Sunday, February 1, 2015

திரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 35

ப்ளேக் ஸ்னிடரின் பீ ஷீட்டில் இன்று ஆக்ட்-2வின் முடிவு வரை பார்ப்போம்.

9. Midpoint :
ஒரு திரைக்கதையில் மூன்று அங்கங்கள் முக்கியமானவையாக இருந்தாலும், அதைவிட முக்கியமானது கதை இருபாதியாகப் பிரியும் இந்த மிட் பாயிண்ட். இந்திய சினிமாக்களைப் பொறுத்தவரை இண்டர்வெல் என்பது திரைக்கதையை விட சினிமா வியாபாரத்தில் முக்கியமான விஷயம். (முன்பெல்லாம் தியேட்டர் கேண்டீனை லீஸ்க்கு எடுப்பதே ஒரு நல்ல பிஸினஸாக இருந்தது.) 
சதுரங்க வேட்டை
இங்கே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிட வேண்டும். மிட் பாயிண்ட் என்று ப்ளேக் ஸ்னிடர் சொல்வது கதையின் மத்திமப் புள்ளியை. அது படத்தின் இண்டர்வெல் நேரத்திலும் வரலாம், அதற்கு முன் அல்லது (பெரும்பாலும்) பின் பாதியிலும் வரலாம். எனவே உங்கள் திரைக்கதையில் இது இண்டர்வெல்லில் வரவில்லையென்றால், குழம்ப வேண்டாம். நாம் ஏற்கனவே Debate-ல் பார்த்தபடி, டிபேட் முடியும் இடம்கூட இண்டர்வெல்லாக இருக்க முடியும். 

இந்த மிட்பாயிண்டில் நடப்பது என்ன? ஒன்று, ஹீரோ ஏதோவொரு வெற்றியை அடைந்துவிட்டார். அது ஒரு தற்காலிக வெற்றி. அதற்கு வில்லன் திருப்பி அடிப்பான். இன்னொரு வகை, ஹீரோ ஏதோவொரு பெரும் தோல்வியை அடைந்துவிட்டார் அல்லது பெரும் சிக்கலில் சிக்கிவிட்டார். இனி என்ன ஆகும்?

மொத்தத்தில் ஏதோ ஒன்று பெரிதாக நடந்துமுடிந்துவிட்டது. அதனால் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையே சமாதானத்திற்கு இனிமேல் வழியே இல்லை. விருப்பம் இல்லாமல், விளையாட்டாக வந்த ஹீரோகூட இப்போது முழுவிருப்பத்துடன், முழு வேகத்துடன் வில்லனை எதிர்கொண்டே ஆகவேண்டும். அப்படி ஒரு திரும்பிப் போக முடியாத சூழலை தோற்றுவிக்கும் இடம் தான், இந்த மிட் பாயிண்ட்.

பில்லாவில் அஜித் ஊடுறுவி, பில்லாவாக செட் ஆகி ‘ஞாபகம் வந்திடுச்சு..ஐ ஆம் பேக்’ என்று சொல்வது இண்டர்வெல். பில்லாவாக எல்லோரையும் நம்ப வைத்தது ஒரு தற்காலிக வெற்றி. எனவே அது தான் மிட் பாயிண்ட்.

தேவர் மகனில் கமல் ‘தேவர் மகனாக’ வந்து நிற்பது வெற்றியும் அல்ல, தோல்வியும் அல்ல. அது ஒரு மாஸ் இண்டர்வெல் ப்ளாக். அது டிபேட் முடியும் இடம். ஏற்கனவே தேவர் மகன் படம், Hero with Thousand Faces-ஐ ஃபாலோ பண்ணி எடுத்த படம் என்று சொல்லியிருக்கிறோம். ரேவதியை மணக்க கமல் முடிவு செய்யும் இடம் தான், கதையின் மத்திமப் புள்ளி. அது இண்டர்வெல்லில் வரவில்லையே என்று நினைத்து, இண்டர்வெல்லிற்கு நகர்த்தினால், அதற்குப்பின்னால் போதுமான சீன் இல்லாமல் நீங்கள் முழிக்க நேரிடும். எனவே இந்த பீட்ஸ் கதையில் இருப்பது தான் முக்கியமே தவிர, ப்ளேக் ஸ்னிடர் சொல்வது போல் சரியாக அதே பக்கத்தில்(நேரத்தில்) வர வேண்டிய அவசியம் இல்லை.

இந்த மிட்பாயிண்டிற்குச் சமமான, எதிரான ஒரு விஷயம் ப்ரிகிளைமாக்ஸ் என்று அழைக்கப்படும் All is lost. மிட்பாயிண்ட்டில் ஹீரோ தற்காலிக வெற்றி அடைந்தால், ஆல் இஸ் லாஸ்ட்டில் ஹீரோ தற்காலிகத் தோல்வியடைய வேண்டும். மிட்பாயிண்ட்டில் ஹீரோ தற்காலிகத் தோல்வி அடைந்தால், ஆல் இஸ் லாஸ்ட்டில் ஹீரோ தற்காலிக வெற்றியடைய வேண்டும். 
பில்லா
10. Bad Guys Close In:

மிட் பாயிண்ட்டில் ஹீரோ ஒரு தற்காலிக வெற்றியை அடைந்துவிட்டதைப் பார்த்தோம். அந்த தற்காலிக வெற்றி, வில்லனால் உடைத்து நொறுக்கப்படும் பகுதியே, இந்த Bad Guys Close In ஆகும். மிட்பாயிண்ட்டில் தோல்வியடைந்த எதிரிகள், தங்கள் முழுபலத்தையும் திரட்டி ஹீரோவை அட்டாக் செய்யும் பகுதி இது.

நாம் ஏற்கனவே பார்த்தபடி, வில்லன் என்பது மனிதனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, சூழ்நிலை கூட வில்லன் தான். அதுவரை நன்றாக வாழ்ந்த ஹீரோ, வில்லனாலோ அல்லது சூழ்நிலையாலோ அங்கேயிருந்து வீழ்வதை இந்தப் பகுதி குறிக்கும்.

தற்காலிக வெற்றியை எஞ்சாய் பண்ணும் ஹீரோவை வைத்துக் கொஞ்சம் காட்சிகள், அடுத்து வில்லன் ஆட்கள் ஹீரோவை ரவுன்ட் கட்டுவது பற்றி சில காட்சிகள் என்று தான் இந்தப் பகுதிக்கான சீன்கள் எழுதப்படும்.

பில்லாவில் ரஜினி/அஜித், பில்லா குரூப்பில் இணைந்து பில்லாவாக அங்கே ஐக்கியம் ஆவது மிட்பாயின்ட். அடுத்து அஜித் வெற்றிகரமாக தகவல்களைச் சேகரிப்பதும், அந்த பில்லா கும்பல் போலீஸிடம் மாட்டுவதும் தற்காலிக வெற்றியை ஹீரோ எஞாய் பண்ணும் சீன்கள். அடுத்து உண்மையான வில்லன்கள் வெளிப்படுவதும், பிரபு சாவதும், அஜித் கைது செய்யபடுவதும் 'Bad Guys Close In'-க்கு நல்ல உதாரணங்கள்.

ப்ளேக் ஸ்னிடரைப் பொறுத்தவரை திரைக்கதை எழுதுவதிலேயே மிகவும் கஷ்டமான பகுதி, இந்தப் பகுதி தான். வில்லன்கள் எப்படி திருப்பித் தாக்குகிறார்கள், அதனால் ஹீரோவுக்கு ஏற்படும் இழப்பு என்ன என்பதை லாஜிக்காகவும் சுவாரஸ்யமான சீன்களாகவும் சொல்வது பெரும் சவால். உங்களுக்குச் சந்தேகம் என்றால், நீங்கள் இதுவரை எழுதி வைத்திருக்கும் திரைக்கதையை எடுத்துப் பாருங்கள்!

11. All is Lost:
சென்ற பகுதியில் பார்த்தபடி, வில்லன்கள் முழுபலத்துடன் திருப்பி அடித்துவிட்டார்கள். இப்போது ஹீரோ ஏறக்குறைய எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான் அல்லது முக்கியமான ஏதோ ஒன்றை நிரந்தரமாக இழக்கின்றான். ஆல் இஸ் லாஸ்ட் பற்றிப் புரிய, இந்தப் பதிவில் உள்ள ஸ்டில்களையும் அந்த சீன்களையும் ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.

வேட்டையாடு விளையாடு
90% ஹீரோவின் நண்பன் சாவது அல்லது ஹீரோவின் அப்பா/அம்மா/மனைவி என ஹீரோவுக்கு வேண்டப்பட்ட யாரோ ஒரு ஆளை வில்லன் குரூப் போட்டுத்தள்ளும் சீன் தான் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஆல் இஸ் லாஸ்ட்.

மிட் பாயின்டிற்கு நேரெதிரான நிலை இது என்று பார்த்தோம். மிட் பாயின்ட் --> கெட்டது நெருங்குகின்றது --> எல்லாம் போச்சு. இது தான் கதையின் மத்தியில் இருந்து இரண்டாம் ஆக்ட்டின் முடிவு வரை வரும் பகுதி.

பில்லாவில் பிரபு சாவதும், 'தான் பில்லா அல்ல' என்று நிரூபிக்கும் கட்டாயம் அஜித் மேலேயே விழுவதும் தான் ஆல் இஸ் லாஸ்ட். அஜித்திற்கு இருந்த ஒரே ஒரு ஆதரவும், சாட்சியும் போய் விட்டது. இப்போது என்ன செய்வார்? படம் பார்க்கும் ஆடியன்ஸும் திகைத்து யோசிக்கும்படி, இந்த ஆல் இஸ் லாஸ்ட்டை அமைப்பது தான் திரைக்கதை ஆசிரியரின் திறமை.
 
(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...