தான்.

நெருங்கிய நண்பர்கள் அவனைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். “என்னடா மாப்ளே, நீ வெளிநாடு போறதால கம்பெனியைப் பார்த்துக்க ஆள் வேணும்னு அவனைக் கொண்டு வந்தே. இப்போ அவன் கிளம்பிட்டான். அப்போ கம்பெனியை நீ தான் பார்த்துக்கப்போறியா?” என்றார்கள்.

கம்பெனியிலும் இந்தப் பேச்சு தொடர்ந்து. “இவர் கிளம்புவாருன்னு பார்த்தா, இவருக்கு ஆப்பு வைச்சிட்டு அவர் கிளம்பிட்டார்” என்று சொல்லிச் சிரித்தார்கள்.

மதன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானான். நண்பனின் வளர்ச்சியில் கோபம் கொள்ள ஒன்றும் இல்லையென்று தெரிந்தது. ஆனாலும் மற்றவர்கள் பேசுவதைக் கேட்க அவமானமாக இருந்தது.

ஜமீலாவும் நேரம் காலம் புரியாமல் “பரவாயில்லைங்க..நம்மால தான் முடியலை. அண்ணனாவது போறாரே” என்றாள்.

ஜமீலா தன்னை குத்திக்காட்டுவதாக மதன் நினைத்தான்.

மதனின் மேனேஜரும் “அவர் போனா என்ன மதன்? எனக்கு நீங்க இருக்குறதே போதும்” என்று குத்தினார்.

என்னைப் பற்றிப் பேசுவதையே வெறுக்கத்தொடங்கினான் மதன். தொடர்ந்து என் மீதும் அந்த வெறுப்பு படிந்தது.

“அமெரிக்கா ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது. உலகத்துலயே கேவலமா இங்க்லீஸ் பேசுறது அமெரிக்கன்ஸ் தான். பெட்ரோலுக்காக அவங்க பண்ண அநியாயம் கொஞ்சநஞ்சமா? எத்தனை போர்..” என்று அமெரிக்காவையும் திட்டித் தீர்த்தான்.

எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியவில்லை. நண்பர்களிடம் விடைபெற்று முதல் விமானப் பயணத்தை அமெரிக்கா செல்வதன் மூலம் துவக்கினேன்.

என் கல்லூரி நண்பன் பழனிக்கு மதனின் நிலை நன்றாகப் புரிந்தது. என்னை வழியனுப்பி விட்டு மதனிடம் பேசும்போது, மதனின் பிரச்சினையை அவன் புரிந்து கொண்டான். பிறகு சில மாதம் கழித்து என்னிடம் சாட்டில் விஷயத்தைச் சொன்னான் பழனி.

“அவன் ரொம்ப டிஸ்டர்ப் ஆயிருக்கான்யா. அவனுக்கும் யூ.கே.ல ஏதாவது வேலை கிடைக்கான்னு பாரு. ஐரோப்பா போகலைன்னா அவன் மெண்டல் ஆயிடுவான் போலிருக்கு”

எனக்கு கவலையாய் இருந்தது. சென்னைக் கம்பெனி நண்பர்களிடம் பேசினேன். ஐரோப்பாவில் உள்ள சில கம்பெனிகளின் லிஸ்ட் நண்பர்களால் தேடி எடுக்கப்பட்டு, மதனுக்கு கொடுக்கப்பட்டது. மதன் தீவிரமாய் வேலை தேட ஆரம்பித்தான்.

நான் தொடர்ந்து அவனிடம் பேசியவாறே இருந்தேன். அவனும் என்னிடம் வழக்கம்போல் பேசியபடியே இருந்தான். 

ஜமீலா அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மதன் சந்தோசத்தின் உச்சிக்கே போனான். எப்போதும் தன் மகன் சந்தோசமாய் இருக்கவேண்டும் என ‘சந்தோஷ்’ என்று பெயரிட்டான்.

வெகுநாட்கள் எங்களுடன் தொடர்பற்று இருந்த கல்லூரி நண்பன் சிவா, திடீரென மதனைத் தொடர்பு கொண்டான். மதனை அவனால் மறக்க முடியவில்லை போலும். பிரவீணா மேட்டரில் கட்டி உருளாத குறையாய் சண்டை போட்டவர்கள் ஆயிற்றே.

“சிவா, நல்லா இருக்கிறயா..இப்போ எங்கடா இருக்கே?” என்றான் மதன்.

“யூ.கே.ல” என்றான் சிவா.
”யூ.கேவா? அங்க நீ எப்படிடா போனே?”
கம்பெனி தன்னை அங்கு ஒரு புராஜக்ட்டுக்கு அனுப்பியதையும் தொடர்ந்து மேற்படிப்புக்காக தான் அங்கேயே தங்கிவிட்டதையும் சிவா சொன்னான்.

“அப்புறம் மதன். பெர்சனல் லைப் எப்படி போய்க்கிட்டு இருக்கு?”
“ஒரு பையன் இருக்காண்டா. ஒன்னும் பிரச்சினை இல்லை. அப்புறம் யூ.கே.போக என்னென்ன வழில ட்ரை பண்ணலாம். சொல்லு.”

தொடர்ந்து ஐரோப்பா செல்ல எளிதான வழிகள் என்னென்ன என்றும் எடுத்துச் சொன்னான்.

சிவாவின் அறிவுரைகள் மதனுக்கு உதவியாய் இருந்தன. அடுத்த சில மாதங்களில் நார்வேயில் ஒரு வேலையை வாங்கினான் மதன்.

தன் நெடுநாள் கனவான நார்வே வேலை கிடைத்த சந்தோசத்தில் தலைகால் புரியாமல் ஆடத் துவங்கினான்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_31"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

57 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, July 30, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_30


யாரும் எதிர்பாராத விதத்தில் அவனது விசா அப்ளிகேசன் ரிஜெக்ட் ஆனது.

மதன் இடிந்து போனான்.

சைக்கிளில் செல்கையில் கீழே விழுந்து விட்டால், முதலில் நாம் பார்ப்பது யாராவது பார்த்துவிட்டார்களா என்பதையே. எவ்வளவு குறைவான நபர்கள் பார்த்தார்களோ அவ்வளவு குறைவான வலி/வருத்தம் ஏற்படும். காதல் தோல்வி உட்பட எல்லாத் தோல்வியிலும் வருத்தத்தின் அளவு அறிந்தோரின் எண்ணிக்கையுடன் நேரடித் தொடர்பு உடையது.

மதன் வெளிநாடு செல்வதையும், என்னை அதற்காகவே கம்பெனிக்குக் கொண்டு வந்ததையும் எல்லோரிடமும் சொல்லி இருந்தான். என் கல்லூரி நண்பர்கள் முதல் எங்கள் மேனேஜர் வரை எல்லோரும் அறிந்திருந்தார்கள். அவர்கள் அனைவரின் முகத்திலும் எப்படி விழிப்பது என்ற கவலையில் விழுந்தான்.

ஜமீலா ஆறுதலாய் இருந்து அவனைத் தேற்றினாள். ஆறுமாதம் கழித்து மீண்டும் முயல்வோம் என்றாள். நானும் எப்பவும் போல் ‘இதெல்லாம் சப்பை மேட்டரு..விடுடா மாப்ளை. அடுத்துப் பார்த்துக்கலாம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

அடுத்த சில மாதங்களில் மதன் தெளிந்தான்.

எனக்கு என் வேலை பற்றிய கவலை அதிகம் ஆனது. ஒரு வருடம் கழித்து பெர்மனண்ட் செய்வார்களா என்று உறுதியாகத் தெரிந்து கொள்ள விரும்பினேன். மதனிடம் கேட்டேன்.

“நாம போய்க் கேட்டா பெர்மனண்ட் ஆக்குவோம்னு தான் சொல்வாங்க. அப்புறம் ஒரு வருசம் முடியவும் ஏதாவது கதை சொல்வாங்க. இந்த மேட்டர்ல உண்மையான நிலவரம் சுகீலாவுக்கு நல்லாத் தெரியும். அவகிட்ட பாபு கேட்டான்னா உண்மை வெளில வந்திடும். ” என்று சொல்லி பாபுவிடம் அழைத்துப் போனான்.

பாபுவிடம் எப்போது சென்றாலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கும். இப்போதும் அப்படியே ஆனது. மிகவும் சின்சியராக வேலை செய்துகொண்டிருந்தான். பக்கத்தில் போய் நின்றதும் மதன் ஷாக் ஆனான்.

”பன்னிப்பயலே, ஏண்டா ஜிப்பை திறந்து போட்டிருக்கே?” என்றான் மதன்.

பாபுவும் பதறிப்போய் குனிந்து பார்த்தான். எழுந்து பூட்டியவாறே ”ப்ச்..பார்த்தியா..பூட்டாம விட்டுட்டாங்க பாரு..ச்சே!”என்றான்.

”யோகக்காரண்டா நீ” என்று மதன் பாபுவைப் பாராட்டிவிட்டு விஷயத்திற்கு வந்தான்.

பாபுவுக்கு ஏற்கனவே விஷயம் தெரிந்திருந்தது.

“மதன், இந்த புராஜக்ட்டுக்கு டிசைன் ஒர்க் எல்லாம் இன்னும் 3 மாசத்துல முடிஞ்சிடும். அதுக்கப்புறம் டிசைன்ல ஆட்களைக் குறைக்கப் போறாங்க, என்னையும் சேர்த்து. நான் பெர்மனெண்ட் எம்ப்ளாயி. எங்களுக்கே இப்படின்னா, செங்கோவியை எப்படி வச்சிருப்பாங்க? அதனால தான் அவரை காண்ட்ராக்ட்ல எடுத்தது. உங்களுக்கு தெரியும்னு நினைச்சேன்”

“எனக்குத் தெரியாது பாபு.” என்றான் மதன்.

அடுத்த கட்ட நடவடிக்கை மீண்டும் வேலை தேடும் படலம் என்று புரிந்து போனது. நண்பர்களுக்கு தகவல் பறந்தது. எல்லோரும் தெரிந்த இடங்களில் விசாரித்தார்கள். மும்பையில் ஒரு கம்பெனிக்கு ஆள் தேவையென்றும் அட்வெர்டைஸ்மெண்ட் கொடுக்காமலேயே ஆள் எடுப்பது தெரிய வந்தது. ரெசியூம் ரெடி பண்ணி அனுப்பி வைத்தேன். இண்டர்வியூவிற்கு வரச்சொல்லி அழைப்பு வர, மும்பை சென்று அட்டெண்ட் செய்தேன். வேலையும் கிடைத்தது.

மதனிடம் சொன்னேன். சந்தோசப்பட்டான். சென்னை திரும்பியதும், ரிசைன் லெட்டர் கொடுத்தேன். கம்பெனி பதறியது. இன்னும் 4 மாதம் நான் இருந்தால் நல்லதே என்று யோசித்தது. ‘ஒரு வருடத்தில் பெர்மனெண்ட் ஆக்குகிறோம்’ என்று என் மேனேஜர் மூலம் தூது விட்டது.

நான் அவரிடம் ஒன்றே ஒன்று தான் சொன்னேன். “நாங்க ஐயா பெர்மனெண்ட் பண்ணுங்க, பண்ணுங்கன்னு கெஞ்சுவோம். அப்போல்லாம் பெர்மனெண்ட் ஆக்க மாட்டாங்க. ஃப்ரெண்ட்ஸ்க்கெல்லாம் தகவல் சொல்லி போராடி வேற வேலை வாங்கினதும் கூசாம ‘அதே சாலரி தர்றோம், இருந்துக்கோ’ன்னு சொல்வாங்களா? நாளைப்பின்ன நான் யார்கிட்டயாவது வேலைக்கு ரெஃபர் பண்ணச் சொல்லிக் கேட்க முடியுமா?” அவர் நல்லவர். “இவங்க கிடக்காங்க. நீங்க போங்க தம்பி” என்றார்.

வேலையில் இருந்து ரிலீவ் ஆகி ஊருக்குச் சென்றேன். 

மும்பை இண்டர்வியூ சென்றபோது வேறொரு தமிழரும் வந்திருந்தார். பேசிக்கொண்டிருக்கையில் மொபைல் நம்பர் பரிமாறிக்கொண்டோம். அவர் திடீரென்று அழைத்தார்.

“செங்கோவி, டெல்லில ஒரு கம்பெனிக்கு அர்ஜெண்டா ஆள் தேவைப்படுது. புராஜக்ட் கையில இருக்கு. ஆனா ஆள் இல்லாம கதறிக்கிட்டு இருக்காங்க. மும்பையை விட நல்லா இருக்கும். உடனே ரெசியூம் அனுப்புங்க”என்று மெயில் ஐடி தந்தார். 

அருகில் இருந்த பிரௌசிங் செண்டர் போய் மெயில் அனுப்பி விட்டு வெளியே வந்தேன். மொபைல் ரிங்கியது.

“ஹலோ..இஸ் இட் மிஸ்டர் செங்கோவி..பைப்பிங் எஞ்சினியர்?”
“எஸ்”
“நாங்க டெல்லில இருந்து கூப்பிடறோம். உங்க சிவி பார்த்தோம். யூ ஆர் செலக்ட்டேட்” என்றார் அந்தப் புண்ணியவான்.

‘என்னடா இது..பொதுவாக ரெண்டு மணி நேரம் இண்டர்வியூ என்ற பெயரில் டார்ச்சர் செய்து தானே வேலை தருவார்கள்? இதென்ன மன்னார்&மன்னார் கம்பெனியா?” என்று சந்தேகம் வந்தது.
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே போனார்.

“செங்கோவி, இது பெரிய புராஜக்ட். வேலை அமெரிக்கால. அங்க போறதுல உங்களுக்கு அப்ஜெக்சன் ஏதும் இல்லையே?”

அமெரிக்காவா..அப்ஜெக்சனா..என்னாங்கடா பேசுறீங்க..எவனாவது நம்மளை வைச்சு காமெடி கீமெடி பண்றானா?

(நாளை...தொடரும்)

மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_30"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

52 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, July 29, 2011

டிகிரி சர்ட்டிஃபிகேட் மட்டுமே வேலையை காப்பாற்றுமா?


‘படிப்புக்கு அவ்வளவு தான் மரியாதை, இல்லையாடா?” என்ற டயலாக் என் கல்லூரி நண்பர்களிடையே மிகவும் பிரபலம். காரணம் அதைக் கேட்ட சுரேஷும், கேட்கப்பட்ட கேப்டனும். கேப்டன் என்றால், கல்லூரியில்  கிரிக்கெட் டீம் கேப்டனாக இருந்து ‘கேப்டன்’ என்று பெயர் பெற்ற நண்பர்.

என்னைப் போன்றே கேப்டனும் ஏழ்மையான சூழ்நிலையில் ஒரு கிராமத்தில் இருந்து தட்டுத்தடுமாறி படித்து வந்தவர். நாங்கள் பயின்றது அரசுக் கல்லூரிகள் லிஸ்ட்டில் வரும் தன்னாட்சி பெற்ற மதுரை தியாகராசா பொறியியல் கல்லூரி. எனவே மதிப்பெண் அடிப்படையில் வரும் பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறைப் பட்டதாரிகள், தமிழ்வழியில் பள்ளிக்கல்வியை பயின்றவர்கள். இதை எங்கள் கல்லூரி நிர்வாகமும் புரிந்தே இருந்தது. 

எனவே முதல் இரு வருடங்களுக்கு பாடம் நடத்தும்போது தமிழிலும் சொல்வார்கள். அடுத்த ஆண்டில் அது கொஞ்சம் குறைந்து, இறுதி ஆண்டில் முழு ஆங்கிலத்திற்கு அனைத்து லெக்சரர்களும் மாறியிருபபர்கள். அது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

கேப்டனும் கல்லூரியிலும் பாஸ் பண்ணுவதற்கே ஆரம்ப வருடங்களில் போராடியவர்.சராசரி மதிப்பெண்களுடன் பி.இ. முடித்தார். அதன்பின் ஆங்கிலமும் வசப்பட்டு விட அடுத்து எம்.இ. முடித்தார். 

கல்லூரிக் காலம் முடிந்து, வேலை தேடும் படலம் தொடங்கியது. கேப்டனுக்கும் நல்ல ஒரு கம்பெனியில் செட்டில் ஆனார். அங்கு நல்ல பெயரும் சில வருடங்களில் கிடைத்தது. அதுவரை எந்தவொரு இடத்திலும் வேலையில் சேராமல்/நிலைக்காமல் சுரேஷ் போராடிக் கொண்டிருந்தார். சுரேஷ், படித்த நல்ல வேலையில் இருக்கும் பெற்றோரின் மகன். எனவே ஆரம்பக் காலம் முதல் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர். அவரும் பின்னர் கேப்டன் வழியில் எம்.இ. முடித்தார், அதிக மதிப்பெண்களுடன்.

துரதிர்ஷ்டவசமாக சுரேஷிற்கு வேலை எதுவும் அதன்பிறகும் கிடைக்கவில்லை. எனவே நண்பர்களின் உதவியை நாடினார். நம் கேப்டனும் தன் கம்பெனியில் பேசி, நண்பனுக்கு வேலை வாங்கிகொடுத்தார். அடுத்துத் தான் பிரச்சினை ஆரம்பம் ஆனது. கம்பெனி எதிர்பாப்பது முதலில் குவாலிட்டியை, அடுத்து குவாண்ட்டிடியை. தரமான முறையில் வேலை செய்வது எல்லோருக்கும் வருவதல்ல. பெரும்பாலானோர் ரஃப் அடி அடித்து வேலையை முடிப்பவர்களே. அவர்களை கம்பெனி அதற்கே இருக்கும் தரம் அதிகம் தேவைப்படாத புராஜக்ட்களில் போட்டு, வேலை வாங்கிக் கொள்ளும். தரம் அதிகம் எதிர்பார்க்கும் க்ளையண்ட்/ புராஜக்ட்களில் ரொம்ப தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்களை வைத்துக் கொள்ளும். சிலர் இரண்டுக்குமே ரெடியாக இருப்பர்.
சுரேஷிடம் இருந்த பிரச்சினை குவாலிட்டி, குவாண்டிடி இரண்டுமே இல்லாதது தான். ஒரு வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதும், அப்படி முடிக்கும் வேலையிலும் ஆயிரத்தெட்டு கம்ப்ளைண்ட்ஸ். தொடர்ந்து அவருக்கு வார்னிங் கொடுக்கப்பட்டுகொண்டே வந்தது.

இன்னொரு பக்கம் நம் கேப்டன் ‘தெளிவாக’ அடித்து விளையாடிக்கொண்டிருந்தார். கம்பெனி நிர்வாகம் சுரேஷ் விஷயத்தில் பொறுமை இழந்து கேப்டனை அழைத்தது. கேப்டனுக்கு நல்ல பெயர் இருந்ததால் சுரேஷுக்கு அறிவுரை சொல்லும்படியும், இல்லையென்றால் வேலையை விட்டு தூக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்தது. கேப்டனும் சுரேஷிடம் ‘பார்த்து இருந்துக்கோ மச்சி. இப்படிச் சொல்றாங்க’ என்ற போது சுரேஷ் சொன்ன பதில் தான் ” படிப்புக்கு அவ்வளவு தான் மரியாதை, இல்லையாடா?”. “நீ எப்படி படிச்சே, என்ன மார்க் எடுத்தே...நான் எப்படிப் படிச்சேன், என்ன மார்க் எடுத்தேன்னு நினைச்சுப்பாருடா. அப்போ நான் படிச்சதுக்கு, என் மார்க்குக்கு ஒரு மரியாதையும் இல்லை. அப்படித் தானே?” என்று சுரேஷ் தொடர்ந்து கேட்க, கேப்டன் நொந்து போனார். 

பெரும்பாலான மாணவர்கள் நினைப்பது நல்ல மார்க் மட்டுமே தன்னைக் கரையேற்றும் என. ஆனால் கம்பெனிகளுக்குத் தேவை ‘எக்ஸிக்யூடிவ்ஸ்’ தான். ஒரு செயலை நிறைவேற்றும்-எக்ஸிகியூட் செய்யும் ஆட்களே கம்பெனிகள் எதிர்பார்ப்பது. டிகிரி சர்ட்டிஃபிகேட்டும் மார்க் ஷீட்டும் இண்டர்வியூ முடிந்ததும் மதிப்பிழந்து விடுகின்றன. அதன்பிறகு கம்பெனி அது பற்றிக் கவலைப் படுவதில்லை. ஏனென்றால் எந்தவொரு க்ளையண்ட்டும் உங்கள் மார்க் ஷீட்டுக்காக ‘பில்’ பண்ணுவதில்லை.

சில பதவிகள் குறிப்பிட்ட படிப்பைக் கோரும். அதற்காக அந்தப் படிப்பு முடித்த சில பேக்குகள் உள்ளே வந்து விடுவதும் உண்டு. அவர்களாலும் சுரேஷ் போல் அதிகநாட்கள் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. ஒரு வேலையைக் கொடுத்தால் எந்த அளவிற்கு உற்சாகத்துடன், குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கின்றீர்கள் என்பதே கம்பெனிகளின் தேவை. சில நேரங்களில் கோல்மால்களைக் கூட கம்பெனிகள் சந்தோசமாக அனுமதிக்கும் என்பது அசமஞ்ச மாணவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய அதிர்ச்சிச் செய்தி.

அப்படியென்றால் படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லையா? அப்புறம் ஏன் கம்பெனிகள் அதிக மார்க் எடுத்தவனை கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்ந்தெடுக்கின்றன என்பது அடுத்து எழும் கேள்வி. நம் மார்க் ஷீட் ஒரு வகையில் நம் கேரக்டரையும் பிரதிபலிக்கவே செய்யும். படிப்பும் கல்லூரிக் காலத்தில் ஒரு வேலையே. அந்த வேலையை எந்த அளவிற்கு அக்கறையுடன் செய்திருக்கின்றோம் என்பதைக் கண்டுபிடிக்க மார்க்‌ஷீட்டும் ஒரு வழி. ஆனால் அதுவே முழுக்க சரியான முறையும் அல்ல. வேறு மாற்று வழிகள் இல்லாத சூழலில், மார்க் ஷீட்டையே கம்பெனிகள் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. 

எனது நண்பர் ஹிசாம் அலி ஒரு டஜனுக்கும் மேல் அரியர்ஸ் வைத்திருந்தவர். கடைசி 1 1/2 வருடங்களில் அத்தனை அரியர்ஸையும் வெறியோடு படித்து க்ளியர் செய்தார். அது தான் அவர் டார்கெட். அதைக் குறித்த நேரத்தில் முடித்தார். இன்று வரை அவர் அப்படியே! புராஜக்ட் டார்கெட் டேட்டை நெருங்கும்வரி கெக்கேபிக்கே என்று இருப்பதும் கடைசியில் லபோதிபோ என அடித்துக்கொண்டு வேலையை முடிப்பதும் அவர் வழக்கம்.  சரியான நேரத்தில் வேலையை முடிப்பவர் என்றுகம்பெனியும் அவரைக் கொண்டாடுகிறது. அதைத் தான் சொல்கிறேன், மார்க் ஷீட்டும் உங்கள் கேரக்டரைக் காட்டும்.

டிகிரி சர்ட்டிஃபிகேட் என்பது வெறும் விசிட்டிங் கார்டு. அக்கறையும் செயல்திறனுமே உங்களை செய்யும் இடத்தில் முன்னேற்றும்.

முக்கி வாங்கிய மதிப்பெண்களும் வாராது காண் கடைவழிக்கே!
நன்றி: லீலையில் மயங்கி வேலையைப் பற்றி எழுதாமல் விட்ட என்னை நறுக்கென்று குட்டிச் சொன்ன நண்பர் ‘மெட்ராஸ் பவன்’ சிவக்குமாருக்கு!

வேண்டுகோள் : மேலதிக/விடுபட்ட விபரங்களை அனுபவம் வாய்ந்தோர் பின்னூட்டத்தில் சொல்லி, பதிவைப் படிப்போர்க்கு உதவுங்கள்.
மேலும் வாசிக்க... "டிகிரி சர்ட்டிஃபிகேட் மட்டுமே வேலையை காப்பாற்றுமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

67 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, July 27, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_29


மதனுக்கு அம்மை சரியான இரண்டு நாளில் எனக்கு அம்மை போட்டது. 

”ஒரு தடவை வந்தா இன்னொரு தடவை வராதுன்னு சொல்வாங்களே” என்று மதனிடம் புலம்பினேன்.
“அப்போ போன தடவை உனக்கு சரியா அம்மை போடலையோ என்னவோ..மிச்சம் ஏதாவது இருந்திருக்கும்” என்றான் மதன்.

ஜமீலா தான் குற்றவுணர்ச்சியில் தவித்தாள். “எங்களால தானே இப்படி ஆச்சு?” என்று வருத்தப்பட்டாள்.

“அட, இதுல என்னங்க இருக்கு. அப்புறம் இன்னும் 10 நாளைக்கு இந்தப் பக்கம் வராதீங்க. மிச்சம் இருக்குறது நீங்க தான். எதுவா இருந்தாலும் இவன்கிட்ட சொல்லுங்க. போதும்” என்றேன். மதனும் ஆமோதித்தான்.

ஆனாலும் ஜமீலா கேட்கவில்லை. மூன்று வேளைக்கு சாப்பாடும் அவளே எடுத்து வந்தாள். தனியே வளர்ந்த எனக்கு ‘சகோதர’ உணர்வின் அர்த்ததை புரிய வைத்தாள். மோசமான திட்டுக்களைக் கூடத் தாங்கும் என்னால் அன்பைத் தாங்க முடிவதில்லை. மதனும் ஜமீலாவும் காட்டிய அன்பில் அழுதேன். அவர்கள் இல்லையென்றால் என்னைப் பார்த்துக்கொள்ள யாருமில்லை என்பது புரிந்தது. ஜமீலாவும் அதை உணர்ந்தாள்.

“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்கண்ணே. இப்படியே எத்தனை நாளுக்கு இருப்பீங்க?” என்றாள். நன்றாக இருக்கும்வரை யார் தயவும் தேவையில்லை தான். ஆனால் கஷ்டம் என்று வந்துவிட்டால், தோள்சாய ஒரு ஒரே ஒரு ஆளாவது தேவை என்பதை உணர்ந்தேன்.

அதில் இருந்த முதல் சிக்கல் வேலை. ஒரு வருடக் காண்ட்ராக்ட் வேலையை நம்பி, யார் பெண் கொடுப்பார்கள்? எனவே ஆறு மாதத்தில் இந்த வேலையை பெர்மனெண்ட் ஆக்குவது அல்லது வேறு வேலைக்குத் தாவுவது என்ற முடிவுக்கு வந்தேன். மதனும் அதை ஒத்துக்கொண்டான்.

“எப்படியும் அடுத்த மாசம் எனக்கு யு.கே.விசா கிடைச்சிடும். நான் இன்னும் 2 மாசத்துல கிளம்பிடுவேன். நீயும் அப்புறம் வேற வேலை பார்த்துட்டுக் கிளம்பிடு” 

“சரிடா..தங்கச்சிக்கு பாஸ்போர்ட் எடுத்தாச்சா?”
“இல்லைடா..அட்ரஸ் ப்ரூஃப் எல்லாம் அப்பா வீட்டுக்குத் தான் இருக்கு. போலீஸ் வெரிஃபிகேசன் அங்க தான் போகும். என்ன செய்றதுன்னு புரியலை”

“நீ ஊருக்குப் போய் அப்பாவைப் பாரு. அவர் கோபக்காரர் தான். ஆனா உன்னைப் பார்த்தா மனசு இளகிடுவாரு. போ” என்றேன்.

மதன் தயங்கினான். ஜமீலாவும் வற்புறுத்த மதுரை கிளம்பினான்.

ல நாட்கள் பார்க்காத மகனைப் பார்த்ததும் மதன் அப்பாவால் அழுகையை அடக்க முடியவில்லை. “ஒரு நிமிசத்துல என்னை தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டியேப்பா. உன் மனசு கோணாம வளர்த்ததுக்கு இதான் பதில் மரியாதையாப்பா” என்று கலங்கினார்.

மதனும் அழுதான். பாசத்தின் முன் ஜாதிப்பற்று மறைந்தது.

“மருமவளைக் கூட்டிட்டு வா. இங்க நம்ம சொந்தக்காரங்க முன்னாடி சிம்பிளா இன்னொருக்கா கல்யாணம் நடத்திடுவோம்” என்றார்.

சொன்னபடியே சொந்த பந்தம் புடைசூழ கல்யாணத்தை நடத்திக்காட்டினார். பாஸ்போர்ட்டும் அப்ளை செய்தார்கள்.

மருமகளின் நல்ல குணத்தை சீக்கிரமே புரிந்து கொண்டார். “இனிமே என் பையனைப் பத்திக் கவலை இல்லை. என் மருமவ பாத்துப்பா” என்று சொந்தங்களிடம் சொல்லி மகிழ்ந்தார். ஜமீலாவும் ‘அப்பா..அப்பா” என அவர் மேல் பாசத்தைப் பொழிந்தாள்.

மாமனாருடன் இணைந்த சந்தோசத்தில் இருந்த ஜமீலாவிற்கு, அடுத்த மாதமே தந்தை இறந்த செய்தி வந்து சேர்ந்தது. ஹார்ட் பேசண்டான அவர் மூன்றாவது அட்டாக்கில் இறந்துவிட்டார் என்றார்கள். தகவல் சொன்னவர்களே ‘நீ இங்கு வரவேண்டாம். அது பிரச்சினையை உண்டாக்கும்’ என்றார்கள். எங்களுக்கும் அதுவே சரியென்று தோன்றியது.

ஜமீலாவை அவள் அம்மாவுடம் ஃபோனில் பேச வைத்தோம். அது அந்த இரு பெண்களுக்குமே ஆறுதலாக இருந்தது. 

யு.கே. விசா இண்டர்வியூ டேட் நெருங்கியது. பேங்க் பேலன்ஸில் குறிப்பிட்ட தொகை வைக்க வேண்டும் என்றார்கள். ஜமீலா தன் அக்கவுண்ட்டில் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வந்த 2 லட்சம் ரூபாயைக் கொடுத்தாள். மீதி வங்கி லோன் மூலம் திரட்டிக் கொண்டு இண்டர்வியூ அட்டெண்ட் செய்தான்.

யாரும் எதிர்பாராத விதத்தில் அவனது விசா அப்ளிகேசன் ரிஜெக்ட் ஆனது.

மதன் இடிந்து போனான்.
மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_29"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, July 26, 2011

Malena (2000) - திரை விமர்சனம் (கண்டிப்பாக 21+)

உப தலைப்பு : மெலீனாவின் தேகமும் தேசமும்

டிஸ்கி: இந்தப் படத்தையும் முடிந்தால் இந்தப் பதிவையும் 18,28,38,48,58,68,78,88 வயது நிரம்பாத யோக்கியர்கள் தவிர்க்கவும்.

குப்பையில் கிடைத்த மாணிக்கம் என்று இந்தப் படத்தை நான் தாராளமாகச் சொல்லலாம். பல வருடங்களுக்கு முன் நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்த ஒரு வீடியோ பார்த்துவிட்டு மிரண்டு போனேன். அந்த ஒரு சீனுக்காகவே பல நாட்கள் இந்தப் படத்தைத் தேடி அலைந்தேன். கிடைத்த பிறகே தெரிந்தது இது உலக சினிமாக்களில் முக்கியமான படம் என்று.

இரண்டாம் உலகபோரில் கலந்து கொள்ள கணவனை அனுப்பிவிட்டு, இத்தாலியின் சிசிலி நகரில் வாழும் தனியே வாழும் பேரழகி மெலீனா.(சரியான உச்சரிப்பு மலேனா!). கணவனுக்காகவே காத்திருக்கும் அவள் ஊரில் உள்ள ஆண்களால் காமத்தாலும் பெண்களால் பொறாமையாலும் பார்க்கப்படுபவள்.  இரண்டாம் உலகப் போரில் நாடுகள் சக நாடுகள் மீதான ஆக்கிரமிப்பில் தீவிரமாக இறங்குகின்றன. அவளது காத்திருப்புக்குப் பதிலாக கணவனின் இறப்புச் செய்தி கிடைக்கிறது. 

கணவன் இருக்கும்போதே வட்டமிட்ட கழுகுகள், மேலும் முன்னேற ஒரு பொய்யான வழக்கில் சிக்க வைக்கப்படுகிறாள். ஊராரின் ஏச்சும் பேச்சும் தொடங்குகிறது. அவளைப் பற்றிய வதந்திகள் இறக்கை கட்டிப் பறக்க, மெலீனாவிற்கு ஆதரவாக இருக்கும் தந்தை மனம் உடைகிறார். தொடர்ந்து நடக்கும் போர்த் தாக்குதலில் அவரும் இறக்கிறார். 

அழகைத் தவிர ஏதுமற்ற அனாதை ஆகிறார் மெலீனா. அவளது நாடு ஜெர்மானியர்களால் ஆக்கிரமிக்கப் படுகிறது. அவள் அழகே அவளுக்கு ஆபத்தாக ஆகி, விபச்சாரியாக அவளை ஆக்குகின்றது. ஜெர்மானிய ராணுவ ஆக்கிரமிப்பாளர்களின் இச்சைக்கு ஆளாகிறாள். அவள் நன்றாக இருந்த போதே அவளை ஏசிய பெண்கள் கூட்டம், அவள் வேசி ஆனதும் கடும் வெறுப்பை உமிழ்கிறது. அதே நேரத்தில் அவளின் நாடு போரில் வென்று விடுதலை ஆகிறது.
மெலீனாவின் மேல் ஆத்திரமுற்ற பெண்கள் கூட்டம், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவளை கடுமையாகத் தாக்கி அவமானப்படுத்தி ஊரை விட்டே துரத்துகின்றனர். அதன்பிறகு போரில் இறந்ததாகச் சொல்லப்பட்ட மெலீனாவின் கணவன் திரும்பி வருகிறான். அவள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து அவளை மீண்டும் தன் ஊரிலேயே தலை நிமிர்ந்து வாழ வைக்கின்றான்.

ஒரு படைப்பு இலக்கியம் ஆவது தனக்குள் பல திறப்புகளை ரசிகனுக்காக கொண்டிருக்கும் போதே. சாதாரண கதையாகத் தோன்றும் இந்தக் கதையை உலகத் திரைப்படமாக ஆக்கியது இயக்குநர் செய்த நுணுக்கமான இரு வேலைகள்.

முதலாவது மேலோட்டமாக அழகிய பெண்ணின் கதையாகக் காட்டிக் கொண்டாலும், அடிநாதமாக ஓடுவது அந்த தேசத்தின் கதை. இரண்டாம் உலகப் போர் பிண்ணனியில், மெலீனாவிற்கு நடப்பது தேசத்திற்கும் தேசத்திற்கு நடப்பது மெலீனாவிற்கும் நிகழ வைத்து இப்படைப்பை பேரிலக்கியமாக உயர்த்துகிறார். சரியான பாதுகாப்பின்றி இருக்கின்ற பெண்ணை வைத்து, அப்பொதைய இத்தாலியை உருவகப்படுத்தியதே இயக்குநரின் தனித் திறமைக்குச் சான்று.
இரண்டாவது (முக்கியமானது), ஒரு 13 வயதுப் பையனின் பார்வையிலேயே படத்தை நகர்த்தியது. பலரும் பேசத் தயங்கும் பால்ய கால பாலியல் பிரச்சினையை தைரியமாக முன் வைத்தது. ரெனாட்டோ அதீத பாலுணர்ச்சி கொண்ட பாலகுமாரன் சொல்லும் ‘உடம்பு விழிக்கும் முன்னே புத்தி விழித்திக் கொண்ட’ பையன். டீன் ஏஜில் இருக்கும் ரெனாட்டா பேரழகி மெலீனாவை ஒரு தலையாகக் காதலிப்பவன்.

அவளை நிழல் போல் பின் தொடர்பவன். அவளின் அந்தரங்க வாழ்க்கை ரெனாட்டோவின் கண்களின் வழியே நமக்குக் காட்டப்படுகிறது. பார்வையாளனை திட்டமிட்டே ரெனாட்டோவின் மனநிலைக்குக் கொண்டு செல்கிறார் இயக்குநர். ரெனாட்டோ மெலீனாவின் மேல் வைத்திருக்கும் அதீத காமம் கலந்த காதலை நாமும் உணர்கின்றோம். மெலீனாவை பிறர் வதந்திகளால் பேசியே கொல்லும்போதும், கடுமையாக அவளைத் தாக்கி அவமானப்படுத்தும் போதும் எதுவும் செய்ய முடியாத கையாலாகாத் தனத்துடன் துடிக்கின்றான் ரெனாட்டோ. தன் தேசம் அதிகார போதை கொண்டோரால் போரில் சீரழிக்கப்படும்போது துடிக்கும் சாமானிய மக்களின் பிரதிநிதி அவன்.

ஒரு சீரியசான கதையை நகைச்சுவையாகக் கொண்டு செல்ல ரெனாட்டோவின் பாலுணர்வு காட்சிகள் உதவுகின்றன. 13 வயதுப் பையனின் கற்பனைகளும் செயல்பாடுகளும் எவ்வித ஒளிவுமறைவுமின்றி காட்சிப்படுத்தப் படுகின்றன. காம உணர்ச்சியின் உச்சத்திற்கே பார்வையாளனைக் கொண்டு செல்ல ரெனாட்டோ பாத்திரம் உதவுகின்றது. அதுவே இறுதிக்காட்சியில் காமம் கழன்று பேரன்பு மட்டுமே மிஞ்சும் ரெனாட்டோவின் நிலைக்கு நம்மையும் கொண்டு செல்கிறது. 

மெலீனாவாக மோனிகா பெல்லுசி. இத்தாலிய செக்ஸ் பாம். இயக்குநர் Giuseppe Tornatore இந்தக் கதைக் கருவுடன் பேரழகி மெலீனா பாத்திரத்திற்கு பொருத்தமான நடிகை கிடைக்காமல் பலநாட்கள் திரிந்தவர். எப்போது மோனிகாவை சந்தித்தாரோ, அந்த நிமிடமே அவர் முடிவு செய்தார் இவரே மெலீனா என. அதன்பிறகே திரைக்கதை டெவலப் செய்யப்பட்டது.

அழகு என்பது சாதாரணமானது. கம்பீரமான அழகு என்பது அவ்வளவு எளிதில் வாய்க்கப்படுவதில்லை. ஆரம்பக்காட்சிகளில் மோனிகாவைப் பார்க்கும் எவரும் கம்பீர அழகை உணர்ந்து கொள்வர். இந்தப் படத்தைப் பார்த்தபின் பலநாட்களுக்கு மோனிகா நம் மனதை விட்டு நீங்கவில்லை. உண்மையில் வேரு படங்களில் வேறு கேரக்டரில் அவரைப் பார்க்கவும் மனம் ஒப்பவில்லை.

ரெனாட்டோவாக GIUSEPPE SULFARO. முதல் படமான மெலீனாவில் நடித்த போது 14 வயது. ”மோனிகாவைப் பார்த்த கணமே அவர் மேல் காதலில் விழுந்தேன். டீன் ஏஜில் அத்தகைய பேரழகியின் மேல் காதல் வருவது ஆச்சரியம் அல்ல. ஆனாலும் எனக்குத் தெரியும் இது நிறைவேறாக் காதல் என்று!”-இது ஒரு பேட்டியில் அவர் சொன்னது. அந்தக் கெமிஸ்ட்ரியே இயல்பான நடிப்பை அவரிடம் இருந்து வெளிக்கொண்டு வந்தது. நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் என்றும் ‘வாழ்ந்தார்’ என்றும் சொல்லலாம்.

இயக்குநர் Giuseppe Tornatore ஏற்கனவே சினிமா பாரடைஸ் கொடுத்தவர். அதற்கு மேலும் அவரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா என்ன? 

படத்தின் வசனங்கள் பல நம் மனதைத் தொடுபவை. மெலீனா விபச்சாரி ஆனபின் வரும் கஸ்டமரான ஆர்மி ஆஃபீசர் ‘நான் ஒவ்வொரு வியாழனும் வருவேன்’ எனும்போது மெலீனா விரக்தியுடன் சொல்லும் ‘நீ எனக்கு சாப்பாடு கொண்டுவரும் வரை தாராளமாக வரலாம்’ எனும் வசனம் வெறும் காமக்காட்சியை சட்டென்று நிறம் மாற்றும். படத்தின் இறுதியில் மெலீனாவை விட்டு எதிர்த்திசையில் விலகிச் செல்லும் ரெனாட்டோ சொல்லும் வசனம் புகழ்பெற்றது: என்னிடம் நெருங்கிப் பழகிய பெண்கள் கேட்பர் ‘என்னை எப்போதும் நினைவில் கொள்வாயா என! நானும் ‘ஆம்’ என்பேன். ஆனால் நான் எப்போதும் நினைவில் கொள்ளும், என்னிடம் அவ்வாறு ஒரு போதும் கேட்காத மெலீனா”

மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அற்புதமான கலைப்படைப்பு வெளியான நேரத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்து. காரணம், பதின்ம வயதுப் பையனின் பாலியல் காட்சிகள் தான். அந்த எதிர்ப்பு ஓரளவு நியாயம் ஆனதே. எனவே மனமுதிர்ச்சி இல்லாதோர் இப்படத்தைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

அதே நேரத்தில் நல்ல சினிமா மேல் ஆர்வம் கொண்டோருக்கு, மெலீனா பேரழகி தான்!

மேலும் வாசிக்க... "Malena (2000) - திரை விமர்சனம் (கண்டிப்பாக 21+)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

69 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, July 24, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_28

‘அப்போ ஜெனிஃபர் அவளாவே என்னை விட்டுப் போகலையா? இவங்க மிரட்டுனதால தான் என்னை விட்டுப் போனாளா? ஒருவேளை இவங்க குறுக்க வரலேன்னா என்கூடவே இருந்திருப்பாளோ?’ என மதன் யோசிக்க ஆரம்பித்தான்.

அடுத்த நாள் எழும்போது ஏதோவொரு வித்தியாசத்தை உணர்ந்தான் மதன். காய்ச்சல் போன்று உடம்பு கொதித்தது. மேலே ஹீட்டுக்கு வந்த கொப்புளம் போன்று உடம்பில் ஏதோ இருந்தது. 

”ஏம்ம்மா” என்று அடுப்படியில் இருந்த ஜமீலாவை அழைத்தான்.

“என்ன?” என்று கேட்டுக்கொண்டே வந்தவள் அவனைப் பார்த்ததும் திகைத்தாள்.

“என்னங்க இது முகமெல்லாம்?” என்றாள்.

கண்ணாடி பார்த்ததும் புரிந்து போயிற்று ‘அம்மை’ போட்டுள்ளது என!

சட்டையைக் கழற்றி செக் பண்ணியதில் உடம்பெல்லாம் அம்மைக் கொப்புளங்கள் இருந்தன. உடனே எனக்கு ஃபோன் செய்தான்.

“ஓ..., இன்னுமாடா தூங்குறே..இங்க உடனே வா”

ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்து நானும் கிளம்பிப் போனேன். மதனைப் பார்த்ததும் விசயம் புரிந்தது.  ஆஸ்பத்திரி போக ரெடியாக இருந்தான்.

“இதுக்கு ஹாஸ்பிடல் போகக்கூடாதுன்னு சொல்வாங்களே?” என்றேன்.
”அது உங்க பாட்டி காலத்துல. போய் ஆட்டோ கூட்டி வா” என்றான். 

ஜமீலா பயந்து போயிருந்தாள்.

“இதுக்கு ஏங்க பயப்படுறீங்க? இதெல்லாம் ஒன்னுமே இல்லை. மேக்ஸிமம் 10 நாள்ல அதுவா போயிடும். எனக்கு நைன்த் படிக்கும்போது வந்திருக்கு. ஆனா நீங்க அவன் பக்கத்துலயே போகாதீங்க. ஏற்கனவே வந்ததால எனக்கு திரும்ப வராது. எதுன்னாலும் நான் பார்த்துக்கறேன்” என்றேன்.

”சரிடா, மருந்தெல்லாம் எடுத்துக்கோ. நான் ஆஃபீஸ் கிளம்புறேன். வேறெதாவது வாங்கிட்டு வரணுமா?” என்றேன்.
“இல்லைடா”
“ஹெச்.ஆர்.மேடத்துகிட்ட சொல்லணுமா?”
“அய்யோ..சுகிலான்னு சொல்லுடா.ஹெச்.ஆருக்குன்னு ஒரு மரியாதை இல்லையா? இவளை அப்படிச் சொல்லாத. போய் சுகீலாகிட்டயும் நம்ம மேனேஜர்கிட்டயும் சொல்லிடு. நானும் அப்புறமா கால் பண்றேன்” என்றான்.

ஃபீஸில் மேனேஜரிடம் விசயத்தைச் சொன்னேன். பாம்பைக் கண்டவன் போல் பதறினார். “ஆஃபீஸ் பக்கம் அவரை வர வேண்டாம்னு சொல்லிடுங்க. மூணு தண்ணி ஊத்துனப்புறம் வந்தாப் போதும்” என்றார்.

கொஞ்ச நேரம் கழித்து சுகீலா ரூமிற்குப் போய்ப் பார்த்தேன். ஆளில்லை. பாபுவிடம் கேட்போம் என்று அவன் சீட்டிற்குப் போனேன். அங்கு அவனும் இல்லை. அருகில் இருந்தவனிடம் கேட்டேன்.

“பாத் ரூம் போனான்.”

யாராவது போனால் நமக்கும் வந்திடுமே. எனவே நானும் பாத்ரூம் பக்கம் போனேன். அது ’சிங்கிள்’ பாத்ரூம் என்பதால் வரட்டும் என வெளியே நின்று கொண்டேன். பாபு கதவைத் திறந்துகொண்டு வந்தான். பார்த்ததும் வழக்கமான புன்னகை. 

“பாபு, சுகீலா மேடத்தை எங்கே?” என்றேன்.
தனக்குப் பின்னால் கை காட்டினான். பார்த்தால், சுகீலா அதே பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள். பாபு நகர்ந்து சென்றுவிட்டான். நான் பேயறைந்தது போல் ஆனேன்.

“என்னா செங்கோவி, மதனுக்கு சிக்கன் போக்ஸா? கால் பண்ணார். நல்லா ரெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க. ஓஃபீசுக்கு இப்போதைக்கு வர வேண்டாம்” என்று ஹெச்.ஆர்.மிடுக்கு குறையாமல் பேசி விட்டு அகன்றார் சுகீலா.

அந்த பாத்ரூமிற்குள் போக மனமில்லாமல் அப்படியே திரும்பினேன்.

டுத்த வந்த 10 நாட்களும் மதனின் மனதைப் புரட்டிப் போட்டன. ஜமீலா அன்பை மழையாகப் பொழிந்தாள். குழந்தையைப் பார்ப்பது போன்று அவனைப் பார்த்துக் கொண்டாள். மதன் மனதிற்குள் தன்னை நினைத்து  மெயில் செக் பண்ணியபோது ஜெனிஃபரிடம் இருந்து மெயில் வந்திருப்பதைப் பார்த்தான்.

“ஹாய் மதன்,

உங்கூட சாட் பண்ணப்புறம் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா? காட் இஸ் கிரேட். எனக்கு உன்னைப் பார்க்கணும்போல இருக்குப்பா. பெங்களூர் ஒரு தடவை வாயேன். இங்க ரெண்டு மூணு நாள் தங்கற மாதிரி வா. இங்க நிறைய நல்ல ஹோட்டல்ஸ் இருக்கு. நீ எங்காவது தங்கிக்கலாம். நாம மீட் பண்ணுவோம். 

பகல்ல நான் ஃப்ரீ தான். உன்கூட நிறையப் பேசணும்.

மதன், I still love you.”

மதன் அந்த மெயிலை டெலீட் செய்தான். அருகில் தூங்கிக் கொண்டிருந்த ஜமீலாவைப் பார்த்தான். அவள் அருகில் சென்று படுத்தபடியே அவளைக் கொஞ்ச நேரம் பார்த்தபடி இருந்தான். பல வித சிந்தனைகள் மனதிற்குள் ஓடியது.

‘எனக்கு நீ போதும்மா. வேற யாரும் வேண்டாம். எனக்கு எதனாலயோ மோசமா அலைபாயுற மனசை ஆண்டவன் கொடுத்திட்டான். அதைக் கட்டுப்படுத்த நீ என் பக்கத்துல இருந்தாலே போதும். என்னை விட்டு விலகிடாதே ஜமீலா. என்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்து. என்னை ஆயுசுக்கும் நல்லவனா வாழ வை. தாயே..என் தாயே..என்னைக் காப்பாத்து என் தாயே’


(இரண்டு நாள் கழித்து தொடரும்)
மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_28"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

72 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, July 23, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_27


“அவன் இஞ்சினியரிங்குக்கு மட்டும் குவாலிட்டி பார்க்கலை. சுகீலாவுக்கும் அப்பப்போ குவாலிட்டி செக் பண்ணுவான்”

"ஹெச்.ஆர் மேடத்தையேவா?” என்றேன்

“அவ ஹெச்.ஆரே இல்லைடா..ரிசப்சனிஷ்ட்டா வந்தா. பல தலைகளை கவுத்திட்டு, இப்போ ஹெச்.ஆர் ரூம்ல உட்கார்திருக்கா. இவன் பாதி நேரம் அவ பின்னாடியே தான் அலைவான்..நீ உள்ள போனப்போ என்ன பண்ணிக்கிட்டு இருந்தான்?”

“பேசிகிட்டு இருந்தான்”

“நீ குடுத்து வச்சது அவ்வளவு தான். நாங்கள்லாம் நிறையப் பார்த்திருக்கோம். நீயும் பார்ப்பே” என்றான் மதன்.

ன்று இரவு நான் எனது ரூமில் இருந்த போது மதன் வந்தான்.

“செங்கோவி, காய்ச்சல் மாதிரி இருக்கு. வா, மருந்து வாங்கிட்டு வருவோம்” என்று அழைத்தான்.

அவன் வீட்டிற்கு அடுத்த தெருவிலேயே நாங்கள் தங்கி இருந்த வீடும் இருந்தது. இருவரும் கிளம்பினோம்.

ரோட்டில் போய்க்கொண்டிருக்கும்போதே சட்டென்று ரெஸ்ட்டாரண்ட் பார் ஒன்றில் நுழைந்தான் மதன்.

“என்னடா இங்க வந்துட்ட?”
”காய்ச்சல்னு சும்மா சொன்னேன். இல்லேன்னா நீ இங்க வர மாட்டியே.  உட்காரு” என்றவாறே புரியாத பெயர்களைச் சொல்லி ஆர்டர் செய்தான்.

“உனக்கு பெப்ஸியா கோக்கா?” என்றான். 

“7 அப்” என்றேன்.

பேச்சு கல்லூரி நாட்களைப் பற்றித் திரும்பியது.

“மாப்ளே, நல்லா எஞ்சாய் பண்ணேண்டா காலேஜ் லைஃபை. நீங்க எல்லாம் சின்சியராப் படிச்சது தாண்டா மிச்சம். இப்போப் பாரு,எல்லாரும் ஒரே இடத்துல தான் உட்கார்ந்திருக்கோம்”

“ஆமா, ஜெனிஃபர்கூட நல்லாத் தான் எஞ்சாய் பண்ணே” என்றேன்.

”ஹா..ஹா..கடைசில எல்லாத்தையும் முடிச்சிட்டு கழட்டியும் விட்டுட்டேன்” என்ரான் மதன்.

”ம.., நீ எங்க கழட்டி வி ட்டே..உங்கப்பா அவ அம்மாவை மிரட்டுன மிரட்டுல அவ உன்னை விட்டு ஓடுனா” என்றேன்.

“என்னடா சொல்றே?” 

நடந்ததைச் சொன்னேன். அவன் அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தான்.

“நல்ல காரியம் பண்ணீங்கடா..இல்லேன்னா நானும் அந்தப் புதைகுழில விழுந்திருப்பேன். ஜமீலா மாதிரி ஒரு பொண்ணு எனக்குக் கிடைச்சிருக்குமா?”

“ஆமா மதன். உன் யோக்கியதைக்கு அந்தப் பொண்ணு ரொம்ப அதிகம். இனிமேலாவது ஒழுங்கா இருடா” 

“டேய், நான் அவளை எப்படி வச்சிருக்கேன் தெரியுமா? அவ என்ன கேட்டாலும் வாங்கித் தர்றேன். அவ என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கிறேண்டா”

“எப்படியோ நல்லா இருந்தாச் சரிதாண்டா மாப்ளே” என்றேன்.

சரக்கு அத்தனையும் தீர்ந்து போயிருந்தது. பேசியவாறே என்னை என் ரூமில் விட்ட பின், தன் வீடு நோக்கி நடக்கத் துவங்கினான் மதன்.

‘அப்போ ஜெனிஃபர் அவளாவே என்னை விட்டுப் போகலையா? இவங்க மிரட்டுனதால தான் என்னை விட்டுப் போனாளா? ஒருவேளை இவங்க குறுக்க வரலேன்னா என்கூடவே இருந்திருப்பாளோ?’ என மதன் யோசிக்க ஆரம்பித்தான்.

‘சாட்டில் அவள் ஏன் வந்தாள்? இன்னும் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாளா? என்ன வேண்டும் அவளுக்கு? பிடிக்காம கட்டிக்கிட்டேன்னு சொன்னாளே? அடுத்த முறை சாட்டில் வந்தால் கேட்க வேண்டும், பாவம்’ என்று நினைத்துக் கொண்டான் மதன்.

(தொடரும்...தொடர்ச்சி 12 மணி நேரம் கழித்து)

மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_27"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_26


"Hi Madhan " என்று ஜெனிஃபரிடம் இருந்து மெசேஜ் வந்தது.

“How r u? Long time no see" அடுத்த மெசேஜ் இறங்கியது.

மதன் ஆடிப் போனான்.

"Hi..fine" என்றான்.

“வாவ்..என்னால் நம்பவே முடியலை. ஜஸ்ட் பிங் பண்ணேன்.”
“ஓ”
“மதன். எங்கே இருக்கே இப்போ?”
“சென்னை..நீ?”
“பெங்களூர்” (ஊர்ப் பெயர் மாற்றப்பட்டுள்ளது)
“அங்க ஒர்க் பண்றயா ஜெனி?”

“ஆமா வீட்ல..ஹவுஸ் வைஃப்”

“கல்யாணம் ஆயிடுச்சா?”
“ஆமா.வீட்ல ரொம்ப கட்டாயப்படுத்தி பெரிய ரகளை பண்ணி..ஹும்..அது பெரிய கதை. அப்புறம் சொல்றேன்”

”ஹஸ்பண்ட் என்ன பண்றார்?”
“அவன் இங்க ****ல வேலை பார்க்கான்.”
“ஓ..பெரிய கம்பெனி ஆச்சே..லைஃப் எப்படிப் போகுது?”
இப்போக் கூட ஆஃபீஸ்ல தான் இருக்கான்...வேஸ்ட்”
“அவனா?”
“ம்...அப்படியும் சொல்லலாம்..எனக்கு அவனைப் பிடிக்கலை”
“ஏன்?”
“உன்னால தான்”
“என்னாலயா..ஏன்?”
“நான் அவனை உங்கூடக் கம்பேர் பண்ணேன்..அதான்”

ஜமீலா தட்டைக் கழுவும் சத்தம் கேட்டது. மதனுக்கு கை நடுங்கியது.

“ஜெனி, நான் அவசரமா வெளில போறேன்..அப்புறமா வர்றேன்”

”ஹே..வெய்ட்..வெய்ட்..உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”

மதன் ஒரு நிமிடம் யோசித்தான்.

“இல்லை’” என்று டைப் செய்து எண்டரைத் தட்டினான். மெசேஞ்சரில் இருந்து வெளியேறினான்.

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னும் அவள் மாறவே இல்லையா? எப்படி இவ்வளவு சகஜமாக அவளால் பேச முடிகிறது? 

ஜமீலா பிரியாணியுடன் வந்து கொண்டிருந்தாள். ச்சே, இவ எங்கே? அந்தக் கழிசடை எங்கே? இனி அவகூட சாட் கூடப் பண்ணக்கூடாது என்று நினைத்துக் கொண்டான் மதன்.

டுத்த நாள் ஆஃபீஸில் எனக்கு ஒரு ஆப்பு ரெடியாகி இருந்தது. முதல் நாள் இண்டர்வியூ நடந்து, அன்றே நான் கடமை உணர்ச்சியுடன் வேலையைத் துவங்கி விட்டாலும் அப்பாயின்மெண்ட் லெட்டர் அடுத்த நாள் தான் தருவோம் என்று சொல்லி இருந்தார்கள்.

இன்று ஹெச்.ஆர். மேடம் ஃபோனில் அழைத்தார். அவர் பெயர் சுகீலா. பார்ப்பதற்கு ஷகீலா மாதிரியே இருந்ததால் அவர் பெயரின் முதல் எழுத்துடன் ‘சுகீலா’ என்று அங்கு வேலை செய்வோரால் செல்லமாக அழைக்கப்பட்டவர். அவரும் கேரளாவைச் சேர்ந்தவரே. அவர் ரூமிற்குள் நுழைந்தேன். உள்ளே பாபு நின்று கொண்டிருந்தான். பாபு குவாலிட்டி கண்ட்ரோல் எஞ்சினியர். பார்த்தவுடன் சிரித்தான். நானும் சிரித்தபடியே மேடத்தைப் பார்த்தேன்.

“செங்கோவி, இந்தாங்க உங்க அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர். டிரக்டர் கொடுக்கச் சொன்னார். வெல்கம் டூ அவர் கம்பெனி” என்று சிரித்தார்.

நான் அப்பாயின்மெண்ட் லெட்டரிலேயே கண்ணாக இருந்ததால், அவர் ‘கம்பெனி’ பற்றி கண்டு கொள்ளவில்லை.

அவருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தேன். கவரைப் பிரித்தேன்.

“தங்களை ஒரு வருடம் காண்ட்ராக்ட்டில் பைப்பிங் எஞ்சினியராக எடுப்பதில் கம்பெனி மகிழ்ச்சி கொள்கிறது. காண்ட்ராக்ட் எம்ப்ளாயீ என்பதால் பி.எஃப், லீவ் போன்ற சலுகைகள் உங்களுக்குக் கிடைக்கப்பட மாட்டாது. ஒரு வருடத்திற்குப் பின் தேவைப்பட்டால் காண்ட்ராக்ட் நீட்டிக்கப் படும்’ என்று இருந்தது.

“மதன்ன்ன்ன்ன்ன்” என்று அலறிய படியே ஓடினேன்.

மதனும் லெட்டரை வாங்கிப் பார்த்தான். “என்னடா இப்படிப் போட்டிருக்காங்க?” என்றான்.

”அதைத் தான் நானும் கேட்கேன். ஏண்டா, ஒரு பெர்மனெண்ட் ஜாப் கிடைச்சுச்சு. அதை விட்டுட்டு இங்க வந்தா, காண்ட்ராக் ஜாப்-ஐக் கொடுக்காங்க. நீ உன் டைரக்டர்கிட்டப் பேசு” என்றேன்.

“இல்லைடா..அவர் சிடுமூஞ்சி. இந்த வேலை கொடுத்ததே அதிசயம். நீ ஏண்டா கவலைப்படுறே. தனியார் கம்பெனில ஏதுடா பெர்மனெண்ட் ஜாப்? அது சும்மா பேருக்குத் தானே? ஒரு வருசம் வேலை பாரு. பைப்பிங் கத்துக்கோ. அப்புறம் எங்கயாவது ஜூட் விட்டுடு.இவங்களே அப்போ உன்னை பெர்மனெண்ட் ஆக்குவாங்க பாரு” என்றான். 

சிறிது நேர விவாதத்திற்குப் பின் நான் அமைதி ஆனேன்.

”சரி, வா..டீ குடிப்போம்” என்று பாண்ட்ரிக்கு கூட்டிப் போனான்.

அங்கே சுகீலா நின்று கொண்டிருந்தார். கூடவே பாபுவும்.

“என்ன மதன், உங்க ஃப்ரெண்ட்டுக்கு சந்தோசம் தானே? ஒன்னும் குழப்பம் இல்லையே?” என்றார்.

“இல்லை மேடம்” என்றான்.

சுகீலா சிரித்த படியே வெளியேறினார். பாபுவும் கிளம்பினான்.

“என்னடா பாபு, காலைலயேவா?” என்றான் மதன்.

சிரிப்பை உதிர்த்து விட்டு நகன்றான் பாபு.

“டேய், இவன் குவாலிட்டி எஞ்சினியர்னு தானே சொன்னே?”
“ஆமா”
“அப்புறம் ஹெச்.ஆர்ல என்ன பண்றான்? “

“அவன் இஞ்சினியரிங்குக்கு மட்டும் குவாலிட்டி பார்க்கலை. சுகீலாவுக்கும் அப்பப்போ குவாலிட்டி செக் பண்ணுவான்” என்றான் மதன்.

(தொடர்ச்சி 12 மணி நேரம் கழித்து...)

மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_26"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

30 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, July 20, 2011

ஆண்களுக்கு பெல்ட் அவசியமா?

உங்களோட ஆலோசனை அவசரமா எனக்குத் தேவைப்படுது பாஸ்..ஏற்கனவே அம்பிகா சிடி/சீதா சிடிக்கு நீங்க கொடுத்த ரெஸ்பான்ஸை நினைச்சா, உங்ககிட்ட திரும்ப உதவி கேட்க மனசு வரலை தான்..ஆனாலும் உங்களை விட்டா எனக்கு யாரு இருக்கா?

இப்போ என்ன பிரச்சினைன்னா...ஊர்ல இருக்கும்போது தைச்ச பேண்ட் எல்லாம் டைட் ஆகிடுச்சு. அதனால இப்போ பெல்ட் இல்லாமலேயே பேண்ட் கம்பீரமா நிக்குது. ’அட கர்மம் பிடிச்சவனே, இதுல என்னய்யா பிரச்சினை’ங்கிறீங்களா..சொல்றேன்.
இப்போ எனக்கு பெல்ட் தேவையா இல்லையா? பெல்ட் இல்லாம பேண்ட் போட்டா மொட்டையாத் தெரியுது. அப்படிப் போடக்கூடாதுன்னு ‘சர்வதேச சட்டம்’ ஏதாவது இருக்கான்னு யாராவது சொல்ல முடியுமா? சும்மா பெல்ட்டை இடைப்பைச் சுத்திக் கட்டிட்டுத் திரியவும் கஷ்டமா இருக்கு. வேஸ்ட்டா அதைச் சுமந்துக்கிட்டுத் திரியறமேன்னு நினைக்கும்போது வேதனையாவும் இருக்கு.


சும்மா சொருகி வச்சிருக்கிற பெல்ட்டை இங்க லோக்கல்ல சுமந்துக்கிட்டுத் திரியறது கூடப் பரவாயில்லை. ஊருக்குப் போகும்போது.வரும்போது ஏர்போர்ட்ல வேற இந்த பெல்ட்டைக் கழட்டச் சொல்லி இம்சை பண்றாங்க. நாலு தடவையாவது கழட்டி செக் பண்றாங்க. லக்கேஜ்ல போடலாம்னா வெயிட் ஏறிடும்(!)னு ’வீட்ல’ வைக்க விட மாட்டேங்கிறாங்க. என்ன ஒரு கேவலமான நிலைமை பார்த்தீங்களா..!

இப்போ நான் என்ன செய்ய? சரி, இணையத்துல எல்லா தகவல்களும் கிடைக்குதாமே..பெல்ட் பத்தி ஏதாவது சொல்லியிருக்கான்னு பார்த்தா, ஒன்னுமே இல்லை. எப்படி இருக்கும்? இதான் ஆம்பிளைங்க மேட்டர் ஆச்சே..’மனுசன் எழுதுவானா அதைப் பத்தி’-ன்னு விட்டுட்டாங்க போல.

லேடீஸ்க்கு மட்டும் ’உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி’ன்னு ஆரம்பிச்சு ‘உத்துப் பார்க்கிறவன் கண்ணை நோண்டுறது எப்படி’ங்கிறது வரைக்கும் அட்வைஸா கொட்டிக்கிடக்கு.

ஆனா ஆம்பிளைங்களுக்கு?..ஷேம் ஷேம்..பப்பி ஷேம். ஏன் நம்ம பிரச்சினைகளைப் பத்தி யாருமே எழுதறதில்லை? இந்த ஆம்பிளைப் பதிவர்கள் எல்லாம் என்ன தான் செஞ்சுக்கிட்டு இருக்காங்க?

மூணு டைப் ஆம்பிளைப் பதிவருங்க இங்க இருக்காங்க. முத டைப் என்ன பண்றாங்கன்னா, அதைச் சொல்லவே நாக்கூசுது. அந்தக் கொடுமையை நீங்களே பாருங்க:
பார்த்தீங்களா அந்த அநியாயத்தை..இந்த மாதிரி நல்லா பெரிய்ய்ய நடிகைங்க படத்தை பதிவுல போட்டுட்டு, நாள் பூரா அதைப் பார்த்துக்கிட்டே பொழுதை ஓட்டுறாங்க.ஆண் இனத்திற்கு ஏதாவது செய்வோம், எழுதுவோம்னு ஒரு இனப்பற்றே இவங்க கிட்ட இல்லை.

ரெண்டாவது டீசண்ட் குரூப்.பெண்னுரிமைக்காக தூங்காமக் குரல் கொடுக்குறவங்க. எங்காவது பொம்பளைப் படம் போட்டாங்கன்னா ‘எப்பிடி நீ இப்படிப் பண்ணலாம்..ஃபூக்கோ என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? பெண்களை எப்படி மதிக்கணும் தெரியுமா?”ன்னு மிரட்டுவாங்க.

மூணாவது குரூப் இன்னும் டீசண்டு. பொம்பளைங்களே பிடிக்காது. ஒன்னு ‘சம்போ சிவ சம்போ’ன்னு எழுதறாங்க .இல்லேன்னா ‘பொம்பளைங்க என்ன பெரிய அப்பாடக்கரா’ன்னு எழுதி புரட்சி பண்றாய்ங்க.(ச்சே..ச்சே..நம்ம தொப்பி தொப்பியைச் சொல்லலீங்க!)

ஆக மொத்தத்துல எல்லா ஆம்பிளைங்களும் பொம்பளைங்களைப் பத்தித் தான் எழுதிக்கிட்டு இருக்காங்க. ஆம்பிளைங்களை அம்போன்னு விட்டுட்டாங்க.ஆண் இனத்தோட அவல நிலையை நினைச்சுப் பார்க்கும்போது கண்ணீரு முட்டிக்கிட்டு வருது.

ஒரு பெல்ட் வேணுமா, வேணாமான்னு கூட இணையத்துல நாம ஒரு தீர்மானம் நிறைவேத்தலைன்னா, மத்த இனங்கள்லாம் நம்மளைக் கேவலமா நினைக்காதா? 

இன்னும் கொஞ்சம் தீவிரமா யோசிச்சா...நாகரீகம்ங்கிற பேர்ல நம்மோட ஃப்லெக்ஸிபிள் பெல்ட்டான ’அண்ணாக்கயிறு’ என்று தொண்டர்களால் அன்போடு அழைக்கப்படும் அரைஞான் கயிறை மறந்தது தான் இதற்கெல்லாம் காரணமோன்னு தோணுது.

இதைப் பத்தி பதிவுல தான் ஒன்னும் இல்லை. சரி..நம்ம சங்க கால இலக்கியங்கள்ல ஏதாவது சொல்லி இருக்கான்னு தேடிப்பார்த்தா, அங்கயும் ஒன்னும் கிடைக்கலை.

திருக்குறள் அடக்கமுடைமை அதிகாரத்தையும் படிச்சுப் பார்த்துட்டேன்.ம்ஹூம்..திருவள்ளுவரும் நம்மளை தெருவுல விட்டுட்டாரு.

இனியும் நாம தூங்கிக்கிட்டு இருந்தா ஆண் இனத்துக்கு பெரிய அழிவு தான் வந்து சேரும். அப்புறம் வரலாறுல “ராஜராஜ சோழன் ஆண் என்பது பெரும் புரட்டு. அவர் ஒரு பெண். அவரது உண்மையான பெயர் ராஜராஜ சோழி”ன்னு நம்ம பேரப் புள்ளைங்க படிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை வந்து சேரும்.

அதனால இதைப் படிக்கிற ஆண் சிங்கங்கள் எனக்கு ஒரு முடிவைச் சொல்லுங்க.

தேவையே இல்லாத ஒரு பெல்ட்டை நான் சுமந்துக்கிட்டுத் திரியத் தான் வேணுமா? வேற வழியே இல்லையா? பெல்ட் என்பது அவ்வளவு அவசியமான விஷயாமாஆஆஆஆஆஆஆ?


டிஸ்கி: அந்த பெல்ட்டை கழுத்துல மாட்டிக்கிட்டுத் தொங்கு - என்பது போன்ற ஆக்ரோச பின்னூட்டங்களைத் தவிர்க்கவும்.


மேலும் வாசிக்க... "ஆண்களுக்கு பெல்ட் அவசியமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

106 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, July 19, 2011

சாரு பற்றிய கடிதமும் சரிகின்ற பிம்பமும்

“எழுதும்போது உள்ள சாரு வேற. எழுதும்போது மட்டுமே நான் சாருநிவேதிதா. மற்ற நேரங்களில் உங்களைப் போன்ற சாதாரண மனிதன் நான்.” -  சாரு.

தேகம் புத்தக வெளியீட்டு விழாவில் சாரு பேசிய மேற்கண்ட பேச்சைப் பற்றி, நீண்ட நாட்களாகவே சிந்தித்துக் கொண்டிருந்தேன். தொடர்ச்சியாக பல கேள்விகளை அது எழுப்பிக்கொண்டே இருந்தது. அது பற்றி எழுதுவதற்கான நேரம் இப்போது வந்திருக்கின்றது. 

சாருநிவேதிதா பற்றி சாருவின் மனைவி நித்யானந்தாவிற்கு எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது நாகரீகமான செயலும் அல்ல, அத்தகைய நாகரீகத்தை நாம் நித்யானந்தாவிடம் எதிர்பார்ப்பது நியாயமும் அல்ல என்பதால் அதை விடுத்துப் பொதுவாக சிந்திப்போம்.

இலக்கிய உலகில் நீண்டநாட்களாகவே சர்ச்சைக்குள்ளாகிக் கொண்டிருக்கும் விஷயம் எழுத்துக்கும் எழுத்தாளனுக்குமான இடைவெளி. உலக நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பவனாகவும், நம்மையும் அந்தத் தளத்திற்கு உயர்த்தப் பாடுபடுவனாகவும் எழுத்தின் மூலம் அறியப்படும் எழுத்தாளன், நடைமுறை வாழ்வில் வீட்டிற்குள் தன் மனைவியைக் கை நீட்டி அடிக்கும் பேடியாக இருப்பதின் முரணே இங்கு நாம் பேச விழைவது.

எழுத்துக்கும் எழுத்தாளனின் நடவடிக்கைக்கும் உள்ள இடைவெளி, வாசகனை ஏமாற்றும் ஒன்றல்லவா? ஜெயகாந்தனுக்கு இரு மனைவிகள் என்று அறிந்த போதும் இதே போன்ற கசப்புணர்வே மேலிட்டது. இந்த இடைவெளிக்கான காரணம் தான் என்ன?
எழுத்தில் புரட்சியாளனாகவும், நிகழ்வாழ்வில் அடிமாட்டு ரேட்டில் ஆட்களை வேலை வாங்கும் நவீன பூர்ஷ்வாவாகவும் எழுத்தாளன் இருந்தால் அது நியாயம் தானா?
அப்படியென்றால், எழுத்து என்பது வெறும் ஏமாற்று வித்தை தானா? எழுத்தாளன் தான் சொன்னதைப் பின்பற்றாவிட்டாலும், அவன் எழுத்தைப் படிப்போர் பின்பற்றினால், சமூகத்திற்கு நன்மை தானே? அந்த வகையில் பார்த்தால் இந்த இடைவெளி என்பது சாதாரணமான ஒன்றா? 

ஒரு விஷயத்தை, கொள்கையை முழுமையாக அட்சுரம் பிசகாமல் பின்பற்றுவோர் மட்டுமே அதைப் பற்றிப் பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைச் சாத்தியம் தானா?

ஏ.ஸி.ஆஃபீஸீல் உட்கார்ந்துகொண்டு, எதற்குமே தெருவில் இறங்கிப்போராடாத ஒருவன் மெரீனாவில் ஈழத்தமிழருக்கான தீபமேற்றும் நிகழ்வு பற்றி உக்கிரமான கட்டுரை எழுதி, மக்களை அதன் பக்கம் திருப்புவது தவறான செயல் ஆகுமா?

பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை எதை வாங்க வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுத்து ’உடனே’ வேலையை முடிக்கும் ஒருவன் லஞ்சத்தை ஒழிப்போம் என அன்னா ஹாசாரெக்கு ஆதரவாக எழுதுவது முற்றிலும் தவறென்று சொல்ல முடியுமா?

இந்த இடைவெளிக்கு ஏதேனும் அளவீடுகள் கொள்ளலாமா? ஏற்றுக்கொள்ளக்கூடிய இடைவெளி, ஏற்றுக்கொள்ள முடியாத இடைவெளி என்று பிரிக்க முடியுமா?

இதன் அடிப்படையில் பார்த்தால், தன் வாழ்வில் கடைப்பிடிக்க முடியாத, கடைப்பிடிக்காத உயர் விழுமியங்களை சமூகத்தின் முன்வைக்கும் எழுத்தாளனின் செயல், வெறும் ஏமாற்று வேலையே என்ற முடிவுக்கு வர முடியவில்லை. படைப்பு மனம் செயல்படும் முறை விசித்திரமானது. பல நல்ல படைப்புகள், எழுத்தாளனையும் தாண்டி வந்து விழுந்தவையே.

நம்முடைய இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் எழுத்தாளன் மீதிருக்கும் ’ஞானி’ பிம்பம்! அவர்களை வாழ்வின் வழிகாட்டிகளாகவும், மகானாகவும் கொண்டாடும் நிலையும் இங்கு நிலவுகிறது. மீள முடியா புகழ்ச்சிச் சக்கரத்தில் மாட்டிக்கொண்ட ஸ்ரீமான் எழுத்துச்சித்தர் சத்குரு பாலகுமார ஸ்வாமிகளை அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக நாம் கொள்ளலாம். எழுத்தாளன் மேல் நாம் கொண்டிருக்கும்  ஞானி பிம்பத்திற்குக் காரணம் தான் என்ன?

சென்ற தலைமுறை வரை எழுத்து என்பது ஊடகம் சார்ந்ததாகவே இருந்தது. ஊடகங்களில் எழுத்து வருவதென்பது பெரும் சாதனையாகவே இருந்தது. அவ்வாறு கிடைத்த இடத்தைத் தக்க வைக்க தொடர் போராட்டமே வாழ்க்கையாக ஆனது. குறைவான ஊடகங்கள், அதிக அளவிலான எழுதும் திறன் படைத்தோர் என்ற ஏற்றத்தாழ்வினால், எழுதும் திறன் படைத்தோரில் வெகுசிலரே ’எழுத்தாளனாக’ உருவெடுக்க முடிந்தது. 

அப்படி எழுத்தாளன் ஆன பின்னும் வருமானம் என்பது பெரிதாக ஏதுமில்லை என்பதே உண்மை. ஆத்மத் திருப்தியே பலரையும் எழுத்துக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க வைத்தது. அந்த வறுமையே பல உக்கிரமான படிப்புகளையும் பாரதி, புலமைப்பித்தன் போன்றோரால் படைக்கப்படக் காரணமாயிற்று.

அப்படி பெரும் போராட்டத்திற்குப் பின்னரே அடையக்கூடிய இடமாக ‘எழுத்தாளன்’ ஸ்தானம் இருந்ததும், அவர்களில் சிலர் லட்சிய வாழ்க்கைமுறைகளை நம் முன் வைத்ததுமே எழுத்தாளன் என்ற பிம்பத்தை நாம் கொண்டாடக் காரணமாக இருந்தது.

நவீன தொலைத்தொடர்புக் காலம் கொண்டு வந்த மாற்றங்களில் முக்கியமானது இணைய எழுத்து. ஊடகங்களில் எழுதமுடியாத விஷயங்கள்கூட, இங்கு தைரியமாக முன்வைக்கப்பட்டன. ஊடகங்களும் அவற்றைத் திருப்பிச் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டன.(உதாரணம் சவுக்கின் கட்டுரைகளும் ஜூவியும்)

இலக்கிய உலகமும் இப்போது அந்த சிக்கலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இணையத்தின் வீச்சு குறைவாக இருக்கும் இந்தக் காலத்திலேயே பல நல்ல கதை-கவிதை-கட்டுரைகள் இங்கு கொட்டப்படுகின்றன. அவற்றில் சில புத்தகங்களாகவும் உருவெடுக்கின்றன. 

இந்தச் சூழ்நிலையின் மிகப்பெரிய நன்மை, எழுதுபவனும் சாமானியனே என்ற உண்மை பலமுறை பல பதிவர்களின் முகமூடி கிழிக்கப்பட்டதன் மூலம் இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அது நிரூபிக்கப்படும்.
எழுதும்போது உள்ள மனநிலை வேறு. அதை முடித்தபின் மீண்டும் சாமானிய நிலைக்கு மனம் திரும்புவதை சிறு கட்டுரை எழுதிப் பார்த்தோர் கூட உணர முடியும். மனித மனத்தால் வாழ்வின் உச்சங்களையும் எச்சங்களையும் தொட முடியும் என்பது இந்த இணைய உலகில் தொடர்ந்து தெளிவாக்கப்படுகிறது. ‘அவரா அப்படிச் செய்தார்?’ என்று வாசகர்களின் கூக்குரல் இங்கு கேட்டுக்கொண்டே இருக்கின்றது.

எழுத்தாளர்களுக்கு வலைப்பதிவுகளும் பதிவர்களும் கசப்பான விஷயமாகத் தோன்றக்காரணம் பதிவர்கள் தங்கள் எழுத்தின் மூலம் உருவாக்கும் பிம்பத்தை, தாங்களே விரைவில் கலைப்பதாலேயே. இதன் நீட்சி இலகிய உலகையும் எட்டும்.

1970களில் என்றால், ஒரு எழுத்தாளனின் மனைவியின் கடிதம் சிற்றிலக்கிய வட்டம் தாண்டி வெளியேற வாய்ப்பில்லை. பிம்பத்திற்கும் பாதிப்பில்லை.

ஆனால் ’தனியே சுவற்றைப் பார்த்துப் பேசும் குடிகாரன்’ போன்ற பதிவர்களாலும் இணைய இதழ்களாலும், ஞானிப் பிம்பம் உடைத்தெறியப்படுகின்றது. பிற சமூக வலைத்தளங்களும் இதை முன்னெடுக்கின்றன.

வெறும் வம்புப்பேச்சு என்பதைத் தாண்டி, இதனால் வரும் நன்மை என்னவாக இருக்கும் என்றால் வருங்காலத்தில் எழுத்துக்கும் எழுதுபவனுக்குமான இடைவெளி சுருங்கும். அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து நடிப்போரின் முகமூடிகள் கிழித்தெறியப்படும்.

அதுவே நல்ல மனிதர்கள் படைக்கும் நல்ல இலக்கியங்களை வாசகன் பெற உதவி செய்யும். 

மேலும் வாசிக்க... "சாரு பற்றிய கடிதமும் சரிகின்ற பிம்பமும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

56 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.