Thursday, July 9, 2015

திரைக்கதை சூத்திரங்கள் – II – பகுதி 49


ஜெனர் – திகில் படங்கள் (Horror)

ராமசாமி வயற்காட்டில் வேலை முடித்துவிட்டுக் கிளம்பினார்.

"ராமூ" என்றது ஒரு குரல்.

அது அவரது அம்மாவின் குரல்.

ராமசாமி பயந்துபோய் திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்தார். ஏனென்றால், அவரது அம்மா இறந்து நான்கு நாட்கள் தான் ஆகியிருந்தன!

 "ராமூ" என்று வந்த அடுத்த அழைப்பில் எடுத்தார் ஓட்டம். ஊருக்குள் வந்து தான் நின்றார். இருந்தாலும் ஒரு சந்தேகம். சும்மா மனப்பிராந்தியோ என்று.

வீட்டிற்குள் நுழைந்தபடி, தங்கையிடம் 'யாத்தா..கொஞ்சம் தண்ணி கொடு' என்றார்.

நடுவீட்டில் தலைவிரி கோலமாய் உட்கார்ந்திருந்த தங்கை, 'ஏன்டா, நான் கூப்பிட்டேன். திரும்பிக்கூடப் பார்க்காம வந்துட்டே?' என்று அம்மா குரலில் பேச ஆரம்பித்தாள்.........

 திகில் (Horror) என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு, இதை நான் சொல்வது வழக்கம். ஏனென்றால், அது கதையல்ல. என் மாமா ஒருவருக்கு நடந்த சம்பவம்!!

 பொதுவாக 'அந்த ஊருல அப்படி நடந்துச்சுப்பா..அங்கே காட்டுல முனி இருக்குப்பா' போன்ற கதைகளை எல்லோருமே கேட்டிருப்போம். நேரடி அனுபவம் என்பது வெகு அபூர்வம். எனவே 'இருக்கு ஆனா இல்லே ' என்பது தான் பலரின் பேய் பற்றிய கருத்து. ஆனால் அந்த சம்பவத்திற்குப் பின், என் கருத்து அது அல்ல!


தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருமே இம்மாதிரி பேய்க்கதைகளை(?) கேட்டிருப்போம் அல்லது நேரடியாக உணர்ந்திருப்போம். எனவே தமிழ்நாட்டில் உள்ள பேய்க்கதைகளின் எண்ணிக்கை கோடிகளைத் தாண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி இருந்தும், தமிழில் வந்த நல்ல பேய்ப்படங்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே. இதற்கு முக்கியக் காரணம், சுயமரியாதை இயக்கம்.

 புராணப் படங்களில் இருந்து நம்மை மீட்க, சமூகப் படங்களை சுயமரியாதை இயக்க படைப்பாளிகள் எடுக்க ஆரம்பித்தார்கள். பராசக்தி படம், தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூகப்படங்களுக்கு ஒரு புரட்சிகரத் தொடக்கமாக அது அமைந்தது. பகுத்தறிவுப் படங்களுடன் போராட, பக்திப்படங்கள் வந்தன. ‘புராணம் Vs பகுத்தறிவு Vs பக்தி’ எனும் போராட்டத்தில் பலவருடங்களாக திகில் /பேய்ப் படங்களுக்கு இடமில்லாமல் போனது.

ஜகன்மோகினி (1978-telugu) போன்ற மெலிதான பேய்ப்படங்கள் வர ஆரம்பித்தன. அவையும் புராணம், பக்திப் படங்களின் தொடர்ச்சியாகவே இருந்தன. அதாவது, என்ன தான் பேய்ப்படமாக ஆரம்பித்தாலும் பக்தியும் பேய் விரட்டும் மந்திரவாதிகளும் பேய்ப்படங்களில் பெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தனர்.

 இன்றைய 'அரண்மனை'யின் ஒரிஜினலான ஆயிரம் ஜென்மங்கள்(1978) தான் தமிழில் வந்து, வெற்றிபெற்ற முதல் பேய்ப்படம். அடுத்து, கமல் கல்யாணராமனாக (1979) வந்து வெற்றிபெற்றார். ஆனால் அது ஒரு முழுமையான பேய்ப்படம் அல்ல. இன்றைய காஞ்சனா ஸ்டைல் படம்.

 அதற்குப் பின் வெளியான 'யார்? (1985) படம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அதே ஆண்டில் மனோபாலா இயக்கத்தில் வந்த பிள்ளை நிலா, ஒரு கலக்கு கலக்கியது. அடுத்துவந்த 'மை டியர் லிசா (1987)வும் பேய்ப்படங்களில் முக்கியமான படமாக ஆனது. இப்போது போன்றே, அப்போதும் 13ஆம் நம்பர் வீடு(1990), அந்தி வரு ம்நேரம்(1990), ராசாத்தி வரும்நாள் (1991), வா அருகில் வா(1991) என ஏராளமான பேய்ப்படங்கள் வெளிவர ஆரம்பித்தன. அடுத்து வந்தது, உருவம்(1991).

அதில் முக்கியமான படம், உருவம்(1991). மோகன், தனது கதல் நாயகன் இமேஜை விட்டு, ஹாரர் நாயகனாக நடித்த படம். படம் படுதோல்வியைச் சந்தித்தது. அத்துடன் அவரது கரியரும் முடிந்துபோனது. ஆனால் இன்று, உருவம் ஒரு கிளாசிக்கல் ஹாரர் படமாக பாராட்டப்படுகின்றது. (உருவத்தில் தோல்விக்கு  காரணங்கள்... அப்போது பேய்ப்படங்களின் மீது சலிப்பு வரத்தோன்றியிருந்தது, மோகனின் இமேஜ் படத்துடன் செட் ஆகாதது மற்றும் மோகனின் செல்வாக்கு முற்றிலும் சரிந்து, ராமராஜனாக அப்போது அவர் ஆகியிருந்தது!)

அத்துடன் பேய்ப்படங்களின் ட்ரென்ட், ஒரு முடிவுக்கு வந்தது. கிளிப்பேச்சு கேட்கவா (1993) போன்ற நல்ல ரொமான்டிக் ஹாரர் படம் வந்தாலும், பேய்க்கு வாழ்க்கை கிடைக்கவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஷாக்(2004) எனும் ஹிந்தி ரீமேக் படம் கொஞ்சம் கவனிக்க வைத்தது. 
 
ஆயிரம் ஜென்மங்களில் பேய்க்கு வாழ்க்கை கொடுத்த ரஜினி, மீண்டும் 2005ல் சந்திரமுகி எனும் சூப்பர்ஹிட் படத்தைக் கொடுத்து பேய்களின் வாழ்வில் ஒளியேற்றினார். பேய்க்குள்ளும் நல்ல மசாலா ஒளிந்திருப்பதை ரஜினியின் சிஷ்யன் லாரன்ஸ் ராகவேந்திரா கண்டுகொண்டார். சந்திரமுகியின் காமெடிப் போர்சனுக்கு கிடைத்த வரவேற்பை வைத்து, அதையே டெவலப் செய்து முனி(2007) யை இறக்கினார். தமிழில் 'காமெடி-ஹாரர்' எனும் ஜெனர் பிறந்தது.

அடுத்து வந்ததது, யாவரும் நலம் (2009). ஃபிலிம் நுஆர், நியோ-நுஆர் ஆனது போல் இந்தப் படம் பேய்ப்படங்களை நியோ-பேய்ப்படங்களாக ஆக்கியது எனலாம். இன்றைய டெக்னாலஜி வளர்ச்சியை மிஅக்ச்சரியாக, அளவுடன் உபயோகித்து அட்டகாசமான ஹாரர் படமாக வந்தது யாவரும் நலம். தொடர்ந்து அதே வழியில் வந்த படம், ஈரம்(2009).

ஒருவழியாக தமிழில் நல்ல பேய்ப்படங்கள் வர ஆரம்பித்துவிட்டன என்று நாம் சந்தோசப்பட்டபோது, லாரன்ஸ் முனி-2 (காஞ்சனா-2011) எனும் மசாலாப் பேயை இறக்கினார். அதன்பின் நடந்த கொடுமை எல்லாம் நீங்கள் அறிந்ததே! வடிவேலுவின் இடத்தைப் பேய்கள் பிடித்துக்கொண்டன. இருப்பினும் சமீபத்திய நல்வரவு, டிமான்ட்டி காலனி.


ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, நல்ல படங்கள் என பத்துக்கும் குறைவான திகில் படங்களே தேறுகின்றன.

1.யார்?
2.பிள்ளை நிலா
3. மை டியர் லிசா
4. உருவம்
5. யாவரும் நலம்
6. ஈரம்
7. டிமான்ட்டி காலனி

கலப்பினப் படங்களில்  கிளிப்பேச்சு கேட்கவா, சந்திரமுகி, காஞ்சனா & யாமிருக்க பயமே ஆகியவை குறிப்பிடத்தக்க படங்கள்.

திகில் படங்களின் இன்னொரு பிரிவான சைக்காலஜிக்கல் த்ரில்லரில் சிகப்பு ரோஜாக்களும் மூடுபனியும் மட்டுமே நினைவிற்கு வருகின்றன. ஏனோ இந்த ஜெனரில் அதிகப் படங்கள் வர ஆரம்பிக்கவில்லை.

தொடர்ச்சி இங்கே:
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

  1. எனக்கும் ஹாரர்-காமெடி சுத்தமாக பிடிக்கவில்லை. ஹாரரின் தாக்கத்தை காமெடி கெடுத்து விடுகிறது. ஒரு பேய் படம் மொக்கையாக எடுத்து ஓடிவிட்டால், அதையே எல்லாரும் அதை ஃபாலோ பண்ணுவது தானே தமிழ் சினிமாவின் இயல்பு !

    லிஸ்டில் உள்ள எல்லா பேய் படங்களும் எனக்கு ஃபேவரைட். சமீபத்தில் வந்த பேய் படங்களில் யாவரும் நலம், பீட்சா, டிமாண்டி காலனி...
    அது சரி.. ஏன் ஜமீன் கோட்டையை விட்டு விட்டர்கள்???

    ReplyDelete
  2. ஜமீன் கோட்டை நான் பார்த்ததில்லை.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.