Tuesday, December 22, 2015

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்! – மேலும் சில கேள்விகள்/பதில்கள்


கேள்வி: நீங்கள் நாத்திகரா?
பதில்: நிச்சயமாக இல்லை. நான் ஒரு தீவிர மதநம்பிக்கையுள்ள இந்து.

கேள்வி: அப்புறம் ஏன் இதை ஆதரித்துப் பேசுகிறீர்கள்?
பதில்: நீங்க தானே பாஸ் ‘நாத்திகர் ஏன் இதைப் பேசறா? இது ஆத்திகர் பிரச்சினை. ஆத்திகர் பேசட்டும்’னு சொன்னீங்க?

கேள்வி: எல்லா பிராமணரும் அர்ச்சகர் ஆக முடியாது, தெரியுமா? பிராமணரே என்றாலும், குறிப்பிட்ட குலம் கோத்திரத்தில் பிறந்திருக்க வேண்டும் தெரியுமா?

பதில்: அப்படியென்றால், நீங்கள் எங்கள் பக்கம் நிற்க வேண்டும் செண்ட்ராயன்! அந்த ஏற்றத்தாழ்வையும் சட்டம் மூலம் ஒழிக்கலாம், வாருங்கள்!


கேள்வி: அவாளுக்கு வேண்டுமென்றால், பாடி காடி முனீஸ்வரர் போன்று தனியாக கோவில்கட்டி விடலாமே?

பதில்: அதை நீங்கள் சொந்தமாக உழைத்துக் கட்டிய கோவிலில் இருந்தல்லவா சொல்ல வேண்டும்? நீங்கள் உட்கார்ந்திருப்பதே, எங்கள் சொத்து. இதில் ஓனர் மாதிரிப் பேசலாமா?


கேள்வி: ஏதோ சில கோவில்களில் தான் கொஞ்சம் நல்ல வரும்படி வருகிறது. பல கோவில்களில் எங்களாவே கஷ்டப்படறா,தெரியுமோ?

பதில்: அப்படியென்றால், உங்களில் சிலர் மட்டும் உண்டு கொழுத்துக்கொண்டு, மற்றவர்களை பட்டினியில் போட்டிருக்கிறார்கள். இது தவறு என்பதை நாங்களும் ஒத்துக்கொள்கிறோம். எனவே எல்லா அரசு வேலையிலும் இருப்பது போல், இங்கேயும் ட்ரான்ஸ்ஃபர் சிஸ்டம் கொண்டுவரலாமா? அப்பாவியான அந்த பிராமணர்களுக்காக, நீங்கள் அதைத்தானே கேட்டிருக்க வேண்டும்? பரவாயில்லை, இப்போது கேட்போம்.


கேள்வி: காசுக்காகத்தானே இந்த 207பேர் வர்றா? வருமானமில்லாத கோவிலில் போட்டால் நிப்பாளா? ஓடிற மாட்டா?

பதில்: மேலே சொன்ன ட்ரான்ஸ்ஃபர் பதில் தான் இதற்கும். ஒரு சாரார் மட்டும் வருமானமுள்ள கோவில்களில் செழிக்க, மற்றவர்கள் நிரந்தரமாக கஷ்டப்படக்கூடாது இல்லையா? எனவே, ட்ரான்ஸ்பர்!


கேள்வி: காசை எதிர்பார்க்காமல் பக்தி உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் எங்களவா பல கோவில்களில் சேவை செய்கிறார், தெரியுமா?

பதில்: நன்றாகவே தெரியும். எங்கள் ஊர் குலதெய்வம் கோவிலில் என் தாத்தா தான் பூசாரி. அவருக்குப் பிறகு யார் என்று கேள்வி வந்தபோது ‘நோ..நோ..ஐ ஆம் எஞ்ஞினியர்’ என்று சொல்லி தப்பி ஓடிவந்துவிட்டேன். பிறகு வேறு யாராவது பொறுப்பை ஏற்றுக்கொள்வார்களா என்று பார்த்தால், யாருமில்லை.

பிறகு, பக்கத்து நகரான கோவில்பட்டியில் இருந்து ஒருவரை அழைத்து வந்தோம். செவ்வாய், வெள்ளி மட்டும் வருவதாக ஏற்பாடு. மாதச் சம்பளம், ஆயிரம் ரூபாய். இதே மாதிரி மேலும் சில கோவில்களில் அவர் வேலை செய்கிறார். மாதச்சம்பளம் ஐந்தாயிரம் வந்தால் பெரிது.

எனவே, தட்டில் விழும் காசு தான் அவரை வாழ வைக்கிறது. கஷ்ட ஜீவனம். ஆனாலும் அம்மனை அவர் தன் குழந்தையைப் போல சீராட்டுவார். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வார். இன்றைக்கு அம்மன் அங்கே இருப்பதே அவரால் தான் என்பேன். இல்லையென்றால், பூஜையின்றி எப்போதோ கோவில் களையிழந்து போயிருக்கும்.

இதே போன்று பல பிராமணர்களை எனக்குத் தெரியும். அவர்களில் சேவைக்கு எப்போதும் நான் தலைவணங்குகிறேன். அவர்களின் கஷ்டத்திற்கு நீங்களும், உங்களின் சிஸ்டமும் ஒரு காரணம் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்? வாரிசுரிமை இல்லையென்று சட்டம் சொன்னாலும், சில குடும்பத்தினர் மட்டுமே வருமானமுள்ள கோவில்களை பிடித்துவைத்திருப்பது உங்களுக்கேதெரியும். ஆனால் போராட்டம் என்பது அபச்சாரம் என்று ரத்தத்தில் ஊறியிருப்பதால், வேறு யாராவது தான் போராடி இதை மாற்ற வேண்டும், இல்லையா?


கேள்வி: தகுதியற்ற நபர்களும் இந்த சட்டத்தால் வேலைக்கு வந்துவிடலாம், இல்லையா?

பதில்: மாமனார் ஊரில் ஒரு கோவிலை எடுத்துப் பெரியதாக கட்டி நிர்வகிக்கிறார். அந்தக் கோவில் அர்ச்சகரும் சேவைக்கு ஒரு நல்ல உதாரணம். வம்சவம்சாக, இதே தொழிலில் இருக்கும் குடும்பம். அம்மனை அலங்கரித்து தீபம் காட்டினார் என்றால், அம்மனே நேரில் வந்துவிட்டது போல் உடல் சிலிர்க்கும். ஆனால் அவர்கள் பிராமணர்கள் அல்ல, புலவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இதே போன்றே வேளார், பிள்ளைவாள் அர்ச்சகர்களும் உண்டு.

பிராமணர்களிடம் இருக்கும் மாயை, தாங்கள் மட்டுமே தகுதியானவர் – தங்களை மட்டுமே ஆண்டவன் அர்ச்சகராக அனுப்பி வைத்திருக்கிறான் என்பது. அது உண்மையல்ல என்று கொஞ்சம் யோசித்தாலே புரியும். பழனி கோவிலையும், சமயபுரம் கோவிலையும் டெவலப் செய்து, உங்களுக்குக் கொடுத்ததே நான் – பிராமின்ஸ் தானே? தகுதி இல்லையென்றால், அவையெல்லாம் டெவலப் ஆகியிருக்குமா? மற்ற கோவில்களில் தான் தெய்வம் குடியிருக்குமா?

இருப்பினும்………………………உங்கள் கேள்வியில் உள்ள நியாயத்தை நான் ஒத்துக்கொள்கிறேன்.

தகுதியற்ற நபர்களை அர்ச்சகராகப் பார்க்க நேரிட்டால், உங்களுக்கு எப்படி வலிக்கும் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பூசாரி, தன் இடுப்பில் பான்பராக் சொருகியிருந்ததைப் பார்க்கும்போது எனக்கு வலித்திருக்கிறது. திருச்செந்தூர் பூசாரிகள் எப்போதும் பக்தர்களிடம் நாய் மாதிரி எரிந்து விழும்போதும் எனக்கு வலித்திருக்கிறது. அவர்கள் எல்லாம் பிராமணர்கள் என்பதை விட்டுத்தள்ளுவோம்.

இப்போது வரும் நான் – பிராமின்ஸில் சிலரும் அப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால், நீங்கள் கொதித்தெழுவீர்கள். இதுவரை உங்களவா தவறு செய்தபோது கொதிக்காத ரத்தம் அப்போது கொதிக்கும். எனவே கோவில்களில் நடக்கும் தவறுகளைத் தடுக்க, சரியான அமைப்பை நீங்கள் உருவாக்குவீர்கள். ஏற்கனவே அப்படி ஒரு அமைப்பு இருந்தால், அது செயல்பட ஆரம்பிக்கும். இது கோவில்களுக்கு நல்லது தானே?

அப்புறம் இன்னொரு விஷயம்…மேலே ஒரு புலவர் குடும்பம் பற்றிச் சொன்னேன், இல்லையா? அதில் அந்தக் குடும்பத்துப் பையனும் அரசு நடத்திய ஆகம பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றிருக்கிறார். இந்த சட்டம் அமலுக்கு வந்தால், வம்சவம்சமாக வறுமையில் வாடிய ஒரு பூசாரிக் குடும்பத்திற்கு ஒரு வழி பிறக்கும்.

நாத்திகர்கள் இந்த விஷயத்தை முன்னெடுப்பதால், அர்ச்சகர்களின் தகுதி பற்றி சந்தேகம் வருவது இயல்பு தான். ஆனால் உண்மையில் பல பூசாரி குடும்பங்கள் இந்த சட்டத்தால் பயன்பெறும் என்பதே யதார்த்தம்.


கேள்வி: சரி, பயிற்சி பெற்றவர் ஆகமவிதிகளின்படி நடக்கலாம். அவர் குடும்பமும் அப்படியே நடக்கலாம். ஆனால் அவர்களின் சொந்தங்கள் அப்படி ஆச்சாரமாக இருப்பார்கள் என்று சொல்ல முடியுமா? அந்த வீடுகளில் இவர் அன்னந்தண்ணி எடுக்காமல் இருப்பாரா?

பதில்: உங்கள் கேள்விக்கு என்ன அர்த்தம் என்றால்…

ஒரு பிராமணர் அர்ச்சகராக இருக்கிறார். அவர் மற்ற சொந்தக்கார பிராமண வீடுகளில் புழங்குகிறார். அத்தனை பிராமணர்களும் ஆச்சாரத்துடன் தான் இருக்கிறார்கள். அவர்களின் சொந்தத்தில் ஒருவர்கூட, ஆச்சாரம் கெட்டவர்கள் இல்லை. அத்தனையும் சொக்கத் தங்கங்கள். ஆனால் மற்றவர்கள் மட்டும் தான் மோசம், இல்லையா?

நான் டெல்லியில் வேலை செய்தபோது, என் அலுவலக /அறை நண்பன் ஒருவன் இருந்தான். மாலை ஆனதும், கையில் சிகரெட்டுடனும் பிராந்தி பாட்டிலுடன் தான் உட்காருவான். அவன் ஒரு பிராமின். அவன் அப்பா ஒரு கோவில்குருக்கள்.

என்ன செய்யலாம், குருக்களை வேலையை விட்டுத் தூக்கிவிடலாமா? குருக்களின் சொந்தக்கார குருக்களையும் வேலையை விட்டுத் தூக்கிவிடலாமா? அதை விடுங்கள், காஞ்சிபுரம் கில்மா குருக்களின் சொந்தக்கார குருக்களை என்ன செய்யலாம்?

முதலில், பிராமணர்கள் அத்தனை பேரும் சுத்தமானவர்கள்; மற்ற எல்லோரும் அசுத்தமானவர்கள் என்று நினைப்பதை விட்டொழியுங்கள். உங்கள் பிரச்சினைக்கெல்லாம் மூல காரணமே, இந்த மனநிலை தான்!


கேள்வி: இந்து மதத்தை அழிக்கவே, ஆச்சாரத்தைக் கெடுக்கும் இந்த சட்டத்தை நாத்திகர்கள் கொண்டுவருகிறார்களா?
 
பதில்: ஒட்டுமொத்த நோக்கில், இந்து மதத்திற்கு நன்மை செய்வதாகவே இது அமையும். ஆந்திராவிலும், கேரளாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் தான் இது. இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இது காலத்தின் கட்டாயம். 

மேலும், விதவை மறுமணம், பெண் விடுதலை போன்ற விஷயங்களை எல்லாம் இதே நாத்திகர்கள் எழுப்பியபோது, நீங்கள் இதே வாதத்தைத் தான் முன்வைத்தீர்கள். இப்போது அந்த விஷயங்களால், அதிக பயன்பெற்றிருப்பது நீங்கள் தான்.

அதே போன்றே, இந்த மாற்றத்தையும் ஒருநாள் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.................ஒரு சக இந்து!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

  1. என்னைக்கேட்டால் இந்த அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டமே தேவையில்லை, ஏனென்றால் தமிழ்நாட்டில் இன்னும் பல கோவில்களில் நான் பிராமின்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். கொங்கு நாட்டில் இருக்கும் கோவில்களில் 80 சதவீதம் நான் பிராமின் அர்ச்சகர்கள்தான்.
    புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன்கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம்.

    ஒரு வேளை சட்டம் வருவதும் நல்லதுதான். அதெல்லாம் ஓகே நீங்கள் சொல்வதுபோல் ஏற்றத்தாழ்வு நீங்கவேண்டும் சரி, இந்த சட்டம் வந்தவுடன் இடஒதுக்கீடு கோட்டாவை நீங்க்கி விடுவார்கள்தானே? ஏனென்றால் எல்லோரும் சமமாகிவிட்டோமே. இல்லை பல சமுதாயம் ஏழ்மையில் இருக்கிறது அவர்களுக்கு கோட்ட வேண்டும் என்று சொல்வார்கள், அதுவும் சரி அப்படியென்றால் அரசுப்பதவியில் கலெக்டர், தாசில்தார், கணவன் மனைவி இருவரும் ஆசிரியர்கள் என்று இருக்கும் தாழ்ந்த சமுதாயத்தை சேர்தவர்களின் பிள்ளைகளுக்கு கோட்ட தேவையில்லையா, நீங்கள் சொல்வதுபோல் தட்டில் விழும் காசுகளை நம்பிக்கொண்டிருக்கும் ஒரு பிராமணரின் மகன் 1100/1200 மதிப்பெண் பெற்றாலும் அவனுக்கு மருத்துவ படிப்பு என்பது கேள்விக்குறிதானே?

    அதைவிட முக்கியமான விசயம் இதே அளவு உணர்வுடன் கேள்வி பதில் பாணியில் இவ்வளவு சிறப்பாக யோசிக்கும் நீங்கள் பொதுசிவில்சட்டம் வரவேண்டும், மதச்சார்பற்ற நாட்டில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொல்ல தயாரா? விவாகரத்து வழக்குக்காக வருடக்கணக்கில் கோர்ட்டுக்கு செல்லும் நாட்டில் ஒரே வார்த்தையில் விவாகரத்து நடைபெறுவதை இதே போல் உணார்ச்சி பொங்க விமர்சிப்பீர்களா? நீங்கள் நான்கு திருமணம் செய்வதை சட்டம் அனுமதிக்குமா? இதை சொன்னவுடன் அய்யய்யோ மதவாதி என்று கூக்குரல் கேட்கும் நீங்களும் அதை வழிமொழிவீர்கள் இல்லை என்றால் இந்த கமெண்டை நீக்கி விடுவீர்கள் அப்புறம் என்ன சார் உங்க சமதர்மம் எந்த கோவில்ல எவன் பூஜை பண்ணா உங்களுக்கென்ன? சினிமா பத்தி நீங்க எழுதறது ரொம்ப நல்லா இருக்கு அத கண்டிணியூ பண்ணுங்க

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  3. இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு சமதர்மத்தை பற்றி பேசுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. 2000 வருடமாக தாழ்த்தப்பட்ட மக்களின் மடியில் கை வைக்கலாமா?

      Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.