Tuesday, January 29, 2013

புது மாப்பிள்ளைக்கும்....புதுப் பெண்ணிற்கும்!


நான் டெல்லியில் வேலை செய்தபோது, எனது நண்பனுக்கு திருமணம் ஆனது. அப்போது எங்கள் கம்பெனி ஒருவேளை மூடப்படலாம் என்ற சூழ்நிலை இருந்ததால், திருமணத்திற்குச் செல்லும்போது அவன் வீடு எதுவும் பார்த்து வைத்துச் செல்லவில்லை. எனவே திருமணம் முடிந்து அவன் மட்டும் திரும்பி வந்ததும், வீடு பார்க்க ஆரம்பித்தோம். தமிழர்கள் வாழும் பகுதி+நல்ல வீடு என்று அமைவது குதிரைக்கொம்பாகவே இருந்தது.



’பையனும் சென்னை. பெண்ணும் சென்னை’ என்பதால் பெண் அந்த நேரத்தில் தன் பிறந்த் வீட்டிற்குச் சென்றுவிட்டார். ’டெல்லி சென்ற பின் எப்போது பெற்றோரைப் பார்ப்போமோ..பல வருடம் உடன் இருந்தோரைப் பிரியப் போவதால், கிடைக்கிற கொஞ்ச நாளை பெற்றோருடன் கழிப்போம்’என்ற எண்ணத்திலேயே அந்தப் பெண் பிறந்த் வீடு சென்றார். ஆனால் பையனின் சொந்தங்கள் ‘இப்போதே பெண்ணிடம் கண்டிப்பாக இருங்கள். இல்லையென்றால் நாளை அவள் ராஜ்ஜியம் தான்’ என்று பையனின் பெற்றோரிடம் தூபம் போட, ஆரம்பித்தது பிரச்சினை.

‘பையனின் வீட்டில்தான் பெண் இருக்க வேண்டும்’ என்று நண்பனின் பெற்றோர் சொல்ல ஆரம்பித்தார்கள். துரதிர்ஷ்டவசமாக, அந்தப் பெண்ணின் அம்மா கடுமையான பேர்வழியாக இருந்தார். அவரது வார்த்தைப் பிரயோகங்களும் கொடூரமாகவே இருந்தது. என் நண்பனும் அந்தப் பெண்ணிடன் ‘நான் வீடு கிடைத்தும் வந்து விடுகிறேன்..எதற்குப் பிரச்சினை..நீ நம் வீட்டிற்கே சென்று இரு’ என்று புத்திமதி சொன்னான். அந்தப் பெண்ணின் தாய் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ‘இப்போது இறங்கிப்போனால், அப்புறம் காலம் முழுக்க நீ அடிமை தான்’ என்று பெண்ணிற்கு புத்திமதி சொன்னார். பெண் மறுக்க, நண்பன் கோபமானான். நாங்கள் ‘வீடு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நீ ஊருக்கு முதலில் போ..நேரில் போனால் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்து விடும்’ என்றோம். ஆனால் அதற்குள் நண்பன், தன் பெற்றோரின் பேச்சை நம்பி ‘அவள் எங்கள் வீட்டிற்கு வந்தால்தான், நான் ஊருக்குப் போவேன்’ என்று பிடிவாதமாக நின்றான்.

எல்லாவற்றிற்கும் முடிவாக, அந்த பெண்ணின் தாய் செய்த காரியம் அமைந்தது. ஆம், வரதட்சணை கேட்டு தன் பெண்ணை வீட்டை விட்டே விரட்டியதாக அவர் போலீஸில் கம்ப்ளெய்ண் கொடுத்தார். அதன்பின் மூன்று வருடங்கள் வழக்கு இழுத்தது. ஜீவனாம்சத் தொகையுடன் சேர்த்து முப்பது லட்சங்கள் செலவழித்துத் தான், பையன் அந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டான். இங்கே இருவீட்டாரின் பிடிவாதமே அந்த திருமண பந்தத்தை முறித்துப்போட்டது.

நமது சமூக அமைப்பில் திருமணம் என்பது இரு மனங்களின் இணைவு மட்டும் அல்ல, இருவேறு குடும்பங்களின்/வம்சங்களின் இணைப்பு ஆகும். இருதரப்புகளும் இணைந்து செயல்படவேண்டிய அவசியம், நமது வாழ்க்கை முறையில் இருக்கிறது. பொதுவாக இரண்டு மனிதர்களிடையே அறிமுகம்/நட்பு ஏற்படும்போது, பலவாறாக அவதானித்தே நாம் அந்த நட்பை ஏற்கிறோம் அல்லது நிராகரிக்கிறோம். அப்படியிருக்கும்போது, இருவகைப்பட்ட குடும்பங்களின் இணைவு என்பது சாதாரண விஷயமே அல்ல.

நம் மக்களைப் பொறுத்தவரை ஆண் என்பவன் ஒருபடி உயர்ந்தவன் எனும் மனநிலையே இருக்கிறது. அதற்கு உடல்பலம் மட்டுமல்லாது ஆணின் பொருளாதார விடுதலையும் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே மாப்பிள்ளை வீட்டார் என்பவர்கள் முறுக்கேறியவர்களாகவும், பெண் வீட்டார் என்போர் இறங்கிச் செல்ல வேண்டியவர்களாகவுமே பெரும்பாலான இடங்களில் இருக்கின்றார்கள். எனது திருமண காலகட்டத்தில் இருவீட்டாரின் மனநிலையை நன்கு கவனித்து வந்திருக்கிறேன்.



ஆண் வீட்டாரின் சிந்தனையானது, பெண் என்பவள் புகுந்த வீட்டில் அடங்கிப் போக வேண்டியவள் என்பதாகவே இருக்கிறது.’திருமணத்தின்போது இறங்கிபோய் விட்டால், பையன் காலம் முழுதும் பெண் வீட்டாரின் பிடியிலேயே சிக்கி விடுவான். இத்தன நாள் வளர்த்தது அதற்காகவா?’ எனும் மனப்பான்மையும் அதற்குக் காரணம்.பெண்ணிற்கு பருவம் வந்த வயது முதல் பல்வேறு பிரச்சினைகள். ஆனால் ஆணுக்கு அத்தனைக்கும் சேர்த்து ஒரே ஒரு பிரச்சினை தான். அது, தாயையும் மனைவியையும் ஒரே நேரத்தில் சரிசமமாக கவனிக்க வேண்டிய பிரச்சினை. ஒத்துப்போகாத மாமியார்-மருமகள் அமைந்துவிட்டால், அந்த ஆணுக்கு வாழ்க்கை நரகம் தான்.

வேலைக்காக சொந்த ஊர்/குடும்பம் விட்டு நகரும் இந்த காலகட்டத்தில், அவர்கள் வெவ்வேறு இடத்தில் இருக்கும்வரை மாமியார்-மருமகள் பிரச்சினை என்பது ஓரளவு சமாளிக்ககூடிய ஒன்றாகவே ஆகியுள்ளது.ஆனாலும் சொந்த-பந்தங்களைச் சாமாளிப்பது தான் மணமகன் - மணமகளுக்கு உள்ள பெரும் சவால். புது மருமகளை (சில இடங்களில் மட்டும், மருமகனை) எடை போட்டுப் பார்த்து, திரியேற்றும் சொந்தங்களே இங்கு அதிகம். இவ்வாறு சொந்த பந்தங்களாலும், குடும்ப கௌரவம் பற்றிய பதட்டத்தாலும் பெற்றோர்கள் தவறு செய்ய விழையும்போது, நிதானமாக இருக்க வேண்டிய பொறுப்பு, மண மகனுக்கும், மண மகளுக்கும் இருக்கிறது. ஏனென்றால்....

வயோதிகத்தால் என் தந்தையார் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாய் கிடந்து, தொடர்ந்து சுய நினைவற்றவராய் இரண்டு மாத வேதனைக்குப்பின் இறைவனடி சேர்ந்தார். அந்த இரண்டு மாதமும் அவரை குளிப்பாட்டி, உணவூட்டி, கழிவகற்றி சகலமும் பார்த்துக்கொண்டது என் தாயார் மட்டுமே. (அப்போது மதுரை கல்லூரியில் படித்துக்கொண்டிருந்ததால், வார விடுமுறைக்கு மட்டுமெ வரும்படி எனக்கு கட்டளை)

என் தந்தையார் அவ்வாறு இருந்தபோது, அவரின் உடன்பிறந்த அண்ணனும், அவரின் குடும்பத்தாரும் அடுத்த வீட்டில் தான் இருந்தார்கள். ஆனாலும் எட்டிப்பார்க்கவில்லை. என் தாயாரின் உடன்பிறப்புகளும் ஒருநாள் சம்பிராயத்திற்கு எட்டிப்பார்த்துவிட்டு, கிளம்பிப்போய் விட்டார்கள். அது அவர்களின் குற்றம் அல்ல, அதுவே யதார்த்தம்.

அந்த யதார்த்தம் நமக்குச் சொல்வது ஒன்று தான். நமது பெற்றோரால் நமது கடைசி காலம் வரை நம்முடன் இணைந்து வர முடியாது. உடன்பிறந்தாரும் நம்முடைய பிரச்சினைக்காக, ஒரு அளவிற்கு மேல் நம்முடன் வர முடியாது. இன்று உட்கார்ந்து உட்கார்ந்து பேசி, மூட்டி விடும் சொந்தங்களும் நம் இழவு நாள் அன்றே தலைகாட்டும்.

நம் நிழல்போல, நம்முடன் தொடர்ந்து பயணிக்கப்போவது நமது கணவன்/மனைவி மட்டுமே. இந்த யதார்த்தம் புரிந்ததால்தான், நம் பெற்றோர் திருமணத்திற்கு வரன் தேடுகையில் அவ்வளவு பதட்டப்படுகின்றனர். நல்ல கையில் தன் பிள்ளையை ஒப்படைக்கவேண்டுமே என்ற கவலை இருதரப்பு பெற்றோருக்குமே இருக்கிறது.

அப்படி பல விஷயங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, திருமணம் முடித்தபின், சகிப்புத்தன்மையின்றி ஈகோ பிரச்சினையால் இந்த பந்தம் முறிவடையாமல் காக்க வேண்டியது அவசியம். அந்த விழிப்புணர்வு, பெற்றோரைவிட மணமக்களுக்கே அதிகம் இருக்க வேண்டும்.

 திருமண நேரத்திலும், திருமண வாழ்வில் முதல் வருடத்திலும் இரு வீட்டாரிடம் ஏற்படும் சலசலப்புகள் வழக்கமானவை, அது பெரியோர் மட்டத்திலேயே முடிக்கப்பட வேண்டியவை என்ற புரிதலுடன் தம்பதிகள், தங்கள் மணவாழ்வைத் தொடங்க வேண்டும். அதுவே கடைசிவரை உங்களைக் காக்கும்.

வாழ்க வளமுடன்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

  1. சூப்பர்ன்னே, இந்த பதிவை நான் ராசு மாமா அவர்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

    ReplyDelete
  2. வணக்கம்,செங்கோவி!அருமையான பகிர்வு.புரிதலுடன் தம்பதிகள் இணைந்து விட்டால்,இரு வீட்டாரும் பொத்திக் கொண்டிருப்பார்கள்.இங்கே படிப்பு முக்கியமல்ல.யதார்த்தம்,அனுபவம் இருத்தல் போதுமானது!

    ReplyDelete
  3. நல்ல பதிவு.போறப்ப என்னத்த கொண்டு போக போறோம் என்பது புரியாமல் தான் பெரிய பிரச்சனை ஆகுது.

    ReplyDelete
  4. மிகவும் அருமையான பகிர்வு... இப்போ பிள்ளைகளின் வாழ்வில் விளையாடும் தாயார்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். நானும் இதுபோல் ஒரு தாயைப் பார்த்துக் கொண்டூதான் இருக்கிறேன்.

    ReplyDelete
  5. Migavum unmaiyana pathivu. en paratukkal.

    ReplyDelete
  6. அந்த பணம் பிடுங்கிய பெண் வீட்டார், பெண்ணின் வாழ்க்கையை நினைக்காமல் போனது தான் வேதனை. சிலர் பணம் பிடுங்கவே கல்யாணம் செய்கிறார்கள். அதாவது அன்றைய முதலிரவில் இருந்தே கலட்ட செய்து விவாகரத்து வரை பொய் பணத்தை பிடுங்கிக் கொண்டு அவர்களுக்கு வேண்டியவர்களுடன் வாழ்தல், இதை நான் நேரில் பார்த்தேன்.


    ReplyDelete
  7. ம்ம் உண்மைதான் அருமையான் க்ருத்துக்கள்!
    இதில் உள்குத்து இல்லையேஏஏஏஏஏஏஏஎ!ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!

    ReplyDelete
  8. ஈஹோ இல்லாமல் . விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருவர் வீட்டிலும் உருவாகவேண்டும்

    ReplyDelete
  9. தனிமரம் said...

    இதில் உள்குத்து இல்லையேஏஏஏஏஏஏஏஎ!ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!/////ஓ..ஓ..ஓ......புதுசு,ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  10. மிகவும் அருமையான பகிர்வு.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. // Yoga.S. said... [Reply]
    தனிமரம் said...

    இதில் உள்குத்து இல்லையேஏஏஏஏஏஏஏஎ!ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!/////ஓ..ஓ..ஓ......புதுசு,ஹ!ஹ!ஹா!!!! //

    ஆமாம்யா..ஆமாம்..நான் புதுசைப் பத்தித் தான் சொல்லியிருக்கேன்..நல்லா கிளம்புறாங்கய்யா.......

    ReplyDelete
  12. எல்லாம் சரி, புது மண தம்பதியர்கள் பிரச்சினை என்று சொல்லிவிட்டு, நல்ல வாழ்திருகின்ற பிரபலங்கள் போட்டோ போட்ட எந்த வகையில் நியாயம்?.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.