“அன்னிக்கு நைட் என்ன ஆச்சு?” என்று கேட்டான் சரவணன்.
"முத்துராமன் சார் வீட்டுக்குத் திடீர்னு போய் நின்னேன். அவர் ஷாக்காகி என்னன்னு கேட்டார். ’நான் ஒரு சிக்கல்ல மாட்டியிருக்கிறதாவும், அவரோட ஹெல்ப் தேவைப்படுது’ன்னும் சொன்னேன். உள்ளே என்னைக் கூட்டிட்டுப் போய், என்ன விஷயம்னு கேட்டார். ‘எங்க சாமியைக் காணோம், நீங்க தான் கண்டுபிடிச்சுக்கொடுக்கணும்’னு சொன்னேன். அவர் முகம் வெளிறிப்போயிடுச்சு.’ நீயா அது?’ன்னு கேட்டார். ஆமான்னு சொல்லிட்டு ‘அந்த தங்க வேல் எங்கே’ இருக்குன்னு கேட்டேன். அவர் முதல்ல சொல்ல மாட்டேன்னு மறுத்தார். அடிச்சு, சித்ரவதை பண்ணப்பவும் பதில் சொல்லலை. அப்புறம், குடும்பத்துல ஒருத்தர்விடாம, எல்லாரையும் கொன்னுடுவேன்னு மிரட்டவும், அது எங்கே இருக்குன்னு சொன்னார். அதைக் கேட்டு, நானே அதிர்ச்சியாகிட்டேன். நான் எதிர்பாராத விஷயம் அது”
“ஏன்..அது எங்கே இருந்துச்சு?”
“அவர் வீட்டு பூஜை ரூம்ல தான் அந்த தங்க வேல் சிலை இருந்துச்சு. என்னைக் கூட்டிட்டுப் போய்க் காட்டினார். அவரும் எங்களை மாதிரியே ஒரு முருக பக்தர். அந்த கேஸை அவர் சின்சியரா டீல் பண்ணதாவும், அதனால பல மிரட்டல்கள் அவருக்கும், அவரோட ஃபேமிலிக்கும் வந்ததாவும் சொன்னார். அதனால அவர் அவங்ககிட்ட ஒரே ஒரு வேண்டுகோள் வச்சார். ’அங்கே கிடைச்ச பணம், நகை எல்லாத்தையும் வச்சிக்கோங்க. அந்த வேல் சிலையை மட்டும் கொடுத்திருங்க. அதை யார்கிட்டயும் வித்திடாதீங்க’-ன்னு கேட்டார். அப்போ அரசியல்ரீதியா இந்தக் கேஸ் ஏகப்பட்ட பிரச்சினையை உண்டாக்கியிருந்துச்சு. அப்போ இருந்த சி.எம்.மும் சீக்கிரம் இந்தக் கேஸை முடிச்சுக்க நினைச்சார். முத்துராமன் இந்தக் கேஸை க்ளோஸ் பண்ணவும், அவர் வாயை அடைக்கவும் ஒரே வழி அந்த தங்கவேலை அவர்கிட்ட ஒப்படைக்கிறது தான்னு முடிவு பண்ணி, அவர்கிட்டக் கொடுத்திட்டாங்க. இது அந்த சி.எம்ம்முக்கும் மந்திரிக்கும் மட்டும் தான் தெரியும்.”
“ஓ..அதனால தான் வீட்டுலேயே கோவில் மாதிரி பெரிய பூஜை ரூம் கட்டி, ஃபேமிலில எல்லாருமாச் சேர்ந்து கும்பிட்டுக்கிட்டிருந்தாங்களா?”
“ஆமா..அது தான் நான் எதிர்பாராத விஷயம். இந்தச் சிலையை வச்சிருக்கிறவங்க, அதோட அருமை தெரிஞ்சவங்கன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். ’தனக்கே இவ்ளோ பிரஷர்னா, படிக்காத ஜனங்க எப்படி சமாளிப்பாங்க? அதனால இந்த சிலை தன்கிட்டயே இருக்கட்டும்னு வச்சிக்கிட்டதா, அவர் சொன்னார்.”
“நியாயம் தானே?”
“ஆமா..அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயம். எனக்கு எங்களோட சாமியை திரும்ப எங்க மக்கள்கிட்ட, ஒப்படைக்கணும். அது தான் நான் என் அப்பாவிற்கு, சிதறிக்க்கிடக்கிற எங்க மக்களுக்கு நான் கொடுத்த வாக்கு. அந்த வாக்கை நான் காப்பாத்தியே ஆகணும். அதனால அந்த சிலையை நான் எடுத்திக்கிட்டேன். அதை எடுத்துக்கிட்டுப் போனால், எங்களால அதைக் காப்பாத்த முடியாதுன்னு முத்துராமன் என்கிட்டச் சொன்னார். அதுமட்டுமில்லை, அவரை உயிரோட விட்டா, அவருக்கு இருக்கிற இன்ஃப்ளூயன்ஸை வச்சு, அவர் ஏதாவது பிராப்ளம் பண்ணலாம். சோ, அவரைக் கொல்றதைத் தவிர எனக்கு வேற வழியில்லை.”
“ஆனாலும் நீங்க அவரைக் கொன்னிருக்க வேண்டாம்.” என்றாள் கவிதா.
“இந்த அதிகார வர்க்கத்தால நாங்க நிறைய கஷ்டப்பட்டுட்டோம். அதனால எங்களால யாரையும் நம்ப முடியலை. ஆனால் இப்படிச் செய்யும்படி ஆகிருச்சேன்னு நான் அப்புறம் ரொம்ப வேதனைப்பட்டேன். அதனால, நானே சரண்டர் ஆகணும்னு முடிவு பண்ணேன். அதுக்கு முன்னே, எங்க குலசாமியை எங்க மக்கள்கிட்ட பத்திரமாச் சேர்க்கணும். நான் உள்ளே போயிட்டாலும், அவங்களுக்கு மாரல் சப்போர்ட்டா யாராவது இருக்கணும். அதுக்காகத் தான் சிஸ்டரையும் இதுல இழுத்துவிட்டேன்.நீங்க ரெண்டு பேரும் ரெண்டு உதவி பண்ணனும்”
“என்ன செய்யணும்?” என்று தயங்கியபடியே கேட்டாள் கவிதா.
“செஞ்ச தப்புக்கு நான் இப்போ சரண்டர் ஆகிறேன். முத்துராமன் குடும்பம் இப்போவரைக்கும் அந்த தங்க வேல் பத்தி, வாய் திறக்கலை. இனியும் திறக்க மாட்டாங்க. அதனால, அங்கே இருந்து எடுத்துட்டு வந்த பூர்வீக நகைகள் என் பெட்ரூம்ல இருக்கு. நகைக்காக கொலைன்னு சொல்லி, என்னை அரெஸ்ட் பண்ணி கேஸை முடிச்சுடு சரவணா!. ஒரு போலீஸ்காரனா குற்றவாளி தண்டிக்கப்படணும்னு தான் நீ நினைப்பே, இல்லியா? அதை நானும் ஒத்துக்கறேன். என்னை அரெஸ்ட் பண்ணிக்கோ.”
“சரி..கவிதா என்ன செய்யணும்?”
சரவணன் கேள்விக்குப் பதில் சொல்லாமல், பாண்டியன் அந்த மொட்டைமாடியின் மூலையைத் திரும்பிப் பார்த்தான். அங்கே கொஞ்சம் செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன் மேல் நீளவாக்கில் ஒரு மெல்லிய தடிமன் இல்லாத பெட்டி படுக்க வைக்கப்பட்டிருந்தது.
“சிஸ்டர், அதைக் கொஞ்சம் திறக்கிறீங்களா?” என்றான் பாண்டியன்.
கவிதா அங்கே போய், அந்தப் பெட்டியைத் திறந்தாள்.
பளீரென ஒரு வெளிச்சம் உள்ளேயிருந்து கிளம்பியது. ஏதோவொரு சக்தி மேலெழுந்து போவது போல் கவிதாவிற்குத் தெரிந்தது. உடல் சிலிர்த்தது.
பெட்டியின் உள்ளே குழந்தையைப் போல் படுத்திருந்த, தங்கத்தால் ஆன வேலைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள் கவிதா.
(நிறைவுப்பகுதி..நாளை!)
அருமை செங்கோவி!இதை விட வேறு வார்த்தை வரவில்லை,எனக்கு!
ReplyDeleteஆஹா முடிவு நெருங்கி வேல் பாண்டியனிடம் !ம்ம் முடிவை நாளை எதிர் நோக்கிய வண்ணம்!
ReplyDeleteஅருமையான தொடர்
ReplyDeleteரொம்ப நல்லா வந்திருக்கு.....!
ReplyDelete