Monday, August 31, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 54


இதுவரை த்ரில்லர் வகை ஜெனர்கள் பற்றிப் பார்த்தோம். இப்போது மெலோடிராமா வகையில் வரும் ஜெனர்கள் பற்றிப் பார்ப்போம்.

மெலோடிராமா என்றால் என்ன?

மெலோடிராமா எனும் சொல் கிரேக்கத்திலிருந்து ஆங்கிலத்திற்கு வந்தது. அதன் பொருள் டிராமாவும் இசையும்(melos) கலந்த வகை எனலாம். இங்கே டிராமா என்பது performance (செயல்பாடு) எனும் பொருள் படும். மொத்தத்தில் நடிகர்களின் பெர்ஃபார்மன்சையும், இசையையும் சார்ந்து வரும் திரைப்படங்களை மெலோ டிராமா எனலாம்.

'ஆடியன்ஸ் எதற்காக படம் பார்க்க வருகிறார்கள்?' என்ற கேள்வியை எழுப்பினால், உடனே கிடைக்கும் பதில் 'பொழுதுபோக்கிற்கு..!". ஆம், வாழ்க்கையின் அழுத்தத்தில் இருந்து தப்பிக்கவும், கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்கவுமே பெரும்பாலான ஆடியன்ஸ் சினிமாவிற்கு வருகிறார்கள். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஆற்றல், த்ரில்லரை விட மெலோடிராம்விற்கே அதிகம் உண்டு. 'போனோமா..நல்லா எஞ்சாய் பண்ணிப் படம் பார்த்தோமான்னு இருக்கணும் மச்சி' என்பது தான் சினிமா மீதான பொதுவான எதிர்பார்ப்பு.

அதனால் தான் தமிழ் சினிமாவில் காதல், காமெடி என மெலோடிராமாக்கள் நிரம்பி வழிகின்றன. த்ரில்லரை விட மெலோடிராமாக்களே சராசரி வாழ்க்கையை அதிகம் பிரதிபலிக்கின்றன. சராசரி ஆடியன்ஸுக்கு ஆக்சன் படங்கள் எல்லாம் கனவு போன்றவை. ஆனால் மெலோடிராமாக்கள் கண்ணாடி போன்றவை. எளிதில் ஆடியன்ஸை திருப்திப்படுத்தக்கூடியவை. ஏ. பி. சி என்று இல்லாமல், எல்லா சென்டர் ஆடியன்ஸுக்கும் பிடித்தமான சப்ஜெக்ட்கள் இந்த மெலோடிராமாக்கள். எனவே தான் காதல் போன்ற மெலோடிராமாக்கள் சினிமாவில் வற்றாத ஜீவநதியாக இருக்கின்றன.

பெரும்பாலான த்ரில்லர் வகைகளை பெரிய ஸ்டார் நடிகர் இல்லாமல் எடுக்க முடியாது. ஆனால் மெலோடிராமாக்களை சின்ன ஸ்டார்கள் அல்லது புதுமுகங்கள் கொண்டே எடுத்து, ஹிட் ஆக்க முடியும். 'அலைகள் ஓய்வதில்லை' முதல் 'யாமிருக்க பயமே' வரை பல உதாரணங்களை நாம் அறிவோம்.

த்ரில்லர் படங்கள் குறிப்பிட்ட குறிக்கோளை நோக்கி, ஆக்சனின் வழியாக நகர்பவை. ஆனால் மெலோடிராமாக்கள் உறவுகளை(தொடர்பு கொள்வதை)ப் பற்றிப் பேசுபவை. சிதைந்த உறவுகள் ஒன்று சேர்வது தான் பெரும்பாலான மெலோடிராமாக்களின் முடிவு. இது ஆடியன்ஸுக்கு திருப்தியைக் கொடுக்கும் ஆற்றல் கொண்டவை.

உட்கார்ந்து பேசினால், தீர்க்க முடியாத விஷயம் என்று ஏதுமில்லை. ஆனால் அதைச் செய்யாததால் விளையும் விளைவுகளே, மெலோடிராமாக்களுக்கு ஆதாரம். மெலோடிராமாக்களின் முரண்பாடு என்பது ஏதோ பிரச்சினையைப் பற்றி வெளிப்படையாகப் பேசாததாலோ அல்லது தயக்கத்தின் காரணமாக அதைத் தீர்க்காமல் விடுவதாலோ வருவது தான். உதாரணம், 'இதயம்' முரளி. சமூக ஏற்றத்தாழ்வுகள் அல்லது பண்பாட்டு மாற்றம் தான் இத்தகைய முரண்பாடுகளுக்கு காரணமாக இருக்கும். கொடூர வில்லன் இல்லாமலேயே இங்கே விறுவிறுப்பாக கதை சொல்லிவிட முடியும். உணர்ச்சிகளின் போராட்டத்தை உணர்வுப் பூர்வமாகச் சொல்வதன்மூலம் மெலோடிராமாவில் ஜெயிக்க முடியும்.

டிராஜடி ஜெனர் தவிர்த்து, மெலோடிராமாக்களில் வரும் கேரக்டர்கள் படத்தின் முடிவில் மேம்பட்ட வாழ்க்கையையே அடைவார்கள். ஆடியன்ஸ் எல்லோரின் வாழ்க்கைக்கனவு அது என்பதால், பாசிடிவ் எண்ணத்தைக் கொடுக்கும் இத்தகைய படங்களுக்கு மவுசு குறைவதேயில்லை.

மெலோடிராமாவில் ஹிரோவைவிட சூழ்நிலை வலுவானதாக இருக்கும். ஆண்கள் உலகத்தில் பெண்கள், அழகான ஆண்கள் மத்தியில் அழகற்ற ஆண் என ஏதோவொரு குறைபாடு அல்லது தேவையுடன் தான் ஹீரோ கதாபாத்திரம் இயல்பிலேயே இருக்கும்.

வெளிப்புற நடவடிக்கைகளைவிட, சைக்காலஜிக்கலாகவும் உணர்வுரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களே மெலோடிராமாவில் முக்கியம். நடக்கும் செயல்கள் எல்லாம் உணர்வுகளுடன் விளையாடுவதற்கே இருக்கும். குடும்பப் பிரச்சினைகள், சென்டிமென்ட்ஸ், காதல், தன் அடையாளத்தை மீட்டெடுத்தல் போன்றவையே மெலோடிராமாவின் பேசுபொருட்கள்.

மெலோடிராமாவில் மெயின் கேரக்டர்களுக்கு குணச்சித்திர வளைவு இருப்பது அவசியம். வசந்த மாளிகையானாலும் தேவர் மகன் ஆனாலும் இந்த கேரக்டர் ஆர்க் தான் ஆடியன்ஸை படத்துடன் ஒன்ற வைக்க உதவும் அம்சம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், நாம் இதுவரை த்ரில்லர் படங்களில் பி ஸ்டோரி என்று சொல்லிவந்த ‘கேரக்டர் சார்ந்த’ கதைகளே மெலோடிராமாக்கள் ஆகும்.


மெலோடிராமாக்களில் கதை என்பது மிகவும் சிம்பிளான விஷயமாகவே இருக்கும். 'மோதல்-காதல்-கல்யாணம்' என்பதே காதல் படங்களின் ஒருவரிக்கதை. இன்னும் நூறுவருடங்கள் ஆனாலும் இதே ஒன்லைனில் படம் எடுக்க முடியும். உரவில் எழும் சிக்கலாக எதை முன்வைக்கிறோம் என்பது மட்டுமே படத்திற்குப் படம் வேறுபடும். (சிலநேரங்களில் அதுகூட வேறுபடுவதில்லை!!)

இத்தகைய சிறப்பு பெற்ற(!) மெலோடிராமாவின் வகைகள்:

காதல்

காமெடி

குடும்பக்கதை

வாழ்க்கை வரலாறுகள்

டிராஜெடி (துன்பியல் கதைகள்)

இனி, ஒவ்வொரு மெலோடிராமா ஜெனர் வகை பற்றியும் விரிவாக அலசுவோம்.
 
(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.