Tuesday, October 30, 2012

தம்பி, உனக்கு எது நல்லதுன்னு தெரியுமா?

நான் கோயம்புத்தூரில் ஒரு மெசின் ஷாப்பில் வேலை செய்துகொண்டிருந்த காலம். என்னுடன் பாலமுருகன் என்ற நண்பரும் வேலை செய்தார். எங்கள் இருவருக்குமே மாதம் 2000 ரூபாய் தான் சம்பளம். அந்த நேரத்தில் பாலாவின் நண்பர் ஒருவர் மற்றொரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு ஒரு அசிஸ்டெண்ட் தேவைப்பட, அவர் பாலாவை அப்ளை செய்யும்படி சொன்னார்.

இருவரும் ஒரே வகுப்பில் படித்து வந்தவர்கள் என்பதால், பாலாவிற்கு ஈகோ பிரச்சினை. நாம சோத்துக்கே லாட்டரி அடிச்சாலும், மானம் மருவாதியை விட்டுத்தர மாட்டோம், இல்லியா? அதனால அவர் என்னை அப்ளை பண்ணச் சொன்னார். ’முருகனே’ சொல்லும்போது, மாட்டேன்னு சொல்லலாமான்னு செண்டிமெண்ட்டலா யோசிச்சு, அப்ளை பண்ணேன். அப்புறம் இண்டர்வியூக்கும் போனேன். பாலாவின் நண்பரும் ரெகமண்ட் பண்ணதால, இண்டர்வியூ ஈஸியா கிளியர் ஆகிடுச்சு. சம்பளம் 3500 ரூபாய்னு சொல்லிட்டாங்க.

பாலாகிட்ட வந்து செலக்ட் ஆனதையும் 3500 ரூபாய் சம்பளம்ங்கிறதையும் சொன்னேன். அவர் அதிர்ச்சியாகிட்டார். என்ன இருந்தாலும், அவரும் மனுசன் தானே? 2000 ரூபாயில இருந்து 3500 ரூபாய்னா சும்மாவா? அன்னிக்கு நைட் வீட்டுக்குப் போனவர், வீட்ல விஷயத்தைச் சொல்லியிருக்கார். அவங்க கடுப்பாகிட்டாங்க. ‘அட மூதி..இப்படி 3500 ரூபா வேலை தேடி வந்திருக்கு. இப்படி வேஸ்ட்டா இன்னொருத்தனுக்கு தூக்கி கொடுத்திருக்கியே..நமக்கெல்லாம் ஈகோ தேவையா?’ன்னு அட்வைஸ் மழை. அவங்க சொல்றதும் சரி தானே?

 அதனால அடுத்த நாள் எங்கிட்ட வந்த பாலா, ‘வீட்ல திட்டறாங்க..நானே போயிரக்கலாம்னு தோணுது’ன்னு புலம்புனாரு. அங்க நான் வேலை பார்க்கப்போறது பாலாவோட ஃப்ரெண்டுக்கு கீழே..அதனால பாலாவை பகைச்சுக்கிட்டுப் போறது நல்லதில்லை..அதுமட்டுமில்லாம, இந்த வேலையே பாலா கொடுத்தது தானே? அதனால ‘நீயே போய்க்கோ’ன்னு சொல்லிட்டேன். அந்த கம்பெனிக்கும் ஃபோன் பண்ணி, ‘என்னை ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டிருக்காக..சிங்கப்பூர்ல சில்க் ஸ்மிதா கூப்பிட்டிருக்காக’ன்னு அளந்து விட்டுட்டு, என்னால வர முடியாதுன்னு சொல்லிட்டேன். அப்புறம் என்ன..பாலா அங்கே வேலைக்குப் போயிட்டாரு.

வாழ்க்கை எனும் ஓடம்...



ஆனாலும் பாலாக்கு மனசுல உறுத்தல். ‘இவ்வளவு தங்கமான, கண்ணியமான, யோக்கியமான, அப்பாவியான....இன்னும் எல்லாம் ஆன' நண்பனுக்கு துரோகம் செஞ்சுட்டமோன்னு மனுசனுக்கு யோசனை. அவர் ஊர் ஈரோட்டுப் பக்கம். அந்த வார கடைசியில் அவர் ஊருக்குப் போகும்போது, பக்கத்து சீட்டில் எங்கள் வயது வாலிபன்(அப்போ!) உட்கார்ந்திருந்தார். அவர் வளவளா பார்ட்டி. எனவே பாலாவிடம் கோவையிலிருந்து ஈரோடு வரை விடாமல் பேசிக்கொண்டே வந்திருக்கிறார். அதில் அவர் சொன்னது ‘ நான் ஒரு கம்பெனியில் வேலை பார்த்தேன். இன்னிக்கு ரிலீவ் ஆகிட்டேன்..அடுத்த வாரம் புதுக்கம்பெனியில் சேரப்போறேன்..பழைய கம்பெனியில் சம்பளம் 3500’. அதைக் கேட்டதும் பாலா மண்டையில் பல்பு எரிந்தது.

அன்று இரவே எனக்கு ஃபோன் செய்து ‘நீ திங்கட்கிழமை காலையிலே நேரா அந்தக் கம்பெனிக்குப் போ. உன் ரெசியூமைக் கொடு. எப்படியும் அவங்களுக்கு ஆள் தேவை. உன்னை எடுத்துப்பாங்க’ என்று சொன்னார். ’அந்த கம்பெனி வேலைக்கு ஆள் தேவைன்னு விளம்பரம் ஏதும் கொடுக்கலியே..நானா எப்படிப் போறது’ன்னு யோசிச்சப்போ, பாலா ரொம்ப வற்புறுத்தி என்னை அங்கே அனுப்பி வைத்தார்.

நான் போய் ரெசியூம் கொடுக்கவும், உடனே செலக்ட் ஆனேன். பாலாவுக்கும் அதன்பிறகே நிம்மதி. அதன்பின் நான் ஒரு டிசைன் எஞ்சினியராக ஆக, அங்கேயே எனக்கு அடித்தளம் அமைந்தது.(மெக்கானிக்கலில் பொதுவாக டிசைனில் தான் காசு!) இன்றைக்கு நான் இந்த நிலைமையில் இருக்கவும் அதுவே காரணம். அன்று மட்டும் பாலா வற்புறுத்தி அனுப்பியிருக்காவிட்டால், ஏதேனும் மெசின் ஷாப்பிலேயே என் காலம் முடிந்திருக்கலாம்.

ஆனால் பாலாவுக்காக என் வேலையை விட்டுக்கொடுத்த, அந்த ஒரு வாரத்தில் நான் மிகவும் மனவேதனை அடைந்தேன்.  ’அந்த மெசின் ஷாப் வேலையை விட்டுக்கொடுத்திருக்கக்கூடாதோ’ என்று பலவாறு நெகடிவ்வாக யோசித்தபடியே திரிந்தேன். ஆனால் அந்த வாய்ப்பு பறிபோனதே, எனக்கு இப்படி ஒரு நல்ல வாழ்க்கையைத் தரத்தான் என்று பிறகு தான் புரிந்தது.
என் மகனுடன்...

அதன்பின் சிக்கலான நேரங்களில், ஏதேனும் வருத்தமான விஷயங்கள் நடக்கும் நேரங்களில் நான் என்னைக் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான் : ’தம்பி, உனக்கு எது நல்லதுன்னு உனக்குத் தெரியுமா? அது அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். முயற்சி செஞ்சும் கைகூடலேன்னா, என்னப்பன் முருகன் வேறு ஏதோ உனக்காக வைச்சிருக்கான்னு அர்த்தம். அதனால புலம்பாதே!’

இன்னைக்கு வரைக்கும் அது சரியாவே இருக்கு. பொறுப்பை அவன்கிட்ட விட்டுட்டா, நிம்மதியாவும் இருக்கு..கடமையைச் செய்றது மட்டும் தானே நம்ம கடமை. பலன் கொடுப்பது அவன் கடமை இல்லியா?
மேலும் வாசிக்க... "தம்பி, உனக்கு எது நல்லதுன்னு தெரியுமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

29 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, October 5, 2012

முருக வேட்டை _ முடிவுரை

எனது பல பதிவுகள், சிறுகதை அல்லது நாவலுக்கான கருவினைக் கொண்டவையே. அவற்றில் ஒன்று தான் எனது முதல் பதிவான ‘உலகக் கடவுள் முருகன்’. அதை கதையாக மாற்றி, சுவாரஸ்யமாகச் சொல்வது எப்படி? என்று நான் கடந்த ஒரு வருடமாகவே யோசித்துக்கொண்டிருந்தேன்.

எனது நண்பர் ஒருவர் கருப்பசாமியை குலதெய்வமாக வழிபடும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பமே வம்சவம்சமாக சாமியாடுவது வழக்கம். கருப்பசாமியின் வீச்சரிவாளை தனியாக வீட்டில் வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள். (அந்த வீடு, படைவீடு என்று அழைக்கப்படுகிறது.) கருப்பசாமி ’கேட்கும்போது’ மட்டுமே கோவில் திருவிழா நடத்தப்படும். அப்போது மட்டுமே அந்த வீச்சரிவாள் வெளியே வரும்.

முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றில் இருந்து தங்க வேல் ஒன்று பலவருடங்களுக்கு முன் காணாமல் போனதாக ஒரு செய்தி உண்டு. அது உண்மையா, பொய்யா என்பதை முருகனே அறிவான். அது பொதுக்கோவிலாக இல்லாமல் நண்பரின் கருப்பசாமி கோவில் போன்று சில குடும்பங்களின் சொத்தாக இருந்திருந்தால், தங்கவேலாக இல்லாமல் வீச்சரிவாளாக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற சிந்தித்தபோது, ஒரு அருமையான பழி வாங்கும் கதைக்கான தளம் கிடைத்தது.

எனது முதல்பதிவை மையக்கருவாக எடுத்துக்கொண்டு, தங்கவேல் - வீச்சரிவாள் மேட்டரை மிக்ஸ் பண்ணியபோது, கிடைத்ததே இந்த முருக வேட்டை.

பதிவுலகில் எனது முந்தைய தொடரான மன்மதன் லீலைகளுக்குக் கிடைத்த வரவேற்பு மிகமிக அதிகம். இப்போதும் அந்தத் தொடரை புதிதாகப் படிக்கும் நண்பர்களிடம் இருந்து மெயில்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் லீலைக்கு வந்த கூட்டத்தில் பாதிகூட இந்தத் தொடருக்கு வரவில்லை என்பதே உண்மை. இது எல்லாரும் விரும்பிப் படிக்கும் டாபிக் அல்ல என்று தெரிந்தே ஆரம்பித்ததால், தொடர்ந்து உற்சாகமாக எழுத முடிந்தது.

பொழுதுபோக்கு-கிளுகிளுப்பு என்பதையும் தாண்டி, என் எழுத்து பயணிக்க வேண்டும் என்ற என் ஆசையின் வெளிப்பாடு தான் இந்தத் தொடர். நினைத்தபடியே காப்ரமைஸ் செய்துகொள்ளாமல், முருகன் அருளால் எழுதி முடித்த திருப்தி, அதிக சந்தோசத்தைத் தருகிறது.

இந்தத் தொடருக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு, உற்சாகப்படுத்திய யோகா ஐயா, பன்னிக்குட்டியார், தனிமரம் நேசன், தம்பி ஜீ, மொக்கைராசா, கங்காராம், தளிர் சுரேஷ், சே.குமார் மற்றும் பிற நண்பருக்கும், பொதுவில் பின்னூட்டமிட விரும்பாமல் தனிப்பட்ட மின்னஞ்சலில் தொடரின் குறை-நிறைகளைப் பகிர்ந்து கொண்ட நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

லீலைகள் தொடர் உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டது என்பதால், அதிகமாக கஷ்டப்படாமல் எழுத முடிந்தது. ஆனால் இது முழுக்க கற்பனை என்பதால், அதிகம் படிக்க வேண்டியிருந்தது. தெரிந்த பல விஷயங்களையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. அதற்கு உதவிய கீழ்க்கண்டவற்றிற்கும், அதன் உரிமையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் :

1. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் (நூல்) - ஜெயமோகன்
2. புரட்டு! இமாலயப் புரட்டு (நூல்) - தந்தை பெரியார்
3. தங்கவேல் திருட்டும், கலைஞரும்..
4. கென்யா பற்றிய அமல்ராஜின் பதிவு
5. கென்யா பற்றிய பரணியின் பதிவு
6. கென்யா பற்றிய சுந்தர ராமனின் பதிவு
7. கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோவின் பேட்டி
8. கலையரசனின் தொடர் : நாம் கறுப்பர், நமது மொழி தமிழ், நம் தாயகம் ஆப்பிரிக்கா
9. ஆப்பிரிக்காவில் சாதிமுறை - ப்ரவாஹனின் காலச்சுவடு கட்டுரை
10. How did a Vel worship evolve into an anthropomorphic worship? (Langanewspaper Article)
11. Skanda - The Alexandar Romance in India : By N.Gopala Pillai
12. கௌமாரம் - இணைய தளம்
13. The constant Gardener - Movie
14. கென்யா - விக்கிபீடியா


அன்புடன்
செங்கோவி

மேலும் வாசிக்க... "முருக வேட்டை _ முடிவுரை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, October 4, 2012

அடிப்படைக் குழாயியல்(Basics of Piping)_1

குழாயியல்

வரையறை :

ஒரு திரவ அல்லது வாயுப் பொருளை ஓரிடத்தில் இருந்து, மற்றோர் இடத்திற்கு இடமாற்றம் செய்ய உதவும் துறை அல்லது அமைப்பே குழாயியல் ஆகும்.

குழாயியல் தொழிற்துறையில் முக்கியப் பங்காற்றுகின்றது. உதாரணமாக கீழ்க்கண்ட தொழிற்சாலைகளைச் சொல்லலாம்:

1. மின் நிலையங்கள்
2. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள்
3. காகிதத் தொழிற்சாலைகள்
4. கட்டிடஙகள்
5. கப்பல்கள்

ஒரு தொழிற்சாலைக்குள் சென்று பார்த்தோமென்றால், குறுக்கும் நெடுக்குமாக பல குழாய்கள் சென்று கொண்டிருக்கும். கீழே உள்ள படத்தினைப் பாருங்கள்.


ஒவ்வொரு குழாயும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே செல்கின்றன. ஒரு கப்பலை/தொழிற்சாலையை வடிவமைக்கும்போதே, என்னென்ன தேவைக்கு குழாய்கள் தேவைப்படும் என்று முடிவு செய்துவிடுவார்கள். உதாரணமாக ஒரு கப்பலை எடுத்துக்கொண்டால், அடிப்படைத் தேவையாக இருப்பது கப்பலின் எஞ்சினை இயக்கத் தேவைப்படும் எரிபொருளான டீசல் தான். தேவையான அளவிற்கு எரிபொருள் இருந்தால்தான், மாதக்கணக்கில் கப்பல் பயணம் செய்ய முடியும். நடுக்கடலில் எரிபொருள் தீர்ந்துபோனால், எங்கு போய் டீசல் நிரப்புபது? எனவே முதலிலேயே டேங்க்கில் டீசலை நிரப்பிக் கொள்வார்கள். அந்த டேங்கில் இருந்து எஞ்சினிக்கு டீசலை எடுத்துச் செல்ல குழாய்கள் உதவும். அந்த அமைப்பு எரிபொருள் அமைப்பு (Fuel Oil System) என்று அழைக்கப்படும்.

இதே போன்றே அடுத்த முக்கியத் தேவையாக குடிநீர் வரும். குடிநீரும் தேவையான அளவு குடிநீர் டேங்கில் சேமித்து வைக்கப்படும். அங்கிருந்து குடிநீர் டேப் உள்ள இடங்களுக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படும்.(நம் வீடுகளில் உள்ளது போன்றே!). இதனை Fresh Water System அல்லது Potable Water System என்பர்.

இதுபோல் பல்வேறு அமைப்புகள் ஒரு கப்பல்/தொழிற்சாலைக்கு தேவைப்படும். அவற்றில் சில கீழே கொடுக்கப்படுகின்றன :

1. Fuel Oil System
2. Lube Oil System
3. Compressed Air System
4. Fresh Water System
5. Fresh Water Cooling System
6. Sea Water Cooling System
7. Gravity Drain System
8. Flare System
9. Effluent Water System
10. Dry and Wet Crude Storage System............etc.


இனி, ஒரு குறிப்பிட்ட குழாயியல் அமைப்பினை ஆராய்வோம். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தினைப் பாருங்கள்:
இது ஒரு Process Flow Drawing. (இதைப் பற்றி பின்னால் விரிவாகப் பார்ப்போம்). கப்பலின் எஞ்சினை குளிர்விக்க, Fresh Water System  இருக்கும். அந்த Fresh Water-ஐ குளிர்விக்கவும் ஒரு அமைப்பு வேண்டுமல்லவா? அதுவே Sea Water System ஆகும். மேலே உள்ள படத்தில் இருந்து நாம் கீழ்க்கண்ட விஷயங்களைப் புரிந்து கொள்ளலாம்:

1. கப்பலின் கீழே உள்ள Sea Chest-ல் இருந்து தண்ணீர் பம்ப்புக்கு வருகின்றது.
2. இரண்டு பம்புகள் அந்த சிஸ்டத்தில் உள்ளன. ஒன்று எப்போதும் உபயோகத்தில் இருக்கும். மற்றது முந்தைய பம்ப் வேலை செய்யாத சமயத்தில் ஓட்டப்படும்.
3. பம்ப்பானது கடல் நீரை ஒரு Heat Exchanger-க்கு அனுப்பி வைக்கின்றது.
4. Heat Exchanger-ல் கடல் நீர், எஞ்சினில் இருந்து வரும் Fresh Water-ஐ குளிர்விக்கின்றது.
5. இப்போது Heat Exchanger-லிருந்து வெளிவரும் கடல் நீர், சூடாக ஆகியிருக்கும். எனவே அது Free Board line வழியாக மீண்டும் கடலிலேயே கொட்டப்படுகிறது.
6. குளிர்விக்கப்பட்ட கடல் நீரானது, மீண்டும் எஞ்சினை குளிர்விக்க அனுப்பப்படுகிறது.

இதுவே Sea Water System செயல்படும் முறையாகும். இவ்வாறு ஒவ்வொரு அமைப்பிற்கும் Process Flow Drawing இருக்கும். அதன் மூலம் ஒட்டுமொத்தமாக அங்கே என்ன நடக்கின்றது என்று நாம் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு ஒரு கப்பல்/தொழிற்சாலை என்பது பல்வேறு அமைப்புகளின் இயக்கங்கள் மூலம் செயல்படுகிறது.

பல்வேறு தொழிற்சாலைகளில் குழாயியல் பயன்படுவதைப் பார்த்தோம். மேலும் தொழிற்சாலையினுள் எங்கெல்லாம் குழாயியல் தேவைப்படுகிறது என்றும் பார்த்தோம். 

இனி ஒரு குழாயியல் அமைப்பில் உள்ள முக்கிய உறுப்புகள் என்னென்ன என அடுத்த பகுதியில் பார்ப்போம்.
மேலும் வாசிக்க... "அடிப்படைக் குழாயியல்(Basics of Piping)_1"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, October 3, 2012

முருக வேட்டை_43



பெட்டியின் உள்ளே குழந்தையைப் போல் படுத்திருந்த, தங்கத்தால் ஆன வேலைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள் கவிதா.

பாண்டியன் தொடர்ந்து பேசினான். “இந்த உலகத்துல உங்களைத் தவிர வேறு யாரையும் நான் நம்ப முடியாது சிஸ்டர். எங்கெல்லாமோ சிதறிக்கிடக்கிற என் சமூகத்தை ஒன்னாக்கி, இந்த வேலை அவங்ககிட்ட ஒப்படைக்க வேண்டியது உங்க பொறுப்பு. நீங்க என்னை சொந்த அண்ணனாவே ட்ரீட் பண்ணியிருக்கிறீங்க. அதனால, எனக்கு இருக்கிற அதே பொறுப்பு, என் தங்கையா உங்களுக்கும் இருக்கு. இன்னிக்கு மருதமலைல பார்த்த அந்த பெரியவரைப் போய்ப் பாருங்க. உங்களுக்கு அவர் உதவி செய்வார். நாங்க சேர்ந்து வாழ, இன்னொரு இடம் செலக்ட் பண்ணியிருக்கிறோம். அங்கே ஒரு இந்த வேலுக்கு ஒரு கோவில் கட்டி, அவங்க வாழ உதவி செய்யுங்க.”

எவ்வளவு பெரிய பொறுப்பு...நம்மேல் எவ்வளவு நம்பிக்கை.’ என்று நினைக்கும்போதே,கவிதாவிற்கு தொண்டையை அடைத்தது. “பத்திரமாக என்னை மலையில் கொண்டு போய் விட்டு வருவாயா?”என்று கனவில் முருகர் கேட்டது ஞாபகம் வந்தது. கண்ணில் நீர் வழிய, சரி என்பது போல் பாண்டியனைப் பார்த்து தலையாட்டினாள்.

கவிதா, ஹோட்டல் காரை வரச்சொல்றேன். நீ இந்தப் பெட்டியோட ஹோட்டலுக்குக் கிளம்பு. அகிலா மேம்கிட்ட பேசிட்டு, பாண்டியனை லோக்கல் போலீஸ்கிட்ட ஒப்படைச்சுட்டு நான் வந்திடறேன். எப்படியும் இந்த கேஸை இதுக்கு மேல நான் டீல் பண்ண முடியாது, டூட்டில ஜாயின் பண்ணவும் 10 நாள் இருக்கு. மறுபடியும் நாளைக்கு நாம மருதமலை போவோம். நாம சேர்ந்தே, இந்த நல்ல காரியத்தைச் செய்வோம். கவலைப்படாதே, முருகனருள் முன்னிற்கும்என்றான் சரவணன்.

கவிதா ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். அதைக் கவனிக்காது பாண்டியனிடம் திரும்பிய சரவணன், “நாங்க மருதமலை போறோம். அவங்க எங்களை நம்புவாங்களா?” என்றான்.

அவங்களுக்கு உங்களைத் தெரியும். நான் உங்களை ஏற்கனவே மருதமலைகூட்டி வந்ததே, அவங்களுக்குக் காட்டத்தானே? நீங்க எப்போ எங்க சாமியோட வருவீங்கன்னு தான் அந்தக் குடும்பம் அங்க காத்திருக்குது. அதனால ஒன்னும் பிரச்சினை இருக்காது.” என்றான் பாண்டியன்.

எல்லாமே கரெக்டா ப்ளான் பண்ணிப் பண்ணியிருக்கிறே, போல?” என்று கேட்டுவிட்டுச் சிரித்த சரவணன் அகிலாவிற்கு ஃபோன் செய்தான்.

மேம், நாந்தான் சரவணன் பேசுறேன்

சொல்லுங்க..மருதமலை போயாச்சா?”

போய்ட்டு வந்திட்டோம் மேம்..முத்துராமன் சாரைக் கொன்னது யாருன்னு கண்டுபிடிச்சுட்டோம்என்றான்.

யாரு? செந்தில் பாண்டியன் தானே?”

சரவணன் அதிர்ந்து போய்ஆமாம் மேம்என்றான்.

நானும் கண்டுபிடிச்சுட்டேன். ஆளு இப்போ மிஸ்ஸிங்என்றாள் அகிலா.

இல்லை மேம்..இங்க தான் இருக்கான்..நான் பிடிச்சுட்டேன்.”

அப்படியா? வெரிகுட்.வெரிகுட்

நகைக்காகத் தான் கொன்னிருக்கான் மேம்

..அப்படியா?”என்றாள் அகிலா கிண்டலாக!

அதைக் கவனிக்காமல் சரவணன் பேசிக்கொண்டே போனான். “ஆமாம் மேம்..அவன் வீட்டுக்கு திடீர்னு போய், சர்ச் பண்ணேன்ன். அவரைக் கொன்ன கத்தி, கயிறு எல்லாமே இங்க தான் இருக்கு. அவனையும் பிடிச்சுட்டேன் மேம்.”

ஓகே..இப்போ என்ன செய்யப்போறீங்க?”

நான் இப்போ ஒன்னும் செய்ய முடியாதே மேம்..அதனால லோக்கல் சிபிசிஐடி போலீஸ்கிட்ட ஒப்படைச்சிடறேன். அப்புறம் நீங்க பார்த்துக்கோங்க.”

ஓகே..நீங்க இருக்கிற இடத்தைச் சொல்லுங்க. அவங்களை நான் அனுப்பி வைக்கிறேன்.” என்றாள் அகிலா.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இரண்டு வருடங்களுக்குப் பிறகு.....

ங்க, இவனைப் பிடிங்க..எவ்ளோ நேரமா டயஃபர் மாட்ட போராடிக்கிட்டு இருக்கேன்..ஒரு இடத்துல நிக்கிறானா?..ட்ரெயினுக்கு வேற டயம் ஆச்சுஎன்று மகனைப் பற்றி சரவணனிடம் கம்ப்ளைண்ட் செய்தாள் கவிதா.

சரவணன் தன் மகன் பாலமுருகனைப் பிடித்தான். “முருகரே, இப்படி ஓடலாமா? கோவனாண்டி டயஃபர் மாட்டறதுக்குப் பயப்படலாமா? இதுவும் கோவணம் தாம்யா..நவீன கோவணம்என்றான் சரவணன்.

புரிந்தும் புரியாமலும் பாலமுருகன் சிரித்தபடி நின்றான்.

அப்போது கவிதாவின் ஃபோன் ஒலித்தது.

முருகன் என்றால் அழகன் என்று...”

கவிதா ஃபோனை எடுத்துஹலோஎன்றாள்.

என்ன கவிதா..கிளம்பியாச்சா?” என்றது அகிலாவின் குரல்.

நாங்க கிளம்பிட்டோம்..பையன் தான் அநியாயம் பண்றான்.”

ஹா..ஹா..ஊருக்குப் போறதுன்னாலே குஷி தான் இல்லியா?”

ஆமாக்கா..சொந்த ஊருன்னாலே தனி குஷி தானே?”

ம்..உங்க ஊரு திருநெல்வேலி பக்கம் தானே?”

ஆமாக்கா...அதில் என்ன சந்தேகம்?”

சந்தேகம் எல்லாம் ஒன்னுமில்லை. திருநெல்வேலி போறதுக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ்ல டிக்கெட் போட்டிருக்கீங்களே, அதான் கேட்டேன்

அக்கா..”என்று அதிர்ச்சியில் இழுத்தாள் கவிதா.

கந்த சஷ்டிக் கவசம் அரங்கேறின இடம் எது தெரியுமா கவி?

“செ...சென்னிமலைக்கா

அந்த மலையும் மலையடிவாரமும் ரொம்ப ரம்மியமா இருக்கும் இல்லே? அந்த மலையடிவார மக்கள்கூட ரொம்ப நல்லவங்க, இல்லியா?

அக்கா..அதுவந்து..”

கவிதா..அறியாமையே எல்லாத் துன்பத்துக்கும் காரணம்னு பெரியவங்க சொல்றாங்க இல்லியா? அறிதலே சந்தோசம், பயம், கோபம், சந்தேகம் எல்லாத்தில இருந்தும் விடுதலை பண்ணும், இல்லியா?”

“……….....”

இரண்டு வருசத்துக்கு அப்புறம் இன்னிக்குத் தான் நான் விடுதலை ஆகியிருக்கேன்..ஹேப்பி ஜர்னி கவிதா..போய் நல்லபடியா சாமி கும்பிட்டு வாங்க..பார்ப்போம்


(முற்றும்)
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_43"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.