Monday, July 13, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 51


ஜெனர் – மாயக் கதைகள் (Fantasy)

மகாபாரதம், ராமாயணம் போன்ற புராண இதிகாசங்களை உலகிற்கு அளித்த நமக்கு, ஃபேண்டஸி என்பது புதிய விஷயம் அல்ல. இந்தியாவில் பிறக்கும் எல்லோருமே, ஏதோவொரு ஃபேண்டஸிக் கதையைக் கேட்டுத்தான் வளர்ந்திருப்போம்; குறைந்த பட்சம் பாட்டி வடை சுட்ட கதையைக் கேட்டு!

மாயக் கதைகளுக்கான வரையறை என்ன?

இந்த உலகத்தில் உள்ள விதிகளுக்கு அப்பாற்பட்டு, தனக்கென்று சில விதிகளை வரையறுத்துக்கொண்ட ஒரு மாய & கற்பனை உலகில் நடக்கும் கதைகளே மாயக்கதைகள் என்று வரையறுக்கலாம். அந்த கற்பனை உலகானது, இந்த புவியுடன் ஒத்தே இருக்கும்; சில விஷயங்களைத் தவிர்த்து.


பாட்டி வடை சுட்ட கதையை எடுத்துக்கொண்டால், காக்கா வடையைத் தூக்குவதோ அல்லது பாட்டி வடைசுடுவதோ மாயை அல்ல. இது இவ்வுலகிற்கும் ஏற்ற இயல்பான விஷயங்கள் தான். ஆனால் காக்காவும் நரியும் பேசிக்கொள்ள ஆரம்பிக்கும்போது, அது ஃபேண்டஸி ஆகிவிடுகிறது.

’மிருகங்கள் பேசுமா?, பறவைகள் நேயர் விருப்பத்திற்கு இணங்க பாடுமா?’ எனும் லாஜிக்கல் கேள்வியையும் தாண்டி, அவற்றை ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வதே ஃபேண்டஸியில் முக்கியம்.

இன்னொரு விஷயம், இந்த மாயை என்பது அறிவியல் டெக்னாலஜிக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். உதாரணமாக, எதிர்காலத்தை அறிந்துகொள்ளுதல் என்பதை ‘இன்று நேற்று நாளை’ போன்று அறிவியல் வளர்ச்சியின் காரணமாக நடப்பதாகக் காட்டினால், அது அறிவியல் புனைவு (சைன்ஸ் ஃபிக்சன்). அதே நேரத்தில் ஜோசியம் மூலமாகவோ, முனிவர் மூலமாகவோ எதிர்காலத்தை அறிவதாகக் காட்டினால், அது ஃபேண்டஸி. இதற்கு உதாரணம், மான் கராத்தே.

அமெரிக்கா அளவிற்கு நாம் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்துபவர்கள் அல்ல. ஸ்ரீஹரிகோட்டா சேட்டிலைட்டைவிட ஸ்ரீதிவ்யா வீடியோக்களே நம் மக்களுக்கு முக்கியமானவையாக இருப்பதால், அறிவியல் புனைவுகள் நமக்கு இன்னும் ரிஸ்க்கான விஷயமாகவே இருக்கின்றன. அதே போன்றே, இது பகுத்தறிவு மண் என்பதால், ஃபேண்டஸிக் கதைகளைச் சொல்லி, மக்களை நம்ப வைப்பதும் கடினமான காரியமாக இருக்கிறது. ‘காதுல பூ சுத்துறாங்கய்யா’ என்ற விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஃபேண்டஸி என்பதே சுவாரஸ்யமாக, காதில் பூச்சுற்றுவது தான் என்பதே இன்னும் பலருக்குப் புரிவதில்லை.

இத்தகைய காரணங்களினாலும், தயாரிப்புச் செலவு அதிகம் என்பதாலும் ஃபேண்டஸிக் கதைகள் சமீபகாலமாக மிகவும் குறைந்துவிட்டன. இதுவரை வந்த படங்களை வைத்து, ஃபேண்டன்ஸிக் கதைகளை இரண்டுவகைகளாகப் பிரிக்கலாம்.

காவியக் கதைகள்:

நமது புராண, இதிகாசங்களில் இருந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்தாளும் கதைகள். கர்ணன், சம்பூர்ண ராமாயணம், விக்கிரமாதித்யன் போன்றவை சில உதாரணங்கள். புராணங்கள், வரலாற்றுக்கதைகள் தான் என்றாலும், அதில் இருக்கும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களினால் அவை மாயக்கதைகள் ஆகின்றன.

நாம் முன்பே வில்லுப்பாட்டு பற்றிப் பார்த்தபடி, ஒரு குறிப்பிட்ட கேரக்டரை மட்டும் ஹீரோவாக எடுத்துக்கொண்டு கதை சொல்வது மரபு. பெரும்பாலும் முக்கியக் கேரக்டர்கள் பற்றி ஏற்கனவே படங்கள் வந்தாகிவிட்டன. இருந்தாலும் சிகண்டி கதை, அகலிகை கதை போன்றவற்றை மையமாக வைத்து நல்ல சினிமாக்களைக் கொடுக்க முடியும்.

கற்பனைக் கதைகள்:

நிகழ்காலத்தில், நிகழ்கால கேரக்டர்களைக் கொண்டே ஒரு மாயக்கதையைச் சொல்வது இந்த வகையில் வரும். மறுஜென்மம், ஜோதிடம்/எதிர்காலத்தை அறிதல் போன்ற தீம்களை வைத்து இதில் விளையாடலாம்.

இயக்குநர் ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை இதற்குச் சிறந்த உதாரணம். அந்தக் கதையின் இன்ஸ்பிரேசனில் சமீபத்தில் அனேகன் வந்ததையும் அறிவீர்கள்.

 ராஜமௌலியின் மகதீரா, நான் ஈ ஆகிய இருபடங்களுமே மறுஜென்மத்தை மையமாகக் கொண்ட ஃபேண்டஸிக் கதைகள். ’இறந்த ஒரு மனிதன், ஈயாக மறுஜென்மம் எடுத்து வந்து பழிவாங்கினால்?’ எனும் ஒன்லைன் இந்தியாவையே கலக்கியதை நீங்கள் அறிவீர்கள்.

ஒரு முனிவர் மூலம் எதிர்காலத்தை அறிந்துகொண்ட ஒரு நண்பர்கள் குழுவின் நடவடிக்கைகளை மையமாக வைத்து, மான் கராத்தே வந்தது.

பொதுவாக எல்லா ஜெனருமே ‘இப்படி இருந்தால் (What if)’ எனும் கேள்வியையே கருவாகக் கொண்டவை தான். ’ஒரு கோழை, போலீஸ் ஆனால்..’, அது அவசர போலீஸ் 101 ஆகவோ அல்லது வேட்டையாகவோ ஆகும். ஃபேண்டஸிப் படங்களுக்கு அடிப்படை விஷயமே ‘இப்படி இருந்தால் (WHAT IF..) எனும் சிந்தனை தான்.

இறந்த காதல் ஜோடிக்கு முன் ஜென்ம நினைவு வந்தால்…

ஒரு ஈ பழிவாங்கக்கிளம்பினால்…

ஒருவனுக்கு மனிதர்கள்(அல்லது லேடீஸ் மட்டும்) மனதுக்குள் பேசுவது கேட்கத் துவங்கினால்..

பேய்கள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தால்..

ஒரு மனிதனின் கனவுக்குள் இன்னொரு மனிதன் நுழைய ஆரம்பித்தால்..

இன்னொரு உலகம் இருந்து, அவர்கள் நம்மைத் தொடர்பு கொண்டால்…(இரண்டாம் உலகம் போன்று, டெக்னாலஜிக்குள் போகாமல்!)

பாண்டியர்-சோழர் இப்போதும் தப்பியிருந்து, அந்தப் பகை தொடர்ந்தால்..

இவ்வாறு நடைமுறைச் சாத்தியமற்ற, ஆனால் நம் (மூட) நம்பிக்கைகளின் துணைகொண்டு நம்மைக் கவரும் ஆற்றல் கொண்டவை ஃபேண்டஸிக் கதைகள்.

திரைக்கதையைப் பொறுத்தவரை, ஃபேண்டஸி என்பதை தனி ஜெனராகக் கொள்ளமுடியாது என்பதே யதார்த்தம். மாயையான ஒரு விஷயம், அதனால் உருவான அல்லது பாதிக்கப்பட்ட கேரக்டர்கள் என்பதே ஃபேண்டஸி கொடுக்கும் புதிய விஷயம். இத்துடன் மற்ற ஜெனர் சேரும்போது கீழ்க்கண்ட ஜெனர்கள் உருவாகின்றன.
அவை

ஃபேண்டஸி-ஆக்சன்
ஃபேண்டஸி-அட்வென்ச்சர்
ஃபேண்டஸி-காமெடி
ஃபேண்டஸி-லவ்
ஃபேண்டஸி-ஹிஸ்டோரிக்கல் – என்று இணைந்தே வரும்.

எனவே நாம் இதுவரை பார்த்த ஜெனர் அம்சங்களையும், இந்த மாயக்கதைகளின் அம்சங்களுடன் இணைத்தே திரைக்கதைகள் உருவாக்கப்பட வேண்டும். இதில் கோட்டை விடுவதால்தான் ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற நல்ல ஃபேண்டஸி தீம்கள் கொண்ட படங்கள்கூட, தோல்வி அடைகின்றன.

நான் ஈ படம் ஒரு ஃபேண்டஸி ஆக்சன் வகை.

ஹீரோ வில்லனிடம் இருந்து  ஹீரோயினைக் காப்பாற்றுகிறான். இது தான் அதில் இருக்கும் ஆக்சன் ஒன்லைன்.

ஹீரோ என்பவன் மனிதன் அல்ல..ஈ…மறுஜென்மம் எனும் ஃபேண்டஸிக்கரு கொடுத்த ஃபேண்டஸி ஹீரோ. இதுவும், இந்த ஃபேண்டஸி உருவாக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களும் தான் அந்த ஆக்சன் ஒன்லைனில் கூடுதலாகச் சேர்ந்த அம்சங்கள்.

படத்திற்கு அடிநாதமாக காதல் ஓடுகிறது. ஆனால் அது காதல் கதை அல்ல. அத்தகைய மெலொடிராமா விதிகள் எதுவும் இங்கே பின்பற்றப்படவில்லை. ஏழை, சாமானியன், மாற்றுத்திறனாளி போன்றே வில்லனை விட தகுதிக்குறைவான ஹீரோ, ஈ. ஒரு பெர்ஃபெக்ட் ஆக்சன் ஹீரோ. படத்தில் ஃபேண்டஸி சம்பவங்கள் என்ன நடந்தாலும், ஆக்சன் மூவி எனும் ஜெனரைவிட்டு எதுவும் விலகுவதில்லை.


இப்போது செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனை எடுத்துக்கொள்வோம்.

ஒரு சாமானிய ஹீரோ (கார்த்தி), ஒரு சாகசப்பயணத்தில் வலிய இழுத்துவிடப்படுகிறான்….ஆக்சனும் அட்வென்ச்சரும் கலந்த ஜெனர்..

பாண்டிய வம்சத்து வழித்தோன்றல்(ரீமாசென்), இன்னும் எஞ்சியிருக்கும் சோழ வம்சத்தை அழிக்கக் கிளம்புகிறாள்..ஒரு பழி வாங்கும் ஃபேண்டஸி ஆக்சன் கதை.

சோழரும் பாண்டியரும் தமிழரின் வரலாற்றுப் பெருமிதங்கள். இந்த அடிப்படை வரலாற்று அறிவு இல்லாமல், இதில் ஒரு தரப்பை வில்லனாக ஆக்கியது மாபெரும் தவறு. சோழரை அழிக்க வந்த, ஒரு குறுநில மன்னர் வம்சம் என்று கதை சொல்லியிருந்தால், சிக்கல் எழுந்திருக்காது.

நாம் ஏற்கனவே ஜெண்டில்மேன் பற்றிய பதிவில் சொன்னபடி, எடுத்துக்கொள்ளும் விஷயங்கள் பற்றிய சமூக வரலாற்றுப் பிரக்ஞை இல்லாவிட்டால், இப்படிப் பெரும் சிக்கலில் தான் திரைக்கதை முடியும்.


அடுத்து…

இந்தப் படம் உருவான நேரத்தில் ஈழப்போர் உச்சத்தில் இருந்தது. எனவே அதையும் கிளைமாக்ஸில் கலந்து, குழப்பினார்கள். அதுவரை பாண்டியர்-சோழர் என்று போனகதை, சிங்களர்-தமிழர் பற்றிய குறியீட்டுக் கதையாக ஆனது. பாண்டிய-சோழர் பிரச்சினையும் ஈழப்பிரச்சினையும் ஒன்றல்ல.

உண்மையில் பார்த்திபன் – ஈழத்தமிழர், ரீமாசென் – சிங்களர்& இந்தியா, கார்த்தி – பிரபாகரன் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்துகொண்டு, திரைக்கதையை ஏகப்பட்ட குறியீடுகளுடன் அமைத்திருந்தால், அட்டகாசமான ஃபேண்டஸியாக வந்திருக்கும்.

அடுத்து….

சரி..இந்தக்கதை ஆக்சனும் அட்வென்ச்சரும் கலந்த ஃபேண்டஸி என்று வைத்துக்கொள்வோம். திரைக்கதையில் அடுத்து வந்த பிரச்சினை, பெரும்பாலான காட்சிகள் செல்வராகவனின் ஃபேவரிட் ‘செக்ஸுவல் டிராமா’ ஜெனரை ஒத்திருந்தன.

செல்வராகவன் படம் என்றால், செக்ஸ் சீன் இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலும். செல்வராகவன் ஜெனர் என்று எதுவும் கிடையாது. செல்வராகவன் முதலில் சொன்ன ‘Coming to Age’ கதைகளுக்கு செக்ஸ் அடிப்படையாக இருந்தது. அதையே ஃபேண்டஸி ஜெனருக்குள் நுழைத்தபோது, குமட்டிவிட்டது.

ஃபேண்டஸி என்பதே சிக்கலான, நம்ப முடியாத ஒரு விஷயத்தை ஆடியன்ஸுக்கு உறுத்தாமல் சொல்வது தான். நம் ஆட்கள் சிலருக்கு ஃபேண்டஸி என்றால், ஹெவியாக அடர்த்தியாக இருக்க வேண்டும் எனும் தவறான எண்ணம் இருக்கிறது. ஆக்சன், அட்வென்ச்சர், லவ், செக்ஸ், ஃபிலிம் நுஆரின் ஏமாற்றம் என எல்லாவற்றையும் கலந்துகட்டி, பிச்சைக்காரன் பாத்திரம்போல் ஆக்கினால், பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.

உண்மையில் ஃபேண்டஸி கதைகள் தான் இருப்பதிலேயே சிம்பிளாக இருக்க வேண்டும், நெஞ்சம் மறப்பதில்லை & நான் ஈ போல!

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

 1. செங்கோவி... நீங்கள் சொல்வது போல, ஆயிரத்தில் ஒருவன் ஒன்றும் அவ்வளவு மோசமான படம் இல்லை.. நல்ல முயற்சி தான். படத்தை ரசிப்பவர்களின் மனநிலையை பொறுத்தது. இதுவரை தமிழ்/இந்திய சினிமாவில் தொடாத திரைக்களத்தை தொட்டதற்கே செல்வராகவனை பாராட்ட வேண்டும். கதையும், கிராபிக்ஸ் தொழில் நுட்பமும் சரியான அளவில் இருந்தததால், படமும் பார்க்கும் படியாக இருந்தது. பாக்ஸ் ஆபிசில் படம் சரியாக ஓடாததற்கு காரணம், திரைக்கதை பலருக்கு புரியவில்லை என்பதால் தான். பின் பகுதியில் பல வசனங்கள், காட்சிகள் நிறைய பேருக்கு விளங்கவில்லை..அதுவே படத்தின் தோல்விக்கு காரணம்.

  இப்படம் ஆரம்பிக்கும் போதே 'இக்கதையில் வரும் எந்த சம்பவமும், பெயர்களும் யாரையும் குறிபிடுபவை அல்ல' என்று போட்டு விடுகிறார்கள். அப்படி போட்டு விட்டால், என்ன வேண்டுமானாலும் காட்டலாம், சொல்லலாம். அதுவும் ஃபேண்டஸி என்றால் கேட்கவே தேவையில்லை.சேரனும், சோழனும் நட்பு பாராட்டினர் என்று சொல்லலாம். சரித்திரங்களை மாற்றி கூட சொல்லலாம்... சரியான முறையில் திரைக்கதை இருந்தால்!

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. ஆயிரத்தில் ஒருவன் தமிழ் சினிமா வின்(win) நல்ல முயற்சி........ஃபேண்டஸி கதைகள் சிம்பிளாக இருக்க வேண்டும் என்பதைவிட சுவாரசியமாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம் ....... அந்த வகையில் இந்த படம் சிறந்த சிறந்த படமே..... அப்பறம் ஃபேண்டஸில எதுக்கு லாஜிக் பாக்கணும் லாஜிக் பார்த்த அது non fiction ஆகாத ......... ?????? creating a fantasy world that had no logic.......

  ReplyDelete
 4. Fantasy should have it's own logic. இந்த உலகத்து நியதிகள் முழுக்க ஒத்துப்போகாவிட்டாலும், ஃபேண்டஸி படத்தில் உருவாக்கப்பட்ட உலகிற்கென்று தனி ரூல்ஸ் இருக்க வேண்டும். அதற்குள் தான் விளையாட வேண்டும்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.