Monday, February 9, 2015

என்னை அறிந்தால்... - திரைக்கதை பற்றி....

கடந்த சில மாதங்களாக திரைக்கதை ஆலோசகராக பதவி உயர்வு  பெற்றுவிட்டேன். சில புதிய திரைக்கதையைப் படித்து, அதில் உள்ள நிறை, குறைகளைப் பட்டியலிடுவது, சில மாற்றங்களைப் பரிந்துரைப்பது என்று ஐ ஆம் பிஸி..கூடவே, ஒரு பிரபல இயக்குநரின் உதவி இயக்குநர் தனியே படம் செய்யும் முயற்சியில் இருக்கிறார். அவருடன் இணைந்து, அவரது திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமாவில் எதுவுமே கடைசி நிமிடம் வரை நிச்சயம் இல்லை என்பதால்... அதிகம் தம்பட்டம் அடிக்காமல் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன்.

ஒவ்வொரு திரைக்கதையிலும் இந்தப் புது இயக்குநர்கள் காட்டும் அக்கறையையும் உழைப்பையும் பார்த்துவிட்டு, தியேட்டரில் போய் உட்கார்ந்தால் லிங்கு, ஷங்கர், கௌதம் போன்ற பிரபல இயக்குநர்களின் திரைக்கதையைப் பார்க்கும்போது வயிற்றெரிச்சலாக உள்ளது. லாஜிக் பற்றியோ, திரைக்கதை வடிவம் பற்றியோ, குறைந்த பட்சம் ஆடியன்ஸ் பற்றியோ எவ்வித அக்கறையும் இல்லாமல் வேலை செய்கிறார்களோ என்று தோன்றுகிறது.

என்னை அறிந்தால் படம் பல குறைகளையும் தாண்டி, நன்றாகவே இருந்ததால் 'பார்க்கலாம்' என்று விமர்சனத்தில் எழுதிவிட்டேன். உடனே தங்கமணி 'அப்போ கூட்டிட்டுப் போ' என்று கழுத்தில் கத்தி வைத்துவிட்டார். இரண்டாம் முறை போனால், இன்டர்வெல்வரை  உட்கார முடியவில்லை. எவ்ளோ பெரிய்ய்ய்ய படம்!!! இரண்டாம்பாதியைத் தான் இரண்டாம் முறை ரசிக்க முடிந்தது. அப்போது யோசித்ததில் சில இங்கே:

1. அனுஷ்கா அறிமுகக் காட்சியும், ஆரம்பப் பாடலும் தேவையா? அது இல்லாமல் ஃப்ளைட்டில் படத்தை ஆரம்பித்திருந்தாலும் எளிதாகப் புரிந்திருக்குமே?

2. த்ரிஷாவிற்கு அவ்வளவு நீள மேடைப்பாடல் தேவையா? இரண்டு ஹீரோயினையும் பேலன்ஸ் செய்யவேன்டும் என்பதற்காக இப்படியா நம் பொறுமையைச் சோதிப்பது?

3. த்ரிஷாவை நான் தான் கொன்றேன் என்று அருண் விஜய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே? அதைச் சொன்னபிறகும், அனுஷ்காவை விட்டால் குழந்தையை விட்டுவிடுவான் எறு நம்பவே இடம் இல்லையே? ஹீரோவே த்ரிஷாவைக் கொன்றது யார் என்று கண்டுபிடிப்பது போல் அமைத்திருந்தால் அல்லவா நன்றாக இருக்கும்?

4. குழந்தை இருக்கும் இடத்தை வில்லனின் அடியாளே ஹீரோவுக்கு மெசேஜ் அனுப்பிச் சொல்கிறார். ஹீரோ எப்போதோ செய்த உதவி தான் காரணம் என்று ஒருவரி வசனத்தில் ஒரு விளக்கம்..என்ன கொடுமை சார் இது! ஹீரோயின்களுக்கு பாட்டு வைத்து வெட்டியாகச் செலவளித்த நேரத்தில், இதைக் காட்டியிருக்கலாமே!


5. படத்தில் வந்த பெரும்பாலான காட்சிகளில் இயக்குநரின் முந்தைய படங்களின் சாயல் நிறைய. காக்க காக்க படத்தையும் வேட்டையாடு விளையாடு படத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்திருக்கிறார்கள். நண்பர் ஒருவர் தன் திரைக்கதையை கத்தி படம் வருமுன்பே எழுதி முடித்துவிட்டார். துரதிர்ஷ்டவசமாக நண்பரின் கிளைமாக்ஸும் கத்தி கிளைமாக்ஸும் 'கொஞ்சம்'ஒன்று போல் அமைந்துவிட்டது. நண்பர் அந்த கிளைமாக்ஸை தூக்கிப் போட்டுவிட்டு, புது கிளைமாக்ஸுக்காக கடந்த இரண்டு மாதங்களாக உழைத்துக்கொண்டு இருக்கிறார்.

இப்படி அடுத்தவர் படத்தில் வந்ததையே தன் படத்தில் வைக்க புதியவர்கள் யோசிக்கும்போது, தன் படத்தில் வந்ததையே திரும்பத் திரும்ப இந்தப் படத்தில் யூஸ் பண்ண வேண்டிய அவசியம் என்ன? சரக்குப் பற்றாக்குறை தானா?

6. இதையெல்லாம்விட மன்னிக்க முடியாத விஷயம், நரேசன் உத்தியை கௌதம் பயன்படுத்தியிருக்கும் முறை.

அஜித்தைப் பார்த்து மெர்சல் ஆகிறார் அனுஷா (விஷுவல்) - பின்னாலேயே நரேசன்..வாவ், வாட் அ ஹேண்ட்சம் மேன்

அஜித் தன் கையை இன்னும் கொஞ்ச நேரம் பிடித்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறார் அனுஷ்கா -அதற்கு நரேசன், கையை விட்டுடாதடா.

கூடவே 'அப்போத்தான் அவனை நான் பார்த்தேன்...அவன் நடந்தான்' ரேஞ்சில் பிண்ணனியில் நரேசன்.

இந்தக் கொடுமை, அஜித்தின் ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்தபின்னும் தொடர்கிறது. யார், யாரிடம் சொல்கிறார்கள், டைரக்டாக ஆடியன்ஸிடமே பேசுகிறார்களா என்று ஒன்றும் புரியவில்லை.

அருண் விஜய் வரும்போது, அவரது குரல் பிண்ணனியில் பேச ஆரம்பித்துவிடுகிறது. 'கத்தியை எடுத்தேன், குத்தினேன்' என கிரிக்கெட் கமெண்டரி ரேஞ்சில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

1950களில் வந்த படங்ககளில்....ஒரு அம்மா மகனுக்காக காத்திருப்பார். மகன் வந்ததும், 'ஆ..வந்துவிட்டாயடா கண்ணே..உன் வரவுக்காக வழி மேல் விழி வைத்து அம்மா எத்தனை மணி நேரம் காத்திருந்தேனடா' எனும் ரேஞ்சில் பேசிக்கொண்டே செல்வார். இப்போது யாராவது அப்படி டயலாக் எழுதினால், 'அம்மா காத்திருந்ததையும் காட்டியாச்சு. பையன் வந்ததையும் காட்டியாச்சு. அப்புறம் எதுக்கு இந்த டயலாக்?' என்று இயக்குநரே அதை கிழித்துப் போட்டுவிடுவார்.

ஆனால் இயக்குநர் கௌதம் மேனனோ விஷுவலாகக் காட்டி, அது போதாதென்று வசனத்தில் சொல்லி அதுவும் போதாதென்று நரேசனில் சொல்லிக் கொடுமை செய்திருக்கிறார். காக்க காக்க எனும் க்ரிப்பான திரைக்கதையை எழுதிய மனிதரா இப்படி ஒரு விஷுவல் மீடியத்தை ரேடியோ நாடகம் போன்று ஆக்கியிருக்கிறார் என்று அதிர்ச்சியாக இருக்கிறது.

பிரபலம் என்று ஆகிவிட்டால், 'நான் எடுக்கிறது தான் படம்' எனும் மிதப்பு வந்துவிடுமோ? 'வசன ஆடியோ ரிலீஸ் ஆகும் கொடுமை தமிழ் சினிமா தவிர வேறு எங்காவது உண்டா?' என்று பேசும் உலக  சினிமா அறிவுஜீவிகள் கௌதம் மேனனிடம் இதைக் குட்டிக் காட்டினால் நல்லது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.