Tuesday, July 19, 2011

சாரு பற்றிய கடிதமும் சரிகின்ற பிம்பமும்

“எழுதும்போது உள்ள சாரு வேற. எழுதும்போது மட்டுமே நான் சாருநிவேதிதா. மற்ற நேரங்களில் உங்களைப் போன்ற சாதாரண மனிதன் நான்.” -  சாரு.

தேகம் புத்தக வெளியீட்டு விழாவில் சாரு பேசிய மேற்கண்ட பேச்சைப் பற்றி, நீண்ட நாட்களாகவே சிந்தித்துக் கொண்டிருந்தேன். தொடர்ச்சியாக பல கேள்விகளை அது எழுப்பிக்கொண்டே இருந்தது. அது பற்றி எழுதுவதற்கான நேரம் இப்போது வந்திருக்கின்றது. 

சாருநிவேதிதா பற்றி சாருவின் மனைவி நித்யானந்தாவிற்கு எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது நாகரீகமான செயலும் அல்ல, அத்தகைய நாகரீகத்தை நாம் நித்யானந்தாவிடம் எதிர்பார்ப்பது நியாயமும் அல்ல என்பதால் அதை விடுத்துப் பொதுவாக சிந்திப்போம்.

இலக்கிய உலகில் நீண்டநாட்களாகவே சர்ச்சைக்குள்ளாகிக் கொண்டிருக்கும் விஷயம் எழுத்துக்கும் எழுத்தாளனுக்குமான இடைவெளி. உலக நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பவனாகவும், நம்மையும் அந்தத் தளத்திற்கு உயர்த்தப் பாடுபடுவனாகவும் எழுத்தின் மூலம் அறியப்படும் எழுத்தாளன், நடைமுறை வாழ்வில் வீட்டிற்குள் தன் மனைவியைக் கை நீட்டி அடிக்கும் பேடியாக இருப்பதின் முரணே இங்கு நாம் பேச விழைவது.

எழுத்துக்கும் எழுத்தாளனின் நடவடிக்கைக்கும் உள்ள இடைவெளி, வாசகனை ஏமாற்றும் ஒன்றல்லவா? ஜெயகாந்தனுக்கு இரு மனைவிகள் என்று அறிந்த போதும் இதே போன்ற கசப்புணர்வே மேலிட்டது. இந்த இடைவெளிக்கான காரணம் தான் என்ன?
எழுத்தில் புரட்சியாளனாகவும், நிகழ்வாழ்வில் அடிமாட்டு ரேட்டில் ஆட்களை வேலை வாங்கும் நவீன பூர்ஷ்வாவாகவும் எழுத்தாளன் இருந்தால் அது நியாயம் தானா?
அப்படியென்றால், எழுத்து என்பது வெறும் ஏமாற்று வித்தை தானா? எழுத்தாளன் தான் சொன்னதைப் பின்பற்றாவிட்டாலும், அவன் எழுத்தைப் படிப்போர் பின்பற்றினால், சமூகத்திற்கு நன்மை தானே? அந்த வகையில் பார்த்தால் இந்த இடைவெளி என்பது சாதாரணமான ஒன்றா? 

ஒரு விஷயத்தை, கொள்கையை முழுமையாக அட்சுரம் பிசகாமல் பின்பற்றுவோர் மட்டுமே அதைப் பற்றிப் பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைச் சாத்தியம் தானா?

ஏ.ஸி.ஆஃபீஸீல் உட்கார்ந்துகொண்டு, எதற்குமே தெருவில் இறங்கிப்போராடாத ஒருவன் மெரீனாவில் ஈழத்தமிழருக்கான தீபமேற்றும் நிகழ்வு பற்றி உக்கிரமான கட்டுரை எழுதி, மக்களை அதன் பக்கம் திருப்புவது தவறான செயல் ஆகுமா?

பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை எதை வாங்க வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுத்து ’உடனே’ வேலையை முடிக்கும் ஒருவன் லஞ்சத்தை ஒழிப்போம் என அன்னா ஹாசாரெக்கு ஆதரவாக எழுதுவது முற்றிலும் தவறென்று சொல்ல முடியுமா?

இந்த இடைவெளிக்கு ஏதேனும் அளவீடுகள் கொள்ளலாமா? ஏற்றுக்கொள்ளக்கூடிய இடைவெளி, ஏற்றுக்கொள்ள முடியாத இடைவெளி என்று பிரிக்க முடியுமா?

இதன் அடிப்படையில் பார்த்தால், தன் வாழ்வில் கடைப்பிடிக்க முடியாத, கடைப்பிடிக்காத உயர் விழுமியங்களை சமூகத்தின் முன்வைக்கும் எழுத்தாளனின் செயல், வெறும் ஏமாற்று வேலையே என்ற முடிவுக்கு வர முடியவில்லை. படைப்பு மனம் செயல்படும் முறை விசித்திரமானது. பல நல்ல படைப்புகள், எழுத்தாளனையும் தாண்டி வந்து விழுந்தவையே.

நம்முடைய இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் எழுத்தாளன் மீதிருக்கும் ’ஞானி’ பிம்பம்! அவர்களை வாழ்வின் வழிகாட்டிகளாகவும், மகானாகவும் கொண்டாடும் நிலையும் இங்கு நிலவுகிறது. மீள முடியா புகழ்ச்சிச் சக்கரத்தில் மாட்டிக்கொண்ட ஸ்ரீமான் எழுத்துச்சித்தர் சத்குரு பாலகுமார ஸ்வாமிகளை அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக நாம் கொள்ளலாம். எழுத்தாளன் மேல் நாம் கொண்டிருக்கும்  ஞானி பிம்பத்திற்குக் காரணம் தான் என்ன?

சென்ற தலைமுறை வரை எழுத்து என்பது ஊடகம் சார்ந்ததாகவே இருந்தது. ஊடகங்களில் எழுத்து வருவதென்பது பெரும் சாதனையாகவே இருந்தது. அவ்வாறு கிடைத்த இடத்தைத் தக்க வைக்க தொடர் போராட்டமே வாழ்க்கையாக ஆனது. குறைவான ஊடகங்கள், அதிக அளவிலான எழுதும் திறன் படைத்தோர் என்ற ஏற்றத்தாழ்வினால், எழுதும் திறன் படைத்தோரில் வெகுசிலரே ’எழுத்தாளனாக’ உருவெடுக்க முடிந்தது. 

அப்படி எழுத்தாளன் ஆன பின்னும் வருமானம் என்பது பெரிதாக ஏதுமில்லை என்பதே உண்மை. ஆத்மத் திருப்தியே பலரையும் எழுத்துக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க வைத்தது. அந்த வறுமையே பல உக்கிரமான படிப்புகளையும் பாரதி, புலமைப்பித்தன் போன்றோரால் படைக்கப்படக் காரணமாயிற்று.

அப்படி பெரும் போராட்டத்திற்குப் பின்னரே அடையக்கூடிய இடமாக ‘எழுத்தாளன்’ ஸ்தானம் இருந்ததும், அவர்களில் சிலர் லட்சிய வாழ்க்கைமுறைகளை நம் முன் வைத்ததுமே எழுத்தாளன் என்ற பிம்பத்தை நாம் கொண்டாடக் காரணமாக இருந்தது.

நவீன தொலைத்தொடர்புக் காலம் கொண்டு வந்த மாற்றங்களில் முக்கியமானது இணைய எழுத்து. ஊடகங்களில் எழுதமுடியாத விஷயங்கள்கூட, இங்கு தைரியமாக முன்வைக்கப்பட்டன. ஊடகங்களும் அவற்றைத் திருப்பிச் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டன.(உதாரணம் சவுக்கின் கட்டுரைகளும் ஜூவியும்)

இலக்கிய உலகமும் இப்போது அந்த சிக்கலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இணையத்தின் வீச்சு குறைவாக இருக்கும் இந்தக் காலத்திலேயே பல நல்ல கதை-கவிதை-கட்டுரைகள் இங்கு கொட்டப்படுகின்றன. அவற்றில் சில புத்தகங்களாகவும் உருவெடுக்கின்றன. 

இந்தச் சூழ்நிலையின் மிகப்பெரிய நன்மை, எழுதுபவனும் சாமானியனே என்ற உண்மை பலமுறை பல பதிவர்களின் முகமூடி கிழிக்கப்பட்டதன் மூலம் இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அது நிரூபிக்கப்படும்.
எழுதும்போது உள்ள மனநிலை வேறு. அதை முடித்தபின் மீண்டும் சாமானிய நிலைக்கு மனம் திரும்புவதை சிறு கட்டுரை எழுதிப் பார்த்தோர் கூட உணர முடியும். மனித மனத்தால் வாழ்வின் உச்சங்களையும் எச்சங்களையும் தொட முடியும் என்பது இந்த இணைய உலகில் தொடர்ந்து தெளிவாக்கப்படுகிறது. ‘அவரா அப்படிச் செய்தார்?’ என்று வாசகர்களின் கூக்குரல் இங்கு கேட்டுக்கொண்டே இருக்கின்றது.

எழுத்தாளர்களுக்கு வலைப்பதிவுகளும் பதிவர்களும் கசப்பான விஷயமாகத் தோன்றக்காரணம் பதிவர்கள் தங்கள் எழுத்தின் மூலம் உருவாக்கும் பிம்பத்தை, தாங்களே விரைவில் கலைப்பதாலேயே. இதன் நீட்சி இலகிய உலகையும் எட்டும்.

1970களில் என்றால், ஒரு எழுத்தாளனின் மனைவியின் கடிதம் சிற்றிலக்கிய வட்டம் தாண்டி வெளியேற வாய்ப்பில்லை. பிம்பத்திற்கும் பாதிப்பில்லை.

ஆனால் ’தனியே சுவற்றைப் பார்த்துப் பேசும் குடிகாரன்’ போன்ற பதிவர்களாலும் இணைய இதழ்களாலும், ஞானிப் பிம்பம் உடைத்தெறியப்படுகின்றது. பிற சமூக வலைத்தளங்களும் இதை முன்னெடுக்கின்றன.

வெறும் வம்புப்பேச்சு என்பதைத் தாண்டி, இதனால் வரும் நன்மை என்னவாக இருக்கும் என்றால் வருங்காலத்தில் எழுத்துக்கும் எழுதுபவனுக்குமான இடைவெளி சுருங்கும். அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து நடிப்போரின் முகமூடிகள் கிழித்தெறியப்படும்.

அதுவே நல்ல மனிதர்கள் படைக்கும் நல்ல இலக்கியங்களை வாசகன் பெற உதவி செய்யும். 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

56 comments:

 1. ////ஒரு விஷயத்தை, கொள்கையை முழுமையாக அட்சுரம் பிசகாமல் பின்பற்றுவோர் மட்டுமே அதைப் பற்றிப் பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைச் சாத்தியம் தானா?// முழுமையாக வேண்டாம் ஒரு முக்கால்வாசியாவது..

  தன் மனைவியை அடிமையாக நடத்துபவன், பெண்ணடிமை நீங்க வேண்டும் என்று எழுதுவதை எப்படி ஏற்றுக்கொள்வது???? ஊருக்கு தான் உபதேசம் என்ற நிலையல்லவா அது!

  சீதனக்கொடுமை என்று கவி வடிப்பவன் தான் கட்டப்போகும் பெண்ணிடம் சீதனத்தை எதிர்பார்ப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது???

  உதாரணத்துக்கு, எல்லோரும் சாருவின் நிலையில் இருந்து எழுதினால் (ஊருக்கு தான் உபதேசம் என்ற ரீதியில்) அவற்றை பின்பற்றுவது யார்??

  ReplyDelete
 2. ///வெறும் வம்புப்பேச்சு என்பதைத் தாண்டி, இதனால் வரும் நன்மை என்னவாக இருக்கும் என்றால் வருங்காலத்தில் எழுத்துக்கும் எழுதுபவனுக்குமான இடைவெளி சுருங்கும். அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து நடிப்போரின் முகமூடிகள் கிழித்தெறியப்படும்.

  அதுவே நல்ல மனிதர்கள் படைக்கும் நல்ல இலக்கியங்களை வாசகன் பெற உதவி செய்யும்.// ஏற்றுக்கொள்கிறேன் நண்பா .

  ReplyDelete
 3. @கந்தசாமி. கருத்துக்கு நன்றி கந்தசாமி.

  ReplyDelete
 4. தாடிகளெல்லாம் தாகூரா.....மீசைகளெல்லாம் பாரதியா....வேஷத்தில்ஏமாறாதே தோழா!

  ReplyDelete
 5. செங்கோவி ....சாருவின் வழியே போகத்தொடங்கிவிட்டீர்களோ?
  மூன்று முறை வாசித்தும் நம்ம மூளைக்கு ஒன்னும் ஏறலை....

  உங்கள் பதிவுகளில் இது தனி ரகம்...செங்கோவி at his best...

  ReplyDelete
 6. சாரு போலி எழுத்து வியாபாரி.
  சகோதரன் மகளிடம் உறவு வைத்துக்கொள்ளும் செக்ஸ் வெறி பிடித்த நாய் என்பதும் வெளியாகி விட்டது.
  இதற்க்கு எந்த பின் நவீனத்துவம்...புடலங்காய்த்துவம் வழிகாட்டியது???

  ReplyDelete
 7. படைப்பாளீகளின் தனிப்பட்ட வாழ்வை நாம் விமர்சிக்கத்தேவை இல்லை. ஆனால் அவர்கள் எல்லை மீறும்போது நம் கண்டனங்களை பதிவு செய்கிறோம்.. அதே சமயம் அவர்களை ஆதர்ச புருஷராக சிலர் நினப்பதால் தான் பிரச்சனையே வருகிறது.. படைப்பை மட்டும் ரசிக்க வேண்டும்.. படைப்பளனை தள்ளி நின்று தான் ரசிக்க வேண்டும்.

  ReplyDelete
 8. @விக்கியுலகம் //தாடிகளெல்லாம் தாகூரா.....மீசைகளெல்லாம் பாரதியா....வேஷத்தில்ஏமாறாதே தோழா!// நச்னு சொன்னீங்க விக்கி.

  ReplyDelete
 9. @Reverie //மூன்று முறை வாசித்தும் நம்ம மூளைக்கு ஒன்னும் ஏறலை.// இப்படி ஒரு கடின நடையில் எழுதாவிட்டால், இதுவொரு வம்புப் பேச்சாக மாறும் அபாயம் உண்டு ரெவெரீ..சாருவைப் பற்றி மட்டுமல்ல ஒட்டுமொத்த இலக்கியவாதிகள் பற்றிய மோலோட்டமான பார்வையே இந்தப் பதிவு.

  ReplyDelete
 10. @தமிழ்வாசி - Prakash //sengovi ezhuthil ippadi oru change'aa. e'aa.// இதான்யா ஒரிஜினல்!

  ReplyDelete
 11. @உலக சினிமா ரசிகன் //இதற்க்கு எந்த பின் நவீனத்துவம்...புடலங்காய்த்துவம் வழிகாட்டியது???// சரியான கேள்வி சார்..தங்கள் வக்கிரங்களுக்கு ஏதோவொரு இசத்தைச் சொல்லிக்கொள்கிறார்கள்.

  ReplyDelete
 12. @சி.பி.செந்தில்குமார் //படைப்பாளீகளின் தனிப்பட்ட வாழ்வை நாம் விமர்சிக்கத்தேவை இல்லை. ஆனால் அவர்கள் எல்லை மீறும்போது நம் கண்டனங்களை பதிவு செய்கிறோம்.. அதே சமயம் அவர்களை ஆதர்ச புருஷராக சிலர் நினப்பதால் தான் பிரச்சனையே வருகிறது.. படைப்பை மட்டும் ரசிக்க வேண்டும்.. படைப்பளனை தள்ளி நின்று தான் ரசிக்க வேண்டும்.// அப்பாடி..பதிவின் சாராம்சத்தைப் பிடித்து விட்டீர்கள்!

  ReplyDelete
 13. தற்கால கவிஞர் எழுத்தாளரது தத்துவங்கள் ஊருக்குத் தான் எனக்கல்ல என்பது போலவே உள்ளது.... சகோதரா


  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

  ReplyDelete
 14. //நல்ல மனிதர்கள் படைக்கும் நல்ல இலக்கியங்களை வாசகன் பெற உதவி செய்யும்.//

  ஏற்றுக்கொள்கிறேன் நண்பா .

  ReplyDelete
 15. எழுத்தாளர்களுக்கு தமிழ்ச் சமூகத்தில் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பது உண்மை! அதே நேரத்தில் எழுத்தாளனோ, நடிகனோ தமது படைப்புகளுக்காகவே கொண்டாடப்படவேண்டுமே தவிர அவர்களை ரோல் மாடலாக ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை! அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் நியாயப்படுத்துபவனே ரசிகன் என்ற ஒரு மிகத்தவறான பார்வை சம்பந்தப்பட்டவர்களிடமும் மற்றவர்களிடமும் இருக்கிறது!
  சாருவின் நகைச்சுவை, நக்கல், எள்ளல் நிறைந்த எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும்! அதற்காக சாரு பண்ணும் எல்லாக் கேனத்தனங்களையும் ரசிக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது!
  எழுதும்போது வேற வாய்...எழுதினப்புறம் நாற வாய் என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது!
  நான் எப்போதும் நானாகவே!

  ReplyDelete
 16. //எழுத்தாளர்களுக்கு வலைப்பதிவுகளும் பதிவர்களும் கசப்பான விஷயமாகத் தோன்றக்காரணம் பதிவர்கள் தங்கள் எழுத்தின் மூலம் உருவாக்கும் பிம்பத்தை, தாங்களே விரைவில் கலைப்பதாலேயே.//
  ஒழுங்காகத் தமிழில் எழுதத் தெரியாதவனெல்லாம் பதிவ்ராயிடுரான்னு சாருகூட ஒருமுறை சொன்னதாக ஞாபகம்! :-)

  ReplyDelete
 17. //மீள முடியா புகழ்ச்சிச் சக்கரத்தில் மாட்டிக்கொண்ட ஸ்ரீமான் எழுத்துச்சித்தர் சத்குரு பாலகுமார ஸ்வாமிகளை அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக நாம் கொள்ளலாம்//
  ஆரம்பத்தில் அவர் வாசகனுக்கு மிக நெருக்கமானவராக, சின்ன வயதில் வாசிக்கும்போது வாழ்வியலின் அறிமுகமில்லாத பலநிலைகளை சொல்லிக் கொடுப்பவராக இருந்தார். எப்போ அவர் சுவாமிகள் ஆனாரோ அப்போதே சுவாரஷ்யம் இழந்துவிட்டார்! இதற்கு வயதுகூட காரணமோ!

  ReplyDelete
 18. எழுத்தாளர்கள் சிறந்த ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் இருக்க முடியும்!
  இருந்திருக்கிறார்கள்!
  - சுஜாதா அப்படி இருக்கவில்லையா?

  ReplyDelete
 19. நல்லதை யார் கூறினாலும் எடுத்து கொள்ளலாம், அதே சமயம் தன்னுடைய தவறினை கூட வெளிப்படையாக ஒத்துக் கொள்ள துணியாத சாரு மற்றவர்களை பற்றி மட்டும் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம் என இருப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? இப்படி இருக்கிறவர்களிடம் படைப்பு வேறு படைப்பாளி வேறு என நியாயம் பேச முடியுமா? இன்னும் ஆதர்ச புருசர்களாக வழிகாட்டியாக திகழ கூடிய எழுத்தாளர்களும் புகழ் வெளிச்சத்துக்கு வராத எத்தனையோ எழுத்தாளர்களும் இந்நாட்டில் இருக்கிறார்கள், அவர்களை படியுங்கள் கொண்டாடுங்கள், ஒருவர் புகழ் பெற்றுவிட்டார் என்பதற்காக அவரது செயல்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்பதில்லை, இது போன்ற எழுத்தாளர்களை தாராளமாக புறக்கணிக்கலாம், அதனால் ஒன்றும் கெட்டு போகாது என்பது என் கருத்து, ஒரு தவறை தெரியாமல் செய்பவனை மன்னிக்கலாம், ஆனால் தெரிந்தே செய்பவனை அந்த கடவுள் கூட மன்னிக்க மாட்டார், எழுத்து இலக்கியம் போன்ற கலைகள் தவறான வழியில் உபயோகப்படுத்தவா இருக்கிறது? இது உங்கள் பதிவிற்கு சம்பந்தம் இல்லையென்றாலும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்

  ReplyDelete
 20. // ம.தி.சுதா said...
  தற்கால கவிஞர் எழுத்தாளரது தத்துவங்கள் ஊருக்குத் தான் எனக்கல்ல என்பது போலவே உள்ளது.... சகோதரா // உண்மை தான் சுதா..இது நீண்டநாள் நீடிக்காது!

  ReplyDelete
 21. // சே.குமார் said...
  ஏற்றுக்கொள்கிறேன் நண்பா// நன்றி குமார்.

  ReplyDelete
 22. // ஜீ... said...
  எழுத்தாளனோ, நடிகனோ தமது படைப்புகளுக்காகவே கொண்டாடப்படவேண்டுமே தவிர அவர்களை ரோல் மாடலாக ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை! அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் நியாயப்படுத்துபவனே ரசிகன் என்ற ஒரு மிகத்தவறான பார்வை சம்பந்தப்பட்டவர்களிடமும் மற்றவர்களிடமும் இருக்கிறது! //

  கரெக்ட் ஜீ..எழுதும் ஆற்றல் இருப்பதாலேயே ரோல் மாடலாக இருக்க தகுதி உள்ளதாக நாம் நினைப்பது தவறு.

  //எழுதும்போது வேற வாய்...எழுதினப்புறம் நாற வாய் என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது! //

  சில நேரங்களில் மிகச் சாதாரணமாக எழுதத் துவங்கும் நாம், ஏதோ ஒரு உந்துதலில்/உணர்ச்சிப் பெருக்கில் நம்மை மீறி வார்த்தைகள் வந்து விழுவதைப் பார்க்கின்றோம் தானே..அது தான் படிப்பு மனத்தின் செய்ல்பாட்டு ரகசியம்.

  எழுதும்போது உள்ள மனநிலை, எழுதிய பின் மாறலாம். எழுதும்போது உள்ள அடிப்படை அறம் சார்ந்த கொள்கைகள் மாறுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. சாருவின் அன்றைய பேச்சு குறிப்பிட்டது முதல்வகையை. அவரது செயல்கள் சொல்வது இரண்டாம் நிலையை.


  //ஒழுங்காகத் தமிழில் எழுதத் தெரியாதவனெல்லாம் பதிவ்ராயிடுரான்னு சாருகூட ஒருமுறை சொன்னதாக ஞாபகம்! :// வார்த்தைகளை ஒழுங்காக கட்டமைக்க்த் தெரிந்தவன் எல்லாம் அறிவாளி அல்ல என்று சமூகத்திற்கு உணர்த்தியதே நம் போன்ற பதிவர்களின் மாபெரும் சாதனை.

  //ஆரம்பத்தில் அவர் வாசகனுக்கு மிக நெருக்கமானவராக, சின்ன வயதில் வாசிக்கும்போது வாழ்வியலின் அறிமுகமில்லாத பலநிலைகளை சொல்லிக் கொடுப்பவராக இருந்தார்.// உண்மை தான் ஜீ..அவரது ஆரம்ப கால நாவல்கள் இன்றும் நம் மதிப்பிற்கு உரியவையே. இந்த ஸ்வாமிகள் கோஷம் தான் கஷ்டப்படுத்துகிறது.


  // ஜீ... said...
  எழுத்தாளர்கள் சிறந்த ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் இருக்க முடியும்! இருந்திருக்கிறார்கள்! - சுஜாதா அப்படி இருக்கவில்லையா? //

  சுஜாதா சக படைப்பாளிகளுக்குத் தான் வழிகாட்டியாக இருந்தாரேயொழிய, அவரது வாசகர்களுக்கு அல்ல என்பது என் தாழ்மையான அபிப்ராயம். வாழ்வின் சிக்கலான தன்மைக்குள் அவரது எழுத்து நுழையவே இல்லை. எழுத்து அவருக்கு வசப்பட்டது, அதிலேயே அவர் திருப்தி அடைந்து விட்டார்.

  ReplyDelete
 23. //இரவு வானம் said...
  இன்னும் ஆதர்ச புருசர்களாக வழிகாட்டியாக திகழ கூடிய எழுத்தாளர்களும் புகழ் வெளிச்சத்துக்கு வராத எத்தனையோ எழுத்தாளர்களும் இந்நாட்டில் இருக்கிறார்கள்.//

  உண்மை தான் நைட்..ஊடகங்களில் நுழைய முடியாமல் கருகிப்போன படைப்புகள் எத்தனையோ இங்கு உண்டு. மேலும், இன்று நாம் கொண்டாடும் பெரும்பாலானா படிப்பாளிகளாஇ அவர்களது காலத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை, அவர்களின் அருமை யாருக்கும் தெரியவும் இல்லை. அதையும் மீறியே அவர்கள் உக்கிரமான படைப்புகளை உருவாக்கினார்கள். எனவே..

  // அவர்களை படியுங்கள் கொண்டாடுங்கள், ஒருவர் புகழ் பெற்றுவிட்டார் என்பதற்காக அவரது செயல்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்பதில்லை, இது போன்ற எழுத்தாளர்களை தாராளமாக புறக்கணிக்கலாம், அதனால் ஒன்றும் கெட்டு போகாது என்பது என் கருத்து.// ஆம்.

  //இது உங்கள் பதிவிற்கு சம்பந்தம் இல்லையென்றாலும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்// சம்பந்தம் உள்ளது நண்பரே..இந்தப் பதிவைப் படிப்போரும் தங்கள் கருத்தை முன்வைக்க வேண்டும், விவாதிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்தப் பதிவில் அதீத தனிமனித தாக்குதலோ ‘தீவிரமான முடிவு’ தருவதையோ நான் செய்யவில்லை. நன்றி நைட்.

  ReplyDelete
 24. படைப்புக்கும் படைப்பாளிக்கும் தொடர்பில்லை அவர்களின் படைப்பை மட்டும் பார்க்கவேண்டும் என்பது ஒரு வகை. படைப்புக்கும் படைப்பாளிக்கும் தொடர்புண்டு என்று வாழ்ந்துகாட்டிப் போகிறவர்களும் இருக்கிறார்கள். படைப்புக்கும் படைப்பாளிக்கும் தொடர்பு இருக்கக்கூடாது என்று வலிந்து கற்பித்துக்கொண்டு எழுதிக்கொண்டும் அதற்கேற்ப நடந்துகொண்டுமிருப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் தான் எப்படி இருந்தபோதிலும் தன்னுடைய எழுத்து இப்படித்தான் இருக்கவேண்டும் என்று முடிவெடுத்து எழுத்துக்களில் ஒரு கற்பு நிலை காத்த சில அரிய படைப்பாளிகளும் இருக்கிறார்கள். கண்ணதாசனை இந்தவகைப்பட்டவர்களில் முதன்மையானவராகச் சொல்லலாம். அதனால்தான் தாம் செய்த தவறுகளைக்கூட வெளிப்படையாக ஒப்புக்கொண்ட தைரியம் அவருக்கு இருந்தது. ஆனால் அப்படித்தாம் செய்த தவறுகளைப்பற்றிச் சொல்லும்போது அந்த எழுத்துக்களின் தொனி என்ன என்பதுதான் இங்கே முக்கியமானது. அதனால்தான் கண்ணதாசன் இன்னமும் மதிக்கப்படுபவராகவும் கொண்டாடப்படுபவராகவும் இருக்கிறார். அப்படியில்லாமல் சேற்றில் புரண்டுகொண்டு அதையே தமது பிராபல்யமாக பிதற்றிக்கொண்டிருப்பவர்கள் வெகுவிரைவிலேயே மண்டகப்படிகளுக்கு ஆளாவதும் இந்தப் புரிதல் இன்மையால்தான். தங்கள் பார்வை வித்தியாசமானது. சரியானது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 25. கடந்த சில தினங்களாகவே நித்யானந்தா,ரஞ்சிதா குறித்தும்,கால சூழல்கள் மாறும்போது தவறுகள் செய்தும் தலைப்பாகட்டுடன் நித்யானந்தா நிருபர் பேட்டி தருவது பற்றியெல்லாம் மெல்லிய சிந்தனைகள்.

  சாருவின் முகத்திரை ஏற்கனவே கிழிக்கப்பட்டும் சாருவின் மனைவியின் கடிதம் முகத்திரையை மட்டுமல்ல சாருவையே மொத்த நிர்வாணப்படுத்தியுள்ளது.கூடவே மனரீதியாக சாருவின் மனைவியின் கடிதம் விவாதப்பொருளாகப் போகிறது.Quite shocking!

  தற்போதைய உங்கள் பதிவுகளின் சிந்தனையிலும்,எழுத்தின் நடையிலும் மெருகு கூடுகிறது.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. இது சாதாரண பதிவு போல இல்லாமல் கனம் பொருந்திய,சிந்திக்க வைக்கும்,வெகு ஜன பத்திரிகைகளில் இடம் பெற தகுந்த பதிவு.தொடரட்டும் இது போன்ற பதிவுகள்.பாராட்டுகள்.

  ReplyDelete
 27. எழுத்தாளனின் கருத்தைப் பார்ப்பதைவிட்டு அவனின் அந்தரங்கத்தில் நுழைவது சரியா என்பது ஜோசிக்க வேண்டும் முகத்திரை கிழிக்கப்பட்டால் நல்ல படைப்பு வருமா என்பது சந்தேகம் இரட்டை வாழ்வு சாத்தியம் அற்றது கருத்தை தெளிவாக்கினால் புரிந்து கொள்வதை தாண்டி அவரை ஞானி என்று ஏன் பின்னால் போகனும் இங்குதான் வாசகன் சுயம் இழக்கின்றான் பின் அவர்களின் பின்பம் வெளிப்படும் போது வெறுக்கின்றான் ஜெய்க்காந்தன் கதை ஜெயந்திரார் கூட போய்விட்டது!

  ReplyDelete
 28. எழுத்தாளனின் எழுத்தை மட்டும் பார்க்க வேண்டும் என்பது ஒத்துக் கொள்ள கூடியதுதான், ஆனால் எழுத்துக்கள் மூலமாக ஒரு கருத்துத் திணிப்பு, சித்தாந்தத் திணிப்பு நடத்தும் போது, எழுத்தாளன் முதலில் அதன்படி நடக்கின்றானா என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகிறது. எழுதாளனுக்கே உதவாத, அல்லது முடியாத ஒன்றை அவன் ஏன் மற்றவர்கள் மேல் திணிக்க வேண்டும்?

  ReplyDelete
 29. தனி மனித சுதந்திரம் முக்கியம் நண்பரே, அதில் யாரும் தலையிட முடியாதே??!!

  சாரு மட்டுமே இப்படியா? உலகில் வேறு யாரும் இல்லையா இப்படி??
  இன்னும் எவ்வளவோ மனித மிருகங்கள் உலவிக்கொண்டு இருகின்றன.

  என்னதான் பண்ணுறதுன்னு கேக்குறீங்களா?

  ஒதுக்கிறதை தவிர வேறு வழி இல்லை. எழுத்தாளன் என்கிற அங்கீகாரம் இருக்கிற வரை அவரு எதையும் கண்டுக்க மாட்டாரு,
  எதுவும் இல்லாம தனி ஆயிட்டருன்னா வழிக்கு வருவாரு சாரு..

  ReplyDelete
 30. @Amudhavan Amudhavan said... [Reply]

  //கண்ணதாசனை இந்தவகைப்பட்டவர்களில் முதன்மையானவராகச் சொல்லலாம். அதனால்தான் தாம் செய்த தவறுகளைக்கூட வெளிப்படையாக ஒப்புக்கொண்ட தைரியம் அவருக்கு இருந்தது. ஆனால் அப்படித்தாம் செய்த தவறுகளைப்பற்றிச் சொல்லும்போது அந்த எழுத்துக்களின் தொனி என்ன என்பதுதான் இங்கே முக்கியமானது.//

  சரியான பாயிண்ட் சார்..தனது தவறுகள் பற்றிய குற்றவுணர்ச்சி சிறிதும் இல்லாமல் பெருமையாகப் பேசுவது எழுத்தாளன் மானுட அறத்திற்குச் செய்யும் துரோகம்.

  ReplyDelete
 31. ராஜ நடராஜன் said... [Reply]

  //தவறுகள் செய்தும் தலைப்பாகட்டுடன் நித்யானந்தா நிருபர் பேட்டி தருவது பற்றியெல்லாம் மெல்லிய சிந்தனைகள்.// இங்கேயும் அதே கதை தான் சார்.

  //கூடவே மனரீதியாக சாருவின் மனைவியின் கடிதம் விவாதப்பொருளாகப் போகிறது.// மற்ற விவகாரங்களை விட இது ஜீரணிக்க முடியாததாக உள்ளது சார்.

  //தற்போதைய உங்கள் பதிவுகளின் சிந்தனையிலும்,எழுத்தின் நடையிலும் மெருகு கூடுகிறது.வாழ்த்துக்கள்.// நன்றி சார்..தீவிர எழுத்தை ஆரம்ப கால அரசியல் பதிவுகளில் உபயோகித்து, பிறகு வேண்டாம் என்று விட்டு விட்டேன். இடஹி இப்படி எழுதவில்லையென்றால் எழுத்தாளர் பற்றிய வசைகளும் வம்புகளும் மட்டுமே கமெண்ட்டில் விழும். அதை மட்டுறுத்தவே ’மெருகான’ நடை!

  ReplyDelete
 32. // R.Elan. said...
  இது சாதாரண பதிவு போல இல்லாமல் கனம் பொருந்திய,சிந்திக்க வைக்கும்,வெகு ஜன பத்திரிகைகளில் இடம் பெற தகுந்த பதிவு.தொடரட்டும் இது போன்ற பதிவுகள்.பாராட்டுகள். // மிக்க நன்றி நண்பரே..தொடரவா? இதற்கே நண்பர்கள் ‘தமிழில் எழுதுப்பா’ என்கிறார்கள்.

  ReplyDelete
 33. // Nesan said... [Reply]
  கருத்தை தெளிவாக்கினால் புரிந்து கொள்வதை தாண்டி அவரை ஞானி என்று ஏன் பின்னால் போகனும் இங்குதான் வாசகன் சுயம் இழக்கின்றான் //

  சமூகத்தை உய்விக்க வந்தவர் போன்று எழுதுவதாலேயே வாசகன் ஏமாறுகின்றான். பேச்சை நம் மனம் அப்படியே ஏற்பதில்லை. ஆனால் எழுத்தை அப்படியே உள்வாங்கிக் கொள்கிறது. ‘Read between lines' என்பது எல்லோராலும் முடிவதல்ல.

  //ஜெய்க்காந்தன் கதை ஜெயந்திரார் கூட போய்விட்டது! //அது சிங்கம் நரியான சோக வரலாறு!

  ReplyDelete
 34. // இராஜராஜேஸ்வரி said... [Reply]
  நல்ல மனிதர்கள் படைக்கும் நல்ல இலக்கியங்களை வாசகன் பெற உதவி செய்யும். // செய்தால் நல்லது. //

  கருத்துக்கு நன்றி சகோதரி.

  ReplyDelete
 35. //பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]
  எழுத்தாளனின் எழுத்தை மட்டும் பார்க்க வேண்டும் என்பது ஒத்துக் கொள்ள கூடியதுதான், ஆனால் எழுத்துக்கள் மூலமாக ஒரு கருத்துத் திணிப்பு, சித்தாந்தத் திணிப்பு நடத்தும் போது, எழுத்தாளன் முதலில் அதன்படி நடக்கின்றானா என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகிறது.// நியாயமான கருத்து பாஸ்..ஊருக்கு உபதேசம் என்பது அசிங்கமானது தான்.

  ReplyDelete
 36. ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply]

  //தனி மனித சுதந்திரம் முக்கியம் நண்பரே, அதில் யாரும் தலையிட முடியாதே?//

  சக மனிதரைத் துன்புறுத்தாத வரை, நாம் தனி மனித சுதந்திரத்தில் தலையிட முடியாது தான். இங்கு ஆப்படி இல்லையே..

  //சாரு மட்டுமே இப்படியா? உலகில் வேறு யாரும் இல்லையா இப்படி?// பதிவு பொதுவாக எல்லா எழுத்தாளர்களையும் பற்றியே பேசுகிறது.

  //எழுத்தாளன் என்கிற அங்கீகாரம் இருக்கிற வரை அவரு எதையும் கண்டுக்க மாட்டாரு //

  எழுத்தாளனை என்ன செய்வதென இங்கு பலரும் பேசியாகி விட்டது. நான் பதிய விழைந்தது பரிதாப வாசகனைப் பற்றியே.

  ReplyDelete
 37. //வெறும் வம்புப்பேச்சு என்பதைத் தாண்டி, இதனால் வரும் நன்மை என்னவாக இருக்கும் என்றால் வருங்காலத்தில் எழுத்துக்கும் எழுதுபவனுக்குமான இடைவெளி சுருங்கும். அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து நடிப்போரின் முகமூடிகள் கிழித்தெறியப்படும்.

  அதுவே நல்ல மனிதர்கள் படைக்கும் நல்ல இலக்கியங்களை வாசகன் பெற உதவி செய்யும்.//
  அவ்வாறே ஆகட்டும்!

  ReplyDelete
 38. பளிச் என்று ஒரு பதிவு.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 39. @sujiபாராட்டுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 40. எண்ணமும் செயலும் இணைந்து செயல் பட வேண்டுமென்ற தங்கள் கருத்து நியாயமானதுதான்.

  ReplyDelete
 41. எண்ணமும் செயலும் இணைந்து செயல் பட வேண்டுமென்ற தங்கள் கருத்து நியாயமானதுதான்.

  ReplyDelete
 42. எண்ணமும் செயலும் இணைந்து செயல் பட வேண்டுமென்ற தங்கள் கருத்து நியாயமானதுதான்.

  ReplyDelete
 43. எண்ணமும் செயலும் இணைந்து செயல் பட வேண்டுமென்ற தங்கள் கருத்து நியாயமானதுதான்.

  ReplyDelete
 44. @FOODஅடித்துச் சொன்னதற்கு நன்றி சார்.

  ReplyDelete
 45. எழுத்தாளன் என்றல்ல... எந்த பிரபலத்தையும் ரசிக்க ஆரம்பித்தால், அவர்களின் தனித்தன்மையை மட்டும் ரசித்து விட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும்...

  ஆதர்சன நாயகனாக வரிந்து கொண்டால், அனைத்து இன்னல்களும் வந்து சேரும்...

  ReplyDelete
 46. எழுத்தாளன், படைப்புக்கள்- சமூகம் இவற்றுக்கிடையில் இருக்க வேண்டிய பண்புகள், யதார்த்த அம்சங்களைப் பற்றிய காத்திரமான பதிவினைத் தந்திருக்கிறீங்க.

  ReplyDelete
 47. என் படுக்கையறைக்குள் கேமரா வைத்து விட்டார்கள், நாகரீமற்றவர்கள் என்று கூவிய நித்தி, இப்போது கடித்தத்தை வெளியிட்டு நாகரீகம் காத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. படத்தில் நடிப்பவன் எப்படி நிஜத்தில் நடித்ததற்கு, சம்பந்தமில்லாமல் இருக்கிறானோ, அதே போல எழுத்தாளனும் எழுதுவதைப் போல இருக்க வேண்டுமென்று அவசியமில்லை போலும்!! வைரமுத்து, தமிழ், என் தாய் அது இது என்று கூவுவார், பார்த்தால், டேக் இட் ஈசி பாலிசி, முக்காலா, முக்காப்லா, சகலக பேபி என்று பாட்டு எழுதி தமிழ்த் தாயின் சேலையை உருவும் வேலையைச் கொண்டிருப்பார். கருணாநிதி மேடையில், சினிமாவில் விட்ட வசனங்கள், எழுதிய எழுத்துக்கள், இவை எவற்றுக்கும் வாழ்ந்த வாழ்க்கைக்கும் சம்பந்தமே இருக்காது, ஆனால் மக்கள் நினைப்பதென்னவோ, சொன்னதைத்தான் செய்வார்கள், செய்வதைத்தான் சொல்வார்கள் என்று... எவ்வளவு காலாம்தான் ஏமாறுவதோ தெரியவில்லை.

  ReplyDelete
 48. பதிவு அருமை.நல்ல அலசல்.தெளிவான புரிதல்.சாரு அவர்களை நான் வாசித்தது இல்லை..ஏன் நீங்கள் குறிப்பிடும் யாரையும்,ஜெயகாந்தனை தவிர,எவரையும் வாசித்ததில்லை.
  படைப்புகள்,பொதுவாக,மூளையின் முற்றிலும் வேறொரு பரிமானத்திலிருந்து வெளிப்படுவதால், படைப்புகள் அதை படைத்தவர்களிலிருந்து மாறுபடவே செய்கின்றன...செய்யும்.கலைஞர்கள்,மனதை வென்றவர்கள் கிடையாது, நம்மில் பலரை போலவே!அதிலும் அறிவு,பொதியாக மாறுவது அவர்களுக்கு இயல்பு..ஏன் இது எங்களை போன்ற மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் கூட நிகழும்.இப்படி அறிவின் சுமையில் கணக்கும் மனது(மூளை) எளிதில் தன வசம் இழக்கும்.out of control..என்று சொல்கிறோமே அது.அறிவுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பதும்,அவர்களை கடவுளாக்கி கொண்டாடுவதும் நம் தவறு. அல்லது எது உண்மையான அறிவு என்பதையாவது, நாம் அறிந்திருக்க வேண்டும்.
  உலகில் இது வரை தோன்றிய சிறந்த தலைவர்கள் எல்லோருமே,சாதாரண காரண- அறிவு படைத்தவர்களே- அன்பு என்னும் பேரறிவு படைத்தவர்கள் .காந்தியே சிறந்த உதாரணம்.சிறய செயல்களை முழுமையாக செய்தவர்கள். இனியாவது,கலைஞர்களிலும்,அறிஞர்களிலும் தலைவரை தேடாதிருப்போம்.இவர்கள் அறிவை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வோம்.

  ReplyDelete
 49. பதிவு அருமை.நல்ல அலசல்.தெளிவான புரிதல்.சாரு அவர்களை நான் வாசித்தது இல்லை..ஏன் நீங்கள் குறிப்பிடும் யாரையும்,ஜெயகாந்தனை தவிர,எவரையும் வாசித்ததில்லை.
  படைப்புகள்,பொதுவாக,மூளையின் முற்றிலும் வேறொரு பரிமானத்திலிருந்து வெளிப்படுவதால், படைப்புகள் அதை படைத்தவர்களிலிருந்து மாறுபடவே செய்கின்றன...செய்யும்.கலைஞர்கள்,மனதை வென்றவர்கள் கிடையாது, நம்மில் பலரை போலவே!அதிலும் அறிவு,பொதியாக மாறுவது அவர்களுக்கு இயல்பு..ஏன் இது எங்களை போன்ற மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் கூட நிகழும்.இப்படி அறிவின் சுமையில் கணக்கும் மனது(மூளை) எளிதில் தன வசம் இழக்கும்.out of control..என்று சொல்கிறோமே அது.அறிவுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பதும்,அவர்களை கடவுளாக்கி கொண்டாடுவதும் நம் தவறு. அல்லது எது உண்மையான அறிவு என்பதையாவது, நாம் அறிந்திருக்க வேண்டும்.
  உலகில் இது வரை தோன்றிய சிறந்த தலைவர்கள் எல்லோருமே,சாதாரண காரண- அறிவு படைத்தவர்களே- அன்பு என்னும் பேரறிவு படைத்தவர்கள் .காந்தியே சிறந்த உதாரணம்.சிறய செயல்களை முழுமையாக செய்தவர்கள். இனியாவது,கலைஞர்களிலும்,அறிஞர்களிலும் தலைவரை தேடாதிருப்போம்.இவர்கள் அறிவை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வோம்.

  ReplyDelete
 50. @dr.tj vadivukkarasi தெளிவான, விளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி டாக்டர்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.