Monday, February 23, 2015

திரைக்கதை சூத்திரங்கள் -II-பகுதி-38

துப்பாக்கி படத்தைத் தொடர்ந்து, இன்று திரைக்கதை வித்தகரின் 'முந்தானை முடிச்சு' படம் எந்த அளவிற்கு ப்ளேக் ஸ்னிடரின் பீட் ஷீட்டுடன் ஒத்துப்போகிறது என்று பார்ப்போம்.

அதற்கு முன்பு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிடுகிறேன். முருகதாஸோ, பாக்கியராஜோ ப்ளேக்ஸ்னிடரைப் படித்துவிட்டு திரைக்கதை எழுதியதாக நாம் சொல்ல வரவில்லை. ஒரு நல்ல திரைக்கதையில் பீட் ஷீட்டின் அம்சங்கள் இருந்தே தீரும் என்பது ப்ளேக் ஸ்னிடரின் வாதம். அதற்கு இந்த ஆதாரங்களை உங்கள் முன் வைக்கிறோம். ஒரு வெற்றிகரமான கமர்சியல் படம் கொடுக்க, இந்த பீட் ஷீட் உதவும் என்பதையே இதன்மூலம் நாம் நிரூபிக்கிறோம்.

இப்போது, முந்தானை முடிச்சு...நம் விளக்கங்களுடன்:
OPENING IMAGE:
1. ஒரு தாத்தாவும் பாட்டியும் - அந்நியோன்ய தம்பதிகள் ( It explains theme.)

விளக்கம்: இந்தப் படம் குடும்ப வாழ்க்கை/தம்பதிகள் பற்றிய படம் எனும் குறிப்பு முதல் காட்சியிலேயே காட்டப்படுகிறது.

SET-UP:
2. பஞ்சாயத்து சீன் - ஊர்வசியும் மூன்று பொடியன்களும் குற்றவாளியாக நிற்க, அவர்களின் தந்தைகளே நாட்டாமைகளாக அமர்ந்திருக்கிறார்கள். ஊர்வசி & கோ சேட்டைக்காரர்கள் என்பது நமக்கு உணர்த்தப்படுகிறது.
3. மூன்று பொடியன்களுக்கும் ஊர்வசிக்கும் வீட்டில் அடிவிழுகிறது. ‘நம்ம ஜாதிசனத்துல இல்லாமல் வெளில மாப்பிள்ளை பாருங்க..நம்ம சாதிசனத்துல யாரு சின்னவீடு வைக்காம இருக்காங்க?’ என்று ஊர்வசி கேட்பது. (THEME STATED-1)
4. ஒரு சாமி ஊர்வலம் வருகிறது. எல்லோரும் கீழே விழ ஊர்வசி கோஷ்டி சதி பண்ணும் சீன்.
5. தோப்பில் ஊர்வசி கோஷ்டி...ஊருக்கு புதுவாத்தியார் வரும் தகவல் சொல்லப்படுகிறது. ’என்னை கட்டிக்கப்போற ஆளு பொண்டாட்டின்னா உசிரா இருக்கணும்’ என்று ஊர்வசி சொல்வது.(குறிக்கோள் & THEME STATED-2)..பாடல். ‘நான் பிடிச்ச மாப்பிள்ளை தான்.’
6. ஹீரோ வருகை. ஆய் இருந்த குழந்தையுடன் ஹீரோ அறிமுகம்..ஊர்வசி அதைப் பார்ப்பது. ஊர்வசி கோஷ்டி பாக்கியராஜிடம் பொருட்களைத் திருடுவது, அவர் வாத்தியார் என்று அறிவது.
7. ஹீரோ பள்ளியில் தேசியக்கொடி ஏற்றுவது. கிளாஸில் மூன்று பொடியன்களைப் பார்ப்பது. ஊர்வசி அங்கே வருவது.
8. ஹீரோ மளிகைக்கடையில் சாமான்கள் வாங்குவது. ஹீரோயின் அதைப் பார்ப்பது. ‘உன் பொண்டாட்டி ஏன் வரலை என்று ஊர்வசி கேட்பது. வருவாள் என்று ஹீரோ சொல்வது.

விளக்கம்: நாம் முன்பே பார்த்தபடி, இங்கே ஹீரோயின் தான் கதையின் நாயகி. ஹீரோயினுக்கே குறிக்கோள் உண்டு. ஹீரோ & ஹீரோயினின் சுபாவம், அவர்களது குடும்பச் சூழல் இங்கே விவரிக்கப்படுகிறது.

CATALYST:
9. ஹீரோ சமைக்க, ஊர்வசி கோஷ்டி திருடிச் சாப்பிடுவது. பாத்திரத்தை திரும்பித் தரும்போது, ஹீரோவின் மனைவி உயிரோட இல்லை என்று தெரிய வருவது.

விளக்கம்: ஹீரோயினின் மனமாற்றம் இங்கே தான் ஆரம்பிக்கிறது. முதலில் ஹீரோ மேல் அவருக்கு வருவது பரிதாபம்.

DEBATE:
10. ஸ்கூலுக்கு மூன்று பொடியன்களும் வருவது..காமெடி சீன். + ஹோம் ஒர்க் செய்யாத ஒரு பையனை அடிக்கப் போகும்போது, சித்தி கொடுமை பற்றித் தெரியவருவது.
11. பூர்ணிமா சின்ன ஃப்ளாஷ்பேக். குழந்தையைப் பார்த்துக்கோங்க என்று கதறுவது.
12. பாக்கியராஜ் வணக்கம் காமெடி சீன் + பிரசவத்திற்காக பாக்கியராஜ் வேஷ்டியைக் கொடுப்பது. ஊர்வசியை அதைப் பார்ப்பது.
13. ஹோட்டல்காரர்கள் ஊர்வசியிடம் சாப்பாடு கொடுத்து அனுப்புவது.

விளக்கம்: ஹீரோவின் மேல் காதலில் விழுவாரா இல்லையா எனும் டிபேட் இந்தக் காட்சிகளில் விவரிக்கப்படுகிறது. காதலை நோக்கி ஹீரோயினைத் தள்ளும் காட்சிகள் இவை.

BREAK INTO TWO:
14. மாந்தோப்புக் காரனுடன் ஹிரோ சண்டை. ஊர்வசிக்கு பாக்கியராஜ் மேல் காதல் வருவது..பாடல் -அந்தி வரும் நேரம்.
15. பாக்கியராஜின் மாமியார் வருகை. கொழுந்தியாளைக் கட்டிக்கொள்ளும்படி கேட்பது. பாக்கியராஜ் மறுத்து அனுப்பி வைப்பது.
16. சேலையில் ஊர்வசி...’என்னைக் கல்யாணம் கட்டிக்கிறயா?’ என்று பாக்கியராஜிடம் கேட்பது. பாக்கியராஜ் மறுப்பது.

விளக்கம்: ஆஹா...வந்திடுச்சு! இனி ஹீரோயின் பழைய விளையாட்டுப் பிள்ளை இல்லை. தன் குறிக்கோளை நோக்கி நகரும் லட்சியவாதி!!

B STORY:
17. முதியோர் கல்விக்கு டீச்சர் வருவதாக ஹீரோ சொல்வது.
18. ஊர்வசி கோவிலில் பூ எடுப்பது..பாசிடிவ்வாக வருவது. பாக்கியராஜ் மனைவிக்கு சாமி கும்பிடுவது + பூர்ணிமாவுடன் சின்ன ஃப்ளாஷ்பேக். வேறு கல்யாணம் பண்ணிக்கொள்ள  மாட்டேன் என்று பூர்ணிமாவிடம் சத்தியம் செய்வது.+ மீண்டும் ஊர்வசி பாக்கியராஜிடம் கேட்பது. (A STORY)
19.   டீச்சர் வருகை. ஊரே அசந்து போய் பார்ப்பது.
20. மூன்று பசங்க, டீச்சர் பற்றி ஊர்வசியிடம் சொல்வது..பாடல் - வா..வா..வாத்யாரே வா.

விளக்கம்: ஆடியன்ஸை மகிழ்விக்கவும், மெயின் கதையில் இருந்து நம்மை ரிலாக்ஸ் பண்ணவும் இந்த பி ஸ்டோரி.

GAMES:
21. ஊர்வசி தற்கொலைக்கு முயற்சிப்பதாக பசங்க சொல்ல, பாக்கியராஜ் காப்பாற்ற ஓடுவது. ஊரே கூடுவது.

விளக்கம்: ஹீரோயின் தன் குறிக்கோளை நோக்கி, ஒரு திட்டத்துடன் பயணிப்பது. ஆனால் இன்னும் முழு சீரியஸ்தன்மை வந்துவிடவில்லை. இங்கே FUN குறைவு.

MID POINT:
22. பஞ்சாயத்து சீன் - குழந்தையைத் தாண்டி, பாக்கியராஜ் தான் கெடுத்ததாகச் சொல்வது.- பாக்கியராஜ் தாலி கட்டுவது. - இடைவேளை.

விளக்கம்: காதலில் இருந்து கல்யாணம்...ஹீரோயினுக்கு தற்காலிக வெற்றி.

BAD GUYS CLOSE IN-1:
23. ஊர்வசியை அப்பா ஒரு பெட்டியுடன் வீட்டை விட்டுத் துரத்த, அவர் பாக்கியராஜ் வீட்டுக்கு வருவது. ‘இனி நீ வாழ்க்கை முழுக்க கன்னி தான்’ என்று பாக்கியராஜ் திட்டுவது.
24. காலையில் நல்ல பிள்ளையாக ஊர்வசி, பாக்கியராஜின் காலைத் தொட்டுக்கும்பிட்டு காபி போட...பாக்கியராஜ் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது. குழந்தையை ஒரு பெண்மணி(வள்ளியம்மாள்)யிடம் பாக்கியராஜ் விட்டுச்செல்வது. (FUN & GAMES)
25. ஸ்கூலில் பசங்களுடன் பாக்கியராஜ். ‘இனிமே உங்களை நான் கண்டுகொள்ளவே மாட்டேன்’ என்று சொல்வது.
26. பாக்கியராஜ் ஹோட்டலில் சாப்பிட, ஊர்வசி வந்து சண்டை போடுவது. பாக்கியராஜ் அடிக்க, அதை ஊர்வசியின் அப்பா பார்ப்பது.

விளக்கம்: ஹீரோயின் தற்காலிகமாக ஜெயித்தாலும், வில்லன்(இங்கே ஹீரோவின் சூழ்நிலையும், அது உண்டாக்கும் ஹீரோவின் மனநிலையுமே வில்லன்) ஹீரோயினை தோல்வியை நோக்கித் தள்ளுவது.

FUN & GAMES:
27. ஊர்வசியின் சமையலை பாக்கியராஜ் சாப்பிட ஒத்துக்கொள்வது. ‘இறங்கவும் வேண்டாம்..ஏறவும் வேண்டாம். சோறைத் தின்னு அது போதும்’. ‘நீயா வந்து என்னைத் தொடாமல் நான் உன் பக்கத்தில் வரமாட்டேன்’ என்று ஊர்வசி சபதம் செய்வது. பாக்கியராஜ் முன் ட்ரெஸ் மாற்ற முயல, ஊர்வசியை விரட்டி விடுவது.
28. சீதனங்களுடன் ஊர்வசி அப்பா வருகை. மகளை அடித்தது ஏன் என அப்பா கேட்க, பாக்கியராஜ் சீதனத்தை மறுத்து திருப்பி அனுப்புவது.
29. முருங்கைக்காய் மேட்டரை ஊர்வசி அறிவது
30. ஊர்வசி சமைப்பது - பாக்கியராஜ் சாப்பிட...பாடல்..கண்ணைத் திறக்கணும், சாமி.

விளக்கம்: இந்தப் படத்தில் இரண்டாம்பாதியில் வருகிறது. நோட் திஸ் பாயிண்ட், யுவர் ஹானர்.

BAD GUYS CLOSE IN-2:
31. ஸ்கூலில் பசங்க மன்னிப்புக் கேட்பது. பாக்கியராஜின் மாமியார் வருகை. பூர்ணிமாவின் நகைகளைக் கொடுத்துவிட்டு, பேரனைத் தன்னிடம் கொடுக்கும்படி கேட்பது. ‘இளையவள் ஆரம்பத்தில் குழந்தையிடம் பாசமாகத் தான் இருப்பாள். பின்னர் மனம் மாறிவிடுவாள்’ என்று சொல்வது.
32. பூர்ணிமாவின் நகைகளை ஊர்வசி மாட்டிக்கொண்டு அலட்டுவது.
33. பாக்கியராஜின் குழந்தை காசை முழுங்குவது.-ஊர்வசி வந்து குழந்தையை வாங்கிச் செல்வது - குழந்தைக்கு உடம்பு முடியாமல் போக, வைத்தியரிடம் போவது - பழி ஊர்வசி மேல் விழுவது. ஊர்வசி பொய்ச் சத்தியம் செய்து, குழந்தையைத் தாண்டியதை எல்லோரும் அறிவது.-முழுங்கிய காசை வைத்தியர் வெளியே எடுப்பது.- இனிமேல் ஊர்வசியுடன் குடித்தனம் செய்ய மாட்டேன் என்று பாக்கியராஜ் சொல்லிவிட்டு விலகுதல். (ALL IS LOST)
34. டீச்சர் முதியோர் கல்வி நடத்துவது...காமெடி சீன். (FUN & B STORY)

BREAK INTO THREE:
35. குழந்தை காசை முழுங்கியதற்கு ஊர்வசி காரணம் அல்ல என்று பாக்கியராஜ் அறிவது. கோவிலில் ஊர்வசி மண்சோறு சாப்பிடுவதை பாக்கியராஜ் பார்ப்பது. (இங்கே DARK NIGHT OF SOUL இல்லாமல், நேராக BREAK INTO THREE)
36. சத்துணவு கொண்டு வருபவன் பாதிப்பேருக்கு சாப்பாடு இல்லை என்று சொல்வது.-சாப்பாடை ஹோட்டலில் விற்பது.- சண்டை.- பாக்கியராஜை வெட்ட வரும் அரிவாளை ஊர்வசி பிடிப்பது.
37. ஊர்வசியுடன் சமாதானம் (But All is Lost continues)

DARK NIGHT OF SOUL:

38. ஊர்வசி பாக்கியராஜுடன் சினிமாவுக்குக் கிளம்புதல். - பூர்ணிமா ஃபோட்டோ கிழே விழுந்து உடைதல்.
39. தொடர்ந்து சினிமாவுக்குப் போகும்போது, சித்தி கொடுமையால் பாதிக்கப்பட்ட பையனை பாக்கியராஜ் பார்ப்பது. ஊர்வசி பாக்கியராஜின் பிரச்சினையை அறிதல்.
40. ஊர்வசி வீட்டில் வாந்தி எடுக்க, அதை மாசமானதாக நினைத்து ஊர்வசியின் அப்பா-அம்மா வருகை. அது வெறும் வாந்தி என்று வைத்தியர் சொல்வது. சோகப் பாடல் : சின்னஞ் சிறு கிளியே.

விளக்கம்: இவ்வளவு செய்தும், ஹீரோவின் மனதில் ஹீரோயினால் முழுமையாக இடம்பிடிக்க முடியவில்லை. இன்னும் சித்தி கொடுமை பற்றிய பயம் என்பது வில்லனாக மிரட்டுகிறது. இங்கே ஹீரோ & ஹீரோயின் இருவருமே அவரவருக்கு உரிய நியாயத்துடன் இருக்கிறார்கள். இருவருமே இந்த வில்லனை மனதில் இருந்து அழித்து, முன்னேற வேண்டும்.

B STORY :
41. டீச்சர் பாக்கியராஜைத் தேடி வருவது- ராக்கி கட்டுவது- ஊர்வசி மகிழ்வது.
42. பிரசிடெண்ட் பையனை முந்தைய வாத்தியார் காசு வாங்கி பாஸ் பண்ணி விட்டதாகவும், நீங்களும் அதையே செய்யுங்கள் என்று டீச்சர் சொல்ல, ‘ஒரு வாத்தியார் பணம்  வாங்கினால் எல்லா வாத்தியாரும் வாங்குவார்களா?’ என்று பாக்கியராஜ் கேட்க, பதிலுக்கு ‘ஒரு சித்தி கொடுமை பண்ணினால், எல்லா சித்தியும் கொடுமை பண்ணுவாங்களா?’ என்று டீச்சர் பதிலுக்குக் கேட்பது.
43. டீச்சர் ராக்கி கட்டியதற்காக பெரிசுகள் அழுவது.

விளக்கம்: ப்ளேக் ஸ்னிடர் சொன்னபடி, மெயின் ஸ்டோரிக்கான தீர்வினைக் கொடுப்பதாக, தீர்வுக்கு உதவுவதாக பி ஸ்டோரி இங்கே இருக்கிறது. இரண்டு ஸ்டோரிகளும் இந்தப் புள்ளியில் (சீன் #41) இணைகின்றன.

FINALE:
44. இரவில் குழந்தை அழ, பாக்கியராஜ் பாலைக் கொட்டிவிடுவது..எனவே ஊர்வசி பால் கொடுப்பது. 'உனக்கொரு குழந்தை பிறந்தாலும் என் பிள்ளையை இப்படியே பார்த்துக்கொள்வாயா என்று பாக்கியராஜ் கேட்பது.
45. முதலிரவுக்கு பாக்கியராஜ் நல்லநேரம் பார்ப்பது.
46. குடும்பக்கட்டுப்பாடு நோட்டீஸ் ஊர்வசிக்குக் கிடைப்பது
47. வீட்டிற்கு வரும் பாக்கியராஜ் நோட்டீஸைப் பார்ப்பது. ஊர்வசி அங்கே போயிருப்பதை அறிவது.
48. பாக்கியராஜ் அதைத் தடுக்கப் போகும்போது, பழைய வில்லன்களுடன் ஃபைட்.
49. ஆபரேசன் செய்யவில்லை என்று டாக்டர் சொல்வது. பாக்கியராஜ் திருந்துவது.

விளக்கம்: பரிதாபம், காதல், காமம், பாசம் என எல்லா ஆயுதங்களும் தோற்ற நிலையில், ஹீரோயின் இறுதியாகக் கையில்  எடுப்பது தியாகம். எந்தப் பெண்ணும் செய்யத் துணியாத தியாகம். அதுவே ஹீரோயினுக்கு வெற்றியைத் தேடித் தருகிறது.

FINAL IMAGE:
50. முதலிரவு - கிளைமாக்ஸ்.

விளக்கம்: இதுக்கெல்லாமாய்யா விளக்கம் கேட்பீங்க?..பேட் பாய்ஸ்!

 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

  1. தெளிவான விளக்கம். நான் உங்களுடைய பதிவையும் திரு. கருந்தேள் ராஜேஷ் அவர்களின் பதிவையும் தொடர்ந்து படிப்பவன். அவரின் ஷிட் பில்ட் பற்றிய "திரைக்கதை எழுதலாம் வாங்க" தொடர் புரிந்து கொள்ள ஈஸியாக இருந்தது அனால் ப்ளேக் ஷ்னிய்டெர் பற்றிய "fade in fade out" சற்று கடினமாக இருந்தது அனால் உங்களின் திரைக்கதை சூத்திரங்கள் பகுதி -2 ன் மூலம் ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. மிக்க நன்றி.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.