Tuesday, February 24, 2015

இனிமேல்....படித்தால் மட்டும் போதுமா?

குலத்தொழிலை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது, நம் சமூகம். நாட்டில் நாகரீகம் மலர, மலர தொழிலும் கல்வியும் ஜனநாயகமாக்கப்பட்டன. அப்போது கல்வி என்பதையே கட்டாயமாகப் புகுத்த வேண்டிய அவலநிலை நம் நாட்டில் இருந்தது. ஏறக்குறைய 25 ஆண்டுகளாக நமது அரசாங்கம் கல்வி பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது. பள்ளி ஆசிரியர்களும் அக்கறையுடன் கல்வியை வலுக்கட்டாயமாகத் திணித்தார்கள். (ஸ்கூல் போலீஸ் பற்றி இங்கே சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.)

ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. ஒரு கூலித் தொழிலாளிகூட தன் பிள்ளையை ப்ரைவேட் ஸ்கூலில் படிக்க வைக்கிறார். ஸ்கூல் வேன்களில் பிள்ளைகள் பயணிப்பது, கிராமங்களில்கூட காணக்கிடைக்கும் காட்சியாகிவிட்டது. இது ஆரோக்கியமான, வரவேற்கத்தக்க விஷயம். கூடவே இதுவொரு சிக்கலையும் கொண்டு வந்துள்ளது.
கல்வியைப் பரவலாக்க உழைத்த அளவிற்கு, நம் அரசாங்கங்கள் வேலைவாய்ப்பில் அதற்கு இணையாக உயர்த்த உழைத்தார்களா என்றால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வருடமும் எத்தனை பேர் படித்து வெளியே வருவார்கள், அப்போது அவர்களுக்கு எத்தனை வேலை வாய்ப்புகள் காத்திருக்கும்?' என்பது பற்றியெல்லாம் இங்கே யாருக்கும் எப்போதும் பெரிய தொலைநோக்குப் பார்வை இல்லை.


முந்தைய தலைமுறைக்கு கல்வி பெரும் வரப்பிரசாதமாக இருந்தது. படித்தாலே போதும், ஏதாவது ஒரு வேலைக்குப் போய்விடலாம் எனும் வாய்ப்பு இருந்தது. காரணம், படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் இப்போது எல்லாருமே படித்தவர்கள் என்று ஆகும்போது, டிகிரி சர்ட்டிஃபிகேட் மட்டுமே வேலை கேட்பதற்கான தகுதி என்பது போய்விட்டது.

இதற்கு சமீப காலத்தில் நாம் பார்த்த ஐ.டி. வேலை வாய்ப்பினை உதாரணமாகச் சொல்லலாம். 1990களில் ஐ.டி.நிறுவனங்கள் வந்தபோது, இங்கே போதுமான ஐ.டி.வல்லுநர்கள் இல்லை. எனவே ஏதாவது ஒரு டிகிரி படித்திருந்து, கூடவே ஒரு ஐ.டி.கோர்ஸ் படித்த சர்ட்டிஃபிகேட் இருந்தாலே வேலை கிடைத்தது. இஞ்சினியரிங்கில் ஐ.டி.படித்தவர்களுக்கு மட்டுமல்லாது, மெக்கானிக்கல், சிவில் படித்திருந்தாலும் கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலைகிடைக்கும் காலம் இருந்தது.

ஆனால் எவ்வித தொலைநோக்குமின்றி, கன்னாபின்னாவென்று பொறியியல் கல்லூரிகளை ஆரம்பித்தார்கள். விளைவு, இன்றைக்கு ஐ.டி.படித்த 12 பேரில் ஒருவருக்கே வேலை கிடைப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது.அப்படியென்றால், மெக்கானிக்கல் போன்ற வேறு பிராஞ்சில் படித்த பொறியியல் மாணவர்களுக்கோ, ஆர்ட்ஸ் காலேஜில் படித்த வேறு மாணவர்களுக்கோ இனி அங்கே (பெரும்பாலும்) இடம் இல்லை.

இந்த ஐ.டி.சூழ்நிலை எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.  வேலை வாய்ப்புச் சந்தையில் சப்ளை அதிகமாகி விட்டது, டிமாண்ட் குறைந்துவிட்டது. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது தான் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். இதைத் தனி மனிதனாக எப்படி எதிர்கொள்ளலாம் என்று யோசித்தால்....

1.மேற்படிப்பு:
1970-80களில் டிப்ளமோ படிப்பு என்பது வேலைவாய்ப்பை அள்ளித்தரும் விஷயமாக இருந்தது. பொறியியல் கல்லூரிகள் வந்ததும், எஞ்னியரிங் டிகிரி அந்த இடத்தைப் பிடித்தது. இப்போது பி. இ. மலிந்துவிட்டநிலையில், இதற்கு அடுத்த இடம் நோக்கி நாம் நகரலாம். நமது எம்.இ-ஐ விட அமெரிக்க எம்.எஸ் இன்னும் மதிப்புடன் இருக்கிறது.

2. புதிய அலை: 1990களில் நமக்கு வரப்பிரசாதமாக வந்தது ஐடி அலை. அதற்கு முன்பு 1970களில் தொழிற்சாலைகளின் வரவு வேலை வாய்ப்பைக் கொடுத்தது. அதுபோன்று அடுத்து என்ன வருகிறது என்று பார்க்கலாம். (என் சிற்றறிவுக்கு ஒன்றும் பிடிபடவில்லை.)

3. வெளிநாடு வேலை வாய்ப்பு : நமக்கு முன்பே 100% கல்வியறிவு பெற்ற சேட்டன்கள் காட்டிய வழி. ஆனால் உலகம் முழுக்கவே சூழ்நிலை இப்போது மாறிவருகிறது. உதாரணமாக, வளைகுடா நாடுகளில் மண்ணின் மைந்தருக்கே வேலை எனும் கொள்கை மிகத்தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிரது.இன்றைய சூழ்நிலையில் ஒரு அரபி ஒரு டிகிரி முடித்தாலே அரசு வேலையில் சேர்துவிட முடியும். அரபி ஆண்களும் பெண்களும் அதிக அளவில் இங்கே வேலையில் சேர்ந்து வருகிறார்கள். அந்நியருக்கு அரசு வேலை என்பது ஏறக்குறைய நிறுத்தப்பட்டு விட்டது. இன்னும் 20 வருடங்களில் தனியார்க் கம்பெனிகளிலும் அதே நிலைமை வர வாய்ப்பு உள்ளது. எனவே ஐ.டி.க்காரன் மட்டும் தான் நாசமாப் போறான் எனும் கனவில் இருக்கும் பிறதுறை ஆசாமிகள் கொஞ்சம் விழித்துக்கொள்ளலாம்.

4. புதிய கல்விமுறை : நமது இன்றைய எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம் என்ன என்று பார்த்தால்.....நம் கல்விமுறை தான். 'படி, வேலை கிடைக்கும்'..'நல்லாப் படிச்சத்தான் நல்ல வேலைக்குப் போக முடியும்' என்றுசொல்லியே நம் பிள்ளைகளை வளர்க்கிறோம். அதாவது படிப்பு என்பது பிள்ளைகளை ஏதாவது ஒரு கம்பெனியில் அடிமைகளாக ஆக்குவது என்றே நம்புகிறோம். சுயதொழில் செய்து சொந்தக் காலில் நிற்பது பற்றி நமக்கு எவ்வித சிந்தனையும் இல்லை. காரணம், பாதுகாப்பு பற்றிய பயம்.

நம்மில் பெரும்பாலோனோர் முதல் தலைமுறை பட்டதாரிகள். வறுமையை கல்வியால் வென்றவர்கள். எனவே மீண்டும் ரிஸ்க் எடுத்து பிஸினஸ் செய்து, ஆரம்பித்த இடத்திற்கே பிள்ளைகளை அனுப்பி விடுவோமோ எனும் பயம் இருக்கிறது. ஆனால் வி.ஐ.பிகளாக பிள்ளைகளைஆக்குவதைவிட, படிப்புடன் சுயதொழில்கள் பற்றிய அறிவையும் பிள்ளைகளுக்கு பள்ளியிலும் வீட்டிலும் புகுத்துவது அவசியம் ஆகிறது. குஜராத் போன்று சுயதொழில் சார்ந்த சமூகமாக நாம் மாறவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

விவசாயத்தில் ஆரம்பித்து ரியல் எஸ்டேட்வரை எல்லாத் தொழில்கள் பற்றிய அறிவுடன் நம் பிள்ளைகள் வளரட்டும். படித்தால் வேலைக்குப் போகலாம் எனும் அடிமை மனோபாவத்தை மட்டும் உண்டாக்காதீர்கள். ஏனெனில் இனிவரும் காலத்தில் டிகிரி சர்ட்டிபிகேட் என்பது வேலைக்கான உத்தரவாதச் சீட்டு அல்ல!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

  1. இதப்பத்தி நான் யோசிச்சதில்லை..
    நம்ம பசங்களுக்கு ஒரு புதிய (பெரிய) பிரச்சனை காத்திருக்குனு நினைச்சா கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு.
    நாம முதலில் விழித்துக்கொள்ள வேண்டும்.

    சிறந்த தொலைநோக்குபார்வை.

    Thanks for your ALERT...

    ReplyDelete
  2. "நம்மில் பெரும்பாலோனோர் முதல் தலைமுறை பட்டதாரிகள். வறுமையை கல்வியால் வென்றவர்கள். எனவே மீண்டும் ரிஸ்க் எடுத்து பிஸினஸ் செய்து, ஆரம்பித்த இடத்திற்கே பிள்ளைகளை அனுப்பி விடுவோமோ எனும் பயம் இருக்கிறது. ஆனால் வி.ஐ.பிகளாக பிள்ளைகளைஆக்குவதைவிட, படிப்புடன் சுயதொழில்கள் பற்றிய அறிவையும் பிள்ளைகளுக்கு பள்ளியிலும் வீட்டிலும் புகுத்துவது அவசியம் ஆகிறது. குஜராத் போன்று சுயதொழில் சார்ந்த சமூகமாக நாம் மாறவேண்டிய நிலையில் இருக்கிறோம்"

    "விவசாயத்தில் ஆரம்பித்து ரியல் எஸ்டேட்வரை எல்லாத் தொழில்கள் பற்றிய அறிவுடன் நம் பிள்ளைகள் வளரட்டும். படித்தால் வேலைக்குப் போகலாம் எனும் அடிமை மனோபாவத்தை மட்டும் உண்டாக்காதீர்கள். ஏனெனில் இனிவரும் காலத்தில் டிகிரி சர்ட்டிபிகேட் என்பது வேலைக்கான உத்தரவாதச் சீட்டு அல்ல!"

    மிக அற்புதமான பதிவு. உங்கள் கருத்து மிகுந்த சிந்தனைக்குரியது. நம் எல்லோரது சிந்தனையும் மாற வேண்டும். போதாக் குறைக்கு இப்போது குற்றத்தொழிலில் ஈடுபடுபவர்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொறியியற்கல்வி படித்த பட்டதாரிகளுமாக சிலர் இருப்பது மனதை நோகச் செய்கிறது.

    இந்த பயனுள்ள பதிவிற்கு மனம் திறந்த பாரட்டுக்கள்.

    God Bless You.

    ReplyDelete
  3. சிறந்த விழிப்புணர்வூட்டும் பகிர்(தி)வு.///மீண்டும் விவசாயம் கை கொடுக்கும் காலம் திரும்புமோ,என்னவோ?அதிலும் பசுமை(Biology) விவசாயம் .................

    ReplyDelete
  4. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
    நமது கல்வி திட்டத்தில் விவசாயம், சுயதொழில், அரசியல் போன்ற வகுப்புகளை சேர்ப்பதன் மூலம் எதிவரும் சமுதாயம் தனிச்சையாக செயல்பட முடியும் என நம்புகிறேன். ஆனால் இதெல்லாம் யார் செய்வது?

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.