Friday, July 3, 2015

பாபநாசம் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..:

த்ரிஷ்யம் என்று மலையாளத்தில் ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம். தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி(இன்று ரிலீஸ்) என ரீமேக் ஆகி, இப்போது பாபநாசமாய் தமிழில். வேறு எந்தப் படமும் இந்தளவுக்கு ரீமேக் ஆகியிருக்குமா என்பது சந்தேகமே..’கமலஹாசன் நடிக்கிறார், கூடவே கௌதமியும்’ என்று செய்தி வரவுமே, ‘ஆஹா...அண்ணாச்சி கத்துக்கிட்ட மொத்த கலைஞானத்தையும் இறக்கி வைக்கப்போகிறாரோ?’ என்று பயம் வந்தது உண்மை. ஆனால் ஒஜினலைக் கெடுக்காமல், அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள். அந்தமட்டிலும், ஆண்டவன் காப்பாற்றினான்!
ஒரு ஊர்ல :
இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழும் தம்பதியினர் கமல்-கௌதமி. சந்தர்ப்ப சூழ்நிலையால் மனைவியும் மகளும் ஒரு கொலையைச் செய்துவிட, போலீஸ் விசாரணையில் இருந்து படிக்காத சாமானியரான கமல் எப்படி தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார் என்பதே கதை.

உரிச்சா:
கேபிள்டிவி நடத்தும் சினிமா வெறியராக அறிமுகம் ஆகிறார் கமல். படிக்காத அப்பாவி என்று அவரும், படத்தில் வரும் கேரக்டர்களும் சூடம் ஏற்றிச் சத்தியம் செய்தாலும், நமக்கு அப்படித் தோன்றவே இல்லை. கூடவே அந்த ஒட்டுமீசைவேறு கொஞ்சநேரத்திற்கு தொந்தரவு செய்கிறது; பிறகு அதுவே பழகிவிடுகிறது. :(

மலையாளத்தைப் போலவே இதிலும் முதல் அரைமணி நேரம் சவசவவென்று போகிறது. அப்போது வரும் சீன்கள் எல்லாம், பின்னால் வரும் விசாரணைக்கு லீட் என்றாலும் கொஞ்சம் நெளியத்தான் வேண்டியிருக்கிறது. மலையாளத்தில் உள்ள சீன்களை அப்படியே திரும்ப எடுத்திருக்கிறார்கள். மலையாளிகளுக்கு இது சகஜம் தான் என்றாலும், நமக்கு கொஞ்சம் போரடிக்கவே செய்கிறது. திருநெல்வேலி பாஷையில் எல்ல்லாருமே வெளுத்துவாங்கியிருக்கிறார்கள். பலகாட்சிகளில் வசனங்களுக்கு சிரிப்பு மழை.

அடுத்து, அந்தக் கொலை நடக்கும் இடத்தில் இருந்து படம் செம விறுவிறுப்பு. ஒர்ஜினல் படத்தை ஏற்கனவே இருமுறை பார்த்திருந்தும், தமிழில் பார்க்க கொஞ்சமும் போரடிக்கவில்லை. இண்டர்வெல்வரை படம் ஒன்றரை மணிநேரம் ஓடுகிறது. ஏனோ அதுவே ரொம்ப நேரம் ஓடியது போல் ஃபீலிங். இப்போதெல்லாம் 2 மணிநேரத்திலேயே மொத்தப்படமும் முடிவதால் இருக்கலாம்.

ஒரிஜினல் பார்த்தவர்களுக்கு முழுக்கதையும் தெரியும்; பார்க்காதவர்களுக்கு இதற்கு மேல் சொன்னால் சஸ்பென்ஸ் போய்விடும். எனவே மீதிக் கதையைப் பற்றி ஒன்றும் சொல்லவிரும்பவில்லை. உத்தமவில்லன், விஸ்வரூபம்-2 என கமல் கவலைப்பட மற்ற படங்கள் இருந்ததால், கொடுத்த வேலையை மட்டும் செய்திருக்கிறார். பாபநாசம் எனும் தலைப்பும், கௌதமி தேர்வும் தான் கமல் முடிவுசெய்த விஷயங்கள் என்று நினைக்கிறேன். படம் தப்பிப்பதே அதனால்தான்.

 
கமலஹாசன்:
கஞ்சத்தனம் செய்வது, ரொமான்ஸ், குடும்பத்தைக் காப்பாற்ற பதறுவது, தெளிவாகத் திட்டமிடுவது என அடித்துத் தூள்கிளப்ப வாய்ப்புள்ள கேரக்டர். புகுந்து விளையாடுகிறார். சாமானியன் வேஷம் ஒத்துவராவிட்டாலும், பிற்பகுதியில் புத்திசாலித்தனமாக திட்டமிடும்போது ‘கமல்’ சரியாகப் பொருந்திப்போகிறார். அதிலும் கிளைமாக்ஸ் (ஒரிஜினல்) வசனமும் நடிப்பும் சூப்பர்ப். ரொம்ப நாளைக்கு அப்புறம் கமலுக்கு ஒரு ஹிட்.

கௌதமி:
நான் ஸ்கூலில் படிக்கும்போது காளி என்று ஒருவன் என்னுடன் படித்தான். யார்மீதாவது கோபம் என்றால், தன் கைவிரல் நகத்தை வைத்து சுவரில் வரட்..வரட்டென்று சுரண்டுவான். பார்ப்பவர்களுக்கு உடம்பெல்லாம் கூசி, வாய்கோணி ‘டேய்..வேணாம்டா..சுரண்டாததா...வேதாந்தா..வேதாம்’ என்று கெஞ்ச வைத்துவிடுவான். சுவற்றில் இருக்கும் சுண்ணாம்பு விரலில் ஒட்ட, கண்ணை மூடினாலும் சத்தம் கேட்க, நம் போலீஸிற்கே தெரியாத டார்ச்சர் மெத்தட் அது!

அதற்குக் கொஞ்சமும் சளைக்காத இன்னொரு மெத்தட், கௌதமியை ஜோடியாகப் போட்டு ரொமான்ஸ் செய்வது. கூடவே குளோசப் ஷாட்ஸ் வேறு. பெட்டில் இருவரும் ரொமான்ஸ் செய்யும் சீனைக் கண்டால் காளியே கதறிவிடுவான்...என்ன கொடுமை சார் இது!

நான் முன்பே கேட்ட அதே லாஜிக் பிரச்சினை படத்தில் இருக்கிறது. வில்லன் ‘மகளை விட்டுடறேன். அதுக்குப் பதிலா நீ வா’ என்று கௌதமியைக் கூப்பிடுகிறான். அப்படியென்றால், அவன் எப்பேர்ப்பட்ட காமக்கொடூரனாக இருக்க வேண்டும்? பின்னே, அவனை ஜோலியை முடிக்காம என்ன செய்யச் சொல்லுதீக!

தியேட்டருக்கு வரவே ஜனங்கள் அஞ்சுகிற சூழ்நிலையில், கௌதமி போன்ற டெரர் எஃபக்ட் தேவையா என்று யோசித்துக்கொள்ளவும்!

சொந்த பந்தங்கள்:

கெட்டபோலீஸாக கலாபாவன் மணி மிரட்டி எடுக்கிறார். நல்ல போலீஸாக இளவரசு. கமலை நல்லவரா, கெட்டவரா என கணிக்க முடியாமல் தவிக்கு எஸ்.ஐ.யாக அருள் தாஸ் அருமையான, அளவான நடிப்பு. டீக்கடைக்காரராக எம்.எஸ்.பாஸ்கர், மாமனாராக டெல்லி கணேஷ் என கமலின் பக்கவாத்தியங்கள் சரியாக அணிவகுத்திருகின்றன. எல்லோருமே நல்ல தேர்வு.

பாசிடிவ் பாயிண்ட்ஸ்:

- ஒரிஜினலைக் கெடுக்காமல் அதே சீன்களை, அப்படியே சுட்டிருப்பது
- ஒரிஜினல் டைரக்டரையே பிடித்துப் போட்டது
- பக்கா திரைக்கதை
- பச்சைப் பசேல் என்று இருக்கும் பாபநாசம் ஏரியா
- நெல்லைத் தமிழும், வசனங்களும்
- பெரிய ப்ளஸ் பாயிண்ட், போலீஸ் ஐ.ஜியாக வரும் ஆஷா சரத். த்ரிஷ்யத்திலேயே மிரட்டி இருப்பார். இதிலும்..கமலைவிட அவர் பெர்ஃபார்மன்ஸ் சூப்பர்.
- பரபரக்கும் இரண்டாம்பாதி
- கிளைமாக்ஸ்..பிணத்தை ஒளித்துவைத்திருக்கும் இடம் தெரியவரும்போது, தியேட்டரில் கிளாப்ஸ்.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
- கௌதமி..அவருக்கு சரண்யா பொன்வண்ணனின் பிண்ணனிக்குரல் வேறு!
- இண்டர்வெல் ஒன்றரை மணிநேரம் ஓடுவது.
- காரை ஒளி(ழி)க்க கிளம்பும் கமல், ‘வெளில பூட்டிட்டுப் போறேன்’ என்று கிளம்புகிறார். திரும்பிவரும்போது கதவைத் தட்டுகிறார், கௌதமி தான் திறந்துவிடுகிறார். கவனிக்கலையோ?
- தேதி குழப்பம் மற்றவர்களுக்கு இருக்கலாம். ஆனால் வசூல் செய்யும் பையனுக்கு தேதி ஒரு முக்கியமான விஷயம். அவனை ஏமாற்றுவது நம்பும்படி இல்லை. இது ஒரிஜினலிலும் இருந்த பிரச்சினை.


பார்க்கலாமா?

தாரளமாகப் பார்க்கலாம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:


  1. // கௌதமி..அவருக்கு சரண்யா பொன்வண்ணனின் பிண்ணனிக்குரல் வேறு!// ஹா.ஹா.. இதற்கு சரண்யாவையே நடிக்க வைத்திருக்கலாம்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.