Monday, February 9, 2015

திரைக்கதை சூத்திரங்கள் -II-பகுதி-36

12. Dark night of Soul:

ஆல் இஸ் லாஸ்ட்டில் எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் ஹீரோவின் நிலைமையைக் காட்டும் சீன்கள் இவை. இது ஐந்து செகன்டாகவும் இருக்கலாம் அல்லது அரைமணிநேரமாகவும் இருக்கலாம். வில்லன்கள் திருப்பி அடித்து, ஆல் இஸ் லாஸ்ட்டில் வீழ்த்திவிட்டார்கள். இனி என்ன செய்வது என்று தெரியவில்லை, அதே நேரத்தில் ஆல் இஸ்லாஸ்ட்டால் ஹீரோ வருத்தத்திலும் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பொதுவாக கண்கள் சிவக்க, டாய் என்று ஹீரோ கத்தியபடியே, கடலில் புயல் வீசும் பேக்ரவுன்டுடன் கிளைமாக்ஸுக்குள் புகுந்துவிடுவது வழக்கம். ஆனால் இங்கே ஹீரோ தடுமாறி நிற்பது போல் வைத்தால், யதார்த்தமாக இருக்கும். ஆடியன்ஸ் எல்லோருமே இப்படி ஒரு சூழலை கடந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதால், 'அடப்பாவமே..இப்போ என்ன செய்வானோ' எனும் சிம்பதி உண்டாகும்.

நம்பிக்கை இழந்து, இனி என்ன செய்வது என்று தவித்து, முடிவில் ஹீரோ ஒரு வழியைக் கன்டுபிடிக்கப் போகிறான். அதற்கு முன், இந்த தவிப்பு இந்தப் பகுதியில் ஆடியன்ஸுக்கு சொல்லப்பட்டுவிட வேண்டும்.

ஒருவழியாக ஹீரோ ஒரு வழியைக் கண்டுபிடிக்கும்போது...

13. Break Into Three:
 ....திரைக்கதை ஆக்ட்-3ல் நுழைகின்றது.

என்ன செய்வது என்று ஹீரோவுக்குத் தெரிந்துவிட்டது. ஹீரோவுக்கு ஒரு தெளிவு கிடைத்துவிட்டது. அந்தத் தெளிவு, இதற்கு முன்பு நாம் பார்த்த பி ஸ்டோரியில் இருந்து கிடைக்க வேண்டும் என்று சொல்கிறார் ப்ளேக் ஸ்னிடர். ஆனால் தமிழ் சினிமாவில் பி-ஸ்டோரி என்பது காதல் கதை தான் என்பதால், ஏதாவது ஒரு நட்டுவச்ச ரோஜாச் செடி தான் இங்கே தெளிவைக் கொடுக்கும்.

ஆனால் நல்ல திரைக்கதை என்பது மெயின் ஸ்டோரிக்கு உதவும் பி ஸ்டோரியைக் கொண்டிருக்க வேண்டும். அது ஒரு நல்ல ஃபீலிங்கக் கொடுக்கும். திரைக்கதையாசிருயனின் அக்கறையையும் அது காட்டும். உதாரணமாக, பில்லாவில் வரும் இரு கிளைக்கதைகளுமே ஆல் இஸ் லாஸ்ட்டில் இருக்கும் ஹீரோவுக்கு உதவுவதாக வரும்.

ஒன்று, பழி வாங்க வந்த ஹீரோயினின் ஆதரவு..இரண்டாவது, தேங்காய் ஸ்ரீனிவாசனின் உதவி. ஏ ஸ்டோரியுடன் பி ஸ்டோரி அழகாக கலக்கும் நேரம் அது. பி ஸ்டோரி என்பது வெறுமனே டைம் பாஸ்க்கு அல்ல, கதையை நிறைவு செய்ய உதவும் ஒரு விஷயம் என்று ஆடியன்ஸ் உணரும்போது, படத்தின் வெற்றி உறுதிப்படும்.

14. Finale :
 இது நமது கிளைமாக்ஸ். ஹீரோ தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் வில்லன்கள் மேல் (கவனிக்க: ஆடியன்ஸ் மேல் அல்ல!) இறக்கி வைக்கும் நேரம். ஒரு சாமானியனாக சாதாரண உலகில் வாழ்ந்துவந்த ஹீரோ, ஏதோ ஒரு கேடலிஸ்ட் சம்பவத்தால் உந்தப்பட்டு, ஒரு பிரச்சினையில் சிக்கி, அதைத் தீர்ப்பதாக நினைத்து ஆல் இஸ் லாஸ்ட் ஆகி, இறுதியில் ஒருவழியாக வெற்றிக்கொடி நாட்டும் இடம் இது.

வில்லன்கள் அழிக்கப்படுகிறார்கள், பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. ஹீரோ ஹீரோயினுடன் ஐக்கியம் ஆகிறார். ஹீரோ ஹேப்பி, ஆடியன்ஸ் ஹேப்பி, புரடியூசர் ஹேப்பி!

15. Final Image:
ஓப்பனிங் இமேஜில் பார்த்தபடி, அதற்கு நேரெதிரான சீன் இது. நல்ல குணச்சித்திர வளைவு உள்ள படத்தில், இந்த சீன் பெர்fஎக்ட்டாக இருக்கும். உதாரணம், தேவர் மகன்.

காலேஜ் முடித்து, பங்க் ஸ்டைல் முடியுடன் ரயில்வே ஸ்டேசனில் வந்திறங்கும் சக்திவேல், ஃபைனல் இமேஜில் மீண்டும் அதே ஸ்டேசனுக்கு வந்து ரயில் ஏறுகிறார். பம்க்க் முடி இல்லை, பழைய ஆட்டம் பாட்டம் இல்லை. இப்போது அவர் சக்திவேல் இல்லை...தேவர் மகன் அல்லது அவரே இப்போது தேவர்.

அதே இடம்...அதே மனிதன்..இடையில் நடந்த பல விஷயங்கள் ஹீரோவின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டன. அப்படி மாற்றிய வலுவான சம்பவங்கள் தான் படம்.

ஆடியன்ஸ் யாரும் ஓப்பனிங் இமேஜ் என்ன, ஃபைனல் இமேஜ் என்ன என்று கம்பேர் பண்ணி செஇக் பண்ணப் போவதில்லை. ஆனால் அவர்கள் ஒரு முழு வட்டத்தில் பயணம் செய்துமுடித்திருப்பதை, அவர்களின் சப்கான்ஷியஸ் மைண்ட் அறியும். அது ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியைக் கொடுக்கும். அதுவே நமது வெற்றி.


'இந்த பீட்ஷீட், சூத்திரம், வகுத்தல், பெருக்கல் எல்லாம் ஹாலிவுட்டுக்குத் தான் செட் ஆகும். இங்கே நாலு பஞ்ச் டயலாக்கும், 2 குத்துப்பாட்டும், காமெடியும் தான் ஹிட் ஆகும். தமிழ்ல யாராவது இப்படியெல்லாம் படம் எடுக்கிறாங்களா என்ன?' என்று இன்னும் நினைப்பவர்கள் ஒரு வாரம் காத்திருக்கவும்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...