Sunday, September 28, 2025
காந்தி முதல் விஜய் வரை...
கரூர் பெருந்துயரம். மக்களின் கதறல்கள் கலங்க வைக்கின்றன. 'இந்தியர்களுக்கு தன்னை ஆளத் தெரியாது. காட்டுமிராண்டிகள்' என்ற சர்ச்சிலின் வாக்கினை இன்னும் நாம் உண்மையாக்குகிறோமோ என்ற ஐயம் எழுகிறது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் எப்போதெல்லாம் வன்முறை வெடிக்கிறதோ, மக்கள் கட்டுப்பாட்டை இழந்து வெறியாட்டம் ஆடுகிறார்களோ, அப்போதெல்லாம் காந்தி சுதந்திரப் போராட்டத்தை நிறுத்தினார். மக்களை ஜனநாயகத்திற்கு பழக்கப்படுத்துவது தான் முதல் கடமை என்று நினைத்தார்.
சர்ச்சில் சொன்னதில் உள்ள உண்மையை காந்தி உணர்ந்திருந்தார். வருடக்கணக்கில் கூட அவர் சுதந்திரப் போராட்டங்கள் ஏதும் செய்யாமல், மக்களை நல்வழிப்படுத்த அலைந்து திரிந்தார். அதனால் 'பிரிட்டாஷாரின் கைக்கூலி' என்று தீவிர எண்ணம் கொண்டோரால் பழிக்கப்பட்டார். அந்த வசைகளை பொருட்படுத்தாமல், ‘முதலில் சுதந்திரம் வாங்கி நாம் பதவியில் அமர்வோம்’ என்று நினைக்காமல் உழைத்ததால் இந்தியா எனும் தேசமும் காங்கிரஸ் எனும் பேரியக்கமும் உருவானது.
காந்தியிடம் இருந்து பெரியார் பிரிந்தார். ஆனால் காந்திய வழிமுறைகளை எடுத்துக்கொண்டார். பதவி பற்றி எண்ணாமல், மக்களுக்கு முதலில் விழிப்புணர்வை ஊட்டினார். வலுவான திராவிடக் கட்டமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தார்.
பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்தார். ஏற்கனவே பெரியாரால் அரசியல்படுத்தப்பட்ட கூட்டம் அண்ணா பின்னால் நின்றது. அண்ணாவுக்குப் பின் அதே கூட்டம் கலைஞர் பின்னால் நின்றது.
பின் எம்.ஜி.ஆர் அதே அரசியல்படுத்தப்பட்ட கூட்டத்தில் ஒரு பகுதியை தன்னுடன் கூட்டிக்கொண்டு, அதிமுக ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர் ஆரம்பித்தது புதுக்கட்சி அல்ல. ஏற்கனவே வலுவான கட்டமைப்பு இருந்த கட்சி தான் இரண்டாகப் பிரிந்தது.
புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் குறைந்தது பத்து வருடங்களாவது கட்சி கட்டமைப்பை வளர்க்கவும், தொண்டர்களை நல்வழிப்படுத்தவும் உழைக்க வேண்டும்.
அல்லது கேப்டனின் வழியை பின்பற்றலாம். கேப்டன் கட்சி ஆரம்பித்தபோது, பண்ரொட்டி ராமச்சந்திரன் போன்ற பிற கட்சி சீனியர்களை தன் கட்சிக்குள் கொண்டுவந்தார். அவரது ரசிகர் மன்றக் கட்டமைப்பும் மூத்தோரின் அனுபவமும் சேர்ந்தபோது, அரசியல்கட்சியாக தேமுதிக உருமாறியது.
அரசியல் என்பது அதிகாரம் மட்டும் அல்ல. தன்னை நம்பும் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடும் விளையாட்டு.
இதைத் தான் விஜய் போன்ற புதுக்கட்சிகளின் தலைவர் முதல் தொண்டர்வரை மனதில் நிறுத்த வேண்டும்.
முதலில் உங்களை தகுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பதவி தேடி வரும்.
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.