Tuesday, February 28, 2023

நண்பகல் நேரத்து - மயக்கம் ஏன்?

 

சினிமா என்பது 24 கலைகளின் தொகுப்பு. அதில் ஒன்று தான், கதை சொல்லுதல். வணிக சினிமா என்பது முழுக்கவும் கதை சொல்வதையே மையமாக வைத்துச் சுழல்வது. 
 
’முழுப்படமும் கதை சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சியும் அந்தக் கதையை நகர்த்த வேண்டும். ஒவ்வொரு ஷாட்டுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்’ என்பது பாலபாடம்.
 
மக்கள் கதை கேட்கவே படம் பார்க்க வருகிறார்கள். விசு, ராம.நாராயணன் போன்றோரின் படங்கள் டெக்னிகலாக சுமாராக இருந்தாலும் பெரும் வெற்றியடையக் காரணம், கதை சொன்ன விதம்.
 
எப்படி பிண்ணனி இசையோ, வசனமோ இல்லாமல் படம் எடுக்க முடியுமோ, அதே போன்றே கதையை பெரிதாக கணக்கில் கொள்ளாமலும் படம் செய்ய இயலும். ஒரு வாழ்க்கையையோ, ஒரு உணர்வையோ, ஒரேயொரு நிகழ்வையோ மட்டும் பதிவு செய்யும் சுதந்திரம் படைப்பாளிகளுக்கு உண்டு.
கலைப்படங்கள், Experimental, Avant-garde என்று பல பெயர்கள் இவ்வகைப்படங்களுக்கு உண்டு. Bergman, David Lynch, Tarkovski, Antonioni, Fellini என்று இவ்வகைப் படைப்பாளிகளை பட்டியல் இட முடியும். 
 
கதை சொல்வதோ, ஆடியன்ஸை திருப்திப்படுத்துவதோ அவர்களின் நோக்கம் அல்ல. சினிமா எனும் கலையை வெறும் சினிமாவாகவே எடுத்துப் பார்க்கும் முயற்சி அது. 
 
தமிழ் சினிமாவில் கதை கேட்டே வளர்ந்த நம் மக்களுக்கு, கதை சொல்லாத படங்களைப் பார்க்கும்போது கோபம் வருகிறது. ‘நான் இரண்டு மணி நேரம் செலவழிக்கிறேன். ஒன்னுமே சொல்லல?’ என்று கோபமாகக் கேட்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ அப்படி ஒரு அதிர்வலையை சோசியல் மூடியாவில் கிளப்பிவிட்டிருக்கிறது. 
 
கதை சொல்ல ‘ஸ்ரீதர், பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்தினம், மிஷ்கின்’ என்று பெரும் பாராம்பரியமே இருக்கும்போது, மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸின் சட்டையைப் பிடித்து ’கதையை எங்க மோனே?’ என்று சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 
 
‘அவன் நடப்பான்..நடப்பான்...மெதுவாய்த்தான் வருவான்..பெருசா கதையும் சொல்ல மாட்டான்’ என்ற பொறுமையுடன் தான் இவ்வகைப் படங்களை அணுக வேண்டும்.
 
இந்த படத்தின் பிண்ணனியில் தமிழ்ப்பட வசனங்களை ஓடவிட்டது பெரும் குறையாகவே எனக்குப் பட்டது. இரண்டாம் முறை ம்யூட் செய்து பார்த்தபோது, பேரனுபமாக இருந்தது.
 
பொதுவாக ஒரு ஆவி ஒருவரின் உடம்பில் நுழையும்போது, ஆவிக்கு அது தெரியும்; பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாது. இங்கே அது தலைகீழாக திருப்பிப் போடப்பட்டிருக்கிறது.
 
உடலையும் வாழ்க்கையையும் இழந்துவிட்ட ஒரு தமிழ் ஆன்மா, விளக்கப்படாத ஒரு அதிசயத்தால் ஒரு மலையாள உடம்பில் வந்து அமர்ந்துவிடுகிறது. பழைய வாழ்க்கையைத் தொடர நினைக்கிறது. அது நடைமுறையில் இயலாத காரியம் என்று உணர்ந்து, பெருவலியுடன் திரும்பிச் செல்கிறது. 
 
மொழி, மதம் என்று நாம் பிடித்து வைத்திருக்கும் அடையாளங்கள் ஒரு பொருட்டே அல்ல என்றும் குறியீடாகப் பேசுகிறது இப்படம்.
’ஒரு ஆவி இன்னொரு கேரக்டரில் புகுந்தால், அந்த ஆவியைக் கொன்ற நாலுபேரை போட்டுத் தள்ளவே வரும்’ என்று கதை கேட்ட நமக்கு, ‘வந்துச்சு..அப்புறம் போய்டுச்சு’ என்று கதை சொல்வது போதாது தான். 

 
ஆனாலும், இவ்வகைப் படங்கள் ஒரு அனுபவம். உங்களின் கதை அறிவையெல்லாம் தூக்கி ஓரமாய் வைத்துவிட்டு, எளிய பிள்ளையாய் அமர்ந்தால் சில திறப்புகள் நிகழும்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.