Friday, September 11, 2015

யட்சன் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..:

ஆரம்பம் படத்திற்குப் பிறகு விஷ்ணுவர்த்தனனின் இயக்கம் + தயாரிப்பில், ஆர்யா-கிருஷ்ணா நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் யட்சன். ஆனந்த விகடனில் சுபா எழுதிய தொடர்கதைக்கு திரைவடிவம் கொடுத்திருக்கிறார்கள். நாவலை படமாக்குவது என்பது தமிழில் ரிஸ்க்கான விஷயம். இங்கே என்ன ஆனதென்று பார்ப்போம்.


ஒரு ஊர்ல :
நடிகன்  ஆக வேண்டும் என்ற ஆசையுடன் சென்னை வரும் கிருஷ்ணா, ஹீரோவாகும் முயற்சியில் இறங்குகிறார். தூத்துக்குடியில் ஒரு கொலை செய்துவிட்டு சென்னை வரும் ஆர்யா, இன்னொரு கொலை செய்யும் வேலையில் இறங்குகிறார். ஆனால் விதி ஆர்யாவை ஹீரோவாகவும்,  கிருஷ்ணாவை கொலை காரணாகவும் ஆக்குகிறது. ஏன், எதற்கு, எப்படி என்பதே கதை!

உரிச்சா:
ஹீரோயினுக்கு ஒரு ஸ்பெஷல் பவர் இருக்கிறது. யார் கையையாவது அவர் தொட்டால், அவர்களுக்கு வரப்போகும் ஆபத்து அவருக்கு தெரிந்துவிடும். இதற்கான ஓப்பனிங் சீனுடன் படம் தடால் என ஆரம்பிக்கிறது. மிகவும் சீரியஸான படம் போல் ஆரம்பித்தாலும், தூத்துக்குடியில் ஆர்யாவும் பழனியில் கிருஷ்ணாவும் அறிமுகம் ஆனதும் படம் ஜாலி மூடுக்கு வந்துவிடுகிறது.

இருவரும் சென்னை வருவதற்கான சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. நாவல் போன்றே ஒரு சீன் ஆர்யா, ஒரு சீன் கிருஷ்ணா என இருவரது லைஃபும் சொல்லப்படுகின்றன. இருவரும் சென்னை வரும்வரை கொஞ்சம் ஸ்லோவாக போகும் படம், அதன்பின் விறிவிறுப்பாகச் செல்கிறது. கிருஷ்ணா நடிகர் ஆக எடுக்கும் முயற்சிகளை விட, ஆர்யா மலேசியா தப்பிச் செல்ல முயல்வதும் ஹீரோயினைக் கொல்ல திட்டமிடுவதும் சுவார்ஸ்யமாக இருக்கிறது.

ஹீரோயினுக்கு இருக்கும் பவர், வில்லனுக்கு தொல்லை ஆகிவிட்டதால், ஆர்யா மூலம் ஹீரோயினைக் கொல்ல திட்டமிடுகிறார். அதற்கு மீடியேட்டராக தம்பி ராமையா. ஹீரோயினின் ஒருதலைக் காதலனாக பாலாஜி என கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சீரியஸான ஆக்சன் படம் ஆவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தும், காமெடி ஆக்சன் படமாக கொடுத்திருக்கிறார்கள்.

ஆர்யாவை ஹீரோவாக்கும் டைரக்டராக எஸ்.ஜே.சூர்யா, காமெடி டான் ஆக பொன் வண்ணன் என வருகின்ற கேரக்டர்கள் எல்லாம் சிரிக்க வைக்கின்றன. அதிலும் ஏன் வாத்தியார் ஒருவரை பொன்வண்ணன் ஆட்கள் கடத்துகிறார்கள் என்பது அல்டிமேட் காமெடி. இடைவேளையின்போது ஆள் மாறாட்டம் நடந்துவிட, அதன்பிறகு வரும் காட்சிகள் ஜாலியாக நகர்கின்றன. கிருஷ்ணாவை விட ஆர்யா, ‘அறிந்தும் அறியாமலும்’ ஸ்டைலில்  கலக்கியிருக்கிறார்.

வில்லன் யாரை வேண்டுமானும் கொல்வது, போலீஸ் சுதந்திரமாக வில்லனுக்கு உதவுவது, அரசியலுக்கு வர க்ளீன் இமேஜ் வேண்டும் என்று வில்லன் போராடுவது, ஆர்யா நடிக்க வந்தும் தூத்துக்குடி போலீஸ் அவரை விட்டுவைப்பது என லாஜிக் பல இடங்களில் உதைத்தாலும், ‘இது சீரியஸ் மூவி இல்லை பாஸ்’ எனும் டிஸ்கி காட்சிக்கு காட்சி தெரிவதால், படம் தப்பிக்கிறது.

ஆர்யா:
அதே அலட்டல் இல்லாத நடிப்பு...அல்லது நடிப்பே இல்லாத நடிப்பு என்றும் சொல்லலாம். கேஷுவலாக செய்திருக்கிறார். பொன்.வண்ணன் குரூப் மத்தியில் ஹீரோயினுக்கு புரபோஸ் பண்ணுவது, தம்பி ராமையாவை டீல் பண்ணுவது போன்ற சீன்களில் கலக்கியிருக்கிறார். ஏனோ லவ் சீன்ஸில் தான் எமோசன்ஸ் குறைவாக இருக்கிறது.

கிருஷ்ணா:
ஓவர் ஆக்டிங்கிற்குப் புகழ் பெற்ற கிருஷ்ணா, இதில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். ஆனாலும் அந்த நடிப்பு தான் இன்னும் கைவரமாட்டேன் என்கிறது. ஆர்யாவுக்கு ஈகுவலான கேரக்டர். ஏறக்குறைய சரிசமமான சீன்கள். இருந்தும், ஆர்யா தான் நம் மனதில் நிற்கிறார்.

தீபா சன்னதி & ஸ்வாதி:
என்னைப் போல் ஒருவனில் அறிமுகமான தீபா தான் மெயின் ஹீரோயின். ஸ்பெஷல் பவர் கொண்டவராக, நர்ஸாக வருகிறார். கதையே இவரை மையமாக வைத்துத்தான் என்பதால், நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டர். நன்றாகவே செய்திருக்கிறார்.

ஸ்வாதி..ஏறக்குறைய பத்து வருடம் முன்பு தாவணியில் வந்த சுப்ரமணியபுரம் ஹிட் ஆகியிருக்கலாம். அதற்காக இப்போதும் தாவணி கட்டி வருவது, ரொம்ப தப்பு மேடம். ‘இன்னுமா கோலம் போட்டுக்கிட்டு இருக்கிறா’ எனும் வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருகிறது!


பாசிடிவ் பாயிண்ட்ஸ்:

- சுவார்ஸ்யமான திரைக்கதை
- ஜாலியாகவே படத்தைக் கொண்டு சென்றிருப்பது
- ஆர்யா
- ஓம் பிரகாஷின் கேமிரா..அதிலும் இருமுறை வரும் கடற்கரை ஷாட், அட்டகாசம்.
- ஹீரோயினின் ஸ்பெஷல் பவருக்குள் டீப்பாக போனால், லாஜிக் கண்டபடி உதைக்கும் என்பதால் அதையும் கேஷுவலாகவே டீல் பண்ணியிருப்பது
- அந்த டபுள் வில்லன் ட்விஸ்ட்..செம!
- தம்பி ராமையா, பாலாஜி, அழகம்பெருமாள் என எல்லோருமே கலகலப்பை தக்க வைப்பது.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
- பாடல்கள்..யுவன் + விஷ்ணுவர்த்தன் என்றால் பாடல்கள் எப்படி இருக்கும்! இப்போது...ஹூம்!
- எல்லோருமே கொலையை சாதா தோசை ரேஞ்சுக்கு டீல் பண்ணும் லாஜிக்
- வில்லனாக நடித்திருப்பவருக்கு கேரக்டருக்கு ஏற்ற கெத்து இல்லை. நம் ஆள் யாரோ தான் டப்பிங் கொடுத்திருக்கிறார்கள். அந்த வாய்ஸ் மட்டும் கலக்கல்.


பார்க்கலாமா?


டைம் பாஸ் மூவி...பார்க்கலாம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.