Saturday, March 1, 2014

பொம்மை வியாபாரமும் சினிமா வியாபாரமும்

ஒரு ஊரில் குயவர் ஒருவர் இருந்தார். களிமண்ணில் பொம்மை செய்து, கலர் கலராக பெயிண்ட் அடித்து, சில ஜிகினா வேலைகள் செய்து அழகான குட்டிப்பொம்மைகளை தயாரிப்பது தான் அவர் வேலை. கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஒரு பொம்மைக்கு தயாரிப்புச் செலவு ஏழு ரூபாய் வந்தது. அதை ஒரு செட்டியார், ஒரு பொம்மை பத்துரூபாய் என மொத்தவிலைக்கு வாங்கிக்கொள்வது வழக்கம். பத்து ரூபாய் பொம்மையை பதினைந்து ரூபாய் முதல்  இருபது ரூபாய்வரை டிமாண்ட்டுக்கு ஏற்ப செட்டியாரும் விற்றுவந்தார். இருவருக்குமே லாபம்.
அதன்பின் இந்த பொம்மை வியாபாரத்தில் அதிபுத்திசாலி ஆசாமி ஒருவர் இறங்கினார். அவரும் குயவரிடம் பத்து ரூபாய்க்கு பொம்மைகள் வாங்கிக்கொண்டு போய் மெரீனா பீச்சில் கடை போட்டார். முதலில் வந்த ஒரு குடும்பம், தன் குழந்தைகளுக்கு பொம்மைகளை வாங்கியது. புத்திசாலி இருபது ரூபாய் சொல்லி, பதினைந்து ரூபாயில் பேரம் முடிந்தது. 

அடுத்து ஒரு காதல் ஜோடி வந்தது. புத்திசாலி, ஒரு பொம்மைவிலை நாற்பது ரூபாய் என்றார். பேரம், முப்பது ரூபாயில் முடிந்தது. அதற்கடுத்து ஒரு புதுமண ஜோடி வந்தது. பொம்மை விலை நாற்பது சொல்லி, இருபத்தைந்து ரூபாய்க்கு பேரம் முடிந்தது. பின்னர் வந்த ஒரு அன்றாடங்காய்ச்சி குடும்பம், பொம்மைகளை பத்து ரூபாய்க்கு கேட்டது. இவர் கஷ்டப்பட்டு பன்னிரெண்டு ரூபாய்க்கு விற்றார். மீதி இருந்த ஒன்றிரண்டு பொம்மைகளை அடுத்துவந்தவர்களிடம் பத்து ரூபாய்க்கே விற்றுவிட்டு கடையைச் சாத்தினார்.
பத்து ரூபாய்க்கு வாங்கிய பொம்மை, வாடிக்கையாளரைப் பொறுத்து பத்து-பதினைந்து-இருபத்தைந்து-முப்பது என்று வியாபாரம் முடிந்தது. அதற்கு முன் செட்டியாரும் இதையே தான் செய்துவந்தார். ஆனாலும் நம் புத்திசாலி வியாபாரி, கார்ப்போரேட் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தவர் என்பதால் செட்டியாருக்கு தோன்றாத ஒன்று புத்திசாலிக்கு தோன்றியது. 

குயவரிடம் சென்ற புத்திசாலி, “உன் பொருள் முப்பது ரூபாய்க்கு விற்கிறது. அதை ஏழு ரூபாயில் தயாரிப்பது தவறு. எனவே குறைந்தது பதினைந்து ரூபாய் செலவளித்தாவது அதை தயாரிக்க வேண்டும். நான் இருபது ரூபாய்க்கு வாங்கிக்கொள்கிறேன். முப்பது ரூபாய்க்கு வாங்க வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.” என்று உசுப்பேற்றினார். சரி, முன்பைவிட இரண்டு ரூபாய் அதிகம் கிடைக்கிறதே என்று, அதுவரை லோக்கல் பெயிண்ட்டில் பொம்மையை அலங்கரித்தவர் விலையுயர்ந்த பெயிண்ட்டிற்கு மாறினார். அவரிடம் வேலை பார்த்த தொழிலாளர்களும், விஷயம் அறிந்து சம்பளத்தை ஏற்றினார்கள். பெயிண்ட் வியாபாரிகளும் விலையை ஏற்றினார்கள். செட்டியார் இந்த பைத்தியக்காரத்தனத்தை ஏற்றுக்கொள்ளாமல் விலகிக்கொண்டார். புத்திசாலி எல்லா பொம்மைகளையும் வாங்கிகொண்டு மெரீனாவுக்குப் போனார்.
அடுத்து என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும். காதல் ஜோடிகள் மற்றும் புதுமணத் தம்பதிகளைத் தவிர மற்றவர்கள் இதை வாங்க முன்வரவில்லை. பாதிக்கு மேல் விற்காமல் போனதால், பொம்மை விலையை நாற்பதில் இருந்து எண்பது ரூபாய்க்கு ஏற்றினார். புதுமண தம்பதிகளும் காணாமல் போனார்கள். குழம்பிய புத்திசாலி குயவரிடம் ‘ உன் பொருளை வாங்கியதால் எனக்கு பெரும் நஷ்டம். அடுத்த லாட்டை குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டும்’ என்று சண்டைக்குப் போனார். அவரோ ‘ உன்னால் பெயிண்ட் விலையும் கூலியும் கூடிவிட்டது. இனி நானே நினைத்தாலும் குறைந்த விலைக்கு தயாரிக்க முடியாதே?’ என்று சண்டை போட்டார். வாடிக்கையாளர்கள் பார்த்தார்கள். இந்த இண்டர்நெட் காலத்தில் பொம்மை எதற்கு? ஆன்லைனிலேயே வீடியோ கேம் விளையாடலாம் என்று மாற்றுவழியில் இறங்கிவிட்டார்கள்.

இப்போது குயவரும் புத்திசாலியும் புலிவால் பிடித்த கதையாக, இதில் இருந்து எப்படி மீள்வது? வாடிக்கையாளர்களை திரும்ப எப்படி நம் பக்கம் கொண்டு வருவது என்று விழித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு பொம்மை ஏதோ ஒரு காரணத்தால் முப்பது ரூபாய்க்கு விற்றுவிட்டால், அதே ஆட்களின் அடுத்த பொம்மையின் தயாரிப்பு/விநியோகச் செலவையே முப்பது ரூபாய்க்கு ஏற்றிவிடுவது என்னவகையான புத்திசாலித்தனம்? இதில் ஏழு ரூபாய்க்கு தயாரிப்பவர்களின் பொம்மைக்கு கடையில் இடம் கிடையாது என்ற அரசியல் வேறு!
ஒரு குக்கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவன்கூட, இந்த பிஸினஸ் டெக்னிக்கை ஃபாலோ பண்ண மாட்டானே? இது என்ன வகை வியாபாரம் என்று நமக்குப் புரியவில்லை. உங்களுக்காவது புரிகிறதா?

போனஸ்: மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம், இங்கே குவைத்தில் நான்கு வாரம் ஓடி இருக்கிறது. கடைகளில் சென்று சிடி கேட்டால், நான்கு வாரமும் இல்லையென்று சொல்லிவிட்டார்கள். நேற்றுப் போய் த்ரிஷ்யம் சிடி கேட்டேன். இந்த மாத கடைசியில் தான் ஒருஜினல் டிவிடி வருகிறது. அதன்பின் வாருங்கள் என்று அனுப்பி விட்டார்கள். 

த்ரிஷ்யத்திற்குப் பின் வெளியான ஜில்லா, வீரம் சிடிகள் ரிலீஸ்க்கு அடுத்த நாளில் இருந்தே கடைகளிலும் நெட்டிலும் கிடைக்கின்றன. விஜய் ரசிகர்கள், வீரம் படத்தின் டொரண்ட் லின்க்க்கையும் அஜித் ரசிகர்கள் ஜில்லாவின் டொரண்ட் லின்க்கையும் போட்டி போட்டு ஃபேஸ்புக்கில் பரப்பியது ஞாபகம் வந்தது. தயாரிப்பாளரில் ஆரம்பித்து ரசிகர்கள்வரை, தமிழ் சினிமா புத்திசாலிகளால் நிரம்பி வழிவது தெரிகிறது. இப்படியே இருங்கப்பா..சீக்கிரமே ஓஹோன்னு வருவீங்க!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

  1. நீயும் பொம்மை நானும் பொம்மை பாட்டைப்போல, ஒரு பொம்மை காதைலேயே அம்புட்டையும் சொல்லிடீங்களே..அதுக்கு ஆப்டா தல-தளபதி போட்டோசும் சூப்பர்..

    ReplyDelete
  2. அருமையா கதை சொல்லி ஈசியாக விளக்கி விட்டீர் மக்கா...உண்மைதான்...!

    ReplyDelete
  3. வாவ்.. செம்ம பாஸு.. தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை இதுதான்னு ஒரு சின்ன பையனுக்கு கூட புரியற மாதிரி விளக்கிட்டீங்க.. சபாஷ்!

    ReplyDelete
  4. அவிங்களுக்கு என்னய்யா கவலை.
    பத்து ரூவாய்க்கு கூட போனி ஆகாத பொருள போனா வராது பொழுது போனா கிடைக்காதுன்னு
    டிமான்ட் பண்ணி அம்பது ரூவாய்க்கு விப்பாங்க.
    நாமளும் வரலாறு மிக முக்கியம்னு பாப்போம் சாரி வாங்குவோம்.

    ReplyDelete
  5. அருமை!நம் தமிழ் சினிமா எவ்வளவு தூரம் உயரத்துக்கு(?!)ப் போயிருக்கிறது என்று குட்டிக் கதை சொல்லி விளக்கினீர்கள்.எல்லாத்துக்கும் காரணம் நாமே!

    ReplyDelete
  6. பாஸ் ஆனா ஒரு சின்ன சந்தேகம் , இந்த கதையில் புத்திசாலி பொம்மை செய்வர்தற்கு முன்னாலியே காசு குடுத்து பொம்மை புக் செய்யலியே? MG என்ற பெயரில் இவங்களுக்கு கொட்டி குடுக்கும் அட்வான்ஸ் பணம் வெச்சு நெறைய சின்ன budget படமே எடுத்து ரிலீஸ் பண்ணிடலாம் ...

    ReplyDelete
  7. @Devils protege நீங்கள் சொல்வதும் சரி தான். இன்னொரு ஆங்கிளும் உண்டு. சில புத்திசாலி குயவர்கள் ஒரே நேரத்தில் 4 பொம்மை செய்வதாக ஒவ்வொன்றுக்கும் 25% அட்வான்ஸ் வாங்கிவிட்டு, அதை வைத்தே முதல் பொம்மையை ரிலீஸ் செய்வதுண்டு. அது ஆபத்தான விளையாட்டு. அதில் அழிந்தவர் நிறைய உண்டு.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.