ஒரு ஃபிலிம் நுஆர்/நியோ-நுஆர்
திரைக்கதை எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி இப்போது பார்ப்போம்.
தீம்: படத்தின் தீம்
ஆனது
சைக்கோ,
ஹாரர்,
கொலை,
செக்ஸ், ஏமாற்றுதல், குற்றம் போன்ற
டார்க்
சப்ஜெக்ட்டாக இருக்க
வேண்டும்.
இடம்: மற்ற த்ரில்லர்
படங்கள் போன்றே, நகரம் தான் நியோ-நுஆருக்கும் வசதி. ’கிராமத்து மனிதர்கள் எல்லாம் நல்லவர்கள்,
நகரத்து மனிதர்கள் எல்லாம் சுயநலவாதி’’ எனும் ஒரு மாய பிம்பம் ஆடியன்ஸ் மனதில் இருக்கிறது.
மேலும் கிராமத்தில் அடுத்தவர் வாழ்க்கையை எட்டிப்பார்க்கும் ஆர்வம் அதிகம் என்பதால்,
தனிமையை நாடும் ஃபிலிம் நுஆர் கதைகளுக்கு நகரமே பெஸ்ட்.
விஷுவல்ஸ் :
இருட்டு, மழை மற்றும்
புகை(மூட்டம்) போன்றவை இவ்வகை ஜெனரின் விஷுவலில் முக்கிய இடம் பிடிக்கும். மர்மம்,
துக்கம், அசௌகரியம் போன்ற உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டவை இவை. எனவே உச்சிவெயிலில் சம்பவங்கள்
நடப்பது போல் எழுதிவிடாமல், இவற்றைக் கவனத்தில் கொள்வது நல்லது.
தமிழில் ஃபிலிம்
நுஆரின் விஷுவல்தன்மையைத் தன் படங்களில் பயன்படுத்தியவர், மணிரத்னம் காதல், கேங்ஸ்டர்
என எந்த சப்ஜெக்ட்டாக இருந்தாலும், விஷுவல் மட்டும் ஃபிலிம் நுஆரை ஒட்டியே இருக்கும்.
மக்களை தியேட்டருக்கு வரவழைக்கும் கமர்சியல் உத்தியாகவும், தனக்கான விஷுவல் ஸ்டைலாகவும்
மணிரத்னம் அதைப் பயன்படுத்தினார். அதன்மூலமாக ‘மணி படம்னா இருட்டாகத்தான் இருக்கும்’
என்று வரலாற்றில் புகழ்பெற்றார்!
ஹீரோ:
த்ரில்லர் படங்களில்…
ஆக்சன் பட ஹீரோ
என்பவன், குற்றத்தை தட்டிக்கேட்பவன்.
அட்வென்ச்சர் ஹீரோ
என்பவன், குற்றத்தை தட்டிக்கேட்கும் கடமையுணர்ச்சி கொண்டவன்.
கேங்ஸ்டர் ஹீரோ
என்பவன், அந்த குற்றத்தையே தனக்கேயுரிய நியாயங்களுடன் செய்பவன்.
மேலே சொன்ன மூன்று
ஜெனர்களிலும் ஹீரோவின் இயல்பையும் கிளைமாக்ஸையும் மட்டும் மாற்றிவிட்டால், அவை ஃபிலிம்
நுஆருக்குள் வந்துவிட்டும்.
ஃபிலிம் நுஆர்
ஹீரோவின் முக்கிய அம்சம், அவன் ஏதோவொரு குறைபாடு(Flaw) உள்ளவன். அது உடற்குறைபாடு அல்ல.
பெரும்பாலும்,
அவனது கடந்த காலமே அவனது கழுத்தை இறுக்கி, அமர்ந்திருக்கும்.புதிய பறவை படத்தை எடுத்துக்கொண்டால்,
அவன் முதல்மனைவியைக் கொலை செய்ததே அந்த கேரக்டரின் குறைபாடாக இருக்கும்.
ஆரண்ய காண்டத்தில்
சிங்கப்பெருமாளின் வயோதிகமும், சப்பையின் சப்பைத்தனமும்.
இந்தத் தொடரை எழுதும்போதே,
தமிழ்ப்படங்களை மட்டுமே உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்று உறுதியெடுத்துக்கொண்டேன்.
ஆனால் இந்த ஜெனருக்கு அதைக் கொஞ்சம் மீற அனுமதிக்கவும்.
ஹிட்ச்காக்கின்
Vertigo படத்தை எடுத்துக்கொண்டால், ஹீரோவுக்கு வெர்டிகோ நோய். அதாவது உயரமான இடத்திற்கு
ஏறினால், தலைசுற்றிவிடும்.
Basic
Instinct ஹீரோ செக்ஸ் விஷயத்தில் வீக். (யாருய்யா அது, இதெல்லாம் குறையான்னு கேட்கிறது?)
Memento ஹீரோவுக்கு
ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்.
Psycho படத்தின்
சைக்கோ ஹீரோ.
இவ்வாறு, ஒரு முழுமையான
எம்.ஜி.ஆர்/ரஜினி ஸ்டைல் ஹீரோவாக இல்லாமல், ஏதோவொரு குறைபாடுடன் இருந்து, அந்தக் குறைபாட்டாலேயே
வீழ்பவனே நியோ-நுஆர் ஹீரோ.
இந்த ஜெனர் ஹீரோ சைக்கோவாக, ஆண்டி-ஹீரோவாக, விரக்திக்கு ஆளாகும் நபராக இருப்பது வழக்கம். துப்பறியும் கதைகளில் ஹீரோ
டிடெக்டிவ்வாக இருந்தாலும், குறைபாடும் இருக்கும்.
ஹீரோயின் :
முந்தைய த்ரில்லர்
ஜெனர்களின் ஹீரோயின்னுக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது என்று பார்த்தோம். ஆனால்
நுஆர் படங்களில் ஹீரோயினுக்கு நிறைய முக்கியத்துவம் உண்டு. ஏனென்றால், ஹீரோவின் கழுத்தை
அறுக்கப்போவதே ஹீரோயின் தானே!!
நுஆர் பட ஹீரோயினுக்கு
ஒரு சிறப்பு பெயரே உண்டு. Femme Fatale (ஃபேம் ஃபேடல்). ‘அழகு இருக்கும் இடத்தில் தான்
ஆபத்து இருக்கும்’ என்று சொல்வார்கள் இல்லையா? அது தான் இந்த Femme Fatale. ஆண்களை
மயக்கும் பேரழகான, அப்படி மயக்குவதன் மூலம் ஆபத்தில் தள்ளும் நல்ல உள்ளங்களே Femme
Fatale ஆவர்!!
இந்த ஹீரோயின்கள்
பேரழகிகள். ஹீரோவை மட்டுமல்லாது எந்த ஆணையும் மயக்கும் சக்தி படைத்தவர்கள். எனவே ஏற்கனவே
ஒரு குறைபாடுடன் அலையும் ஹீரோவை, எளிதாக வீழ்த்திவிடுவார்கள்.
ஹீரோயின் நல்லவளாகவும்
இருக்கலாம். தமிழில் ஹீரோயினை வில்லியாகக் காட்டுவதற்கு மிகவும் தயங்குகிறார்கள்.
புதிய பறவை ஹீரோயின்
சரோஜாதேவி ஒரு சி.ஐ.டி. ஹீரோ செய்த கொலையை துப்பறிய வந்தவள். தன் அழகால் ஹீரோவை மயக்கி,
உண்மையை வெளியே வரவழைக்கிறாள். (இறுதியில், அவர் நடிக்கவில்லை; உண்மையிலேயே காதலில்
விழுந்துவிட்டார் என்று சொல்லியிருப்பார்கள். தமிழ் ஆடியன்ஸைப் பார்த்து, அவ்ளோ பயம்,
கோப்ப்ப்ப்பால்!!)
அந்தவகையில், சுப்பிரமணியபுரம்
ஒரு தைரியமான முயற்சி. ஹீரோயின் ஒரு முழுமையான Femme Fatale அல்ல. உண்மையிலேயே காதலிப்பவர்
தான். ஆனாலும் ஒரு கட்டத்தில் Femme Fatale ஆகிறார். இந்தப் படம் தமிழ்ச்சூழலில் எழுப்பிய
அதிர்வலையை மறக்கமுடியாது. ‘கடைசியில் சசின்னு ஒருத்தன் வந்து உண்மையைச் சொல்லிட்டான்யா’
என்று பலர் பூரித்துப்போனார்கள். (ஹீரோவின் குறைபாடு…..அந்த பாழாப்போன காதல்
தானோ??)
தமிழில் வந்த முழுமையான
Femme Fatale, ஆரண்ய காண்டம் சுப்பு தான். நடிகை ஆக வேண்டும் என்ற கனவில் வந்து, சிங்கப்பெருமாளிடம்
சிக்கியவள். சப்பையிடம் தான் அவள் ஒரு முழுமையான Femme Fatale ஆகிறாள். ’எல்லோரும்
சப்பை என்று சொல்கிறார்களே..தானும் ஆண்மகன் தான்’ என்று நிரூபிக்கும் ஆசையுடன் இருப்பவன்
சப்பை. அந்த குறைபாட்டை சுப்பு சரியாகப் பயன்படுத்திக்கொள்வாள்.
Vertigo-வில் ஹீரோவை
காதலில் விழவைத்து, ஒரு கொலைத்திட்டத்தில் அவனையும் பங்காளி ஆக்குகிறாள் ஹீரோயின்.
Basic
Instinct பற்றி நான் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இந்த ஸ்டில் போதாதா?
மறக்க முடியுமா? |
Memento-வும்
Psycho-வும் Femme Fatale கேரக்டருக்கு ஒரு ட்விஸ்ட் கொடுத்தன. இரண்டுமே இறந்தபிறகு,
சைக்காலஜிகலாக ஹீரோவை ஆட்கொள்ளும் கேரக்டர்கள். உடல் அழகு அவர்களின் மூலதனம் அல்ல.
மெமெண்டோவைப் பொறுத்தவரை, மனைவியைக் கொன்றவர்களை பழிவாங்க அலைகிறான். ஆனால் உண்மையிலேயே
மனைவியைக் கொன்றார்களா அல்லது கற்பனையா என்பத் தெரியாது. அதே போன்றே, சைக்கோவில் தாய்ப்பாசம்
தான் குறைபாடு. அந்த தாய் தான் ஃபேம் ஃபெடல்.
உலக சினிமாக்களிலேயே,
Femme Fatale என்றால் என்னவென்று தெளிவாக ஆரண்ய காண்டம் சொன்னது : ’என்னைப் பொறுத்தவரை
சப்பையும் ஆம்பளை தான்…எல்லா ஆம்பளையும் சப்பை தான்’.
சூழ்நிலை:
கதையில் சூழ்நிலை
என்பது ஏதேனும் குற்றத்தை மையப்படுத்தியே இருக்கும். ஒரு கொலை நடந்திருக்கலாம். ஒரு
ஏமாற்றுத்திட்டம் நடந்துகொண்டிருக்கலாம். வன்முறையும் செக்ஸும் கரைபுரண்டோடும் இடமாகவும்
சூழ்நிலை இருக்கலாம். ஆடியன்ஸை ஒரு தொந்தரவான மனநிலையிலேயே, அசௌகரியமாகவே வைத்திருப்பது
தான் சூழ்நிலை மற்றும் கதையோட்டத்தின் குறிக்கோள். (நல்ல எண்ணம்!!)
திரைக்கதை:
மற்ற த்ரில்லர்
படங்களைவிட,சிக்கலானதாக நுஆர் படங்களின் திரைக்கதை இருக்கும். குறைபாடுள்ள ஹீரோவுடன்
ஆடியன்ஸை ஒன்ற வைப்பது, வில்லியாகும் ஹீரோயின், அடுத்து வரப்போவது என்ன என்று ஆடியன்ஸை
ஊகிக்கவிடாமல் தடுப்பது என்று சவால்கள் நிறைந்த கதைக்களம் இது.
வாய்ஸ் ஓவர், நான்
லீனியர் போன்ற உத்திகளுடன் கதை சொல்ல ஏற்ற கதைக்களம் இது. ஹீரோவே ஒரு குறைபாடு உள்ள
ஆள் என்பதால், அவர் சொல்லும் கதையை நம்பமுடியாது. Usual Suspects, Shutter Island ஸ்டைலில்
கிளைமாக்ஸில் விளையாட்டு காட்ட,அது உதவும்.
கதையின் போக்கு
நம்பக்கூடியதாக இருக்க வேண்டும். அட்வென்ச்சர் படங்கள்போன்று ரியாலிட்டியில் இருந்து
விலகி இருக்கக்கூடாது. உண்மையிலேயே நடக்கின்ற சம்பவம் போன்றே இருக்க வேண்டியது அவசியம்.
(ஆனால் விஷுவல்ஸ், ரியாலிட்டியில் இருந்து விலகியிருக்க வேண்டும்!!)
திரைக்கதையின் நகர்வு,
ஆடியன்ஸை தொந்தரவு செய்வதாகவே இருக்க
வேண்டும். குஷிப்படுத்துவதை நோக்கமாக வைத்துக்கொள்ளாதீர்கள். கிளைமாக்ஸ் என்பது
பெரும்பாலும் ஹீரோவின் தோல்வி தான்.
புதிய பறவை சிவாஜி,
ஜெயிலுக்குப் போகிறார்.
அந்த நாள் சிவாஜி
சுட்டுக்கொல்லப்படுகிறார். (அதில் ஹீரோ தான் வில்லன்!)
சுப்பிரமணியபுரத்தில்
சதக்!
ஆரண்ய காண்டம்
சப்பைக்கும் ஆப்பு தான்.
’நம்பிக்கை துரோகம்,
ஏமாற்றுதல் எல்லாம் வாழ்வில் ஒரு அங்கம் தான். எனவே சொகுசான வாழ்க்கையை மட்டும் கனவு
கொண்டிருக்காதீர்கள்’ என்று மிரட்டி அனுப்புவது தான் இந்த நுஆர் கிளைமாக்ஸ்களின் முக்கியப்
பணி!
மேலே சொல்லப்பட்டவை
பொதுவாக நுஆர் படங்களில் இருக்க வேண்டிய அம்சங்கள் இவற்றில் சிலவற்றை மாற்றிக்கொள்ளலாம்.
சுப்பிரமணியபுரத்தில்
குறைபாடற்ற ஹீரோ.
Psycho,
Memento-வில் ஃபேம் ஃபேடல் இல்லாத சூழ்நிலை
Vertigo-வில் ஹீரோ
தோற்காமல், ஃபேம் ஃபேடல் தோற்பது – ஆகியவை சில உதாரணங்கள்.
(தொடரும்)
அண்ணே , மெமண்டோ படத்துல நடாலி கேரக்டர கவனத்தில் கொள்ளவும். ஃபெம் ஃபெட்டேல்...!
ReplyDeleteஆங்கிலப்பட உதாரணங்களை தவிர்ப்போம். :)
Delete