Saturday, July 18, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 53

ஜெனர் - குற்றம் & மர்மம்

  ஒரு குற்றம் நடந்துவிடுகிறது. அதன்பின், குற்றவாளி பிடிபட்டானா இல்லையா என்று அலசும் கதைகள் இவை. அல்லது, ஒரு குற்றம் நடக்கப்போகிறது. அது தடுக்கப்பட்டதா, இல்லையா என்று சொல்பவை இவ்வகை ஜெனர் படங்கள். மொத்தத்தில்  ஒரு குற்றத்தை மையப்படுத்தி நகரும் கதைகளே, க்ரைம் /மிஸ்ட்ரி ஜெனர் ஆகும்.

கொலை, திருட்டு, கடத்தல் போன்ற சம்பவங்கள் தான் இவ்வகைக் கதைகளின் ஆரம்பப் புள்ளி. ஒரு குற்றம் நடக்கிறதென்றால், அங்கே மூன்று தரப்புகள் இருக்கும். ஒன்று, குற்றவாளி. இரண்டாவது, போலீஸ்/துப்பறிபவர். மூன்றாவது, குற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பொதுஜனம்.

 இப்போது க்ரைம் ஜெனரின் வகைகளைப் பார்ப்போம்:

1. டிடெக்டிவ் கதைகள்:
இங்கே ஹீரோ போலீஸாகவோ, சி.ஐ.டியாகவோ, துப்பறியும் நிபுணராகவோ வரலாம். ஆனாலும் இவை அட்வென்ச்சர் படங்கள் அல்ல. இந்த ஜெனர் படங்கள் ரியாலிட்டியோடு நகரும். ஜேம்ஸ்பான்ட் ஸ்டைல் சாக்சங்களை ஹீரோ செய்வதில்லை. உதாரணம், வேட்டையாடு விளையாடு.

வேட்டையாடு விளையாடு படத்தில் இளம்பெண்கள் கற்பழித்து, கொல்லப்படுகிறார்கள். அதை போலீஸ்காரரான கமல் துப்பறிகிறார். ஹீரோ வீரன் தான். ஆனால் படம் ஹீரோயிசத்தை தூக்கிப்பிடிப்பதில்லை, முழுக்க முழுக்க குற்றமும் குற்றவாளிகளின் நகர்வும் தான் படத்தின் முக்கியமான அம்சங்கள். ஹீரோயிசம் ஒரு அளவிற்குத்தான், அதற்கு மேல் போகும்போது ஹீரோவுக்கே அடிவிழும். ஏறக்குறைய, ஒரு உண்மையான போலீஸ்காரரின் வாழ்க்கையைச் சொல்வதாகவே ஹீரோ கேரக்டர் படைக்கப்பட்டிருக்கும்.

ஹீரோவுக்கு சொந்தப் பிரச்சினைகளும் இருக்கும். அஞ்சாதே நரேனுக்கு நட்பில் பிரச்சினை, வே.வி.கமலுக்கு மனைவியின் இழப்பும் ஜோதிகாவின் டைவர்ஸ் பிரச்சினையும்.

இந்த வகையில் வில்லனுக்கு தெளிவான பின்கதை இருக்க வேண்டியது அவசியம். பெரும்பாலும் சைக்கோ பிரச்சினைகள் வில்லனுக்கு இருக்கும். இதில் யுத்தம் செய் படமும் குறிப்பிடத்தகுந்த ஒன்று. 

 உண்மை என்று ஒரு மலையாள டப்பிங் படம் உண்டு. மம்முட்டி ஹீரோவாக நடித்திருந்தார். கதை, ராஜீவ் காந்தி கொலைச்சம்பவத்தை இன்ஸ்பிரேசனாக வைத்து எழுதியது போல் இருக்கும். மம்முட்டி அதைத் துப்பறிவார். நான் பார்த்த டிடெக்டிவ் படங்களில் பெஸ்ட் அது தான்.

2. கிரிமினல் கதைகள்:
இதில் ஹீரோ தான் குற்றவாளி. ஒரு குற்றத்தைச் செய்துவிடுவான் அல்லது செய்யத் திட்டமிடுவான். போலீஸிடம் சிக்காமல் தப்பினானா இல்லையா என்றே கதை நகரும். சமீபத்திய நல்ல உதாரணம், பாபநாசம் (த்ரிஷ்யம்).

இங்கே குற்றம் என்பது பழிவாங்கலாகவோ அல்லது தற்செயலானதாகவோ இருக்கும். விடியும் முன் படமும் இந்த வகையில் வந்த நல்ல (சுட்ட) படம்.
குற்றம் என்பது திருட்டாகவும் இருக்கலாம், மங்காத்தா மாதிரி. திருடா திருடா இன்னொரு உதாரணம். இந்தக் கதைகளின் முடிவு, பெரும்பாலும் பணம் யாருக்கும் இல்லாமல் வீணாகிவிட்டது என்றே வரும்!

ஹீரோவை ஒரு போலீஸ் கேரக்டர் துரத்திக்கொண்டு வரும். திருடன் – போலீஸ் கண்ணாமூச்சி ஆட்டம் தான் இங்கே கதைக்களம். இதை நன்றாக அமைப்பவர், ஷங்கர் தான். ஜெண்டில்மேன், இந்தியன், அந்நியன் போன்ற படங்களில் ஹீரோவை போலீஸ் நெருங்குவதை நன்றாக வடிவமைத்திருப்பார். இதே ஃபார்மேட்டில் வந்த ரமணாவில் யூகிசேது கேரக்டரை புதுமையாக வடிவமைத்திருந்தார்கள்.

ஹீரோ பிடிபட்டுவிடுவானோ எனும் பதைபதைப்பில் ஆடியன்ஸை வைக்க வேண்டியது தான் இவ்வகைக் கதைகளில் முக்கியம். அதற்கு ஹீரோவுடன் ஆடியன்ஸ் ஒன்றும்படி, முன்கதையை அமைத்திருக்க வேண்டும். செண்டிமெண்ட்டான காரணம் இருந்தால், உத்தமம்!

பாபநாசம், விடியும் முன் போன்ற படங்களில் தற்செயலாக நடந்த கொலையால் அப்பாவிகள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்று காட்டியிருப்பார்கள். அது ஆடியன்ஸை எளிதில் கதையுடன் ஒன்ற வைக்கும். (விடியும் முன் படத்தின் முன்கதை செண்டிமெண்ட்டலாக சுமார் தான். கொஞ்சம் நமக்குப் புதிய சூழல் அது!)

இதில் முக்கியமான விஷயம், ஹீரோவால் கொல்லப்படுபவர்கள் மிகவும் கெட்டவர்களாக இருக்க வேண்டும். ஆடியன்ஸ் ஒரு துளிகூட அவர்களை ரசிக்கக்கூடாது. இவரும் நல்லவர், ஹீரோவும் நல்லவர் என்று போனால் பெரும் சிக்கல் வரும். அதைத் தீர்க்க, திரைக்கதை உருவாக்கத்தில் பெரும் உழைப்பைக் கொட்ட வேண்டும், பொம்மலாட்டம் மாதிரி!

போலீஸ் மட்டுமல்லாது, வில்லன் குரூப்பும் ஹீரோவைத் துரத்துவதாக திரைக்கதையை அமைப்பது பரபரப்பைக் கூட்டும்.

3. பாதிக்கப்பட்டோர் கதைகள்:
இதில் ஹீரோ போலீஸோ, குற்றவாளியோ அல்ல. அந்த சம்பவத்தில் தற்செயலாக சிக்கிக்கொண்ட அப்பாவி. மௌனகுரு, கலைஞன், புரியாதபுதிர் போன்ற படங்கள் இந்த கேட்டகிரியில் வரும். ஹீரோ வில்லன் கும்பலால் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டவராகவும் இருக்கலாம்.
’ஒரு சாமானியன் மேல் விழும் பழி. அவனைத் துரத்தும் போலீஸ். பின்தொடரும் வில்லன்கள்’ என்பது ஹிட்ச்காக்கில் ஆக்சன் ஜெனர் கதை டெம்ப்ளேட் என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இதுவும் அந்த வகை தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட குற்றத்தை மட்டுமே மையமாகக் கொண்டு, ஹீரோயிசத்துக்குள் போகாமல் கதை சொல்வது தான் வித்தியாசம்.
ஒரு வில்லன் திட்டமிட்டு, ஹீரோவை துல்லியமாக சிக்க வைக்கும் கதைகளும் இதில் வரும். அதிகார வர்க்கம் எந்த அளவிற்கு சாமானியர்களை இரக்கமின்றி நடத்தும் என்பதையும் இவ்வகைக் கதைகளில் துல்லியமாகக் காட்ட முடியும்.


கதை சொல்லும் முறையைப் பொறுத்து, க்ரைம் ஜெனரை இரண்டாகப் பிரிக்கலாம். ஹிட்ச்காக் சொன்ன சஸ்பென்ஸ் மற்றும் சர்ப்ரைஸ் தான் அவை.

சஸ்பென்ஸ்:
குற்றம் செய்தது யார் என்று ஆடியன்ஸூக்குக் காட்டப்பட்டுவிடும். அதன்பின் அவர்கள் பிடிபடுகிறார்களா, இல்லையா எனும் தவிப்பில் ஆடியன்ஸை வைப்பது இவ்வகைக் கதைகள். குற்றம் நடந்த விதம், அதற்கான காரணம், தடயங்கள் எல்லாமே ஆடியன்ஸூக்குத் தெரியும். போலீஸ் ஒவ்வொன்றாக நெருங்கும்போது, சுவாரஸ்யம் கூடும். சஸ்பென்ஸ் உத்தியால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

சர்ப்ரைஸ்:
குற்றத்தைச் செய்தது யார் என்று கிளைமாக்ஸ் அல்லது முக்கால்வாசிப் படம் வரை தெரியாது. புதிர் போன்று திரைக்கதை நகரும். ஆடியன்ஸ் குற்றவாளி யார் என்று யூகித்துக்கொண்டே இருப்பார்கள். இவர் தான் என்பது போல் காட்சிகள் அமைத்து, இவர் இல்லை என்று செம ட்விஸ்ட் வைப்பார்கள்.

1967ல் வந்த அதே கண்கள் திரைப்படம், இன்றளவும் போற்றப்படும் க்ரைம் மிஸ்டரி த்ரில்லராக உள்ளது. கிளைமாக்ஸ்வரை வில்லன்/கொலையாளி யார் என்று தெரியாமல் ஹீரோவும் ஆடியன்ஸும்(!) துப்பறிய வைத்திருப்பார்கள். அதே கண்கள் போன்ற மற்றொரு நல்ல மிஸ்ட்ரி ஃபிலிம், நடு இரவில்.

மாடர்ன் தியேட்டர்ஸின் ‘வல்லவனுக்கு வல்லவன்’ என்று ஒரு நல்ல சர்ப்ரைஸ் மூவி உண்டு. அதில் ஹீரோ நடிகரை வில்லனாகவும், வில்லன் நடிகர்களை ஹீரோவாகவும் வைத்து செம ட்விஸ்ட் கொடுத்திருப்பார்கள். நடிகர்களின் தனிப்பட்ட இமேஜ் உதவியுடன் திரைக்கதையில் விளையாடியிருப்பார்கள். இந்த நடிகர் என்றால் வில்லன் தான் எனும் நம் வீக்கான மைண்ட் செட் தான், படத்திற்கு பெரும் பலம்!

சமீப காலத்தில்(?) வந்த படங்களில் முக்கியமானது, புரியாத புதிர்.
துப்பறியும் நாவல் படிப்பது போன்ற அனுபவத்தைக் கொடுப்பது, இந்த சர்ப்ரைஸ் வகை. ’இதை யார் செய்தது? (Whodunnit)’ கதைகள் என்று இந்தவகை மர்மக் கதைகள் அழைக்கப்படுகின்றன.

இப்போதெல்லாம் ஆடியன்ஸ் மிகவும் தெளிவாகிவிட்டதால், சஸ்பென்ஸ் படமாகக் கொண்டுசென்று, இறுதியில் சர்ப்ரைஸாகவும் மாற்றலாம். உதாரணம், மங்காத்தா.



க்ரைம் ஜெனர் தனித்து வருவதோடு, ஆக்சன் மற்றும் ஃபிலும் நுஆர் உடன் இணைந்தும் வரும். பெரும்பாலான ஃபிலிம் நுஆர் கதைகள், குற்றத்தை மையப்படுத்தி நகர்பவை என்பதால் க்ரைம் ஜெனருடன் நுஆரும் இணைந்தே வரும். உதாரணம், அந்த நாள்.


க்ரைம்/மிஸ்ட்ரி ஜெனர் எழுதும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களில் சில:

·     ஒரு கொலை..அதற்கு ஒரு விசாரணை என்பது தான் கதைக்களம். ஆனாலும், அந்தக் கொலை இல்லாவிட்டால்கூட கதை சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். வலுவான, வித்தியாசமான கேரக்டர்கள் இருக்க வேண்டும். உதாரணம், புரியாத புதிர். அப்போது ரகுவர் பேசிய ‘I Know’ வசனம் மிகப்பிரபலம். தியேட்டருக்கு பலரையும் அது ஈர்த்தது.

·  நடக்கின்ற குற்றம்கூட சுவார்ஸ்யமாக, புதுமையாக இருக்க வேண்டும். குற்றத்தில் என்னய்யா புதுமை என்கிறீர்களா? வேட்டையாடு விளையாடு சைக்கோ, பாபநாசம் – ஃபேமிலி டிராமாவை த்ரில்லர் ஆக்கும் எதிர்பாராத கொலை, புலன்விசாரணையில் கிட்னி திருட்டு போன்றவை இதற்கு உதாரணம்.

·         குற்றம், புதுமையாக மட்டுமல்லாது நம்பக்கூடியதாக இருக்க வேண்டும். இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டு என்று ஆடியன்ஸ் நம்ப வேண்டும். குற்றத்தை நம்பவில்லையென்றால், பின்னர் நடக்கும் துப்பறிதலில் கொஞ்சமும் ஆர்வம் வராது.

·         டிடெக்டிவ் ஹீரோ தன் புத்திசாலித்தனத்தால், குற்றவாளியை நெருங்க வேண்டும். 

·         குற்றவாளி, குற்றம் செய்யுமளவுக்கு பலசாலியாக/முக்கிய கேரக்டராக இருக்க வேண்டும். ஒரு சப்பை கேரக்டரைக் காட்டி, இவர் தான் என்று சொன்னால் ஃப்ளாப் தான்.

·         ஆடியன்ஸ், டிடெக்டிவ்வின் பாயிண்ட் ஆஃப் வியூவிலேயே படத்தைப் பார்க்க வேண்டும். டிடெக்டிவிற்கு கிடைக்கும் எல்லா க்ளூக்களும், ஆடியன்ஸுக்கும் தெரிய வேண்டும். டிடெக்டிவ் போன்றே ஆடியன்ஸும் கிளைமாக்ஸ்வரை யோசிக்க வேண்டும்.

·         க்ரைம் கதைகளில் பாதிக்கப்படும் கேரக்டர்கள் பற்றி ஆடியன்ஸ் கவலைப்பட வேண்டும். அத்தகைய எம்பதி கேரக்டர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

·         கிளைமாக்ஸ், லாஜிக்குடனும் நம்பக்கூடியதாகவும், சர்ப்ரைஸ் படமென்றால்’ இதை யோசிக்கலியே’ என்று நினைக்க வைப்பதாகவும் இருப்பது அவசியம். இத்தகைய படங்களுக்கு கிளைமாக்ஸ் தான் மிகமிக முக்கியம்.

·         மர்மக்கதைகளில் குற்றவாளி கேரக்டர் சீக்கிரமே வந்துவிடவேண்டும். ஆனாலும் ஆடியன்ஸ் யூகிக்கக்கூடாது. திடீரென பாதிப்படத்திற்கு மேல் ஒரு கேரக்டரை நுழைத்து, அவர் தான் என்றால் சுவாரஸ்யமாக இருக்காது.

·         மர்மக்கதைகளில் உள்ள பெரிய ரிஸ்க், கிளைமாக்ஸ்வரை நாம் ஆடியன்ஸை முட்டாள் ஆக்குகிறோம் என்பது தான். அதை ஆடியன்ஸ் ரசிக்கும்படி செய்வது தான் சவால். என்னைப் பொறுத்தவரை, இருப்பதிலேயே ரிஸ்க்கான ஜெனர் இது. மிகத்தெளிவான திட்டமிடலுடன், ஆடியன்ஸ் யூகித்துவிடாதபடி, ஆனாலும் யூகிப்பதற்கான தடயங்களுடன் திரைக்கதையை அமைக்க வேண்டும்




இதுவரை, த்ரில்லர் கதைகள் பற்றிப் பார்த்துவந்தோம். ஓரளவு எல்லா த்ரில்லர் ஜெனர்கள் பற்றிப் பார்த்துவிட்டோம். விடுபட்டவை, ஆக்சன் – க்ரைம், ரொமாண்டிக் த்ரில்லர், நுஆர்-க்ரைம் போன்று கலப்பின படங்களாக இருக்கும்.

அடுத்து, காதல், காமெடி போன்ற மெலோ டிராமா கதைகள் பற்றிப் பார்ப்போம்.

ஒரு மாத லீவில் ஊருக்குச் செல்வதால், வந்தபின் தொடர்கிறேன். தாமதத்திற்கு பொறுத்தருள்க.

(மீண்டும் சந்திப்போம்)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

  1. Thalaivaa.... Where are you....

    ReplyDelete
  2. லீவ் முடிஞ்சு வந்தாச்சு..இந்த சண்டே ஆரம்பிச்சுடலாம். :)

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.