Thursday, February 5, 2015

என்னை அறிந்தால்... - திரை விமர்சனம்

தல அஜித் மற்றும் ஸ்டைலிஷ் டைரக்டர் கௌதம் மேனன் கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் படம், என்னை அறிந்தால். ஏற்கனவே காக்க காக்க படத்தில் இணைய வேண்டிய கூட்டணி. நீண்ண்ண்ட இடைவேளைக்குப் பின் இப்போது இணைந்திருக்கிறார்கள். சூர்யா வேண்டாம் என்று ஓடியபின் அஜித் நடிக்கும் படம், கிளைமாக்ஸே முடிவாகாமல் ஷூட்டிங் போன படம் என்று பல நெகடிவ் தகவல்கள் வந்தாலும் அதையெல்லாம் மீறி, இந்தக் கூட்டணி வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறது. ஓகே...உரிப்போமா?
ஒரு ஊர்ல :
தனது சின்ஸியாரிட்டியால் மனைவியை வில்லன் கும்பலிடம் பலிகொடுத்த போலீஸ் ஹீரோ, குழந்தைக்காக கடமை உணர்ச்சியை ஆஃப் செய்துவிட்டு அமைதியாக வாழ்ந்தாலும், பழைய பகை அவரை விடுவதில்லை. எனவே...டமால், டுமீல்.

உரிச்சா:
சிறு வயது முதல் 38 வயசு வரை ஹீரோவின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே கதை என்று கௌதம் மேனன் சொன்னபோது, வாரணம் ஆயிரம் ஞாபகம் வந்து பயமுறுத்தியது. பொதுவாக தமிழ் சினிமாவில் இத்தகைய வாழ்க்கைச் சரித்திரக் கதைகள், நாயகன் மாதிரி போரடிக்காமல் சொல்லப் படுவது அபூர்வம். குறிப்பாக, லீனியராக இதைச் சொன்னால் டெம்ப்போவை மெயின்டெய்ன் செய்வதும் கஷ்டம்.

என்னை அறிந்தால் படம், 38 வயசு அஜித்துடன் ஆரம்பிக்கிறது. விமானத்தில் அஜித்தும், அனுஷ்காவும் அருகருகே அமர, ஸ்மூத்தாக படம் டேக் ஆஃப் ஆகிறது. முதல் கால் மணி நேரத்திலேயே இது மீண்டும் ஒரு ஸ்டைலிஷான கௌதம் மேனன் படம் என்று தெரிந்துவிடுகிறது. பிறகு ஃப்ளாஷ்பேக் ஓப்பன் ஆக, அஜித்திற்கு போலீஸ் ஆசை வந்தது ஏன் எனும் சிறுவயது சம்பவத்துடன் சத்யதேவ்வின் எஸ்.கதை படத்தில் விரிகிறது.

ஜெயிலில் கைதியாக இருக்கும் அருண் விஜய்யிடம் ’கைதி’ அஜித் நட்பாவதும், அவர்கள் நட்பு எபிசோடும், அந்த எபிசோடின் கிளைமாக்ஸும் அட்டகாசம். அஜித் ஒரு போலீஸ் என்று அப்போது தான் தெரிய வருகிறது. படத்தின் போஸ்டரில் ஆரம்பித்து, எல்லா இடத்திலும் இது ஒரு போலீஸ் ஆபீசரின் கதை என்று விளம்பரப்படுத்தியபின் படத்தில் இந்த சஸ்பென்ஸ் பெரிதாக நம்மைக் கவரவில்லை. அவர் மாறுவேடத்தில் இருந்தாலும், முதலில் இருந்தே அவரை நாம் போலீஸாகத் தான் பார்க்கிறோம்.

கொஞ்சம் அசந்தாலும், ஹீரோ பஞ்ச் டயலாக் பேசும் மசாலாப் படமாக ஆகிவிடும் ஆபத்துள்ள கதை. அஜித் இயக்குநர் கௌதம் மேனனிடம் தன்னையே ஒப்படைத்துவிட்டு, ஒரு ஸ்டைலான படத்தைக் கொடுக்க ஒத்துழைத்திருக்கிறார். இது சாதாரண விஷயம் அல்ல. பல இடங்களில் மாஸ் காட்ட வாய்ப்பிருந்தும், சாதாரணமாக கடந்து போயிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்து த்ரிஷாவை ’மாயாபஜார்’ நாட்டியத்தில் சந்திப்பதுவரை வேகமாகவும் நன்றாகவும் செல்லும் படம், அங்கேயிருந்து இண்டர்வெல்வரை சவசவ என்று நகர்கிறது. த்ரிஷா இறப்பது மட்டும் தான் அதில் உருப்படியான சீன். அந்த அரைமணி நேரம் ஒரு தூக்கம் போட்டு எழுந்தாலும் படம் நமக்குப் புரியும். இப்போது ரசிகர்களே இரண்டு மணி நேரப் படத்திற்குத் தயாராகிவிட்ட பின்பும், லிங்குசாமி, கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர், கௌதம் மேனன் என ஜாம்பவான்கள் எல்லாம் ஏன் விடாப்பிடியாக மூன்று மணி நேரம் இத்தகைய மொக்கைக் காட்சிகளால் நிரப்பிக் கொல்கிறார்கள் என்று தான் தெரியவில்லை. புரடியூசருக்கு காசு வேஸ்ட், எங்களுக்கு டைம் வேஸ்ட். கொஞ்சம் யோசிங்கய்யா.

ஆனால் இண்டர்வெல்லில் ஆரம்பித்து இறுதிவரை படம் செம வேகம். நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு வலுவான வில்லனுடன் வந்திருக்கும் படம். அருண் விஜய்யும், அஜித்தும் மோதும் இரண்டாம்பாதி பரபர பட்டாசு. படத்தைக் காப்பாற்றுவதும் இந்த இரண்டாம்பாதி தான்.

கௌதம் மேனன் படங்களில் இங்கிலீஷ் பேசியே கொல்வார்கள். வாரணம் ஆயிரத்தில் ‘ஹி இஸ் நோ மோர்’ என முக்கியமான வசனத்தையே இங்கிலீஷில் வைத்து கடுப்பைக் கிளப்பியிருந்தார். ஆனால் இதில் அந்தளவுக்கு மோசம் இல்லை என்பது பெரும் ஆறுதல்.

கௌதம் மேனனின் பழைய படங்களின் பாதிப்பு அதிகம் தெரிகிறது. காக்க காக்க வில்லன், வேட்டையாடு விளையாடு ஹீரோ & (குழந்தையுடன்) ஹீரோயின் என முந்தைய பட கேரக்டர்களே வேறு உருவத்தில் வருகின்றன. ஆனாலும் ‘இனிமே இவர் அவ்ளோ தானோ?’ எனும் சந்தேகத்தைத் தீர்த்து, தன்னை நிரூபித்திருக்கிறார் கௌதம் மேனன்.

அஜித் :
இவர் கடைசியாக நடித்த படம்’ வரலாறு’. அதன்பிறகு சில அருமையான டைரக்டர்கள் கையில் சிக்கி, நடிகர் என்பதில் இருந்து இறங்கி ‘நடைகர்’ என்று ஆனது சோக வரலாறு. இதில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, நல்ல நடிப்பு. தமிழின் கழுத்தைத் திருகித் துப்பும் வேலையும் இதில் இல்லை. அருமையான உச்சரிப்புடன் அமைதியாகப் பேசுகிறார். படத்தில் பல இடங்களில் இவரது நரேசன் தான். சின்ஸியர் போலீஸாக, ரவுடியாக, காதலனாக, அப்பாவாக நிறைவான நடிப்பு. ஆக்சன் காட்சிகளிலும் அருண் விஜய்யிடம் மோதும் காட்சிகளிலும் அமர்க்களம் காலத்து ஆக்டிவ் அஜித்தைப் பார்க்க முடிகிறது. தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அருண் விஜய்க்காக நிறைய விட்டுக் கொடுத்தும் நடித்திருக்கிறார். அதாரு உதாரு பாடம் அருணிடம் ஆரம்பிக்கும்போது, இந்த அநியாயத்துக்கு நல்ல மனுசன் இந்தப் பாட்டையும் அருணுக்கே கொடுத்திட்டாரோன்னு பகீர்னு இருந்தது. நல்லவேளை, அப்படி இல்லை. இனி இப்படி அவ்வப்போது நல்ல இயக்குநர்கள் படத்திலும் அஜித் நடிக்க வேண்டும், அப்போது தான் நடிப்பு மறக்காமல் இருக்கும்..நமக்கும் நல்ல படம் கிடைக்கும்.
அருண் விஜய்:
நடிப்பு, டான்ஸ், சண்டை என எல்லாத் திறமையிருந்தும் மேலே வரமுடியாமல் போன மனிதர். பாண்டவர் பூமி, இயற்கை, தடையறத் தாக்க மூன்றிலுமே இவரது நடிப்பு நம்மைக் கவர்ந்தது. ஆனால் படம் தான் ஏனோ ஓடவில்லை. எல்லாவற்றுக்கும் சேர்த்துவைத்து, இதில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். பவர்ஃபுல்லான கேரக்டருக்கு உரிய நியாயத்தைச் செய்திருக்கிறார், வெல்டன்.

அனுஷ்கா :
லிங்கா மாதிரியே ஆரம்பத்தில் பில்டப்புடன் அறிமுகமாகி, இரண்டு மணி நேர(!) ஃப்ளாஷ்பேக் முடிந்தபின் மீண்டும் தலை காட்டும் கேரக்டர். அழகான நடிகை. இதில் முடியை முன்னால் இழுத்துவிட்டு, கந்தரகோலம் செய்திருக்கிறார்கள். ஆண்களில் ‘ஆண்ட்டி’ ஹீரோ உண்டு இல்லையா, அது போல் படத்தில் இவர் ‘அங்கிள்’ ஹீரோயினாக வருகிறார். கதைப்படியே 38 வயதான அஜித்தைப் பார்த்ததுமே ‘வாவ்..ஹேண்ட்சம்’ என்று காதலில் விழுகிறார். தேன்மொழி என்று அழகான பெயர் கொடுத்திருக்கிறார்கள்.

கமலா காமேஷ்:
வாழ்க்கையிலேயே முதன் முறையாக தனக்குப் பொருத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார், ஒரு குழந்தைக்குத் தாயாக. ஆர்ப்பாட்டமில்லாத, அருமையான நடிப்பு. முகத்தில் அநியாயத்திற்கு முதிர்ச்சி தெரிகிறது. கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டதால்..இத்துடன் விடுவோம், பாவம்.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
- படத்தின் நீளம்...உங்களுக்கு நிறைய க்ரியேட்டிவிட்டி இருக்கலாம் படைப்பாளீஸ்..எங்களுக்குப் பொறுமை இருக்கணும் இல்லையா?
- அனுஷ்காவின் ஆரம்ப பாட்டு & மாயா பஜார் பாட்டு. இரண்டாவதில் நடன & கெட்டப் விஷுவல்ஸ் கொடுமை.
- அஜித்தின் மகள், வருடங்கள் ஓடினாலும் வளராமல் அப்படியே இருக்கும் அதிசயம்..இதுமாதிரி லாஜிக் மிஸ்டேக்ஸுக்கு குறைவில்லை.
- படம் முழுக்க யாராவது நரேசனில் பேசிக்கொண்டே இருப்பது. விஷுவல் மீடியாவிற்கு இது தேவையா? ரசிகர்களுக்குப் புரியும் விஷயத்தைக்கூட பிண்ணனிக் குரல் விளக்கிச் சொல்கிறது.
- இது தல படம் அல்ல.. (இந்த நெகடிவ், அஜித் ரசிகர்களுக்கு!)
- பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
- அழகான, ஸ்டைலிஷான, ஆக்டிவ்வான அஜித்
- நீண்ட இடைவெளிக்குப் பின் கௌதம்-ஹாரிஸ்-தாமரை கூட்டணியில் அழகான பாடல்கள்
- மகளாக வரும் அந்தக் குழந்தை..நல்ல எக்ஸ்பிரசன்ஸ்.
- விவேக்கின் நறுக் காமெடி..சென்னை விமானநிலையத்தை ஓட்டுவதில் ஆரம்பித்து, ஹேமா ஏன் நிக்கா? எனக் கேட்டு கைதட்டல்களை அள்ளுகிறார். ரொம்ப நாளைக்கு அப்புறம் மனிதரை ரசிக்க முடிந்தது.
- ரொமான்ஸையும் ஆக்சனையும் சரிவிகிதத்தில் கலப்பது தான் கௌதமின் ஸ்பெஷாலிட்டி.இதிலும் அது அப்படியே வந்திருக்கிறது.
- ஒளிப்பதிவும் எடிட்டிங்கும்..இரண்டாம்பாதியில் அனல் பறக்க வைத்திருக்கிறார்கள்.
- ஸ்டண்ட் சில்வாவின் ஸ்டண்ட்ஸ்..அட்டகாசம்
- இது கௌதம் மேனன் படம். (இது, மற்றவர்களுக்கு)

பார்க்கலாமா?
தாரளமாகப் பார்க்கலாம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...