Saturday, December 29, 2018

2018 - எதிர்பார்த்து ஏமாந்த படங்கள்


முன்பே சொன்னது போல், நல்ல படம் என்று தெரிந்தால் தான் தியேட்டர் பக்கம் போனேன். ஆனாலும் சில கலைஞர்கள் மேல் இருக்கும் அபிமானத்தினால் போய், இவையெல்லாம் திருப்தி இல்லாமல் திரும்பிய படங்கள் .

இந்த வருடம் வேறு எங்கும் நான் பெரிதாக சிக்கிக்கொள்ளவில்லை என்பதே பெரும் ஆறுதல். 2019-ல் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

1. கலகலப்பு-2 :
காமெடி என்பது கஷ்டமான விஷயம் மட்டுமல்ல, ஒவ்வொரு காலத்திலும் மாறிக்கொண்டே இருப்பது. பெரும்பாலான ப்ளாக்& ஒயிட் காமெடிகளை இன்று பார்க்கச் சகிக்காது. இப்படி மாறிக்கொண்டே இருக்கும் ஒரு விஷயத்தில் இருபது வருடங்களுக்கு மேலாக சக்ஸஸ்ஃபுல் இயக்குநராக நிலைத்திருப்பது சாதாரண விஷயமல்ல.

1995-ல் இருந்த நடிகர்கள், காமெடியன், இசையமைப்பாளர் எல்லாம் ஒதுங்கிவிட்டார்கள். ஆனால் சுந்தர்.சி இன்னும் நின்று விளையாடிக்கொண்டிருக்கிறார்.

சுந்தர்.சி கரியரில் கலகலப்பு ஒரு முக்கியமான படம். பல காட்சிகளை இன்றும் பார்த்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது. பார்ட்-2ஐ கலர் கலராக பிரம்மாண்டமாக படத்தை எடுத்திருந்தும், கலகலப்பு-1ல் இருந்த எளிமையும் காமெடியும் மிஸ் ஆகி, நம்மை ரொம்பவே சோதித்தது. அஞ்சலி, ஓவியா இடத்தில் இந்தப் பட ஹீரோயின்ஸை பார்க்கவே சகிக்கவில்லை. மிர்ச்சி சிவாவும் யோகிபாபுவும் மட்டும் கொஞ்சம் காப்பாற்றினார்கள்.

இந்த வருடத்தில் முதல் ‘பார்ட்-2’ படமாக கலகலப்பு-2 வந்தது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடாக, அதன்பிறகு வந்த எந்தவொரு பார்ட்-2 படத்தையும் பார்க்கவில்லை! (2.0 தவிர்த்து!)

2. காலா / 2.0 :

எந்திரன் இரண்டாம்பாகமாக வந்த 2.0 படத்திற்கு, இந்த வருடத்திற்கான மோசமான திரைக்கதை விருதைக் கொடுக்கலாம். டபுள் ஹீரோ சப்ஜெக்ட் & நியாயம் அக்‌ஷய்குமார் பக்கம் என்று ஆனபின்பு, இறுதியில் சமாதானமாகாமல், பிரம்மாண்டத்திற்காக பெரும் பொருட்செலவில் ஒரு நல்ல மனிதனை அழித்தது போல் ஆகிவிட்டது. ஐ படத்தை அடுத்து ஷங்கருக்கு திரைக்கதையில் இது இன்னொரு பெரும் சறுக்கல்.

நல்லவேளையாக 3டி டெக்னாலஜி படத்தைக் காப்பாற்றியது. ஒரு பேய்ப்படத்தை பாசிடிவ் ஆரா, நெகடிவ் ஆரா என்று உட்டாலக்கடி அடித்துச் சொல்ல முயன்றிருந்தார்கள். ஆனாலும் யுகேஜி படிக்கும் என் பையனைக்கூட அவர்களால் ஏமாற்ற முடியவில்லை. படம் பார்த்தபின் அவன் எனக்குச் சொன்ன கதை இது :

‘ஒருத்தன்..சைண்டிஸ்ட்..ரோபால்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கான். ஒரு பேய் அவன் உடம்புல பூந்துடுது. ரோபோவை எல்லாம் பிய்ச்சுப் போட்டுட்டுது. பெறகு, சிட்டி 2.0 வும் 3.0ம் வந்து பேயை கொன்னுட்டாங்க.”. - அவ்வளவு தான் இதுக்கு அத்தனை ஃபர்னிச்சரை உடைச்சு, யூடர்ன்லாம் போட்டு....!

அப்புறம் காலா...ராஜ்கிரண் நடிக்க வேண்டிய படம். ‘இதுவரைக்கும் நீ உடைச்சதெல்லாம் பத்தாதா?’ என்று சக ரஜினி ரசிகர்களின் மைண்ட் கதறல் கேட்பதால்...வுடு ஜூட்!

3.இமைக்கா நொடிகள் :
ஒரு நல்ல கதையை ஸ்டார் ஆர்ட்டிஸ்ட்டிற்காக, பிடித்துத் திருக்கி சிக்கலாக்கிச் சொதப்புவது எப்படி என்பதற்கு இந்தப் படம் உதாரணம்.
அண்ணன் - தம்பி. அண்ணன் ஒரு சிபிஐ ஆபீசர்..தம்பி மெடிக்கல் ஸ்டூடண்ட் என்று ஆரம்பித்த படத்தை, நயந்தராவை உள்ளே கொண்டுவந்து, அவருக்காக கதையிலும் கைவைத்து, அவரை ‘உண்மையான’ ருத்ரா ஆக்கி, முறுக்கிக்கொண்ட அதர்வாவை சமாதானப்படுத்த காதல் போர்சன் & கடைசி அரைமணிநேர சைக்கிள் சாகசங்களை வைத்து, ஒரு நல்ல படத்தை மோசமாக பிரசண்ட் செய்திருந்தார்கள்.

ட்விஸ்ட் வைக்கிறேன் பேர்வழி என்று ஒட்டுமொத்த ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து, அதை கிரகிக்க போதிய இடைவெளியும் நமக்குக் கொடுக்காமல் சிக்கலாக கதை சொல்லியிருந்தார்கள்.

சீரியல் கில்லர் ‘ராட்சசன்’-க்கு கிடைத்த வரவேற்பைp பெற வாய்ப்பிருந்தும் மிஸ் செய்துவிட்டார்கள். எனவே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்க வேண்டிய படம், ஹிட் மூவியாக முடிந்து போனது. ஆனாலும் கதை, நயந்தாரா & அனுராக் காஷ்யப்பின் நடிப்பு, பிண்ணனி இசை ஆகியவை குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டிய விஷயங்கள்.

4.செக்கச் சிவந்தவானம் :

’படம் நல்லா இருக்குப்பா..மணிரத்னம் படம் மாதிரியே இல்லை..சூப்பர்’ என்பது தான் படத்திற்குக் கிடைத்த பாராட்டு. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த மணிரத்தினத்தின் கம்பேக் மூவி. ஆனாலும் அவர் இப்படி கம்பேக் ஆகியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. அவரது மோசமான படங்களில்கூட ‘மணிரத்தினத்தின் டச்’ என்பது இருக்கும். அது மிஸ் ஆனதால், மணி ஃபேனாக ஏமாற்றம்!

5. ஜூங்கா / ஒ.ந.நா.பா.சொல்றேன் / சீதக்காதி :

சில முன்னணி ஹீரோக்களை கவிழ்க்க, எதிர்குரூப் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆனால்விஜய் சேதுபதி விஷயத்தில் அந்த கஷ்டமே வேண்டாம்.

‘கஷ்டப்பட்டப்போ ஃப்ரீயா டீ கொடுத்த டீ மாஸ்டர், சீனு வீட்டுக்கு வழி சொன்னவர், நட்புக்காக’ என்று அவர் செய்கிற சில படங்களே அவருக்கு வினையாக முடியும். அவரது நல்ல மனதை மிஸ் யூஸ் செய்கிறார்களே என்ற வருத்தம் தான் இத்தகைய படங்களைப் பார்க்கும்போது தோணும். விசே மேல் இருக்கும் அன்பினால், ரம்மி காலத்தில் இருந்து நமக்கு இதே பாடு தான். இந்த வருட கோட்டாவிற்கு, இந்த மூன்று படங்கள்.

முதல் இரண்டு படங்கள் தோற்றதில் பிரச்சினையில்லை. சீதக்காதி ஜெயித்திருக்க வேண்டிய படம். இரண்டு மணி நேரத்தில் கதை சொல்லியிருந்தால் படம் தப்பித்திருக்கும். ஜவ்வாக இழுத்துக் கெடுத்துவிட்டார்கள். ஹிட் மூவியான செ.சி.வானம் & இந்த வருட மெகா ஹிட் 96 என்று இனிமையாக முடிந்திருக்க வேண்டிய வருஷம்......!

6. சீமராஜா :

’விஜய் மார்க்கெட்டைப் பிடித்துவிட்டார். அடுத்த இ.தளபதி இவர் தான்’ என்று சிவகார்த்திகேயனுக்கு வெற்று பில்டப் கொடுப்பதற்காகவே எடுக்கப்பட்ட படம். ஓப்பனிங் சீன் & சாங்கில் ஆரம்பித்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெறுப்பேற்றி அனுப்பி வைத்தார்கள்.

தேவையே இல்லாத ராஜா ஃப்ளாஷ்பேக், சிரிப்பே வராத சூரியின் காமெடி, மச்சக்கன்னி தவிர தேறாத இமானின் இசை என்று ஒரு படம் தோற்பதற்கான அத்தனை அம்சங்களும் இருந்தன. சுறா, அஞ்சான், விவேகம் வரிசையில் சிவாவிற்கு சீமராஜா.

7. போனஸ் :

இந்த வருடம் எச்சரிக்கையாகவே தியேட்டரை அணுகியதால், சர்க்கார் பார்க்கவில்லை. படம் ரிலீஸ் ஆகும் முன்பே, பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்த படம் சர்க்கார்.

’ரிசர்வேசனால் தான் இந்தியா முன்னேறலை’என்று வசனம் வைக்கும் ‘சொந்தக்கதை மன்னன்’ முருகதாஸ், இயக்குநர். ’திராவிட இயக்க வரலாற்றை கலைஞர் இல்லாமலேயே எழுதிவிட முடியும். மக்கள்நலத் திட்டங்கள் எதுவும் கலைஞர் கொண்டு வந்ததில்லை’ என்று எழுதி வரும் ஜெயமோகனின் பங்களிப்பு, ரஜினி ஸ்டைலில் போலி அரசியல் செய்யும் ஹீரோ விஜய், ‘ஏடிஎம்கே காரங்க ஏன் டென்சன் ஆகுறாங்க? வில்லன் கேரக்டர் கலைஞரைத் தானே குறிப்பிடுது’என்று விளக்கம் சொன்ன வில்லன் நடிகர் பழ.கருப்பையா, அதைக் கேட்டு புளகாகிதம் அடைந்த அதே கலைஞரின் பேரப்பிள்ளைகளான சன் பிக்சர்ஸ், கூடவே கதைத் திருட்டு - இப்படி ஒரு காம்போ.

இவர்கள் சேர்ந்து நமக்கு அரசியல் பாடம் எடுத்தால், அது எவ்வளவு கண்றாவியாக இருக்கும் என்பதை தியேட்டருக்குப் போய்த்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. எனவே சர்க்காரைப் புறக்கணித்தேன்.

இப்போதும் ஜெயமோகன் என் விருப்பத்திற்குரிய இலக்கியவாதி. ஆனாலும் ஒரு இலக்கியவாதி எல்லா விஷயத்திலும் அறிவுடனும் நேர்மையுடனும் இருக்க வேண்டியதில்லை என்பதை இந்த வருடம் அவர் நிரூபித்தார். பெர்சனலாக எனக்கு அதில் பெரும் வருத்தம். ‘எனது இயல்புக்கு ஒத்துவரும் படங்களிலேயே பணி செய்கிறேன்’ என்று சினிமாவில் வேலை செய்ய ஆரம்பித்தவர், ஸ்டார் ஹோட்டல் சுகவாசத்திற்கு சோரம் போனது பெரும் சோகம்.

கதைத் திருட்டு என்பது காலம் காலமாக தமிழ் சினிமாவில் நடைபெறும் விஷயம் தான். ஒரு உதவி இயக்குநரின் தோள்தடவி, ‘என்னப்பா கதை வச்சிருக்கிறே?’ என்று கேட்டு, அதைத் தானே எடுத்த பெரிய ஆட்கள் இங்கே உண்டு. அதை வேறு யாரிடமாவது சொல்லி எடுக்க வைப்பவர்களும் இங்கே உண்டு.

ஏற்கனவே வறுமையில் உழலும் உதவி இயக்குநர்களால் ஒன்றுமே செய்யமுடிந்ததில்லை. இந்த சூழலில் தான் பாக்கியராஜ் அவர்களின் நிலைப்பாடு, பெரும் ஆதரவைப் பெற்றது. அதற்குக் கிடைத்த ஆதரவும் முருகதாஸிற்கு விழுந்த தர்ம அடியும், பல்லாண்டுக் கோபத்தின் வெளிப்பாடு.
ஆனால் அறத்தின் அத்தாரிட்டியான ஜெயமோகனால், ஒரு இடத்தில்கூட இதைக் குறிப்பிடமுடியவில்லை. ’ஜெயிக்க முடியாத கோழைகளின் கூப்பாடு, என் வெற்றியைப் பார்த்து வயித்தெரிச்சல்’ என்றெல்லாம் அருவருப்பாக எழுதிக்கொண்டே போனார்.

நமது சட்டப்படி கதைக்கருவிற்கு காப்பிரைட் கிடையாது.அதனால் தான் இந்த அயோக்கியர்கள் தைரியமாகத் திருடுகிறார்கள். ஜெயமோகன் அதையே ஒரு நியாயமாக வைத்து ‘கதைக்கருவிற்கு காப்பிரைட் கிடையாதே, அப்புறம் ஏன் கூப்பாடு?’ என்று எகத்தாளமாகக் கேட்கும் அளவிற்கு தரமிறங்கினார்.
இந்த வருடத்தின் மோசமான அறவீழ்ச்சி விருதினை ஜெயமோகனுக்குக் கொடுக்கலாம்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.